Sunday, Aug 14, 2022
Homeபடைப்புகள்நூல் விமர்சனம்கலண்டரில் உட்காரும் புலி – கவிதைத் தொகுப்பு

கலண்டரில் உட்காரும் புலி – கவிதைத் தொகுப்பு

சொற்களின் வேட்டை

     திக பட்சமாக ரசனையைக்கொடுக்கும் சொற்களின் மெல்லிய போதையும், விஞ்ஞானத்தனமான விநோத நுட்பமும்,  கணிதவியல் புதிர்களை விடுவிப்பதும் வேற்று விடையோடு தனியே அவதிப்படவைக்கும் சுகமான அனுபவத்தை சுவைபடப் பேசி நிற்கின்றது கலண்டரில் உட்காரும் புலி.  தலைப்பில் சொல்ல வந்தது விளங்காமல் விலங்குகள் திகிலடையச்செய்யும் ஒரு இருண்ட வனத்தின் பிரமையில் தனித்த நடைபோட்டு பிரதிகள் தோறும் புலியைத்தேடினேன்.

அது சொற்களால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு பூங்கா வனம். புலியை மறந்து விட்டு ஒவ்வொன்றாக வாசிக்கும் தோறும் புதிரும் விஞ்ஞானமும் கவிதையும் சொற்களும் என்னை விம்பமாக்கி உடைத்துக்கொண்டேயிருந்தது.

வெறும் கற்பனைகளால் ரசனைகளோடு ஆக்கப்படாமல் சமூகத்தில் அவசியம் தொடவேண்டிய விடயங்களை நவீனத்திலும் நவீனம் செய்து காட்டியிருக்கின்றார் கவிஞர் அகமது பைசல்.

அன்றாட வாழ்வின் நுண்ணிய ரசனைகள் கோடிக்கணக்கில் குவிந்திருந்தாலும் அவை இவர் போன்று நுண்ணிய ரசனையும் மாற்றத்தை மாற்றிப்படைக்கும் மந்திரமும் தெரிந்த கவிஞர்களிடம் மாத்திரமே புன்னகைத்து, கைகட்டிமுன்னே நிற்கிறது.

சிறிய பறவைகள் பெரிய வானத்தைக் கடப்பது போல சிறிய கவிதைகளால் இவர் கூற விழைந்திருக்கும் பேசு பொருட்கள் மிக விசாலமானவை என்பதை எந்தவொரு வாசகனாலும் மறுக்க முடியாது.

இவரின் கவிதைகளின் பேசு பொருட்களாக முதுமை, மரணம், மானுட உணர்ச்சிகள், பசி, இயற்கை, காதல், பிரிவு, பிழைப்பு, வறுமை,  எளியதன் வலிமைகள் என்பனவும் இயற்கையின் விதியை தனக்கேயுரிய தனித்தன்மையோடு புதுவித நோக்கில் அமையுமாறும் மற்றும் தனித்துவமான ரசனைகளில் அமைந்த பல அற்புதமான கவிதைகளையும் கலண்டரில் உட்காரும் புலி சொற்களை உண்போருக்கு வேட்டையாடிப் படைத்திருக்கிறது.

வித்தியாசமான ஒரு அட்டைப்படத்தோடு வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பில் என்னை அதிகம் வியக்க வைத்த கவிதைகள் பற்றிய ரசனைக்குறிப்புக்களை இவ்விடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பசி பற்றிப்பாடாத கவிஞர்களே இல்லையென்றாலும் அவை மனிதப்பசியையே அதிகம் பேசிவிட்டன. ஒரு மரத்தின் பசியை கவிஞர் இவ்வாறு கூறுவது ரசனையில்  புதுவித கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றது. எனினும் இந்தக்கவிதை பசியை வெளிகாட்டிக்கொண்டிருக்கும் எத்தனையோ சோமாலிய மனிதர்களையும் நினைக்கச்செய்கின்றது.

“ஆலமரம்

பசியோடிருப்பதைக்காட்டிக் கொள்வதற்காகவே

தன் குடலை

வெளியே தொங்கவிட்டிருக்கின்றது”

மற்றுமொரு கவிதை ஒருவகையான அரசியல் தந்திரம் மிக்கவர்களை அல்லது அதிகாரத்தை அறியாமையோடு பிரயோகிப்பவர்களை மறைவில் பேசுவது போலும், சாதாரணமாக நாய் பற்றிய அடிப்படைத்தத்துவத்தை எவரும் கூறாத எளிமையிலும் புதுமையிலும் முன்வைத்திருக்கும் அவரின் கவித்துவம், அவரின் தனித்துவமாகின்றது.

