பார்த்திருத்தல்-வண்ணதாசன்

ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும் ‘நல்லா கனிஞ்சு’ இருக்கவேண்டியது அவசியம்.

இந்தப் பக்கம் வீடு கட்டிக் குடி வந்த சமயம், ‘மொந்தான் பழம் இருக்கா?’ என்று கேட்டால் இங்கே உள்ள கடைக்காரர்கள் சிரித்தார்கள். கடைக்காரர் மட்டும் அல்ல. கடைக்குச் சாமான் வாங்க வந்து நின்றவர்கள் இரண்டு பேர் கூடச் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். ஒரு வயசாளி அம்மா தான் ‘நாட்டுப் பழத்தைத் தான் அந்த அய்யா அப்படிக் கேட்காவோ?’ என்றார். அந்த அம்மாவே ‘எல்லாம் கா(ய்) வெட்டா இருக்கு அய்யா.. ரெண்டு நாள் கழிச்சுதான் சாப்பிடமுடியும்’ என்றது. உலகில் எல்லாப் பதிலும்  தயாராக இருக்கிறது. நாம் கேட்கிற ஆள் இல்லாவிட்டாலும் வேறு யாராவது இப்படி அதை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்கள்.

இன்றைக்கும் அப்படித்தான். ஒவ்வொரு கடையாகப் பார்த்துவிட்டு, கனிந்த தாராகத் தொங்குகிறதே என்று இந்தக் கடைக்கு வந்து பைக்கில் இருந்து இறங்கினேன். இது நான் வழக்கமாக வாங்குகிற கடை இல்லை. புதியது. ஒரு டீக்கடை, ஒரு சலூன், ஒரு பழைய பேப்பர் கடைக்கு அடுத்து முக்குக் கடைசியிலிருந்தது. முக்கியமாகப் பழைய பேப்பர் கடைக்குப் பக்கத்தில் இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. பழம் வாங்க வந்த கடை, பழைய பேப்பர் கடைக்குப் பக்கத்தில் இருப்பதால் பிடித்துப் போவதற்கு என்ன இருக்கிறது? ஆனால் அது அப்படித்தான்.

என்னைப் போலவே பைக்கை நிறுத்திவிட்டு ஒரு கருப்பு டீ ஷர்ட் அணிந்த பையன் கையிலிருந்த பவண்ட்டோவிலிருந்து ஒரு மடக்கும், ஒரு சிகரெட் இழுப்புமாக நின்று கொண்டிருந்தான். என் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் அனிச்சையாக நகர்ந்து வழிவிட்டான். முந்திய நிமிடம் வரை அந்த இடத்தில் ஒரு கடல் இருந்தது போலவும். அவன் எனக்காக அதில் சிறு தாமதம் கூடச் செய்யாமல், ஒரு ஒற்றையடித் தடத்தை உண்டாக்கித் தந்துவிட்டதாகவும் ஆன செயல் அது.

நான் நேரடியாகப் பழத்தார் தொங்கும் இடத்திற்குப் போனேன். பக்கத்திற்கு இரண்டு மர பெஞ்சுகளில் காய்கறிக் கூடைகள், அதற்கு மேல் வாங்குகிறவர் தலை தட்டாத உயரத்தில் பழத்தார்கள். நிஜமாகவே நல்ல நாட்டுப் பழங்கள். நன்கு விளைந்து மஞ்சள் குருத்தாக இருந்தன. மயிலிறகில் கண் இருப்பது போல, மொந்தான் பழங்களிலும் வரைந்து வைத்த மாதிரி மஞ்சட் தோலில் ஒரு சிவப்புக் கண் இருப்பது எனக்குப் பிடிக்கும். பொச்சக் கயிற்றில் தொங்கினபடியே காற்றில் அந்தத் தார் பழத்தோடு லேசாகத் திரும்பும் போது, சிவப்பு ஒற்றைக் கண்ணால் அது பஜாரில் என்ன என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொள்வது போல இருக்கும்.

என்ன விலை என்று கூட விசாரிக்க மாட்டேன். பிடித்திருந்தால் தாரிலிருந்து ஒவ்வொரு பழமாக நானே பிய்த்துக் கொள்வேன். அப்படிப் பிய்த்து எடுக்கும் போது நமக்கும் வாழைத்தாருக்கும் ஒரு உருத்து வந்துவிடும். அந்த வளைந்த அடிக்காம்பின் குளிர்ந்த பருமன் நம்முடைய கைக்கும் கொஞ்சம் வந்திருக்கும். அன்றைக்குக் காலையில் தான் மார்க்கெட்டிலிருந்து கொண்டுவந்து தூக்கிக் கட்டின புதுக் குலை என்றால், காம்பு மடங்கலில் இருந்து பிசின் போலக் கசிந்து வருகிற வாசனை அப்படியே ஆளைத் தூக்கிக் கொண்டு போய் வாழைத் தோப்புக்குள் போடும்..

