இந்தக் கட்டுரையை எந்த உச்ச வரம்பில் இருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தேன். மாட்சிமை மிக்க இந்தியச் சமூகம்,எப்போதும் இருந்ததில்லை என்பதற்கான வரலாறுகளால் பறைசாற்றும் போது கண்டுணர முடியும். சமூகத்தில் அடுக்கு அமைப்பான வாழ்வியல் முறைகளைக் கொண்டு விளங்குவதோடு உரிமைகள் எனும் பெயரில் ஒரு சமூகம் பிரிதோரான சமூக மக்களை அநீதிக்கு ஆட்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் ஒரு சம்பவமான பல்லக்கில் பவனி வரும் உரிமையை மட்டுமே மையப் பொருளாகவிவரிக்கிறேன்.
தற்போது பல்லக்கு தூக்குதல் நின்றுவிட்டாலும், ஒரு சில இடங்களில் பல்லக்குகளும் பல்லக்கு தூக்கிகளும் இருக்கின்றனர். சபரிமலைசெல்லும் ஐயப்பன் பக்தர்கள் இமயமலைப் பகுதிக்குச் செல்லும் பக்தர்கள் இன்னும் இது போன்ற மலை ஏற்ற பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு நடக்க முடியாதவர்கள் வயதான முதியவர்கள் போன்றோர்களைத் தூக்கிச் செல்லும் மனிதர்கள் இருக்கின்றார்கள். பல்லக்கும் இருக்கின்றன. இவர்களை தற்போது டோரி என்றழைக்கின்றனர். இவர்கள் அண்ணகர்கள் என் வேள்பாரியில் சு.வெங்கடேஷன் குறிப்பிடுகிறார். மேலும் விதை எடுக்கப்பட்டவர்கள் என்கிறார்.
பல்லக்கு ஏறுபவர் குறைந்தபட்ச வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்களால் மட்டுமே முடிகின்றது. ஆனால் இதே நிலை என்பது அன்று சமூக அந்தஸ்தை பிரகடப்படுத்தும் கௌரவ அமைப்பைச் சுட்டிக்காட்டும் போக்கு என்பதாகத்தான் உணர வேண்டும். யார்? யாரெல்லாம் பல்லக்கு ஏற முடியும் அதே வேளையில் ஏறிப் பயணிப்பதற்கான தகுதியும் உரிமையும் எப்போது பெற்றார்கள். வாழ்ந்தும் மறைந்தும் இருக்கிறார்கள்.
‘வெறும் சாதாரண நிலையாக பல்லக்கையோ பட்டினப்பிரவேசத்தையோ எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தை பிரகடப்படுத்த இந்தப் பல்லக்கு இருந்திருக்கிறது. கார் பேருந்து போன்ற கனரக வாகனங்களின் போக்குவரத்து வந்தமையால் பைய மங்கிப் போனது.
அன்றைய காலத்தில் அரசிகள் பயணம் யாவும் பல்லக்கு நிலையாகவே இருந்திருக்கிறது, அல்லது அரசு நிலை சார்ந்த பெண்கள் பயணம் செய்யும் வாகனமாகவும் இருந்திருக்கிறது. பல்லக்கு “ஆட்களைத் தூக்கிச் செல்லும் வாகனம்” (ப.423) செந்தமிழ் அகராதி கூறுகின்றது.
அபிதான சிந்தாமணி என்கிற நூல் இதைப்பற்றி குறிப்பிடும் போது, “இது பரதகண்ட வாசிகளில் மனிதர்களால் சுமக்கப்பட்ட வாஹனம். இது மூடு பல்லக்கு, மூடா பல்லக்கு என பல வகை. மூடா பல்லாக்கு ஒரு கோணங்கணை மேலிருக்க பலகை பூட்டி கணைகளில் ஆள்கள் சுமந்து செல்வது. மற்றவை பெட்டிபோல் உள்ளில் தலைவனிருக்கக் கணை தாங்கிச் செல்வது. இவை பலவிதமான செய்யப்படும் தண்டிகையும் இதன் பாற்பாடும்” (அபிதான சிந்தாமணி; ப.1052) என்றுறைக்கிறது. இதன் மூலம் பல்வேறு வகைகள் இருப்பதை லேசாக உய்த்துணர முடியும்.
மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் செய்யப்படுவதாக வந்த செய்தியும், அதற்காக எதிர்வினையும் தடை விதிக்கப்பட்டதும், பிறகு தடை நீக்கப்பட்டதும் ஆதின கருத்தாவான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பர்மாச்சாரியர் பட்டண பிரவேசம் செய்யப்பட்டது நாம் கண்டது.
ஏன்? சாமியார்கள் தற்போதைய நிலையில் பட்டணப்பிரவேசம் செய்ய வேண்டும் என்பதில் தான் அதன் அரசியல் உள்ளது. தங்களுக்குப் பாத்தியப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதுடன் அதிகார ஆளுமைகளை ஏற்படுத்திக் கொள்வதும் இதன் ஊடாட்டமாகவே உள்ளது. பவனி வரல் என்பது எதில் வருகிறார் என்று பார்ப்போமானால் பக்தர்கள் புடை சூழ, ஆயிரம் கோஷங்களோடு, பல்லக்குத் தூக்கிகளால் பட்டணப் பிரவேசம் செய்யப்படுவதாக இருக்கும். “மனிதனை மனிதன் தூக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, மனித உரிமைகள் மீறல்” எனத் திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. பக்தர்கள் தூக்கி வருகிறார்கள், குருமூர்த்தி அவர்கள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க வருகிறார். நானும் தூக்கிச் சுமப்பேன்’ என்று அண்ணாமலைக் கூறுகிறார்.
கருத்திட்டவர் இருவரும் மனிதர்கள் தான். ஆனால் அதில் புடகமான பொருள் அமைப்பை இங்கு யாரும் விவாதிப்பது இல்லை. விவாதிக்க மறந்து விட்டார்கள். ஆதின கருத்தா மட்டுமல்ல வலம் கொழிக்கும் (நிர்வாகப்படுத்தும் சாமியார்கள்) மடங்களின் நிரம்பிக் கிடக்கும் இடங்களில் வாழும் சாமியார்கள். அவர்கள் சமூக சாமியாராக இருந்தாலும் சரி அவர்களின் பகுதிகளில் பட்டணப் பிரவேசம் என்னும் நிலையில் வலம் வரும் போது அவர்களுக்கு அவர்களின் பகுதி மக்கள் காணிக்கை செலுத்துவது பொறுப்பாகும். அதையும் தாண்டி இதை கடமையாகவும் செய்து இருக்கின்றனர். ஆசீர் வழங்குவதே என்பன அருளாசியுடன் மேப்பூச்சான ஒரு சம்பிரதாயம் என்பதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். பட்டணப்பிரவேசம் என்பது கூட ஒரு விதத்தில் குருவை ஏற்றுக் கொள்வது தான். ஆதின கர்த்தா வலம் வரும்போது அவர்கள் பகுதி மக்கள் காணிக்கை செலுத்துவது ஒரு பெரும் கொள்கையாகும். இது எல்லா மடத்து சாமியார்களுக்கும் பொருந்தும். காணிக்கையைப் பெற்று தங்கள் அந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் என்பதற்கான அடையாளத்தையும் அங்கே பதிவுச் செய்யப்படுகிறது. ‘குரு சாபம் பொல்லாதது’ என்ற பழமொழி உருவாக்கம் கூட ஆதிக்க மனப்பான்மையின் அமைப்பு என்பதை யாரும் சொல்லிக் கொள்ளுவதில்லை. மேலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் காணிக்கைக் கொடுக்கப்பட வேண்டும் கடமையாகச் செய்திருக்கின்றனர். கொடுக்கப்படாதவர்களுக்குத் தனி தண்டமும் விதிக்கப்பட்டும் உள்ளது. இதைப் பற்றியான குறிப்பு, ‘பட்டணப் பிரவேசம் செய்யும் போதோ, குலகுரு வந்து குடிமக்களைச் சந்திக்கும் போது அந்த குலகுருவிற்கு தேவையான பூசைகள் காணிக்கைகள் பாதரட்சைகள் என்பன, ஆணைகளையும் கீழ்ப்படிந்து நடக்கும் செயலும் செய்வதாகவே உள்ளது’
பல்லக்குப் பற்றி திருக்குறளில் சிவிகை என்ற பதத்தில் வருகிறது. பல்லக்கில் பயணிப்பவர்களுக்கும் பல்லக்கு தூக்குபவர்களுக்கும் உள்ள இடைப்பட்ட நிலையை இதில் விவரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அன்று இந்த இரு பிரிவினர்களும் இருந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. சங்க இலக்கிய காலத்திற்கு பின் பக்தி இலக்கிய காலத்தில் திருஞான சம்பந்தர் பற்றிய சேக்கிழரின் சிவிகை பயணம் காட்சி வருணைகள் சிவிகை என்ற பல்லக்கு பல இடங்களில் இடம் பெறுகின்றது.
