மரங்களின் ஆஆஆஆட்டம்

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மரங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் இருந்துதன. இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு போக முடியாது . அப்போ அந்த காட்டு மரங்களோட ராஜா தேக்குமரம் ஏதாவது கூட்டம் போட்டு எல்லா மரங்களுக்கும் போய் சொல்ல முடியாம கஷ்டப்பட்டது. தூரத்தில் இருக்கிற மரங்களுக்கு ஒவ்வொரு மரம் மூலமா அந்த கூட்டத்தோட மொத்த விஷயமும் போய் சேர்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுது.

அன்னைக்கு கூடிய கூட்டத்துல “இப்படி நம்ம கூட்டத்திற்கு தூரத்தில் இருக்கிற மரங்களும் வர முடியறதில்லை. இதுக்கு நம்ம எல்லாரும் என்ன பண்ணலாம்? ” அப்படின்னு தேக்கு ராஜா மரங்கள்கிட்ட பேச ஆரம்பிச்சாராம்.

”நம்ம போடுற கூட்டத்துல நம்மளோட பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பற்றி நிறைய பேசுகிறோம். இந்த விஷயங்களெல்லாம் ஒவ்வொரு மரத்துக்கும் போய் சேர்வதற்கு ஒரு மாசம் ஆயிடுது இதுக்கு நாம் ஒரு தெளிவான முடிவு எடுக்கணும் என்ன சொல்றீங்க மரங்களே” அப்படின்னு கேட்டாராம் தேக்குராஜா.

”ஆமாம் ராஜா இன்னிக்கு அதுக்கு ஒரு முடிவெடுத்தாகனும்” என்று சொன்னது சாலமரம்.

அத்திமரம், அரசமரம், ஆலமரம், ஆயமரம், பூவரசுமரம், இச்சிமரம், இராமசீத்தாமரம், சப்போட்டமரம், யூக்கலிப்டஸ்மரம், இருவேல்மரம், புளியமரம், கருங்காலிமரம், கொய்யாமரம் மாமரம்,இலுப்பைமரம் வேங்கைமரம், சந்தனமரம், ஊஞ்சமரம், எட்டிமரம், கடம்பம்மரம், கருவேம்புமரம், வேப்பமரம், நொச்சிமரம், துரியன்மரம், முருங்கைமரம், நெல்லிமரம், பனைமரம், தென்னைமரம், கொன்றைமரம், கோணப்புளியங்கமரம், மாதுளைமரம், வாகைமரம், வாழைமரம், வாதநாரயணமரம், புங்கமரம், மகிழ்மரம், மற்றும் அங்கிருந்த இன்னும் நிறைய மரங்கள் தங்களோட யோசனையை சொன்னாங்களாம்.

அப்போ ஆலமரம் சொன்ன யோசனையை தான் கேட்பதென்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆலமரம் என்ன சொல்லுச்சுனா “ என்னோட மரத்துல நிறைய பச்சைக்கிளி இருக்குது. அவங்க கிட்ட சொல்லி காட்டுல இருக்கிற எல்லா மரங்களுக்கும் நாம நம்ம கூட்டத்துல பேசினதை போய் எல்லாம் சொல்லச் சொல்லலாம்.” என்றதாம் ஆலமரம்.

”ஏன் கிளிகளை சொல்லச் சொல்லனும்? என்று மாதுளைமரம் கேட்டுச்சாம்.
“மற்ற பறவைகளைவிட கிளிகள் தான் நல்ல பேசும். அதனால தான் சொன்னேன்.” என்றதாம் ஆலமரம்.

”சரி நீங்க கிளிகளிடம் கேட்டு சொல்லுங்க ஆலமரமே” என்றது தேக்குராஜா.
“இன்று இரவே கேட்டு சொல்லிடறேன் ராஜா இரைதேடப் போன கிளிகள் இரவு தான் வரும் வந்தவுடனே கேட்டு சொல்லிடறேன் ராஜா” என்றது ஆலமரம். கூட்டம் முடிவடைந்தது.
அதே மாதிரி அன்று இரவு ஆலமரம் கிளிடம் ” கிளியே! கிளியே! எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா ?” அப்படின்னு கேட்டுச்சாம்

”உங்களுக்கு செய்யாமையாலா? சொல்லுங்க ஆலமரமே அப்படின்னு கேட்டதாம் கிளி எங்க தேக்கு ராஜா கூட்டம் போட்டா தூரத்தில் இருக்கும் மரங்களுக்கு எல்லாம் வருத்தம் அப்படின்னு சொல்லுச்சாம் ஆலமரம்.

