துப்பறியும் பென்சில் – 2 – தொடர் கதை

2.பென்சில் மனிதர்கள்

 

நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி நிலவின் விளையாட்டை ரசித்தனர்.  வாட்ச் மேன் சங்கர் விசில் ஊதி அனைவரையும் வெளியில் செல்லும்படி எச்சரித்தார்.

 

பூங்காவை விட்டு அனைவரும் வெளியேறினர். சங்கர் மீண்டும் ஒருமுறை பூங்காவின் உள்ளே சென்று எவரும் உள்ளனரா எனச் சரிபார்த்துக் கொண்டார். அதன்பின், வாட்ச் மேன் பூங்காவின் கதவுகளை மூடினார். அவர் பூங்காவின் நுழைவாயில் அருகில் இருந்த சிறிய அறையினுள் நுழைந்தார். அவர் அங்கிருந்த  பெரிய பூட்டை எடுத்தார். அந்த சிறிய அறையின் கதவை தாழிட்டார். அவர் எடுத்து வந்த பெரிய பூட்டால் பூங்காவின் கதவை பூட்டினார். அவர் சாவியை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அவர் பூட்டிய பூட்டை ஒருமுறை நன்றாக இழுத்துப் பார்த்துக் கொண்டார்.

 

வாட்ச் மேன் சங்கர் சிறிது நேரம் வாசலில் நின்று காற்று வாங்கினார். அந்த வீதியில் வாகனங்கள் ஓட்டம் குறைந்திருந்தது. அவர் பாப்கார்ன் விற்றுக் கொண்டிருந்த அபுபக்கரிடம் சென்றார்.

 

“அபு.., தீப்பெட்டி இருந்தா கொடுப்பா?”

 

அபுபக்கர் தன்னிடம் இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்தார். வாட்ச்மேன் தன் சட்டை பையில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தார். தீப்பெட்டியின் குச்சியை உரசினார். ஒரே உரசில் குச்சிப் பற்றிக் கொண்டது. அவர் சிக்ரெட்டை பற்ற வைத்தார். அவர் தீப்பெட்டியை திரும்பக் கொடுத்தார். வாட்ச்மேன் சிக்ரெட் புகைக்க ஆரம்பித்தார்.

 

”ஏம்பா..! இப்படி குழந்தைகள் புழங்குகிற இடத்தில் புகைப்பே! அதுவும் வாசலில் நின்று புகைக்கிறே?” என்று கடலை விற்கும் சுப்பையா, வாட்ச் மேனிடம் வம்பு பேச்சு பேசினார்.

 

“அதுசரிதான்! இப்ப இங்க எங்க குழந்தைகள் இருக்காங்க? காலையில் ஒண்ணு பத்த வச்சேன். அதுக்கடுத்து இப்ப தான் புகைக்கிறேன். உனக்கு பிடிக்கலையா?”

 

“அட! சங்கர் உனக்கு ஐம்பது தாண்டிருச்சு… புகைக்கிறத நிறுத்திக்கப்பா. எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன்,” என்றார் சுப்பையா.

 

“நீ சொல்றதும் உண்மை தான். இந்தக் கழுதையை தூக்கிப் போட முடியலை. நானும் பலமுறை முயற்சி செய்துட்டேன். முன்னெல்லாம் ஒருநாளைக்கு பத்து பதினைந்து குடிப்பேன். இப்ப இரண்டு மட்டும்தான்.”

 

சுப்பையா மணி அடித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். வாட்ச் மேன் சங்கர் புகைத்தபடி இரவின் தனிமையை ரசிக்கத் தொடங்கினார். அவர் நின்றிருந்தது வெட்டவெளி என்பதால் காற்று நன்றாக வீசியது. காற்று அவர் உடம்பினைத் தீண்டிக் கடந்தது.  அவர் காற்றின் தீண்டலை ரசித்தபடி புகைத்தார்.

 

இரவு ஒன்பது மணி ஆகியது. புதூர் செல்லும் பிரதான சாலையில் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாகனங்கள் ஒலி எழுப்பிக் கடந்து சென்றன. பூங்கா இருந்த தெருவில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை. இன்னும் தெளிவாகக் கூறினால்,  தெருவில் எவரும் இல்லை. அந்தத் தெரு இருட்டாக காட்சி அளித்தது. அத்தெருவில் தான் பெரும் பதவி வகிப்பவர்கள் குடியிருந்தனர்.

ஓவியம்: அப்பு சிவா

பூங்காவை தாண்டியதும் குறுக்கே தெரு ஒன்று உள்ளது. இந்த தெரு வழியாக சென்றால் டிஆர்ஓ காலனிக்கு செல்லலாம். இந்த குறுக்குத் தெருவை அடுத்து குடியிருப்பு பகுதிகள் தொடங்கிவிடும். சப்-கோர்ட் நீதிபதிகள் குடியிருப்புகள், அதற்கு அடுத்து பல நிலைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் என அமைந்திருந்தது. இக்குடியிருப்புகளின் எதிர்புறம் பொதுப்பணித்துறையின் உயர்பதவி வகித்த இஞ்சினியர்கள் பங்களாக்களும், மாவட்ட நீதிபதியின் பங்களாவும் அமைந்திருந்தன.

 

பெரும்பாலும், இக்குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இரவு எட்டு மணிக்குள் கதவை சாத்திக் கொள்வார்கள். அதன்பின்பு காலை ஏழு மணிக்கு தான் கதவைத் திறப்பார்கள். அதனால், அத்தெருவில் இரவு ஏழு மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.

 

“அபு, கிளம்புவோமா?” என வாட்ச் மேன் சங்கர் கேட்டார்.

 

“இதுக்கு மேல் யார் வர்ற போறாங்க? கிளம்ப வேண்டியதுதான்.”

 

அபுபக்கரும், வாட்ச்மேன் சங்கரும் பேசிக் கொண்டே நடக்கத் தொடங்கினர்.

 

வாட்ச் மேன் மாவட்ட நீதிபதி குடியிருப்பை நெருங்கிய போது, காவலர் வேன் ஒன்று வந்து நின்றது. ஏற்கனவே நின்றிருந்த காவல் ஜீப்பில் இருந்து  இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கினார். அவர் இறங்கியதும், வேனில் இருந்து இறங்கி வந்த காவலர்கள் அவருக்கு சல்யூட் அடித்தனர். இன்ஸ்பெக்டரும் பதிலுக்கு சல்யூட் வைத்தார். அதன்பின், அவர்கள்  வேனின் பின்கதவை திறந்தனர். அந்த வேனில் இருந்து நான்கு பேர் இறக்கினார்கள். அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அந்த நான்கு பேரும் சாதாரண உடையில் இருந்தனர். அவர்களுக்கு முப்பது வயதிற்குள் இருக்கும்.

 

“ டேய்! சொன்னது ஞாபகம் இருக்கட்டும். போலீஸ் ஸ்டேசனில் அடிச்சாங்களான்னு கேட்டா இல்லைன்னு சொல்லணும்.”

 

“அப்படியே சொல்றோம், சார்.”

 

“ஏண்டா மாயண்டிய கொலை பண்ணுணீங்கன்னு கேட்டா என்னடா சொல்வே?”

 

“சார்…, அதான் ஊருக்கே தெரியுமே. என் தங்கச்சியை கேலி செய்தான். அதுனால போட்டுட்டோம்,” என்றான் நால்வரில் ஒருவன்.

 

ஒரு போலீஸ்காரர் அவர்கள் நால்வரையும் மாவட்ட நீதிபதி வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார். அவர்களுடன் உடன், இன்ஸ்பெக்டர் கையில் பைலுடன் நடந்தார்.

 

வாட்ச்மேனும் , கடலை வண்டிக்காரரும் அவர்களைக் கடந்து சென்றனர். அந்த தெருவின் முனைக்கு சென்ற வாட்ச்மேன் கடந்து வந்த பாதையை திரும்பப் பார்த்தார்.

 

“என்ன அண்ணே! தெருவை திரும்ப பார்க்கிறே?” எனக் கேட்டார் கடலை வண்டிக்காரர்.

 

“அது இல்லேப்பா.. கதவு டிசைன்னா செய்திருக்கா. எந்த களவாணிப்பயலும் தூக்கிட்டு போயிடுறானோன்னு பயமா இருக்கு…”

 

“எப்பவும் போலீஸ்சும் ஜீப்பும் வர்ற மாவட்ட நீதிபதி குடியிருப்பு பகுதியில்லா திருட்டு நடந்திடப் போகுது?”

 

“கள்ளன் பெரிசா காப்பான் பெரிசான்னா கள்ளன் தான் பெரிசுப்பா.”

 

“அப்ப நைட் வாட்ச் மேன் பூங்காவுக்கு போட்டுற வேண்டியது தானே..?”

 

“எனக்கே இங்க வேலையில்லை.. காலையில் வந்து தண்ணீர் செடிக்கு ஊத்தணும். குப்பையை அள்ளி ஒதுக்கி வைக்கணும். அப்புறம் பக்கத்தில் இருக்கிற வார்டு ஆபிசுக்கு போய் ப்யூன் வேலை பார்க்கணும்.”

 

”சரி.. சரி புலம்ப ஆரம்பிக்காதீங்க. நான் அப்படியே வீட்டுக்கு போறேன்,” என்ற அபுபக்கர் செக்கிகுளம் போகும் பாதையை நோக்கி மணி அடித்தப்படி வண்டியை உருட்டிக் கொண்டு சென்றார். வாட்ச் மேன் சங்கர் ஆத்திக்குளம் நோக்கி நடந்தார்.

 

பூங்காவின் கதவில் இருந்து ஒவ்வொரு பென்சிலாக வெளியே வந்தன. இப்போது, கதவு இருந்த இடத்தில் கதவு இல்லை. கதவு இருப்பது போன்ற மாயை மட்டுமே இருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு பூங்காவின் கதவு பூட்டப்பட்டிருப்பது போன்று தெரியும். உண்மையில் அங்கு கதவு இல்லை. எவராவது அருகில் வந்து பென்சில் கதவைத் தொட்டு பார்த்தால் உண்மை வெளிப்பட்டுவிடும். வெயில் நேரத்தில் தெரியும் கானல் நீர் மாதிரி தான். அருகில் வர வர, பூங்கா கதவு இன்றி திறந்து கிடப்பது புலனுக்குத் தெரியும். ஆனால், அதிஷ்டம் அப்படி இதுவரை எவரும் கண்டுபிடித்தது இல்லை.

 

“சுமதியையும் சுமித்ராவையும் கடத்தியவர்களைப் பிடிக்க வேண்டும்.,” என்று பச்சை நிற பென்சில் பேசியது.

 

“அவர்கள் எங்கு தொலைந்தார்கள்? அங்கிருந்து துப்பு துலங்க வேண்டும்.,” என்றது சிவப்பு நிற பென்சில்.

 

“மணி பத்தாகுது. வாங்க! சீக்கிரம் வேலையில் இறங்குவோம்.,”என்றது மஞ்சள் நிற பென்சில்.

 

“நாமும் போலீஸ் காரங்க மாதிரி பேசிகிட்டே இருந்தா…கடத்தல் காரங்க தப்பிச்சிடுவாங்க.,” என்றது கருஞ்சிவப்பு நிற பென்சில்.

 

பென்சில் மனிதர்கள் செயலில் இறங்கத் தொடங்கினர். இரவு வானம் வெளுப்பாக இருந்தது. முழு நிலவு வெளிச்சம் இரவைப் பகலாக மாற்றியிருந்தது. மொத்தம் இருபத்தியோறு பென்சில்கள். குண்டாக இருந்த மஞ்சள் பென்சில் தலைமையேற்று நிற்க, இருவர் இருவராக வரிசையாக பின் தொடர்ந்தனர்.

 

தொடரும்…


க.சரவணன். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.