பஷீரிஸ்ட்- சிறுகதை


திருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம் சலிப்பூட்டுவதாக  உணர்ந்த அடுத்த கணம், தொடர்ந்து இதே பேருந்தில் பழனி வரை செல்வது என்று ஏற்கனவே எடுத்திருந்த முடிவை இவன் மாற்றிக் கொண்டான். ’அதுதான் உத்தமம்’ என்கிற அசரீரியும் அப்போது கேட்டது. ஆனால் பழனி வரைக்கும் பயணச்சீட்டு எடுத்திருந்தான் ’அதனால் என்ன? நம் இருகையில் இன்னொரு பயணியை அமர்த்தி காசு பார்க்கட்டும் கண்டக்டர்’ என்று தயாள மனம் கொண்டான். திண்டுக்கல்லில் இறங்கி, இவனே விரும்பித்தேர்வு செய்துக்   கொள்ளும், மற்றொரு பேருந்தில் பயணித்து பழனியை அடைவது இவனது திட்டம். பொருள் இழப்பு, காலவிரயம் என எதையும் இவன் பொருட்படுத்துவதில்லை. இது ஒன்றும் இவனுக்குப் புதிதில்லை. இதுபோல சில சந்தர்ப்பங்களில் இப்படியான முடிவை எடுத்து செயல்படுத்தியிருக்கிறான். எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறியதாகச் சொல்ல முடியாது. இப்படித்தான் கடந்த மாதத்தில் ஓர்நாள் திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தை எட்டுவதற்கு முன்னதாகவே பயணத்தில் பெரிதும் அயர்ச்சியுற்று, ரெட்டியார் சத்திரம் நுழைவாயிலில் இவன் பயணித்த பேருந்துக்கு மிக நெருக்கமாக வந்துக் கொண்டிருந்த சரக்கு லாரிக்கு ஜன்னல் வழியே கையைக் கொடுத்து அங்கஹீனனாகிக் கொள்ளலாம் என்றிருந்த நேரத்தில், சடன்பிரேக் என்னும் ஓட்டுநரின் மதியூக நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டான். அது அந்த நேரத்து அவனின் மனநிலை.

‘எவன்டா ஜன்னல் வழியாகக் கையை நீட்டுவான். கண்ணாடி வழியே அதைக் கவனித்து சடன்பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தி பயணியைக் காப்பாற்றலாம் என்று நினைக்கிற ஓட்டுநர் எங்காவது உருப்படுவானா? இதையெல்லாம் கவனிக்க வேண்டிய கண்டக்டரே மயிரே போச்சுன்னு கடேசி சீட்டில் உட்கார்ந்து எவளுடனோ கடலை போடுகிறான். உனக்கென்னயா வந்தது?’

இப்படியெல்லாம் அவன் ஓட்டுநரைப் பார்த்துக் கேட்கவில்லை. கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் சக பயணிகள் இவனிடம் தயவு தாட்சண்யம் எதுவும் காட்டாமல் நேருக்கு நேர் திட்டித் தீர்த்துவிட்டார்கள்.

‘என்னப்பா இது. வெளயாட்டுப் புள்ளத்தனமால்ல இருக்கு’

‘இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பீங்களாடா?’

‘வரும்… ஆனா வராதுங்கற மாதிரியான என்னத்த கண்ணையா ட்ரைவரா இருந்திருந்தா இந்நேரம் ஒங்கையி காணாம போயிருக்கும்டீ’

’நானும் ரவுடிதான்னு காட்டணும்னா அங்குட்டு எங்கியாச்சி நடுரோட்ல நின்னு செத்துப்போடா, நாங்க போற பஸ்தான் கெடச்சுச்சா ஒனக்கு. நாதாரி… நாதாரி..’

‘மாப்பூ… கொஞ்ச நேரத்துல வச்சிருப்பான்டா ஆப்பு. செரியான நேரத்துக்கு கெடா வெட்டுக்குப் போய்ச் சேராட்டி கறிய கண்ணுல பாக்க முடியாதுடா. சரக்கப் போட்டுட்டு பங்காளிங்க  பத்தாட்டுக் கறியையும் ஒட்டுக்கா மென்னு சக்கையாத் துப்பீருப்பாய்ங்க. பெறகு நாம அதயேத்தேம் மோந்து பாத்துட்டு வரணும்..’

எல்லாவிதமான ஏச்சும் கேட்டபிறகு இவன் ‘ஆகாக்கா திட்னாலும் சுவாரசியமா தமிழ் சினிமா பாணியில திட்ரானுகயா. இதுக்குன்னே இன்னொருவாட்டி ஜன்னல் வழியா கையாட்லாம் போலிருக்கே’ என்று நினைத்தான். ஆனாலும் பிறர் பார்வைகளை எதிர்கொள்ள விரும்பாமல் கண்களை மூடி கெளதமபுத்தன் போல் இருக்கையில் அமர்ந்து கொண்டான். இது கொஞ்ச நேரம்தான். மறுபடியும் இவனுக்கு ஓட்டுநர் மீதுதான் கோபம் வந்தது.

‘ஜன்னல் வழியா வெளீல கை நீட்டுனத கண்டுபுடிக்கிறானே மின்னாடி சீட்ல பொம்பளப் புள்ளையிருந்தா அள்ளெயில கையுட்றவனுகள கண்ணாடில பாத்துக் கண்டுபுடிப்பானா இந்த ட்ரைவரு.’

