பணம் பத்தும் செய்யும்

பாலில் இருக்கும் மலாய் (மேலாடை) எவ்வளவு செறிவானதாக இருக்குமோ அது போல படாடோபமான இளவரசன் ஒருவன் அரசர் வாழ்ந்து வந்த சாலையில் அவருடைய அரண்மனைக்கு எதிராகவே ஓர் அரண்மனை கட்டினான். அது அரசருடைய அரண்மனையை விட அற்புதமாக இருந்தது. அரண்மனை கட்டி முடிந்தவுடன் அதில் அனைவருக்கும் பளிச்சென்று தெரியும்படி ‘பணம் பத்தும் செய்யும்’ எனப் பொறித்து வைத்தான்.

அரசர் வெளியே வந்து அதைப் பார்த்தவுடன் தனது அரசவைக்கு இதுவரை வந்திராத, நகரத்துக்குப் புதியவனான அந்த இளவரசனை அழைத்து வரும்படிக் கூறினார்.

அவன் வந்தவுடன் அவனைப் பார்த்து, ‘வாழ்த்துகள். உங்களுடைய அரண்மனை உண்மையிலேயே அற்புதமாக இருக்கிறது. அதோடு ஒப்பிடும் போது என்னுடைய அரண்மனை குடிசையைப் போல இருக்கிறது’ என்றார். வாழ்த்துக்கள்! ‘பணம் பத்தும் செய்யும்’ என எழுதி வைத்திருப்பது உங்களுடைய யோசனைதானா? எனக் கேட்டார்.

ஓ, அதனால்தான் நம்மைக் கூப்பிட்டு விட்டிருப்பாரோ என இளவரசன் நினைத்தான்.

‘ஆமாம், என்னுடைய யோசனைதான், ஆனால் மரியாதைக்குரிய அரசராகிய நீங்கள் விரும்பவில்லையெனில் அதை அகற்றிவிடுகிறேன்’ என்றான்.

‘ஓ, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் உங்களுடைய வாயிலிருந்து அந்தக் கூற்றுக்கு அர்த்தமென்னவெனக் கேட்க நினைத்தேன். உதாரணமாக, உங்களிடமிருக்கும் பணத்தால் என்னைக் கொன்றுவிட முடியும் என நினைக்கிறீர்களா? எனக் கேட்டார்.

தான் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டதாக இளவரசன் நினைத்துக் கொண்டான்.

‘ஓ, மரியாதைக்குரிய அரசரே, என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த சொற்களை அகற்றி விடுகிறேன். உங்களுக்கு அந்த அரண்மனை பிடிக்கவில்லையெனில் சொல்லுங்கள் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விடுகிறேன்’ என்றான்.

“இல்லை, இல்லை. அது இருப்பது போலவே இருக்கட்டும். ஆனால் பணம் வைத்திருக்கும் மனிதனால் எதை வேண்டுமென்றாலும் செய்யமுடியும் என நீங்கள் எழுதியிருப்பதை மட்டும் எனக்கு நிரூபித்துக் காண்பியுங்கள். நீங்கள் என்னுடைய மகளோடு பேச முயற்சி செய்யுங்கள். அதற்காக நான் மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அப்படி நீங்கள் அவளோடு பேசிவிட்டால், நல்லது, அவளை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி முடியவில்லையெனில், நான் உங்களை சிரச்சேதம் செய்து விடுவேன். சரியா?” எனக் கேட்டார்.

இதைக் கேட்ட இளவரசனுக்கு அந்த தருணத்திலிருந்து சாப்பிடுவதற்கோ, எதுவும் குடிப்பதற்கோ அல்லது தூங்குவதற்கோ முடியவில்லை. நாள்தோறும் தன் உயிரை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்கிற சிந்தனையிலேயே இருந்தான். நாம் எப்படியும் தோல்வியடைந்து விடுவோம் என இரண்டாவது நாள் அவன் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டு உயில் எழுதி வைக்கத் தீர்மானித்தான். அரசனுடைய மகளைப் பார்த்துப் பேசுவோம் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை ஏனெனில் அவள் இருந்த கோட்டையைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளிகள் காவல் காத்து வந்தனர். எனவே தனது சாவை எதிர்நோக்கிச் செய்வதறியாது தனது படுக்கையில் படுத்திருந்தான். அப்போது ஒரு மூத்த செவிலி அவனது அறைக்குள் நுழைந்தார். அவர் தான் அவன் குழந்தையாக இருந்ததிலிருந்து அவனைப் பேணி வளர்த்தவர். இளவரசன் படுக்கையில் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து அவனிடம், “என்ன பிரச்சனை?” எனக் கேட்டார். அவன் இதற்காகவேக் காத்திருருந்தவன் போல நடந்த அனைத்தையும் கூறினான்.

“அதனால? நீ நம்பிக்கையைக் கைவிட்டுட்டியா? இத நெனச்சா எனக்கு சிரிப்பா வருது! இதற்கு என்ன செய்யலாம் என்று நான் யோசிக்கிறேன்,” எனக் கூறினார்.

