ஒரு மகளின் நினைவோடை

டந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையைத் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பல்வேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் எனப் பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாகத் தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம் வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

இலக்கியத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக, மிகவும் தாமதமாக இருபத்தைந்து வயதில்தான் புதுமைப்பித்தன் தன் பட்டப்படிப்பைப் படித்துமுடித்தார். அதனால் அவருக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு அமையவில்லை. அவருக்கும் அதில் ஆர்வம் இல்லை. பெற்றோருடனான மோதலுக்கு அதுவே முக்கியமான காரணமானது. அதே ஆண்டில் அவருக்குத் திருமணம் நடந்தேறியது. மனைவியை அவருடைய தாய்வீட்டிலேயே விட்டுவிட்டு பத்திரிகைத் துறையில் பணிபுரியும்பொருட்டு அவர் சென்னைக்கு வந்துவிட்டார். கிராம ஊழியன், தினமணி, தினசரி எனப் பல பத்திரிகைகளில் அடுத்தடுத்து பணியாற்றினார். 1946இல் அவருக்குத் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் உடல்நலக் குறைவின் காரணமாக 1948இல் மறைந்துவிட்டார்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கையை முன்வைத்து இதுவரை பல்வேறு நூல்கள் வந்திருந்தபோதிலும், அவரைப்பற்றிய ஒரு முழுமையான பார்வையை அளிக்கும் விதமாக அமைந்த தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய வாழ்க்கை வரலாறே முக்கியமான முதன்மை நூலாகும். அதையடுத்து, புதுமைப்பித்தனின் நண்பரான எஸ்.சிதம்பரம் அவருடைய இறுதிக்கால நாட்களைப்பற்றிய சித்திரத்தை எழுதியிருக்கும் புத்தகத்தை (புதுமைப்பித்தனின் கடைசி நாட்கள்) ஒரு முக்கியமான ஆவணமாகச் சொல்லலாம்.

புதுமைப்பித்தன் இறக்கும்போது அவருடைய மகளான தினகரிக்கு இரண்டு வயது. இப்போது எண்பது வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர். அவர் தன் தந்தையாரைப்பற்றி தாய் வழியாகக் கேட்டறிந்த நினைவுகளைத் தொகுத்து இப்போது   ’எந்தையும் தாயும்’ என்னும் தலைப்பில் நூலாகக் கொண்டுவந்துள்ளார். ஒரு மகளாக அவர் மட்டுமே சொல்லத்தகுந்த சில முக்கிய தருணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அந்த வகையில் தினகரி சொக்கலிங்கம் எழுதியிருக்கும் இந்தச் சிறு நூலையும் ஒரு முக்கியமான ஆவணமாகவே நாம் கருதலாம். மூன்றும் மூன்று கோணங்களில் எழுதப்பட்ட நூல்கள்.

திருமணமான புதிதில் புதுமைப்பித்தன் தன் மனைவியோடு தன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சில கசப்பான அனுபவங்கள் இருந்தபோதும், அனைவரும் ஒரே கூரையின் கீழேயே தங்கியிருக்கின்றனர். ஏதோ ஓர் அமாவாசை நாள். இரவு எட்டுமணி. புதுமைப்பித்தனின் சித்திக்கும் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்மணிக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் தொடங்கியிருக்கிறது. அந்த வாய்ச்சண்டையில் எப்படியோ புதுமைப்பித்தனின் மனைவியையும் இழுத்துவிட்டார்கள். அந்த வாய்ச்சண்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதானபோது வீட்டிலேயே இருந்த அப்பாவும் மகனும் தனித்தனி சார்புநிலைகளோடு மோதலில் இறங்கிவிடுகின்றனர். வாய்ச்சண்டை முற்றியதன் விளைவாக புதுமைப்பித்தன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த இரவு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். வீட்டைவிட்டு வெளியேறிய நாள் குறித்து ஒரு படக்காட்சியைப்போலத் தன் மனத்தில் பதிந்திருந்த அனுபவத்தைத் தன் தாயார் பகிர்ந்துகொண்ட தருணத்தைச் சுருக்கமான ஒரு சொற்சித்திரமாக இந்நினைவோடையின் முதல் பகுதியில் பதிவு செய்துள்ளார் தினகரி.

ஒரு குடும்பம் வெடித்துச் சிதறும் தருணம் என்பது மிகவும் வேதனையானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு யோசித்துப் பார்த்தால் உப்பு பெறாத ஓர் அற்பமான விஷயத்தில்தான் அத்தருணம் தொடங்கியிருக்கும்.  ஆனால் அதனால் உருவான பிளவுகளோ ஒருபோதும் சரிசெய்ய முடியாதவையாகக் காலம் கடந்துபோயிருக்கும்.