இதையும்கூட அவன் கேட்டானில்லை. கேட்கணும் என்று நினைத்தான். அவ்வளவுதான். இது டெலிபதி ஆனதோ என்னவோ தெரியவில்லை; ஓட்டுநர் மறுபடியும் ஒரு சடன்பிரேக் போட, பஸ் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.  ‘ஏன் டா வீட்ல சொல்லிட்டு வந்துட்டியாக்கும்’ என்று ஓவர்டேக் செய்ய முயன்ற வேன்காரனைத் திட்டினார் ஓட்டுநர். வேறு நாராசமான திட்டு எதுவும் வாங்கிக் கொள்ளாதது வேன்காரனின் அதிர்ஷ்டம் என்று இவன் நினைத்தான். மீண்டும் புத்தனைப்போல கண்களை மூடிக்கொண்டு அமைதி நிலைக்குத் திரும்ப  எத்தனித்தபோது இவன் அமர்ந்திருந்த ஜன்னலோர இருக்கையைக் கைப்பற்றும் திட்டத்துடன் இவனுடனேயே ஒட்டி உட்கார்ந்து, இவன் மீதே தூங்கித் தூங்கிச் சாய்ந்த பயணி, நடத்துனரை நோக்கி கத்தத் தொடங்கினான்.

‘ஏனுங் கண்டக்டரு… இந்தாளு மறுபடியும் ஜன்னல் வழியா கைய நீட்றானுங்க. எக்குத் தப்பா எதுவுமாகறதுக்குள்ளாற எடத்த மாத்தியுடுங்க.

கடலை போடுவது கட்டான கோபத்தில் நடந்துனர் எழுந்து வந்தான்.

‘ஏப்பா மறுபடியும் எதுக்கு ஜன்னல் வழியா கைய நீட்டுற. செரியான ஏழ்ரயா இருப்ப போல. எந்திரி …. எடம் மாறியுக்காரு மொதல்ல..’

கடுப்படித்த நடத்துனரைக் கண்டுகொள்ளாமல் இவன் ’மக்களே போல்வர் கயவர்’ என்று முணுமுணுத்தான். ‘சார் கெட்ட வார்த்த பேசறானுங்..’ என்றான் ஜன்னலோர இருக்கைக்கு முயற்சித்தவன்.

‘ஏப்பா எச்சுப் பழம பேசாம மாறியுக்கார மாட்டியா’ மறுபடியும் நடத்துனர் இவனை வைதான். இவனுக்கோ தன் தரப்பு நியாயத்தை எங்கே சென்று சொல்வதென விளங்கவில்லை.

‘ட்ரைவரு கண்ணாடில பாத்துருப்பாருல்ல. இந்த வாட்டி நா வெளீல கை நீட்டுன்னான்னு அவர்ட்டயே கேளுங்க’என்று சொல்லிவிட்டு இவன் தனது இடத்தை  விட்டு எழாமல் அமர்ந்திருந்தான். தேர்ட் அம்பயரின் ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் போல எல்லோரும் ஓட்டுனரைப் பார்த்தனர். அவரோ  முதுகுக்குப் பின்னால் கையை ஆட்டிட்டு தன் ஜோலியைப் பார்த்தார். கைவிட்டான் என்கிறாரா? விடவில்லை என்கிறாரா? நடத்துநருக்குக் குழப்பமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து செல்போன் ஒலிக்கவும் அதுதான் சாக்குன்னு கடைசி இருக்கைக்குப் போய்க் கடலை போடுவதைத் தொடர்ந்தான். ஜன்னலோர இருக்கைக்கு முயற்சித்த பயணிக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. அவன் இவனை எரிப்பது போல பார்த்தான். இவன் நிறம் மாறினான். 

‘கேட்டோ..ஏது சமயத்திலும் ஞான் வோமிட் எடுக்கான் வேண்டியிருக்கும். ரெண்டெண்ணம் கிங்க் பிஷர் ஸ்ட்ராங் பியரும்  பின்னொரு தலப்பாகட்டி பிரியாணியும் வயிற்றிலுண்டு. வாந்தி நிங்ஙள்க்கு ப்ரச்யில்லங்கிள் ஞான் இங்ஙோட்டு மாறி இரிக்காம்..’

என்று இவன் திடீரென மலையாள  அவதார மெடுக்கவும், ஜன்னலோர இருக்கைக்கு முயற்சித்தவன் அதிர்ந்து போனான். அவனுக்கு ஏற்கனவே மலையாளிகளிடம் சில கசப்பான அனுபவங்களிருந்தன. ரெண்டு பியரும் தலப்பாகட்டி பிரியாணியும் கலந்து எடுக்கிற வாந்தியைக் குறித்து யோசிக்கும் போதே அவனுக்கு வாந்தி வந்து விடும் போலிருந்தது. எனவே ஜன்னலோஎர இருக்கைக்கான தனது முயற்சி தோற்றதாகக் கருதி அமைதியானான்.

வாஸ்தவத்தில் இவன் பியரும் அருந்தவில்லை. பிரியாணியும் உண்ணவில்லை ஜன்னல் சீட்டைக் கைப்பற்ற நினைத்தவனுக்கு எதிராக இவன் பிரயோகித்த  பொய் அது. சரி இது இப்படியே இருக்கட்டும். நாம் நடப்புக்கு வருவோம்.