அங்கிருந்து கிளம்பிய அவர் நேராக வெள்ளி வேலை செய்யும் கொல்லரிடம் சென்று வெள்ளியில் அழகான வாத்து ஒன்றைப் பெரிய அளவில், ஒருவர் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளக்கூடிய அளவுக்குப் பண்ணித் தரும்படியும் அதன் அலகு அல்லது வாய் திறந்து மூடும்படி இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு ‘நாளைக்கு வேண்டும்’ எனக் கூறினார்.

‘நாளைக்கா? உங்களுக்கென்ன பைத்தியமா?’ என அந்தக் கொல்லர் கேட்டார்

‘நாளைக்கு வேண்டும்!’ என்று சொல்லிக்கொண்டே அந்த வயதான செவிலி தனது பையிலிருந்து சில தங்க நாணயங்களை எடுத்துக்காட்டி, ‘இது முன்பணம் பணம் தான்’. ‘நீ நாளைக்கு வாத்தை என்னிடம் கொடுக்கும் போது மீதிப் பணத்தைத் தருகிறேன்’ என்றார்.

கொல்லருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘உலகத்தில் இது (பணம்) எல்லா மாற்றங்களையும் உருவாக்கும் எனச் சொல்லிக்கொண்டே நாளைக்குத் தருவதற்கு முயல்கிறேன்’ என்றான்.

அடுத்த நாள் வாத்து தயாராகிவிட்டது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

அந்த வயதான பெண்மணி இளவரசனிடம், ‘நீ உன்னுடைய வயலினை எடுத்துக்கொண்டு இந்த வாத்துக்குள் போய் உட்கார்ந்துகொள். நாம் சாலையை அடைந்தவுடன் நீ வாசிக்க ஆரம்பி’ எனக் கூறினார்.

அந்தப் பெண்மணியும் வாத்தை கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டே செல்ல, சாலையை அடைந்தவுடன் இளவரசன் வயலின் வாசிக்க ஆரம்பித்தான். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்த வாத்தைப் பார்ப்பதற்காக வரிசையாக நின்றனர். இந்த அழகான வாத்தைப் பார்க்காத ஆத்மா அந்த நகரில் இல்லையெனும் அளவுக்கு அனைவரும் பார்த்தனர். இந்தச் செய்தி அரசனின் மகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோட்டையையும் சென்றடைந்தது. இதைக் கேட்ட அவள் அரசனிடம், அதைப் பார்க்கச் செல்வதற்குத் தன்னையும் அனுமதிக்குமாறு கேட்டாள்.

‘பெருமையடித்த இளவரசனுக்கு நாளைக்கு இறுதிநாள். எனவே நீ நாளைக்கு அந்த வாத்தை போய் பார்க்கலாம்’ என்றார்.

ஆனால் நாளைக்கு அந்த வயதான பெண்மணி வாத்தோடு போய்விடுவார் என அரசனின் மகளுக்குத் தெரியவர, அரசரும் அந்த வாத்தை கோட்டைக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார். இதைத் தான் அந்த வயதான பெண்மணியும் எதிர்பார்த்தார். இளவரசி தனியாக அந்த வெள்ளி வாத்துடன் இருந்தபோது அதன் அலகிலிருந்து மனதை மயக்கும் இசை வெளிவந்தது. திடீரென்று அந்த வாத்தின் அலகைத் திறந்து கொண்டு அதிலிருந்து இளவரசன் வெளியே வந்தான்.

‘பயப்பட வேண்டாம்’ என்றான் அவன். ‘நான் ஓர் இளவரசன். நான் உன்னோடு பேச வேண்டும் அல்லது உன் அப்பா நாளை காலை என்னைச் சிரச்சேதம் செய்து விடுவார். என்னோடு நீ பேசியதாக அவரிடம் கூறி என் உயிரைக் காப்பாற்று’ எனக் கேட்டுக் கொண்டான்.

அடுத்த நாள் இளவரசனை அழைத்து வருமாறு அரசன் ஆள் அனுப்பினான். ‘என்னுடைய மகளிடம் பேசுவதற்கு உன்னுடைய பணத்தால் முடிந்ததா?’ என அவனிடம் அரசர் கேட்டார்.

‘ஆமாம், மரியாதைக்குரியவரே,’ என்றான் அவன்.

“என்ன, நீ அவளிடம் பேசினாயா?”

“அவளைக் கேளுங்கள்”

இளவரசியும் அங்கே வந்து இளவரசன் எப்படி அந்த வாத்தில் மறைந்திருந்தான் என்பதையும், அரசரின் உத்தரவுப்படியே அது கோட்டைக்குள் கொண்டுவரப்பட்டது என்பதையும் கூறினாள்.

அதைக் கேட்ட அரசன் தனது தலையிலிருந்த கிரீடத்தைக் கழற்றி இளவரசனின் தலையில் அணிவித்தான். ‘உன்னிடம் பணம் மட்டுமில்லை மூளையும் இருக்கிறது! சந்தோஷமாக வாழ்வதற்கு நான் என்னுடைய மகளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்’ எனக் கூறி இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்தார்.

என்ன, பணம் பத்தும் செய்யுந்தானே?

Previous articleஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்
Next articleஜீவன் பென்னி கவிதைகள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments