1
மணி ஒன்பதாகியும் மதில் வாசற்கதவில் சொருகப்பட்டிருந்த தினத்தந்தி எடுக்கப்படாமலிருந்தது. வீட்டில் ஆள் இல்லாத மாதிரியும் தெரியவில்லை. செருப்புகள் எல்லாம் கிடக்கத்தான் செய்கின்றன. கூத்தபெருமாள் இரும்புக் கொக்கியை புரட்டிப்போட்டபோது எழுந்த ‘டைங்’கென்ற சப்தத்தில் பக்கத்து வீட்டு டாபர்மன் தெருவே அதிர குரைக்க ஆரம்பித்துவிட்டது. ‘ச்சை இது வேற சனியன்..’
கேசவமூர்த்தியின் மனைவி வெளியே வந்து பார்த்து, ‘வாங்க, குளிச்சிட்டிருக்கார்.. உள்ள வந்து ஒட்காருங்க’ என்றாள்.
‘இல்லம்மா.. இப்டியே வராந்தாவுலயே காத்தார குந்துறேன்.. வெய்ட் பண்றேன்னு மட்டும் சொல்லுங்க’ – வந்தவர் மெல்ல அசைந்து வந்து வெளியில் கிடந்த ஒரு பிரம்பு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தார். பெரிய தொப்பை, சட்டையைப் பித்தான்களுக்கிடையில் பிளந்து வைத்திருந்தது. இருபெரும் தொடைகளை நாற்காலியின் கைப்பிடிகளுக்கு நடுவில் திணித்துத்தான் உட்கார்ந்தார். நாற்காலி நறநறவென ஏதோ ஓசை எழுப்பியது. கேசவமூர்த்தியின் மனைவி நாற்காலி குறித்த கவலையுடன் உள்ளே போய்விட்டாள். கதவிலிருந்து உருவிய தினத்தந்தியை கூத்தபெருமாள் மேய ஆரம்பித்தார்.
‘ப்ரோக்கர் வந்துருக்காருங்க’
‘வந்துட்டேன் வந்துட்டேன்’ என்றபடி ஊறிப்போன மெல்லிய நூல் துண்டை இடுபில் கட்டியவாறு கேசவமூர்த்தி குளிலயறையிலிருந்து வெளிப்பட்டார். வந்தவர் நேராகப் பூஜை அறைக்குள் நுழைந்து, நெற்றியிலும் இருபுஜங்களிலும் மூன்று கோடு திருநீறைப் பூசிக்கொண்டு வெளியே வந்தார். ரிட்டயர்மெண்ட் வயதிற்கு வழுக்கை அதிகமில்லை என்பதால் நெற்றியை அந்த பட்டை நிரப்பியிருந்தது.
வராந்தாவில் எட்டிப்பார்த்து, ‘நமஸ்காரம்வோய்.. ஆள புடிக்கமுடியலயே’ என்றார். கூத்தபெருமாள் பதிலுக்கு, ‘நமஸ்காரம் நமஸ்காரம்.. செம்பனார்கோயில்ல மக வீட்டுக்குப் போயிருந்தேன் அன்னிக்கு நீங்க கூப்டப்ப.. நேத்திக்குத்தான் வந்தேன்.. எப்புடியும் நாயித்துக்கெழம வீட்லதான் இருப்பீங்கன்னுதான் போனடிச்சு கூட கேக்காம கெளம்பி வந்துட்டேன்’ நாற்காலியிலிருந்து எழ முயன்றவாறே சொன்னார்.
‘ஒக்காருங்க ஒக்காருங்க.. ரெண்டு இட்லிய பிட்டு வாய்ல போட்டு வந்துர்றேன்.. சுகர் ஊசி போட்டேன்.. சாப்டலன்னா கொண்டி கொண்டி தள்ளும். நீங்க சாப்டாச்சா?’
‘ஆச்சு ஆச்சு.. நீங்க முடிச்சிட்டு வாங்க.. காபியெதுவும் கலந்தா மட்டும் ஒரு சின்ன டம்ளர்ல’
தட்டில் சப்பையான இட்லிகளும் சூடாக்கிய முந்தைய தின கோழிக்குழம்பும் காத்துக்கொண்டிருந்தன. வேஷ்டிக்கு மாறியவர் தட்டைக் கையிலெடுத்தபடி அடுப்பங்கரையிலேயே போய் நின்றுகொண்டு சாப்பிட ஆரம்பித்தார்.
‘என்னவாம்? கேட்டீங்களா.. ஆள் கெடச்சுதான்னு’
‘கெடைக்காம இந்த தடியன் இங்கிட்டு அடியெடுத்து வெப்பானா? இந்நேரம் அங்கிட்டு ஒரு கமிஷன பேசிட்டுதான் நம்மக்கிட்டயே வந்துருப்பான்.’ மளமளவென இட்லி உள்ளே போய்க்கொண்டிருந்தது.
‘அட அது கெடந்துட்டு போகுது.. ஒன்னோ ஒன்றையோ தொலச்சு அழுதுட்டு போவோம்.. அதிலயே நின்னு பிசிறிட்டு இருக்காதீங்க.. அந்த எடத்த கழிச்சுவிட்டா சரி’
‘லாஸ்ட்டா எப்டியும் ரெண்டுல வந்து நிப்பாம்பாரு’ – கடைசி துண்டு இட்லியைக் கொண்டு தட்டில் ஒட்டிக்கொண்டிருந்த மிச்ச குழம்பை மொத்தமாக வழித்து வாயில் போட்டுக்கொண்டார்.
கேசவமூர்த்தி வெளியே வருவதற்குள், கூத்தபெருமாள் நாற்காலியிலிருந்து வெற்றிகரமாக வெளியேறியிருந்தார். அந்த காலை வேலைக்கு வெக்கை அளவிற்கதிகமாக இருக்க, தந்தியை வைத்து விசிறிக்கொண்டிருந்தார்.
‘அதுக்குள்ள ஆயிருச்சா? இந்த சாப்பாட்டுக்கா சுகர் வந்திருக்கு?’
கேசவமூர்த்தி சிரித்துக்கொண்டே வேஷ்டி முனையைத் தூக்கி தலையைக் குனிந்து வாயைத் துடைத்துக்கொண்டார்.
‘அன்னிக்கு வந்த ப்ரொபசரும் அதையேதான் சொன்னாரு போல?’
எப்படி இந்த ஆள் இதையெல்லாம் மோப்பம் பிடிக்கிறான் என்று கேசவமூர்த்திக்கு வியப்பாக இருந்தது.
‘அவரு ஓகேன்னு சொல்லிட்டு போயிட்டாரு.. அடுத்த நாளு அந்தாளு பொண்டாட்டி மளிகைக் கடை சீனிவாசனுக்கு போனடிச்சு வேணான்னு சொல்லிருங்கன்னு சொல்லிருச்சாம். அவஞ் சொல்லிவிட்ட பார்ட்டிதான் அது’
‘சீனிவாசனுக்கு என்ன கமிஷன் பேசியிருந்தீங்க..?’ கூத்தபெருமாள் குரலைக் குறைத்துவைத்துக்கொண்டு கேட்டார்.