திண்டுகல்லுக்கு சற்றுத் தொலைவிலிருந்தே பிரியாணிக் கடைகளின் ஆரவாரங்கள் தொடங்கிவிடுகிறது. ‘பொன்ராமின் தரமும் ருசியும் நிறைந்த பிரியாணியைச் சுவைக்க இன்னும் நீங்கள் 5 கி.மீ தூரம் மட்டுமே பயணிக்க வேண்டும். பாரம்பரியச் சுவைமிக்க தலப்பாகட்டி பிரியாணிக்கடை 2 கி.மீ தொலைவிலிருக்கிறது. ‘வெல்கம் டு பிரியாணி சிட்டி’ போன்ற விளம்பரப் பதாகைகள் பஸ் பயணிகளின் பசியைக் கிளறும் விதத்தில் நிற்கின்றன. அப்புறம் சீரகச்சம்பா அரிசி, இஞ்சி, பூண்டு சேர்மானங்களுடன் இறைச்சியும் கலந்து புழுங்கி பிரியாணி ‘தம்’மில் இருக்கும்போது அருவமாய் நம் நாசியை எட்டும் வாசனைக்காக அவரவர் தன்னுடைய ஆஸ்திகள் அனைத்தையும் எழுதித் தரலாமே?

திண்டுக்கல் நகருக்கு எவ்வளவோ வரலாற்றுப் பின்புலங்கள் உண்டு. இப்போதானால் இது பிரியாணி சிட்டி. என்ன செய்ய? காலம் மாறிவிட்டது. ஒருகாலத்தில் திண்டுக்கல் பூட்டு என்றார்கள். பிறகு திண்டுக்கல் பலாப்பழம், சிறுமலையில் விளைந்த வாழைப்பழமும், சப்போட்டாவுமே கூட தனிச்சுவைதான். எல்லாம் கலந்து கட்டி அடிக்கிற நெடியினூடாக இவன், கிளம்பி நின்ற பழனி  பஸ்ஸில் தொற்றிக்கொண்டு, இருக்கை தேடினான். கடைசி இருக்கை வரை நிறைந்திருந்தது. சிலர் நின்றுமிருந்தனர். இது போதாதென்று நடத்துனர் படியில் நின்றபடி இளனி விற்பவன்போல ‘பழனி பழனி’ என்று கூவினான். ஓட்டுநர் பஸ்ஸை ஓட்டுவது போலவும் நிறுத்துவது போலவும் பாவனை காட்டினார். அது அவரது தனித் திறமை. இந்தக் கள்ளத்தனத்தை சகிக்க மாட்டாமலோ என்னவோ மூன்றாம் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணி எழுந்து இறங்கி ஓடியே போனான். ‘உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு’ என்று  வெளியில் ஏதோ ஒரு டீக்கடையில் டி.எம்.எஸ் பாடிக் கொண்டிருந்தார். இவன் காலியான இருக்கையில் போய் கம்பீரமாக அமர்ந்துக்கொண்டு காலாட்டினான். இவனுக்கருகில் ஜன்னலில் கையூன்றியவாறு ஒரு முதியவர். அந்த வழுக்கையும் ஜிப்பாவும் கறுப்பு பிரேம் போட்ட கண்ணாடியும் விசேஷமான மூக்கும் மீசையும் இவனுக்கு ரொம்பவே பரிச்சயமுள்ளவர் போல காட்டியது. ஆனாலும் இவன் தனக்கு இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் முதியவரை பொருட்படுத்தவில்லை. 

ஓட்டுநர்  இன்னும் ஓட்டுவதான பாவனையைத் தொடர்ந்தார். நடத்துநர் ‘பழனி பழனி’என்கிற பல்லவியை விட்டானில்லை. அப்போது வெகு இயல்பாக, சற்றுமுன் இறங்கி ஓடிப் போனானே அந்தப் பயணி திரும்பி வந்து இவனருகில் நின்றான். இவனுக்கு முகம் கறுத்துவிட்டது. ‘அட சண்டாளா, வந்துட்டியா.. போனவன் போயிட்டே இருக்க வேண்டியதுதானே. இந்நேரம் பொடி நடையா நடந்திருந்தாக்கூட ரெண்டு கிலோ மீட்டர் போயிருக்கலாமே. என்ன மனசுடா உனக்கு. நிலையில்லாத மனசு. இப்படித்தான் பொஞ்சாதிகிட்டயும் இருப்பியோ? இப்ப நான் என்ன பண்ணுறது? எழுந்து நின்னு இவனுக்கு இடம் தரவா அல்லது கண்டுக்காத மாதிரி மூஞ்சிய அந்தப் பக்கமா திருப்பிக்கவா. மனசாட்சியோட மல்லுக்கட்ட வுட்றீங்களேப்பா..’ இவன் புலம்பியவாறு அமர்ந்திருந்த முதியவரைப் பார்க்க அவர் விருட்டென்று முகத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டார். ‘கிழம்.. இவ்வளவு நேரமும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருந்திருக்கு’ முனங்கினான். முதியவர் ஜன்னல் பக்கம் தலையை நீட்டி… “டா…சக்க…டா.. ஒண்ணு இங்ஙோட்டு நோக்கணும் சக்க.. சக்க.. டா..சக்க…” என்று கூவியபடி இருந்தார்.

