பேதமுற்ற போதினிலே – 8

உணர்தலும் அறிதலும் – 2

ஓஷோ கதை ஒன்று. தத்துவவியல் பேராசிரியர் தன் மனைவியை மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மனைவியின் நிலை குறித்து தலைமை மருத்துவரிடம் விசாரித்தார்.

“எங்க எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ஈசியான டெஸ்ட் வைப்போம்.  நல்லியில் ஒரு நீண்ட தண்ணீர் குழாயை இணைத்து மறுமுனையை தொட்டியில் போட்டுவிடுவோம். பின் தண்ணீரைத் திறந்துவிட்டு நோயாளியிடம் ஒரு வாளியைக் கொடுத்து தொட்டிநீரைக் காலிபண்ணச் சொல்வோம்.”

பேராசிரியர், “இதுல எதை நிரூபிக்கிறீங்க?” 

மருத்துவர், “இது குழந்தைக்குக்கூடத் தெரியும் சார். அறிவுள்ளவர் முதலில் குழாயை அடைப்பார்”

பேராசிரியர், ”அறிவியல் எத்தனை மகத்தானது! நானாயிருந்தா அதை யோசித்திருக்கவே மாட்டேன்.”

இந்தக் கதை ஞாபகம் வந்ததற்குக்கூட ஒரு பேரா. தான் காரணம். டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் எழுதிய The tell-tale brain நூலை தமிழில் ‘வழிகூறும் மூளை’ என்ற தலைப்பில் பேரா. கு.வி. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார் (மட்டமான மொழிபெயர்ப்பு). அந்தப் புத்தகத்தில் மூளையின் மிகச் சிறுபகுதியை  ஒரு மரத்திற்கு உவமைப்படுத்தி படமாய் வரைந்திருந்தார்கள். 

புத்தகத்திலிருந்து சில வரிகள் கீழே. 

மனிதமூளை ஏறத்தாழ 100 பில்லியன் நரம்பு செல்கள் அல்லது நியூரான்களாலானது. நியூரான்கள் நூலொத்த நார்கள் மூலம் ஒன்றோடொன்று “பேசுகின்றன”. மாறிமாறியமைந்த இந்த நார்களில் பல அடர்த்தியான, குச்சியொத்த, புதர்களையும் (டெண்டிரைட்கள்), வேறு பல நீண்ட, வளைந்து நெளிந்து கடத்தும் வடங்களையும் (அக்சான்கள்) ஒத்துள்ளன. ஒவ்வொரு நியூரானும் இதர நியூரான்களுடன் ஓராயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான தொடர்புகளைக் கொண்டுள்ளன.”

சொற்களை எப்படி நாம் தொடர்ச்சியாக எழுதி வாக்கியத்தை அமைக்கிறோம்? ஒவ்வொரு சொல்லுக்குமான அர்த்தங்கள் ஒன்றினைந்து எப்படி முழு வாக்கியமாக அமைக்கின்றன? புதிதாக நீச்சல் அடிப்பதற்கும் ஒருமாத பயிற்சிக்குப் பின் அடிப்பதற்குமான வித்தியாசம் ஏன்? காரணம் நமக்குள் உள்ள மூளை நரம்புமுடிச்சு தகவலை அறிந்து அதற்குத்தக்க நடந்துகொள்வதுதான். ஒவ்வொரு புதிய அறிதலுக்கும் நமக்குள் அதற்கான புதிய நரம்புக்கு உயிரூட்டமளிக்கிறோம். சில விஷயங்களில் நாம் சிறந்தவர்களாய்த் திகழ்வதற்கு இந்த நரம்பு அமைப்பு அடர்த்தியாகவும், மற்ற நியூரான்களுடன் அதிகத் தொடர்பும் கொண்டிருப்பதும் காரணமாயிருக்க வேண்டும். 

இது ஒரு நுட்பமாய்ப் புரிந்துகொள்ள வேண்டிய இடம். நமக்குள் ஒரு பெருமரம் இருக்கிறது. இலட்சக்கணக்கான விழுதுகளுடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்தபடி, மின்தெறிப்போடும் தொடர்பாடலோடு. அதன் இலை நுனிகள் எப்போதும் அறிந்தோ அறியாமலோ உணர்வுவெளியைத் தீண்டியபடி இருக்கின்றன. மூளைக்கும் தோலுக்கு அந்தப்புறம் இருக்கும் வெளிக்கும் நடுவில் உள்ளது உணர்வுவெளி. மனம் மௌனித்த, சொற்களுக்கு அவசியமிராத ஓர் உரையாடல் அது. நாம் கொஞ்சம் கவனித்தால் போதும். அதன் அசைவை உணரமுடியும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால், தர்க்கத்தைப் போட்டுக்கொண்டு, சிந்தனை என்றபெயரில் நமக்குள்ளேயே ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மரத்தின் இலைகள் அசையாமல் சிலைக்கின்றன. உணர்வுவெளியுடன் தொடர்பற்றுப் போகிறது. ஒரு கவிதை வாசிக்கையில் தூரிகையால் உள்ளே ஒரு தீற்றல்போல அதன் அர்த்தம் தொட்டுச்செல்வதை உணர்ந்திருக்கிறீர்களா? அதை உணர்ந்துபாருங்கள். அடுத்த இலை நம்முள் துடிக்கத் துவங்கும். அது அசைந்து அடுத்த கோட்டைத் தானே வருடும். அது ஓர் அலாதியான அனுபவம்.

தனக்குள்ளேயே கிடந்து உணர்வுவெளியுடன் தொடர்பற்றுப் போவது அறிதல் நிலை. இத்தகையவர்கள் வண்டிவண்டியாகப் பேசுவார்கள்; எழுதுவார்கள். கேட்க மிக அறிவார்த்தமாகப்படும். ஆனால் அவை ஒருவகையான வாந்தி. ஏற்கெனவே படித்ததை ஒப்பிப்பது அது. அவர்களால் உணர்வுத்தளத்தைத் தீண்டமுடியாது. அந்த மரத்தின் இலைகள் எப்போதோ விழுந்துவிட்டன. சீவன் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத மொட்டை மரம். உயிருள்ள மரத்தில் இலைகள் துளிர்த்தபடி இருக்கும். பூக்கும். கிளைக்கும். நிழல் தரும். மரத்தின் மொத்த இலைகளும் ஒத்த குரலில் காற்றைப் பாடும். கனியும். அறிந்துகொள்ள வேண்டியது உயிர்த்திருப்பது குறித்துத்தான். 

இந்த மரத்தை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். விறகுக்கு வெட்டக்கூடாது. இடைஞ்சலாய் இருக்கிறதென கிளைகளை வெட்டக்கூடாது. தொடர்ந்து கவனிக்காவிட்டால் மண் வறண்டு மரம் செத்துவிடும். பின்னர் நம்மிடம் ஜீவனுள்ள சொற்கள் எதுவும் மிஞ்சாது. பொருளீட்டுதல் அனைவருக்குமான ஒரு பிரச்சினை. திருமணத்துக்குப்பின் இந்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இது தனக்கான சுயவெளியைக் குறைக்கிறது. இலோகாயதத் தேவைகளும் அவற்றின் மீதான ஈடுபாடுகளும் நுண்ணுணர்வை மழுங்கச் செய்கின்றன. 

உணர்வுவெளி என்பது அனுபவத்துடன் தொடர்புடையது. அனுபவம் அறிதல் நிலையாக நின்றுபோகையில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட புரிதலோடு, வழக்கமான இலாவகத்தோடு செயல்கள் நடந்தேறும். ஆனால் அதில் ’ஆத்மார்த்த’ ஈடுபாடு இராது. எந்த ஒன்றுடனும் ஓர் இசைவையும், இணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ள உணர்வுவெளி மூலம் பகிர்தல் அவசியம். உதாரணமாக காதலை எடுத்துக் கொள்வோம். அங்கே மூளைக்கு வேலையே இல்லை. சிலுசிலுவென்று அடிக்கும் காற்றில் படபடக்கும் இலைகள். செய்வதற்கு ஒன்றுமில்லை. அறிவுக்கு எந்த மதிப்பும் இல்லை. இயற்கை உயிர்ப்பை மட்டுமே கொண்டாடுகிறது.  


-பாலா கருப்பசாமி

Previous articleஒற்றை மனை
Next articleநூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4
Avatar
சொந்த ஊர் கோவில்பட்டி. வசிப்பது திருநெல்வேலியில். கவிஞரும் விமர்சகருமான இவர் ’ஓரிரு வரிகளில் என்ன இருக்கிறது?’ என்ற கவிதைத் தொகுப்பும், அம்சிறைத் தும்பி, கண்டது மொழிமோ என்ற தலைப்புகளில் விமர்சனம் மற்றும் அனுபவக் கட்டுரைத் தொகுப்புகளையும், கதை விளையாட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் மின்நூலாக வெளியிட்டுள்ளார். சக்தி லெண்டிங் லைப்ரரி என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.