பத்தடி தள்ளி உள்ளே தான் மற்றச் சரக்குகளும் வியாபாரமும் நடக்கும் கடை. உள்ளே இருந்து சத்தம் வந்தது. நான் ஒவ்வொன்றாகப் பிய்த்து எடுத்து தக்காளிக் கூடையில் வைப்பதை அங்கிருந்தே எண்ணியிருப்பார் போல, ‘ஆறு எண்ணம் போதுமா? கூட நாலு எடுத்தா, பத்தாகப் போட்டுக் கிடலாம் லா’ என்றார்.

அந்தப் பையனிடம் பவண்டோவுக்கும் சிகரெட்டுக்கும் அது போக அவன் கேட்ட இரண்டு ஹால்ஸ் மிட்டாய்க்கும் காசு வாங்கிப் பாக்கி கொடுத்தவர் உள்ளே இருந்து ஒரு ஜவ்வுத்தாள் பையைக் கையோடு எடுத்தபடி, ‘பை இருக்கா? வேணுமா?’ என்று எழுந்து வந்தார். ‘இதற்கு முன்பு காய்கறி வாங்கிப் போன யாரோ தரையில் சிந்தியிருந்த வெண்டைக்காய்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டவர், ‘தம்பியை எங்கியோ பார்த்திருக்கேனே’ என்றார். எனக்கு இதற்கு முன்பு அவர் முகத்தைப் பார்த்தது போல இல்லை. முகத்தில் ஏதாவது பார்த்தது, பார்க்காதது என்று இருக்கிறதா.? கொஞ்சம் நின்று நிதானமாகப் பார்த்தால் எல்லா முகங்களுமே இதற்கு முந்தி ஏற்கனவே பார்த்தது போலத்தானே இருக்கிறது.’

நான் பைக்கின் சைடு பாக்ஸில் அவசர உபயோகத்திற்கு என்று எப்போதும் போட்டு வைத்திருக்கிற பை இருக்கிறது. ஆனால் ‘பை இருக்கு’ என்று சொல்லவில்லை. அவர் என்னிடம் நீட்டிக்கொண்டிருந்த பையை வாங்கிக்கொள்ள ஏற்கனவே எடுத்துவைத்திருந்த இரண்டுமூன்று பழங்களுடன் இருந்த கையை நீட்டினேன்.

ஒரு கடைக்குள் வாங்குபவரும் விற்பவரும் சாதாரணமாக நீட்டிக் கொள்கிற கைகள் தான். அவருடைய முகத்தின் மேல் விழுந்த குறைந்த வெளிச்சம் அல்லது சற்று லேசாக அழுகினது போல வந்து கொண்டிருந்த பெல்லாரி வெங்காயத்தின் வாடை போன்ற ஒன்று, என்னுடைய மற்றும் அவருடைய நீளும் கைகளை ஒரு மூன்றாவது நபர் தள்ளி நின்று பார்க்கிற உணர்வை உண்டாக்கியது. அந்த இரண்டு கைகளும் எங்கிருந்து எங்கோ நீண்டபடி இருந்தன.

‘எங்கே இருக்கியோ? வீடு எந்தப் பக்கம் ?’ என்றார். எந்தத் தெரு, எந்தப் பக்கம் என்று சொன்னால் தான் அனேகமாக இன்னார் என்று தானாகத்  தெரிந்துவிடுமே.

‘அந்தக் கல் வெட்டாங்குழிப் பக்கம், தெற்கே பார்த்து மூணு வீடு இருக்குல்லா. அதில மேலக் கடைசி வீடு’ என்றேன். ‘இப்போ சமீபத்தில அஞ்சாறு வருஷத்துக்குள்ள கட்டி வந்திருப்பிய போல’  என்றார். நான் எட்டு ஒன்பது வருடங்கள் ஆயிற்று என்றேன். அவரால் நான் யார் அல்லது எந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று நிதானிக்க முடியவில்லை.

‘இந்த சர்ச்சிற்குத்தான் வருவீங்களா?’ என்றார். ’இந்த சர்ச்சை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இதை நிறையப் படங்கள் எடுத்திருக்கிறேன்.’ என்ற என்னுடைய பதில் அவருக்குப் போதவில்லை.