இவன் கடைக்கண்ணால் இருக்கையைத் தொலைத்தவனைக் கவனித்தான். அவனோ அதுகுறித்த பொருட்படுத்தலின்றி மஞ்சள் நிற பட்டுடுத்தி எதிர்சீட்டில் நகையும் சிகையுமாய் மின்னிய ஆண்ட்டியை ஜொள்ளு விட ஆரம்பித்திருந்தான். ஆண்ட்டி அவன் பார்க்காத நேரத்தில் அவனைப் பார்ப்பதும், அவன் பார்க்கும்போது பக்கத்தில் வாய் பிளந்து உறங்கும் கணவனைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

வேண்டாம்.. இவர்கள் எக்கேடோ கெட்டுத் தொலைக்கட்டும் என்று இவன் வெறுப்பில் முகத்தைத் திருப்பிக் கொண்டான். முதியவர் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி “ சக்க … சக்க…” என்று கூவினார்.  இவனுக்கு அவர் மலையாளி என்பதும் பலாச்சுளை விற்பவனை அழைக்கிறார் என்பதும் புரிந்தது. ஆனால் பலாப்பழ வியாபாரிக்கு அது புரிய வேண்டுமே. ‘சக்க.. சக்க…’ என்று இவர் பாட்டுக்கு மலையாளத்தில் கூவினால் அவனுக்கென்ன தெரியும். தமிழன் என்றைக்கு தன் பாஷையல்லாத பிற பாஷைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறான் அல்லது ‘நான் கேரளத்து குஞ்ஞல்லோ.. சக்கப் பழச்சாறல்லோ’ மாதிரி பாடல்களையாவது கருத்தூன்றிக் கற்றிருப்பானா?

இவனுக்கோ மதிலுகள், மனயில் குளங்கரா, மணக்காடு, மாட்டாஞ்சேரி, மங்காடன், மந்திரி, மலபார், மரப்பாவ, மங்குஸ்தான், மது, மம்முட்டி என ‘ம’ வரிசையில் மலையாளம் மனசிலாயிருந்தது. கேள்வி ஞானத்தில் தான் கற்றுக்கொண்ட மலையாள பாஷையை எவனாவது ஒரு மலையாளியிடமே சோதித்துப் பார்க்க இவனுக்கு வெகுநாளாசை. ‘இன்றைக்கு வசமாக மாட்டிக்கொண்டான் ஒரு மலையாளக் கிழவன். பழனி வரைக்கும் இவனிடம் மலையாளத்திலேயே பேசி மரவள்ளி சிப்ஸ ஆக்கிரலாம்’ என்று மகிழ்ந்தான். “யோவ் பலா…. யேவாரத்த கவனிக்காம அங்குட்டு எங்கியோ பெறாக்கு பாக்குற. மூப்பர் பழம் கேக்குறார் பாரு” இவன் போட்ட போட்டில் சுதாரித்துக்கொண்ட பலா வியாபாரி, முதியவரிடம் சில பலாச்சுளைகளைத் தந்து, அதற்குரிய தொகையையும் பெற்றுக் கொண்டு நகர்ந்தான். மூப்பர் பலாச்சுளையைத் தின்பார்; அப்போது நாகரீங் கருதி, தன்னையுமொரு சுளை எடுத்துக்கொள்ளச் சொல்வார் என்று எதிர்பார்த்த இவன் ஏமாந்து போனான். மூப்பர் தன்னுடைய தோல் பையிலிருந்து ஒரு பாலிதீன் தாளெடுத்து அதில் பலாச்சுளைகளை வைத்துப் பவ்வியமாகச் சுருட்டி பைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளவும் இவனுக்கு வாழ்க்கை ஒரு நிமிஷத்தில் பாலூற்றாத கட்டஞ்சாயா போல இருட்டாகிப் போனது. 

ஒருவழியாக திண்டுக்கல் நிலையத்தை விட்டு பஸ் வெளியேறியது. நடத்துனர் பயணச்சீட்டு விநியோகிக்கத் தொடங்கினார். இருக்கையை இழந்தவனைத் திரும்பிப் பார்க்க இவனுக்கு விருப்பமில்லை. திரும்பிப் பார்ப்பதன் மூலம், அவனுடைய அற்ப சந்தோஷத்தை நாம் ஏன் குலைக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பக்கத்திலிருக்கும் மலையாள மூப்பர் மீது தொடக்கத்திலிருந்தே விழுந்திருந்த சந்தேகக்கோடு இப்போது வலுப்பெற்றது. இவன் வெறுமனே ஒரு மலையாளக் கிழவன் மட்டுமே அல்ல. அந்த மொழியை மீட்டும் முக்கியத்துவனோ என்பது போன்ற சந்தேகம். அவராக இருக்குமோ? அவரே போல் இருக்கிறானே கிழவன். ஆனால் அவர் மரித்துப் பல்லாண்டுகள் கடந்துவிட்டனவே. ஒரு சாதாரண மலையாளியாக இருக்ககூடும் என்று கருதி அம்மொழியிலேயே உரையாட எண்ணியிருந்த இவனுடைய ஆசையும் நிராசையானது. அதுகூட பிரச்சினை இல்லை. ஆனால் இந்த மூப்பருடைய தோற்றம் ஏன் தனக்கு இன்னொருவரை நினைவூட்டுகிறது? ஒவ்வொரு விநாடியும் இவனுக்கு பயமும் பரபரப்புமாகக் கழிந்தது. இந்தச் சிந்தனையிலிருந்து விடுபட நினைத்து, யாரும் பார்க்காத ஒரு தருணத்தில் தன் தலையில் தானே ஓங்கிக் குட்டிக்கொண்டான்.  ‘ணங்’கென்று விழுந்த குட்டில் அவனுடைய ஓர்மை தவறி, கடந்த காலத்துக்குத் தாவியது.

திண்டுக்கல் நகரத்தைத் தாண்டினால், நெடுஞ்சாலையில் கவனத்திற்குள்ளாவது, பழனி பாதயாத்திரைக்காரர் கூட்டம். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், முதியோர் என நடந்து செல்லும் விதம்விதமான மானடரூபங்கள். முருகனுக்காக  கால் நோக பக்தர்கள் மேற்கொள்ளும் யாத்திரை. நெடுஞ்சாலையில் இரவு பகல் என்று பாராமல் நடக்கையில் இவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுணர்ந்து நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல தனிப்பாதையே நிர்மாணித்திருந்தனர். செல்லும் வழியெங்கெங்கும் அவர்களுக்குப் பிரத்யேகமான கழிவறைகள், குளிமுறிகள், கந்தனுக்கு அரோகரா… கதிர்வேலனுக்கு அரோகரா..

