துப்பறியும் பென்சில் – 8

துரத்தல்

 

“டேய், ராமு! பெட்டி கவனம்.”  என்று கூறிய சுந்தராஜன், தன் பைக்கை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து இடது புறமாகத் திரும்பி வேகமாக வண்டியை ஓட்டினார்.

“சரிங்க, முதலாளி! நீங்க சீக்கிரம் வண்டியை ஓட்டுங்க. அந்த போலீஸ்காரங்க மோப்பம் பிடிச்சு வர்றதுகுள்ள பாப்பாவை கூட்டிட்டு வந்திடுவோம்.”

வண்டி வேகமெடுக்க, பாலத்தைக் கடந்து,  அம்பிகா தியேட்டரை நெருங்கியது. ராமு பெட்டியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது இவர்களின் ஹீரோ ஹோண்டா பைக்கை உரசியபடி ஆட்டோ ஒன்று குறுக்கே வந்தது. சுந்தராஜன் வண்டியைத் தடுமாறி ஓட்டினார்.

இவர்களை அடுத்துவந்த வேகன் ஆர் காரின் ஓட்டுநர், “ ஏம்பா இடது பக்கம் போக வேண்டியது தானே. இப்படித் தள்ளாடி ஒட்டினா வண்டியில் அடிபட்டு செத்துப் போயிடுவீங்க”  என எச்சரித்துச் சென்றார்.

இராமு பெட்டியை மட்டுமல்ல உயிரையும் கெட்டியாகப் பிடித்தபடி சென்றார்.

“முதலாளி! உங்க போன் அடிக்குது. போனை எடுத்துப் பேசுங்க.” என்றார் இராமு.

சுந்தராஜன் அவசரமாக வண்டியின் வேகத்தைக் குறைத்து , சாலையின் இடது ஓரத்தில் வண்டியை நிறுத்தினார்.

“ஹலோ! சொல்லுங்க”

“நாங்க மாட்டுத்தாவணியில் இல்லை. அங்கே போலீஸ் அதிகமா இருக்கு. உங்க போனை ஒட்டுக் கேட்கிறாங்க. நீங்க இப்ப பால் பண்ணை சிக்னல் வந்து, அப்படியே பெரிய பாலம் வாங்க. ஆன் த வேயில் நாங்க சொல்ற இடத்தில் பெட்டியை வச்சுட்டு போங்க..”

“ நீங்க சொல்றபடி பணத்தை வச்சுடுறேன். என் குழந்தைகள்…?”

“பத்திரமா வீட்டுக்கு வந்து சேருவாங்க.  பணம் வாங்கின அடுத்த நிமிடம் வீட்டில் குழந்தைகள் இருப்பாங்க.”

“ காசு வாங்கிட்டு ஏமாத்திட மாட்டீங்களே!”

நாங்கள் ஏமாற்ற போலீஸ் இல்லை என்று கடத்தல்காரர்கள் செல்போனை கட் செய்தனர்.

சுந்தராஜன் அண்ணாநகர் சாலையில் தொடர்ந்து சென்று, மேலமடை சிக்னல் இடதுபுறம் வண்டியைத் திருப்பி, பால்பண்னையை நோக்கி வண்டியை முடுக்கினார்.

சப் இன்ஸ்பெக்டர் துரையின் போன் ஒலித்தது. கமிஷனர் அவருடன் தொடர்பில் வந்திருந்தார்.

“சார்! அவுங்க பயர்வால்ஸ் உடைக்க முடியலை. நல்ல ஸ்டாராங்க இருக்கு. அவுங்க லொக்கேசன் கண்டுபிடிக்க முடியலை. திண்டுக்கல், மதுரை, மும்பை, லண்டன் என மாறிமாறிக் காட்டுகின்றது. ஹேக்கர் இரண்டுபேரை வரச் சொல்லியிருக்கோம்.”

“அவனுங்க அப்ப மதுரைக்குள்ளே தான் இருக்கானுங்க. நம் ஒவ்வொரு செயலும் அவர்களுக்கு தெரிகின்றது.”

“சார்! சீருடையில் உள்ள  போலீஸ் வேண்டாம். மப்டியில் பாலோ பண்ண சொல்லுங்க”

“சரி. வேறு எந்த தகவல் இருந்தாலும் உடனே அப்டேட் பண்ணுங்க.”

 

ஜீப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கமிஷனர் லைனை துண்டித்தார்.

இன்ஸ்பெக்டர் காந்திராஜனை போனில் அழைத்தார்.

“நீங்க மாட்டுத்தாவணியில் இருக்கும் போலீஸ் போர்ஸ்சை வாபஸ் வாங்குங்க.”

“இந்த ஆப்ரேசனுக்கு நியமித்துள்ள பத்து சப் –இன்ஸ்பெக்டர்களை மப்டியில் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில்  வாட்ச் பண்ண சொல்லுங்க.”

“ஓகே சார். எனக்கு அவுங்க மதுரைக்குள்ளேயே நம்ம சுத்த விடுற மாதிரி இருக்கு.”

“ஆமாம். நீங்க சொல்றதும் சரிதான். இனி அவரை ரெம்ப க்ளோசா அப்சர்வ் பண்ண வேண்டாம். ஒவ்வொரு சிக்னலா வாட்ச் பண்ணுவோம். தூரமா ஒவ்வொரு பீட்டா மப்டியில் ஆட்களை அனுப்பி ஃபாலோ பண்ணச் சொல்லுங்க.”

காசிராஜன் சப் – இன்ஸ்பெக்டர்கள் அனைவரையும் அழைத்தார்.

லா காலேஜ் ஏரியா, ரேஸ்கோர்ஸில் இருந்து புதூர் செல்லும் வழி, தாமரைத்தொட்டி ஏரியா, கலெக்டர் ஆபீஸ் ரோடு, நத்தம் ரோடு, பிடிஆர் பங்களா ரோடு, ஆனையூர் டூ செல்லூர் ரோடு, அலங்காநல்லூர் ரோடு, செல்லூர் பாலம் ரோடு, மீனாட்சி காலேஜ் ரோடு என ஆட்கள் குறைவாக நடக்கும் பத்து ஏரியாவில் மப்டியில் ஆட்களை நிறுத்தி சுந்தராஜனின் வண்டியை கண்காணிக்கச் செய்தார்.

சுந்தராஜன் பால்பண்ணை சிக்னல் அருகில் நின்றிருந்தார். அவர் வருவதற்காகவே சிக்னல் காத்திருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.  அவரை மறைத்தபடி இருபுறமும் ஆட்டோ வந்து நின்றது. மூன்றாவது ஆட்டோ அவரின் வண்டி பின்னால் நின்றது. அவர் வண்டிக்கு முன்பாக மற்றொரு ஆட்டோ வந்து நின்றது. ஆக, சுந்தராஜனின் வண்டி பிறர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டது.

ஆட்டோவில் இருந்த க்ரைம் இன்ஸ்பெக்டர் ரவி ராமுவை வண்டியில் இருந்து இறங்கும்படி கேட்டுக் கொண்டார். ராமு பெட்டியை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து இறங்கினார். ஆனால், சுந்தராஜன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர் நடுரோடு என்றும் பாராமல் போலீசாரின் காலில் விழுந்தார்.

“சார்! மன்னிச்சுடுங்க. அவனுங்க இங்கிருந்து கண்காணிக்கிறாங்க. இல்லைன்னா என்னை இப்படி சுத்த விடுவானுங்களா? தயவு செய்து  உங்களுக்குப் புண்ணியமா போகட்டும். எங்களை நிம்மதியா விடுங்க. பணத்தைக் கொடுத்து குழந்தைகளை மீட்டதுக்கப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்யுங்க.”  என சுந்தராஜன் மறுத்தார்.

“சார்! சுந்தராஜன் ஒத்துழைக்க மாட்டீங்கறார். நாங்க என்ன செய்ய?”  என போன் மூலம் போலீசார் அடுத்த நடவடிக்கைக்கு ஆலோசனைக் கேட்டனர்.

“சரி. அவர் இஷ்டத்துக்கு விடுங்க. தூரமா ஒருத்தர் மட்டும் வாட்ச் பண்ணுங்க. அடுத்த பீட்டில் மற்றொருவர் அவரை வாட்ச் பண்ணுவார்.”  என காந்திராஜன் போனைக் கட் செய்தார்.

மக்கள் எதுபற்றியும் கவலை கொள்ளவில்லை. சிக்னல் விழவில்லை என்பதால் ஹாரனை ஓங்கி அழுத்தினார்கள்.  சிக்னல் விழுந்தது. சுந்தராஜன் வேகமாக வண்டியை முடுக்கி மாட்டுத்தாவணி நோக்கி செலுத்தினார்.

வக்போர்டு காலேஜ் அருகில் வந்த போது, சுந்தராஜனின் போன் ஒலித்தது.  அவர் போனை ஆன் செய்து பேசினார்.

“ஹலோ”

“வெரிகுட். போலீஸ்காரங்களை வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லுங்க. அண்ணாநகர் போலீஸ் ஸ்டேசன் தாண்டியதும், இந்து பத்திரிக்கை ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து ஓய்வு எடுங்க.”

சுந்தராஜன் வண்டியில் இருந்து இறங்கி, பின் தொடர்ந்து வந்த ஆட்டோவிற்கு சென்றார்.

“பார்த்தீங்களா, இப்ப நீங்க என்கிட்ட பேசினது கூட அவனுங்களுக்கு தெரியுது. தயவுசெய்து காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். என்னை பாலோ பண்ணி வராதீங்க”

போலீஸ்காரர்கள் பதில் ஏதுவும் சொல்லாமல் ஆட்டோவில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

“துரை. எல்லா டிராபிக் கேமிராவையும் செக் பண்ணுங்க. சுந்த்ராஜன் வண்டியை பாலோ பண்ணி எந்த வண்டியாவது வருதான்னு பாருங்க. சந்தேகப்படும்  வண்டி எதுவும் வந்தா, அந்த வண்டியை அடுத்த சிக்னலில் மடக்கி விசாரிக்கச் செல்லுங்க”   எனக் காசிராஜன் கட்டளை பிறப்பித்தார்.

உடனே துரை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு வண்டி நம்பர்களைக் கூறினார். அவர்களில் ஒருவர் அண்ணா பேருந்து நிலயம் அருகில் நிறுத்தப்பட்டார். மற்றொருவர் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேசன் அருகில் நிறுத்தப்பட்டார்.  ஆனால், அவர்கள் எதார்த்தமாக சாலையில் பயணித்தவர்களாக இருந்தார்கள்.

சுந்தராஜனின் செயல் கவனிக்கப்படுகின்றது என்பதை போலீசார் உணர்ந்து கொண்டனர்.  குழந்தைகளின் உயிருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என முடிவெடுத்தனர். உடன் செல்லும் அத்தனை போலீசாரும் வாபஸ் வாங்கப்பட்டனர்.

போலீஸ் கமிஷனருக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்து ஆபீஸ் அமைதியான இடம் தான். ஆனால், பக்கத்தில் போலீஸ் ஸ்டேசன் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாதா, ஏதோ திட்டத்தில் உள்ளனர் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது.

அண்ணா நகர் ஸ்டேசன் பரபரப்பானது. வெளியில் போலீஸ் எவரும் இல்லை. அவர்கள் சிசிடிவி கேமிரா வழியாக பேருந்து நிலையத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

சுந்தராஜன் சொன்னபடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அவர் அருகில் ராமு பணப்பெட்டியுடன் நின்றிருந்தார். பத்து இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது. ரோட்டில் வாகனங்கள் கடந்து சென்றன. 3 ஆம் நம்பர் பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்து ஆட்களை இறக்கி விட்டுக் கடந்து சென்றது. பேருந்தின் முன் பக்கமாக இருவர் இறங்கினார். அவர்களில் ஒருவர் ராமு அருகில் வந்து நின்றார்.

காவல் நிலையத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தனது கைத்துப்பாக்கியை லோட் செய்து தயாரானார். ஆனால், அவர் பையில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து எதோ பேசினார். அதன்பின் , அவர் போலீஸ் ஸ்டேசன் நோக்கி நடந்தார். ஒரு கான்ஸ்டபிள் ஓடிச் சென்று அவரை ஸ்டேசனுக்குள் அழைத்து வந்தார்.

பேருந்தில் இருந்து இறங்கிய நபர் மல்லிகை அப்பார்ட்மெண்ட் எங்கிருக்கிறது என விசாரித்ததாகக் கூறினார்.

சுந்தராஜனும், ராமுவும் சோர்ந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர். இராமு பெட்டியை ப்ளாட்பாரத்திலேயே வைத்தார். சுந்த்ராஜன் பெட்டியைக் கையில் வைத்திருக்கும்படி கூறினார். அப்படி வைத்தால் திருடர்கள் எளிதில் எடுத்துச் சென்றுவிடுவார்கள். குழந்தையும் கிடைத்துவிடும் என்று ஆறுதல் கூறினார் இராமு.

இரண்டு மணி நேரமாக அமர்ந்திருந்த சுந்தராஜனுக்கு எரிச்சல் வந்தது. போலீஸ் மீது கோபம் வந்தது. போலீசார் தொடர்வதால் தனது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பதறினார். பணம் கொடுப்பது குறித்து எந்தவித கவலையும் அவர் படவில்லை.

“ராமு! பணம் போனா சம்பாதிச்சிடுவேன். ஆனா, குழந்தைகள்? என் மனைவிக்கு பதில் சொல்லமுடியாது. குடும்பமே சின்னாபின்னமாகிவிடும். குழந்தைகள் இல்லாத வாழ்க்கை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படி எதுவும் ஆனா நானும், அவளும் தூக்குபோட்டுக்குவோம்.”

“அப்படி எல்லாம் நடக்காது முதலாளி. அதான் போலீஸ் போயிட்டாங்களே. குழந்தைகளோட தான் வீட்டுக்குப் போவோம்.”

“எனக்கு நம்பிக்கை இல்லை.”

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க முதலாளி.”

சுந்தராஜன் மிகவும் சோர்ந்து அமர்ந்து கொண்டார். மணி 11 எனக் காட்டியது.  இருவரும் காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை.

“ராமு! நீங்க சுகர் பேஷண்ட் ஆச்சே. வாங்க கோர்ட் பக்கத்தில் போய் டீ சாப்பிட்டு வருவோம்.”

இராமு மறுபேச்சு எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தார்.

இருவரும்  கோர்ட்டுக்கு எதிரில் இருக்கும் சரவணபவன் ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

போலீசாருக்கு பெரும் குழப்பமாக இருந்தது. போனும் வரவில்லை. எவரும் அருகில் சென்று எதுவும் கூறவில்லை. இவர்கள் எங்கே செல்கின்றனர் என ஆச்சரியத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

“சார் தோசை மட்டும் தான் இருக்கு.” என்றான் சர்வர்.

இருவரும் தோசை சாப்பிட்டு பில் கொடுத்து வெளியில் வந்தனர்.

போன் ஒலித்தது.

” ஹலோ! சொல்லுங்க. எங்க வரனும்?”

“வெரிகுட். இப்படி தான் குழப்பம் இல்லாமல் சாப்பிட்டு தெம்பா இருக்கணும். இன்னும் உங்களை போலீஸ் கண்காணிக்குது. நீங்க அடுத்து வர்ற பங்க்கில் பெட்ரோல் போட்டு வண்டியை நிரப்பிக்கங்க.  அழகர் கோவில் நோக்கி மெதுவா வாங்க. ஆள் இல்லாத இடத்தில் பணத்தை வாங்கிக் கொள்கின்றோம்.”

காந்திராஜன் பதறினார். அப்பன் திருப்பதி ஸ்டேசனுக்கு போன் செய்து மப்டியில் போலீஸ் அலர்ட்டாக இருக்க கூறினார். புதூர் மப்டி போலீசை சூர்யா நகர் தாண்டி நிற்கும்படி கட்டளை பிறப்பித்தார்.

சுந்தராஜன் ரோஸ்கோர்ஸ் சாலையின் இடதுபுறம் திரும்பி, தாமரைத் தொட்டி சிக்னல் சென்று, ரைட் எடுத்து புதூர் ரோட்டை பிடித்தார். ஏறக்குறைய போலீஸ்காரர்கள் அவரைப் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.

அவர்கள்  நிச்சயமாக பகலில் பணம் பரிமாற்றம் செய்யப் போவதில்லை என போலீசார் முன்முடிவுக்கு வந்திருந்தனர். அப்படியே பணத்தை பரிமாறிக் கொண்டாலும் பரவாயில்லை என்று இருந்தனர்.

அழகர் கோவில் மலை அடிவாரம் வரை சென்ற சுந்தராஜன் அங்கு ஒருமணி நேரம் காத்திருந்தார்.  போன் வரவில்லை என்பதை அறிந்து கொண்ட சுந்தராஜன் அவராகவே அலங்காநல்லூர் ரோட்டை பிடித்து , ஊமச்சிக்குளம் வந்தார். அப்போது மணி ஐந்து ஆகியிருந்தது.

அவர், ஊமச்சிக்குளம் போலீஸ் ஸ்டேசன் அருகில் உள்ள காப்பி கடையில் வண்டியை நிறுத்தினார். இருவரும் கடையில் சப்பாத்தி வாங்கிச் சாப்பிட்டார்கள். சீனி போடாத டீயை இருவரும் குடித்தனர்.

சுந்தராஜன், கடை மேஜையில் கிடந்த  மாலை செய்தித்தாள்களை  எடுத்து  படித்தார். அவர் மகள் குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை. மகள் கடத்தப்பட்ட சம்பவம் இன்னும் வெளிவரவில்லை என்பதால் மகிழ்ச்சியாக இருந்தார். இன்று எப்படியாவது பணத்தைக் கொடுத்து குழந்தைகளை அழைத்துவர வேண்டும் என முடிவெடுத்திருந்தார். மணி எழு என கடிகாரம் காட்டியது.

சுந்தராஜன் வண்டியை எடுத்துக் கிளம்பினார்.

“எங்க முதலாளி.?”

“வேறு எங்க நம்ம வீட்டுக்குதான்?”

“முதலாளி! இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். போலீஸ் ஃபாலோ பண்ணலன்னு தெரிஞ்சா …அவுங்க வந்து பணத்தை வாங்கிட்டு குழந்தைகளை அனுப்பிடுவாங்களே!”

“எனக்கும் ஆசைதான். இந்த போலீஸ் தொல்லை எனக்கே பிடிக்கலை. அவுங்க எப்படி பொறுத்துக் கொள்வாங்க”

வண்டி ஐயர்பங்களா தாண்டியது.

போன் அலறியது.

“ பாவம்! நீங்க பணம் கொடுக்க தயாரா இருந்தாலும் போலீஸ்காரங்க விடமாட்டீங்கிறாங்க.  உங்க குழந்தைகள் சாப்பிடமாட்டேன்கிறாங்க. நீங்க ஒரு வார்த்தை பேசுங்க.”

“டாடி..!”

சுந்தராஜன் அழ ஆரம்பித்தார்.

“முதலாளி. அழாதீங்க.!”

“அப்பா! சீக்கிரம் பணம் கொடுத்துக் காப்பாத்துப்பா”

“சரிப்பா! நீங்க சாப்பிடுங்க. அவசியம் நான் எப்படியாவது உங்களைக் காப்பாத்திடுவேன். “

“சரி! நாளைக்கு காலையில் போன் செய்கிறேன். நீங்க இப்ப வீட்டுக்குப் போகலாம்”

“சார். இல்லை. இன்னைக்கு எப்படியாவது பணத்தை வாங்கிக்கங்க. குழந்தைகளை விட்டுடுங்க.”

“உன் குழந்தைகளுக்கு எதுவும் வராது. பயப்படாதே. சரி இரவு உணவு சாப்பிட்டு வீட்டுக்குப் போங்க. நாங்க முடிஞ்சா பணத்தை கலெட் பண்ணிட்டு குழந்தைகளை அனுப்பிடுறோம்.”

இப்போது போலீஸ் சுதாரித்தது.  கடத்தல்காரர்கள் இன்னும் மதுரையில் தான் இருக்கின்றார்கள். இரு குழந்தைகளும் ஒரே வண்டியில் இருக்க வேண்டுமானால், மாருதி வேன் அல்லது வேன் டைப்பில் உள்ள வேறு வண்டியாக இருக்க வேண்டும்.  கமிஷனர் காலையிலிருந்து மாலை வரை எல்லா சிக்னலிலும் கடந்த மாருதி வண்டி எண்ணை குறித்து, தகவல் சேகரிக்கச் சொன்னார்.

“சார்! நம்ம சிட்டி கேமிரா சர்வரை சென்னையில் இருந்து யாரோ ஹேக் பண்ணி பார்த்திருக்காங்க. அந்த ஐபி அட்ரஸ் செக் பண்ணுறோம்” எனத் துரை தகவல் கொடுத்தார். இதன் மூலம் கடத்தல்காரர்கள் மிகவும் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கான ஆட்களாக இருக்கின்றார்கள்.

போலீசுக்கு இருக்கும் ஒரு குழப்பம், இவ்வளவு ஸ்ட்ராங்கனா ஒரு கும்பல் ஏன் இவரை செலக்ட் பண்ணியது.

பணம் இவரிடம் உள்ளதை கடத்தல்காரர்கள் அறிந்து வைத்துள்ளனர். எப்படி? யார் இவர்களுக்கு உதவுவது?

குழப்பமும் சிக்கலும் நிறைந்த இந்த கேஸ் எப்போது முடிவடையும். இதில் யார் தான் வெற்றி காண்பார்கள். போலீஸ் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினால், குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடுமா என ஏடிபிசி யோசித்துக் கொண்டிருந்தார்.

சுந்தராஜன் ஒன்பது மணி வரை கோரிப்பாளையம், ரிசர்வ் லைன் பகுதியில் இருப்பது என முடிவெடுத்து. தல்லாகுளம் அசோக் பவன் அருகில் வண்டியை நிறுத்தினார். சுந்தராஜன் பால் மட்டும் குடித்தார். ராமு வழக்கம் போல் தோசை பெற்றுக் கொண்டார். சுகர் இல்லாத டீ குடித்தார். இருவரும் மிகவும் சோர்வாக இருந்தனர். மணி ஒன்பது ஆனது.

சுந்தராஜன் வண்டியை பாண்டியன் ஓட்டல் வரை செலுத்தினார். அதன்பின் திடீரென்று நிறுத்தினார். எதிரே இருந்த ஈவினிங் கல்லூரி பூட்டி இருந்தது.  கல்லூரி முன்பு எவரும் இல்லை. அங்கே வண்டியை நிறுத்தினார்.

