ஆழ்நிலை சூழலியல் – கற்பனாவாதத் தத்துவம்

‘நம்மைக் குறித்து மட்டும் கூடுதல் கவனமும், மனிதரல்லாத உலகத்தின் மீதான அக்கறையின்மையும்தான் சுற்றுச்சூழல் சீரழிவுக்கும், உலகம் சந்திக்கும் சூழல் பேரழிவுக்கும் அடிப்படைக் காரணம்’ என்கிறார் பசுமை இயக்க ஆர்வலர் ராபின் எக்கர்ஸ்லி. ‘மனித மையப்’ பார்வையை கைவிட்டுவிட்டு சூழல் மையப் பார்வையை நாம் ஏற்றுக்கொண்டால், பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றம், வளம் குன்றும் ஆபத்து போன்றவை நீங்கிவிடும் எனக் கருதி ஆழ்நிலை சூழலியல் (deep ecology) தத்துவங்கள் செயல்படுகின்றன. ஆழ்நிலை சூழலியல் தத்துவத்தின் பிழைகள், போதாமை மற்றும் உள்ளபடியே மனித மையப் பார்வையை அகற்றி சூழல் மையப் பார்வை சாத்தியம்தானா போன்ற கேள்விகளையும், எப்படி நகைமுரணாக அனைவருக்குமான பூமி என முழக்கமிடும் ஆழ்நிலை சூழலியல் பல சமூகச் சூழல்களில் மனித வெறுப்புக் கோட்பாடுகளை முன்வைக்கிறது எனவும் இந்தக் கட்டுரை எளிய முறையில் விளக்குகிறது.

இருபத்தியொரு வயதே ஆன பேட்ரிக் வூட் குரூசியஸ், ஆகஸ்ட் 3, 2019 அன்று, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எல் பாசோ நகரின் வால்மார்ட் கடையில் பயங்கரவாதத் தாக்குதலில் சரமாரியாக இருபத்தி மூன்று பேரைச் சுட்டுக் கொன்றார். தனது வாக்குமூலத்தில் எதிர்காலச் சந்ததியினருக்கு பெரும் சுமையை உருவாக்கும் அமெரிக்க நுகர்வோர் கலாச்சாரம் குறித்தும், நீர் மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகள் குறித்தும் புலம்பினார்.

28 வயது இளைஞன் ப்ரெண்டன் ஹாரிசன் டாரன்ட், நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 15 மார்ச் 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அல் நூர் மசூதியிலும் லின்வுட் இஸ்லாமிய மையத்திலும் புகுந்து சரமாரியாக சுட்டு 51 பேரைக் கொன்றார். மேலும் தாக்குதலில் 40 பேர் காயமடைந்தனர். அவரவர் தமது இடத்தில் இருக்கவேண்டும்; வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வது இயற்கைக்கு விரோதமானது என்றும், இஸ்லாமியர்கள் கூடுதல் பிள்ளை பெற்றுக்கொண்டு சில ஆண்டுகளில் வெள்ளையர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடுவார்கள் எனவும், புவி வெப்பநிலை உயர்தல், காலநிலை மாற்றம் குறித்தக் கவலையால் உந்தப்பட்டு இந்தக் கொலைகளைச் செய்ததாகவும் அவர் அறிக்கை வெளியிட்டார்.

இவை இரண்டும் சமீப காலத்தில் பிரபலமாக அறியப்பட்ட சூழலியல்-பாசிச பயங்கரவாதச் செயல்கள் ஆகும். பூமியைக் காக்க மனிதர்கள் மடிய வேண்டும் இதுவே இவர்களின் தீர்வு – தத்துவக் கருத்து நிலை.

மாந்தர்கள் – பூமியின் சாபக்கேடு

எந்த ஒரு தத்துவத்தைப் பின்பற்றுபவர்களிலும் அதீதமாகச் செயல்படுவார் உண்டு; மானுட விடுதலைக்கு வித்திடும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு சில இயக்கங்கள் ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரில் பலரைப் படுகொலை செய்த போக்கு நமக்குத் தெரியும்தானே? அதுபோல இதுவும் ‘ஆழ்நிலை சூழலியலின் பிறழ்வு’ எனக் கருத இடம் உண்டு.

குறிப்பிட்ட இந்தப் பயங்கரவாத வன்முறையை ஆழ்நிலை சூழலியப் பார்வையின் வெளிப்பாடு எனக் கூற முடியாவிட்டாலும் மனித எதிர் நிலை என்பது ஆழ்நிலை சூழலியத்தின் கோட்பாடு. மாந்தர்கள் பூமியின் சாபக்கேடு; மாந்தர்கள் நேரடியான அழிவுசக்தி; அல்லது குறைந்த பட்சம் அறிவியல் ஆயுதம் ஏந்தும்போது அழிவுசக்தி என்பன ஆழ்நிலை சூழலியப் பார்வைகள்.

எடுத்துக்காட்டாக, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வெளிப்பட்ட சில கருத்துக்களைக் கூர்ந்து கவனிப்போம்.

கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியாக மார்ச் 2020-இல் உலகெங்கும் திடீர் என பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, முன்னெப்போதும் கண்டிராத வகையில் நாம் அனைவரும் வீட்டில் அடைபட்டுக் கிடந்தோம்.

அந்தச் சமயத்தில் கோவையில் சாலையில் மயில்கள் நடனம் ஆடுகின்றன; வெனிஸ் நீர்நிலைகளில் டால்பின்கள் (ஓங்கில்கள்) மறுபடி வந்து குடிபுகுந்துவிட்டன; காற்று மாசு இல்லாமல் வானம் பளிச் என்று நீல நிறமாகக் காட்சி தருகிறது என்றெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் வலம் வந்தது நினைவு இருக்கலாம்.

ட்விட்டர் முதலிய சமூக வலைதளங்களில் “ஆகா … பூமி மீண்டு எழுகிறது – காற்று மாசு வேகம் மட்டுப்படுகிறது – நீர் மாசு அகன்று வருகிறது – இயற்கை தன் வீட்டுக்குத் திரும்ப வருகிறது – கொரோனாதான் பூமியின் வாக்ஸின்; மனிதன்தான் வைரஸ்” எனவும் “மனிதன் என்கிற வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, உயிரோட்டமுள்ள பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது, அதற்காக பூமி உருவாக்கிக் கொண்ட ஆன்டிபாடிதான் கோவிட்-19” என்பன போன்ற செய்திகளும் பரவியது நினைவில் இருக்கலாம்.

கொரோனாவின் கடும் தாக்கத்தில் இருந்த நாம் – ‘ஆமாம்தானே? பாருங்கள், சில வாரங்கள் தொழிற்சாலைகள் இயங்கவில்லை; மனிதர்கள் நடமாட்டம் இன்றி வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர் என்றதுமே பாழடைந்தக் கட்டிடத்தில் புதர் மண்டுவது போல இயற்கை திரும்பவும் தன் இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது; டால்பின்கள், மயில்கள் போன்றவை அவை ஓடி ஆடிப் புழங்கிய இடத்தை மறுபடி கைப்பற்றியுள்ளன’ எனக் கருத நாம் துணிந்தோம்.

உள்ளபடியே கொரோனா பொதுமுடக்கத்தின்போது பெருமளவு மாசு குறைந்ததா, அந்த மாசு நீக்கம் நிரந்தரமானதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை; எனினும் அவை குறித்து இங்கே விவாதிக்கப் போவதில்லை

மனிதன் பூமியின் வைரசா? இந்தப் பார்வையின் பின்புலம் என்ன?  ஃப்ரான்ஸின் தத்துவவாதியான ஃபெலிக்ஸ் கட்டாரி (Félix Guattari) மற்றும் நார்வேனிய தத்துவவாதியான அர்ன நெஸ் (Arne Næss) முதலியோர் உருவாக்கிய ஆழ்நிலை சூழலியம் (Deep Ecology) தத்துவமே ‘மனிதன் பூமிக்கு ஏற்பட்ட சாபக்கேடு’ எனும் சமகால ஆழ்நிலை சூழலியல் பார்வையின் பின்புலம்.

