பகற்கனவு

1

மிகச்சரியாக சொல்வதென்றால் அரைக்குறை விருப்பத்துடனும் தீர்மானிக்க முடியா தயக்கத்துடனுமேயே தாறுமாறாக இறங்கி ஓடிக்கொண்டிருந்தாள் பரிமளம்.

அந்த வேகமான நடையை ஓட்டமென்றுதான் சொல்லவேண்டும். சறுக்கத்துடன் சற்றே பள்ளமுமான அந்த குறுக்குப் பாதையில் மெல்லமாய் அடியெடுத்து வைத்து நடந்துபோதல் சாத்தியமே இல்லை. கால்கள் தன்பாட்டில் அடுத்த அடி வைப்பதற்கான நீளத்தை தீர்மானித்துக் கொள்ள, கண்டபடி தாண்டி சில நேரங்களில் நிதானித்து ஓரிரு இடங்களில் குதித்துத் தாவியென விரையும்படியாக அப்பாதை மாறியிருந்தது. ஆங்காங்கே நிலத்திலிருந்த பெரிய கற்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு எதிர்பாரா இடங்களிலெல்லலாம் குழிகள் முளைத்திருந்தன.

நாரங்கல தோட்டத்திலிருந்து பனாகன்னிய கிராமத்திற்கு போகவென்று ஒருசிலரால் அமைத்துக்கொள்ளப்பட்ட நடைபாதையது. பனாக்கன்னியவுக்கு பஸ் போக்குவரத்து சாத்தியமாகிய பிறகு அப்பாதைக்குரியதான நடமாடல்கள் அடியோடு நின்றுபோய் முட்செடிகளும் காட்டு மரங்களுமாய் அந்த வழி காணாமல் போகத்தொடங்கியிருந்தது. எப்போதாவது பஸ்சை தவறவிடும் ஓரிருவரின் உதவியால் திடீரென உருவாகி பின் மறையும் இயல்பையும் அப்பாதை ரகசியமாக பேணிக்கொண்டிருந்தது.

தோட்டத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்டு இரண்டிற்கும் பொதுவாக இருந்த ஊற்றுபீலியில் குளிப்பதற்காகவே அப்பாதையூடாக அவள் விரைந்துக்கொண்டிருந்தாள்.

சுற்றிவளைத்த சீரான வழியொன்று அப்பீலிக்கென்றே அமைந்திருந்த போதிலும் இந்த குறுக்குப்பாதையை அவள் தெரிவு செய்தமைக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஓரமெங்கும் கண்டபடி வளர்ந்தோங்கியிருந்த அக்காட்டுச் செடிகளின் இடைக்கிடையில் தம்மை திணித்து வளர்ந்திருந்த மூலிகைச்செடிகள் அவளுக்கு தேவைப்பட்டிருந்தன. அச்செடிகளுக்கூடாக வீசிய விசித்திரமான கசப்பு வாசனையை வலிந்து தவிர்த்தபடி மிக நிதானமாக அவதானித்து தேவையானளவு ஆடாதொடை இலைகளையும் நொச்சி தளிர்களையும் ஆய்ந்தெடுத்துக் கொண்டாள். ஏற்கனவே பேசிக்கொண்டாற்போல பானுமதி அருவதாம்பச்சை இலைகளுடன் பீலிக்காணுக்கு வந்திருக்கக்கூடுமென்பதால் இன்னும் வேகமாய் அகலக்கால் வைத்து பாய்ந்து நடந்தாள்.

தண்ணீர் சத்தம் மிக அருகாமையில் கேட்கத்தொடங்கியது. இதோ… எப்படியோ தப்பித்து வந்து சேர்ந்துவிட்டோம் என்றெண்ணிய அடுத்த நொடியிலேயே அடி வயிற்றிலிருந்து திரண்டெழுந்து நெஞ்சுப்பகுதியை எக்கித்தாவி தொண்டைக்குழியை இறுக்கிப்பிடித்தபடி வெளியே வர துடித்தந்த இராட்சத இருமல்.

பரிமளத்திற்கு லேசாக உடல் நடுங்க ஆரம்பித்தது. அதிகளவில் வயிறு குலுங்காமல் வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டாள். இன்னொரு கையால் ஓரத்தில் நின்ற மரக்கிளையை அமத்தி தள்ளிக்கொண்டே தன் உடல் பாரத்தை சரித்தபடி இருமுவதற்கு தயாரானாள்.