‘அவன் சும்மா பழக்கத்துக்காக பண்றான்.. கமிஷன்னுல்லாம் எதும் பேசிக்கல’
‘இதென்ன போறவாக்குல சும்மா சொல்லிவிட்டு போறமாதிரியா இருக்கு?’ – கேலியான தொனியில் – ‘கல்யாணம் மாதிரி என்ன ஆளுக என்ன கூட்டம்ன்னுல்லாம்ல தேட வேண்டியிருக்கு’ – கேசவமூர்த்திக்கு இதைக் கேட்கவே எரிச்சலாக இருந்தது.
‘உங்களுக்கு எதுவும் ஆள் கெடச்சுதா இல்லையா?’
‘நீங்க சொன்ன அத்தன அம்சத்தோடயும் தேடி புடிச்சிருக்கேன்’ – கூத்தபெருமாள் பெருமிதமாகச் சிரித்தார்.
‘வெவரமெல்லாம் சொல்லிருக்கீங்களா?’ – கேசவமூர்த்திக்கு இந்த பதற்றம்தான்
‘அப்பன் குதுருக்குள்ள இல்லன்னா? வர்றப்ப வந்து பாத்துக்கட்டும். நீங்க யோசிச்சிருக்கபடி வேணான்னு சொல்றதுக்கான காரணந்தான் இந்த வாட்டி அடிபட்டு போகுதுல்ல’ – கிட்டத்தட்ட பரிவர்த்தனை முடிந்துவிட்டதைப் போல ரொம்பவே நம்பிக்கையுடன் பேசினார். கேசவமூர்த்தியின் மனைவி இருவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு நிலைவாசலையொட்டி நின்றபடி பேச்சுவார்த்தையில் காது வைத்தாள்.
‘ஆளு யாரு?’
‘அதுக்குதான் வந்தேன்.. கையோட பேப்பர்ஸ்லாம் வாங்கிட்டு இப்ப நேரா பார்ட்டிய பாக்கதான் போறேன்.. பேரு சுதாகரன்னு.. சப்தாசில்தாரா மாத்தலாகி வந்துருக்காரு.. மாமியாரூடு இங்கதான்.. இவருக்கு ஜெயங்கொண்டம் பக்கமா கிராமம்.. இங்கயே செட்டில்மெண்ட்ட போட்றலாம்ன்னு இருக்காப்டி..’
‘ரேட்டு நீங்க எதும் பேசிருக்கீங்களா?’
‘நீங்க ஒன்னு வெச்சு சொல்லுங்க. நாம்பாத்து அடிச்சு பேசிக்கிறேன் அத’
கேசவமூர்த்தியிடமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையின் சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்தன.
2
பழைய ரெயில்வே டிராக்கிற்கு பக்கமாகப் போடப்பட்ட கண்ணதாசன் நகரின் இருபத்திநான்கு மனைகளில், இரண்டு மனைகளை கேசவமூர்த்தி சொந்தமாக்கியிருந்தார். எந்த நேரத்திலும் பாதை சீரமைப்பு, அகலப்படுத்தல், கூடுதல் தடம் போன்ற காரணங்களுக்காக ரெயில்வே துறை டிராக்கையொட்டியிருந்த ஆறு மனைகளைக் கையகப்படுத்தலாம் என்று பேசி உரிமையாளரைப் பணிய வைத்தது கூத்தபெருமாள்தான். அந்த மனைகளை அடாசு விலையில் அவரே இரட்டை லாபம் வைத்து கைமாற்றி விட்டார். அந்த ஆறில் இரண்டுதான் கேசவமூர்த்தி வாங்கிப்போட்டிருந்தவை.
கேசவமூர்த்தியின் யோகம், அந்த ரைல்வே தடத்தையே மூடிட சர்க்கார் ஆணையிட்டுவிட்டது. தடத்தையொட்டிய நிலங்களுக்குப் பக்கத்தில் புறம்போக்கு நிலமும் சேரப்போக அப்போது ஆறு மனைகளுக்கும் திடீரென பவுசு கூடிப்போய்விட்டது.
ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்திலிருந்த காலகட்டம், கூத்தபெருமாளே கேசவமூர்த்திக்கு முதல் மனையை விற்க ஆள் பிடித்துக்கொடுத்தார். எட்டு வருடங்களுக்கு முன்னர் வாங்கிய விலையை விட பன்னிரெண்டு மடங்கு விலை வைத்து விற்கும்போது கேசவமூர்த்திக்கு பூரிப்பு தாங்கமுடியவில்லை – தன் வாழ்க்கையின் ஆகச்சிறந்த முதலீடு அதுதான் என்பதாகவும் தன்னுடைய தொலைநோக்கு பொருளாதார ஞானம் அத்தனை கூர்மையானது என்பதாகவும் கேசவமூர்த்தியின் அலப்பறை அந்த நாளில் திமிறியது. கூத்தபெருமாள் ஒன்றரை விழுக்காடு கமிஷனோடு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தார்.
நிலத்தரகின் மாயவிதிகள் அத்தனையையும் கூத்தபெருமாள் அத்துபடியாக்கியிருப்பவர். நிலத்தை அடித்து விலைபேசி, சிறிய முன்பணம் மட்டும் கொடுத்து, ஒரு காலக்கெடு வாங்கிக்கொண்டு, பதிவு செய்யாமல் தன்னகத்தில் வைத்துக்கொண்டு இரண்டாம் கைக்கு லாபம் வைத்து மாற்றிவிடும் சதுரங்க ஆட்டத்தை அவர் நேர்த்தியாக ஆடிக்கொண்டு வந்தார். அந்த காலக்கெடுவிற்குள் கைமாற்ற வேண்டிய கட்டாயமிருப்பதால், ஆண்டுக் கணக்கில் வைத்திருந்து நிலத்தின் மதிப்புயர்விற்காகக் காத்திருக்கும் செளகர்யத்திற்கெல்லாம் அவர் எப்போதும் ஏங்கியதில்லை. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கைமாற்றும் சூத்திரத்தில்தான் அவரது கணக்குகள் இயங்கும். ஒருமுறை கூட கெடு தவறிப்போய் கையில் சூடு வாங்கிக்கொண்டதில்லை. அதிக விலையில் போய்க்கொண்டிருக்கும் இடங்களில் இந்த வித்தையைப் பரிசோதிப்பதில்லை – அங்கெல்லாம் கமிஷன் பேரத்திற்குள் முடித்துக்கொள்வார்.
இவர் கைமாற்றிய நிலம் பின்னாளில் விலை உயர்ந்து வளர்ந்து நிற்கும் போது, இவரே ஆள்பிடித்து கமிஷனுக்கு விற்றுக்கொடுப்பார். நாமே வைத்துக்கொண்டிருந்து இப்போது விற்றிருக்கலாமே என்று ஒருமுறை கூட அவர் வருந்தியதில்லை. அவரைப் பொறுத்தவரை நிகழ்காலத்திலிருந்து தெரியும் கடந்தகால வாய்ப்புகளெல்லாமே பச்சையான பொய்கள் – நிகழ்காலத்தின் கண்களை ஏமாற்றும் தோற்றப்பிழைகள். கடந்தகாலத்தில் வாய்ப்புகள் அல்ல; ஒரேயொரு பாதை மட்டுமே இருந்திருக்கிறது; தூரம் கடந்துவந்து திரும்பிப் பார்க்கையில் பக்கத்தில் வேறு பாதைகளும் இருந்திருப்பதாக நினைத்துக்கொண்டு ஏங்கிச் சாகிறோம் – தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தான் தடம்புரளாமல் வந்து சேர்ந்திருப்பதே முனிசிப்பாலிட்டி பிள்ளையாரின் கிருபையென்று திருப்திப்பட்டுக்கொள்பவர் கூத்தபெருமாள்.