ஆழ்நிலை சூழலியம்

1970-களில் நேப்பாளிய ஷெர்பா இன மக்கள் தாங்கள் புனிதமாகக் கருதும் இமயமலையின் செரிங்மா (கௌரி சங்கர்) சிகரத்தின் மீது ஐரோப்பிய மலையேறும் வீரர்கள் ஏறுவதை புனிதக்கேடாகக் கண்டனர்; எதிர்ப்பு தெரிவித்தனர். வனாந்தரப் பகுதியில் உல்லாசப் பயணம் செய்வதையும் மலை ஏறுவதையும் விருப்பமாகக் கொண்டிருந்த அர்ன நெஸ் ஷெர்பாக்களின் போரட்டத்தை நியாயம் எனக் கருதினர். அவர்களின் போராட்டத்துக்கு உறுதுணையாக சேர்ந்த அவர், சூழலியத்துக்கும் தத்துவ அறநெறி பார்வைகளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து சிந்தனைவயப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் உருவாக்கிய கொள்கைதான் ஆழ்நிலை சூழலியல்.

அவரது சமகாலத்திலும் சூழலியல் இயக்கங்கள் மாசு சீர்கேடுகளை எதிர்த்துத் தெருவில் போராடிக்கொண்டிருந்தன. பெருமளவு இடதுசாரி தத்துவப் பார்வை கொண்ட இந்த சூழல் இயக்கங்கள், தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசு போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்த்து இயக்கங்களை நடத்தி வந்தன. இது போன்ற சூழலியல் இயக்கங்களை மேலோட்ட சூழலியல் இயக்கம் (shallow ecology movement) என அர்ன நெஸ் வர்ணித்தார். மறுசுழற்சி, சொட்டுப் பாசனம் போன்ற தீவிர வேளாண்மை தொழில்நுட்பப் புதுமைகள், ஆற்றல் திறன் அதிகரித்தல், ஆற்றல் சேமிப்பு போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் ஓரளவுக்குப் பலன் அளிக்கும் என்றாலும் இவை வெறும் வலி நிவாரணம் மட்டுமே; நோயைக் குணப்படுத்தும் மருந்து இவையல்ல என்றார் அர்ன நெஸ். இவற்றின் மூலம் மட்டுமே புவியை அழிவின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாது என்றார் அவர்.

சூழல் மாசுகேட்டை அகற்றுதல், இயற்கை வளம் குறைவதைத் தடுத்தல் முதலியவை எல்லாம் மானுட மையவாதப் பார்வைதான் எனவும் இந்தப் பார்வை மனித இனத்தை சூழலியத்தின் மையமாக்குகிறது, மனித சக்தியைப் பிரதானப்படுத்தி பூமியின் மொத்தச் சூழலையும் கட்டுக்குள் வைக்க முயல்கிறது எனவும் விமர்சனம் செய்தார். இயற்கை வளங்களை, பிற உயிர்களை, மரத்தை, காடுகளை வெறும் பொருளியல் சார்புடன் பார்க்க, மேலோட்ட சூழலியல் பார்வை தூண்டுகிறது எனவும் அதைத் தாண்டி ஒவ்வோர் உயிரினமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று பார்க்க முனையும்போதுதான் ஆழ்நிலை சூழலியல் பார்வை உருவாகிறது என்றும் சொன்னார். மேலும் சூழல் மாசு மற்றும் வளக்குறைவுப் போக்கைச் சமாளிக்க, மாசுக் கட்டுப்பாடுகளை விதித்தால், அதன் நீட்சியாக விலை உயர்வு ஏற்படுகிறது; இதன் தொடர்ச்சியாக வர்க்க வேறுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் மேலும் கூர்மையடையும் எனச் சுட்டிக்காட்டி, திட்டமிடப்படாத சமூக விளைவுகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர். எனவே மேலோட்ட சூழலியல், அடிப்படையில் மேலும் மேலும் சமத்துவமின்மையை ஊக்குவிக்கும் என்றார்.

உள்ளபடியே ஆழ்நிலை சூழலியப் பார்வை உருவாக நாம் சூழலியத்திலிருந்து, சூழலியல் தத்துவ (From ecology to ecosophy) நிலைக்குச் செல்லவேண்டும் என்றார் அவர். 1972-இல் உருவான ஆழ்நிலை சூழலியல் இயக்கம் இரண்டு முக்கியக் கருத்துக்களை வலியுறுத்தியது. முதலாவதாக, மனிதனை மையமாகக் கொண்ட மானுட மைய வாதத்திலிருந்து (anthropocentrism) ஒவ்வொரு உயிரினமும் அதன் பயனைப் பொருட்படுத்தாமல் உள்ளார்ந்த மதிப்பைக் கொண்டாடும்படியான சூழல் மையப் பார்வைக்கு (ecocentrism) மாற வேண்டும். இரண்டாவதாக, மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி; இயற்கைக்கு மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் இல்லை. எனவே தன்னை அல்லது தன் குடும்பத்தைப் பாதுகாப்பது போல உலகின் அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கும் அறநெறி கடமையைக் கொண்டுள்ளனர்.

சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் அறநெறியின் அடிப்படையில் புதிய மானுட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றார் அவர். அன்றைக்கு நிலவி வந்த முதலாளித்துவ சமூக அமைப்பு, உலகெங்கும் உருவாக்கி வந்த சோஷலிச சமூக அமைப்பு இரண்டிற்கும் மாற்றாக இந்த ஆழ்நிலை சூழல் தத்துவ அடிப்படையில் உருவாகும் சமூக அமைப்பு இருக்கும் எனவும் இந்த அமைப்பு சூழலியல் சமத்துவம் பேணும் வகையில் அனைத்து உயிரிகளுக்கும் சமத்துவம் எனச் செயல்படும் எனவும் கூறினார். இதன் தொடர்ச்சியாக மனிதனை மையப்படுத்தாத உலகம், ‘இயற்கை இயற்கைக்காகவே’ எனும் பார்வையில் இயற்கையை அதன் சொந்த நலனுக்காகப் பாதுகாப்பதன் முக்கியத்துவம், இன்றைய நுகர்வு கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக இயற்கை வளம் குன்றல், மாசு படல் அதிகரிக்கிறது எனவே காந்தியின் அரைகுறை ஆடை போல ‘மினிமலிச’ நுகர்வுக் கொள்கை, இயற்கையின் மாசு மற்றும் அழிவுக்குப் பங்களிக்கும் பொருளுற்பத்தி, பண்டங்களைப் புறக்கணித்தல், எளிமையான வாழ்க்கைமுறைக்குத் திரும்புதல் போன்ற வாழ்வுநெறிகளை ஆழ்நிலை சூழலியல் முன்னிறுத்துகிறது. அதாவது சூழல் மையப் பார்வையை ‘சூழலியல் நல்லிணக்கம் அல்லது சமநிலையைப் பேணுவதற்கான முன்னெடுப்பு’ எனப் புரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.

1984-இல் அமெரிக்க தத்துவ அறிஞர் ஜார்ஜ் செஷன்ஸ் என்பாருடன் இணைந்து ஆர்ன நெஸ் எழுதிய ஆழ்நிலை சூழலியல் – அடிப்படைக் கோட்பாடுகள் – சூழல் மைய சமத்துவம் (Deep Ecology Basic Principles -Biocentric Equality) எனும் நூலில் தமது தத்துவங்களை செம்மைப்படுத்தி எட்டு அடிப்படை விதிகளை உருவாக்கினார்கள். ஆழநிலை சூழலியல் – இயற்கையைப் பொருட்படுத்தி வாழ்க்கையை வாழ்வது (Deep Ecology: Living As If Nature Mattered) எனும் நூலில் விரிவாக இந்தக் கொள்கையை விவரித்தார்கள்.