கரல் பிடித்த பழைய டின்னொன்றை டமார் டமாரென தட்டியெழுப்பும் ஓசையையொத்ததொரு சத்தம் ஆழக் குழிக்குள் இருந்து மேலெந்து தொகையாய் மறித்திருக்கும் புகைக்கூட்டத்தை தாண்டி கேட்குமாப் போலொரு அதிசய ஒலியை அவளது இருமல் வெளியிட்டுக்கொண்டிருந்தது. இருமுமதிர்வில் கையிலிருந்த பை தவறி விழுந்து மூலிகை இலைகளெல்லாம் அங்கொன்றும் இங்கொங்கொன்றுமாய் விழுந்தன. உடல் குலுங்கி தலை பாரமாகினாற் போலிருந்தது. நெஞ்சினுள்ளே பரவி ஒட்டியுலர்ந்து போனதாய் அவள் எண்ணிக்கொண்டிருக்கும் சளித்தொகையை இருமலுடன் சேர்த்து தொண்டையதிரக் காறி வெளியிழுத்தாள். உடைந்து சிதறிய சளித் துண்டுகள் உப்புச்சுவை கலந்த சதை துண்டங்களாய் எச்சிலுடன் கலந்து வெளிவரத் தொடங்கின. அவை ஒருவித பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் எச்சிலின் ஈரலிப்புடன் சேர்ந்து நிலத்தை பற்றிப் பிடித்துக் கொண்டன.

பரிமளம் வியர்த்து களைத்து சோர்ந்திருந்தாள். இன்னும் கொஞ்சமும் இரும மேண்டுமெனவும் வரப்போகும் அந்த இருமல் படுபயங்கரமாக குடலையும் சேர்த்து பிடுங்கியெடுத்துக் கொண்டு வெளிவர போகிறதென்றும் அவளால் உணரமுடிந்தது.

குலுங்கும் உடலால் கட்டுபடுத்த முடியாத சிறுநீர் வழமை போல காலுடன் வடிந்து தொலைத்தால், மிச்ச தூரத்தை நடந்து கடப்பது மிகவும் அசௌகரியமாகி விடுமென்பதால் இருமலுக்கூடாகவே இரண்டு கால்களையும் ஒன்றுடனொன்று பின்னி இறுக்கமாக்கிக் கொண்டாள். வித்தியாசமான அந்த இருமலொலி சூழ நின்ற மரக்கிளைகளில் மோதித்தெறித்து மெல்ல மெல்ல ஒயத் தொடங்கியது. அப்படியே அதே இடத்தில் அமர்ந்து தரையில் கைகள் ஊன்றி ஆழ்ந்து சுவாசித்தாள். உடல் நடுக்கத்தை கைகளுடாக தரைக்கு கடத்தி மெல்லமாய் கண்கள் மூடி அடுத்தகட்ட நகர்விற்காய் உடலை ஆயத்தப்படுத்திக்கொண்டு எழுந்தாள். விழுந்து கிடந்த மூலிகை இலைகளை சேர்த்தெடுத்தபடி நடக்கத் தொடங்கினாள்.

தண்ணீர் ஒரு காண் வழியே ஓடிவந்து சடாரென ஒரு பள்ளத்தில் குவிந்து விழுந்தது. விழுமந்த நீரின் சரிபாதி சிறியதொரு கருங்கல்லில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. அதிக கூட்டம் குளிப்பதற்கு வந்திருக்கவில்லை. சிங்கள கிராமத்து பியதாசவின் மனுசி மட்டும் பிடுங்கியெடுத்த முள்ளங்கி கிழங்குகளை கீரை நசிபடாமல் மிக பவ்வியமாய் காணுக்குள் போட்டு கழுவிக்கொண்டிருந்தாள்.

பிள்ளைப் பெற்ற பெண்களும் வயதான நோயாளிகளும் சுடுதண்ணீர் குளியல் செய்வதற்கென்றே பிரத்தியேகமாக ஓரிடம் அப்பீலியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அடுப்புக்கரி படிந்து ஒருபக்கமாய் வாயுடைந்த பானையொன்று எப்போதும் ஒதுங்கி கிடக்கும்.

பரிமளம் பானை நிறைய தண்ணீர் அள்ளி அதற்குள் மூலிகை இலைகளை அமிழ்த்திக் கொண்டாள். யாரோ எரித்துவிட்டு மீதம் வைத்து போயிருந்த விறகுகட்டைகளை மீண்டும் ஒன்றுசேர்த்து அடுப்பு கற்களையும் அசைத்தசைத்து ஒழுங்குபடுத்தி அடுப்பை பற்ற வைத்தாள்.

மொக்கத பரிமளம் அசனீபத?”1 என்ற பியதாசவின் மனைவியிடம் “ஒவ் அக்கே இவறயக் நெ(த்)தி கெஸ்சக்” 2 என்று கூறிக்கொண்டே குபுக்கென பாய்ந்து வரப்பார்த்த இருமலை தொண்டைக்குழிக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். இருமலை பற்றிய எண்ணம் துளியளவு இருந்தால் போதும் எங்கிருந்துதான் உடைத்துக்கொண்டு வருகிறதென்றே தெரியவில்லை. ஆறேழுநிமிடங்களுக்கு வதைத்துவிட்டுதான் நின்று தொலைக்கிறது.

நீருடன் நீராக தனதிந்த பிணியை கரைத்துவிடும் அதிசயம் எப்படியாவது நடந்தேறி விடாதாவென்று ஏங்கினாள். கையுடன் கொண்டுவந்திருந்த நாகலிங்கத்தின் சாரத்தை குறுக்கக் கட்டிக் கொண்டவளாய் மெல்லமாய் கால் விரல்களை நீருடன் பின்னி கண்மூடி ஒருகணம் சிலிர்த்தாள்.