பேருந்துப் பயணம் சலிப்பூட்டிய தருணமொன்றில் இவனும் பாதயாத்திரைக்காரர்களுடன் சேர்ந்து பழனிக்கு நடந்தான். காவி எதுவும் தரிக்காது. சாதாரண உடுப்பிலேயே நடந்து கொண்டிருந்த இவனிடம் எவரும் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்தவில்லை. நெற்றியில் நீரில்லை. கழுத்தில் கொட்டையில்லை என்றுங்கூட முணுமுணுப்பில்லை. நடந்தவாறே அவர்கள் உற்று நோக்கியது இவனுடைய பாதங்களைத்தான்.  இயக்குனர் மிஷ்கினைப் போல இவர்கள் எல்லோரும் ஏன் கால்களையே கவனிக்கிறார்கள்? இவனுக்கு முதலில் புரியவில்லை. பிறகு இவனும் மிஷ்கினாக மாறி எல்லாக் கால்களையும் கவனித்தபோதுதான் உறைத்தது; அவை யாவும் காலணிகளைத் தவிர்த்த கால்கள் என்பது. பாதயாத்திரையின் ஓர் அம்சம், யாத்ரீகன் பாதரட்சைகளைத் தவிர்த்து வெற்றுப் பாதங்களுடன் நடமாட வேண்டுமென்பதல்லவா?

கழற்றிக் கைகளில் வைத்தபடி நடந்தான். அநாகரீகமாகத்தானிருந்தது. அப்போது பார்த்து சாலையில் கடந்து சென்ற பஸ்ஸில் எவளோ ஒருத்தி இவன் கோலங்கண்டு சிரிப்பாய்ச் சிரித்துச் சென்றதும்கூட எரிச்சலை உண்டாக்கியது. நின்று கொண்டான். இவனை சட்டை செய்யாமல் பக்தர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தனர். நடக்கும் போது இவனோடு சின்னச் சின்ன உரையாடல் வைத்துக்கொண்ட ஒரு குடும்பம் சற்று தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்து இவனுக்காகக் காத்திருந்தது. ஆச்சரியத்துடன் ஆறுதலாகவுமிருந்தது. அந்தக் குடும்பத்தின் தலைவன் – இவனுடைய அண்ணன் வயதிருக்கும் .  அவன் இவனைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தான். இந்த கோஷ்டிகளுடான தொடர்பைத் துண்டித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறிவிடாமல் நின்ற இவனுடைய யோசனையை அந்தத் தோழமை மிக்க கையசைப்பு முறித்தது. ஓடோடிப்போய் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். மூச்சிறைத்தது. குடும்பத்தலைவி இவனைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டாள் “ஏனுங்க.. காலு வலியெடுக்குதுங்களா?”, “இல்லீங்க.. இந்த செருப்பு…” இவன் அசடு வழியவும் “அட,,,அதைய அம்மிணிட்டக்குடுங்க. பைக்குள்ளாற போட்டுக்கும். பழனி போயி வாங்கிக்கலாம்” என்றான் தலைவன். தலைவன் ‘அம்மிணி’ எனக் குறிப்பிட்டது தனது கொளுந்தியாளை. அவளுக்குத் பதினெட்டு வயதிருக்கும். களங்கமில்லாத முகம். காவி நிறத்தில் தாவணி கட்டி நெற்றியில் சந்தனக் குறி தீட்டியிருந்தாள். இவன் நிற்கவும் அவள் இவன் கையிலிருந்த செருப்பை விருட்டென்று பறித்துப் பைக்குள் போட்டுக் கொண்டு சாதாரணமாக நடந்து போனாள். பாதங்கள் சிவந்து துவண்டிருந்தன.

யாத்திரையில் இப்போது தலைவனும் தலைவியும் முன்னேறி நடந்தனர். அம்மிணி பின் தங்கி மெதுவாக நடை போட்டாள். இவனும் அம்மிணியும் சேர்ந்து நடந்தார்கள். இது முன்னே போய்க் கொண்டிருந்த தலைவனுக்கோ தலைவிக்கோ உறுத்தலாகத் தெரியவில்லை. அம்மிணி நடந்துகொண்டே சில நேரங்களில் இவனைப் பார்ப்பாள். இவனும் பதிலுக்குப் பார்த்து வைப்பான். இருவரும் பேசத் தவித்தனர். என்ன பேசுவதென்று குழப்பம். அப்போது ஆளுக்கொரு புன்னகைக் கீற்றுகளைப் பரிமாறிக் கொள்வர். 