மார்க்சியம் முதலிய பழமை பார்வை; இவை மனிதனை மையப்படுத்தி செயல்படும் தத்துவம், அவை சம கால சமூகத்துக்கு அதுவும் குறிப்பாகக் காலநிலை சவாலை சந்தித்து வரும் கால கட்டத்துக்குப் பொருந்தி வாராது எனவும், தாமே நவீன இடதுசாரிகள் எனவும் இந்தப் பசுமை இயக்கங்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

‘பூமியில் மனித மற்றும் மற்ற அனைத்து உயிரிகளின் நல்வாழ்வும் செழிப்பும் உள்ளார்ந்த மதிப்பு உள்ளது. (The well-being and flourishing of human and non-human life on Earth have intrinsic value.)  மனிதனின் பார்வையில் பயன் அல்லது பயனில்லை என்பதற்கு அப்பால் இந்த மதிப்பு ஒவ்வொரு உயிரிக்கும் உள்ளது’ எனவும் ‘மனித வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்களின் செழிப்பும் மனித மக்கள்தொகை கணிசமான குறைவதும் இணக்கமானது. மனிதர்கள் தவிர்த்த உயிரிகள் வாழ மனித மக்கள்தொகை குறைப்பு தேவைப்படுகிறது’ எனக் கூறினார்கள். எனவே வரலாற்றில் மனிதனின் போக்கைக் காணும்போது “பூமி தற்கொலை செய்துகொள்ள நினைத்தது அதன் விருப்பத்தில் உயிரியக்கப் பரிணாமத்தில் மனிதன் பிறந்தான் என்று ஒரு எதிர்மறைச் சிந்தனை மனதில் தோன்றுகிறது” என்று ஆழ்நிலை சூழலியல் தத்துவத்தை கையில் எடுப்பவர்கள் கூறுவது வியப்பில்லை. ‘காலநிலை மாற்றம்’ மனிதனால் பூமியைத் தொற்றிய வியாதி; கொரோனா வைரஸ்தான் தீர்வு’ என்ற கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது எனக் காணலாம்.++++

மனித மைய சிந்தனை

யானை, பூனை போல மனிதனும் இந்த இயற்கை உருவாக்கிய உயிரிதானே? அப்படி இருக்கும்போது மனிதனால் அழிவின் பிடியில் பூமி எப்படி சென்றது? மேற்குலகில் உருவான சில சிந்தனை, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ‘மனித மைய’ மனநிலையின் தொடர்ச்சியே மனிதனை அழிக்கும் சக்தியாக மாற்றி பூமியை அழிவு விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளது என ஆழ்நிலை சூழல் தத்துவவாதிகள் விளக்கம் அளித்தனர்.

மற்ற விலங்குகளைப் போல இரையைத் தேடிச் செல்லாமல் உணவு பெற விவசாயம் செய்யத் துவங்கிய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைக்கு எதிராக தனது வலுவத்தை முன்வைக்கும் அளவுக்கு அவனுக்கு தன் மீதும் தனது அறிவின் மீதும் நம்பிக்கை பிறந்து விட்டது. அரிஸ்டாடிலின் உயிர் ஏணி (ladder of being) எனும் கருத்தாக்கம்தான் மேலைப் பண்பாடுகளின் அடிநாதம் எனவும் இந்தப் பார்வையில் பூமியின் உயிர் இயக்கத்தில் மனிதன்தான் அனைத்துக்கும் மேலானவன் என்ற கருத்துரு உருவானது. இந்த கருத்துருவின் தொடர்ச்சியாக தான் செமிடிக் மதங்களான யூத மதம், கிருத்துவ மதம், இஸ்லாமிய மதம் போன்றவை கடவுளின் சாயலில் மனிதன் எனும் கருத்தைக் கூறுகின்றனர்.

அனைத்து உயிரினங்களுக்கும் மேலான நிலையில் மனிதன் என்ற கருத்துருவின் தொடர்ச்சியாக ஏனைய விலங்குகள் தனக்கு சேவை செய்யப் படைக்கப்பட்டுள்ளன என்று கருதத் தொடங்குகிறான். எல்லா உயிரிகளுக்கும் மேலான நிலையில் இருக்கும் தானே உயிரினங்களில் ராஜா எனவும் எல்லா உயிரினங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் உரிமை தனக்கு உள்ளது எனவும் கருதிக் கொள்கிறான். இந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாக அரிஸ்டாடிலின் காலமான கிமு 340 கால கட்டத்தில் தான் தனது அறிவு கொண்டு பேரியற்கைக்கு எதிராக இயங்க முடியும் என மனிதனின் அகம்பாவம் தலைதூக்கியது.

அறிவியல் புரட்சி நடந்த பதினைந்தாம் நூற்றாண்டில் அசுர வேகத்தில் மனிதனின் செயல்கள் விரிவடைந்தன. கடவுளின் கட்டளையை மீறி நன்மை-தீமையைப் பிரித்தறியும் அறிவைத் தரும் மரத்தின் பழத்தை உண்டதின் விளைவாக ஏடன் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மனித இனம் அறிவியலின் துணையோடு விலங்குகளின் மீதான ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் என ஃப்ரான்ஸிஸ் பேகான் கூறினார்.  அறிவே ஆயுதம் என்பதே அவரின் கோட்பாட்டு முழக்கம். “காரண காரிய சங்கிலித் தொடரில் இறுதிக் காரணம் எனப் பார்த்தால் இயற்கையின் மையத்தில் மனிதன் உள்ளான் என கருதலாம். மனிதனை நீக்கி இயற்கையை நோக்கினால் எந்தவிதக் குறிக்கோளும் இன்றி இலக்கோ நோக்கமோ இல்லாமல் தற்குறியாக இயற்கை இயங்குவது போல தோன்றும். மனிதனின் சேவையில் முழு உலகமும் இணைந்து ஒன்றாக வேலை செய்கிறது; மேலும் அவன் பயன் அல்லது பலன் பெறாதது எதுவுமில்லை. மனிதனின் தேவையைக் கணக்கில் கொண்டு இயங்குவதாக தமக்கென்று குறிக்கோள் ஏதுமற்றதாகத்தான் இயற்கை புலப்படுகிறது” என்றார் அவர் (1).

அறிவியலின் வளர்ச்சி ‘இயற்கை உலகம் மனிதனுக்காகவே உருவாகியுள்ளது, அதைக் கட்டுப்படுத்தி சுரண்டுவது மனிதனின் உரிமை…’ என்ற பேகனின் கருத்து வலுப்பெற வழிவகுத்தது. அறிவியலின் வழிமுறைகளைக் கைக்கொண்டு இயற்கையின் ஒழுங்கமைப்பு மற்றும் விதிகளை இனம் கண்டு கொள்ளலாம். அதன் மூலம் இயற்கையை நமது விருப்ப தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனும் முனைப்புக் கருத்து மேற்குலகின் புத்தொளிக்காலத்தில் உருவானது. எடுத்துக்காட்டாக வெப்ப விதிகளைப் புரிந்து கொள்வதன் மூலம் நீராவி என்ஜின்களை தயார் செய்வது; அதன் மூலம் இயக்கங்களைத் தரும் கருவிகளை உருவாக்கி நூல் உற்பத்தி முதல் பல்வேறு தொழில்களை இயந்திர மயமாக்கும் சாத்தியம் அடைந்தது. இந்தக் கருத்தாக்கத்தினால் விளைந்த மறுமலர்ச்சி (renaissance) காலகட்டம் உண்மையில் மனிதன் இயற்கைக்கு எதிரான ருத்ரதாண்டவம் ஆடத் துவங்கிய காலகட்டம். மனிதனின் பகுத்தறிவு அகம்பாவம்தான் சூழலியல்கேட்டுக்கு முழுமுதல் காரணம்.

இந்த சிந்தனை மரபின் தொடர்ச்சியாகதான் சூழலியல் ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது; உலகம் அழிவின் பிடியில் சென்றுள்ளது. புவிப்பந்தை ஆபத்தின் விளிம்புக்கு எடுத்துச் செல்லும் மனித மையப் பார்வையை விடுத்து இயற்கைச் சூழல் மையவாதம் (Eco-centrism) நோக்கிய நகர்வுதான் ஆழ்நிலை சூழலியம் (Deep Ecology) எனக் கட்டமைத்தனர்.

