சுளுந்தீ – அரிய வரலாற்றுப் பொக்கிஷம்!

 

நாவிதன் முகச்சவரம் செய்யவில்லை என்றால் குடிமக்கள் யாரும் தனக்கு முகச்சவரம் கூட செய்ய முடியாத கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலம் அரண்மனையார்களின் ஆட்சிக்காலம். குடிமக்கள் தங்களுக்கு அவர்களாக முகச்சவரம் செய்து கொள்ளலாம் என்றாலும் கத்தி உள்ளிட்ட பொருட்களை அரண்மனை அனுமதி இல்லாமல் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்ட சூழலில் அன்றைய மக்கள் வாழ்ந்த கதையை பின்புலமாகக் கொண்டு தொடங்குகிறது சுளுந்தீ.

சூதுபொய் பிரச்சாரமே

சூது என்பது நம்ப வைத்து கழுத்தறுக்கும் வேலை. சூதை சூதால் வெல்லலாம். ஆனால் உண்மையான வீரனை வெல்ல முடியாதவர்கள் அவனிடம் மந்திரம், மாயம், சூது, பில்லி, சூனியம் வைத்திருப்பதாக கட்டுக் கதைகளை சொல்வது ஒருவித பொய் என்பதை அறியாத மக்களிடம் பிரச்சாரமாக விதைக்கும் அரண்மனைவாசிகளின் சூட்சமம்.

மல்யுத்தப் போட்டிக்குத் தயார் என கொன்றிமாயனின் சிஷ்யன் வங்காரனை அறிவித்த பின்னும் கொன்றிமாயன் குடியிருக்கும் அரண்மனை எல்லையான உத்தப்ப நாயக்கனூர் அரண்மனையார் தம்பைய்யா நாயக்கர், மாடனை மல்யுத்தப் போட்டிக்கு முன்பே கொல்ல தீட்டும் சதித்திட்டம் எல்லாவற்றையும் முறியடிக்கும் மாடனை கடைசியில் சூதால்தான் வெல்ல முடிகிறது.

வங்காரன் மல்யுத்தப் போட்டிக்கு ஊர்வலமாக போகும் போது அவனது சாவு குறித்து அரண்மனை ஏகாளி சமயன், “படச்சவன் வாயில்லாச் சீவன் மூலமாக கேடுகாலத்த மனுசனுக்கு சமிக்ஜை காட்டுவான்” என்று தனது அனுபவத்தை சொல்லும் நுணுக்கம். கதையின் இறுதியில் உண்மையென உணர்த்துகிறது.

72 பாளையங்களிலும் மாடனை வெல்ல வீரன் ஒருவன் இல்லை என்பதே உண்மை. நாவிதன் வெல்ல முடியாத வீரனாக உருவானது பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, குறிப்பாக அதிகாரப் பீடத்திற்கு. மல்யுத்த விதிகளை வங்காரன் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சூழ்ச்சி செய்து தளபதி முத்து இருளப்ப நாயக்கர் கொம்பு சீவிவிட்டு தனது வன்மத்தை தீர்த்துக் கொள்ளவும் முடிவு செய்கிறார். இதைக் கேள்விப்பட்ட கொன்றிமாயன் ஒருவனை சூதால் கொல்ல முடியுமே தவிர, வெல்ல முடியாது என்பதை சொல்ல அது உண்மையாகவே முடிகிறது.

அதிகாரப் பீடம்

அரண்மனைவாசிகளுக்கு நோய் என்றால் தங்களுக்கு வந்ததாக ஏவலாளிகள் தயாராக வேண்டும். இல்லையென்றால் அரண்மனை குற்றத்திற்கு ஆளாகணும். இதனால் ஏவலாளிகள் காதுகளை கதவிலும், கண்களை தெருவிலும் வைத்து உத்தரவுக்காகக் காத்திருக்கும் ஏவலாளிகளின் மனச்சித்திரத்தை பதிவு செய்திருப்பது சமகாலத்தில் சமீபத்தில் இறந்த நமது முன்னாள் முதல்வாரன ஜெயலலிதாவை நமக்கு நினைவூட்டுவது போல் இருந்தது. அன்றைக்கு அரண்மனைகளுக்கு ஏவலாளிகள் என்றால் இன்றைக்கு ஆட்சியாளர்களுக்கு அவர்களுக்குக் கீழ் இருக்கும் அமைச்சர், அதிகாரிகளைக் குறிக்கிறது. அரண்மனையார்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அங்கு பணிபுரியும் அனைவரும் அவர்களுக்காக பரிந்து ஓடி வேலைகளை கவனித்தாக வேண்டும் என்பது ஜெயலலிதா இறப்பிற்கு முன்னால் 70 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு அரசு நிர்வாகம் அப்போலா மருத்துவமனை வாயிலிலேயே முடங்கிக் கிடந்ததை ஏனோ சம்பந்தமில்லாமல் எனக்கு நினைவூட்டியது.

மனுதர்மத்தின் சூழ்ச்சி

ஏகாளிகள் அழுக்குத் துணிகளை வெள்ளாவியில் வைத்து வெளுக்கும் முன்பு இன்னார், வீட்டுத்துணி இன்னாருடையது என அடையாளப்படுத்திட, துணிகளுக்கு சேங்கொட்டை சாய்த்தால் துணிகளில் குறியிடும் நுணுக்கம். அதிலும் ஒவ்வொரு குலத்தினருக்கும் தனித்தனியான குலத்தொழில் அடையாளமான குடும்பனுக்கு கலப்பை, தச்சனுக்கு அறுவாள், ரவுத்தருக்கு பிறை மேல் ஒரு புள்ளி எனக் குறியீடுகள் இட்டு துணிகளை வெளுக்க எடுத்துக் கொண்டு போகும் ஏற்பாடுகள் மனுதர்ம கோட்பாட்டை கட்டிக் காக்கவே மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்கள்.

ஏகாளி துணி துவைத்து வெள்ளாவி வைக்கும் போதுகூட மனுதர்மத்தை மீறாமல் யார் துணி மேல், யார் துணி கீழ் எனத் துணிகளை குலவாரியாக அடுக்கி வைத்தாலும், அதில் எல்லா குலத்தினரின் கோவணமும், முட்டுத் துணிகளையும் கீழ் அடுக்கில் வைத்தால்தான் கரை நீங்கும் எனச் சொல்லிக் கொண்டே படைத்தவன் இதில் ஒன்றாக வைத்திருக்கிறான் என ஏகாளி சமயன் குறிப்பிடும் போது எல்லோருடைய மலமும் வீசத்தான் செய்யும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் ஏகாளி சமயன் அவனது மனைவி நாச்சியிடம் குலநீக்கமான கதைகள், வெள்ளாவி வைக்கும் பக்குவம் பற்றி சொல்லும் போது ‘கழுத விட்டையில முன்விட்ட, பின் விட்டை இருக்கா?’ எனக் கேட்டதோடு ‘போரும் புயலும் வந்தா புல்லும் மரமும் மட்டுமல்ல. அரசனும் ஆண்டியும் ஒன்னு’ என நாச்சி சொன்ன கருத்துச் செறிவான பழமொழியில் சமயன் ஆடிப்போனது போல் சொலவடைகளால் வாசகனையும் ஆழமாக சிந்திக்க தூண்டும் விதத்தில் சுளுந்தீ கதை இருந்தது. இதுபோன்ற சொலவடைகள் ஏராளம் கதை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகள் தேவையான இடங்களில் பொருத்தமாக அமைந்து கதையின் போக்கை சுவையூட்டுகிறது என்பதை மறுக்க இயலாது.