முதல் நிலத்திற்கான பத்திரப்பதிவு முடிந்த ஒரே வாரத்திற்குள், இரண்டாவது மனைக்கும் ஒரு பார்ட்டியைக் கொண்டுவந்து கூத்தபெருமாள் நிற்க, கேசவமூர்த்தி மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
‘இந்த எடத்தக் கொடுத்ததே சொந்த ஊர்ல வெலைக்கு வந்த தென்னந்தோப்ப கெரயம் பண்ணத்தான். வேற எந்த செலவுக்கும் இந்த லச்சுமியில கை வெச்சிருக்க மாட்டேன். இன்னைக்கு ஒரு வெல வெச்சு கொடுத்துட்டு பத்து வருசங்கழிச்சு வேற எவனோ இத இன்னும் ஏழெட்டு அடுக்கு ரேட்டுக்கு விக்கும்போது அவன் வாய பாத்துக்கிட்டு நாம வெறும்பயலாட்டம் நின்னுட்டிருக்க முடியாது’ – கூத்தபெருமாளுக்கு தன் முகத்தில் கேசவமூர்த்தி வன்மையாக உமிழ்ந்ததைப் போல இருந்தது.
3
ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரிலிருந்த அடுக்குமாடி கட்டடத்தின் முதற்தளத்தில் குடியிருந்தார் சுதாகரன். கீழே கூத்தபெருமாள் நடந்துவரும்போது மேலேயிருந்து, ‘இங்கே’ என்பது போல கை காட்டினார். மேலே வந்து மாடிப்படி அருகே நின்றுகொண்டு மூச்சு வாங்கியவருக்காக சுதாகரன் வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார்.
‘ஒரு ஃப்ளோர் கூட ஏற முடியமாட்டேங்குது சார்’
சுதாகரன் சிரித்துக்கொண்டார். வீட்டு வாசலில் ஒரு சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. கூத்தபெருமாள் அதையே வினோதமாகப் பார்த்தவாறு வர, ‘பையன்.. முந்தியிருந்த வீட்ல சைக்கிள் திருட்டுப்போயிருச்சு.. அதுலேந்து இப்டி..’ என்று சிரித்தார்.
‘இல்லாட்டி ரெண்டு சேர் போட்டு இங்க ஒக்காந்தே பேசிறலாம்.. நல்ல விசாலமான எடந்தான்’
‘உள்ள வந்து ஃபேன்ல ஒக்காருங்க.. நல்லா வேர்த்துருக்கு’
‘பரவால்ல.. வெளிக்காத்துலயே நின்னுப்போம்’
சுதாகரன் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை.
‘போன்லயே பேசிட்டிருக்கோமே.. அதான் நேர்ல பாத்து லேஅவுட்ட காட்டிறலாம்ன்னு வந்தேன்.. ஓனர் வீட்டுக்கு போயி வில்லங்கத்துக்கான டாக்குமெண்ட்ஸும் கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்..’ – கையில் இருப்பவற்றை நீட்டினார்.
ஒரு சிறுவன் வெளியே ஓடிவந்து, ‘அப்பா.. அங்கிள் டீ சாப்டுவாங்களான்னு அம்மா கேக்க சொன்னாங்க’ என்றான். விளையாடப் போகவேண்டிய அவசரத்தில் அவன் துடித்துக்கொண்டிருந்தான்.
‘ஐயோ இல்ல சார்.. இப்பதான் அவர் வீட்ல காபிய முடிச்சிட்டு வரேன்.. எடம் தெவயட்டும்.. விருந்தா சாப்டுக்கிறேன்’
சுதாகரன் சிறுவனிடம், ‘வேணாம்ன்னு சொல்லிடு’ என்று சொல்லிவிட்டு அந்த வரைபடத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார். விற்பனைக்கான மனை சிவப்பு மையால் குறிப்பிடப்பட்டிருந்தது. கூத்தபெருமாள் அசையாமல் எதிரில் நின்றபடி சுதாகரனை அளந்தார். காதோரத்தில் மட்டும் வெள்ளிமயிர், மாநிற முகம், அதைவிட ஒரு மாற்று கருத்த உடல், கொஞ்சம் உடற்பயிற்சி செய்தால் திரட்டி திடமாக்கிடக்கூடிய தசைக்கட்டு, முண்டா பனியனுக்கு உள்ளே செல்லும் நீளத்திற்கு தங்கச் சங்கிலி…
‘இந்த ரோடு எத்தன அடி அகலம்’- சுதாகரனின் கேள்வியைக் கேட்டதும் கூத்தபெருமாள் நிலைக்கு வந்தார்.
‘இந்தா போட்ருக்கே சார்.. இருவத்தி ரெண்டு அடி.. இப்ப தார் ரோடு வந்துருச்சு..’
வரைபடத்திலிருந்த திசைக்குறிப்பின் படி அந்த தாளைக் கால் வட்டமாகச் சுழற்றி வேறொரு கோணத்தில் பார்த்தார். கூத்தபெருமாள் பேசிக்கொண்டிருந்தார், ‘நல்ல பக்கா ரெசிடென்ஷியல் ஏரியா சார்.. டாக்டர்ஸ், காலேஜ் ப்ரொபஸர்ஸ், பேங்க் எம்ப்ளாயீஸ்ன்னு நல்ல டீசண்ட்டான சொசைட்டி..’
‘ப்ளாட்ல இந்த ஓரத்துல க்ராஸ் விழுதா?’ – படத்தையே கூர்ந்து பார்த்தவராக சுதாகரன் கேட்டார்.
‘ட்ராயிங் மிஸ்டேக் சார் அது.. ஸ்கொயர் ப்ளாட்தான்.. நேரா அறுவதுக்கு அறுவது.. ஒன்ர கிரவுண்டு’
‘இந்த ஏரியாலலாம் வீடு இருக்கா?’ – வரைபடத்தில் ஓரிடத்தை சுட்டிக்காட்டினார்
‘அது பொறம்போக்குதான் சார்.. முந்தி ட்ராக் போச்சு.. இப்ப சும்மாதான் கெடக்கு’ – தரகருக்கேயான தனித்த ராகத்தில் சொன்னார்.
கையிலிருந்த மற்ற ஆவணங்களைப் பார்க்க ஆரம்பித்தபோது, ‘அதெல்லாம் ஜெராக்ஸ்தான் சார்.. நீங்க நிதானமா பாருங்க.. ஒரே நேரடி கைதான்.. ப்ளாட்டு போட்டப்பயே கொஞ்ச நாள்ல பத்தரம் பண்ணது.. கொளறுபடி ஒன்னும் இருக்காது..’ கூத்தபெருமாள் பேச்சின் தீர்க்கம் உத்தரவாதம் அளிக்கும் பாணியில் இருந்தது.
‘எத்தனைல முடிக்கலாம்ன்னு நெனைக்கிறீங்க..’