எல்லை மீறும் மனித இனம்

அன்றைக்கு சோவியத் யூனியன் போன்ற சோசலிச நாடுகளில் அனைவருக்கும் வேலை, கல்வி, மருத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட சூழலில் மேலை நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மக்கள்நல அரசமைப்பு (welfare state) எனும் கொள்கையைத் தாமும் பின்பற்ற வேண்டி வந்தது. ஓரளவேனும் பொது சுகாதார வசதி, கல்வி வசதி, வறுமை ஒழிப்பு போன்ற செயல்களில் மக்கள்நல அரசுகள் செயல்பட வேண்டி வந்தது. தொற்றுநோய் குறைப்பு, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக வளரும் நாடுகளின் மக்கள்தொகை பெருகத் துவங்கியது.

தெற்கு வறுமை சட்ட மைய (Southern Poverty Law Center) சூழலியல் தத்துவ கருத்தாளர் கேரட் ஹார்டின் என்னும் பொருளியலாளர் 1968-இல் பொதுமங்களின் அவலம் (Tragedy of the commons) எனும் பொருளியல் கோட்பாட்டை முன்வைத்தார். தங்கள் தன்னலத்திற்காக ஒவ்வொரு தனிநபரும் செயல்படும்போது பொதுமங்கள் அழிந்து விடும் என்றார். பொது மேய்ச்சல் வெளி இருக்கிறது எனக் கொள்வோம். அது யாருக்கும் சொந்தம் இல்லை; யார் வேண்டுமென்றாலும் அங்கே தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மேய்ப்பரும் தங்களின் சுயநலத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் கால்நடைகளை மேய்ச்சல் செய்வார்கள். மேய்ச்சல் இலவசம் என்பதால் யாரும் மேய்ச்சல் நிலம் வளமை அடைய எந்தவித செயலிலும் ஈடுபட மாட்டார்கள். தீவிர மேய்ச்சல் செய்ததன் விளைவாகக் காலப்போக்கில் மேய்ச்சல் நிலம் தரிசாக மாறி அழிந்து விடும். இதுவே அவரது கருத்தின் சாரம்.

இதே கேரட் ஹார்டின் 1974 பூமி எனும் விண்கலம் (spaceship; Earth) எனும் உருவகத்தை உருவாக்கினார். உயிர்க்காப்புப் படகு (Life boat) ஒன்று கடலில் ஐம்பது பேருடன் மிதக்கிறது எனக் கொள்வோம். அந்தப் படகில் மொத்தம் அறுபது பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். அந்த உயிர்க்காப்புப் படகை சுற்றி நூறு பேர் கடலில் தத்தளிக்கிறார்கள். எந்த அறுபது பேரை காப்பாற்றப் போகிறோம்? யாரை விடப் போகிறோம் என கேரட் ஹார்டின் கேள்வியை எழுப்பினார். பூமியின் வளங்கள் குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையைத் தாங்கும் சக்தி படைத்தவை; அதிகரிக்கும் மக்கள்தொகையைத் தாங்கும் ஆற்றல் இல்லை என்பதை இவ்வாறு விளக்கினார். பால் எர்லிச் மக்கள்தொகை பயங்கரம் (The Population Bomb) எனும் நூலும் சூழல் மாசுக்கும் இயற்கை வளங்கள் சடசடவெனக் குன்றுவதற்கும் மக்கள்தொகை பெருக்கம்; அதுவும் குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கமே காரணம் என வாதம் செய்தது.

கடலில் உள்ள நூறு பேரும் படகில் ஏறினால் படகு கவிழ்ந்து அனைவரும் மடிய நேரிடும். பொதுமங்கள் மீது பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்ற மக்கள்நல அரசுக் கொள்கை, பூமி எனும் விண்கலத்தைக் குப்புறப் புரட்டி போட்டுவிடும் என்று வாதம் செய்த கேரட் ஹார்டின் “பிறந்த அனைவருக்கும் பொதுமங்களின் மீது (உலகின் வளங்களுக்கும்) சம உரிமை உண்டு என்ற கோட்பாடு தவிர்க்க முடியாமல் பேரழிவிற்கு வழிவகுக்கும்” என்று மக்கள்நல அமைப்பைக் குறை கூறினார்.

‘இயற்கைக்கு’ மாறாக மக்கள் நல அரசு ‘செயற்கையாக’ வாய்ப்பு வசதிகளை செய்து கொடுப்பதால்தான் தாங்கும் அளவைவிட கூடுதல் மக்கள்தொகை ஏற்பட்டு விடுகிறது; இயற்கையாக விட்டுவிட்டால் எப்படி மற்ற விலங்குகளில் தொகை கட்டுக்குள் உள்ளதோ அதே போல மனித இனத்தின் தொகையும் கட்டுக்குள் வந்துவிடும் என இந்தக் கோட்பாடு கூறாமல் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகப் பொதுமையென எதுவும் இருக்கக்கூடாது எல்லாம் தனியார் மயமாக வேண்டும் என்ற கொள்கை வலுபெற்றது. எனவே வறியவர்கள் எளியவர்கள் ஏழ்மை நாடுகளில் உள்ளவர்கள் மடிந்தால் அது இயற்கை என கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டும் எனப் போதனை செய்கிறது. நீர் நிலைகள் உட்பட இயற்கை வளங்களைத் தனியார்மயம் செய்யும் போக்கின் பின்புலத்தில் இந்தத் தத்துவம் வேலை செய்கிறது.

அனைவருக்குமான பூமி

ஆழ்நிலை சூழலியல் தத்துவப் பின்னணியில் மனிதனுக்கு மட்டும்தான் பூமியில் உரிமையா? வேறு உயிரிகளுக்குப் பூமியில் உயிர் வாழ உரிமை இல்லையா? எனப் பசுமை இயக்கத்தினர் பலரும் சூழல் சிக்கலைத் தார்மீகக் கேள்வியாக அணுகுகின்றனர். இதன் தொடர்ச்சியாக மனித மைய சூழல் பார்வையை ஒதுக்கி, சூழல் மையப் பார்வை சார்ந்த நெறிகளைக் கடைப்பிடிப்பதன் வழியே சூழல் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் எனக் கருதுகின்றனர்.

இயற்கையின் உள்ளார்ந்த மதிப்பு (intrinsic value of nature) மற்றும் சூழல் சிந்தனைசார் நெறி (ecocentric ethic) என்பதை வலியுறுத்தும் ஆழ்நிலை சூழலியல் பார்வை அடிப்படையில் மானுட மைய வாதம்தான் சூழல் மாசுக்கும் புவி அழிவின் விளிம்புக்குச் செல்வதற்கும் அடிப்படை முழுமுதல் காரணம் எனக் கருதுகிறது. ராபின் எக்கர்ஸ்லி எனும் சூழலியலாளர் “நம்மை (மனிதர்களை) முன்னிறுத்தும் சிந்தனையில், ஏனைய உயிரிகளைக் குறித்த அக்கறையின்மைதான் அடிப்படையில் சூழல் சீர்கேட்டுக்கும் அழிவுக்கும் காரணம்” என்கிறார். மற்ற உயிரினங்களைவிட மனிதர்கள் மதிப்புமிக்க உயிரினமாகக் கருதினால் மனிதரல்லாத இயற்கையின் தேவை அல்லது நலன்களை விட மனிதத் தேவையும் விருப்பமும் முன்னுரிமை பெற்றுவிடும். மனிதரல்லாத உயிர்கள் மற்றும் இயற்கையின் தேவை மிக முக்கியமானதாக, ஏன் இன்றியமையாததாக இருந்தாலும் கூட மனித விருப்பம் / தேவை முன்னுரிமை பெறும். மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் மனிதத் தலையீட்டை நீக்கி மனிதரல்லாத இயற்கையின் தார்மீக உரிமையை அங்கீகரித்த ஒரு புதிய நெறிமுறைக்கு நாம் மாறவேண்டும். எனவே மனிதர்கள் தவிர்த்த ஏனைய உயிரிகளின் ‘உள்ளார்ந்த மதிப்பை’ ஏற்றுக்கொண்டால்தான் சூழல் சீரடையும்; புவி பாதுகாப்பு உறுதிப்படும் எனவும் ஆழ்நிலை சூழலியல் வலியுறுத்துகிறது.