‘இதுக்கு முந்தி முருகன்குறிச்சியில இருந்த மாதிரியா? எட்வர்ட் அன் கோ முக்கில, ஸ்டார் டெய்லருக்கு அடுத்தாப்பில ஒரு பேக்கரி இருந்ததுல்லா, அவரு பேரு மறந்து போச்சு, உங்களை பின்னால இருந்து பார்க்கும் போது அவர் தோள்பட்டை, முதுகு மாதிரியே இருந்துது. அட, பேக்கரி பேரும் அயத்துப் போய்ட்டு. அவர் பேரும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்கு. வி கழுத்து வச்ச மல் பனியன் போட்டிருப்பாரு. கடைக்குள்ள பூனைக்குட்டியா நடமாடிக்கிட்டு இருக்கும் எப்போ பார்த்தாலும்’ என்றார்.

எனக்கு அவர் சொல்கிற பேக்கரியையும் தெரியாது. அந்த மல் பனியன் போட்டவரையும் பார்த்ததில்லை. எனக்குப் பூனைக்குட்டிகள் நடமாடுகிற அந்தக் கடையைப் பார்க்க விருப்பம் வந்தது. ஒரு பூனைக்குட்டி, கேக்குகள் வைத்திருக்கிற கண்ணாடிப் பெட்டிகளின் கீழே, பழைய பேப்பர் கிழிசலோடு விளையாடிப் புரண்டுகொண்டு இருப்பதைக் கற்பனை செய்துகொண்டேன். அந்தப் பூனைக்குட்டியைத் தூக்கினால் அதன் எடை எவ்வளவு இருக்கும் என்பதைக் கூட என்னால் சொல்ல முடியும்.

அவரை மேலும் மேலும் யூகங்களில் அலைய விட மனமில்லை. என்னதான் சம்பிரதாயமான விசாரிப்பு, அதற்கான பதில் என்றாலும் என்னை விட வயதான ஒருவரை பழைய ஞாபகங்களின் வெவ்வேறு திக்குகளில் கைவிட்டுவிட்டு நகர்வது கஷ்டமாக இருந்தது. அவர் அவருக்கு அனுமானிக்க முடிந்த இடங்களுக்குச் சுலபமாகப் போய்விட்டு, திரும்பிவரும் வழிகள் அடைபட்டுத் திகைத்து  நிற்பது போல் இருந்தது.

‘எங்களுக்குப் பாளையங்கோட்டையே இல்லை. டவுண். மேல ரதவீதி. மூணு தலை முறையா, எங்க அப்பா, அவங்க அப்பா காலத்தில இருந்து டவுணில் தான் இருந்தோம்’

நான் இதைச் சொன்னதும் அடுத்த நொடியே அவருக்கு டவுண் மேல ரதவீதியில் போய் நிற்க முடிந்தது. இதுவரை வாயில் வெற்றிலைச் சக்கையை வைத்துக்கொண்டே தான் பேசினார் போல. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொங்கின சாக்குப் படுதாவை விலக்கி, அதைத் துப்பிவிட்டுத் திரும்பினார். அதே முகம் தான். அந்த வெற்றிலைச் சக்கையைத் துப்பிய பிறகு வேறு ஒரு முகம் அடைந்தது போல மாறியிருந்தார். இந்த முகம் முன்னை விட அகலமான சிரிப்பை அனுமதித்தது.

‘மேல ரதவீதியில் எங்க?’ என்று பபிள் டாப் தண்ணீர் ஜாடியிலிருந்து பித்தளைச் செம்பில் தண்ணீர் பிடித்து வாய் கொப்பளித்தார். என்னிடம் பேசிக்கொண்டு இருந்தவர் என் பின்னால் யாரையோ பார்த்து ‘வா கோயிலு’ என்றார். ‘உள்ளே வா. நமக்குத் தெரிஞ்ச சார்வாள் தான்’ என்றார்.

