ஒளி மாற்றம்

பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரமாச்சு. வந்ததும் பசிக்குது என கத்திக்கொண்டே வருவார்கள் என்பதால் சுடச்சுட உப்புமா செய்திருந்தார் அவர்களுடைய அப்பா மாரிமுத்து. “அப்பா.. பசிக்குது” என பெரியவன் நரன்  உள்ளே வர, வழக்கமாக உற்சாகமாக வரும் நளன் பின்னால் பொறுமையாக நுழைந்தான். “டேபிளுக்கு வாங்க” என அழைத்தார். இருவரும் ஆடை மாற்றிக்கொண்டு வந்து உண்டனர். நளன் சோகமாகவே இருந்தான். “என்னடா மூனு நாள் தீபாவளிக்கு லீவு ஆனா சோகமே உருவாகி  இருக்க. அம்மா நியாபகமா? நைட் வந்திடுவாங்க. லேட் ஆச்சுன்னா காலையில வந்திடுவாங்க” என்றார் அப்பா. லேசாக சிரித்தான். ஆனால் அவனுடைய சோகத்திற்கு காரணம் அம்மா அல்ல. தெரு நாய்கள்.

மொத்தம்  ஆறு வீடுகள் இருக்கும் சின்னக் குடியிருப்பு. நளன் வீடு இரண்டாம் மாடியில் தான் இருக்கின்றது. ஆனால் இப்போது கீழே இறங்ககூட அம்மா அல்லது அப்பா துணையை தேடுகின்றான். காரணம் ஒரு தெரு நாய். தான்தோன்றித்தனமாக திரியும் ஒரு நாய். சின்னதாக இருக்கும்போது ஏதோ ஒரு வீட்டில் உணவளிக்க இங்கேயே தங்கிவிட்டது. ஆனால் அதன் பின்னர் தான் கலவரமே எந்நேரமும் அப்பார்ட்மெண்டில் சுற்றிக்கொண்டும்  அசுத்தம் செய்துக் கொண்டும் இருந்தது. மேற்படியாக குழந்தைகள் தனியாக தெருவில் இறங்க  பயந்தனர் . அது தன் நண்பர்களையும் அழைத்து வந்துவிடும். கேட்கவா வேண்டும் அவற்றின் அட்டகாசங்களை. அதனால் குடியிருப்பு வாசிகள் ஒரு பலமான கேட்டினை போட்டு  எப்பொழுதும் மூடி வைத்திருக்கும் படி ஏற்பாடு செய்தார்கள். ஆனாலும் எப்படியோ அந்த நாய் நுழைந்துவிடும். நளனின் நினைப்பு அந்த நாயின் மீது இருந்தது.

“என்னாச்சு நளன்” – அண்ணன் நரன் கேட்டான். “இல்லைடா அண்ணா, இன்னைக்கு க்ளாஸ்ல நாய்கள் பற்றி பேசிட்டு இருந்தாங்க. நாய்களுக்கு நம்மள விட நாற்பது மடங்கு கேட்கும் சத்தம் சக்தி அதிகமாம். நாம  வர வழியில ஒரு பட்டாசு வெடிச்சாங்க அது நமக்கே பக்குன்னு இருந்துச்சு. நம்ம வீட்டுக்கு வருமில்ல ஒரு நாய் அது அக்ஷயா அக்கா வீட்டு காருக்கு அடியில பயந்து போய் பதுங்குச்சு. ஒரு பட்டாசுக்கே அப்படின்னா அப்ப தீபாவளி அன்னைக்கு எவ்வளவு பயந்து போயிடும். அதே நெனப்பா இருக்குடா அண்ணா”

அப்பா மாரிமுத்து அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருந்தார். “அப்பா, தீபாவளிக்கு நாய்கள் பயப்படுமா?” என்று விசாரித்தனர். “ஆமாம். நாய்கள் மட்டுமில்ல மற்ற சின்ன விலங்குகளும் கூட பயப்படும். பூனைகளும் பயப்படும். சில சமயம் அந்த பயங்கர சத்தங்களால் உடல் நடுக்கம் ஏற்படும். ஏன் சில விலங்குகள் இறந்து கூட போகலாம்.” கீழிருந்து அக்ஷயாவின் குரல் கேட்கவே இருவரும் கீழே விளையாட சென்றுவிட்டனர்.

