நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -4

4.சலனச் சுவரோவியங்கள்

காதல் தான் நடனமாட எடுத்துக் கொள்ளும் கலங்கள் மட்டுமே மனிதர்கள். ஒரு குறிப்பிட்ட பாலினம் எதிர் பாலினத்துடன் மட்டுமே ஈர்ப்பு கொண்டாக வேண்டும் என்பதை வழக்கம் போல பெரும்பாலான மதங்கள் கட்டுப்பாடு விதிப்பதே அந்த மதங்களின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்கு உரியதாக்குகிறது. எப்போதும் எல்லோருக்கும் தெரிகின்ற ஒன்றைப் பற்றி தொடர் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் தன்னைச் சுற்றி இருக்கும் மானுடர்களின் மீது தனது அதிகாரத்தின் கை நிலைத்து இருக்க வேண்டும் என்றும், அது மட்டுமே தனது வழக்கொழிந்த அல்லது இயற்கைக்கு மாறான நிறுவனத்தை நிலைநிறுத்துவதற்கான வழி என்றும் எண்ணிக் கொள்கின்றன மதமும், இன்ன பிற சமூகக் கோளாறுகளும். ஆனால் எத்தனை ஆழத்தில் மூடப்பட்ட விதையும் என்றோ எழுவது போல எங்கிருந்தோ பறவையின் எச்சில் விழுந்து முளைத்தெழும் பாறைச் செடி போல, காதல் பாலினம் கடந்து தற்பால் மீதும் பற்றி எரிகிறது. 

இத்தகைய தற்பாலின ஈர்ப்பு பற்றிய கடந்த இருபதாண்டுகளில் வெளிவந்த படங்கள் பலவும் முக்கியமான உணர்ச்சித் தளங்களைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. ஆஸ்கார் போன்ற வெகுஜன தளங்களிலும் தற்பாலீர்ப்பு திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வழக்கம் தற்போது இருக்கிறது. அவற்றுள் ஐந்து படங்களை மட்டும் இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது. பெண்பாலீர்ப்பு கதைகளைக் கொண்ட படங்கள் இவை.

 

  • Disobedience (2018) / Sebastian Leilo/ Rachel Weisz / Rachel McAddams

 

மனிதர்களின் ஒருங்கிணைவிற்கு அடித்தளமாய் விளங்கியவற்றுள் முதன்மையான கருவி மதம். மதம், மனிதனின் கற்பனைகள் பலவற்றிற்கும் ஒருவிதமான நிர்ணயிக்கப்பட்ட தீர்வுகளைப் பதிலிறுப்பதன் மூலம், அவன் மனபாரத்தை குறைத்து சாந்தமளிப்பதாக, ஒரு உரிமைகோரல் வெகுகாலமாய் நடப்பில் இருந்து வருகிறது. ஆனால், அவ்விதமாய் குன்றிப்போன, அறம் கூடிய கற்பனை வளமும், தனித்துவிடப்பட்ட மனிதர்களின் அகச்சிக்கல்களும் பல்வேறு வலிகளைக் கதையாடல் செய்கிறது. மத அமைப்புகளின் பக்கவிளைவாக – எதிர் மத மக்கள் மீதான காழ்ப்புணர்வு பெருகி குருதிப்புனல்கள் ஊற்றெடுத்தை கணக்கெடுக்காமலும் கூட – தொடர்ந்து நசுக்கப்படும் சுயமத மக்களின் வலிகள் சில்லாயிரம் ஆண்டுகளாகவே, இதற்கு முன்புவரை, இத்தனை நிறங்களுடன், பொது பார்வைக்கு எடுத்து வரப்படவே இல்லை. சமீபம் வரையும் கூட!

இன்றைய நவநாகரீக உலக கிராம அமைப்பில், நசுக்கப்படுபவர்களைப் போலவே, ஆதிக்கத்திற்கான வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கும் மதம் போன்ற அமைப்புகள் ஒரு தலைவலி ஏற்படுத்தும் மகுடமாகவே மாறி இருக்கிறது. பரீட்சை செய்து பார்க்கும் விதமாக, தனியாக ஒவ்வொரு ஆதிக்கவாதிகளையும், நட்பாகத் தோளைத் தட்டி வினவிப் பார்த்தால், கேவிக் கேவி அழுமொலி கேட்க கிடைக்கும் என்பது திண்ணம். 