“போத ஞான புகலிப் புனிதரைச் சீத முத்தின் சிவிகை மேலேற்றிட”
“தூங்கு வெண்குடை தூய சிவிகையும்”
“சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்மீது தவழ்ந்து வெண்ணீற்றோளி போற்றி”
“வெண்ணிலா மலர் நித்தில சிவிகை மேற்கொண்டார்”
என்பதான பல இடங்களில் சிவிகை வர்ணனைகள் பெரிதும் வர்ணிக்கப்படுகிறது.
சாமியார்களின் தொடக்க கால ஏச்சமாகவே இன்றும் சாமியார்கள் பல்லக்கில் பவனி வருவதற்கான சூட்சுமம் இடம்பெறுகிறது.
பல்லக்கு உயர் மட்ட நிலையைச் சார்ந்த அனைத்து பேருக்கும் கிடைத்திருக்கிறது. குருமார்களுக்கு, புலவர்களுக்கு, அரசு உயர் மதிப்பு மிக்க மனிதர்கள் என்பதான பேர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள வேளாளர்கள் புலவர்களுக்கும் குருமார்களுக்கும் தனி மதிப்பும் மரியாதையும் கொடுத்து வந்துள்ளதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. “கொங்கு வேளாளர்கள் புலவர்கட்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தனர். புலவர்கட்குப் பல்லக்குச் சுமந்தனர்”1 என்கிறார் செ.இராசு
இதைப் போல தனி மனித செய்த சாதனைகளுக்கும் அரசன் பட்டம் வழங்கி பல்லக்கில் பவனி வர செய்திருக்கிறான். “மற்றாநாள் நாடனைவரையும் கூட்டிக் கொண்டு கொங்கராயன் தலையும் கொண்டு இராதாபுரம் போயி உடையாரவர்கள் சமூகத்திலே கொங்கராயன் தலையையும் வைத்தர்கள் அப்போது நஞ்சய உடையாரவர்கள் அளகன் உத்தமக் காமிண்டனுக்கு தாளி சவுக்களி குஞ்சரம் காளாஞ்சி கபாலை இது வெல்லாம் குடுத்து பல்லக்கும் இட்டு பட்டணப் பிரவேசமே வந்து இராதாபுரத்திலே நின்று பல்லக்கு வரிசசையுடனே நாடனைவரும் கூட்டிக் கொண்டு காரையூரே வந்து நாடனைவர்க்கும் விருந்திட்டு அவரவர்க்கு வெகுமானமும் பண்ணி அவரவரையும் ஊருக்கு அனுப்பிவிச்சு அரண்மனையாரும் நாடனைவரும் கட்டளையிட்டப்படியே நடந்து கொள்ளுவோமாகவும் யிந்தப்பட்டயம் எழுதினது காரையூரு ஸ்தலத்து அரசுப்பிள்ளை கையெழுத்து”2 என்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். இவருக்கு ஏன்? பட்டமும் பல்லக்கும் வழங்கப்பட்டது என்றால் கொங்குராயன் என்பவன் ஆடு மாடுகளை கொள்ளையிட்டதுடன் மனிதர்களையும் கொன்று அட்டூழியம் செய்தமைக்காக, கொங்குராயன் தலையைக் கொண்டுவருபவருக்குப் பட்டமும் பட்டக்காரர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு வேளாளர்கள் புலவர்களை மதித்து இருந்தனர். கம்பர் கூட சோழ தேசத்தை விட்டு கொங்கு மண்டலத்தில் குடியேறியிருக்கிறார். கம்பர் வேளாளர்களால் கெளரவிக்கப்பட்டதால் வேளாளர்களுக்கென்றே மங்கள வாழ்த்து, கம்பர் வாழி, ஏரெழுபதும், திருக்கை வழக்கம் திருமண வீடுகளில் பாடப்பட்டதும் கம்பர் வழி வந்த புலவர்களை ‘கம்பநாடர்’ என்று வேளாளர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.
