- தப்பித்தல்
அனுமதியின்றி என் வீட்டில் சிலர்
என் முன்னால் அமர்ந்து உறுத்து நோக்கும் விழிகளைக் காண முடியவில்லை
யாரோ என்னை வெறிக்கின்றனர்
அழைக்கின்றனர்
கடக்கின்றனர்
அவர்களுக்கு அழுகை என்று பெயர் சூட்டினேன்
தப்பிக்க முயன்றால் எப்போதும் சிக்கிக் கொள்வேன் என் உறக்கத்தைத் திருடுவதே அதன் பொழுதுபோக்கு
ஒரு நாளாவது உறங்கும் ஆசையில் நட்பின் இல்லம் சென்றேன் அங்கே
எனக்கு முன்னால் வந்து அமர்ந்திருந்தது என் அழுகை.
- காத்திருப்பு
உனக்கான என் பொழுதுகளைக் கருதியே
பதற்றப்படும் மனக் கண்ணியுடன் வந்து
விரல் பற்றுகிறேன்
நீர் வார்க்கப்படாத
என் அன்பின் வேர்கள்
இன்னமும் காய்ந்து போகவில்லை
யென்பது ஆச்சரியமே!
உறிஞ்சப்படும் நேரங்களைப் பொருட்படுத்தாது
மிச்சமிருப்பவற்றின் குதூகலத்தைப்
பூக்களாய்ப் பொழிகிறேன் உன் மீது
துக்கத்தின் போர்வை போர்த்தி
உறங்கும் பாவனையுடன் உன் நான்
நீ யாருக்கோ தந்ததை
நடுங்கும் விரல்களுடன் கேட்டபிறகு
மலடாகிப் போயின என் காதுகள்
நீந்துவதாகவும் பறப்பதாகவும்
செய்த கற்பனைகள் யாவும் பொசுங்கிப் போயின
ஒரு கடுஞ்சூறைக்குப் பிறகு
வீழ்ந்துபடும் நட்சத்திரங்களைக் கண்டபிறகும்
மனம் தளராமல் உன் பலகீனத்தை
அள்ளித் தெளித்துக் கோலமிடுகிறேன்
பசுஞ்சாணமெனவென் மனக்கசிவுகளை
அள்ளியெடுத்து நடுவில் வைக்கிறேன்
நம் வீட்டில் மலர்ந்திருக்கும் பூசணிப்பூவை
இப்போதைக்கு..
- மீச்சிறு எலியே
உன் உலகைக் குடைகிறாய்
அறைகள் அமைக்கிறாய்
எல்லைகள் வகுக்கிறாய்
உன் உலகில் யுத்தம் நடக்கிறது
உன் உலகில் காதல் புரிகிறாய்
கலவி செய்கிறாய்
உன் உலகம் உன் உயிர்களால் நிறைகிறது
உன் உலகில் உன் பணிகளை வரையறுக்கிறாய்
எதிரிகளை உருவாக்குகிறாய்
போர் போரென ஆர்ப்பரிக்கிறாய்
ஐயோ..
என் மீச்சிறு எலியே!
-தி. பரமேசுவரி