சூழல் மையப் பார்வை சாத்தியமா?

பெண்ணிய நோக்கு; தலித் நோக்கு, பழங்குடி நோக்கு, வர்க்க நோக்கு எனக் கூறும்போது அந்தந்தப் பிரிவினரோடு தம்மை அடையாளம் செய்து கொள்பவர்கள் விவாதத்தில் பங்கு பெறுகின்றார்கள். ‘மனிதரல்லாத’ சூழலியல் நோக்கு எனக் கூறும்போது மலை, திமிங்கலம், கொசு போன்றவை விவாதத்தில் பங்கு கொண்டு உரத்த சிந்தனை செய்து விவாதிப்பதில்லை. விலங்குகள் தாவரங்கள் போன்ற வேறு உயிரிகள் தமக்கு எது தேவை என கோரிக்கை வைப்பது இல்லை. எனவே மீனின் உள்ளார்ந்த தார்மீக உரிமை என்ன என்பது குறித்து நாம் விவாதம் செய்யமுடியாது; மீனுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கும் என மனிதர்களாகிய நாம் கருதல் முடிவுக்கு மட்டுமே வரமுடியும்; அவை குறித்து மட்டுமே நம்மால் பேசமுடியும்.’சூழல் மையப் பார்வை’ என்றாலும் விவாதத்தில் மனிதர்களாகிய நாம் மட்டுமே பங்கு பெறுகிறோம். மனிதர்கள் அல்லாத மற்ற உயிரிகள் மற்றும் உயிரற்ற இயற்கை குறித்து நமது உணர்வுகள், நமது கருத்துக்கள் நமது விருப்பு வெறுப்புகள் சார்ந்து அவை குறித்த தீர்மானத்துக்கு வருகிறோம்.

மேலும் மனிதர்களால் மட்டுமே சூழல் மையக் கருத்துக்களை உருவாக்கி செழுமை செய்து அவற்றைச் செயல்படுத்தவும் முடியும். மனிதர்களாகிய நம்மிடம் இயற்கையோடும் மற்ற உயிரினங்களோடும் இணங்கி வாழ வேண்டும் என தார்மீக அறிவுரை கூற முடியும். புலியிடம் சென்று மானுக்கும் வாழ்வுரிமை உண்டு என்றோ; பல்லியிடம் சென்று பூச்சிக்கு வதைபடாமல் இருக்க உரிமை உண்டு என்றோ யாரும் அறநெறி கற்பிக்கப் போவதில்லை.

எந்த ஒரு பயனும் இன்றி, இலக்கு இன்றி இயற்கையை சூறையாடுவது பிழையாகக் காணலாம்தான். அது ஒருவகை அழிவுச்செயல்தான்.  ஆனால் மலேரியா கிருமியை ஏந்தி, கடிக்க வரும் கொசுவைக் கொல்வது தார்மீகமா? அல்லது அனைத்து உயிரினங்களையும் சமமாக மதித்து இயற்கையை அதன் கொடிய போக்கில் செல்ல அனுமதிக்க வேண்டுமா? இது எதோ கேலிப்பேச்சு எனக் கருதி விடவேண்டாம். ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் எஹ்ரென்ஃபெல்ட் உள்ளபடியே வைசூரி எனப்படும் பெரியம்மை வைரசுக்கும் வாழ்வதற்கு உரிமையுள்ளது; எனவே பெரியம்மை தடுப்பூசி போட்டு அதை அழிப்பது நெறியற்றச் செயல் எனக் கூறுகிறார். உணர்வுபூர்வமாக நம்மைச் சுண்டி இழுத்தாலும் அனைத்து உயிரிகளின் உள்ளார்ந்த மதிப்பு எனும் கருத்தும் தெளிவற்றது.

பல்லுயிர் பாதுகாப்பு என்பது அவசியம்தான்; பல்லுயிர் சங்கிலி அற்றுப் போனால் சூழல் சீரழிவு ஏற்பட்டு நமது வாழ்விடங்கள் அவலமாகும். ஆயினும் எல்லா உயிர்களின் சமஉரிமை என்பது உணர்வுபூர்வமாக நம்மைக் கவர்ந்தாலும் பிழையான பார்வை. மனித உரிமைபோல மற்ற உயிர்களுக்கு உரிமை என்பது பொருந்தாக் கோட்பாடு. மனிதர்களாகிய நம்மால் மட்டுமே தேவையற்று விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் எனக் கருதி நெறியோடு செயல்பட முடியும்; தன் இரையாக மானைக் கொல்லும்போது புலி ஒன்றும் மானின் உயிர் வாழும் உரிமை குறித்து சிந்திக்கப்போவதில்லை. எனவே நடைமுறையில் ‘மனித மைய’ சிந்தனை மட்டுமே நமக்கு சாத்தியம் – புலியின் பார்வையில் எறும்பின் பார்வையில் காணுவோம் என்பது கவித்துவமாக இருக்கலாம் மெய்யாகச் சாத்தியம் இல்லை.

மனித மையப் பார்வை X சூழல் மையப் பார்வை எனும் பிரிவு போலியான பிளவு. மேலே விளக்கியது போல இயற்கை மையப் பார்வை என்பது மனிதர்களாகிய நாம் நமது அறம் சார்ந்த உணர்வுகளின் அடிப்படையில் உருவாக்கும் மனிதக்கருத்துக்கள்தாம். மனிதர்களுக்கு அப்பாற்பட்ட கருத்துநிலை அல்ல. அதாவது இந்தப் பொருளில் மனித மையக் கருத்து மட்டுமே சாத்தியம்.

அதே சமயம் மனிதன் இயற்கையிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல: நாம் இயற்கை உலகில் ஒரு பகுதியாகவும், அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றக்கூடியவர்களாகவும் உள்ளோம். இயற்கையின்றி நம்மால் செயல்படவோ உயிர்வாழவோ முடியாது. காடுகளைத் திருத்திக் கழனி அமைக்கக் கனிமச் சுரங்கங்களிலிருந்து தாதுப்பொருள்களை பிரித்து எடுக்க நாம் இயற்கை விதிகளைப் புரிந்து உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துகிறோம். புவியீர்ப்பு விசைக்கு ஆட்பட்டு, வளிமண்டலக் காற்றை சுவாசித்து வாழும்போது அதே இயற்கை விதிகளுக்கு உட்பட்டுதான் வாழ்கிறோம். சுருக்கமாகக் கூறினால் மனித செயல்பாடு இயற்கையை உள்ளே இருந்து மாற்றுகிறது. இந்தப் பொருளில் நோக்கினால் சூழல் மையப் பார்வையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது.

பசுமையின் நிறம் சிவப்பு

மனித மைய சிந்தனைதான் பிரச்சினை என்பதும் தவறு; சூழல் மையப் பார்வை தீர்வும் அல்ல. மூன்றாம் தர சினிமாக்களில் வரும் வில்லன்களைப் போல மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணும் முதலாளிகளின் மனநிலையால் இயற்கையைச் சுரண்டும் போக்கு ஏற்படுவது இல்லை. உள்ளபடியே பல முதலாளிகள், பன்னாட்டு நிறுவன உயர் அதிகாரிகள் என இயற்கையின் மீதும் வனாந்தரம் மீதும் பற்று கொண்டவர்களாக இருப்பவர் பலர். அதாவது இயற்கையை அழித்தே தீரவேண்டும் என முதலாளித்துவம் கங்கணம் கட்டிக்கொண்டு செயலில் இறங்குவதில்லை.

போதிய நெறியுணர்வு இன்மையால் முதலாளித்துவம் கண்மூடித்தனமாகக் காட்டை அழித்து மரங்களை வெட்டி எடுத்தல், பூச்சிகளில் பரிணாம வளர்ச்சியைத் தூண்டும்படியான மரபணு மாற்றங்களை செய்த மரபணு மாற்றிய விதைகளை உருவாக்குதல், காற்று மற்றும் நீர்நிலை மாசு ஏற்படுத்தும்படியாக பொருளுற்பத்தி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இல்லை. இவை பெரும் லாபம் ஈட்டுகிறது என்பதால் இயற்கையைச் சுரண்டும்படியான நடைமுறையை முதலாளித்துவம் மேற்கொள்கிறது.