‘நா யோசிக்கறது சதுரடி ஆயிரத்தி நூறுக்கு கொறைய மாட்டாருன்னு.. எரநூறு சொல்றாரு இப்போ.. நீங்க ஓனர் டு ஓனர் நேர்ல பேசிக்கோங்க’
கூத்தபெருமாள் புறப்பட்டுப் போனபிறகு, சுதாகரன் ஒரு தாளை எடுத்து நிறைய கணக்குகள் போட்டுப்பார்த்தார். முன்பு பரிசீலனையில் இருந்த இரண்டு இடங்களை விட இது ரொம்பவே தோதான மனையாக அவருக்கு தெரிந்தது. யோசனைகளுக்கிணங்க, கை வெற்றுத்தாளில் வரிசையாக டிக் அடித்தபடி இருந்தது – அத்தியாவசங்களுக்கு அதிக தூரம் அலைய வேண்டியதில்லை என்று யோசித்தார்; பையனுக்கு பள்ளிக்கூட தொலைவு சாதகமாக இருப்பதை யோசித்தார்; பக்கா டீஸண்ட்டான ரெஸிடென்ஷியல் ஏரியா என்று சொல்லப்பட்டதை யோசித்தார்; சார் சார் என விளித்துக்கொண்டே வீட்டிற்குள் வர மறுத்த, டீயை நிராகரித்த கூத்தபெருமாளையும் கூடவே சேர்த்து யோசித்தார்.
4
ஆண்டுகள் போகப்போக கேசவமூர்த்தியின் தொலைநோக்குகள் எல்லாம் தப்புக்கணக்குகளாக மாற ஆரம்பித்தன. ரியல் எஸ்டேட்ஸின் பொற்காலம் அதற்கு அடுத்த ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்தது. அந்த நேரத்தில் கண்ணதாசன் நகரில் பதினாறு வீட்டு கிரகப்பிரவேசங்கள் முடிந்திருந்தன. மூன்று வீடுகள் பாதி கட்டுமான வளர்ச்சியில் இருந்தன. ஒரு மனைக்கு மதில் சுவர் மட்டும் எழுப்பப்பட்டிருந்தது. எஞ்சியிருக்கும் மனைகளில் விற்கப்பட்ட இவரது ஒன்றையும் சேர்த்து மூன்று மனைகள் சமீப இரண்டாண்டுகளுக்குள்தான் கொள்ளை லாபத்தில் கை மாறியிருந்தன. விற்காமல் நிற்கும் கேசவமூர்த்தியின் அந்த கடைசி ஒற்றை மனையைத் தவிர்த்த இருபத்திமூன்று மனை ஒவ்வொன்றும் பல லட்சங்களை வாரி உள்ளே போட்டுக்கொண்டிருந்தன. கேசவமூர்த்தி நிச்சயம் இதற்கொரு காலச்சுழற்சி வழி இருக்குமென்று உத்தேசித்து, மீண்டு வரப்போகும் ஏறுமுகத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க ஆரம்பித்தார்.
முன்பிருந்த ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய சர்க்கார் நிலத்தையும் கொஞ்சம் சேர்த்துவைத்து கடைசி வரிசைக்காரர்கள் மதில் எழுப்பி வைத்துக்கொண்டார்கள். அந்த சுவர் ஒரு புதிய எல்லைக்கோட்டினை உருவாக்கி விட்டிருந்தது. தண்டவாளத்தின் மறுபக்கத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த காலனி மக்களின் பார்வைக்கு, அந்த எல்லைக்கோடு, கண்ணதாசன்நகர்வாசிகள் தரப்பிலிருந்து, ‘இது வரையில் நாங்கள் சொந்தமாக்கியிருக்கிறோம்’ என்று சொல்வதைவிட ‘இதைத் தாண்டி எங்களுக்கு உரிமையில்லை’ என்று அறிவிப்பதாகத் தெரிந்தது. காலனியின் எல்லையை அது விரித்துக்கொடுத்தது. அதோடு நகரின் மேற்கு பக்கத்தின் கடைசி வரிசை மனைகளில் வீடுகள் எழுப்பப்பட்டதும் அந்த நிலப்பரப்பின் வடிகால் சமன்பாடு மாற்றம் கண்டது. சிறு மழைக்கும் கூட நீர் தேங்கிப்போகும் இடமாக அந்த வெளி மாற ஆரம்பிக்க, காலனி குடிசைகள் தண்டவாள மேட்டினை நோக்கி நகர ஆரம்பித்தன. தண்டவாளத்திற்கு மறுபுறமிருந்த கருவேலங்கட்டைகள் கொஞ்சங்கொஞ்சமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டு குடிசைகள் முளைக்க ஆரம்பித்தன. ஆறு வருடங்கள் நிதானமாக நிகழ்ந்த இந்த மாற்றம் கண்ணதாசன் நகர்வாசிகளுக்கு எப்படி நிகழ்ந்தது என்று கூட நினைவில்லை.
தண்டவாளத்தையொட்டிய கடைசி வரிசையில், ஒரு கட்டத்தில், கேசவமூர்த்தியின் விற்கப்படாத மனைக்கு மட்டும்தான் மதில் எழுப்பப்படாமல் இருந்தது. காலனியிலிருந்து வீட்டு வேலைக்கும் கட்டிட வேலைக்கும் கிழக்காகப் போகிறவர்கள் அதை குறுக்குப் பாதையாக நிறுவ ஆரம்பித்தார்கள். நடந்து நடந்து, புற்தடம் மறைந்து அதுவொரு கட்டமைக்கப்பட்ட வழி போலவே மாற ஆரம்பித்தது. செவ்வக வடிவிலான அந்த நகர் அமைப்பின் தென்கிழக்கு முனை மட்டும் உடைந்து மழுங்கியிருப்பதைப் போன்ற உருவம் உண்டானது.
கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் கூடிப் பேசினார்கள். குழுவின் ஒருமித்த முடிவின்படி கேசவமூர்த்தியை அழைத்துப் பேசி, அந்நிலத்தை விரைவில் விற்பது அல்லது தெற்கு எல்லையை மற்ற வீடுகளையொத்து நீட்டித்து ஒரு மதில் சுவரை மட்டுமாவது எழுப்புவது என்ற இரு யோசனைகளை முன்வைத்தனர். கேசவமூர்த்திக்கு மனையின் வரைவே புரியாத அளவிற்கு நடுவில் ஒரு பாதையும் அதற்கு அந்த பக்கம் மண்டிக்கிடக்கும் கருவேலமரங்களுமாக அந்த இடம் முற்றிலுமாக மாறிப்போயிருந்து. விற்பனைக்கு அப்போதைக்கு மனமில்லாததால் தெற்கு எல்லை மதிலை மட்டும் நிறைவு செய்தார். அந்த ஒட்டுமொத்த எல்லையின் நீளத்தில் கேசவமூர்த்தியின் சுவர் மற்றதைவிட ஓரடி உயரமாகவே இருந்தது. ஒரு ஜேசிபி மனைக்குள் புகுந்து வெளியேறியதும், அதன் அமைப்பு திருநீரிட்டு துடைக்கப்பட்ட கண்ணாடி போல அவருக்கு சட்டெனத் துலக்கமானது.