குலநீக்கக் கொடுமை

குலநீக்கத்திற்கென ஒரு குறிப்பிட்ட காரணப் பட்டியலை வைத்து அவர்களை குலநீக்கமானவர்களாக ஒதுக்கி வைப்பதும் ஒருவிதத்தில் மனுமர்மத்தை கட்டிக் காப்பதாகவே இருந்துள்ளது. மந்திரம் சொல்லி அக்னியை சாட்சியாக வைத்து தாலி கட்டாமல் திருமணம் முடிப்பவன், ராத்திரியில் சுளுந்து பிடித்து திருமணம் செய்பவன், பொண்ணுக்கு பரிசப் பணம் கொடுத்து திருமணம் செய்பவன், குலம் தவறி (சாதி மறுப்பு) திருமணம் முடிப்பவன் போன்றோரை பலி சுமத்தி குலநீக்கம் செய்வது வழக்கமாக இருப்பது மிகப் பெரிய திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேற்கண்ட முறையில் திருமணம் முடிப்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் தொழிலாளர்களே. அப்பாவி மக்களே. அடித்தட்டு மக்களே. மனுதர்ம சாஸ்திரத்தை உடைக்க நினைப்பவர்களே. பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள அல்லது இல்லாதவர்களே ஆவார்கள். இது அரண்மனை அல்லது மன்னர் போன்றோரின் ஆட்சிகளில் மனுதர்மத்தின் ஆதிக்கம் எவ்வளவு கோலேச்சியது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவற்றை கடைப்பிடிக்காத மக்களை குலநீக்கம் என்ற பெயரில் அவர்களின் உடமைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என்கிற தந்திரத்தை கையாண்டுள்ளனர்.

பஞ்சத்தின் போதும் வறட்சியின் போதும் அரண்மனைக்கும் அக்ரஹாரத்திற்கும் பால் பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக ஓடை, ஆற்றில் கிணறு தோண்ட அனுமதித்து அந்தப் பக்கம் எக்காரணம் கொண்டும் குலநீக்கமானவர்கள் போகவே கூடாது என்கிற கடுமையான கட்டுப்பாடுகள் தீண்டாமையின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். குடியானவன் முகத்தில் குலநீக்கம் செய்யப்பட்டவர்கள் விழிக்கக்கூடாது என்பதற்காக படல்கட்டி அதன் மறைவிலிருந்து பார்த்து பேசுவது, தண்ணீர் வாங்கிக் குடிப்பது போன்ற கொடூரங்களுக்கு மனுதர்ம சட்டமே சாட்சி. ஏழை பாழைகள், அன்றாடம் வதைக்கப்பட்ட நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.

குலநீக்கமானவர்களை மீண்டும் குலத்தில் சேர்த்துக் கொள்ள இடுப்பளவு குழிவெட்டி அதில் சாணியை கரைத்து ஊத்தி குலநீக்கமான ஆளை சாணிக்குழி முன்னால் நிறுத்தி சாமி கும்பிட்டு குலநீக்கமானவன் ஒவ்வொரு குழியில் முங்கி முங்கி எழுந்து ஆற்றில் குளித்துவிட்டு வந்து, வரிசையாக நிற்கிற பட்டக்காரர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கும் போது அவர்கள் தன் கையில் வைத்திருக்கும் செருப்பால் காலில் விழுந்தவனின் தலையில் அடிப்பார்கள். இதன் பின்பே அவர்களை குலத்தில் மீண்டும் சேர்த்ததாக பூசாரி அறிவிக்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் சாஸ்திரம். இதில் சாணிக்குழியில் முங்கி எந்திருக்கும் போது அதிலிருக்கும் விஷ காற்று அடித்து பலரை சாவடிக்கும் கொலை பாதக செயலும் சாஸ்திரத்தின் பெயரால் அரங்கேறிய கொடுமையை கண்முன்னே காட்சிப்படுத்தியது போல் இருந்தது.

அதோடு குலநீக்கமாகி பின்பு குலத்தில் சேர்க்கப்பட்டவர்கள் அரண்மனையார் வணங்கும் தெய்வத்தை கும்பிட்டவர்களுக்கு உடனடியாக உழவுத் தொழில் செய்ய நிலம் கிடைத்த சூட்சமம். இது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்தது. ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சலுகைகள் கிடைப்பது அன்றே துவங்கிவிட்டது போலும்!

சமணத்தின் மீது காழ்ப்புணர்ச்சி

காது வளர்க்கும் நுணுக்கம், யாருக்கு காது வளர்க்க அனுமதி என்கிற செய்திகளை விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட குலத்தினரை அடையாளம் காணவே காது வளர்க்கவும், விதவிதமான வடிவங்களில் முடிவெட்டிக் கொள்ளவும் நடைமுறையில் இருந்துள்ளது. இன்று அந்தச் சிக்கல் இல்லாவிட்டாலும் ஊர், தெரு, வகையறா எனக் கேள்விகளாகக் கேட்டு சாதியை அடையாளம் செய்து கொள்ளும் நுணுக்கம் இருக்கத்தானே செய்கிறது. தீண்டாமை நவீன வடிவமாக மாறியது போல் சாதியை கண்டுபிடிக்கும் வடிவமும் முறையும் நவீனமாக மாறியுள்ளது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறாங்க எனச் சொல்லிக் கொண்டே எதிரே இருக்கும் நபரின் சாதியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டத்தானே பலரும் செய்கிறார்கள். இதை முன்னால் குறிப்பிட்ட அடையாளங்களுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

ஆனால் காது வளர்ப்பதன் உண்மையான வரலாற்றையும் அதற்கான காரணத்தையும் இக்கதை குறிப்பிடப்பட்டுள்ளது.  சமண முனிவர்களின் கொடிவழி சனங்கள் காது வளர்த்து கொண்டார்கள் என்ற வரலாறு நம்மில் பலரும் அறிய வேண்டிய செய்தியே.

சமண முனிவவர்கள் பலரும் பண்டுவம் தெரிந்தவர்களாக இருந்தது சைவ முனிகளுக்குப் பிடிக்காமல் போக சமண முனிகள் குறித்து தவறான பிரச்சாரம் செய்து மக்களிடம் வதந்தியை பரப்பிவிட அதை உண்மையென நம்பிய மக்கள், சமண முனிகளை கொலை செய்திருக்கிறார்கள். இது சைவ – சமண மத மோதல்களுக்கு மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்தி சமணர்களை தந்திரமாக கொன்று குவித்த வரலாற்றை நமக்கு எடுத்துரைக்கிறது. எதையும் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தால் அவர்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்பதற்கு சமண முனிகளின் கொலையும், மாடனின் மீதான அவதூறுவை தளபதி முத்து இருளப்ப நாயக்கர் கிளப்பி விட்டதையும் இக்கதையில் பொறுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. மக்களை ஆட்டு மந்தைகளைப் போல் தங்களுக்குச் சாதகமாக சமயமும், ஆட்சி அதிகாரமும் பயன்படுத்திக் கொண்டது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சியும் சேசு சபையினரும்