ஊற்றினூடாக வந்துவிழும் நீர், அருவியொன்றின் சலசலப்பையும் மயிர்கூச்செரியும் சில்லுணர்வையும் தரத் தொடங்கியிருந்தது. பானுமதி வரும் வரை இந்நீர் பரவலுக்குள் தன் உடலை மொத்தமாய் புதைத்துக்கொள்ள அவாவிய அவளது மனது ‘வேணாம்டி’ என்ற அறிவின் எச்சரிக்கையை வேகமாய் முந்திக்கொண்டு நீரிற்குள் அவளை விழுத்தியது.

முழுவதுமாய் நீரை குடித்துக்கொண்ட நாகலிங்கத்தின் சாரம் அவளை சூழவும் உப்பிக்கொள்ள, அதனை அழுத்தி ஈரப்படுத்தி உடலுடன் ஒட்ட வைத்துக் கொண்டாள். சட்டென நாசியில் ஊர்ந்த அவனது வாசனையை வாய்திறந்து உள் மூச்சொன்றால் அப்படியே குடித்தாள். ஓரிரு மாதங்களுக்கு பிறகான நாகலிங்கத்தின் ஸ்பரிசம்… மனதுள் பதிந்து போயிருந்த அவனது மணம்…

தன்னையும் மீறி உதிர்ந்த கண்ணீரை நீரள்ளி முகத்திலறைந்து கழுவிக் கொண்டாள்.

தேயிலை மலையின் பகல் வெயிலை அன்றாடம் உறிஞ்சியும் நிறம் மாறா தன் மஞ்சள் மேனியின் மீதான ஈடுபாடே நாகலிங்கத்தின் தீரா காதலுக்கு அடித்தளமாகி இருந்ததென்பதை அவள் அறிந்தே இருந்திருந்தாள். என்றாலும் கொஞ்சிக் குலாவி தன்னை கொண்டாடி தீர்த்த அவன் இப்படி திடீரென தன்னில் இருந்து விலகியமைக்கு புதிதாக ஒரு காரணம் இருக்கக்கூடுமென்றும் அவளுக்கு நம்பத் தோன்றவில்லை.

ஒத்த அன்பினனாய் கூடியிருந்த ஒருவனது காதல் ஓரிரு வார இருமலின்பால் இல்லாமல் ஆகக்கூடுமென்றால் யார்தான் நம்பிவிட போகிறார்கள்…?

இருமலின் உக்கிரம் தந்த அசூசையை தாண்டி அவனது கடுஞ்சொற்கள் அவளை அறைந்துக் கொண்டேயிருந்தன.

“மனுசன் களைச்சு போய் வீடு வந்தா, ஒரு அர மணித்தியாலம் நிம்மதியா இருக்க விடுறியா? ச்சே எங்க இருந்துதா கொண்டு வந்து தொலஞ்சியோ இந்த சனியன…”

“வேணுமின்னேவா இருமுறாங்க?” அவளது இடைமறித்த பதில் அவன் காதில் விழுவதாயில்லை.

“எப்ப பாத்தாலும் லொக்கு லொக்குன்னு… அப்பப்பப்பா என்ன வாழ்க்கடா சாமி! ஒங்கப்பன் இதையெல்லாம் மறச்சுதானே எந்தலையில கட்டியிருக்கான்”

அவள் கண்மூடி மௌனித்து தன் கோபத்தை தணிக்க முயற்சித்தாள்.

“என்னய எதுக்குடி நடுவுல மாட்டி அவஸ்த்த படுத்தனும்…? வீட்டுலயே கெடந்து அப்பிடியே குடும்பமா இருமி தொலைக்க வேண்டியது தானே.”

ஆதங்கம் தாங்கமாட்டாதவளாய் “இதுவொன்னும் பரம்பர நோயில்ல சொல்லிட்டேன்” என்றாள். அவளது கோபமான பதில் அவனை அதிகமாக ஆத்திரத்திற்குள்ளாக்கியது. அடிக்க எத்தனிப்பதை போல் பாய்ந்து வந்து கேட்டான் “அப்பறம் நா பரப்பி விட்டுட்டேனா?”

“நீங்களும் கூடதானே இருந்தீங்க. டொக்டர் சாதாரணமான இருமல்னு தானே சொன்னாரு?”
“குறுக்க குறுக்க பேசாதடி… சாதாரண இருமல்தான் மாசக்கணக்குல இழுக்குதோ…! ஒன்ன சொல்லி குத்தமில்ல எல்லாம் எந் தலையெழுத்து”

எண்ணங்கள் உந்தியிழுக்கும் கண்ணீருக்குள் வலியின் திணிவும் சேர்ந்தேதான் கணக்கிறதாயிருக்கும். தலை சாய்த்து குனிந்து அத்துளிகளை ஓடும் நீருக்குள் விழ விட்டாள். சாதாரணமான பொழுதுகளில் உதாசீனங்களை அலட்சியப்படுத்தும் மனத்திடம், உடல் நலிவுற்றிருக்கும் போது மட்டும் அன்பானதொரு அருகாமையை தீவிரமாக தேடியலைவதை அடிக்கடி உணரத்தொடங்கினாள்.