நான் கொஞ்சம் ஒதுங்கி நின்றேன். கையில் ஒரு எவர்சில்வர் தூக்குச் சட்டியோடு அந்த அம்மாள் சிரித்தபடியே என்னைத் தாண்டி அவர் உள்ளே உட்கார்ந்து வியாபாரம் செய்யும் கடைப்பகுதிக்குப் போயிற்று. இதுவரை நம்மோடு பேசிக்கொண்டு இருந்த ஆண், அவருக்குத் தெரிந்த ஒரு பெண் வந்ததும், ஒரு கதவை நமக்குச் சத்தமில்லாமல் சாத்திவிட்டு, வேறொரு கதவைச் சத்தமில்லாமல் திறந்தவராக அந்தப் பெண்ணின் பின்னால் போவது ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணியது. அவரை விடப் பத்து வயதாவது சிறிய, ஆனால் நடுத்தர வயது தாண்டிய அந்த அம்மாள் உள்ளே இருந்து என்னைக் காட்டிச் சொல்லி ஏதோ சொல்லிச் சிரித்தது.

‘எனக்கு டீ போட்டுக் கொண்டாந்திருக்கா. ஒரு மடக்கு உங்களுக்கும் கொடுக்கச் சொல்லுதா. நான் எப்பவுமே தான் திண்ணியாம். அடுத்தவங்களுக்குக் கொடுக்காம எல்லாத்தையும் ஒத்தையிலேயே சாப்பிடுதேனாம்’ சரி. உனக்குக் கொடுக்கணும்னு தோணீட்டுதுண்ணா, நீயே கொடுக்க வேண்டியது தானே. நான் என்னத்துக்கு இடையில’ண்ணு சொன்னா, அது எப்படிண்ணு  வெக்கப்படுதா’.- அவர்  குரலில், பக்கத்தில் ஒரு பெண்  இருக்கிற  மதுரமும்  சரசமும்  வந்திருந்தது.

‘சும்மா இரியும்’ என்று சொல்லியிருக்கலாம். அந்தப் பெண் அவர் தோளில் அடித்தார். இறங்கியிருந்த முண்டா பனியனின்  பட்டியை  கழுத்துப் பக்கத்துக்கு இழுத்துவிட்ட அவருடைய கையில் ரப்பர் வளையல்கள் கிடந்தன.. கரும்பச்சை நிறத்தில் அரை டஜனாவது இருக்கும்.

என்னுடைய பதிலைக் கூட அவர் எதிர்பார்க்கவில்லை. ‘அவ சொல்லீட்டா. அப்படிச் சொல்லுததுக்காவது ஒரு வாய் குடிங்க’ என்று கையிலிருந்த டம்ளரை நீட்டியபடியே இறங்கி வந்தார். வரும்போதே இடுப்புச் சாரம் நெகிழ்ந்து விலகியது. அதையும் அவர் அப்படியே இடுப்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு வருவது ஏற்கனவே எங்கேயோ நிகழ்ந்த மாதிரியும் பார்த்த மாதிரியும் இருந்தது. அவர் என்னுடைய களக்காட்டுச் சித்தப்பா மாதிரி இருக்கிறாரோ? இந்த உலகத்தில் இன்னும் இடுப்பில் கருப்புக் கயிறு கட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். தாயத்து வேறு அதில் கோர்த்துப் போட்டுக் கொள்கிறார்கள்.

நான் குடிக்கும் வரை நின்று கையோடு டம்ளரை வாங்கிக்கொண்டு ‘இந்தா வந்திருதேன்’ என்று கடைக்குள் போனார். அந்தப் பெண்ணிடம் பணம் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து இரண்டு மூன்று ரூபாய்த்தாள்களை உருவிக் கொடுத்தார். ‘போதுமில்லா?’ என்று கேட்டார். ‘உங்க அம்மைக்கு மாத்திரை, நாஞ் சாப்பிட வரும்போது மதியம் வாங்கீட்டு வாரேன்’ என்றார்.

நான் நிற்கிற பக்கத்திலுள்ள காய்கறிக் கூடைகள் பக்கம் வந்து இரண்டு மூன்று முள்ளங்கி கொஞ்சம் பச்சை மிளகாயை எடுத்து மடியில் வைத்துக் கொண்ட அந்த அம்மாள். என்னிடம் இருந்தும் ஏதோ எடுத்துக் கொள்வது போல, ‘நான் சொன்னதுக்காக, பேருக்கு ஒரு மடக்கு டீ தானே கொடுத்திருப்பாரு, கஞ்சாம்பெட்டி’ என்று அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னது.  ஒரு தேங்காயை எடுத்துக்  காதுக்குப் பக்கம் வைத்துக் குலுக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் தேங்காய்ச் சாக்கிலேயே

போட்டது.