லாப நோக்கு பொருளுற்பத்தி எப்படி தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுகிறதோ அதே போலத்தான் இயற்கையையும் சுரண்டுகிறது. இந்த பின்னணியில்தான் சூழல் மாசு ஏற்படுத்தும் பொருளுற்பத்தி முறை நமது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது என விளக்கினார் இடதுசாரி சூழலியல் ஆர்வலர் பேரி காமன்னர்.

இயற்கையைச் சுரண்டுவதால் லாபம் வரும் என்றால், அந்த லாபவெறிக்கு எந்தக் கடிவாளமும் இல்லை என்றால் எவ்வளவுதான் அறநெறி போதனைகள் செய்தாலும் சுரண்டல் தொடரும். இந்த சுரண்டல் இறுதியில் பூமியை அழித்து மனித சமூகத்தின் இருத்தலையே கேள்வி கேட்கும் நிலைக்கு எடுத்துச் சென்றாலும் செக்குமாடு போல முதலாளித்துவம் லாபத்தை நோக்கி எதையும் சட்டை செய்யாமல் சென்று கொண்டே இருக்கும். “எந்த விலை கொடுத்தும் ஒரு டாலர் லாபம் சம்பாதிக்கும் முதலாளித்துவ உரிமை அரிதாகவே சவால் விடுக்கப்படுகிறது” என ரேச்சேல் கார்சன் சுட்டிக்காட்டினார்.

மனிதனின் பிழையான அல்லது அறநெறிப் பார்வையில் தவறான கருத்துக்கள் தாம் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன; எனவே அதற்கு மாற்றாக, சூழல் மையப் பார்வையை முன்வைத்து மனதை மாற்றினால் சூழல் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் எனும் கருத்து கற்பனாவாதக் கருத்து ஆகும். ஈர்ப்புவிசையை நாம் நம்ப மறுத்தால் நீரில் முழ்குவதிலிருந்து தப்பித்து விடலாம் என்பது போன்ற நகைப்புக்குரிய கருத்து முதல்வாத சிந்தனை ஆகும். ஈர்ப்பு விசையை நம்புவதால்தான் நாம் நீரில் முழ்கி விடுகிறோம் என்று கூறுவது அபத்தம் என எடுத்த எடுப்பிலேயே நமக்கு புரிந்து விடுகிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவைக் குறித்த தப்பெண்ணங்கள்தாம் சூழல் அவலத்துக்கு நம்மை எடுத்துச் சென்றுள்ளன எனக் கூறும் இயற்கை மைய சூழலியல் பேசுபவர் பலரின் தத்துவப் பார்வையும் இதே கருத்து முதல்வாத தத்துவமாக தான் சூட்சுமமாக இருக்கிறது.

இதன் பொருள் இயற்கையை அழிக்கும் போக்குக்கு எதிராக அறநெறி அடிப்படையில் விமர்சனம் செய்யக்கூடாது என்பதல்ல. ஒழுக்கப்பண்பு மற்றும் நன்னடத்தை (morality) என்பதும் ஒழுக்கத்தின் பெயரால் வேண்டாத் தலையீடுகள் செய்யும் ஒழுக்கவாதமும் (moralism) வெவ்வேறானவை (2).

“விடுதலை என்பது ஒரு வரலாற்றுச் செயல்பாடே தவிர, சிந்தனை செயல் அல்ல (liberation is a historical and not a mental act) எனும் மார்க்ஸ் எங்கெல்ஸ், மேலும் “தான் என்ற அகங்காரத்துக்கு எதிர்மறையாக தன்னலமற்ற சிந்தனை அல்லது தன்னலமற்ற தன்மைக்கு எதிர்மறையாக அகங்காரத்தையோ நிறுத்தவில்லை. இந்த முரண்பாட்டை உணர்வு நிலை அல்லது உயர்த்திப் போற்றும் கருத்தியலாக கோட்பாட்டளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்த சிந்தனைகளைத் தூண்டும் புறநிலையை வெளிச்சமிட்டுக்” காணவேண்டும் எனக் கூறுகிறார்கள் (3).

லாபவெறி கொண்டு மதம் பிடித்த யானை போல சுற்றுச்சூழலை முதலாளித்துவம் அழித்து சுரண்டுவதைக் கண்டு நம்மில் எழும் அறச்சீற்றம் முற்றிலும் பொருத்தமானது; நியாயமானது. ஆனால் அந்த அழிவுக்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரண-காரணங்களின் தெளிவான பகுப்பாய்வுகளால் மட்டுமே தீர்வுகளை அடையாளம் காண முடியும்.

சந்தை சார் பொருளுற்பத்தி முறையும் சூழல் சிக்கலும்

சுற்றுச்சூழல் அழிவுக்குக் காரணம் மானுட மைய சிந்தனை அல்ல.  அப்படியானால் சூழல் அழிவின் வேர் எங்கே இருக்கிறது? “இயற்கையை விற்பனைப் பண்டங்களாகவும், விற்பனைப் பண்டங்களை மூலதனமாகவும் மாற்றி, வாழும் பூமியை உயிரற்ற செல்வமாக மாற்றுவதே முதலாளித்துவத்தின் சாராம்சம். இந்தக் கண்மூடித்தனமான மூலதனக் குவிப்பு செயல்முறை உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பில் அழிவை ஏற்படுத்துகிறது” என்கிறார் மைக்கேல் பேரெண்டி. மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே இயற்கை என்ற கருத்து காரணமாக இயற்கையைச் சுரண்டுகின்ற லாபவெறி கொண்ட பொருளுற்பத்தி முறை உருவாகவில்லை; மாறாக அத்தகைய பொருளுற்பத்தி முறையின் சாரம் என்ன என்பதைப் பிரதிபலிக்கும் கருத்தே ‘மனிதனின் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இயற்கை’ எனும் கோட்பாடு. மூலதனக் குவிப்பின் அடிப்படையில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் சந்தை சார்ந்த சமூகத்தில் தவிர்க்க முடியாமல் நிகழும் நடைமுறை அவலங்களைப் பூசி மொழுக உருவாக்கப்பட்ட கருத்துதான் மனித மையப் பார்வை.

எனவே தான் சூழலியல் ஒழுக்கம். சூழலியல் மையப் பார்வை, சூழல் தார்மீக நெறி என்றெல்லாம் பல பத்தாண்டுகளாக காட்டுக்கத்தலாக கத்தினாலும் முதலாளித்துவம் தன் பாதையிலிருந்து விலகவில்லை; விலகப்போவதும் இல்லை.

சூழல் மையப் பார்வையை ஆழ்நிலை சூழல் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 1990-களில் சூழலியம் (ecologism) எனும் பசுமை அரசியல் தலைதூக்கியது. அடுத்த பத்தாண்டுகளில் ஜெர்மனி போன்ற நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆயினும் கடந்த பத்தாண்டுகளில் இந்த இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. “(மேலோட்ட சூழலியல் சார்ந்த) நடைமுறைச் சூழல்வாதம் சாதிக்க முடிந்த அளவு சூழல் மைய தத்துவத்தால் நடைமுறையில் எதுவும் சாதிக்க முடியவில்லை” என பசுமை அரசியல் இயக்கத்தின் முக்கிய கருத்தாளர் ஆண்ட்ரூ டாப்சன் ஒப்புக்கொள்ள வேண்டி வந்துள்ளது.

இன்னும் செல்லவேண்டிய தொலைவு கூடுதல் உள்ளது என்றாலும் மாற்று எரிசக்தி முதல் ஆற்றல் வீண் குறைப்பு, சூழல் பாதுகாப்பு சட்டங்கள் போல பல திசைகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு கடிவாளம் போட முடிந்துள்ளது. மனிதனின் வாசம் படாத இயற்கையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி ஏழை எளிய மக்களை காட்டிலிருந்து விரட்டி அந்த காடுகளை ‘தேசிய வனப் பூங்கா’ என் அறிவிப்பு செய்து  வார விடுமுறை நாட்களில் ‘வனாந்தரத்தை’ தேடி கான்கிரீட் காடுகளிலிருந்து வரும் நடுத்தரவர்க்கத்துக்கு தாரை வார்த்தது மட்டும்தான் ஆழ்நிலை சூழலியம் சாதித்த சாதனை.

அப்படியென்றால் ஆழ்நிலை சூழல் பார்வையை வீண் என ஒதுக்கி விட வேண்டுமா? இயற்கையை அழியாமல் காப்பாற்றுவது அல்லது இயற்கையை அழித்து பொருளாதாரப் பயன் பெறுவது. இந்த இரண்டில் எதைத் தெரிவு செய்வது? சுற்றுச்சூழல் மதிப்பு என்று ஒன்று இல்லை; எல்லாம் மானுட மையமாகவும் மனிதனின் பயனுக்கு எனவும் இருந்தால், மேலே கூறியதில் எது ‘லாபகரமானது’ என சீர்தூக்கி செயல்பட வேண்டி இருக்கும். மழைக்காடுகளை வெட்டி மரக்கட்டைகளாகவும் மரக்கூழ்களாவும் மாற்றுவதையும், பெரும் புல்வெளிகளை மேய்ச்சல் நிலங்களாக மடைமாற்றுவதையும் ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும். உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது மற்றும் அதற்கு மாறாக தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினருக்கு லாபகரமாக இயற்கையை அழித்து பயன்பெறுவது ஆகிய இரண்டில் எதைத் தெரிவு செய்வது என்ற சவால் நம் முன் எழும். இயற்கைக்கு விலையில்லை எனவே அதன் அழிவை ஏன் தடுக்க வேண்டும் என்ற கேள்வி எழும். எனவே சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் போகும். இயற்கை அழிவதைத் தடுக்க முடியாது. எனவே இயற்கையின் உள்ளார்ந்த மதிப்பு என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதன் அடிப்படையில் சூழல் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்கிறார் ஜே பேர்ட் காலிகாட். அதாவது நடைமுறையில் ஆழ்நிலை சூழலியல் பயன் தரவில்லை என்றாலும் தத்துவவிசாரம் என்ற அளவில் இயற்கையைப் பாதுகாப்பது என்ற கொள்கைக்கு தத்துவ வலு சேர்க்கிறது என்பதே அவரது வாதம். இந்த தத்துவ வலுவை வைத்து வாதாடி இயற்கையைக் காப்போம் என்கிறார்கள்.

சூழல் பாதுகாப்பு சிந்தனைக்குப் போதிய அளவு தத்துவ வலு இல்லாததால்தான் உள்ளபடியே பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கையைச் சுரண்டுகிறார்களா? அல்லது அப்படி தத்துவ வலு இருந்தால் நீதி நெறிக்கு செவி சாய்த்து இயற்கையை சுரண்டாமல் விட்டு விடுவார்களா? பல பத்தாண்டுகளாக அறிவியல் ஆய்வில் சேகரித்த தரவுகள் அனைத்தும் புவி முன்னெப்போதும் இல்லாத அளவு பெரும் அழிவைச் சந்திக்கக் காத்திருக்கிறது எனக் கூறியும் இம்மியளவும் பெரும் நிறுவனங்கள் அசைந்து கொடுக்கவில்லை என்பது தானே நாம் காணும் நிதர்சனம். “அறிவியல் ஆய்வுகள் நமக்கு வலிந்து காட்டும் உயிரியல் விதிகளை விட தீங்கு விளைவிக்கும் சந்தையின் விதிகளுக்கே முதலாளித்துவ அமைப்பு முன்னுரிமை அளிக்கிறது” என்கிறார் முர்ரே புக்சின். புதைபடிவ எரிபொருள் தொழில்துறை மற்றும் அதன் கூட்டாளி பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கபலம் மற்றும் அவை ஈட்டும் லாபம் முதலிய தான் நடப்புகளைத் தீர்மானிக்கின்றன. அறிவியல் தரவுகள் அல்லது நெறி விழுமியங்களின் பங்கு சொற்பமே.

கற்பனாவாதத்திலிருந்து விடுபடுவோம்

“புவியீர்ப்பு விசை என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதால்தான் நீரில் மனிதர்கள் மூழ்கிவிடுகிறார்கள்; இந்த போலி நம்பிக்கையிலிருந்து விடுதலை அடைந்தால் போதும் மனிதர்கள் நீரில் முழ்கி மடியமாட்டார்கள் என்று ஒரு காலத்தில் துணிவு மிக்க ஒருவருக்கு எண்ணம் இருந்தது. புவியீர்ப்பு மாயை ஏற்படுத்தும் தீங்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் யாவையும் அவரது கருத்துக்கு சான்று கூறின. அவரது வாழ்நாள் முழுவதும் அவர் புவியீர்ப்பு மாயைக்கு எதிராகப் போராடினார். ஜெர்மனியில் புதிய புரட்சிகர தத்துவவாதிகள் இந்த வகை துணிவு கொண்டவர்கள்” என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் தங்களது ‘ஜெர்மன் தத்துவம்’ எனும் நூலின் கையெழுத்துப் பிரதியில் நையாண்டி செய்து விமர்சனம் செய்கின்றனர். ஆழ்நிலை சூழலியல் போன்ற தத்துவ பார்வைகளை பகுத்து ஆராயும்போது நமக்கும் இதே நையாண்டி நினைவில் வருவது இயல்புதான்.

ஆண்டாண்டு காலம் நமது சமூகத்தில் நிலவி வரும் ஆணாதிக்கம் அல்லது சாதிப் பாகுபாடு என்பது வெறும் தத்துவ நிலைபோக்கு; வெறும் மனநிலை எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்வானவர்கள் என்ற கருத்து காரணமாக ஆணாதிக்கம் அல்லது சாதிய ஒடுக்குமுறை நிலை தோன்றவில்லை.  நிலம் போன்ற உடைமையில் பெண்களுக்குப் பங்கு இல்லை; பெண்கள் பணி செய்தாலும் அது குறைந்த ஊதியம் அல்லது ஊதியமற்ற பணி, கல்வி மறுப்பு போன்ற ஸ்துலமான புறக் காரணங்கள்தாம் பெண்களையும் உரிமை மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டவர்களையும் தாழ்வாகக் காணும் போக்கையும் உருவாக்கியது. இந்தப் பாரபட்சம் நிலைநிற்பதில் ஆணாதிக்க அல்லது ஆதிக்கக் கருத்துக்கு இடம் உண்டு எனினும் ஆணாதிக்கம், ஜாதிய சுரண்டல்கள் அழிவது வெறும் மன மாற்றங்களின் ஊடே அல்ல; சமூக நீதி போராட்டங்கள், அவற்றின் தொடர்ச்சியாக உருவாகும் ஆழமான சமூக மாற்றங்களினூடேதான்.

ஸ்துலமான மாற்றங்களே சமூகத்தின் சிந்தனையயும் மாற்றிவிடுகின்றன. ஒருகாலத்தில் பெண்பிள்ளைகள் படிப்பது தவறு என்றிருந்த கண்ணோட்டம் ஓரளவேனும் இன்று மாறியுள்ளது. சமூக மாற்றத்தின் தொடர்ச்சியாகவே பள்ளிக்கல்வி அளவு மட்டுமாவது எல்லா பெண்பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இன்று புவி சந்தித்துவரும் சூழலியல் அழிவுக்கும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதற்கும், ஆழ்நிலை சூழலியல் தத்துவம் கருதுவது போல இயற்கை குறித்த நமது தத்துவப் பார்வை; அல்லது நீதிநெறி கோட்பாடுகள் காரணம் அல்ல. சமூக, பொருளாதார அமைப்பின் விளைவே சூழலியல் சிக்கல்கள். மனிதர்களின் மூளை உழைப்பைக் கொண்டு இயற்கையின் விதிகளைப் புரிந்துகொண்டாலும் அந்த அறிவு முதலாளித்துவ அமைப்பில் இயற்கையோடு இணக்கமான பொருளுற்பத்திக்குப் பயன்படாமல் இன்னும் அதிகமாக இயற்கையைச் சுரண்டுவதற்கு பயன்படுகிறது. ஏன், சூழல் மாசை அகற்றுவதுகூட புதிய தொழிலாகும் என மார்க்ஸ் கூறியதுதானே இன்று நிதர்சனம்.