மோதிக்கொள்வதையும் பிரிந்துசெல்வதையும் கூட ஏதோ ஒரு வகையில் மானுடச் சுபாவம் என ஏற்றுக்கொண்டுவிடலாம். ஆனால் ஒருவருடைய மரணத்துக்குப் பிறகும் கூட, ஒரு வஞ்சத்தை எப்படி மனத்தில் நிரந்தரமாகத் தேக்கிக்கொண்டு நடமாடமுடியும் என்பது புதிராக இருக்கிறது. மனித உறவை விட வஞ்சம் பெரிதானதாகத் தோன்றுவதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்?

குழந்தைப் பருவத்தில் உறவுக்காரர் ஒருவர் தன்னைத் தூக்கிச் சென்று தன் தாத்தா முன்னால் காட்டச் சென்றதையும் “அவனே போயாச்சு…. அவன் வாரிசை எல்லாம் பார்க்க விரும்பலை” என்று ஈரமே இல்லாத குரலில் அந்தத் தாத்தா சொன்னதையும்  ஒரு சின்ன நிகழ்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் தினகரி. அவர் எப்படியோ அத்தருணத்தைக் கடந்துவந்திருக்கலாம், ஆனால் அந்தப் புறக்கணிப்பின் துக்கத்தை ஒரு வாசகனாக நம்மால் அவ்வளவு எளிதாகக் கடந்துசெல்ல முடியவில்லை.

கண்கலங்க வைக்கும் ஒரு தருணத்தைப்பற்றிய பதிவும் இந்நூலில் உள்ளது. புதுமைப்பித்தனின் மனைவி இரண்டாவது பிரசவத்துக்காக திருவனந்தபுரத்துக்குச் சென்றிருந்த நேரம் அது. முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஏற்கனவே இறந்துபோயிருந்த சூழலில் இந்தப் பிரசவம் நல்லபடியாக நிகழவேண்டுமே என்கிற பதற்றம் எல்லோருடைய உள்ளத்திலும் நிறைந்திருக்கிறது. புதுமைப்பித்தன் அப்போது தினமணியில் வேலை செய்துகொண்டிருக்கிறார். ஒருநாள் அவர் அலுவலகத்தில் இருந்தபோது ‘மகள் பிறந்திருக்கிறாள். ஆனால் குழந்தை அபாயக்கட்டத்தில் உள்ளது’ என்று அவசரத்தந்தி வருகிறது.

அவர் கையிலோ அப்போது பணமில்லை.  எங்கெங்கோ அலைந்து, யார் யாரிடமோ கடன் வாங்கி பணத்தைத் திரட்டிக்கொண்டு திருவனந்தபுரத்துக்குச் செல்ல வேகவேகமாக ரயில்நிலையத்துக்குப் புறப்படுகிறார். ரயில் நிலையத்தை நெருங்கிய சமயத்தில் ஏதோ ஓர் உணவுவிடுதியின் முன்னால் கூச்சலும் கூட்டமுமாக இருக்கிறது. என்ன விஷயம் என்று பார்ப்பதற்காக ஒரு கணம் நிற்கிறார் புதுமைப்பித்தன். அந்தச் சாப்பாட்டுக் கடையின் முதலாளி ஏராளமாகப் பெருகிவிட்ட கடனை அடைக்காததற்காக குரலையுயர்த்தித் திட்டிக்கொண்டிருக்க, அவர் முன்னால் பதில் சொல்லமுடியாத நிலையில் யாரோ ஓர் எழுத்தாளர் தலைகுனிந்து நின்றுகொண்டிருப்பதை அவர் கண்கள் கவனித்துவிடுகின்றன.

ஒரு சக எழுத்தாளர் அவமானத்தில் தலைகுனிந்து நிற்பதை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.  உடனே, அந்த முதலாளியை நெருங்கிச் சென்று சண்டையை நிறுத்தி, தன் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து கடனை அடைத்து நண்பருடைய மானத்தைக் காக்கிறார். பெற்ற குழந்தையைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டு ரயில்நிலையத்துக்குச் செல்லாமல் அறைக்குத் திரும்பிவிடுகிறார். அடுத்தநாள் காலையில் குழந்தை இறந்துவிட்டது என்னும் செய்தியோடு அவரைத் தேடி தந்தி வருகிறது. அக்கணத்தில் கண்கலங்கி நிற்பதைத் தவிர, அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