”ஏன்? என்ன வருத்தம் ? ”அப்படின்னு கேட்டுதாம் பச்சைக்கிளி.
“முதல் கூட்டத்துல எடுத்த முடிவுகள் எல்லா மரங்களுக்கும் போய் சேரத்துக்குள்ள அடுத்த கூட்டமே வந்ததுடும். அதனால நீங்க நாங்க கூட்டத்தில் முடிவு பண்ண விஷயங்களை எல்லாம் மரங்களுக்கும் போய் சொல்லிடணும் தயவு செஞ்சு உதவி பண்ணுவீங்களா ?” அப்படீன்னு கேட்டுதாம் ஆலமரம்.

இதக்கேட்டவுடனே அதுவரைக்கும் அமைதியா தன்னோட குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டிருந்த சிட்டுக்குருவி விழுந்து விழுந்து சிரித்ததாம். மற்ற பறவைகளும் கெக்க பெக்கேவென சிரித்தன.
”ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க?” அப்படின்னு சொல்லி ஆலமரம் கோபப்பட்டதாம்.
“ஆஹா பின்ன சிரிக்காம, நீங்க என்ன கூட்டம் போறீங்க? உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்க போகுது?” அப்படின்னு கேட்டுதாம் நம்ம சிட்டுக்குருவி.
”என்ன இப்படி கேட்டுட்டீங்க.? நாங்க நெருக்க நெருக்கமாய் இருக்குற இடத்துல ஒவ்வொரு மரத்தோட வேர்களும் எனக்கான இடம் எனக்கான இடம்னு சண்டை போட்டுக்கொள்ளும் அப்போ எங்க தேக்கு ராஜா தான் அவங்களையெல்லாம் சமாதானப்படுத்தி சரியான தீர்ப்பும் கொடுப்பாரு” அப்படினு ஆலமரம் சொன்னது.

ஆர்வமா சிட்டுக்குருவி தன்னோட குஞ்சுகளுக்கு இரையூட்டுவது விட்டுட்டு ஆஆஆனு கேட்டுட்டு இருந்ததாம்

அந்த நேரத்தில் அப்பதான் வந்து உட்கார்ந்த மரங்கொத்தி சொல்லுச்சா அடியாத்தி இது வேற நடக்குமா உங்களுக்குள்ள? இதென்ன பெரிய கூத்தா இருக்கு அப்படின்னு சொல்லுச்சாம்.

”அப்புறம் வேற என்ன பிரச்சனை எல்லாம் வரும் அப்படின்னு ஆர்வமா கேட்டுச்சாம் தேன்சிட்டுக் குருவி. கேட்ட உடனேயே அடுத்து கிளைகள் எல்லாம் ஒண்ணு மேல ஒண்ணு இடிச்சுக்கிட்டு இருக்கும் இது மட்டுமா தினம் தினம் ஆயிரம் பிரசனைகள் சொல்லிமாளாது. இந்த பிரச்சனை எல்லாத்தையும் எங்க தேக்கு ராஜாதான் தீர்த்து வைப்பாரு” அப்பாடீன்னு சொல்லுச்சாம் ஆலமரம்.

”ஓஹோ இத்தனை பிரச்சனை இருக்கா உங்களுக்குள்ள?” அப்படின்னு ஆச்சரியப்பட்டு கேட்டுதாம் கிளி.
”ஆமா ஆமா” என்றதாம் ஆலமரம். சரிங்க ஆலமரமே நாளைக்கு எங்க கிளி ராஜாகிட்ட கேட்டுட்டு சொல்கிறேன் என்றது கிளி.
நன்றி என்றது ஆலமரம்.