சில சூழல் மாசுகள் நமது அறிவீனத்தின் விளைவாக ஏற்படலாம். அதாவது குறிப்பிட்ட உமிழ்வு, மாசு ஏற்படுத்தும் என்ற அறிவு நமக்கு இல்லாமல் போகலாம். தொடர்ந்து ஆய்வு செய்வதன் மூலம் மாசு ஏற்படுத்தும் பொருள்களை இனம் கண்டு அதற்கு மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். சில மாசு தெரிந்தே ஏற்படுத்துவது ஆகும். எடுத்துக்காட்டாக சிகெரெட் புகையால் புகைப்பவருக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் ஆபத்து என பல ஆண்டுகளாகத் தெரிந்தும், போலியாக சிகெரெட் நிறுவனங்கள் அந்த அறிவியல் உண்மையை மறைத்து தங்களது பொருள்களை விற்று லாபம் சம்பாதித்து வருகின்றனர். கடுமையான சட்டங்கள் போன்றவற்றால் இத்தகைய மாசுகளுக்கு கடிவாளம் இடலாம். ஆயினும் இவை நோய்க்கு மருந்துகள்தாம். நோயை வரவிடாமல் தடுக்காது. அறிவு போதாமை அல்லது மோசடி மட்டுமே சூழல் சிக்கலுக்கு காரணம் அல்ல.

இதுவரை பூமியில் இல்லாதபடியான செல்வம் செழிக்கும் வகையில் அதி உற்பத்தித் திறன் வாய்ந்ததும் உலகப் பகுதிகள் முழுவதும் ஒன்றோடொன்று இணைந்ததுமான சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் மறுபுறத்தில் ஓய்வொழிச்சல் இன்றி உழைத்துக் களைத்த, வேலையின்மையால் பீடிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடக்கூடிய சமூகமாகவும் இருக்கிறது. இந்த முரண்பாடு போலத்தான் சூழல் முரண்பாடும். முடிவில்லாமலும் எல்லையில்லாமலும் தொடர்ந்து மூலதனத் திரட்சி விரிவடைந்து கொண்டே போகும்போது இயல்பாகவே பல்வேறு வரம்பெல்லைகளைச் சந்திக்கும். அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் அல்ல இயற்கை. குறிப்பிட்ட அளவுதான் இயற்கை வளங்களை நுகர முடியும். அதன் பின்னர் ஒன்று இயற்கை வளம் வற்றிவிடும் அல்லது அதனை எடுப்பது இலாபகரமாக இருக்காது.

ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘போதும்’ என முதலாளித்துவத்தால் தானாகவே தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ள முடியாது. இதன் தொடர்ச்சியாக நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது முதல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகப் புதிய, தற்காலிகத் தொழில்நுட்பத் தீர்வை மேற்கொள்ளுதல் வரை பல்வேறு வழிமுறைகள்மூலம் முதலாளித்துவம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த நெருக்கடிகள் முதலாளித்துவத்துக்குப் பாடமாக அமைவதில்லை.  வெறித்தனமாகக் கடந்து செல்லவேண்டிய இடர்களாக மட்டுமே இந்த நெருக்கடிகளை முதலாளித்துவம் காண்கிறது. இவற்றை வெறித்தனமாகக் கடந்து செல்லும்போது இயற்கை மேன்மேலும் மாசுபடும். எனவே இயற்கையைத் தனியுடைமையாக்கல், சரக்குமயமாக்கல், மூலதனமயமாக்கல் ஆகியவைதாம் அடிப்படையில் சூழல் சீரழிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

புதிய சூழல் சிந்தனைகொண்ட தொழில்நுட்பங்கள், சூழல் மாசு கட்டுப்பாடு சட்டங்கள் போன்ற நீதி நிர்வாக நடவடிக்கைகள் ஓரளவு முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு கடிவாளம் போடுகின்றன. எனினும் எந்த விலைகொடுத்தும் லாபம் ஒன்றே குறிக்கோள் எனும் சந்தை பொருளாதாரத்தைத் தகர்த்து அழித்து, பொதுவுடைமை சார் சமூக, பொருளாதார அமைப்பு ஏற்படும்போதுதான் அடிப்படை சூழல் சிக்கல்களை வேரோடு ஒழிக்க முடியும்.

“விளைவுகளை எதிர்த்து அவர்கள் (தொழிலாளர்கள்) போராட்டம் நடத்துகிறார்களே தவிர, அந்த விளைவுகளுக்கான காரணங்களை எதிர்த்தல்ல, தங்களது நிலைமையை மோசமாக்கும் போக்கை அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்களே தவிர, அதன் திசையை மாற்றவில்லை, அவர்கள் நோயின் கடுமையைத் தணித்துக் கொள்கிறார்களே தவிர, நோயைக் குணப்படுத்திக் கொள்ளவில்லை. இவற்றைத் தொழிலாளி வர்க்கம் மறந்துவிடக் கூடாது”

என்று ‘கூலி, விலை, இலாபம்’ என்று தலைப்பிடப்பட்ட தமது உரையில் கூறினார் மார்க்ஸ். இது சூழலியல் இயக்கங்களுக்கும் பொருந்தும். வளிமண்டல கார்பன் மாசு, கடல் அமிலமாதல், பல்லுயிர்ப் பரவல் அழிதல், புலிகள் எண்ணிக்கை குறைதல் என்பன போன்ற விளைவுகளை எதிர்த்து மட்டுமே சூழல் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நிலைமையை மோசமாக்கும் போக்கைத் தடுக்கவும் சமாளிக்கவும் வழிகள் தேடப்படுகின்றன. அந்த வழிகளை சமூக மாற்றத்துக்கான போராட்டமாக முன்னெடுப்பதில்லை. ஏதோ சிவப்புக்கும் பசுமைக்கும் பிளவு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திதான் வருத்தத்திற்குரிய வகையில் பெரும்பான்மையான பசுமை இயக்கங்கள் செயல்படுகின்றன. ஆனால் சோசலிச சமூகத்தை அமைக்க தோள் தராத பசுமை இயக்கமும் சூழல் உணர்வு அற்ற இடதுசாரி இயக்கமும் சரியான இலக்கை அடையா.

குறிப்பு

(1) Man, if we look to final causes, may be regarded as the centre of the world; insomuch that if man were taken away from the world, the rest would seem to be all astray, without aim or purpose . . . and leading to nothing. For the whole world works together in the service of man; and there is nothing from which he does not derive use and fruit . . . insomuch that all things seem to be going about man’s business and not their own.

(2) குடி வெறி குறித்து கவலை கொள்ளுதல், குடிக்கு போதை மீட்பு இயக்கம் போன்றவை ஒழுக்கப்பண்பு மற்றும் நன்னடத்தைச் செயல்கள். ஆனால் ‘குடி நாட்டுக்கு கேடு’ என மது பாட்டிலில் பிரசுரம் செய்துவிட்டு அரசே மதுக்கடைகளை நடத்துவது சரியா? மது அருந்துபவர்கள் எல்லாம் எதோ நன்னடத்தை அற்ற நபர்கள் போன்ற வாதங்கள், எடுத்துக்காட்டாக ஒழுக்கவாதம். தமிழகம் கேரளம் போன்ற இடங்களில் அரசே மதுக்கடைகளை நடத்துவதற்கு போலி சாராயம், ஏலத்தில் அரசை ஏமாற்றுதல் போன்ற வரலாற்றுப் பின்னணி உள்ளது. மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாதபோது தனிநபரின் செயல்களில் நாம் மூக்கை நுழைக்கவேண்டுமா?

(3) “communists do not oppose egoism to selflessness or selflessness to egoism, nor do they express this contradiction theoretically, either in its sentimental or in its high-flown ideological form; they rather demonstrate its material source”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.