எல்லாக் கட்டுப்பாடுகள் நிரம்பிய மதங்களிலும் உள்ளதைப் போலவே, யூத அடிப்படை எண்ணங்கள் கொண்ட, சுவைக்காத திருமண பந்தங்களால் நிறைந்த குடும்பங்களைத் தொடர்ந்து தோற்றுவிக்கும் சமூகத்தில், தத்தளிக்கும் காதல் கதையின் மூலம், பெண் மனத்தின் சுதந்திரம் மீதான ஆவல், ஆயிரமாண்டுகளாய்த் தொடர்ந்து பொருளிழந்து போன சடங்குகள், நட்பு, திருமணம் என அனைத்தையும் கேள்விகேட்க குறைந்தபட்சம் முன்வைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். இப்படி, பல தளங்களில் தொலைவதையே திரைக்கதையின் ஒரு பலவீனமாக குறிப்பிட தோன்றுகிறது. `என் சுதந்திரத்தை எனக்குக் கொடுங்கள்` என்ற கேள்விதான் ஆதாரப் புள்ளி என்றபோதும், செவ்வியல் தன்மைக்கான செறிவினைத் தவறவிட்டிருக்கிறது இது. அந்த ஒருமையைக் காக்கவே ரேச்சல்களின் காதல், காமம், முயக்கம் என முயன்று, சமாளித்தும் பார்த்திருக்கிறது.

Rachel Weisz ன் விட்டேத்தியான மனோபாவமும், பரிதாபம் கொள்ளதக்க முகமும், மத்திய வயதின் ஒளிமங்கலும் ஒன்றாய் கொண்ட உடல்மொழியானது, தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்ப்பதும், Rachel McAdamsன் – சிரித்தாற்போன்ற – முகம் தொடர்ந்து ஒரு சரிவையேற்படுத்தியும் இரண்டும் சமன் செய்து கொள்கிறது. இதழ்களை ஒற்றிக் கொள்வதில், எச்சில்களை வாய்மாற்றிக் கொள்வதில் என்றெல்லாம் முனகல்களை வெளிப்படுத்தியிருந்தும் அது போதுமானதாகப் படவில்லை. இவற்றிடையே தோவித் குபர்மேனாக Alessandro Nivolaவின் நடிப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. கடவுள் உலகம் என அத்தனைக்கும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கையிலேயே தடுமாறி விழுந்து (விழுந்த்தும் Call for an Ambulance என்ற ஒரு வரிவரும்) இறக்கும் தன் குருவின் மூலம் கிடைக்கப்பெற்ற பாதையின் ஒளி மற்றும் இருளில் முடிவேதும், முற்றாய் அறிந்து கொள்ள முடியாமல், கண்கள் ததும்பும் வலியை தன்னால் திரையில் காண்பிக்க முடிந்திருக்கிறது நிவோலாவால். 

யூத சமூகத்தின் அருகில் சென்றுவந்த பிரமிப்பை ஏற்படுத்துவதில் மற்றுமொரு வெற்றியை படம் அடைந்திருக்கிறது. பெயர்கள், பழக்கவழக்கங்கள், மதசடங்குகளை பிரதிபலிப்பில், உரையாடல்களில் அல்லது சின்ன சின்ன அசைவுகளில் இலகுவாக – வெள்ளிகளில் மட்டும் உடலுறவு, ஏழு குழந்தைகளை வெளித்தள்ளும் பெண்ணாக வாழ்க்கை போன்ற – தகவல்களைக் கடத்தியது என. 

இக்காலத்தின் முன், மக்களைப் போலவே, மதமும் ஒரு நம்பிக்கைத் தடுமாற்றம் கொண்ட நிலையில் தத்தளிப்பதை உலகெங்கும் காண முடிகிறது. நுகர்வுதன்மை கொண்ட மனித பேராசை, அடுத்த வீரியமான மதமாய் வளர்ந்து கொண்டிருக்கையில், உதிரி மானுடர்களுக்கு, வேறேதேனும் கடவுள்கள் கிடைக்குமா உய்திட! அன்பைச் சரியாய் பழக்கிட!

 

 

  • Elisa & Marcela (2019) / Isabel Coixet

 

அரசியலுக்கு சலாம் போடும் மதமும், மதத்திற்கு முதல் போடும் அரசியலும் கட்டித் தழுவி அதன் சிற்பிம்பங்களான கும்பல்களுக்கு மானுட உண்மையை சர்க்கஸாக்கி துண்டு செய்தி வெளியிடுகிறது. மடைமாற்ற வியூகம்.