ரெட்டியார் சத்திரம் பக்கம் படர்ந்து விரிந்ததோர் புளியமர நிழலில் ஒதுங்கி அந்தக் குடும்பம் கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்றை அவிழ்த்தது. புரிந்துக்கொண்டு, பிறிதொரு யாத்ரீகனுடன் பேசுவது போல நழுவப் பார்த்த இவனைத் தலைவனும் தலைவியும் கையைப் பிடித்திழுத்து அமர்த்தி தேக்கிலையில் புளிச்சோறும் கடுகுத் துவையலும் வைத்துத் தந்தனர். சும்மாவாச்சும் நழுவினானே தவிர இவனுக்குக் கடும்பசி. நல்லெண்ணெய் விட்டுத் தாளிதம் செய்த புளிச்சோறு  பசித்த வயிற்றினுள் கடகடவென இறங்கியது. ‘கடுகுத் துவையல்தான்’ என்று வாழ்த்தியபடி அள்ளி அள்ளி உண்டான். பிறகு அருகில் ஓடிய வாய்க்காலில் கையலம்பி வந்து கூஜா நீருமருந்தி வெட்கமில்லாமல் ஒரு பெரிய ஏப்பமும் விட்டான். தலைவன், தலைவி, அம்மிணி மூவரும் சிரிப்பாய் சிரித்தனர். இவனுக்கு வெட்கமாக இருந்தது. “இவ்வளவு பசிய வச்சிகிட்டு ஆளு நழுவப் பாத்தது வயித்த ஒளிக்கக்கூடாது.” தலைவி சொன்னாள். இவனுடைய அம்மா சொல்வது போலவேயிருந்தது. இவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. ‘ அம்மா நீங்களெல்லாம் நினைப்பது போல நான் பாதயாத்திரைக்காரன் அல்ல. பிறப்பில்  ஒரு முஸ்லிம். சொந்த ஊர் பழனிப்பக்கம் கலையமுத்தூர். விகல்பமே இல்லாமல் என்னிடம் பழகி என்க்குச் சோறும் போட்டீர்கள், என்னை மன்னித்து விடுங்கள்,’ என்று சொல்லிவிடலாமா? வாய்வரைக்கும் இவனுக்கு வார்த்தைகள் வந்து நின்று போயின.

அம்மிணி எவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பாள்? ஒரு முஸ்லிம் என்று சொன்னபிறகு இவர்களிடம் இவ்வளவு நேரமிருந்த அந்நியோன்யம் நீடிக்குமா? மீதி தூரத்தை நம்முடன் சேர்ந்து கடக்க சம்மதிப்பார்களா? இப்படி நூறு கேள்விகள் அவனிடம் தொக்கி நிற்க, நிறைந்த வயிற்றோடும் கனத்த மனத்துடனும் இவன் புளியமரத்தடியை விட்டு எழுந்தான். தட்டுமுட்டு சாமான்களைப் பொறுக்கி பெரிய பையொன்றில் போட்டுக்கொண்டு கிளம்ப ஆயுத்தமாயினர். உண்ட மயக்கம் ஆளாளுக்கு கண்களைச் செருகியது. புளிய மரத்தடியில் கிடந்து ஒரு மணி நேரம் உறங்கினால் என்ன என்றிருந்தது. இதைப் புரிந்துகொண்ட தலைவி, தன் இடுப்பிலிருந்த திருநீற்றுப்பையை உருவி கையில் விரித்து வைத்தாள். தலைவனும் அம்மணியும் ஆளுக்கொரு கை நீரெடுத்து அவரவர் நெற்றிகளில் பூசிக்கொண்டனர். இவன் தன் இயல்போடு மெளனமாக நின்றிருந்தான். தலைவி ஒரு கை எடுத்து இவன் நெற்றியில் அழுத்தமாகப் பூசிவிட்டாள். இவன் அதை எதிர்பார்க்கவேயில்லை. “எங்கொழுந்தன மாதிரித் தானப்பா நீயிம்” என்று சொன்னபடி – தலைவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள். அவன் சாதாரணமாக சிரித்துக்கொண்டு நின்றான். இவன் மறுப்பேதும் தெரிவித்தோ அல்லது பூசிவிட்ட நீரை அழித்தோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நின்றான். “பாரு.. தின்னீரு பூசவும் மூஞ்சி லெச்சணமா இருக்குதல்லோ” என்றாள் தலைவி. “ம்க்கும்..” என்று அம்மிணி சிரிப்புடன் அதை ஆமோதித்தாள். அந்த இடமே நீரு மணத்தது. 

தடம் பிடித்து மறுபடியும் நடந்தார்கள். கூட்டம் நிறையச் சேந்த மாதிரி இருந்தது. இவர்களால் ஒரு குழுமமாக நடக்க முடியவில்லை. மூவர் சேர்ந்தும் ஒருவர் தனித்தும் இருவராகவும் நடந்தனர். கணக்கன்பட்டிக்கு முன்பான ரயில்வே கேட் வரும்போது கிட்டத்தட்ட இவன் அவர்களை விட்டு நீங்கியிருந்தான். அந்த ரயில்வே கேட்டை ‘கொய்யா கேட்’ என்பார்கள். கொய்யாப்பழங்களைக் கூடைகளில் நிரப்பி விற்கும் முனைப்புடன் வரிசையாகப் பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.

கொய்யா கேட்டைத் தாண்டும்போது இவன் வேண்டுமென்றே பாதை மாறினான். அருகில் இட்டேரி மாதிரியிருந்த ஒரு மேடான பகுதியில் ஏறி நின்று கொண்டான். அங்கிருந்து பார்த்தபோது பாதயாத்திரைக்காரர்கள் சாரிசாரியாக நடந்து போவது தெரிந்தது. அவர்களில் தலைவனோ, தலைவியோ, அம்மணியோ தட்டுப்படவில்லை. ஒரே நேரத்தில் விடுதலையும், வேதனையும் உணர்ந்தான். கண்களில் நீர் கோர்த்திருந்தது. இவனுடைய பாதணிகளை அம்மிணி சுமந்து செல்கிறாள். ‘இவன் ஞாபகமாக அவை அவர்களது இல்லத்தின் ஏதேனுமொரு மூலையில் கிடக்கட்டும் அல்லது அவர்கள் கடந்து செல்லும் பாதையில் உதிர்த்துவிட்டுச் செல்லட்டும்’ என்று முணுமுணுத்தபடி மேட்டை விட்டுக் கீழிறங்கி நண்பன் ஒருவனின் கொய்யாத் தோப்புக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் நடந்தான். 