அதே நேரம் நீட்டிக்கப்பட்ட அந்த மதில் வகுத்த எல்லையை நெருங்கி மறுபக்க குடிசைகள் நகர்ந்தபடி இருந்தன. ஒரு வழியாக அந்த நிலப்பரப்பின் வரைபடத்தை அந்த நீண்ட மதில் சுவர் இரண்டாகப் பிரித்து ஒரு பக்கம் கணித விதிகளைக் கொண்டு அளந்து தொகுக்கப்பட்ட கட்டிடங்களாகவும் மறுபக்கம் ஒழுங்கற்று சிதறிக்கிடந்த குடிசைகளாகவும் காட்டியது.
5
இரண்டு வருடங்களுக்கு முன் மகள் திருமணத்தையொட்டி அந்த மனையை விற்றுவிடலாம் என்று கேசவமூர்த்தி முடிவு செய்தார். அவர் எதிர்பார்த்திருந்த காலச்சுழற்சியெல்லாம் நிகழவில்லை – ஏழரை வருடங்களில் சதுரடிக்கு ஐம்பது ரூபாய் கூட ஏற்றம் காணவில்லை.
மேற்கொண்டு காத்திருக்கவேண்டாம் என்பதைவிட, சடங்கு செலவுகளுக்கும் சீதனத்திற்கும் காசு வேண்டுமென்ற நெருக்கடிதான் அந்த பட்டாவைத் தூசுதட்டியெடுக்கச் சொன்னது. கூத்தபெருமாள் அழைத்துவந்த ஆறு பார்ட்டிகளும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிராகரித்துவிட்டுப் போய்விட்டார்கள்.
‘எல்லாருக்கும் உங்களுக்கு பண மொடை இருக்குன்னு தெரியிது.. அதனால ரொம்ப சல்லிசா கொறச்சுவெச்சு பேசனும்ன்னு வர்றானுங்க’ என்று கூத்தபெருமாள் இழுத்தார்.
‘அதுக்குன்னு பத்து வருசத்துக்கு முந்துன வெலைக்கா கொடுக்க முடியும்?’ – கேசவமூர்த்தியின் சலிப்பு கூத்தபெருமாளுக்கு தனிப்பட்ட முறையில் குஷியாக இருந்தாலும், வேலையை முடித்துக்கொடுக்க வேண்டுமென்ற தொழில்முனைப்பில் எந்த குறையும் வைக்கக்கூடாது என்பதில் நேர்மையாகவே இருந்தார். கேசவமூர்த்தி, வேறு இரண்டு தரகர்கள் காதிலேயும் விஷயத்தைப் போட்டுவைத்திருந்ததைக் கேள்விப்பட்ட நாளில் கூத்தபெருமாளுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
‘முடிக்கறதுல ஒன்னும் செரமம் இல்ல.. அந்த சொவத்த ஒட்டி சேரி வருதுன்னுதான் யோசிக்கிறானுக எல்லாரும்..’ – இன்னொரு தரகர் இப்படி சொன்னதைப் பற்றி கூத்தபெருமாளிடமும் கேசவமூர்த்தி பட்டும்படாமல் விசாரித்தார்.
‘இதெல்லாம் வாங்குறவன் வெலைய கொறச்சு கேக்கறதுக்காக சொல்றதுதான். ஓசியில கொடுத்தா சேரிக்குள்ளயே போயி வீடு கட்ட இவனுக தயங்கவா போறானுக?’ என்றார். கேசவமூர்த்திக்கு அதில் திருப்தியில்லை. தான் அப்படிக் கட்டுவேனா என்று யோசித்துப்பார்த்தார்.
அதற்கு பின்னான நிராகரிப்புகளுக்கு, அதுதான் காரணமென்று அழுத்தமாக நம்ப ஆரம்பித்தார். அதை காலி செய்தாலே தன் மனையின் மதிப்பு கிடுகிடுவென வளர்ந்துவிடுமென்று தோன்ற ஆரம்பித்தது.
கண்ணதாசன் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்திடம் போய், அந்த குடிசைகளை அப்புறப்படுத்த தூண்டில் வீசிப்பார்த்தார். சங்கத்தலைவர் ரொம்பவெல்லாம் யோசிக்காமல் பதில் சொல்லிவிட்டார், ‘என்னோட வீட்டையும் சேத்து ஆறு வீட்டோட காம்பவுண்டு பொறம்போக்குலதான் நிக்கிது.. குடிசைங்கள எடுக்க நாம ஸ்டெப்பெடுத்தா அது நமக்குமே வெனையாதான் வந்து நிக்கும்.. சாமிநாதன் டாக்டரெல்லாம் போரையே பொறம்போக்குல தான் போட்ருக்காரு.. வேற எடத்துல எங்கயும் தண்ணி ஊரல.. அந்த நீட்டுல நீர்மட்டம் மேலாக்க நிக்கிது.. நாளைக்கு உங்க எடத்துக்குமே அங்கதான் போர் போடவேண்டியிருக்கும், பாத்துக்கோங்க..’ – கேசவமூர்த்தி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
மகள் கல்யாணம் கடனை இழுத்துப்போட்டுவிட்டு ஒருவழியாக நிகழ்ந்தேறி முடிந்தது. இந்த மனையை விற்றுக் கைகழுவி விடுவது ஒன்றுதான் கேசவமூர்த்தியின் பிரதான சிந்தனையாக இருந்தது. முன்பு விற்றிருந்த நிலத்தைவிடவும் கம்மியான விலைக்கும் இறங்கி வரத் தயாரானார்.
கூத்தபெருமாள் அந்த குடிசை காரணத்தைப் பெரிது படுத்த விரும்பவில்லை. விற்றுக்கொடுக்க வேண்டிய நிலத்தைப் பற்றி மனதளவில்கூட ஒரு குறையை சுமப்பதை ஏற்காத விரும்பாத போக்கு கொண்டவர்.
‘சும்மா அதையே நெனைக்காதீங்க சார்.. இத்தனைக்கும் நாமளே அந்த பக்கத்துக்கு காம்பவுண்டும் கட்டிக்கொடுக்குறோம்.. லாண்ட் வேல்யூ இப்ப எங்கயுமே பெருசா போக மாட்டேங்குது.. அதுதான் நெலவரம்.. அதுக்குன்னு போன லாண்ட் வித்த ரேட்டுக்கு கொடுக்கலாம்ன்னுலாம் ஏன் யோசிக்கிறீங்க.. தோதா அமையும்.. வெய்ட் பண்ணுங்க’
நல சங்கத் தலைவரிடம் பேசும்போது, ‘அது முக்கியமான காரணம்தான் சார்.. இல்லன்னு சொல்லிற முடியாது. நீங்களோ நானோ ஒரு நெலத்த வாங்கப்போறோம், அப்ப இந்த மாதிரி இருந்தா, வாங்கிருவோமா? நெலத்த வாங்கியாச்சு, வீட்ட கட்டியாச்சு, அதுக்கப்பறம் மொளச்ச சேரி இதுன்னு இப்ப இருந்துக்குறோம்.. புதுசா வாங்க வர்றவனுக்கு அப்படி இல்லைல்ல.. வந்ததும் மொகத்துல அடிச்ச மாதிரிதான் இருக்கும்’ என்றவர், மேற்கொண்டு ஒரு யோசனையைச் சொன்னார் – ‘இப்டி வேணா பண்ணிப்பாருங்க.. அந்த காம்ப்பவுண்ட இன்னும் ரெண்டடிக்கு ஒசத்தி கட்டிருங்க’.