அடுத்தநாள் அதிகாலை சூரியன் இளமஞ்சள் நிறத்தை அள்ளிக் காடு முழுவதும் தெளித்திருந்தது. இதமான குயிலிசை குருவிகளின் கீச் கீச் சத்தம் காய்ந்த சருகுகள் கூட தன்பங்கிற்குத் தாளமிட்டன அருவியின் பேரிசைச்சல் சந்தமாக ஆறுகளின் சலசலப்பு ஆலாபனையாக இருந்த நேரத்தில் கிளி எழுந்து ராஜாவைப் பார்க்கச் சென்றது. கிளிராஜா மந்திரி ராஜாவைப் பார்த்தவுடன்( குறிப்பு அந்தக் கிளிதான் கிளிராஜாவின் ஆஸ்தான மந்திரிகிளி) கூட்டுக்குள் அழைத்துச் சென்று
”சொல்லுங்க மந்திரியாரே என்ன சமாச்சாரம் இந்நேரத்துல இம்புட்டுத் தூரம்” என்றது.

ராஜாவிடம் ஆலமரம் சொன்ன விஷயங்களைப் பற்றி சொன்னது மந்திரிகிளி கண்டிப்பாக செய்துடலாம் மரங்கள் நமக்கு இத்தனை வருடமங்களாக நமக்கு உணவு உறைவிடம் தந்தவங்க என்றது கிளிராஜா.
இதைக்கேட்டவுடன் ராஜாவுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியோடு ஆலமரத்தை நோக்கிப் பறந்தது மந்திரிகிளி.

கிளியின் வரவை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருந்த ஆலமரம் கிளி பறந்து வந்து சம்மதம் சொன்னதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தது. தேக்குராஜாவிடம் தெரிவித்தது தேக்குராஜாவுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.

அடுத்த கூட்டங்கள் நடந்த விஷயங்கள் எல்லாம் வேகமாய் எல்லா மரங்களுக்கும் போய் சேர்ந்தது.எல்லா மரங்களும் மகிழ்ச்சியா இருந்தாங்களாம். அப்போ சில விளையாட்டுத்தனமான கிளிகள் செய்திகளை சொல்லாமலலும் சில நேரங்களில் வேண்டுமென்றே தவறாகவும் சொல்லி வந்தன இந்த விஷயம் தேக்கு ராஜா காதுகளுக்குப் போக தேக்குராஜா கிளி ராஜாவிடம் கேட்க உடனே கிளிராஜா சொல்லுச்சாம் அப்போ எங்க மேல நம்பிக்கை இல்லையா இனிமேல் நங்க போய் விஷயத்தைச் சொல்ல மாட்டேன்னு சொல்லி விர்ர்ருன்னு பறந்து போயிடுச்சாம்.

அப்போ இதைக்கேட்ட தேக்கு ராஜாவுக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. நாம்தான் இவ்வளவு வருடங்களா கூடு கட்ட இடம் தருகிறோம் ஆனால் இப்போ நமக்கு ஒரு உதவி பண்ண மாட்டீங்கறாங்கள்ல அவங்களை ஒருகை பார்த்துடலாம் அவங்களா நாமளான்னு அப்படீன்னு கத்துச்சாம்..

அடுத்த நாள் தேக்குமரம் கடவுளை பார்த்து கேட்டுதாம் ”எங்கள் எல்லோருக்கும் இடத்தைவிட்டு நடந்து போற ஒரு சக்தியை கொடுங்க. எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. பறவைகள் நடக்குது. விலங்குகள் நடக்குது. எறும்புகள் கூட நடக்குது. நாங்க இவ்ளோ பெருசா இருந்தா என்ன பண்றது? எங்களால இருக்கிற இடத்தை விட்டு கொஞ்சம் தூரம் கூட நகர முடிவதில்லை. தயவுசெய்து எங்களுக்கு நகரும் சக்தியக் கொடுங்க” அப்படின்னு கேட்டு தாம்
அப்ப கடவுள் நினைச்சாராம் ’இதுவரைக்கும் மரங்கள் நம்மகிட்ட வந்து எதுவுமே கேட்டதில்லை. பறவைகள் வந்து பறக்கறதுக்கு இறக்கை கொடுங்கன்னு கேட்டு இருக்குது. விலங்குகள் வந்து எனக்கு வால் கொடுங்கன்னு கேட்டிருக்கு. சின்ன சின்ன பூச்சிகள் எல்லாம் வந்து எனக்கு பறக்கறததுக்கு இறக்கை கொடுங்கன்னு கேட்டிருக்குது. ஆனால் மரங்கள் கேட்டு இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை முதல் தடவையா மரம் நம்மகிட்ட கேக்குது அதனால நாம இந்த வரத்தை கொடுத்து விடலாம் ,அப்படின்னு சொல்லிட்டு கடவுள் அவங்களுக்கு நகரும் வரத்தை கொடுத்துட்டாராம்.