 

ருகிலிருந்த மூப்பரைப் பார்த்து இவன் “நீங்கள் பஷீரா?” என்று கேட்டான். “நான் பஷீர் அல்ல நசீர்” என்றவாறு அவர் பலாச்சுளைகளை ஒவ்வொன்றாகத் தின்னத் தொடங்கினார். முன்புபோல இவனுக்கு அவரது பலாச்சுளைகள் மீது நாட்டமில்லை. எல்லாச் சுளைகளையும் அவரே தின்று தொலைக்கட்டும் என்று விட்டுவிட்டான். ஆனால் இந்த ஆள் பார்க்க அச்சு அசலாக பஷீர் மாதிரியே இருக்கிறாரே என ஆச்சரியங்கொண்டு மீண்டும் மீண்டும் அவரை உற்றுக் கவனித்தான். என்ன நினைத்தாரோ? மூப்பர் இப்போது ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு பலாச்சுளைகளைத் தின்றார். தின்று தீர்க்கட்டும், பிறகு திரும்பித்தானே ஆகணும் என்று காத்திருந்தான். அதற்குள்  பஸ் ஒட்டன்சத்திரத்தை அடைந்திருந்தது. மஞ்சள் நிறப் பட்டுடுத்திய ஆன்ட்டி சலனமே இல்லாமல் அடக்க ஒடுக்கமாகத் தன் கணவனுடன் இறங்கிப் போனாள். இவன் பின் பக்கமாகத் திரும்பி இருக்கை இழந்தவனைத் தேடினான். ஆன்ட்டி அமர்ந்திருந்த இருக்கையில் அவன் தலைகவிழ்ந்து இருந்தான். மூப்பர் பலாச்சுளைகளைத் தின்று தீர்த்து தண்ணீரும் முடித்து ஏப்பம் விட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்றார். பிறகு இவன் கேள்விகளைப் பிரயோகிக்க, அவர் பதில் சொடுக்க, சரியாக இருந்தது. 

“நீங்கள் பஷீரல்லே?”

“ஆரு வைக்கம் முஹம்மது பஷீரா?”

“ம்”

“நான் முன்பே சொன்னேன் இல்லையா. நான் பஷீர் இல்ல. நசீர்ன்னு…”

“நிங்கள் பஷீரினப் போல் உண்டல்லோ … அய்யோ இந்த பெஸ்ஸிலுள்ள எவனுக்கும் பஷீரத் தெரியாதே. ஞான் ஞான் எந்து செய்யும்?”

“தம்பீ..”

“ம்..?”

“நீ எனக்காகவா மலையாளத்தில பேசுற?”

“ம் .. அதே… நிங்ஙள் மலையாளியல்லே?”

“ஹாம். ஞான் மலையாளியானு. ஆனா எனக்குத் தமிழ் தெரியும். நீ ஒண்ணும் இவ்வளவு கஷ்டப்பட்டு மலையாளத்தில் பேசவேண்டாம். நல்லொரு பாஷையின கொலபாதகம் பண்ண வேண்டாம். கேட்டோ..”

இவனுக்கு மூப்பரின் பேச்சைக் கேட்டதும் முகம்  அஷ்டகோணலாகி விட்டது. இவர்களது உரையாடலைத் திரும்பிக்  திரும்பிக் கேட்டுக் கொண்டே வந்த முன் சீட்டுக்காரன் “ஹெஹ்ஹே” என்று கேலியாகச் சிரித்தான். மூப்பர் மீண்டும் பேசத் தொடங்கினார். இவனுக்கு பஸ்ஸிலிருந்து குதித்து விடலாமா என்றிருந்தது.. ஆனாலும் உயிருள்ள வரை போராடுவோம் என்னும் உறுதியில் மூப்பரை எதிர்கொண்டான்.

“ஞான் தமிழில சங்கம் பாட்டுகள், கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி எல்லாம் படிச்சிட்டுண்டு, இப்போ எழுதுன்ன பையன்மார் வர பரிச்சயமிருக்கு. நீ என்ன மாதிரி தமிழ்ல பேசினாலும் பதிலுக்குப் பேசுவேன்..”

உயிருள்ளவரை மூப்பர் போராடவிடமாட்டார் போலிருந்தது. ‘கொஞ்சம் மிண்டினாலும் சாயம் வெளுத்துவிடும். நம்ம எந்தக் காலத்தில சங்க இலக்கியம் படிச்சோம்’என்று இவனுக்குக் குற்ற உணர்வு அதிகரித்தது. ஆனாலும் தம் கட்டிப் பார்த்தான்.

“அப்புறம் எதுக்குப் பலாச்சுளக்காரன சக்க.. சக்கன்னு கூப்டீரு? பலாப்பழம்ன்னு கூப்பிட வேண்டியதுதானே?”

மூப்பர் இந்த சிறிய தூண்டிலில் மாட்டிக்கொள்வார் என்று பார்த்தான். அவர் அதற்கும் பதில் வைத்திருந்தார். 

“நான் சக்க சக்கன்னு விழிச்சதால்தான் நீர் அங்க மூக்க நொழச்சிட்டு ஆஜரானீரு? அது நம்முடே ட்ரிக்கானு.” இவன் நிஜமாலும் சூடாகி விட்டான்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும். நீங்க பஷீரா இல்லையா?