‘அட வெலையே ஏறாத மண்ணுல எதுக்குங்க மேல மேல காச கொண்டி கொட்றீங்க?’- மனைவி அலுத்துக்கொண்டாள். அவருக்கும் எடுத்துப்போட்டு கட்டிட கையில் காசு புழங்கவில்லை. ஆனால் பரிசீலித்துப்பார்த்துவிட்டு, வேறு வழியில்லை என்றவராக மனைவி நகையை அடமானம் வைத்து இரண்டரை அடிக்கு சுவரை மேலும் உயரமாக்கினார்.
ஆட்கள் வருவதும் பார்ப்பதும் போவதுமாக மேற்கொண்டு ஆறு மாதங்கள் ஓடின. மீண்டும் மனைக்குள் கருவேலம் மண்ட ஆரம்பித்ததுதான் மிச்சம்.
கடனும் வட்டியும் மேலும் இறுக்கிப்பிடிக்க ஆரம்பிக்க சொந்த ஊரிலிருக்கும் நிலம் எதையாவது விற்கலாம் என்ற முடிவுக்கு கேசவமூர்த்தி வந்துவிட்டார். அவரது மனைவிக்கு அதில் விருப்பமிருக்கவில்லை.
‘அப்படியென்ன ஆளு கெடைக்காம இருக்கு? வெலையும் பத்து வருசத்துக்கு முந்துன வெலதான் சொல்றோம்..’ ஆத்திரத்தில் பொரும ஆரம்பித்தாள்.
‘வெலைய இப்ப எவன் பேசுறான்? மொத கேள்வியே அந்த சேரி ப்ளாட்டான்னு ஒருத்தன் கேட்ருக்கான் இன்னிக்கு.. எனக்கென்னமோ இந்தாளு கூத்தபெருமாள்தான் நம்மக்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டு அங்கிட்டு போயி கெளப்பிவிட்டு கவட்டுத்தனம் பண்றான்னு தோனுது.. மொதோ ப்ளாட்ட விக்கும்போதே மூஞ்சி சரியில்ல இவனுக்கு.. வயித்தெறிச்சலோடயே நின்னான்’
‘மத்த ப்ரோக்கர்கிட்ட சொல்லி வெச்சிருக்கோம்ன்னு அந்த மொகரைல அவ்வளோ கடுப்பு.. அவன் ஆளும் தொந்தியும்.. விடியாமூஞ்சிப்பய.. ’
‘இப்படியே விக்காம தங்கி போவப்போவுது இந்த ப்ளாட்டு.. பாரு அதான் நடக்கப்போவுது..’ – ஒரு கட்டத்தில் ரொம்பவே சோர்ந்து போய்விட்டார்.
முன்பாவது ஆட்கள் வந்து பார்த்துப்போவதாவது இருந்தது. போகப்போக அதுவுமே நடக்கவில்லை. அந்த மனை நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தரகர்கள் மத்தியில் பரவலாகத் தெரிந்திருந்தது. பேராசையும் பொறாமையும் கொண்ட அந்த சூதாட்டக்களத்தில், சொத்தை குதிரை ஒன்றின் மேல் பந்தயம் கட்டிட உசுப்பேத்திவிடவும், சுமாரான குதிரையொன்றை ஓடவே தகுதியற்றது என்று முத்திரை குத்தி மொத்தமாக போண்டியாக்கிவிடவும் தெரிந்த ஜாலக்காரர்கள் அவர்கள்.
நல சங்க ஆசாமி மீண்டும் பேசும்போது, ‘மொதல்ல ஒரு சின்ன ப்ரேக் விடுங்க.. அதுக்கப்பறம் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சு பாருங்க..’ என்றார்.
‘வேற மாதிரின்னா..? புரியல’
‘உங்க மேல்வீட்ட வாடகைக்கு கொடுக்கும்போது என்னெல்லாம் பாத்து கொடுத்தீங்க?’
‘என்ன வேல, எத்தன பேர் வீட்ல இருக்காங்க, சத்தம் போட்டு ஒட்டாரம் பண்ற வயசுல கொழந்தைங்க எதும் இருக்கா.. இதெல்லாம்தான்..’
‘அட நமக்குள்ள என்ன.. ஓப்பனா பேசுங்க சார்.. எந்த ஆளுங்கன்னு விசாரிச்சிங்களா இல்லையா?’
கேசவமூர்த்தியை இந்த அப்பட்டமான கேள்வி தடுமாறவைத்தாலும், சட்டென சுதாரித்துக்கொண்டு, ‘அதெப்படி சார் பாக்காம? நம்ம எடம்..’ என்றார்.
‘ஆங்.. அதுக்குதான் வர்றேன்..’
‘சார்.. அது வாடகைக்கு கொடுக்கறதால அதெல்லாம் பாத்து கொடுத்தேன்.. இது விக்கிறதுதான.. அப்படியெதுவும் இதுல பாக்கல சார்.. யாரு கேட்டாலும் தள்ளிவிட்றலாம்ன்னு தான் இருக்கேன்..’
‘இல்லல்ல.. நா சொல்ல வர்றத நீங்க புரிஞ்சுக்கல..’
கேசவமூர்த்தி குழப்பமாக பார்த்தார்.
‘நம்ம வீட்டுக்குள்ள வாடகைக்கு யார சேக்கவேணாம்ன்னு நெனைக்கிறீங்களோ, அதே மாதிரி இத யாருகிட்ட தள்ளிவிடலாம்ன்னு யோசிங்கங்கறேன்.. இந்த எடம் அப்புடி.. அதுதான் சரியா வரும்..’
கேசவமூர்த்தி யோசித்தபடியே நின்றார்.
‘நம்ம நகர்ல எல்லாருந்தான் இருக்கான்.. செட்டி இருக்கான், காருகாத்தன் இருக்கான், எஸ்சி இருக்கான், முதலி இருக்கான்.. இதுவரைக்கும் வெளிப்படையா யாருக்கிட்டயும் என்ன ஆளுங்கன்னு நா கேட்டதில்ல.. ஆனா குத்துமதிப்பா எல்லாரையும் தெரியும் எனக்கு.. நா சொல்றத யோசிச்சு பாருங்க.. நீங்க நம்மாளுங்கறதால இதெல்லாம் சொல்றேன்..’
கேசவமூர்த்திக்கு அவர் என்ன சொல்லவருகிறார் என்பது ஓரளவு புரிந்தாலும், உடனடியாக அதனைத் தர்க்கப்பூர்வமாக அலசி ஆமோதித்துவிட அவரால் முடியவில்லை – மனவழுத்தத்தின் தெளிவின்மை. ஆனால் அதையே அசை போட ஆரம்பித்தார். மனைவியிடம் சொன்னார். கூத்தபெருமாளைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்.
‘இடம் கேட்டு வர்றவங்க என்ன ஆளுன்னு எப்பவுமே விசாரிக்கதான் செய்வேன். ஆனா அத வெச்சே ஆள புடின்னு சொல்றது தமாஷா இருக்கு..’ கூத்தபெருமாளின் இசைவற்ற பேச்சு கேசவமூர்த்தியை ரொம்பவே உபத்திரவிப்பதாக இருந்தது.
