பன்றிக்குட்டியும் முதலையும்

ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை  தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய் பன்றி இருந்த இக்கரையில் இருந்து அக்கரை செல்ல ஆசைப்பட்டு  சென்றது. தாய் அதனை தடுத்தது. ”அடே குட்டி. நீ சரியான வாலு. ஆனா புத்திசாலி. இது காட்டாறு. இப்ப தண்ணீர் இல்ல. ஆனா திடீட் திடீர்ன்னு தண்ணீர் வெள்ளமா வந்து  போகும். நீ அக்கரைக்கு போகாதே” என்றது.

 

”போம்மா. இந்த இடம் அலுத்து போயிடுச்சு. தினம் ஒரே இடத்துல தீனி சாப்பிட பிடிக்கவே இல்லை. அக்கரை சென்று பார்த்தால்தான் தெரியும். அங்கு எவ்வளவு பெரிய சேரும் சகதியும் இருக்கும்னு. நான் போகத்தான் போறேன். அங்க போயி உண்டு உறங்கி பிறகுதான் வருவேன்” என்று அடம் பிடித்த கடைசி குட்டி தாய் பேச்சை கேட்காமல்  வேகமாக சென்றது.

 

”ம். இது அடங்கவே அடங்காது. மனம் நொந்த தாய் தன் மற்ற குட்டிகளை அழைத்துக்கொண்டு தன்  பொந்துக்கு சென்றது. கடைசி குட்டி துணிந்து அக்கரை சென்று அங்கு நிறைய சேரும் சகதியும் இருக்க கண்டு மிகுந்த ஆனந்தம் அடைந்தது. வயிராற உண்டு பின் உறங்கவும் திடீரென்று ஏதோ உடலில் ஒரு குளுமையை உணர்ந்தது. கண்விழித்து பார்த்தால் காட்டாற்றில் வெள்ளம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவுதான் உடன் அது ஒரே தாவு தாவி கரை ஏறி வெள்ளத்தில் இருந்து தப்பியது. ’அய்யோ சரியாக மாட்டிக்கொண்டோமே. அம்மா அப்பவே சொன்னாங்களே. இது காட்டாறு. திடீர்..திடீரென்னு வெள்ளம் வரும்னு. இப்ப வெள்ளம் வந்திடுச்சே. நான் எப்படி அம்மாவுடன் போய் சேருவேன்’ பன்றிக்குட்டி கரையில் இருந்து ஓடும் வெள்ளத்தை பார்த்து மனம் தவித்தபோது ஒரு முதலை பன்றிக்குட்டியை கவனித்தது. ’ஆகா இன்று நல்ல வேட்டை. இந்த குட்டியை நான் விட்டு விடக்கூடாது.’ முதலை மெல்ல பன்றிக்குட்டியிடம் சென்றது.

 

”தம்பி ஏன் இந்த சோர்வு? ”முதலை கேட்டது.

 

”அய்யா! நீங்க யாரு?”

 

”அட! என்னை  தெரியாதா? நான்தாம்பா இந்த ஆற்றில் விலங்குகளை இக்கரையில் இருந்து அக்கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் ஏற்றி செல்லும் படகு. இந்த மாதிரி காட்டாற்று வெள்ளம் வரும் போதுதான் என் உதவி தேவைப்படும். சரி உனக்கு எதிர் கரைக்கு போக  வேண்டுமா?”

 

”ஆமாம் அய்யா.”

 

”அப்ப ஜாலியா ஏறு. நான் கொண்டு விடறேன்.”

பன்றி குட்டி யோசித்தது. ’இந்த  படகை நம்பலாமா? சரி சரி அம்மா சொல்லியிருக்காங்கலே. ஒருவர்  செயலையும் பேச்சையும் வைத்தே அவர் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்து கொண்டு விடலாம்னு. நாமும் அப்படியே செய்வோம்’ என்று பன்றிக்குட்டி யோசித்தபோதே முதலை  பேசியது.

 

”அட என்னடா தம்பி இத்தனை யோசனை. அது சரி வரும் போதும் இதே வெள்ளத்தில்தானே வந்தாய்? அப்போது எப்படி வந்தாய்?” முதலை கேட்டது.

 

”ஆகா சரியான கேள்வி. இதை கொண்டு தான் நாம் இந்த படகாரை எடை போட வேண்டும் என்று பன்றி குட்டி மகிழ்ந்தபடி பேசியது. ”ஆமாம் படகாரே.  உங்களை போல் ஓருவர்தான் என்னை அழைத்து வந்தார்.”

 

“ஓ. என்னைப்போல் ஒரு முதலைதான் அழைத்து வந்தாரா? சரி அவருக்கு டிக்கெட்டுக்கு பணம்  கொடுத்தியா?”

 

”டிக்கெட் பணமா? எதுக்கு?”

 

”தம்பி! நாங்க ஒண்ணும் இனாமா  சேவை செய்யலே. வரவங்க போறவங்க  டிக்கெட்டுக்குன்னு காசு கொடுப்பாங்க. அதை வெச்சுத்தான் நாங்க பிழைப்பு நடத்தறோம்.”