“ராணி மங்கம்மாளின் அமைச்சரும் தளபதியுமான நரசப்பையர் கத்தோலிக்கக் குருக்கள் பயணம் செய்ய பல்லக்கு வழங்கி உள்ள செய்தி 1708 ஆம் ஆண்டு சேசு சபை மடலில் இடம்பெற்றுள்ளது. இம்மடல் எழுதிய அந்தோணி டயஸ்(1766:1724) என்ற போர்ச்சுக்கீறிய சேசு சபைத் துறவி, பல்லக்கு வழங்குவது மிகப்பெரிய மரியாதையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்”3 ஆ.சிவசுப்பிரமணியன் . இதைப்போல ஆனந்தரங்கப் பிள்ளைக்கும் பல்லக்கில் செல்வதற்கு உரிமை இருந்திருக்கிறது இதனை, “அண்ணாசாமியும் அய்யாசாமியும் அவுதாவின் பேரிலேயும், அப்பாவு குதிரையின் பேரிலேயும் உட்கார்ந்து வந்தார்கள். பிள்ளையும் மற்ற உறவினரும் பல்லக்கில் வந்தனர்”4 என்பதை இர. ஆலாலசுந்தரம் கூறுகிறார். இதைப் போல பிரிதோரான இடத்தில் இவர் பெற்ற உரிமைகளைக் குறிப்பிடும் போது, “ஆனந்தரங்கப் பிள்ளை வெளியிலே செல்லும் போது அரிக்கை(தீவட்டி) சேவகர், பல்லக்கு, இரட்டைக்குடை(ix:247) சகிதம் செல்லும் உரிமை பெற்றிருந்தார். அலுவலகப் பணியில் இருக்கும் போது அங்கி, பாகை தரித்தும் வெள்ளிப் பிரம்பு முதலிய பிற சின்னங்களோடும் இருப்பார்”5 .
இரண்டாம் மைசூர்ப் போரான (மூக்கறுப்பு போர்) திருமலை நாயக்கன் வெற்றி பெற்றான் .அதற்கு உதவியாக இருந்த இரகுநாத சேதுபதிக்கு ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அரசி சிவிகையும் பல ஊர்களையும் கொடுத்ததோடு. திறை செலுத்த வேண்டியதில்லை என்று ஆணையிட்டான். அரசி சிவிகை கொடுக்கும் அளவுக்கு உயர்ந்த மதிப்பீட்டை அது உணர்த்துகின்றது.
1895- யில் கழுகுமலையில் நாடார் சமுதாயத்திற்கும் ஆதிக்க சமுதாயத்திற்கும் ஏற்பட்ட புகைச்சல் பல்லக்கு தானே மைய பொருளாக விளங்குகின்றது. தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கல்யாண ஊர்வலம் பல்லக்கில் செய்யக் கூடாது என்பது தானே. “அரிசியைவிட பல்லக்கே அவர்களுக்கு முக்கியமானது “6 ஆ.சிவசுப்பிரமணியன் நூலின் முன்னுரையில் பொமால் என்ற பிரெஞ்சு சேசு சபைத் துறவி கழுகுமலை நாடர்களைப் பற்றி அடையாளமிட்டுள்ளதாகக் கூறுகிறார். மேலும் கிறித்தவ நாடார் உருவாகுவதற்கும் இது மிகப் பெரிய காரணமாக அமைந்து இருந்திருக்கின்றது. இதனை, “பேச்சிமுத்து நாடார் மற்றவர் அருள் சாமி நாடார் .இருவரும் தங்கள் விண்ணப்பத்தைச் சுருக்கமாகப் பங்குத் தந்தையின் முன் வைத்தார்கள். ‘எங்களுக்குச் சோறு வேண்டாம்; பல்லக்கு வேண்டும்’ பொது வீதிகளில் பல்லக்கு ஊர்வலம் நடத்தும் உரிமையை இயேசு சபைக் குருக்கள் எங்களுக்குப் பெற்றுத் தந்தால் , கழுகுமலையிலுள்ள 100 நாடார் குடும்பங்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் சேருவோம். பொது வீதிகளில் பல்லக்கு ஊர்வலம் நடத்தும் உரிமையை மட்டும் பெற்றுத் தந்தால் போதும்”7 என்கிறார் ர.ஜார்ஜ்,சே,ச. இதன் மூலம் சமூக அநீதிகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது. பல்லக்கு என்பதை வெறு வார்த்தையாக நினைக்க கூடாது சமூகத்தில் பெரிய அசைவியக்கத்தையே உண்டு பண்ணி இருக்கின்றது.
இதை போல “கைக்கோளார்கள் பல்லக்கு ஏறிச் செல்லவும், தமக்கு முன்பு சங்கு ஊதப் பெறவும் காஞ்சிபுரத்திலும் விரிஞ்சிபுரத்திலும் புதிய உரிமைகளைப் பெற்றனர்.”8 என்கிறார் கே.கே.பிள்ளை . இதன் மூலம் கைக்கோளார் என்ற செங்குந்த முதலியார்கள் சில ஊர்களில் மட்டும் பல்லக்கில் செல்ல உரிமை பெற்றுள்ளனர். இதனைப் போல இன்னும் சில சமூகத்தார் பல்லக்கில் ஏறி செல்ல உரிமைகள் பெற்றாலும் நடை முறையால் பெறும் கலவரங்களுக்கு ஆட்பட்டனர். கைவினைஞர் என்று சொல்லப்பாடும் கம்மாளர்கள் மாப்பிள்ளை பொண்ணும் பல்லக்கில் ஊர்வலம் வர துளசி மகாராஜவிடம் அனுமதி வாங்கி போதிய பாதுகாப்புடன் வந்தாலும் ஆதிக்க சாதியினரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் கலவரம் நடத்தப்பட்டு கொலை பாதகம் வரை சென்றுள்ளது. இதனை, “கம்மாளர்கள் மஞ்சப் பாவாடை போட்டுக் கொண்டு பொண்ணையு மாப்பிள்ளையையும் பல்லக்கில் வைத்துக் கொண்டு மிகுந்த சந்தோஷத்தோடும் அனேகம் ஆடம்பரத்தோடுஞ் தஞ்சாவூருக் கோட்டைக்கு வந்தார்கள். ஊர் வலம் வரும் வழியில் ஆதிக்க சாதியினர் கூட்டங் கூடி, தடிகளையுஞ் சிலம்பக் கம்புகளையுங் கத்திகளையு மீட்டிகளையும் பிடித்திக் கொண்டுவிருந்து பண்ணிச் சாராயங் கள்ளுங் குடித்துக் கொண்டு, கொம்புத் தப்பட்டைச் சகலமும் பிடித்துக்கொண்டு, வடக்குக் கோட்டை வாசலுக்கு வெளியே வந்துப் தானைய மிறங்கியிருந்தார்கள் . கம்மாளருடன் சண்டையிட்டு மாப்பிள்ளையும் பிள்ளையுஞ் சில கம்மாளரையும் வெட்டி அவர்கள் தலைகளையீட்டி முனையிலேயுங் காலிலேயுங் கட்டிக் கொண்டு தெருவுக்குத் தெரு கடைக்குக் கடை திரிந்து காசு வாங்கினார்கள்”9 என்று தன் நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். எந்தச் சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் இந்தக் கொலை பாதகத்தைச் செய்தார்கள் என்று கூறிப்பிடவில்லை. ஆனால் இந்த மேற்கோள் இடங்கை வலங்கையர் வரலாறு எனும் நூலில் பக்கம் 92,93,94,95 ஆகிய பக்கங்களில் இடம் பெற்றிருக்கின்றது. துளசி ராசா கொடுத்த தண்டனை அறிந்து குடிவிலகியோடி பட்டிக்காட்டில் குடியேறியும் உள்ளனர். இந்தக் கொடூர செயலுக்குப் பின்னரும் இரண்டொரு கம்மாளர்கள் பல்லக்கு ஏறினதுண்டு என்ற பதிவும் உள்ளது.
பல்லக்கு அதன் அரசியல், பல்லக்கில் பயணிப்பது சமூக மதிப்பீட்டை காட்டும் வாழ்க்கை முறையாக இருந்திருக்கின்றது. இடையர் சமூக மக்களுக்கு சோழர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சில உரிமைகளில் “இடையர்கள் வீடுகட்டும் போது இருபுறமும் வாசற்படிகள் அமைத்துக் கொள்ளலாம்; வீடுகளுக்குச் சுண்ணாம்புச் சாந்து பூசிக் கொள்ளலாம்; நன்மைகளுக்கு சிவிகையேறலாம்”10 என்று தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் விக்கிரம சோழனது பதின்மூன்றாம் ஆண்டின் செய்யப்பட்ட உத்தரவாகும் என்கிறார். இயந்திர வாகனங்கள் பெருக்கங்கள் வந்த பிறகும் பல்லக்கு அமைப்புகள் குறைந்து போனது என்பதுதான் உண்மை, இருந்த போதும் அதன் குறியீட்டு வடிவம் மாறவில்லை. அரசன் அரசி மற்றும் தங்கள் சமூகம் உயர்ந்து என்பதான அடையாளத்தைப் பிறருக்கு உயர்த்தி காட்ட சமூக சடங்கில் வழியைச் செய்திருக்கின்றனர். இன்றும் கல்யாணத்தில் மாப்பிள்ளை, பெண் ஊர்வலம் அழைப்பு கார், குதிரை, யானை என்பன வசதி வாய்ப்புகளைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். தற்போதைய வழக்கத்தை போலவே அன்றும் மாப்பிள்ளை பொண்ணு பல்லக்கில் வந்து ஊர்வமாக கொண்டு வந்திருக்கின்றனர். அதற்கு அவர்கள் கொடுத்த விலை அந்த மாப்பிள்ளை பொண்ணும் கொலை செய்திருக்கின்றனர். அடுத்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பல்லக்கில் வரக்கூடாது என்பதற்காக நடந்த கொலையாகும்.
பல்லக்கு தூக்கிபவர்கள் பல்லக்கில் அமர்ந்து வலம் வருபவர்கள், இருவரும் மனிதர்கள் தான். சமூக அந்தஸ்தை பெற்றவர்கள் சமூகம் இருப்பின் அவர்களுக்கான வாழ்வியல் முறையைச் சொல்லிக் கொண்டுள்ளது. எல்லா கோவில்களிலும் பல்லக்கு தூக்கிகள் இருந்திருக்கின்றனர் மற்றும் பெருநில உடைமையாளர்கள் பல்லக்கு உரிமை பெற்றவர்களிடம் பல்லக்கு தூக்கிகள் இருந்திருக்கின்றனர். பிற்கால கட்டத்தில் இராமநாதபுர சேதுபதி மன்னரிடம் பல்லக்கு தூக்கிகளுக்கான கூலிகளை அடையாளப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இது ஒருசாவு சடங்கில் இடம் பெற்ற செலவு கணக்காகும். “அரசு பெண்டிரை கோட்டையிலிருந்து ஜார்ஜ்டவுனுக்கு பல்லக்கில் சுமந்து வந்த பல்லக்கு கூலி பல்லக்கு தூக்கிகள் கூலி 1.11.20, … பல்லக்கு வாடகை 0.25.40, பல்லக்கி தூக்கிகள் கூலி 3.10.10, பல்லக்கில் கட்ட நூல் கயிறு 0.25.40″11 என்பதாக காட்டப்பட்டு உள்ளது. மராட்டிய அரசர்கள் சுற்றுலா சார்ந்த வட நாடுகளுக்கு செல்லும்போது பல்லக்குகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர். பல்லக்கு தூக்கிகள் என்ற தனி இன அமைப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. “அபெட்டா, பெனியர், பெஸ்தர்,போந்தன்” என்ற பிரிவினர்கள் இருந்திருக்கின்றனர் என்கிறார் எட்க்ர் தர்ஸ்டன்.