பானுமதி அருவதாம்பச்சை இலைகளுடன் வேகமாக வந்து, பரிமளத்தை முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். பானைக்குள் அவ்விலைகளை போட்டு குச்சியொன்றால் உள்ளே தள்ளியபடியே “எதுக்குடி இப்ப பச்ச தண்ணிக்கு போன…?” என்றாள்.

பானையிலிருந்து வெளியேறும் நீராவியிலிருந்து இலைகுலைகளின் அவிந்த மணம் அவ்விடத்தை நிரப்ப ஆரம்பித்திருந்தது.

“தண்ணி சுட்ருச்சா பானு?”

“சுட்ருச்சி சுட்ருச்சி”

பானு கோபமாக இருக்கிறாளென புரிந்தது. பரிமளம் எழுந்து வந்து அடுப்பிற்கருகில் இருந்த கல்லொன்றில் அமர்ந்துக்கொண்டாள்.

“பேசாம ஒம் புருசன் மாதிரி நானும் விட்ருக்கனும்… மெனக்கட்டு வந்திருக்கக்கூடாது. பழகுன பாவத்துக்கு ஒதவி செய்ய நெனச்சது எந் தப்புடி”

“ரொம்ப தொந்தரவா இருக்கேனா பானு?”

பானு பதில் பேசவில்லை. பானையிலிருந்து வெளிவந்த சூடான ஆவியை வெறித்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேர இடைவெளிக்குப்பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். “ஏய்… அழுகுறியா நீ ? சச்சே என்னடி …, இந்த வருத்தத்துல பச்சதண்ணில குளிப்பாங்களா யாராவது ! அதான் கேந்தியில ஏதோ சொல்லிட்டேன்”
“இல்ல பானு நாளைக்கப்பறம் இங்கெல்லாம் வர முடியுமான்னு தெரியல. அதான் கடைசியா ஒரு தடவ தண்ணிக்குள்ள முக்கியெழும்ப தோணுச்சு”

“ஆமா அப்புடியே வெளிநாட்டுக்கு போகப்போறோம் பாரு… நாளைக்கு போயிட்டு மறுநாளே வந்துட போறோம். அதுகெதுக்குடி இவ்வளவு யோசிக்கனும்?”

“வேறெதுவும் வருத்தம்னு ஆஸ்பத்திரியிலயே நிப்பாட்டிட்டா என்னடி பண்றது?”

பானுவிற்கும் அந்த சந்தேகம் இருந்தது. அவள் இருமும் சத்தமும் அந்நேரத்தில் படும் அவஸ்த்தையும் வேறேதோ பெரிய நோயின் அறிகுறிதான் இதுவோவென எண்ணுமளவில் இருந்ததென்றாலும்; பரிமளத்திடம் அதனை காட்டிக்கொள்வது அழகில்லையென்று எண்ணினாள்.

“யோசிக்காத பரி. போய் பாத்துட்டு அப்பறம் பேசிக்கலாம்”

அவிந்து பழுப்பு நிறமாக மாறியிருந்த இலைகுலைகளை சூட்டுடன் எடுத்து பரிமளத்தின் நெஞ்சுப்பகுதியிலும் நடு முதுகிலுமாய் மாற்றி மாற்றி வைத்தெடுத்தாள். இலைகளுக்கூடாக மேலெழுந்த ஆவியின் மணம் கசப்பானதாய் இருந்தது. மிதமான சூட்டுனான அத்தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றும் போது வடிந்து வாயினுள் கசிந்த சில துளிகளில் ஒட்டியிருந்த கசப்பு, ஆவியிலும் இருக்கக்கூடுமென எண்ணி இடைக்கிடை சுவாசத்தையும் அடக்கிக்கொண்டாள் பரிமளம்.

இடுப்பு, தொடைகள், கெண்டைக்கால் என்று பகுதிப் பகுதியாக அவ்விலைகளால் ஒத்தடம் கொடுத்துவிட்டாள் பானுமதி. வெதுவெதுப்பான நீர் திவலைகள் உடுத்தியிருந்த சாரத்திற்குள்ளாக நுழைய முற்பட்டு தோற்றுப் போய் மார்புடன் இறுக்கிக் கட்டியிருந்த சாரத்தின் விளிம்பில் ததும்பி குப்புற விழுந்தன. நெஞ்சுப் பகுதிக்கூடான இடைவெளிக்குள் மாத்திரம் சிறு அளவில் துளிகள்; நுழைந்து மேனியை தழுவியதாய் அவளின் பிட்டத்தினிருக்கையில் பரவிக்கொண்டன.