 

”அய்யோ என் கிட்ட டிக்கெட் வாங்க காசு இல்லியே. என்ன செய்யறது.?”

 

”அது சரி உன்னை ஏற்றி வந்த படகாரே உன்னிடம் டிக்கெட் கேட்கவே இல்லியா?”

 

”இல்லியே. சும்மாதானே அழச்சிட்டு வந்தார்.”

 

”ஓ. அப்படியா..? முதலை யோசித்தது. ’அது எப்படி முதலை வாயில சிக்கின ஒரு விலங்கு தப்புமா? அப்ப இந்த குட்டி பொய் சொல்லுது. நாமளும் அதுக்கு தகுந்த மாதிரி செய்வோம்’ என்று நினைத்த முதலை ”சரி சரி முதுகில ஏறு ஏறு.  நீ சின்ன குட்டி. உன்னிடம் காசு இருக்காது. அதனால்தான் அந்த படகார் காசு கேட்கவில்லை.  அவரைப்போல் நானும் உன்னை இனாமாக அழைத்து செல்கிறேன். இனி இன்னொரு முறை இப்படி செய்யக்கூடாது புரிந்ததா?”

 

சரி படகாரே. எப்படியாச்சும் என்னை அக்கரைக்கு அனுப்பி வையுங்க. இனிமே காசு இல்லாம பயணிக்க மாட்டேன்” என்றது குட்டி பன்றி.

 

”நல்லது. அப்ப முதுகுல ஏறு” என்றது முதலை ஆர்வத்துடன்.

 

பன்றிக்குட்டி முதுகில் ஏறியது. கொஞ்ச தூரம் சென்றதும் ’தம்பி’ என்றது முதலை.

 

”என்ன படகாரே?”

 

”டிக்கெட் பணத்தை நான் எடுத்துக்கலாமா?”

 

”எப்படி எடுத்துக்குவீங்க படகாரே.”

 

”உற உற உற… அது எங்களுக்கு கை வந்த கலைடா தம்பி.”

 

”அது எப்படி எடுத்துக்குவீங்க என் கிட்டதான் காசு இல்லியே. ஆப்ப எப்படி டிக்கெட்…”.பன்றிக்குட்டி அச்சத்துடன் இழுத்தது.

 

”கவலை படாதே. அதை நான் நடு ஆற்றில் எடுத்துக்கொள்கிறேன் என்றதும் பன்றிக்குட்டிக்கு  சந்தேகம் ஊர்ஜிதமாகியது. இது நம் உயிரைத்தான் டிக்கெட் என்று கூறுகிறது. உடன் நாம் தப்ப வேண்டும். இல்லை இந்த படகாரிடம் நம் உயிர் போய்விடும் என்று அஞ்சிய பன்றிக்குட்டி சட்டென ஒரு யோசனை செய்தது.

 

”படகாரே. உங்களால இன்னொரு  டிக்கெட் ஏற்றி செல்ல முடியுமா?”

 

”இன்னொரு டிக்கெட்டா..? நீ என்னடா தம்பி சொல்றே?”

 

”ஆமாம் படகாரே. நான் ஒரு டிக்கெட். சரியா?”

 

”ஆமாம்” வேகமாக தலை ஆட்டியது முதலை.

 

”அதோ கரைபக்கமா வேகமாக  உங்க படகுல  ஏற என் அக்கா வந்திட்டு இருக்கு. அதையும் அழச்சிட்டு போனா உங்களுக்கு இரண்டு டிக்கெட் கிடைக்குமில்லே.”

 

”ஆமாம். நல்ல யோசனை. இப்ப என்ன செய்யனுங்கிறே.?”

 

”படகாரே.  மொதல்ல கரைக்கு போங்க. என் அக்கா ஏறினதும் எங்க இரண்டு பேரையும் அக்கரையில் கொண்டு விடலாம். புரியுதா?”

 

”ஆகா. நல்லாவே புரியுதுடா. வா போகலாம் மீண்டும் கரைக்கு.”

 

முதலை இன்னொரு பன்றி குட்டி கிடைக்கும் ஆர்வத்தில் வேகமாக கரை வந்து சேரவும் பன்றிக்குட்டி ஒரே தாவலில் கரை  ஏறி தப்பியது.

 

”ஏ. தம்பி உன் அக்கா எங்கடா? ”கேட்டபடி இன்னமும் காத்திருந்தது முதலை.

 

”ம். வரும். காத்திருங்க படகாரே.”

 

மறுநாள் காட்டாற்று வெள்ளம் வற்றியதும் பன்றிக்குட்டி சாதுர்யமாக வேறு பக்கம் சென்று தன் அம்மாவிடம் போய் சேர்ந்தது.

 

முதலை இன்னமும் அடுத்த டிக்கெட்டுக்காக காத்து கிடந்தது கரையில்.


 

நீதி:  டியா; சுட்டீஸ்  என்றுமே “ சமயோஜிதம் உயிர் காக்கும்” என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் தாய் சொல்லை தட்டாதீர்கள். மதித்து நடந்து கொள்ளுங்கள். என்ன சரியா…!!


சுப்பிணி தாத்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.