பல்லக்கு தூக்கிகளை முட்டாள் என்ற பொருள் பதத்தில் சூட்டுவர். முட்டாள் என்பன அறிவிலியற்ற செயலைச் செய்வதாக இருக்கும். உண்மையில் முட்டு + ஆள்= முட்டாள் பல்லக்கிற்கு முட்டு கொடுக்கும் ஆள் முட்டாள் என்பதாகும். பல்லக்கு தூக்கி பயணிக்கும் போது தோள் பட்டையில் எப்போதும் வைத்து கொள்ள முடியாது முட்டு கொடுத்து நிற்பாட்டுவர். முட்டு கொடுக்கும் ஆள் முட்டாள் என்பன வந்தது
சமூக அடுக்கமைப்புகள் என்பதை சாதிய வர்ணங்கள் சூழ கட்டமைக்கப்பட்டுள்ளதை உணராதா பல்லக்கு தூக்கிகள் இருக்கின்றனர். வலங்கை இடங்கையர் சாதிய பூச தமிழ்ச் சமூகத்தில் நடந்திருப்பதை உணர வேண்டும். எத்தனை பந்த கால் நடுவது, மேளம் முழங்குவது, பல்லக்கிலோ அல்லது குதிரை மீது சவாரி செய்வது என இது போல பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்ட பிரிவினர்களும் உள்ளனர். நிராகறிக்கப்பட்டப் பிரிவினர்களையும் பார்க்க முடிகின்றது.
பல்லக்குப் பற்றி கூறிப்பிடும் போது சுந்தரராமசாமி பல்லக்குத் தூக்கிகள் என்ற சிறுகதை தொகுப்பை வெளியீட்டு இருக்கிறார். மு.ராமசாமி பல்லக்கு தூக்கிகளை வைத்து ஒரு நாடகத்தைச் செய்திருக்கிறார். இதை போகிறப்போக்கில் சொல்ல வேண்டியதுள்ளது.
பல்லக்கு மரியாதைக்குரியதாக உள்ளதாகவும். இன்னொரு பக்கத்தில் பல்லக்கில் ஏறுவதை சமூக தடைகளை இருந்திருக்கிறது.. பல்லக்கு ஏறும் உரிமையை மன்னர்களிடம் கேட்டு கைவினைஞர் வகுப்பினர்களும், இடையர்களும் பெற்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியும் உள்ளது. “கம்மாளர்கள் பல்லக்கு ஏறினால் கண்டவருக்கெல்லாம் கீழே இறங்க வேண்டும்” என்ற பழமொழி உணர்த்துகிறது. கம்மாளர் உயர்ந்த மதிப்பைப் பெற்று பல்லக்கில் வரும்போது அவர்களை விட உயர்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தால் பல்லக்கை விட்டு கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கிறது பல்லக்கில் இருந்து ஒருவர் ஏறி சர்வசாதாரணமாக பயணிக்க முடியுமா என்றால் அதற்கு ஒரு அரசியல் கட்டுகள் ஏற்படுத்தி உடைக்க முயற்சி செய்வார்கள். பல்லக்கு மிக இயல்பான பயணிக்கும் வாகனமாக ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் ஒரு ஆட்படுத்தப்பட்ட வரலாற்றை வைத்திருக்கின்றனர். ஆனந்தரங்கப்பிள்ளை பல்லக்கு ஏறி செல்வதற்கான உரிமையைப் பெற்று இருக்கிறார். மேலும் சாவு ஊர்வலங்கள் நடத்தப்படுகிற போது பல்லக்கு பரிவாரங்களோடு அவரைக் கொண்டு போகக்கூடிய நிலையை நாம் பார்க்கலாம் இதுவும் ஒரு வகையான சமூக மதிப்பீடை இங்கே ஆட்படுத்திக் கொள்வதற்காக உருவானது தான்.
குறிப்புக்கள்:
1.செ.இராசு., கொங்கு வேளாளர் செப்பேடு பட்டயங்கள்., ப.8
2 மேலது., ப.52
3 மேற்கோள். ஆ.சிவசுப்பிரமணியன்., அடித்தளா மக்கள் வரலாறு., பக். 45-46
4 மேற்கோள். இர. ஆலாலசுந்தரம்., ஆனந்தரங்கப் பிள்ளை கால அரசியலும் சமுதாயமும்.,ப.18
5 மேலது.,ப. 24
6 ர.ஜார்ஜ், சே.ச., கழுகுமலையில் கிளர்ச்சியும் வளர்ச்சியும்1895., ப.v
7 மேலது., ப.46
8 மேற்கோள். கே.கே.பிள்ளை., தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்., ப.412
9 மேற்கோள் ஆ.சிவசுப்பிரமணியன்., அடித்தளா மக்கள் வரலாறு., பக். 46-47
10 தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் ஆய்வுகள்- 5 ., ப.96
11 எஸ்.எம்.கமால்., விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.,