‘இதுதான் சரியா வரும்ன்னு எனக்கு படுது.. நீங்க நான் சொல்ற மாதிரி பாருங்க..’ குரலில் இப்போது தீவிரத்தைக் கூட்டி சொன்னார்.
‘சரி அதையும் சேத்து வெச்சே பாக்குறேன்.. ஒன்னும் பிரெச்சனயில்ல’
‘ஒன்னு ரெண்டு மாசத்துக்குள்ள முடிக்க பாருங்க.. இல்லேன்னா வெளச்சல் நெலத்ததான் விக்கிற மாதிரி இருக்கும்..’
‘கவலப்படாம இருங்க.. ஆள் கெடச்சதும் நானே போனடிக்கிறேன்’
6
‘எடம் பாக்குறதுக்கெல்லாம் நேரங்காலம் பாக்கனும்ன்னு அவசியமில்லங்க’ – அலுவலகத்திலிருந்து பெர்மிஷன் சொல்லிவிட்டு வந்திருந்த சுதாகரனிடம் கேசவமூர்த்தி சிரித்தபடி சொன்னார்.
‘அப்படியில்ல.. இந்த ஊருக்கு வந்து தொவங்குற மொதோ நல்ல காரியம்.. அதான்’ சுதாகரன் சிரிக்காமல் பதிலளித்தார். கரும்பச்சை நிற முழுக்கைச் சட்டையை கத்தி போல ஃப்ளீட் வைத்து அயன் செய்யப்பட்டிருந்த பேண்ட்டிற்குள் அவர் நேர்த்தியாக டக்–இன் செய்திருந்ததிலிருந்த மிடுக்கு கேசவமூர்த்திக்கு நம்பிக்கையாகவும் கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது.
மனையின் கிழக்கு எல்லையில் அடர்காட்டினைப் போலிருந்த கருவேல மரங்கள் எல்லைக்கல்லை மறைத்திருந்தன. அதையே பார்த்துக்கொண்டிருந்த சுதாகரனிடம், ‘ரீசண்ட்டா ஜேசிபிய வெச்சு நெரவி விட்டேன்.. சனியன் வண்டி அங்கிட்டு போனதுமே திரும்ப மொளைக்க ஆரம்பிச்சிருது.. முன்னமே இன்னிக்குதான் வரேன்னு சொல்லிருந்தீங்கன்னா எல்லாத்தையும் கொஞ்சம் கழிச்சிவிட்ருப்பேன்..’ கேசவமூர்த்தி சொன்னார். சுதாகரன் தலையசைத்த படி மனைக்குள் இறங்கி உள்ளே போய் பார்க்கலாமென நடந்தார்.
‘எல்லாம் வெறகுக்குன்னு காங்கிரஸ்காரன் ஹெலிகாப்டர் வெச்சு தூவுனது.. இப்ப இப்புடி வெனையா கெளம்பி நிக்கிது..’ என்று கேசவமூர்த்தி கருவேலத்தையே பிரதானப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அது மட்டும்தான் பிரச்சனை என்பதைப் போல ஒரு தோற்றத்தை நிறுவ முயன்றார். சுதாகரனின் திருத்தமான தோரணையை ஈடுசெய்ய தன் சார்பாகக் கட்டவிழ்க்கும் மேதாவிலாச முயற்சியாகவும் அது தெரிந்தது. கூத்தபெருமாளுக்கு இது பார்க்க வேடிக்கையாகவும் அதே நேரத்தில் லேசாகப் பதற்றமாகவும் இருந்தது.
‘இப்ப நீங்க பாக்குற லென்த்து இருக்குல்ல சார்.. அகலம் அதவிட கொஞ்சம் கம்மி..’ – கூத்தபெருமாள் தன் பங்கிற்கு சொன்னார் – ‘ஸ்கொயர் ப்ளாட்தான், கொஞ்சம் பொறம்போக்கையும் சேத்ததால நீளம் கொஞ்சம் பெருசா தெரியும்’
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, சுதாகரன் மெல்ல நடந்து மதில் சுவரின் பக்கமாக போனார். கேசவமூர்த்தி ஏதோ தடுத்து சொல்ல வாயெடுக்க, கூத்தபெருமாள் ‘வேண்டாம்’ என்பது போல கண்ணைக் காட்டினார். இவர்களும் பின்னாலேயே போனார்கள். சுவர் ஆளுயரத்தை விட அதிகமாக இருந்தது. சுதாகரன் திரும்பிவிடுவார் என்று யோசித்தபோது, ஆசாமி சட்டென மேற்காக நடந்து பக்கத்து வீட்டுப் பக்கவாட்டு மதில் சுவரில் கையையூன்றி எகிறி ஏறி இந்த எல்லைச்சுவரின் மறுபக்கத்தை நோட்டம் விட்டார். முகத்தில் எதுவும் மாற்றம் இருக்கிறதா என்று கேசவமூர்த்தி உன்னிப்பாக கவனித்தார் – ஒன்றும் இல்லை. சுதாகரன் எதுவும் கேட்பார் என்று எதிர்ப்பார் – அதுவுமில்லை. கூத்தபெருமாள் நம்பிக்கையாக கேசவமூர்த்தியைப் பார்த்தார். சுதாகரன் சாலையில் வந்து ஏறி நின்றுகொண்டு, இடுப்பில் கை வைத்தபடி, மனையை ஒரு முறை அளப்பது போல பார்த்தார். தன் அலைப்பேசியை எடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
‘சாருக்கு திருப்திதானே?’ கூத்தபெருமாளின் குரல் பின்னாலிருந்து கேட்டது.
சுதாகரன் கேசவமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, ஒரு புன்னகையுடன் ‘அது காங்கிரஸ் தூவுனது இல்ல.. ப்ரிட்டிஷ்ன்னு படிச்ச ஞாபகம்’ என்றார். கேசவமூர்த்தி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அத்தனை நேரமாக அங்கு கூடியிருந்த அழுத்தம் அந்த ஒரே நொடியில் கரைந்துவிட்டதைப் போல இருந்தது.
‘வீட்லயும் பேசிட்டு நா உங்களுக்கு ஃபோன் பண்றேன்’ என்று கூத்தபெருமாளைப் பார்த்துச் சொன்னார்.
‘இந்த ரேட்டுக்கு டவுன்லேந்து இவ்வளோ பக்கமா உங்களுக்கு எடமே கெடைக்காது பாத்துக்கோங்க.. நம்ம சொத்து.. நல்ல கைக்கு போவனும்.. அவ்வளவுதான் எனக்கு.. காசு ரெண்டாம்பட்சம்தான்.. கருவக்கட்டயெல்லாம் நானே ஆள் வெச்சு சுத்தம் பண்ணி கொடுத்துடறேன்..’ கேசவமூர்த்தி உற்சாகமாக பேசினார். சேரி குடிசைகளைப் பார்த்தும் எந்தவொரு சின்ன கோணலையும் காட்டாத சுதாகரனை அவருக்கு அந்த நேரத்தில் ரொம்பவே பிடித்துப்போனதைப் போலிருந்தது. பார்வையில் உடனடியாக ஓர் இளக்கம் கூடிவிட்டது.
‘போற வழிதான் நம்ம வீடு.. ஒரெட்டு வந்து ஒரு காபி சாப்ட்டு போலாமே?’