வெளியே நிற்கிற என்னுடைய பைக் சீட்டைத் தடவிக்கொண்டு போகும் போது மறுபடியும் என்னைப் பார்த்தபடி சேலைத் தலைப்பால் முக்காடு போட்டுக் கொண்டது. கடைக்காரரும் அந்தப் பக்கம் பார்த்தபடியே ‘இப்பம் என்ன சுள்ளுண்ணு வெயிலா அடிக்கி, முக்காடு போட்டுக்கிடுததுக்கு? எல்லாம் சும்மா ஸ்டைலுக்கு’ என்றார், அங்கே இருந்து பார்வையை விலக்காமல். அவர் பழைய ஆளாக இங்கே திரும்பி வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆகும் போல இருந்தது.

‘நீங்க மேல ரதவீதிண்ணு சொல்லும் போதே, மேல ரதவீதியில எங்கன?’ என்று கேட்கணும்னு வாயை எடுத்தேன். அதுக்குள்ளே அந்த மகராசி வந்து நிண்ணுட்டா’ என்றார். அவரிடம் இப்படிச் சொல்வது அவரை இன்னும் சந்தோஷப்படுத்தும் என்று தோன்றியது, சொன்னேன். ‘அதனால் என்ன? அவங்க அப்படி வந்துட்டுப் போனதும் நல்லாத்தான் இருக்கு’

என்ன நினைத்துக்கொண்டு சொன்னாரோ, ‘ஆமா. வாஸ்தவம் தான். அதுவும் நல்லாத்தான் இருக்கு’ என்றார். ‘மேல ரதவீதியில் எங்க?’ என்று என்னிடம் கேட்கும் போது அவர் கைக்குள் என் கை இருந்தது..

‘சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம், சுடலை மாடன் கோவில் தெரு, என்று சொன்னவன் மேலும் உறுதி செய்வது போல, ‘மேல ரதவீதியிலேயே முதல் தெரு அதுதான்’ என்றேன். நான் இதைச் சொல்லிக்கூட முடிக்கவில்லை. ‘சரியாப் போச்சு.’ என்று கையை உருவிக்கொண்டு ஆச்சர்யப்படுவது போல் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டார். விடையைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் முகத்தில். இதுவரை தோலுக்கு அடியிலிருந்த சிரிப்பு மேலே வந்து, ஒட்டின கன்னத்தில் படர்ந்துவிட்டது. கண்களின் ஓரத்தில் சதை திரண்டு இடுங்கிப் பார்வையில் ஈரப்பூச்சு மினுங்கியது.

‘என் கிட்டே போய் முதல் தெரு ரெண்டாவது தெருண்ணு ஒண்ணு ரெண்டு மூணு சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருக்கியோ. ஒண்ணு ரெண்டு இல்லை. இருபத்தியோரு வருஷம் டவுண் பஸ் கண்டக்டரா ஓடியிருக்கேன். பதினெட்டு வருஷம் அதில டி.பி.ட்டி கம்பெனி வண்டியில.’ இதைச் சொல்லும் போதே அவர் விரல்கள் எச்சிலைத் தொட்டு டிக்கட் கிழித்துக் கொண்டிருந்தன. சற்று உட்புறமாகச் சரிந்திருந்த புகையடித்த பற்களின் சிரிப்பு. உதடு மடக்கி விசில் அடிக்கிற சத்தம் கூடக் கேட்டது.

தன பேரின்பம் என்று எனக்குள் இருந்த பெயரை அவர் டி.பி.ட்டி என்று உச்சரித்த விதத்தில் , அவர் கண்டக்டராக இருக்கிற பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும் நான் பிடித்திருக்கும் முன் சீட்டின் வழவழப்பான நிக்கல் குழாய் என் கைக்குள் அதிர்ந்தது. நான் சத்தியமாக அவரைப் பார்த்ததே இல்லை. அவரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இதற்குள் வாங்கின பழங்களுக்கு உரிய தொகையை அவரிடம் கொடுத்திருந்தேன். ‘இருவத்தஞ்சு ரூவா தான் போட்டிருக்கேன்’ என்று எனக்கு அவர் அளித்திருக்கும் சலுகையைச் சொல்லிப் பாக்கியைத் திருப்பி என்னிடம் கொடுத்தபடி, ‘அப்போ டவுணிலிருந்து இங்கே குடி வந்து எத்தனை வருஷம் இருக்கும்?’ என்று கேட்டார்.

‘முதலில் சேவியர் சார் வீட்டில் அஞ்சாறு வருஷம் வாடகைக்கு இருந்தோம். இந்த வீடு கட்டி வந்து சரியா ஒன்பது வருஷம் ஆகப் போகுது’ என்று பைக் நிற்கிற பக்கமாக வெளியே நகர்ந்தேன்.

நான் வாங்கவில்லை என்றாலும் கடையை விட்டு வெளியே வருகையில் பார்த்த தக்காளிப் பழங்களின் திரட்சியும் நிறமும் உருண்டு விழப் போவது போல மனதில் நிரம்பின. இந்தக் கடை, இந்தத் தெரு எல்லாம் அம்பாரம் அம்பாரமான தக்காளிகளால் நிரம்பிக் கிடப்பது போல இருந்தது. எத்தனையோ வருடங்களுக்கு முன், டவுண் மார்க்கெட்டில் என் கால் பாதத்தில் மிதிபட்ட தக்காளியிலிருந்து பிதுங்கித் தெறித்த விதைகள் இங்கே என்னோடு வெளியே வந்துகொண்டிருந்த கடைக்காரரின் குதிரைக்கால் சதையில் அப்புகிறதா?

உள்ளே நிழலிலிருந்து வியாபாரப் பேச்சுக் கொடுத்தபோது இருந்ததை விட, வெளியே வந்து நிற்கும் போது, வெயிலில் அவர் ஒல்லியாகவும் தளர்ந்தவராகவும் தெரிகிறார். அதிகம் குடித்து ஓய்ந்த ஒருவராக இருக்கலாம்.

’வீடு எங்கே? கல்வெட்டாங்குழிப்பக்கம்ணு தானே சொன்னிய?’ அவருடைய முகம் இளகி, இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மட்டும் கொம்பு மாதிரி இரண்டு பள்ளம்.

‘ஆமா’ – நான் அந்தப் பள்ளங்களிலிருந்து அவரை வெளியேற்றிக் கொண்டிருந்தேன். என் பைக் சீட்டைத் துடைப்பது போல அவர் தடவிக்கொண்டு இருந்தார். அந்தத் தடவலில் இருந்து ஒரு சித்திரத்தை உருவி எடுப்பது போல, ‘கல்வெட்டாங்குழி முக்கில படை படையா எஃப்.சி. கோடவுனில் இருந்து புறா வந்து இறங்குமே’ என்றார்.

நான் சற்று நேரம் அவர் முன்னால் புறாக்கள் கூட்டமாக வந்து தரை இறங்கவும் மறுபடி அவையே தீர்மானித்த ஒரு நொடியில் மொத்தமாகப் பறந்து போகவும் காத்திருந்தேன். கடைசிப் புறாவின் நிழல் தரையிலிருந்து விசிறி அப்போதுதான் மறைந்திருக்க வேண்டும்.

‘இப்போ அந்தப் பக்கம் பூச்சி நடமாட்டம் இருக்கா?’ என்று கேட்டார். அவருடைய கேள்வி நெளிந்து என்னைத் தாண்டிச் செல்வதற்குள். அவரே, ‘முன்னால எல்லாம் அந்தப் பக்கம் அது ஜாஸ்தி’ என்றார்.

இது வரையில் இல்லாத ஒரு புதிய திசையை எனக்கும் அவருக்கும் இடையில் அவர் உண்டாக்கியிருந்தார்.  அதில் ‘பூச்சிகள்’ சதா ஊர்ந்து நெளிந்து போனபடி இருந்தன. என் பாதையின் குறுக்கே எந்த அவசரமும் இன்றி போகிற ஒரு வால் சுழிப்பின் பளபளப்புத் தென்பட்டது. மழைத் தண்ணீர் இறங்கிப் பள்ளத்தில் ஓடிப் போகிற மாதிரி வாட்டமாக இருக்கிற தெரு, இப்போது வளைந்து வளைந்து நகர்ந்தது.

‘முன்னை மாதிரி இல்லை. இப்ப ஒண்ணும் அப்படிக் கண்ணுல தட்டுப்படக் காணும். கீரிப் பிள்ளை நடமாட்டம் எப்பமாவது இருக்கு.’ நான் இன்றையத் தேதியிலிருந்து சொல்ல, அவர் ரொம்ப காலத்துக்கு முன்னாலிருந்து பேச்சைத் தொடர்ந்தார்.

‘முன்னால குளமாகக் கிடந்த இடம் தானே அது. நான் பார்க்க அதுல கரண்டைக்கால் அளவு தண்ணி கிடந்திருக்கு. நான் சொல்லுதது இப்ப இல்லை. முப்பது வருஷத்துக்கு முந்தி. என் ஜி ஓ காலனி எல்லாம் உண்டாகிறதுக்கு முன்னால நிச்சயம் அங்கே கெத்துக் கெத்துண்ணு தண்ணி கிடந்திருக்கும்’ என்று கொஞ்ச நேரம் அந்தக் குளத்தின் கரையில் நின்றார். ஒரு மாதிரி குளிர்ந்த குரலில் சொல்லிக் கொண்டு போனார்.