அன்றிலிருந்து மரங்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா காட்டுக்குள்ள நடந்துட்டே இருந்தன.ஓடி ஆடி விளையாடி ரொம்ப மகிழ்ச்சிய இருந்தாங்கலாம். கிளிகள் செய்த தவறால எந்தப் பறவையும் மரத்துல முட்டை இட முடியல முட்டைகள் கீழ விழுந்தன புழு பூச்சிகள் ஏன் விலங்குகள் கூட நடமாட முடியல மரங்கள் நடந்து ஓடியாடும் போது மிதிபட்டு விலங்குகளும் புழுப்பூச்சிகளும் சிறு சிறு செடிகளும் இறந்துபோயின. கிளிகள் அனைத்தும் சென்று தேக்கு ராஜாவிடம் மன்னிப்புக்கேட்டன. தேக்குராஜா ஒத்துக் கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட பறவைகள் விலங்குகள் புழுப் பூச்சி சிறு செடிகள் இனங்களே அழியற அளவுக்கு வந்துருச்சாம். அனைத்தும் கடவுளிடம் முறையிட்டன. சின்ன விஷயம்னு நீங்க செய்தது இப்போ எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்திடுச்சு பாத்தீங்களா இனியாவது சரியா நடந்துக்கோங்க என்று எச்சரித்து அனுப்பினார் கடவுள்.

கடவுள் மரங்களுக்கு முன்னாடி தோன்றினார். “ நீங்க ரொம்ப நல்லவங்க. உங்களால தான் மழை பெய்து. உங்களால தான் இந்த காட்டில் செல்வச் செழிப்போடு எல்லாரும் இருக்காங்க. இந்த காட்டுல நீங்க இப்படி பண்ணக்கூடாது. இயற்கையே உங்கள நம்பி தான் இருக்கு. அதனால தயவு செஞ்சு பழைய மாதியே ஒரு இடத்துலேயே இருங்க.
பறவைகள் தினமும் என் கிட்ட வந்து அழுகுது. நாங்க எந்த உதவி வேணாலும் மரங்களுக்கு பண்றோம்னு அழுகுது” என்றார் கடவுள்.

”சிறிது நேரம் கொடுங்கள் நான் மற்ற மரங்களுடன் கலந்துரையாடிவிட்டு சொல்கிறேன்” என்று கடவுளிடம் கேட்டது தேக்குராஜா.
கடவுள் ‘ சரி’ என்றார்.
சிறிது நேரத்தில் கடவுளிடம் வந்த தேக்குராஜா ”சரி. நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இனிமேல் எங்களோட பழங்களை சாப்பிட்ட பின் பறவைகளுக்கு விதைகள் ஜீரணமாகாம எச்சத்தோட வந்திடனும். அப்படீங்கற வரம் நீங்க குடுக்கனும்” என்றது தோக்குராஜா. கடவுள் அதற்கு ஒத்துக்கொண்டார். மரங்கள் ஒரே இடத்தில் இருக்க தேக்குராஜா சம்மதித்தார். அன்றிலிருந்து பறவைகளின் எச்சம் மூலம் காடுளில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மரங்கள் பரவி வளர்ந்தன. காடுகளில் அனைத்து உயிரனங்களும் மகிழ்வோடு வாழ்ந்தன.


-‘கதைசொல்லி’  சரிதாஜோ

2 COMMENTS

  1. கனலி தடம் பதிக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்,💐💐💐

  2. மரங்கள் பறவைகள் எனச் சுற்றுச்சூழல லை கூர்ந்து கவனிக்கவும்,இரசிக்கவும் . கற்பனைகளை வளர்த்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட கதை சொல்லிகள் கட்டாயம் தேவை.
    மனமார்ந்த வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.