இந்த வெதுவெதுப்பிலாவது நுரையீரலில் படிந்த என் இறுக்கமான சளி துடைப்பட்டு வந்துவிடாதாவெனும் ஏக்கம் பரிமளத்தின் கண்களில் பிரகாசித்தது. எத்தனை வகையான கைமருத்துவம் செய்து பார்த்தாயிற்று. அதில் ஏதேனும் ஒன்றிற்கு கூடாவா தன்னை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ இருமலாகி இப்படி சித்திரவதை செய்கிறது. தொடர்ச்சியாக இது தரும் நரக அனுபவத்தை ஏற்பதை விட திரண்டு வரும் சளி உருண்டையாகி அப்படியே அடைத்து மாய்ந்து போய்விட மாட்டோமாவென்று கூட உள்ளம் தவித்தவளுக்கு.

வறட்டு இருமலென்பது உலகின் அசிங்கமான பக்கத்தை மட்டுமே காட்டும் தெளிவான கண்ணாடியாய் தோன்றியது. உந்துமந்த இருமலுணர்வு தன் கைவிரல்களை விரித்து நகங்களால் அழுந்தப் பறுகி உள் அங்கங்கள் மொத்தத்தையும் புண்ணாக்கி… பின், தொண்டையில் தேங்கி ஒலியாக மாறிடும் கொடிய பேயாய் நிழலாடத் தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு தடவையின் நீணட நேர இருமலுடனும் ஒவ்வொரு பிரசவத்திற்கு ஒப்பானதாய் ஓராயிரம் சிசுகளை ஈன்றெடுத்த அனுபவத்தை பெற்றாயிற்று. இதையெல்லாமும் தாண்டி வாழ்ந்துவிட முடியுமென காத்திருப்பதை காட்டிலும் தாமே செத்து தொலைதலே இனி உசிதமானதாயிருக்கும்.
பரிமளம் குளியலூடாக அழுகிறாளென பானுவிற்குத் தெரியும். இந்த எல்லா தொல்லையும் நாளையுடன் இல்லாமல் ஆகி போகுமென்ற நம்பிக்கை பானுவிற்கு சற்று அதிகமாகவே இருந்தது. வெலிசரையில் உள்ள சுவாச நோய் ஆஸ்பத்திரியை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் அங்கு போய் பார்க்குமளவிற்கு நிலமை மோசமாகி விடாதென்றே பானு எண்ணியிருந்தாள். சுமனதாச டொக்டரின் இரண்டு தடவைகளிலான மருந்துகளும், ஊரே வந்து ஒப்பித்துவிட்டுப் போன கைமருந்துகளும்… இந்த எதுவொன்றாலும் அந்த இருமல் சரியாகவில்லை என்ற போது கொஞ்சம் சந்தேகமாகவேதான் இருந்தது.

குளித்து முடிவதோடு இருமல் ஆரம்பித்திருந்தது.. ஈரம் சொட்டச் சொட்ட அமர்ந்த நிலையில் தலையை இரு கைகளாலும் ஏந்தியபடி இருமத்தொடங்கினாள் பரிமளம். அவளது இருமலொலி நீரின் சலசலப்பை ஊடறுத்து காற்றுடன் மிதந்து கொண்டிருந்தது.2

துளை – கொழும்பு சீ.டி.பீ பஸ் பலாங்கொடையை அண்மித்திருந்தது. பாதை வளைவுகளில் தடுமாறும் பஸ்சினது வேகம், கம்பியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த பரிமளத்தின் தலையை மோத வைத்து அவளை எழுப்பியது. பின்னால் திரும்பி நாகலிங்கத்தைப் பார்த்தாள். அவன் இரண்டு சீட் தள்ளி அமர்ந்து யன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

பானுமதிக்கு வரமுடியாமல் போகுமென்றும் தான் நாகலிங்கத்தின் துணையுடன் போக வேண்டி வருமெனவும் பரிமளம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் அவன் தன்னுடன் அமர விரும்பாது வேறு யாரையோ போல பயணிப்பது அதிகமான வேதனையை தந்திருந்தது. அவனுடனான இந்த பயணம் ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தாலும், பஸ்சிற்குள் அந்த இருமல் தவறியும் வந்துவிட கூடாதேயென்ற பயமும்; அப்படியே வந்தாலும் நாகலிங்கம் திட்டுவானோ என்ற அவஸ்த்தையும் சேர்ந்து தத்தளித்ததொரு மனநிலையிலேயே பயணித்துக்கொண்டிருந்தாள்.

பஸ்சில் அதிகமாய் கூட்டமிருக்கவில்லை. பின் இருக்கை முழுவதையுமாய் ஒத்த வயதுடைய இளைஞர்கள் சிலர் ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் சத்தமாக பாடியபடியும் கிண்டலடித்து சிரித்தபடியுமாய் மொத்த சத்தத்தையும் பஸ்சிற்கள் பரவவிட்டிருந்தனர். அந்த சிரிப்பொலியும் குதூகல உரையாடல்களும் சிலரை முகம் சுளிக்க வைத்திருந்தாலும் பெரும்பாலானோர் அந்த உரையாடல்களில் தங்களுக்கும் பங்கிருப்பதாய் எண்ணிக் கொண்டு தமக்குத்தானே சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.