‘என்ன இருந்தாலும் குளமாக் கிடந்த பூமி இல்லையா? பூச்சியும் புழுவும் நத்தையும் தவளையுமா அது அடி வயித்தில எவ்வளவு விளைஞ்சு கிடந்திருக்கும். பத்து வருஷத்துக்கு முன்னால வரைக்கும், அவசரத்துக்கு அங்கே தான் உக்காந்து கால் கழுவப் போவோம். நூறு ஆயிரம்ணு உலகத்தில இருக்க தவளை எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து சத்தம் போடுகிறது போல கொர கொரண்ணு எட்டுத் திசையிலேயும் கேட்டுக்கிட்டே இருக்கும்.. எட்டாவது ஒம்பதாவது? அந்தச் சத்தம் ஒண்ணுதான் திசை. வேற கிழக்கு மேக்கு அடையாளமே வேண்டாம்’ – அவர் சொல்கிற தவளைச் சத்தத்தை ஓரளவுக்கு என்னாலும் கேட்க முடிந்தது.

அவர் அடுத்தாற் போல் சொன்னது அதை விட நன்றாக இருந்தது. ‘இப்போ குளம் தூர்ந்து போச்சு. கட்டிடம் வந்துட்டுது. நடமாட்டம் ஜாஸ்தி ஆயிட்டுது. எல்லாம் இருக்கட்டும். தோண்டினமோ மூடினமோ, இன்னும் அந்த பூமிக்கு அடியில தானே அத்தனை ஜீவராசி போடுகிற சத்தமும் முட்டிக்கிட்டு இருக்கும். உலகத்தில சத்தம் போடாததுண்ணு ஏதாவது உண்டா? புழுவும் பூச்சியும் ஒண்ணுக்கொண்ணு பேசாமலேயா இருந்திருக்கும். நமக்குக் கேட்கலை. நாம செவிட்டுப் பயலுக’ என்று நிறுத்தினார்.

அபிநயிப்பது போல, தரைக்கு ஒரு அடி உயரத்தில் அவருடைய கையைத் தணித்து நெளித்து நெளித்துக் காட்டி, ‘பூச்சிக்கு செவி இல்லைண்ணு யார் சொன்னா? அது தரையோடு தரையா, பூமிக்கு உள்ளே என்ன இருக்கு, அதுக்கு அடியில இருந்துக்கிட்டு இன்னைக்கு யார் பேசுதா, என்ன பாடுதா, என்ன சத்தம் கேட்குண்ணு உத்து உத்துக் கேட்டுக்கிட்டே தான் அப்படி வளைஞ்சு வளைஞ்சு போகுதாக்கும்’ என்றார்.

எனக்கும் அது போன்ற நினைவுகள் வராமல் இல்லை. நாங்கள் கட்டியிருக்கிற இந்த வீட்டு வாசல் இரும்புக் கதவுக்குக் கீழே உள்ள விம்பல் வழியே உள்ளே வந்த பாம்பு ஒன்று எந்தப் புடைக்குள் எப்படிப் போய் மறைந்தது என்று இன்று வரை தெரியவில்லை. என்னுடைய பைக் முன் சக்கரத்தில் நசுங்காமல், எந்தப் பதற்றமும் இல்லாது. அதன் வலசையில் அது பாட்டுக்கு ஒன்று போயிருக்கிறது. பக்கத்து வீட்டுக் கட்டுமானம் நடக்கும் போது, மணல் அம்பாரத்தில் படுத்திருந்த கருப்பு நாய் எழுந்திருந்து நின்று ‘மூச்சு விடாமல் குலைத்து’ விரைப்பாக எச்சரிக்கை செய்ய, மழைத் தண்ணீர் போல ஒன்று ஓரமாக, அதன் தடத்தை விட்டு விலகாமல் சென்றதை மறுநாள் காவலுக்குப் படுத்திருந்தவர் வருகிற போகிற ஆட்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்கள் அம்மா அவளே அதை நேரில் பார்த்தது போல, வீட்டு வேலைக்கு வந்திருந்த பாக்கியத்திடம் சொன்னது உண்டு. எனக்கு இப்போது கூட அந்தக் கருப்பு நாயின் குரைப்பைக் கேட்க முடிகிறது. குரைப்பை விட, அது தன் மொத்த உடம்பையும் தீட்டிக்கொண்டு மணலில் கால்கள் புதைய நிற்கும் உருவத்தை.  