சேசு சபையினர், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதை பல இடங்களில் பொருத்தமாக சொல்லப்பட்டுள்ளது. மன்னர் சொக்கநாத நாயக்கரால் அனுமதிக்கப்பட்ட பாதிரியார் ஆல்வரேசு பன்றிமலை அடிவாரமுள்ள காங்கோபட்டியில் தங்கிட கன்னிவாடி அரண்மனையாருக்கு உத்திரவிட, அவருக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறார்கள். மக்களோடு மக்களாக இருக்கும் பாதிரியார் ஆல்வரேசுவை ஏசுசாமி என்று அழைக்க, காமாட்சியம்மன் கோவில் பூசாரி கோடங்கி நாயக்கர், குலநீக்கமானவர்கள் அரசுக்கு எதிரான மனநிலையை வளரவிடாமல் தடுக்க குலநீக்கமானவர்கள் குறித்து பாதிரியாரிடம் சொல்ல, அவர் ஜெபக்கூட்டம் வழியாக சமாதான பிரச்சாரம் செய்து வருபவராக இருக்கிறார். அப்போது சேசு சபையினர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மக்களை சிந்திக்கவிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

மதுரையில் நடந்த திருச்சபைக் கூட்டத்தில் ஆலோசித்த பாதிரியார்கள் தனக்கு நாயக்கர் அரசு ஆதரவாக இருப்பதால் மக்கள் அரசுக்கு எதிராக சிந்திப்பதை தடுக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்வது எனவும் சின்ன அரண்மனையார்களைப் பகைக்க வேண்டாம் எனவும் முடிவெடுத்தது தங்களின் இருப்பையும் மதவழிபாட்டு தளத்தை பெருக்கவும் இது சிறந்த உத்தியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

அரண்மனைக்கு எதிராக கிளர்ச்சி

அரண்மனைக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மருதமுத்து ஆசாரி வனத்தில் குலநீக்கமானவர்களுக்கு தஞ்சம் புகுந்து தனி ராஜியமே உருவாக்கிறார். அவரிடம் வெடி செய்யும் நுணுக்கம் இருப்பதால் அவரை நெருங்க அரண்மனை வீரர்களின் பயம். எல்லோரையும் சமத்துவமாக நடத்தும் அவரின் இயல்பு. அங்கு யாரும் யாரின் முகத்திலும் விழிக்கலாம். தீட்டு இல்லை எனச் சொல்லி மக்களின் பெரும் ஆதரவினை பெறும் அவரது பண்பு. காட்டில் விவசாயம் செய்வதற்காக கிணறு வெட்டும் நுணுக்கத்தை தன்னுடன் இருக்கும் நபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து வெடி வைத்து கிணறு வெட்டி மாட்டுத் தோளால் இரைப் பெட்டி தைத்து இறைத்து கிணற்று பாசனம் உருவாக்கும் முயற்சியால் பலரும் பசியாறுகிறார்கள். சுதந்திரமாக வாழும் அவர்கள் அவ்வப்போது அரண்மனை வெடிப் படைகளால் அச்சப்படவும் ஓடி ஒளியவும் செய்கிறார்கள். ஆனால் கிணறு வெட்ட வெடி எப்படிக் கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யும் அரண்மனையார்கள், பண்டுவ மருந்து பொருட்களாலும் வெடி தயாரிக்கலாம் என்பதால் பண்டுவர்களை கொடூரமாக கொலை செய்து வீசும் கொடூரம். அதனால் மக்கள் நோய்க்கு மருந்து கிடைக்காமல் திண்டாடும் சூழல் என அரண்மனை அதிகாரத்திற்குக் கட்டுப்படாதவர்கள், சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டதும் கொலை செய்திடும் கொடூர ஆட்சிமுறையை அறிய முடிகிறது. இதில் பன்றிமலை சித்தர், ராமன் போன்றோர் மட்டும் தப்பிக்கிறார்கள். இதற்கு பின்னாலும் கன்னிவாடி அரண்மனையின் கமுக்கம் ஏதாவது இருக்கலாம்.

அரண்மனைக்கு எதிராக மக்கள் தீயை ஆயுதமாக பயன்படுத்தலாம் என நினைத்த அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கர் சுளுந்து குச்சியை பயன்படுத்தவும் தடைபோட்டு வீட்டில் சமையலுக்கு ஊருக்கு ஒருவன் தீக்கொழுத்தியாக நியமனம் செய்து அவனிடமிருந்து நெருப்பு வாங்கிட உத்தரவு. இப்படியாக தீக்கொழுத்திகள் உருவான கதையை அறிய முடிகிறது.

சித்தரும் சித்த மருத்துவமும்

புளியரைக் கொழுந்து, ஒரு சிரங்கை தேன் இதுதான் சித்தரின் உணவு. இதுவும் பல நாட்களுக்கு ஒருமுறைதான். பளியர் குலத்தினர் தேன் கொண்டு வந்து குகைக்கு முன் இருக்கும் கலயத்தில் ஊற்றுவார்கள். இது அவர்கள் சித்தருக்கு செய்யும் தொண்டாக நினைத்து செய்தார்கள். சித்தர் போன்ற மனிதர்கள் இயற்கையோடு எந்தளவுக்கு ஒன்றிப்போய் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வியப்பே மேலிடுகிறது.

மனிதர்களுக்கு வரும் 4446 நோய்களுக்கு சித்த வைத்தியத்தில் மருந்து இருந்திருக்கிறது. அது இத்தனையும் சித்தருக்கு அத்துபடியாக தெரிந்து வைத்து பண்டுவம் பார்த்திருக்கிறார். அதுவும் நயா பைசா காசு வா     ங்காமல் என்றால் சித்தவைத்தியம் அக்காலத்தில் மனித உயிர்களை காக்கும் அருமருந்தாகவும் சேவையாகவும் இருந்திருக்கிறது. அத்தனை நோய்களுக்கான மூலிகைகளையும், எந்த நோயிக்கு எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை மனப்பாடமாக வைத்திருப்பது அவர்களின் ஞாபக திறனையும் சித்த வைத்தியம் என்பது இயற்கையோடு இயற்கையாக கலந்த மருத்துவ முறை என்பதை உணர்த்துகிறது. அது மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காதது, பக்கவிளைவு இல்லாதது என அறிந்த போது வியப்பே மேலிடுகிறது. ஆனால் இன்று அரசு மருத்துவமனைகளில் பெயரளவுக்கே சித்த வைத்தியம் ஒரு ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமெல்லாம் நமக்கு சேராது அது சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்ற வதந்தி பரவலாக மக்களிடம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் வியபார தந்திரமே. சித்த மருத்துவம்; அழிந்து அலோபதி மருத்துவம் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது.