பின்னேயிருந்த யாரோ ஓரிரு தடவைகள் இருமும் சத்தமும் கேட்டது. பரிமளம் சட்டென திரும்பி அது யாரென்று தேடினாள். இருமலொலி ஓய்ந்து இருமியவரின் அடையாளம் மறைந்து போயிருந்தது. இவர்களெல்லாமே ஒரு வகையில் வரம் பெற்று வாழ்பவர்களாய் இருக்க வேண்டும். பத்தோடு ஒன்று பதினொன்றாய் ஏதோ ஒரு வகையான நோயை எளிதில் கடந்து வெளியே வந்து விடுகிறார்கள். சந்தோசமாக அடுத்த நொடியை எதிர் கொள்கிறார்கள்.

இப்போதெல்லாம் பரிமளம் இருமுவதை பற்றியே அதிகம் யோசிக்கத் தொடங்கியிருந்தாள். யார் இருமினாலும்; அவர்களை கூர்ந்து அவதானித்தாள். தனது நெருங்கிய சினேகிதர்களாகவே அவர்களை உணர்ந்தாள். தேயிலை மலையிலோ வீட்டிலோ தன்னால் ஆன மட்டும் இருமியடங்குவது பழகிப்போயிருந்தாலும் இது போன்ற பொது இடங்களில் தான் அவமானப்பட்டுவிடக் கூடாதேயென்ற பயத்தில் உள்ளெடுக்கும் சுவாசத்தை கூட நிதானமாக அளந்து உள்ளிழுத்தாள்.

கட்டாயப்படுத்தி அடக்கி தொண்டைக்குக்குள் இறுக்கி வைத்திருந்த அந்த இருமல் திடீரென ஒருகணத்தில் வெளியேறத் தொடங்கியது.. கையில் வைத்திருந்த துவாயில் வாயை பொத்தி அடைத்தபடி குலுங்கி இருமத்தொடங்கினாள். பெருக்கெடுத்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொள்ளவும் திராணியற்று, விடாது இருமிக்கொண்டேயிருந்தாள். அருகிலிருந்தவர்கள். தண்ணீரை நீட்டினார்கள். பரிதாபமாக பார்த்தார்கள். ஏதோ சிங்களத்தில் பேசியும் கொண்டார்கள். அந்த இருமலொலி பஸ்சிற்குள் பெருஞ்சத்தத்துடன் எதிரொலிக்கத் தொடங்கியது. பின்னால் கத்தி ஆரவாரித்த இளைஞர்கள் தமது சத்தத்தை குறைத்திருந்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தனக்கும் இது தொற்றிக்கொள்ளக் கூடாதேயென்ற பயத்தில் ஒதுங்கி விசித்திரமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ஒயா தனியெந்த ஆவே3… தனியெந்த ஆவே… ஒயாத்தெக்க கவுருத் ஆவே நெ(த்)ந்த..?”4 ஆளாளுக்கு மாறிமாறி நீ தனியாகவா பயணிக்கிறாயென்று கேட்கத் தொடங்கியிருந்தார்கள்.

நாகலிங்கம் சற்று தாமதித்து அருகில் வந்தான். ‘தண்ணி குடிக்கிறியா?’ என்றான். இருமல் அடங்கும் வரை அவ்விடத்திலேயே நின்றுக் கொண்டிருந்தான். தண்ணீர் போத்தலை அவனாகவே திறந்து குடிக்கச்சொல்லி தந்தான். நாகலிங்கத்தை அவளது உறவினனென கண்டுக்கொண்டவராய் பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் இதுதான் சமயமென்று தனது இடத்தை நாகலிங்கத்திற்கு கொடுத்துவிட்டு; நாகலிங்கத்தின் இருக்கைக்கு சென்று கேட்காமலேயே அமர்ந்துக் கொண்டார். நாகலிங்கம் அவளுக்கு பக்கத்தில் அமர விரும்பாமல் நின்றபடியே பயணித்தான். தனது இருக்கையை பலவந்தமாக கைப்பற்றிய அந்த நபரை எரிச்சலுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பஸ் நிறுத்தத்தில் யாரேனும் தனக்கு பக்கத்தில் அமர்ந்துவிட முன் நாகலிங்கம் அமர்ந்துக்கொள்ள வேண்டுமேயென்று அவளது மனம் இறைஞ்சியது. கண்களை மூடியபடி சீட் கம்பியில் சாய்ந்துக்கொண்டாள். முன்னிருக்கை யன்னல் வழி வந்துமோதிய காற்று இதமாகவிருந்தது. உடலெடை மொத்தமுமாய் காற்றுடன் பறந்து மிக இலேசாகி போய்க் கொண்டிருப்பதாய் உணரத் தொடங்கினாள்.