அம்மா மறுநாள் காலை வருவதாக சொல்லிவிட்டார். மூவரும் சமைத்ததை உண்டு படுக்கச்சென்றனர். “அப்பா நாங்க ஒரு விஷயம் செய்யப்போறோம். நாங்கன்னா பசங்க எல்லோரும் சேர்ந்து தான். மிச்சத்தை நாளைக்கு சொல்றோம். நீங்களும் எங்களுக்கு உதவணும்”. இருவரும் உறங்கிவிட்டனர். காலையில் அப்பா எழுவதற்கு முன்னரே எழுந்து ஏதோ வரைந்து கொண்டு இருந்தார்கள். அப்பாவிற்கு ஓரளவிற்கு விஷயம் புரிந்தது. தெருவில் சுற்றும் நாய்களின் கழுத்தில் மாட்டுவதற்கான அட்டைகளை எழுதிக்கொண்டு இருந்தார்கள் “அதிகம் வெடிக்காதீர்கள் எங்களுக்கு பயந்து வருகின்றது” “உங்களுக்கு சத்தம் எங்களுக்கு சத்த்த்த்த்த்தம்ம்ம்ம்ம்” இப்படி எழுதி இருந்தார்கள். பின்னரே விஷயத்தை கூறினார்கள். “எல்லா நாய்களையும் ஒரு சத்தம் வராத அறையில் வைக்கப்போறோம் ஒரு நாள் முழுக்க. நாய்கள் எல்லாவற்றிற்கும் காதில் ஹெட்போன்ஸ் வைக்கப்போறோம். பெட்ஷீட் போர்த்தினால் இன்னும் பயப்படாம இருக்குமாம்” என்றான் நளன். அட இவ்வளவு விஷயங்களை பசங்க தெரிஞ்சு வெச்சிருக்காங்களேன்னு அப்பா வியந்தார்.

அந்த ஏரியா முழுக்க இருக்கும் எல்லோருக்கும் அப்பா மாரிமுத்து ஒரு யோசனையை முன்வைத்தார். பசங்க எல்லோரும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நாம் ஏன் ஒரே நேரத்தில் ஒன்றாக தீபாவளியை மைதானத்தில் கொண்டாடக்கூடாது? என்றார். பெருவாரியாக எல்லோரும் ஒத்துக்கொண்டனர். சிலர் அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அரசு ஏற்கனவே காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். நளனும் அவனது நண்பர்கள் எல்லோரும் சரவணா ப்ளாட்ஸ் மாடியில் ஒரு அறையினை தேர்ந்து எடுத்தார்கள். அந்த அறையின் சன்னல்களை அடைத்து சவுண்ட் ப்ரூஃபாக மாற்றினார்கள். “அண்ணா கத்து” என வெளியே நரனை தள்ளிவிட்டு நளன் கேட்டுப்பார்த்தான். கேட்கவில்லை. கதவின் கீழேயும் அடைத்தார்கள். ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒவ்வொரு பொருளாக வந்தது. நாய்களை யார் அழைத்து வருவது என்றும் முடிவு செய்தார்கள். மகேஷ் நாய்களுடன் எல்லாம் இணக்கமாக இருப்பான். அவன் அழைத்தால் எல்லா நாயும் வந்துவிடும் என முடிவுசெய்தர்கள். நளனுக்கு இப்போது நாய்களின் மீது பயம் போய்விட்டது. தங்களுடைய கையிருப்பில் இருந்த சேமிப்பு பணத்தில் இருந்து பன் பேக்கட்டுகளை நளனும் நரனும் வாங்கி வந்தார்கள். ஊரில் இருந்து வந்த அம்மாவிற்கு குழந்தைகளின் இந்த செய்கை பரம திருப்தி.