கொள்ளிக்கண் சமூகம் நேர்கோடுகளால் நிரம்பிய பாவனை மூளையுடன் தயாராக நிற்கிறது, மனதார மட்டும் இயங்கும் ஓவியங்கள் மேல் கற்களையும் கத்தியையும் சேற்றில் முக்கி பிரயோகிக்க.

கலை மட்டும் கால நதியில் நசுக்கப்பட்டவர்களின் கதைகளை அடர்கானில் கீச்சிடும் பிலவமென இசைத்த வண்ணம் நெளிகிறது. கருவெண்மையின் ஒளிவழி காமத்தின் தழும்பலை காதலின் கதகதப்பை உடலுளம் செரிக்க முடியாது தவிக்கிறது.

கதையும் வரலாற்று ஆவணத்தின் அடிப்படையைக் கொண்டிருப்பதால் இன்னும் முக்கியமாகிறது. ஸ்பெயினில் நடந்த முதல் தற்பாலின திருமணம், அதன் அபத்தங்களுடனும் அபாயங்களுடனுமே நடந்தேறி இருக்கிறது. பள்ளித் தோழிகள் மெல்ல காதல் கொண்டு சமூகத்தின் விழிபடாத மறைவிடத்தைத் தேடித் தேடி மூச்சிரைத்துக் கருகிப் போகின்றனர். அவர்கள் முன்பே இருப்பதுதான் ஒளிந்து கொள்ள சரியான இடம் என்ற தெளிவு வந்ததும் அவர்களுக்குப் பிறக்கும் யோசனை விந்தையானது. ஆண் போல் வேடமணிந்து ஏமாற்றத் தைரியம் ஏற்படுகிறது. 

காதலின் வீரியம் சிறை வாழ்வையும் அதிலும் கொடுமையாக தன் சிசுவைத் தாங்கி அலையும் சிறுமியின் வாழ்வையும் மெல்ல எண்ணிக் கடக்க வைக்கும் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம்.

 

 

  • My Summer of Love (2004) / Pawel Pawlikowski

 

தாம்ஸின், மோனா இருவரும் தொட்டுக் கொள்ளும் பாதை தற்செயலின் புற்களால் ஆன தரை. அதில் கிழிந்த கந்தலாடையுடன் விழுந்து புரளும் யுவதி மோனா. தாம்ஸினோ குதிரையேறி மேலிருந்து பார்க்கும் வளமான வாழ்க்கைச் சூழல் கொண்டவள். இருவரது வாழ்விலும் தனி,மையும் துயரமும் நிறைந்து தீராத இராகமாக இசை கசிகிறது. ஒருவரை ஒருவர் கண்டு கொண்டதுமே சரியான தோள்களைப் பரிமாறிக் கொள்வதின் ஆனந்தமும் ஆசுவாசமும் தொற்றிக் கொள்கிறது. 

மோனாவின் தவிப்பு கொண்டிராத ஒரு மர்மத்தையும் கூடுதலாக தன்னுள் கொண்டிருக்கிறது தாம்ஸினின் திடவிழிகள். அதையும் தாண்டி அவளுக்குள் விழுந்து அஸ்தமிக்கும் சூரியனாகத் தான் தினமும் கண் விழிக்க விரும்புகிறாள் மோனா. மோனாவின் சகோதரன், முன்னாள் குற்றவாளி தற்போது உச்சிமலையில் சிலுவையைச் சுமந்து சென்று ஏற்றி பிரசங்கம் செய்யும் மத போதகனாக தன்னை முன்னிருத்திக் கொள்கிறான். அவனது போலித்தனத்தை தன் சில நிமிட விளையாட்டில் சீண்டிச் செல்லும் விட்டேத்தியான மனோபாவம் தாம்ஸினுக்கு இருக்கிறது. Emily Bluntன் அத்தனை புத்துணர்வு தரும் அழகு, படத்தின் மைய நோக்கு விசை. மோனாவாக வரும் Natalie Press, தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து, ஓடைக்குள் மூழ்கி ஓடை நீரோடு தன் கண்ணிரையும் கலந்து, பிறகு மெல்ல அதைக் கடக்கும் காட்சிகளில் முழுமையாக இருக்கிறார். 

இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய இந்த ஆங்கிலத் திரைப்படம், வண்ணத்தில் படமாக்கப்பட்ட மற்றொரு படம். பெரும்பாலும் அவர் எடுத்த கருப்பு வெள்ளை படங்களின் மூலமே அறியப்பட்டவராக இருக்கிறார். மதத்தினை பற்றிய விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டே பக்கத்திலேயே லெஸ்பியன் உறவாடுகை பற்றிய தயக்கங்களையும், மீறல்களையும், ஈர்ப்பையும், அழகியலோடு காட்சிப் படுத்தி பின் ஒரு வளைவில், அனைத்தையும் திருப்பிப் போட்டுக் கேள்விக்குள்ளாக்கும் மாயம் நிகழ்ந்திருக்கிறது. 

 

  • Beanpole (2019) / Kantemir Balagov

 

இந்தப் பட்டியலில் தனித்திருக்கும் ஒரு திரைப்படமாக இந்த படத்தினைக் குறிப்பிடலாம். இதில் ஒரு காட்சியில் தன் தோழியை உடல்வலுக் கொண்டு ஆட்கொள்ளும் ஒரு காட்சி வருகிற போதும், அவர்களுக்கிடையில் ஒரு தீராத் துணைமை இருப்பதைக் காண முடியும்போதும், இது ஒரு பாலுறவினை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படம் இல்லை. போரில் அலைக்கழிக்கப்பட்ட இரண்டு புனைகள் நிலைகொள்ளும் வாழ்வின் தரை எத்தனை நிர்கருணை கொண்டது என்பதன் பேச்சு நிறைந்திருக்கும் படம். இரு பெண்களின் அந்தரங்கங்களைப் பேசுவதாலேயே இதனை இங்கு கவனப்படுத்தி இருக்கிறேன். 

போர் முடிந்து, மனிதன் சமாதானத்தின் மீது கொள்ளும் தாகம் அவனது கடந்த பாதைகளின் மீது உள்ள வடுக்களை எப்படி முற்றிலும் சரிசெய்ய முடியும்? கனவுகளின் தூரிகையில் வரையப்படும், நிலையற்ற, நாயகர்களின் பீடங்களில் கற்பனையில் தனக்கும் அமர்ந்து கொள்ள இடம் கிடைக்கும் என்ற அற்பத்தை அதிகபட்சம் வரித்துக் கொண்டு அதற்காக தங்கள் இன்னுயிரை களம்வைத்தவர்களின் கதைகள் எத்தனை இலட்சம்! போரை நிரப்பிய புற்றீசல்களின் பார்வைக்கு தேசம் முழுமையாகப் புலப்படாது. 

ஏன், இன்னும் சொல்லப் போனால் தாளில் இருக்கும் வரைபடங்களைத் தொட்டு, கோட்டுத் திட்டங்கள் தீட்டிவிட்டால் போதும் உலகை வென்றிடலாம் எனக் கொக்கரித்த படைத்தலைவர்களுக்கே அது மாயை என்று பிடிபட, கோடி உயிர்களும் பல்லாண்டு வலிகளும் தேவைப்பட்டன.

மாநிலம் கொண்ட ரஷ்யப் பேரரசு இரு உலகப் போர்களிலும் முன்னின்ற ஒன்று. அதில், இரண்டாம் உலக யுத்தத்தில் புதியதோருலகு படைப்போம் என வீறு கொண்டெழுந்த உயிர்களில் பெண்களும் இருந்தனர். போரின் மிச்சமாக எஞ்சிய அவர்களும் அவர்களது மிச்சமும் இருக்கும் ஒரு உலகின் நிறம் அரியதாக நிரப்பப்பட்டுள்ளது. முப்பது வயதிற்க்குள்ளான இயக்குநர் இத்தகைய படத்தை எடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகப் புரிந்து கொண்டேன். முதலில், சினிமாவின் சாத்தியங்களை ஆழக்கற்றிருப்பது. இரண்டாவது, தனக்கு முன் இருக்கும் இலக்கியத்தை தன் விழிகளின் வீச்சோடுப் பொருத்திக் கொண்டிருப்பது. அது அவரது வயது கடந்த வீச்சிற்குப் பயன்பட்டிருக்கிறது.

இலக்கியத்தால் உண்மைகளை எடுத்துக் கூறவோ அல்லது கதாபாத்திரங்கள் வழியாக அவற்றின் நடத்தைகளுக்குப் புதிதுபுதிதாக சாக்குபோக்குக் கண்டறிந்து சொல்லவோ மட்டுமே முடியும். புனைவுகளில் வரும் உள்நோக்கங்கள் அனைத்துமே வெளிப்படையானவை அல்லது தவறானவை. அப்படிக் கொண்டால் நிரூப இலக்கியத்தின் பிதாமகர் என்று கொள்ளத்தக்க, ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சின் 1983-ஆம் ஆண்டு நூலை இத்திரைப்படம் தனதாக்கிக் கொண்டிருக்கிறது. Unwomanly Face of War என்ற இந்த நூலின் தூண்டுதல் படத்திற்கு அடிகோலி இருக்கிறது.

தன் பிள்ளையை இழந்ததைக் கடக்க முயலும் மாஷாவின் நடத்தைகள், மொத்த பெண்களின் எதிர்காலச் சீர்குலைவு நோக்கிய முழு அக எதிரொலிப்பு.  

இயாவின் உயரமான உடலமைப்பும், தான் மிரளும் கலவிக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளும் தவிப்பும், அகாலத்தில் வந்துத் தொலையும் நிலைப்புத் தனமும் அவளை யாரின் கைப்பாவையாகவோ – அநேகமாக வரலாற்றின் – நிறுத்தி ஒரு குறியீட்டுத்தனத்தை முன்வைக்கிறது. 

மரணிக்க விரும்பும் படுக்கை நோயாளிக்குத் தலைக்குத்தும் நிலை, புதிய சாலை இரயிலில் பொருந்தாமல் இறக்கும் நெட்டைக்கொக்கு, நேர்த்தியாக தன் மறுப்பைச் சொல்லக் கற்றிருக்கும் சீமாட்டி என அலையும் வர்ணமிடப்பட்ட நிழல்கள் எல்லாம் மொத்த பலனுக்கு வலு சேர்க்கின்றன. இது எல்லாருமே பேசிவிட்டிருக்கும் முக்கியமான திரைப்படம் தான் எனினும் நானும் சொல்லி வைப்பதில் மகிழ்வும் மீள்நினைவும் கொள்கிறேன்.

 

  • Blue is the warmest color (2013) / Abdellatif Kechiche / Lea Seydoux / Adele Exarchopoulos

 

அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்தபின், காதல் சரியான வழிதான் என்பது, பீறிடும் காதலின் அவஸ்தையை முழுமையாக அனுபவித்த அனைவருக்கும் ஒரே புள்ளியில் நிறைந்தும், தொலைந்தும் இருக்கும் காதலின் பண்பைச் சொல்லும். முதல் காதலுக்கு வாழ்நாள் முழுவதும் சிறப்பிடம் உண்டு. காரணம், அதில் நிறைந்து கிடக்கும் அனுபவமின்மையே. அப்படி பல காதல் கதைகளைத் திரையுலகம் கண்டும் சொல்லியும் சலித்துக் கிடக்கிறது.

இந்நிலையில், ஒரு பாலினச் சேர்க்கையின் காதலை, முதல் காதலாக சொல்லிப் பார்க்கும் கதையோட்டம் ஒரு பெரும் சவால். இந்த திரைப்படம் அந்த சவாலை நோக்கி, வெகு துணிச்சலோடு பயணிக்கிறது. பாலியல் மீறல்களைப் பற்றிய படங்களில், திரைக்கதையின் அத்தனைச் சாத்தியங்களையும், கட்டுப்பாடுகளையும் கடந்த வெகுசில திரைப்படங்களுள் நிச்சயம் இதற்கும் இடமுண்டு. 