”நான் பஷீர் இல்ல. ஆனா நானொரு பஷீரிஸ்ட்..”

”பஷீரிஸ்ட் ? அப்படின்னா… இந்த பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் மாதிரியா?”

“அப்படித்தான்..”

“பஷீரிஸம்னு ஒண்ணு இருக்கா என்ன.?”

“இல்லாமலா நான் பஷீரிஸ்டா இருக்கேன். கேரளத்தில் என்னப் போல் ஒரு பாடு பஷீரிஸ்டுகளுண்டு..”

“சரி.. உருவத்திலும் அவங்க பஷீர்  மாதிரியே இருப்பாங்களா என்ன?”

“அதுக்கு ஞான் உத்தரவாதமில்ல”

“நீங்க பஷீர் மாதிரியே இருக்கீங்களே?”

“அட அதொண்ணும் இல்லப்பா. லோகத்துல என்னப்போல எத்தன ஆள்காரன் இதுபோல ஜிப்பாவும் கைலியும் உடுத்திட்டு இருக்கான். அவம்மாரெல்லாம் பஷீரா? அத்தேஹம் மரிச்சு இருவது வருஷங்களுக்கு மேல ஆச்சு. உனக்கு ஒரு பிரம்ம. அதான் என்னப் பார்த்தா பஷீர் மாதிரி தெரியிது. செரி… நீ லிட்ரேச்சர் வாசிப்பே இல்லே?”

“வாசிக்காமலா எனக்கு வைக்கம் பஷீரத் தெரியும்?” 

“கடேசியா என்ன படிச்சே?”

“சிங்கடி முங்கன்..”

“ம்… பஷீர் தந்ததல்லே அது? அதான் பஷீரினட ஓர்ம. தம்பி தமிழம்மார் உண்டல்லோ. அவரின்ட சுபாவம் தெரியுமா நினக்கு?”

“சொல்லுங்க”

“கதைய விட்டுட்டு கதாநாயகன் உண்டல்லோ, அவனையே நெனச்சிட்டு மருகுறது.  நீ சிங்கிடி முங்கன மறந்துட்டே. அவனக் காட்டிலும் அவன சிருஷ்டிச்ச பஷீர்தான் உன்னோட ஓர்மயில் இருக்கார். பஷீர்தான் உன்னோட ஹீரோ. பஷீர் உயிரோட இருந்தா இந்த பழக்கத்தை செரியான ஒரு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவார். பழனி வந்திட்டு. வா எறங்கலாம்.”

இவனுக்கு மெல்ல மெல்ல எல்லாம் தெளிந்த மாதிரி இருந்தது. ஆனாலும் ‘இந்த பஷீரிஸ்ட்’ என்னும் பதத்துக்கு தெளிவான அர்த்தம் புரியவில்லை. 

பழனி பஸ் நிலையம் வழக்கத்தைக் காட்டிலும் பரபரப்பாக இருந்தது. கும்பல் கும்பலாக நின்று ஜனங்கள் அங்கலாய்ப்புடனும் ஆவேசத்துடனும் பேசிக்கொண்டிருந்தனர். விஷயத்தை கிரஹிக்கும் நோக்கத்துடன்  இவன் ஒரு கும்பலுக்குள் ஊடுருவி, சற்று நேரத்தில் தலையைக் கவிழ்ந்து சோகமாக வெளியேறினான். ஒரு ஓரமாக ஒதுங்கி நின்ற மூப்பர் இவனிடம் “என்ன விசேஷம்?” என்று ஆவல் மேலிட விசாரித்தார்.

இன்றைக்கு ராத்திரி பனிரெண்டு மணில இருந்து பஸ் கட்டணம் ஏறுதாம்..”

“எவ்வளவு?”

“அப்படியே டபுள் சார்ஜா இருக்கும்னு பேசிக்கிறாங்க..”

இப்போது மூப்பரும் ஆழ்ந்த கவலையுடன் தலையைக் கவிழ்ந்து கொண்டார்.

“பார்த்துடே… செரியான ஆன முழுங்கி கூட்டத்து கையில உங்க தமிழ்நாடு மாட்டிக்கெடக்கு. அந்த மல மேலிருக்கிற பாலசுப்ரமண்யன் தான் உங்கள ரட்சிக்கணும்.”

இதை சொல்லிவிட்டு, மூப்பர் ஒரு பீடியும் பற்றவைத்துக் கொண்டு  பொள்ளாச்சி பஸ் தேடிப் போனார். இவன் எதிர்காலம் இருண்டவனாக ’ஙே’ என்று விழித்தப்படி அவரைப் பின் தொடர்ந்தான். இவன் வருவதறிந்த மூப்பர் திரும்பி ‘ நீ இனிமேட்டு பஸ்ஸில பிரயாணம் செய்ய வேண்டாம். அந்த பாதயாத்திர கோஷ்டியோடு நடந்தே போகலாம், தின்னான் சோறும் கிட்டும் உத்தமம்’ என்று பஷீர் பாணியில கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். ‘பஷீர் மட்டுமல்ல. பஷீரிஸ்ட்டுகளுமே கூட ஞானிகள்தாம்..’ என்று இவனுக்கு அந்த நேரத்தில் உறைத்தது. 


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் “பஷீரிஸ்ட்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள இந்த சிறுகதை ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று  ‘பெட்டகம்’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது

 

1 COMMENT

  1. சிறுகதை படிக்கும்போதே மனதுக்கு உற்சாகத்தையும் மெல்லிய சிரிப்பையும் தந்தது. மலையாளத்தைத் தமிழில் படிப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது. 💓💓
    நன்றி கனலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.