“தனக்குத் தெரிந்த

ஒரு சொல்லைத் வைத்துக்கொண்டு

நாய்

தெருவையே வலம் வருகிறது ”

ஒரு கவிதையானது ஒரு காட்சியை அல்லது தத்துவத்தை கண்முன்னே கொண்டு வருவதற்கு  சொற்கள் அடிபணிய வேண்டும் ஆனால் மூன்றே வரிகளில் அதனை நிகழ்த்திக்காட்டியிருக்கும் கவிஞரின் மற்றொரு கவிதை,

“அங்கும்,இங்கும்

அதிலும்,  இதிலும் தாவி

மரத்தைப் பரப்புகிறது குரங்கு ”

கவிதையின் அழகும் குன்றாமல் கருத்தும் குன்றாமல் மாபெரும் தத்துவம் ஒன்றை அதாவது மரணத்தை அதுவும் மகிழ்ச்சியில் மாத்திரம் நிகழும் மரணம் பற்றி புதுமையான கவிதையொன்றாக, கவிஞரின் பெயரை நன்கு பதிக்கும் ஒரு கவிதையாக, இனி வரும் காலங்களில் மனிதர்களுக்கும் ஏற்படும் மரணம் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாக இக் கவிதையைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.

“சந்தோசமான தினமொன்றில்தான்

பட்டாசு

உடல் சிதறி இறக்கின்றது ”

இதயம் உறையும் வார்த்தைகளோடு புதுமையான சிந்தனையை தன் கவிதை நாமம் நிலைத்திருக்கும் பாங்கில் சொற்களை உயிர் கொடுத்து பிரபஞ்சத்தில் ஓட விட்டுள்ளார் கவிஞர் பைசல் அவர்கள்.

கலண்டரில் உட்காரும் புலி, மாயம் நிறைந்த அந்த விலங்கும் வாசிப்பில் உறுமியது.  நாட்கள் பறப்பதாக அல்லது சுழல்வதாக யுகக்கணக்கில் எழுதிப்பழகிய மொழி இம்முறைதான் வேட்டைக்குப் புறப்பட்டிருக்கின்றது. புத்தகத்தின் தலைப்பைப்  புதிய மொழியில் பேசுகின்ற கவிதை இது

” வீட்டுக்குள் ஒரு புலி

கலண்டரில் உட்கார்ந்திருக்கிறது

தேதிகளை வேட்டையாடுகிறது

தண்ணீர் குடிப்பதில்லை

உருமி குழந்தைகளை விரட்டுவதில்லை

வீட்டின் எல்லா இடங்களிலும் குந்தித்திரியும்

விடுமுறைத் தேதியை ருசித்து உண்ணும்

தேதி 32 ஆல் புலியை வெல்ல முடியுமென்று

ஒரு ஜோசியக்காரன் சொன்னான்.”

அனைத்தையும் மாற்றி அதில் கவி வியக்கும் பிரபஞ்சம் வித்தியாசமானது. இவ்வாறான நவீன கவிதைகளின் மாற்று அனுபவங்களை வாசகர்களுக்கு வசப்படுத்திய கவிஞர் அகமது பைசல் அவர்கள் இவை போன்று மேலும் பல தொகுப்புக்களை வெளியிட வேண்டும். அவரால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நூல்கள்

  1. ஆயிரத்தோராவது வேதனையின் காலை.
  2. நிலத்தோடு பேசுகிறேன்.
  3. நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை   வாசிக்கின்றது.
  4. வலதுகால் புன்னகை

என்பனவும் கூர்ந்து விமர்சிக்க வேண்டிய அருமையான தொகுப்புக்களாகவே உள்ளன. வாசக நேசங்களை மாயப்பள்ளத்தாக்கில் யோசிக்க வைக்கும் அவரின் எழுத்து ஈழத்தின் இணையில்லா தனி எழுத்து.

வாழ்த்துக்கள் ..!

அஸ்மா பேகம்இலங்கை.


நூல்:- கலண்டரில் உட்காரும் புலி –

ஆசிரியர் :- அகமது ஃபைசல்

வெளியீடு :- பட்டாம்பூச்சிகள் கலை இலக்கிய பரண் இலங்கை.

விலை:- 350/= இலங்கை ரூபா.

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!