புதிய மருத்துவ முறைகள் காலத்திற்கு ஏற்றவாறு வருவதை நாம் அறிவியல் முறைப்படி ஏற்றுக் கொண்டாலும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியபார தந்திரத்தால் சாதராண மக்களின் தலையில் சிறு நோய்களுக்காகக்கூட பெரும் பொருளாதர சுமை தூக்கி வைக்கப்படுகிறது. இன்றைக்கு வாழ்வியல் நோய்கள் பெருகிவிட்டன. அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அலோபதி மருத்துவம் எடுத்துக் கொள்ளும் ஒருநபர் தன் வாழ்நாளில் எவ்வளவு பொருளாதரத்தை இழக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக எத்தனை மருத்துவ பெரு நிறுவனங்கள் கொழுத்து பெருகுகின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சாதராணமாக நம் கண்களில் தென்படும் மூலிகைச் செடிகள் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல்மதம் என்கிற பொருள் இன்றைக்கு எங்கு தேடினாலும் கிடைக்குமா? எனத் தெரியவில்லை. மலைகள், குன்றுகள் எல்லாவற்றையும் துளையிட்டு, வெட்டி குடைந்துகொண்டே வரும் போது எப்படி கல்மதம் கிடைக்கும். ஒருவேளை காடு மலைகளை அழித்து சுரண்டுவதற்காகத்தான் தந்திரமாக திட்டமிட்டு சித்த வைத்தியத்தை அழிக்க முடிவெடுத்திருப்பார்கள் போலும். சாதரணமாக கிராமங்களில் நம் கண்ணில் படும் பல செடிகளை மூலிகைகளாக எடுத்து மருந்து தயாரித்து உயிர் காக்கும் மகத்துவம் இனிவரும் தலைமுறையினருக்கு ஒரு செய்தியாகவே மட்டும் இருக்கப் போகிறது. இப்போதே அரசு மருத்துவமனைகளில் சித்த வைத்திய மருந்துகளை யாருக்காவது பரிந்துரை செய்தால் ஆயிரம் கேள்விகள் அவர்களை துளைத்தெடுத்து ஒருவித பீதியை உருவாக்கி விடுகிறது. அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் உருவாக்கி விடுவார்கள். அதேநேரத்தில் அலோபதி மருந்தில் எதைக் கொடுத்தாலும் மூச்சுக் காட்டாமல் வாங்கி தின்று விடும் மனநிலையில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மூலிகையிலிருந்து வாகனங்களை இயக்க மூலிகை பெட்ரோல் தயாரித்த ராமன் பிள்ளை கண்டுபிடிப்பைகூட பல ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் அங்கீகரிக்க மறுக்கும் சமூகத்தில்தானே நாம் வாழ்கிறோம். இதன் ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் வியபார அரசியல் ஒளிந்திருக்கத்தானே செய்கிறது.

மழை இல்லாமல் மக்கள் பஞ்சத்தின் கோரப்பிடிக்குள் இருக்கும் போது மக்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ள கரையான் புற்றில் ஊமைப் புற்றை தோண்டி அந்த சோற்றை தண்ணீரில் கரைத்து துணியில் வடிகட்டி குடிக்கச் சொல்லும் மருந்திற்குப் பெயர் பசி மூலத் தீர்த்தம் என்று சொல்கிறார் சித்தர். பஞ்ச காலத்தில்கூட சித்த வைத்திய முறையில் மருத்துவம் சொல்லி மக்களை காக்கும் சித்தரை மக்கள் கடவுளாகவே வணங்குகிறார்கள்.

இன்றைக்கு ஒரு மனிதன் நோயில்லாமல் வாழ்ந்தால் அவனைவிட பெரிய பணக்காரன் அல்லது அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை அப்போதைய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதையும் மீறி நோய் கண்டால் பைசா செலவில்லாமல் சித்த வைத்தியத்தால் அவற்றை சரிபடுத்தி தங்களது பொளப்பை நடத்தியிருக்கிறார்கள் என்பதை கேள்விப்படவே திகைப்புதான் மிஞ்சுகிறது. இன்றைக்கு தப்பித் தவறிகூட மூலிகை கசாயம் குடிப்பதற்கு நம்மிடையே பயமும் பீதியும் குடிகொள்ளும் அளவுக்கு நாம் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளோம்.

ராமன் மீதான வன்மம்

அரண்மனை நாவிதனை ராமன், ராணிக்கு உடல் நலமில்லாமல் சித்தரிடம் பண்டுவம் பார்த்து முடித்த கையோடு வனத்தில் வேட்டையாட போகும் அரண்மனையாருடன் போகும் போது, புலியிடமிருந்து அரண்மனையாரை காப்பாற்றியதிலிருந்து ராமன் தளபதிக்கு எதிரியாக தெரிகிறான். ராமனால்தான் கேவலத்திற்கு ஆளாகிவிட்டதாக நினைக்கும் தளபதி அவனை அரண்மனையிலிருந்து விரட்ட திட்டம் போடுகிறார். அதை முறியடிக்கும் விதமாக அரண்மனையார் இருக்கிறார். இதில் மர்மம் இருப்பதாக நினைக்கும் தளபதி ராமனுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்கிறார்.

மன்னரின் ஒற்றனான மல்லயன் சேகரித்த செய்தி வழியாக பன்றிமலை சித்தரை சந்திக்க வரும் பிற அரண்மனையார்களுக்கு, கன்னிவாடி என்றாலே பண்டுவன் ராமன் எனக்குத் தெரிந்தவன் என்று சொல்கிறார்கள். அதோடு அரண்மனையாரை புலியிடமிருந்து காப்பாற்றியதால் நாடே அவனை பெரிய வீரனாக புகழ்கிறார்கள் என்ற தகவலால் வெறுப்பாகிய தளபதி ராமனுக்கு கொடுக்கப்பட்ட அரண்மனை பொறுப்புகளை பறிக்க திட்டமிட்டும் தோற்கிறார். நாவிதனான ராமனுக்கு அரண்மனையில் மரியாதையாக நடத்துவதை விரும்பாத தளபதி கடைசிவரை சூழ்ச்சி வேலைகளிலேயே ஈடுபடுகிறார்.

ராமப்பண்டுவன்

ராமன் நாவிதனாக இருந்தாலும் சித்தரின் கருணையால் பண்டுவத்தில் தேர்ச்சி பெற்று பண்டுவனாக மாறிவருகிறான். அவன் பண்டுவனானது கன்னிவாடிக்குப் பெருமையாக இருந்ததாலும் ராமப்பண்டுவன் எனப் பெயர் நிலைத்தற்கு காரணம் அவன் மக்களிடம் காட்டும் கனிவும் மரியாதையும்தான். ராமன் பண்டுவன் ஆனாலும் துளியும் தலைகனம் இல்லாமல் எப்போதும் போல இயல்பாகவே இருந்தான். அரண்மனை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஏவல் வேலைகளை செய்கிறான்.

ராமன் போன்றவர்களை அரண்மனை தன்னுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது என்பதை நாவல் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ராமன் போன்ற நாவிதன் தன்னுடைய கமுக்கத்தை நிறைவேற்ற எப்போதும் தனக்குத் தேவை என்பதை உணர்ந்தே அரண்மனையார் சிறைச்தேசம் செய்யாமல் விடுதலை செய்கிறார். ஆனாலும் வேறு ஏதேனும் வழியில் ராமனை கொன்றால் தன்னுடைய கொலை பாதக செயல் வெளிவந்து விடுமோ என்றுதான் மர்மமான முறையில் மருந்து தயாரிக்கும் போது சூழச்சி செய்து கொலை செய்கிறார்கள் என்றே சொல்லலாம். ஒருவேளை ராமனும் அவனது மனைவி வல்லத்தாரையும் குதிரையில் மருந்து வாங்கப் போய் அங்கிருக்கும் கடைகளை வேடிக்கை பார்க்காமல் இருந்திருந்தால் இப்படியொரு கோர சம்பவம் நடக்காமல் இருந்திருக்குமோ?

ராமனோடு அவன் கற்றுக் கொண்ட சித்த மருத்தவ முறைகளும் மண்ணாகப் போகிறது. அதன்பின்பு மக்கள் நோயின் போது போதிய வைத்தியம் இல்லாமல் அல்லல்படும் அவலம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரண்மனைவாசிகள் எனப் பல செய்திகளை நாவல் சுட்டிக் காட்டுகிறது.

 

நாவிதன் போர் வீரனாக முடியுமா?

ராமன் தனக்கு மகன் பிறந்தால் அவனை படை வீரனாக்க வேண்டுமென ஆசைப்பட்டான். ஆனால் அது கடைசிவரை முடியாமல் போக, அரண்மனை நாவிதனாக தனது குலத்தொழிலையை செய்ய அரண்மனையால் பணிக்கப்பட்டான். அரண்மனை உத்தரவை மீறினால் கொன்று ஒழித்துவிடுவார்கள் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த தொழிலை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறான். பிறப்பால் நாவிதன் வீரன் ஆவதற்கு ஆசைப்படக்கூடாது என்று நேரடியாகவே அதிகாரப்பீடம் அதற்கு காரணம் சொன்னது. ஆனால் பாண்டிய மன்னர்களின் காலத்தில் நாவிதர்கள் படைவீரர்களாக வலம் வந்தவர்களை திட்டமிட்டு நாவிதம் மட்டுமே செய்ய வைத்து, அதன்பின்பு குலத்தொழிலை மட்டுமே செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நாயக்கர் ஆட்சியின் சூழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை எனலாம். நாவிதர்களை தங்களின் கமுக்கங்களை நிறைவேற்றும் கைப்பாவையாக நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற உண்மையை சுளுந்தீ பறைசாற்றுகிறது.

குதிரை அதிகாரத்தின் குறியீடு

“கீழயும், மேலயும் செரக்கிறவனெல்லாம் இந்த நாட்டில குதிரையில வர்றான்” என்ற இகழ்ச்சியான பேச்சுக்களைப் பொறுத்துக் கொள்ளும் ராமன், மாடனுக்கு பொறுமையில்லாமல் பொருமித் தள்ளுகிறான். அதை கடுமையான வார்த்தைகளால் சாடும் ராமன் ஆதங்கப்படுகிறான். இவனை தவறாக வளர்த்திட்டுமோ என்று. யார் குதிரையில் போக வேண்டுமென அளவுகோல் சமூகம் வைத்திருக்கிறது.

சுளுந்தீ நாவலில் வருவது போன்றே உண்மைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் (21) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு குதிரை மீது அதிகப் பிரியத்தால் குதிரை ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய குதிரையில் வயலுக்குச் செல்லும் போது உயர் வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாழ்த்தப்பட்டவர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். குதிரையில் போகக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதை பெரிதுபடுத்தாத அந்த இளைஞர் அவ்வூரை சார்ந்தவர்களால் மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது தந்தை என் மகன் குதிரையில் செல்வதை விரும்பாத உயர் வகுப்பினர் குதிரையை விற்றுவிடு எனத் தொடர்ந்து மிரட்டல் விட்டதாகவும் சாவில் மர்மம் உள்ளதாகவும் போலிசில் புகார் தெரிவித்திருந்தார். (தி இந்து நாளிதழ் ஏப் – 01, 2018, மதுரை)

சுளுந்தீ நாவலில் மாடனுக்கு காட்டும் அதே எதிர்ப்பே இவ்விளைஞனுக்கும் காட்டப்பட்டுள்ளது. சுளுந்தீ வெளிவந்த காலமும், குஜராத்தில் இச்சம்பவம் நடந்த காலமும் ஒன்றாகவே இருக்கிறது. குதிரை என்பது அதிகாரத்தின் குறியீடாக, வீரத்தின் அடைளாயமாக இருந்துள்ளது. இருக்கிறது என்பதை கவனத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரண்மனை கமுக்கம்

நாவித தொழில் அரண்மனை சதிக்கு உட்பட்டதாக இருக்க அந்தக் கமுக்கத்தை கட்டிய மனைவியிடம்கூட சொல்ல முடியாது. அப்படித்தான் ராமன் வல்லத்தாரை கேட்டும் சொல்லாமல் இருக்கிறான். அதையும் மீறி கசியவிட்டால் தலைபோய் விடும். எவ்வளவு பயம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

கெந்தக செந்தூரம் மருந்து தயாரித்துக் கொண்டிருந்த ராமன் மருந்து தீப்பிடிக்க அதிலிருந்து கிளம்பிய நெடியால் மூச்சடைத்து இறக்கிறான். என்றுமே அவ்வழியாக கடக்காத தருமத்துப்பட்டி மந்தை நாயக்கர் மகன் அவ்வழியாக சட்டென கடந்து போகிறான். இதற்கு முன்பு பலமுறை மருந்து தயாரித்தவன் இன்று மட்டும் எப்படி? என்பது மர்மமாகவே இருக்கிறது. அதோடு வல்லத்தாரை ராமனின் மனைவி கண்களும்; பறிபோகிறது. ராமனை கொல்ல சதித்திட்டம் பல நடந்தாலும் தப்பித்த அவன் மருந்து தயாரிப்பின் போது விபத்து, அதோடு ராமனது இறுதிச் சடங்கு அரண்மனை மரியாதையோடு சகலமும் நடக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை தெரியாமல் பலரும் மௌனம் காக்கிறார்கள். கடைசியில் ஆனந்தவல்லி ராமனின் இறப்பு குறித்து சொன்ன தகவலால் மாடன் யூகித்துக் கொள்கிறான்.

அரண்மனையார் கொடுத்த சவரக்கத்தியால் தளபதிக்கு முகச்சவரம் செய்யச் சொல்லி கொடுத்ததை மாடனால் செய்ய முடியாத சூழலில் பெருமாள் நாவிதனிடம் கொடுத்து அரண்மனை உத்தரவை நிறைவேற்றுகிறான். இதை தளபதி இறந்த பின்பு தெரிந்து கொண்ட அரண்மனையார் மாடனுக்காக அவன் இறந்த பின்பு கண்ணீர் வடிக்கிறார். மாடனை அரண்மனை மரபுபடி அடக்கம் செய்யச் சொல்கிறார். ஒருவேளை மாடன் இந்த வேலையை முன்னாலே செய்திருந்தால் மாடனை மல்யுத்தப் போட்டியில் சூதால் கொன்றிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கர் மாடன் இருவருக்கும் பொதுவான எதிரி தளபதிதானே. ஆனால் அரண்மனையாரின் எதிரிலேயே தர்பார் மண்டபத்தில் மாடன், “என்னோட மோத ஆளிலிருந்தால் மோத விடுங்க” எனச் சவால் விட்டதற்காக அவனை கொல்ல சதியோடு கூட்டுசேர்கிறார் அரண்மனையார். சவால் விட்ட போதும் கூட அவன், “தோத்தவன் நாவிதனா வேலை செய்யனும்” சொன்னானே தவிர, தான் வென்றால் படை வீரனாக ஏற்க வேண்டுமென கோரிக்கை வைக்கவில்லை.

பெரும்பாலும் மன்னர், அரண்மனை, சின்ன அரண்மனை, தளபதி எனப் பல முக்கியப் பொறுப்புகளில் நாயக்கர்களே இருப்பது சூழ்ச்சி இல்லாமலா இருக்கும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழத்தான் செய்யும். அதற்கு கன்னிவாடி அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கருக்கும், தளபதி முத்து இருளப்ப நாயக்கருக்கும் இடையே நடக்கும் சூழ்ச்சிகளே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். கடைசியில் சூழ்ச்சியில் யார் வெல்வது என்பதில் தளபதியை தோற்கடிக்கிறார் அரண்மனையார். ஆட்சிப் பீடம் சூழ்ச்சியும் தந்திரமும் வஞ்சகமும் மர்மமும் கமுக்கமும் நிறைந்ததாக இருக்கிறது.

கதாநாயகனான மாடன்

மாடன் குலநீக்கமானவர்களுக்கு கதாநாயகன் போலவே காட்சி தந்தான். அவனை கையெடுத்து கும்பிட்டு வணங்கினார்கள். குடியானவர்களுக்கும் படைவீரர்களுக்கும் அவன் சவால்விட்டான். பெரும் வீரனாக உருவெடுத்தான். வருசக் கூலியை வாங்கி குலநீக்கமானவர்களுக்கு அள்ளிக் கொடுத்தான்.

குலநீக்கமானவர்கள் மாடன் இறந்த செய்திக் கேட்டு தங்கள் வீட்டு இழவாக சோகமானார்கள். அவர்கள் சுடுகாட்டை நோக்கி ஓடிவர அதற்குள் மாடனை எரித்துவிட, நெருப்பை வணங்கி சுடுகாட்டு சாம்பலை எடுத்து நெற்றியில் பூசியவர்கள் குலதெய்வத்திற்கு சமமாக நினைத்து மாடனை வழிபட்டார்கள். இது எளிய மக்கள் தங்களுக்கு உற்ற துணையாக இருந்த மாடனை சாவுக்குப் பின்னும் நன்றி பெருக்கோடு நினைத்துப் பார்க்கும் கனிந்த உள்ளத்தை உணர முடிகிறது.

தாயின் பெருந்தன்மையும் காதலியின் சாபமும்

மாடன் மல்யுத்தப் போட்டியில் செத்தான் என்ற செய்தியைக் கேட்டு வல்லத்தாரை ஒப்பாரி வைத்து அழ, அவளை கவனித்த படைவீரன் ஒருவன், “போர்க்களத்தில் ஏது ஒப்பாரி. அழுகாத உன் மகன் உண்மையான வீரன். வீரனைப் பெத்தவ நீ அழுகக்கூடாது” என்று சொல்லி தெம்பூட்டியதை கண்டு எழுந்தாள். அந்தத் துக்கத்திலும் தன் மகனை வென்ற வீரனை கண் தெரியாத கோலத்திலும் பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை அரண்மனையாரிடம் சொல்ல, அவரும் அனுமதிக்க வங்காரனை தொட்டு உச்சி முகர்ந்து வாழ்த்தும் வல்லத்தாரையின் பெருந்தன்மையான குணம் யாருக்கு வரும்?

அனந்தவல்லி தன் காதலை வெளியில் சொல்ல முடியாமலும் திருமணமும் முடிக்க முடியாத குலத்திலும் பிறந்திருக்கிறோம் என்ற அச்சம் அவளிடம் இருக்கவே, மாடனிடம் தனது காதலை அவள் சொல்ல முடியாமல் பரிதவிக்கிறாள். அவளது ஆசை ஊரே திரும்பிப் பார்க்கும் வீரனை இவனுடன் ஒருநாள் பொழுதாவது வாழ்ந்தோம் என வரலாறு பேசட்டும் எனப் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய வீரனாக இருந்தான் மாடன். ஆனால் மாடனுக்கு இவள் மேல் துளியும் எண்ணமில்லை. ஒருதலை காதலாக இருக்கும் அனந்தவல்லி மாடனை மிகவும் விரும்பியதோடு அவளது ஆசை மண்ணாகிப் போனது துயரம். அனந்தவல்லி மாடனை நினைத்து தானகவே விதவைக் கோலம் பூண்டது அவளது ஆழ்ந்த காதலுக்கு எடுத்துக்காட்டு எனலாம். அதோடு மாடனை சூழ்ச்சி செய்து கொன்ற கன்னிவாடி அரண்மனை இனி தலைக்காது எனச் சாபமிட்டு தன்னிலை மறந்து கோவில் சுவற்றில் சாய்ந்த அவள் உடன்கட்டை ஏறியதற்கு சமம் எனலாம்.

அருந்ததியர்கள் குறித்த பதிவுகள்

“இறப்பு வீட்டில் சடங்கு சாஸ்திரம் முடித்து பிணத்தை தூக்கிக் கொண்டு போகையில் செம்மான் குலத்துப் பெண்கள் குலவைப் போட்டு பிணத்திற்கு முன்னால் போவார்கள்” (பக் – 289) என்ற பதிவு தற்போதும்கூட சாத்தூர் அருகே குமரெட்டியாபுரம் என்ற இடத்தில் ஆதிக்க சமூகத்தினருக்கு அங்குள்ள அருந்ததியப் பெண்கள் பிணத்திற்கு முன்னால் குலவைப் போட்டு போவதாக ஒரு தகவல் நான் அங்குப் போயிருந்த போது கேள்விப்பட்டேன். குலவைப் போட்ட பின்பு அதற்கான கூலியும் வாங்கிக் கொண்டு வருவதாக பெண்கள் சொன்னார்கள்.

“செம்மான் குலத்துக்காரங்க கூலியக் கொடுக்குறப்ப அந்து போன செருப்பத் தைக்க சொன்னா சின்ன அரண்மனையில வேலையிருக்குன்னு போவீங்க. நாங்க காட்டுலையும் மேட்டுலையும் முள் குத்தி புத்து வந்து நொண்டியடிச்சுக் கெடக்கோனுமின்னு ஏளனம் பேசியிருக்காங்க. இதனால அவங்க வருசக்கூலிய வாங்கமாம கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. இது புகைஞ்சு குடியானவனுக்கு இனி செருப்பு தைக்க மாட்டோம் செம்மான் குலத்துக்காரங்கன்னு கொடி புடிச்சாங்க” (பக் – 69) இந்தப் பகுதியை வாசித்த போது செம்மான் குலத்தினர் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் வழக்கமாக புதிய செருப்புகள் மட்டும் தைப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்றும் பழைய பிய்ந்த செருப்புக்களை செம்மான் குலத்தினர் தைப்பது இல்லை என்ற செய்தியை 10 வருடங்களுக்கு முன்பு தெரிந்து கொண்டேன். ஒருவேளை இது பன்னெடுங்காலமாக இருந்திருக்குமோ என நினைக்கிறேன். மேலே சொன்னது போல செம்மான் குலத்தினர் அந்து போன செருப்பை தைக்க மறுத்தே அவ்வாறு போயிருக்கலாம் என ஒப்பு நோக்க வைக்கிறது.

“படை வீரர்களாக வந்த வாடன் குலத்துக்கு எங்க தொழிலக் கொடுத்துட்டாங்க. கொத்தாலத்தில் தமுக்கு அடிக்க, உறுமி வாசிக்கத் தெரிஞ்ச வாடன்கள சின்ன அரண்மனையார்கள் கூப்பிட்டு மேளம் வாசிச்சாங்க”

“வாடன் கிட்ட மட்டும்தான் குடியானவன் செருப்பு தைக்கனுமின்னு புதுசா உத்தரவு போட்டிருக்காங்க”

“உங்கப்பன் காலத்துல அரண்மனை உத்தரவ ஊருல சாட்டுனது நீங்கதான். இப்ப அரண்மனை ஆளான வாடன் கிணிங்கிட்டி அடிச்சு சாட்டுறான்”

“செருப்பு, தண்ணி இறைக்குற தோல் மூட்ட வாடனிடம்தான் கொடுக்குறாங்க” (பக் – 391)

“பாண்டிய அரச படையில நாவிதன், செம்மான், தச்சன், ஏகாளி, ஏன் குசவன் குலத்தினர் கூட போர் வீரர்களாக இருந்த வரலாறு இருக்கு. நம்ம ஆட்சியில அந்தந்த குலத்தினர் அவங்க குலத்தொழில் மட்டும் செய்ய கட்டாயப்படுத்திட்டோம்” (பக் – 393) போன்ற வரலாற்றுப் பதிவுகளைப் பார்க்கும் போது செம்மான், வாடன் குலத்தை சார்ந்த அருந்ததியர்கள் பலர் அரண்மனை மற்றும் மன்னரின் படை வீரர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்களைப் படிப்படியாக மாற்று பொறுப்புகளை கொடுத்து பின்பு அவர்களை அத்தொழிலையை குலத்தொழிலாக செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்பது நிருபணமாகிறது.