மனம் கலங்கவைக்கும் இன்னொரு தருணத்தையும் தினகரி இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அவருடைய இறுதிக்காலத்தில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பழம் வாங்கிக் கொடுப்பதற்குக் கூட பணமில்லாத நேரம் அது. யாரோ ஓர் உறவினரின் பெயர் புதுமைப்பித்தனுக்கு அப்போது நினைவுக்கு வருகிறது. அவருக்கு ஒரு கடிதம் எழுதலாம் என அவருக்குத் தோன்றுகிறது. அவர் உதவுவார் என அவர் அழுத்தமாக நம்புகிறார். உடனே  ஒரு தாளை எடுத்து அவருக்குக் கடிதம் எழுதுகிறார். சில வரிகளில் சுருக்கமாகத் தகவலை எழுதிவிட்டு கீழே கையெழுத்திட முற்படுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய பேனா கையை விட்டு நழுவி கீழே விழுந்து உடைந்துவிடுகிறது. அதைப் பார்த்த புதுமைப்பித்தன் விரக்திப்பெருக்கில் தனக்கு முன்னால் தன் பேனா இறந்துவிட்டதாகத் துயரம் படிந்த குரலில் கூறிப் புன்னகைக்கிறார். அடுத்து ஒருசில தினங்களிலேயே அவரே குறிப்பிட்டதைப்போல அவரும் மறைந்துவிடுகிறார்.

புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பிறகு உறவினர்களோடு சேர்ந்து வாழ்வதற்கு இசைவாக ஊருக்கே செல்வதுதான் நல்லது எனப் பலரும் ஆலோசனை கூறியபோதும், சென்னையிலேயே வாழவேண்டும் என்னும் மன உறுதியோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் புதுமைப்பித்தனின் துணைவியார். அந்த உறுதியின் விளைவாக அவர் பல துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் எந்தத் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் சென்னையிலேயே தங்கி மகளை வளர்த்து, புதுமைப்பித்தனின் கனவை நிறைவேற்றும் வகையில் பாடுபட்டு மகளை ஒரு பட்டதாரியாக்குகிறார். அதே சமயத்தில், தன் கனவை நிறைவேற்றிக்கொள்ளும் விதமாக, ஒரு பொறியாளரையே மணமகனாகத் தேர்ந்தெடுத்து தன் மகளுக்கு மனம் செய்துவைக்கிறார்.

அவருடைய இறுதிக்காலத்தில் பக்கவாத நோய் அவரை படுக்கையில் தள்ளிவிடுகிறது. இடைவிடாத மருத்துவத்தாலும் மன உறுதியாலும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வேளையில் அவர் கட்டிலிலிருந்து விழுந்து படுத்த படுக்கையாகிவிடுகிறார். மறைவுக்கு ஒரு நாள் முன்பாக, கட்டிலில் படுத்திருக்கும்போது அவருடைய பார்வை தலைக்கு மேல் தொங்கிய புதுமைப்பித்தனின் புகைப்படத்தைப் பார்க்கிறார். அவர் எதைப் பார்க்கிறார் என்பது தெரியாமல் மகளான தினகரி “என்னமா பார்க்கறீங்க?” என்று கேட்கும்போது “யாரையா…?. என்னோட சோவியைத்தான்” என்று கணீரென்ற குரலில் பதில் சொல்கிறார். மறுநாள் அவர் உயிர் பிரிந்துவிடுகிறது.

தினகரியின் சொற்சித்திரங்கள் அனைத்தும்  சுருக்கமாக இருந்தாலும் மனத்தை நிறைத்துவிடுகின்றன.  ஒரு சில  நினைவுகளையே இத்தொகுதியில் தினகரி  பதிவு செய்திருந்தாலும், அப்பதிவுகள் வழியாக  புதுமைப்பித்தனின் நகைச்சுவை உணர்வையும் பிறருக்கு உதவும் அவருடைய மனப்பான்மையைப்பற்றியும் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தை மீது புதுமைப்பித்தன் கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, புதுமைப்பித்தன் தன்னுடைய மனைவிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் நூலின் இறுதிப்பகுதியில் அமைந்துள்ளன.

(எந்தையும் தாயும். தினகரி சொக்கலிங்கம். காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. விலை. ரூ.100) 

Previous articleஅவன் விதி-மிகயீல் ஷோலகவ்
பாவண்ணன்
பாவண்ணன் குறிப்பிடத்தக்க மூத்த தமிழ் எழுத்தாளர். ரசனையை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் குறிப்பிடப்பட வேண்டியவர். சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here