புதூரை காண்பித்து இந்த பக்கம் கமிசனர் ஆபீஸ், அந்த பக்கம் கோர்ட்டு, அப்புறம் அண்ணாநகர் போலீஸ் ஸ்டேசன், அதனால் கடத்தல்காரர்கள் ஆள் இல்லாத காந்தி மீயூசியம் ரோட்டில் இருந்தாலும் இருக்கலாம் என தனக்கு தானே பேசி முடிவெடுத்து வண்டியை முடுக்கினார். இராமு மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.

போலீஸ்காரர்கள் மிகவும் சோர்ந்து பின் தொடர்வதை நிறுத்தி இருந்தனர்.  சுத்தமாக மறந்து போய் இருந்தனர்.

வண்டி ராஜா முத்தையா மன்றம் வழியாக மெதுவாகத் திரும்பி , சட்டக் கல்லூரியை வந்தடைந்தது. அதற்குப்பிறகான சாலை ஒரே இருட்டாக காணப்பட்டது. காந்தி மியூசியம், பார்க் முருகன் கோவில் அருகே மங்கலான வெளிச்சம் தெரிந்தது. சுந்தராஜன் நீச்சல் குளம் அருகிலிருந்த ஸ்பீடு பிரேக்கில் வண்டியை ஏற்றி இறக்கினார். இராமு பெட்டியுடன் தடுமாறினார்.  சுந்தராஜன் வண்டியை நிறுத்தினார்.

நீச்சல் குளம் வளைவில் இருட்டிலிருந்த மாருதி காரின் ஹெட் லைட் எரியத் தொடங்கியது.  ஒரு வேன் ஸ்டார் செய்து புறப்படத் தயாராக இருந்தது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் இவர்களை நோக்கி வீசியது.

“சார்! இந்த போலீஸ்காரங்க எங்கே போனாலும் விட மாட்டாங்க போல் தெரிகிறது. இது நல்ல இடம். ரூபாய் கொடுத்தால் யாருக்கும் தெரியாது. குழந்தைகளையும் பத்திரமா பெற்றுக் கொள்ளலாம்.”  என்றார் இராமு.

“எனக்கு மட்டும் ஆசை இல்லையா?”

வேனில் இருந்து இறங்கி வந்த ஒருவன் இவர்கள் அருகில் வந்து, “ திருப்பத்தில் பெட்டியை வைத்துவிட்டு சென்றுவிடுங்கள். குழந்தைகள் போன் செய்வார்கள். அவர்களை வந்து அழைத்துக் கொள்ளுங்கள்”   என்றான்.

சுந்தராஜனுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மற்றொரு புறம் போலீஸ் யாரும் பின் தொடர்ந்து வந்து காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது என ஆயிரம் கடவுள்களை வேண்டினார்.

சுந்தராஜன் வண்டியை மிகவும் மெதுவாக ஓட்டினார். வேனைத்தாண்டி பெண்குழந்தைகள் ஆஸ்டல் அடுத்த காந்திமியூசியம் திருப்பத்தில் பெட்டியை வைத்தார். அவர் கொஞ்சம் தயங்கி நின்றார்.

வேன் வெளிச்சம் இன்றி புளியமரத்தின் பின்புறம் இருந்து வெளியே வந்து திரும்பியது. வேனின் உள்ளே இரு குழந்தைகளும் கைகள் கட்டப்படு, வாயில் ப்ளாஸ்டர்  ஒட்டப்பட்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முதுகில் துப்பாக்கியால் ஒருவன் அழுத்திப் பிடித்திருந்தான்.

சுந்தராஜன் எதிர்புறம் பார்த்தார். காந்திமியூசியம் வாசல் அருகில் எவரும் இல்லை. இவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு, குழந்தையை ஒப்படைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வண்டியை நகர்த்தினார்.

 

சுந்தராஜனின் செல்போன் ஒலித்தது. பின்னால் வந்த வேன் ஹைட்லைட்டை ஆப் செய்து நின்றது.

தொடரும்..


-க.சரவணன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.