அடேல் என்ற அகபண்பாளி (introvert), வளரிளம் பெண்ணின் ஹார்மோன் அழுத்தத்திற்கும், அவள் மனத்தின் ஏக்கங்களுக்கும் உள்ள இடைவெளியில் கதைக்களம் துவங்குகிறது. தன் சக கல்லூரி மாணவனிடம், தன் முதல் கலவியை பரீட்சார்த்து பார்க்கையில் அவளுக்கு பெரிதும் முழுமை என ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவள் மனம் விலகியே இருக்கிறது அந்த ஆணிடமிருந்து. அவள் சாலையைக் கடக்கையில் என்றோ கண்ட, தலைக்கு நீலச்சாயம் பூசிய, ஒரு பெண்ணின் மீது முதல் பார்வையிலேயே ஒரு வித ஈர்ப்பு கொண்டாள் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

மூன்று மணிநேரம் நகரும் இந்த திரைப்படம், ஒரு பாலின காதலின் வளர்நிலைகளை, சமூக புறக்கணிப்புகளை, வாழ்வின் பயணப்படுதலோடு சொல்லிச் செல்கிறது. ஃப்ரென்ச் இலக்கியம் படிக்கும், அடேல் தன் கற்பனைத் திறம் பற்றியும், இலக்கிய பகுதிகளை ஆசிரியர் வெகு வெகுவாக விளக்கம் தருகையில் அது தன் கற்பனையைத் தடை செய்வதால், அந்த விதமான கல்வியை விரும்பவில்லை என்றும் சொல்வது, மெலிதாக அவள் எம்மா மீது கொள்ளும் காதலின் விதையென திரைக்கதையில் நெய்யப்பட்டுள்ளது.

எம்மா, அடேலை விட சற்று அதிக வயதானவளாகவும், பிடிவாதமானவளாகவும் இருப்பது, முழுக்க இருவரையும் இரு துருவங்களாக, காட்டிச் செல்கிறது. எதிரெதிர் துருவங்களை இணைப்பதே காந்தம், மற்றும் காதலின் தத்துவம் என்பதை உணர்ந்து கதாபாத்திரங்கள் செழிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. எம்மா, கேளிக்கையிலும், சமூக தொடர்புகளிலும் ஆர்வமுள்ளவளாகத் தெரிந்தாலும், ஒருவித இழப்புணர்வு நிறைந்த கண்களுடனேயே தோற்றமளிக்கிறாள். அவளுக்கு, அடேலின் சிறுபிள்ளைத்தனமும், நட்பும் புத்துணர்வளிக்கிறது. அடெலுக்கு காரணமே தோன்றாமல், வேதி மூலக்கூறு உந்துதல் போல காதல் மட்டுமே எம்மா மேல் எஞ்சுகிறது.

இவ்விருவரும், முதலில் கலவி கொள்ளும் காட்சி, மிகவும் வெளிப்படையான காட்சியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு துணை நடிகர்கள் என்ற அளவிலேயே வந்து போகிறது. முழுக்க, முழுக்க இந்த இரு முதன்மை கதாபாத்திரங்களும் நம்மை ஆக்கிரமிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் உருவாக்கிய அனைத்து க்ளோஸ் அப் காட்சிகளும் நம்மை அடேலின் உலகிற்கு வெகு அருகாமையில் இழுத்து செல்ல தவறவில்லை.

இயக்குநரது துணிச்சல், ஒளிப்பதிவாளரின் கவியுணர்வு சித்திரங்கள், முதன்மை கதாபாத்திரங்களின் வீரியம் தவிர, எளிமையான இசை நம் கண்களில் ததும்பும் கண்ணீரை கீழே விழவைக்கும் திறன் பெற்றது. மெல்லிய உணர்வுகள், காதலில் விரிசல்கள், புரிதலின்மை ஆகியவை தவிர்க்க முடியாமல் ஏற்படுகையில் எப்படி கனமான வலியைத் தருகிறது என்பதை வெற்றிகரமாக திரைப்படுத்திய இந்த திரைப்படம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷம். 

ஒருவர் ஒரு பாலின அல்லது எதிர்பாலின அல்லது இருபாலின ஈர்ப்பு கொள்வதென்பது, அவர்களது மூளைக்குள் இருக்கும் உயர் வேதித் தொடர்புகளால் ஏற்படும் ஒரு தூண்டலின் அடிப்படை கொண்டவை. அதைப் புரிந்து கொண்ட இயக்குனர்  Abdellatif Kechiche அவர்கள் சினிமாவை இலக்கியமாகக் கொண்டவர்களின் இலக்குக்கு உகந்தவர். முதலில் இலக்கிய மாணவியாகவும், பின்னர் குழந்தைப் பள்ளி ஆசிரியையாகவும் பரிணமிக்கும் அடேலாக நடித்த Adèle தன் புன்னகையாலும், கண்ணீராலும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பெறுகிறார். 


-கமலக்கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.