1)இதய வடிவ பலூன்.
வெறுங்காலுடன்
மலையுச்சியை அடைந்தது
சிரமம் தான் என்றாலும்
உயரப்பறக்கும் இதய வடிவிலான பலூன்
கையிலிருந்ததால்
பெரிதாய் ஏதும் அயற்சியில்லை
அல்லது
அது கூட இங்கு
தூக்கிக்கொண்டு வந்திருப்பதாய்
கற்பனை செய்துப் பார்க்கலாம்
இதயத்தையும் கிட்டத்தட்ட
அந்த
பலூனைப்போல
பரிசளிக்க நினைத்தால்
அடிவாரத்திலிருந்தா கையை நீட்டுவது.
2)கடகம்.
உலக புன்னகை தினம் என்று
ஒன்று இருப்பதை அறிந்து
கடைசியாய் எப்போதுச் சிரித்தோம் என்றும்
மூளையை பிறாண்டிப் பிறாண்டி
யோசித்தவன்
கடகடவென்ற வாய்விட்டச்சிரிப்பு
அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே
ஒரு நாள்
கழன்றோடி விபத்தில் சிக்குண்டது
லேசாய் இதழ் பிரிக்கும்
மெல்லிய சிரிப்பிலும்
கை வைத்து விட்டது வாழ்வு
கைவசமிருக்கும் விரக்திச்சிரிப்பும்
எப்போதும் ஞாபகத்திற்கு வந்து
முன் நிற்பதில்லை
கடைசியாய் சிரித்தச்சிரிப்பை
நினைவு படுத்த முடியாமல்
சிலைபோல் திகைத்தான்
தலை மேல் பறந்து
சிரிக்கின்றது ஒரு காகம்.
3)வாழைப்பழம்.
சொந்தத்தில் ஒரு தம்பதியினர் பிள்ளை வரம் வேண்டி
பாதயாத்திரையாய் பல கோவில்களை தரிசித்த
பெருங்கதையை தாத்தா அடிக்கடி கூறுவார்.
பின்னர்
அவர்களுக்குப் பிறந்த அழகிய ஆண் குழந்தை
அங்கிருந்து கதையை கைப்பற்றியது.
நடராஜ நாமகரணத்தை சூடி மகிழ்ந்தனர்.
பதின் பருவத்தின் இறுதிவரையிலுமே
ட , எழுத்தை உச்சரிக்க நா சுழலாமல்
நதராஜன் என்றே கூறிவந்தவனுக்கு
அதிசயமாய்
ஒரு வாழைப்பழம் கிடைத்தது
அதை உண்டதும்
ட , பிரச்சினை சரியானது ஆச்சர்யம் தான்.
மேலதிக வாழைகளை அது வேலையாய் உண்டான்.
பிள்ளை தின்னும் கனியை
பெற்றோரும் வாங்கிக்குவித்தனர்.
நாற்பது வயதான போது
ஊரார் அவனை ஊதாரி என்றும்
அவர்களை ஊதாரியின் பெற்றோர் என்றும்
விளித்தனர்.
யார் அறிவுரைத்தும் நடராஜன் தன் காலை
பிடிவாதமாய் உயர்த்தியது உயர்த்திய வண்ணமே
இருக்கிறான்.
பேசாமல் அவனுக்கு வாழைப்பழம் என்றே
பெயர் வைத்திருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தனர்.
தன்னைத்தானே உரித்துக்கொள்ள முடியாத
அந்த வாழைப்பழத்தின் உயரம்
ஐந்து புள்ளி நான்கங்குலம்.
-ராஜா