அவர் கொஞ்ச நேரம் ஒன்றுமே சொல்லவில்லையா? அல்லது அவர் சொல்லிக்கொண்டு இருந்ததை நான் கேட்காமல் தவற விட்டுவிட்டேனா? இரண்டு மூன்று கண்ணிகள் தாண்டி அவர் முன்னால் போயிருந்தார். சில பக்கங்கள் விடுபட்ட நிலையில் அவரை வாசிக்க வேண்டியதிருந்தது.

’சொல்லி வச்ச மாதிரி, டாண்ணு விடியக்காலம் வடக்கே இருந்து தெற்கே போகும். அதே மாதிரி, வெள்ளைக்காரன் மாதிரி சாயுங்காலம் டாண்ணு தெக்கே இருந்து வடக்கே திலும்பி வரும். வாட்ச் கட்டி மணி பார்த்துட்டுக் கரெக்டா வார மாதிரி மாயமா இருக்கும். ஒண்ணும் செய்ய ஓடாது. சப்பரம் வாரதைப் பார்க்கிற மாதிரி ஓரத்தில நிண்ணு கன்னத்தில போட்டுக் கும்பிடுகிறதோட சரி.’ – அவர் குறுக்குக் கை போட்டு இரண்டு கன்னங்களிலும் நுனிவிரல்கள் புரட்டி ஒற்றிக் கொண்டார்.

‘பால் காய்ச்சி வந்த புதுசில நாங்களும் பார்த்திருக்கோம்’ – விரல்களை அவர் கன்னத்திலிருந்து விலக்குவதற்கு முன்பே உடனடியாக நான் சொன்னேன். உடனடி என்பது நாம் தீர்மானிப்பது இல்லை. அதுவாகவே நிகழ்வது.

அவர் அதை நான் சொல்லி முடிப்பதற்குள்ளேயே என் கைகளை மறுபடியும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார். லேசாக அவர் கை அதிர்வது போல இருந்தது. அவர் கை விரல்களிலிருந்து ரத்தம் என் கைவிரல்களுக்கு மாறிப் புகுந்துகொள்வது போலக் கூட. ‘நல்லா இம்புட்டு நீளம், இரு பாகம் சைஸுக்கு இருக்கும்.’ அவர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து நின்றார். கருங்கம்பளியும் மகுடியுமாக நிற்கிற பிடாரனின் இந்தக் கை நுனியில் உடல் முறுக்கிப் பின்னி அந்தக் கை நுனியில் நாக்கைத் துருத்திக் காற்றை நக்கி வெயிலில் ஒளிர்ந்தது அது.

நான் மிகச் சுருக்கமாகச் சொன்னேன், ‘ஆமா, பார்த்திருக்கேன்’.

அவரும் வேறு ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஒரே ஒரு சொட்டைச் சிந்தாமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டார். ‘சரியாப் போச்சா?’ என்றார். ‘நான் சொன்னது இப்போ சரியாப் போச்சா?’ என்று மறுபடியும் கேட்டார்..

நான் ஒரு பாதரசத் துணுக்கைப் பார்ப்பது போல அவரின் பரவசத்தைப்  பார்த்துக்கொண்டு இருந்தேன்.

‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே, இருக்கேண்ணு தான் முதலில் இருந்தே தோணிக்கிட்டு இருந்துது. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கிட்டால் தான் ஆச்சா? நான் பார்த்ததை நீங்க பார்த்தாலும், நீங்க பார்த்ததை நாம் பார்த்திருந்தாலும், அது நாம பார்த்தது மாதிரித் தானே ?’

இதை அவருக்கு எப்படி இவ்வளவு அழகாகச் சொல்லி விட முடிந்தது.

‘வாஸ்தவம் தான். நாம ஏற்கனவே பார்த்திருக்கோம்’ 

நான் அவரைப் பார்த்தபடி சொன்னேன். அவருக்குப் பின்னால் ஒட்டி நின்றுகொண்டு தலைக்கு முக்காடு போட்டிருக்கும் ஒரு முகம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.

1 COMMENT

  1. வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் எழுதிய அழகான ‘கவிதை ‘. கல்யாண்ஜி பார்க்கவில்லை என்றாலும் ‘ பார்த்திருப்பார்’. ❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.