தீபாவளி அன்றைய தினம் விடியற்காலையே எல்லா நாய்களையும் அந்த பெரிய அறைக்கு அழைத்து வந்தார்கள். பூனைகள் சிலவும் வந்தன. அதனை அவற்றை தனியே வைத்தார்கள். இவை இரண்டும் சண்டையிட்டுக் கொள்ளுமோ என அஞ்சினர். சிவன் அவன் வீட்டில் இருந்த ஜோடிப் புறாவை எடுத்து வரவா என்று கேட்டான். பூனைக்கும் புறாவுக்கும் ஆகாது என யாரோ சொல்ல அந்த யோசனை கைவிடப்பட்டது.

பெரியவர்கள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கு மைதானத்தில் கூடி ஒன்றாக பட்டாசு வெடிப்பது என்று முடிவு செய்திருந்தனர். தீபாவளி நாள் என்பதால் தூரத்தில் இருந்து வந்த சத்தமே அதிகமாகத்தான் இருந்தது. ஊரெங்கும் வெடிச்சத்தம். அரசு கட்டுப்பாடு விதித்திருந்தாலும் யாரும் கேட்டபாடில்லை. அதுவும் இந்த அணுகுண்டினை வெடித்த போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. சரியாக மாலை நான்கு மணிக்கு எல்லோரும் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த போது ரூபா ப்ளாட்ஸில் இருந்த சரவணன் அங்கிள் அவசரமாக வெளியே வந்து காரினை எடுத்தார். சமீபத்தில் தான் அந்த வீட்டிற்கு வந்திருந்தார். நரனின் வயதில் ஒரு மகன் இருந்தான் ஆனால் அவன் வெளியே வரவே இல்லை. காரினை வெளியே விட்டு உள்ளே கிளம்பச் சென்றார். பதட்டமாக இருந்ததை கவனித்த நளன் “அங்கிள் ஏதாச்சும் அவசரமா?” என்றான். அவர் மென்மையாக புன்னகைத்தார். “சொல்லுங்க அங்கிள்”. “நம்ம வீட்ல ஒரு அண்ணன் இருக்கான். அவன் ஒரு ஆட்டிச குழந்தை. அவனுக்கு இந்த பட்டாசு சத்தம் கேட்டா நிலைகுலைந்திடுவான். கட்டுக்கடங்காம கத்துவான். நல்லவேளையா நீங்க பசங்க செய்த நல்ல காரியத்தால இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்தது. இப்ப மாலை ஆயிடுச்சா நிச்சயம் பட்டாசு சத்தம் வந்தா பதட்டமாகிடுவான் அதான் எங்காச்சும் மெயின் ரோட்டில் ஒரு டிரைவ் போயிட்டு வரப்போறோம் நானும் அவனும்” என்றார். நரன், நளன் மற்றும் நண்பர்கள் அப்படியே நின்றார்கள். அடச்ச இந்த விஷயம் தெரியாம இருந்துட்டோமே என வருத்தப்பட்டார்கள். சரவணன் தன் மகனுடன் வந்தார். காரில் ஏற்றினார். நரனும் நளனும் சென்று “அங்கிள் நாங்களும் உங்களோட வரட்டுமா?” என்று கேட்டனர். பின்னிருக்கையில் மூன்று சிறுவர்களும் அமர சரவணன் கார் ஓட்டினார். சந்திரனின் காதினை இருவரும் மூடினார்கள் தூரத்தில் ஒரு பட்டாசு. “சந்திரா உன் ப்ரென்ஸுக்கு ஒரு பாட்டு பாடு” என்றதும் சந்திரன் இனிமையாக பாட ஆரம்பித்தான். வெகு தூரத்தில் வானில் சென்று ஒரு பட்டாசு வெடித்தது ஆனால் குழந்தைகள் இருவர் காதிலும் இனிமையான இசை ஒலித்தது. சந்திரன் தலை குனிந்தபடியே மகிழ்ச்சியாக பாடிக்கொண்டிருந்தான். நளன் அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்தான்.


-விழியன்

2 COMMENTS

  1. அருமையான படைப்பு ! விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழியன் அவர்களின் கதைகள் . குழந்தைகள் உலகில் அவரது படைப்புகள் ஏற்படுத்தும் புத்துணர்ச்சி, புதிய அறிவு, நல்லுறவு இவை கணக்கிலடங்கா! என் வாழ்த்துக்கள்! அவர் எனது நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.