ஏற்கனவே சமய நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களில் அதீத நம்பிக்கை கொண்ட நாயக்கர்கள் சூதும், தந்திரமுமாக பல குலத்தினரை படை வீரர்கள் பொறுப்பிலிருந்து விடுவித்து குலத்தொழிலாக அவர்கள் செய்ய சொன்ன வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி மனுதர்ம சாஸ்திரத்தை வலுப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு கம்பள நாயக்கர் குலத்தை ;தாண்டி இவர்களது ஆட்சியில் வேறு யாரும் நிர்வாகத்தில் இல்லாமல் மிகத் தந்திரமாக பார்த்துக் கொண்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

“அரண்மனை வீரன் செத்தால் சுடுகாடு, புதைகுழி மேடு பக்கத்தில் நடுகல் நடணும்” (பக் – 292) என்ற பதிவு இன்னும் சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி தெக்கூர் காலனியில் வசிக்கும்; அருந்ததியர்கள் உள்பட ஒருசில ஊர்களில் அருந்ததியர்கள் ஆண் பெண் என யார் இறந்தாலும் நடுகல் ஊன்றும் வழக்கம் உள்ளது. ஒருவேளை அருந்ததியர்கள் முன்பு அரண்மனைகளில் வீரர்களாக வேலை செய்து நடுகல் நட்ட பழக்கம் நாளடைவில் மருவி எல்லோருக்கும் நடும் வழக்கம் வந்துவிட்டதோ என்னவோ?

ஏற்கனவே திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் மதுரையில் கள்ளர்களின் திருட்டை ஒழிக்க மதுரைவீரன் நியமிக்கப்பட்டான். இவன் அருந்ததியர் குலத்தை சார்ந்த வீரன். இவன் இரவில் மதுரை நகரை காவல் காத்து கள்ளர்களின் திருட்டுக்கு முடிவு கட்டினான். அதேநேரத்தில் அவன் மன்னரின் மகள் மீது காதல் கொண்ட செய்தியைக் கேள்விப்பட்ட மன்னர் அவனை விசாரனை இன்றி மாறுகால் மாறுகை வாங்கி கொடூரமாக கொலை செய்தார்கள். இதுபோல் அருந்ததியர் சமூக படை வீரர்களை திட்டமிட்டு கொலை செய்தது, இழிதொழில் செய்ய சொல்லி அதை குலத்தொழிலாக்கி அவர்களை இழிபிறவிகளாக உருவாக்கிய பெருமை நாயக்கர் ஆட்சிக்கு உண்டு.

அதோடு மதுரையில் கட்டப்பட்டுள்ள திருமலை நாயக்கர் மஹால் மற்றும் அவரது அரண்மனை கட்டுமானப் பணிகளுக்காக எழுப்பட்ட பிரமாண்;ட தூண்கள் ஒவ்வொன்றின் கீழும் ரத்தபலி இட வேண்டும் என்பதற்காக அப்பாவி அருந்ததியர்களை சிறையில் அடிமைகள் போல் அடைத்து அவர்களைப் பலியிட திட்டமிட்ட சதியை மதுரைவீரன் கண்டுபிடித்ததே குற்றம் என மதுரைவீரனை சூழ்ச்சி செய்து கொன்ற இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. திருமலை நாயக்க மன்னர் சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்த செய்தி பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் தெரியவே அவரும் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது எனக் கண்டித்தாக ஒரு பதிவும் இருக்கிறது. இப்படி அருந்ததியர்களைத் தொடர்ந்து வதைத்த வரலாறு நாயக்க மன்னர்கள், அரண்மனைகளின் ஆட்சிக் காலத்தில் உண்டு.

அதேநேரத்தில் மதுரைவீரன் அருந்ததியரே கிடையாது. அவன் கள்ளர் குலத்தை சேர்ந்தவன் என வரலாற்றை திருகியும் எழுதியுள்ளார்கள். இது ஒரு வீரன் எப்படி அருந்ததியராக இருக்க முடியும்? ;என்று நினைத்தார்களா? அல்லது அக்குலத்தில் வீரன் இருக்கவே கூடாது என நினைத்தார்களா? எனத் தெரியவில்லை.

அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். வந்தேறிகள், தெலுங்கு, கன்னடம் பேசும் இவர்கள் தமிழர்கள் அல்ல என்ற கருத்து நிலவுகிறது. இது சரியானது அல்ல. இன்னும் ராமநாதபுரத்திலிருக்கும் அருந்ததியர்கள் பலருக்கு தெலுங்கு வீட்டு மொழியாகக்கூட பேசத் தெரியாது. அவர்கள் தமிழ் மட்டுமே பேசுவார்கள். அதோடு பெரும்பாலும் ஆட்சியாளர்கள் என்ன மொழி பேசினார்களோ அம்மொழியை பலரும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. பெரும்பாலும் இவர்கள் படைகளில் பணி செய்ததால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை கற்க வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளானார்கள். அதனால் அவற்றை வீட்டு மொழியாக மட்டும் பேசிக் கொள்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலானாவர்கள் பேசும் தெலுங்கு மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செஞ்சிக் கோட்டையை ஆண்ட துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் அரசு, தில்லி சுல்தானிடம் வீழ்ந்தது. நாயக்கர் படைவீரனாக இருந்த வாடன் குலத்தில் பிறந்த சம்பையன் என்ற வீரன் தனது படைப் பிரிவை வைத்து செஞ்சிக் கோட்டையில் குளம் ஒன்றை வெட்டினான். அந்தக் குளம் அவனது பெயரிலேயே சம்பை சக்கிலியன் குளம் எனப் பெயர் பழங்கியது வரலாற்றுப் பதிவு. அதேபோல செஞ்சிக் கோட்டையில் தோல் நாணயங்கள் செய்யும் பணியை அருந்ததியர்களே செய்து வந்தார்கள் என்ற பதிவும் அருந்ததியர்கள் முன்பெல்லாம் கவுரவமான வேலைகளையே செய்திருக்கிறார்கள் என்று புலனாகிறது.

சடங்குகள் சமயப் பின்புலமே

ராமன் மாடனுக்கு நாவித தொழிலைப் பற்றி சொல்லும் போது இறப்பு வீட்டில் தேரை தூக்கிக் கொண்டுப் போகும் போது ஏன் கோவிந்தா… கோவிந்தா… எனச் சொல்கிறார்கள் என நான் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் நமக்கு முன்னால பெரியவங்க சொன்னாங்க. நாமளும் சொல்றோம் எனச் சொன்னார்களே தவிர உண்மையான காரணம் அவர்களுக்கும் தெரியவில்லை. அதன் உண்மையான காரணம் இக்கதையை வாசித்த போது தெரிந்து கொண்டேன். அதோடு துளசி, பிரண்டைச் செடி ஏன் சுடுகாட்டில் பங்காளிக்ள சேர்ந்து நட்டு வைக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். அப்போது தான் நாம் பெருமாள் சாமி கும்பிடுவதாகவும் நாமம் போடுவோம் என வீட்டில் பெரியவர்கள் சொன்னது நி;னைவுக்கு வந்தது. இது வைணவ சமய பின்புலம் கொண்டது எனத் தெரிந்தது.