பஸ் வேகமாக சென்றது. முன்னால் செல்லும் வாகனங்களை விலத்தி தள்ளியபடி… அவற்றை மோதி தூக்கியொரு பக்கமாய் எறிந்தபடி இன்னும் பள்ளங்களையும் மேடுகளையும் தாவி விரைந்து ஒரு கட்டத்தில் அந்த பஸ் பறக்கத் தொடங்கியிருந்தது. வேகமாய் மிக வேகமாய் எதிரே வந்த மேகக்கூட்டங்களை உடைத்து சிதறடித்துக்கொண்டு பறந்தது. தான் அமர்ந்திருக்கும் இருக்கை ஒரு ஊஞ்சலாய் மாறியதையும் அருகிருப்பவர்கள் எல்லோரும் தனக்கு பணிவிடை செய்ய காத்திருந்ததையும் பரிமளத்தால் நம்பவே முடியவில்லை. தனக்கு இருமல் வராதிருக்க வேண்டி யன்னல்கள் எல்லாம் திடீரென மூடப்பட்டிருந்தன.

நாகலிங்கம் அருகிலேயே அமர்ந்திருந்து அவளது தலையை வருடியபடி சிரித்தான். தனக்கு இருமல் வருமுணர்வு துளிதானும் இல்லையென்று கூறியபடி அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள். மனது ஆனந்தக்கூத்தாடியது. இத்தகையதொரு தருணத்தில் கிடைக்கும் அருகாமைக்காகவே பலநாட்களாக அவள் ஏங்கிக்கொண்டிருந்தால் முழுதுமாய் அந்நிமிடங்களை தனதாக்கிக்கொள்ள முயன்றாள்.

சட்டென்று மாறிப்போன இந்த சூழ்நிலை சுவர்க்கமாகி வெளிகளுக்கிடையிலான மிதப்பை இடையறாது உணர்த்திக்கொண்டிருந்தது. பறக்குமாப்போல அல்லது மிதப்பது போல் பயணிக்கும் அந்த பஸ்சினது ஹோன் சத்தம் மட்டும் எதுவித மாற்றங்களுமின்றி நச்சரிப்பானதொரு ஒலியை அடிக்கடி எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் பரிமளம் கண்களை திறக்க முனையவில்லை.

யாரோ சிலர் தமிழ் பாடலொன்றை பிழையான உச்சரிப்புடன் சத்தமாக பாடிக்கொண்டிருந்தனர். இடைக்கிடை சிங்கள பாடல்களையும் கலந்து வேறொரு விதமான இசைக்கலவையை தோற்றுவித்தனர். நாகலிங்கம் தானும்; பாடலொன்றை பாடத்தொடங்கியிருந்தான். அவளை காதலிக்கத் தொடங்கிய போது அடிக்கடி அவன் பாடிய அதே பாடல். மிக மென்மையாக… அவளுக்கு மட்டுமே கேட்கும் படியாக…

அவள் அவனது கரங்களை இழுத்துப் பற்றிக் கொண்டாள். அவனது மோதிர விரலில் இதுவரை அவன் அணிந்திராத அவள் கண்டேயிராத கல் பதித்த மோதிரத்தின் பகுதி தட்டுப்பட்டது. இதனை அவன் எப்போது வாங்கி அணிந்திருப்பானென்று யோசித்தாள். அவனிடம் அதுபற்றி கேட்க வேண்டுமென்றும் தோன்றவில்லை. விரல்களை மிருதுவாக வருடினாள். அவன் எதுவித பிரதிபலிப்புமின்றி பேசாதிருந்ததான் சட்டென தன் கைகளை அவள் விடுவித்துக் கொண்டதும் அவன் பாடுவதை நிறுத்தியிருந்தான்.

பஸ் கொழும்பை அண்மித்து ஓரிரு நொடிகளுக்குள் சரியாக வெலிசர ஆஸ்பத்திரிக்கருகிலேயே தரையிறங்கியது. அங்கே நின்ற பெரியதொரு நிழல் தரும் தருவொன்று குளிர்ச்சியை தரையெங்கும் தூவியிருந்தது. வெள்ளை நிற உடையில் தாதிகளும் வைத்தியர்களுமாய் உலாவித்திரிந்தனர். அதில் இருவர் மாத்திரம் சிரித்த முகத்துடன் அவளருகில் வந்து ஒரு சக்கரக்கதிரையில் அவளை அமரவைத்து ஒரு அறைக்குள் தள்ளிக்கொண்டு போயினர். அப்போது நாகலிங்கம் திடீரென காணாமல் போயிருந்தான். தன்னை அவர்களே தூக்கி படுக்கவும்செய்தார்கள். வேறு யாரோ சிலர் வாயில் மாஸ்க் கட்டியபடி அறைக்குள் நுழைந்து அவளது நெஞ்சுப்பகுதியை சரி நேராக வெட்டிக்கிழித்தனர். ஏதோ ஒரு புதுவித கருவிக்கொண்டு அடைப்பட்டிருந்த சளி முழுவதையும் தனியே பிரித்து எடுத்து அகற்றிக் கொண்டிருப்பதாய் தெரிந்தது. நேரே விட்டத்தை பார்த்து படுத்திருந்த அவளுக்கு மெதுவாய் தலைத்தூக்கி தன்னை இத்தனைநாள் சித்திரவதை படுத்திய சளிமொத்தத்தையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் போல தோன்றவே; வாயை திறந்து ஏதோ பேச எத்தனித்தாள். வார்த்தைகள் சத்தமின்றி வாயிலிருந்து வெளியேறி மிதக்கத்தொடங்கின. இடைக்கிடையே அந்த பஸ்சினது ஹோன் சத்தம் மட்டும் எப்படி கேட்கிறதென்று அவள் யோசித்தபடியே பேசினாள்.