‘இல்லங்க.. ஆஃபிஸ் நேரம்.. கொஞ்ச நேரத்து வேலைன்னுதா சொல்லிட்டு வந்திருக்கேன்.. இன்னொரு நாள் பாத்துக்கலாம்’ – சுதாகரன் வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
‘சாருக்கு நேரம் கெடச்சதே பெருசு..’ – கூத்தபெருமாள் குரலில் அமோக குழைவு.
‘அப்ப நல்லதுங்க’ – சுதாகரன் விடைபெற்றார்.
7
கட்டிலில் படுத்திருந்தபடி சுதாகரன் யோசித்துக்கொண்டிருந்தார். மனைவியும் மகனும் உறங்கியிருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த யோசனை. இருளுக்குள் தெரியும் மின்விசிறியை நோட்டமிட்டபடியே தன் மார்முடியை நீவிக்கொண்டிருந்தார். மார்பின் மீது வைத்திருந்த அலைப்பேசியை எடுத்து, மீண்டும் அந்த புகைப்படத்தைப் பார்த்தார்.
அந்த மனை – அந்தக் கருவேலங்கள் – அந்தப் பெரிய மதில்சுவர் – தான் ஏறி நின்ற அண்டை வீட்டின் பக்கவாட்டு சுவர் – அத்தனையையும் முப்பரிமாண வடிவத்தில் கண்முன்னே கொண்டு வந்தார். இடுப்பில் கை வைத்தபடி அதே சாலையில் நின்றபடி மீண்டும் அந்த மனையை இப்போது பார்த்தார். அந்த நாசச்செடிகளைப் பிடுங்கியெறிந்தார். எளிய முறையில் பூமி பூஜை போட்டார். சற்றே பள்ளமான அந்த நில மட்டத்திலிருந்து ஆறடிக்கு அஸ்திவாரம் எழுப்பினார். வீட்டிற்குள் வரும் மாடிப்படியின் வளைவில் திருத்தம் சொன்னார். மேல்மாடியில் மகனுக்கு ஒரு குளியல் தொட்டியை நிறுவினார். தரைக்கு வெள்ளை நிற மார்பிள் பதிக்கப்பட்டது. வெளிச்சுவருக்கு சாம்பல் நிறத்திலும் உள்ளுக்கு ஐவரி நிறத்திலும் வண்ணம் பூசப்பட்டது.
பின்னர், ஓர் அதிகாலை கிரகப்பிரவேசம் நிகழ – அலைப்பேசியை மீண்டும் மாரிலேயே வைத்துவிட்டு மேற்கொண்டு யோசித்தார் – அலுவலக ஆட்கள் வந்து ஆளுக்கொரு மொய் கவரை திணிக்கிறார்கள். உயர்ந்திருக்கும் மேற்கூரையை அண்ணாந்து பார்க்கிறார்கள். அடுப்பங்கரை இன்னும் கொஞ்சம் பெரிதாகப் போட்டிருக்கலாம் என்று ஒருத்தி விமர்சனம் சொல்கிறாள். எல்லோருமாகப் படிக்கட்டில் ஏறுகிறார்கள். மேல்மாடிக்குப் போய்நின்று – படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டார் – அந்த மதிலுக்கு அந்த பக்கத்தைப் பார்க்கிறார்கள். அவர்களுக்குப் புழுக்கம் கலைந்த ஒரு புது நிம்மதி இப்போது கிடைத்துவிடுகிறது. அதுவரையிலிருந்த வியப்பெல்லாம் நொடியில் நீர்த்துப்போக, முளைத்திருந்த பொறாமைக்குத் தீனி கிடைத்துவிட்டதைப் போல வாய்க்குள்ளேயே சிரிப்பார்கள். டைப்பிஸ்ட் ஷோபனாவும் கிளார்க்கு வெங்கடாசலமும் ஜாடை காட்டிக்கொள்வார்கள். கேசவமூர்த்தியும் கூத்தபெருமாளும் கைக்குலுக்கிக்கொண்டு விடைபெறுவார்கள். வந்துப்போன அலுவலக ஆட்கள் அடுத்த நாள் பணியிடத்திலும் அதைப் பேசுவார்கள், அடுத்த வாரமும் கூட.. – படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு வந்துவிட்டார் – ஓடிவந்ததும் ஓடிக்கொண்டிருப்பதெல்லாம் இதற்குத்தானா? பல்லைக் கடித்துக்கொண்டு தாவுத்தீர தாண்டிவந்த இத்தனை ஓட்டங்களுக்குமான இலக்கு எனக்கு எங்கேதான் இருக்கிறது? எதை நோக்கிய வைராக்கியம் இது? வாழவேண்டும் என்பதையா வாழ்ந்துகாட்டவேண்டும் என்பதையா?
ஃப்ரிட்ஜைத் திறந்து பல்லைக் கட்டிவிடும் குளிரிலிருந்த நீரைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு சில வீடுகளிலிருந்து பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தொலைக்காட்சி சத்தமும் அந்த நள்ளிரவிலும் கேட்டபடி இருந்தன. அதிலிருந்தெல்லாம் தப்பிக்க மொட்டை மாடிக்கு ஏறினார். அமாவாசை இருள் ஆதரவாகத் தெரிந்தது. இப்போதே பேசிவிடலாம் என்று பட்டது.
‘ஹலோ சார் சொல்லுங்க.. என்ன இந்த நேரத்துல அடிச்சிருக்கீங்க’
‘ஒன்னுமில்ல சார், அந்த ப்ளாட் வேணாம்ன்னு சொல்லிருங்க..’
‘ஏன் சார்.. அருமையான எடம் சார்.. ரேட்டுல பிரெச்சனன்னா பேசிப்பாக்கலாம் சார்.. நானே பேசுறேன் உங்களுக்காக.. அவருக்கும் உங்கள ரொம்ப புடிச்சுப்போச்சு’
சுதாகரனுக்கு இப்போது அந்த குழைவு ரொம்பவே அலுப்பூட்டியது.
‘இல்ல.. இது தோதுப்படாது.. நீங்களே அவர்கிட்ட சொல்லிருங்க’
‘அவசரமில்ல சார்.. இன்னொரு நட மேடத்தையும் கூட்டிவந்து எடத்த காமிங்க.. நா யாரையும் கம்ப்பெல் பண்ற ஆளில்ல சார்.. நம்மூருக்கு அதான் சார் வி.ஐ.பி. ஏரியா.. அதுனாலதான் சார அதுல சேத்துறனும்ன்னு நா இவ்வளோ பேசிட்டிருக்கேன்’
பத்து நொடிகளுக்கு மேல் முழுமையான நிசப்தம்.
‘அங்க சேத்துக்கறதுக்காக நீங்க என்ன கூப்ட்டு போகல கூத்தபெருமாள்’ – கூத்தபெருமாளுக்கு அது சுதாகரின் குரல் போலவே இல்லை. இணைப்பு துண்டிக்கப்படும்வரையில் அவர் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை.
-மயிலன் ஜி சின்னப்பன்
நல்ல கதை. களமும் போக்கும் சிறப்பு. மனையை எப்படியாவது முடிச்சுடுவீங்கனு நினைச்சேன்.ஆனால் போட்டிங்க…….வாழ்த்துகள்.