கவ்வை குறித்த என் அனுபவம்

கவ்வை கொண்டு முள்ளைக் குத்தி தூக்கிக் கொண்டுவரும் திறமை எல்லோருக்கும் இருக்காது. அதற்கென திறன் வேண்டும். ஒரு பெரிய லாரியில் பொதியை கட்டித் தூக்கி வருவது போல ஓராள் தலையில் கவ்வையில் முள்ளை சொருகி தூக்கிக் கொண்டு வருவதை நானே சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். இதை தொழிலாளகவே செய்து வந்த ஒருவர் ஏகாளி சமூகத்தைச் சார்ந்தவரே. அவர் கவ்வை முள்ளை தூக்கிக் கொண்டு எதிரே நடந்து வரும் ஆட்களின் மீது முள்பட்டு குத்திவிடாமல் ஒதுங்கி நடக்கும் போது ஓரத்திலிருக்கும்; வேலி கருவைமுள் செடிகளில் கவ்வை முள் சிக்கித் திணரும் போது அதை லாவகமாக அங்கிட்டும்;; இங்கிட்டும் மெல்ல சுற்றி மீண்டும் வேர்க்க விருவிருக்க நடையை கட்டுவார். ஒரு கவ்வை முள் வாங்கினால் மூன்று மாதங்களுக்காவது விறகு பஞ்சம் இருக்காது. அப்போதெல்லாம் சிலிண்டர் என்ற வார்த்தையை கிராமங்களில் அதிகம் உச்சரிக்காத அல்லது கேள்விப்பட்டிராத சமயம். அதேபோலவே இக்கதையிலும் வரும் ஏகாளி சமயன் கவ்வையை வைத்து முள்ளைத் தள்ளி வெள்ளாவி வைத்ததை குறிப்பிடும் போது இந்நிகழ்வு எனக்குள் நிழலாடியது. இன்றைக்கு அப்படியொரு வார்த்தையை இதுபோன்ற படைப்புகளின் வழியாகத்தான் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிதிருக்கிறது.

அதுபோல நான் சிறுவயதில் களி கிண்டும் போது சிறிய கவ்வை கட்டையைப் பார்த்திருக்கிறேன். அதை காலின் இரு பெரு விரல்களுக்கிடையில் வைத்து பானையில் சாத்தி வைத்துக் கொண்டு பனை மட்டையை வைத்து களி கிண்டும் அழகே தனி. பெரும்பாலும் எங்கள் வீட்டில் இரவு நேரங்களில்தான் கேப்பை களி கிண்டியதைப் பார்த்திருக்கிறேன். பக்குவமாக கிண்டாவிட்டால் சிறு சிறு கட்டிகளாக சேர்ந்து உள்ளே மாவு அப்படியே இருக்கும். களியை சூடாக சாப்பிட்டால்தான்; ருசியாக இருக்கும். கவ்வை என் சிறுவயது நினைவுகளை சுளுந்தீ வழியாக கண்முன் கொண்டு வந்தது.

இட்லி யார் உணவு?

தமிழர்களின் பாரம்பரிய உணவு என இட்லியை ஐ.நா. சபை அங்கீகரித்து அதையே சிறந்த உணவு என அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் இட்லி தமிழரின் உணவே இல்லை. அது வியபாரம் செய்ய வந்த வடநாட்டு ரெட்டியர்களின் புதிதாக வியபாரத்தின் வழியாக அறிமுகப்படுத்திய உணவு என அரிய வரலாற்றை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய பொய்யான அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கிறோம்? புதிதாக வந்த இட்லிக்கு ஆசைப்பட்டு தங்களின் நிலத்தை இழந்ததும், அதனால் ரெட்டிகள் இங்கு நிலவுடைமையாளர்களாக மாறியதும் புரிந்து கொள்ள முடிகிறது.

வரலாற்றுக் குறிப்புகள்

முன்பெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாத போது ஏட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மக்களிடம் அவர்களின் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கலாச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகள், சட்டங்கள், வழக்கங்கள் என ஒவ்வொன்றையும் மக்களோடு உறவாடி புலவர்கள், குலகுருக்கள் எழுதி வைத்தது பின்னாளில் நாம் படித்து தெரிந்து கொள்ளும் வரலாறாக மாறியிருக்கிறது. இது பெரும்பாலும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான தகவல்களைத்தான் பதிவு செய்திருக்கிறதே தவிர மிகக் குறைவான தகவல்களே ஏழை எளிய மக்களின் பாடுகளை பதிவு செய்திருக்கிறது. அதற்கு சுளுந்தீ போன்ற கதைகளே சாட்சி.

குடிமக்களிடம் விளைச்சலுக்கு ஏற்ப வரி வசூலிக்க வரும் அரண்மனை பண்டாரம் போன்றவர்கள் குடிமக்களிடம் அதிகார மிடுக்கோடு நடந்து கொள்ளும் போது விளைச்சல் இல்லையென சொன்னாலும் கெடுபிடியோடு நடந்து கொள்ளும் போக்கு இன்று விவசாயிகளிடம் அரசும், அதிகாரிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என அனைவரும் கெடுபிடியாக நடந்து கொள்ளும் நிகழ்வுதான் நம் கண் முன்னே வந்து செல்கிறது.

இறுதியாக

சுளுந்தீ நாவலில் ஏராளமான வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கியிருக்கிறது. திண்டுக்கல்லில் மாட்டுத் தோல் பட்டறைகள்; உருவான விதம், சேதுச் சீமையில் உவர் நீரில் புகையிலை பயிரிட்டதை நுணுக்கமாக கற்று வந்து கன்னிவாடி எல்லையிலும் பயிரிட்டு பின்பு புகையிலை புகைக்கும் பழக்கம் இப்பகுதி மக்களிடையே பரவிய கதை. அக்காள் மடம், தங்கச்சி மடம் வரலாறு, சைவ-வைணவ மதப் பூசல்களால் குடிமக்களிடையே உருவான கலவரங்கள், சவரக்கத்தியால் குறும்பர்களின் இராஜியத்தை வீழ்த்திய வரலாறு. நாவிதர்களும் அரண்மனை வீரர்களாக வலம் வந்த கதை. நாவீதர்கள் மீது அரண்மனையார்கள் காட்டும் கரிசனத்திற்கான விடை. மக்களிடையே உள்ள பழக்க வழக்கங்கள் போன்றவை நமது பண்பாட்டுக் கூறுகளை பல உள்ளடக்கிய வரலாற்று ஆவணமாக சுளுந்தீ இருக்கிறது.

நாமெல்லாம் பள்ளிகளில் வழக்கமாக வெள்ளையர்கள் ஆட்சி செய்ததை விரிவாகப் படித்திருப்போம். அதே நேரத்தில் உள்ளுர் மன்னர்கள், அரண்மனையார்கள், ஜமீன்கள் ஆண்ட வரலாற்றை அவ்வளவாக நாம் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்றே நினைக்கிறேன். பெரிய பேரரசுகள், மன்னர்கள் ஆண்ட கதைகளைத் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்குக் கீழ் சிறு, குறு சிற்றரசர்;களாக ஆண்டவர்களின் வரலாறு, அவர்களின் பின்னணி, அப்போதைய அரசியல் நிலவரங்கள், மக்களின் மனநிலை ஆகியவற்றை மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்நாவல். இந்நாவலை நீண்ட களப்பணி மற்றும் தேடலுக்குப் பின் நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கும் இதன் ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களுக்கு என்றும் எழுத்துழகில் நீங்காத இடம் உண்டு. இத்தகைய அரிய படைப்பை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்குப் பாராட்டுகள்…!


மு.தமிழ்ச்செல்வன்


நூல் : சுளுந்தீ

ஆசிரியர்: முத்துநாகு

பதிப்பகம் : ஆதி பதிப்பகம்

விலை : ₹450

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.