“டொக்டர் இனிமே எனக்கு இருமலே வராதா?”

“அந்த கருமம் புடிச்ச சளி மொத்தத்தையும் கொஞ்சம் பார்க்க விடுறீங்களா?”

அவளுக்கு யாருமே பதில் கூறுவதாயில்லை.

“என் புருசன பாத்தீங்களா?”

“நா எப்புடி வீட்டுக்கு போறது?”

“பானு வந்திருக்காளா?”

யாருமே பதில் கூறாததால் பேச்சை நிறுத்திக்கொண்டாள். சிறிது நேரத்திற்குள்ளாகவே முழுவதுமாய் சளியகற்றப்பட்ட சுவாசத்தை உணரத்தொடங்கினாள். எப்படியென்று தெரியாமலேயே திடீரென நாகலிங்கமும் அவளுக்கு மிக அருகே வந்து அமர்ந்திருப்பதை கண்டு அதிசயித்தாள்.

நாகலிங்கத்தின் கைகளை இறுக்கமாகப் பிடித்தப்படி. அவனது தோளில் மெதுவாய் சாய்ந்துப்படுத்தாள். அவனிடமிருந்து எதுவித மறுப்பும் இல்லாதிருக்கவே அவன் மறுபடி தன்னை நேசிக்கத்தொடங்கியிருப்பதாய் தோன்றியது. கண்களை திறக்க விரும்பாமல் அவனை அணைத்துப்பிடித்தபடி வசதியாய் சாய்ந்துக்கொண்டாள்.

அவனது அரவணைப்பு தந்த உந்துதலில் மிக மெல்லிய குரலில் இரகசியமாய் கேட்டாள். “இப்போ என்னய உங்களுக்கு பிடிச்சிருக்கா”

அவன் ‘ம்ம்..’ என்றான்.

“இனி கவனமா பார்துப்பீங்களா?”

“ம்ம்”

“என்னய வெறுத்துடுவிங்களா?”

“ம்ஹீம்..”

“என்னய திட்டுவீங்களா?”

“ம்ஹீம்..”

“அப்போ அன்பா இருப்பிங்களா?”

“ம்ம்”

“நா இருமுனா கூட திட்ட மாட்டிங்களா?”

“ம்ம்”

நிறைந்து போன மனதுடன் தனக்குத்தானே புன்னகைத்துக் கொண்டாள். சடாரென தான் அமர்ந்திருந்த இருக்கை குலுங்கியதிர்ந்து ஓய்ந்ததில் விழித்தெழுந்தவளாய் நாகலிங்கத்தின் கைகளை இன்னும் கொஞ்சமாய் இறுக பற்றியப்படியே நிமிர்ந்து அவனது முகத்தை காதலுடன் பார்க்களானாள். அவளுக்கு ஒரே குழப்பமாகவிருந்தது. நாகலிங்கத்தின் முகம் வேறு யாருடையதையோ போல மாறியிருந்தது. அந்த புதிய மனிதனும் தன்னை மிக விசித்திரமாய் பார்க்கத் தொடங்கியிருந்தான். எப்படி இதுவெல்லாம் நடக்கக்கூடுமெனும் சந்தேகத்துடன் சூழவும் ஒருமுறை பார்வையை சுழல விட்டாள். பக்கத்திலேயே நாகலிங்கத்தைப் போலவே இருந்த ஒருவன் அவளை முறைத்துப் பார்த்தபடியே நின்றுக்கொண்டிருந்தான்.


“மொக்கத பரிமளம் அசனீபத?” – சுகமில்லையா பரிமளம்1
“ஒவ் அக்கே இவறயக் நெ(த்)தி கெஸ்சக்” ; – ஆமாம் அக்கா முடிவில்லாத இருமலாய் இருக்கு2
“ஒயா தனியெந்த ஆவே… – நீ தனியாகவா வந்தாய் ?3
ஒயாத்தெக்க கவுருத் ஆவே நெ(த்)ந்த..?” – உன்னுடன் யாரும் வரவில்லையா?4


-பிரமிளா பிரதீபன்

3 COMMENTS

  1. பேருந்து பயண நிகழ்வு மிகவும் அழுத்தமான வரிகள்… நன்றி மேடம்….

  2. எத்தனை அழுத்தமான உணர்வுகளை உள்ளடக்கிய கதை. நோய் காரணமாய் கணவனால் உதாசீனப்படுத்தப்படும் பாவப்பட்டப் பெண்ணினத்தின் பிரதிநிதியாய் பரிமளம். உதாசீனப்படுத்தும் ஆணினத்தின் பிரதிநிதியாய் நாகலிங்கம். பரிமளத்தின் மன ஏக்கங்களுக்கு விடிவு கிட்டுமா? அவளின் இருமல் போலவே இதயத்தை ஆழப் பிறாண்டுகிறது கதை. அடங்க வெகுநாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.