இந்தப் பறவைக்கு இந்த மலை புதிது
சமவெளியில் அதற்கென இருந்த காடு
மரங்களை அகற்றிய பிறகு எரியூட்டப்பட்டதும்
பழகியிராத மலை நோக்கி உயரப் பறந்தது
இறகுகள் ஒத்துழைக்கவில்லை
மலையின் காலடியில் தனித்து நின்றது.
——
இரண்டு பாறைகளை சற்று அகற்றி
மலையேறும் பாதையைத்
திருத்தியிருந்தான் பாணன்
மந்தியின் கலங்கிய கண்களைப்போல்
நீர்கொண்ட சுனையின் நிழலோட்டத்தில்
நூற்றாண்டு தனிமை வருத்த
கொடியேறிக் கிடந்தது யாழ்
பறவை தன் அலகால் தோண்டியெடுத்தது
பாடலின் எலும்புகளை.
——
வழக்கொழிந்த சொற்களால்
செய்யுள் புனையும்
புலவர் மரபு ஒன்று
குகைக்குள் இருப்பதாகக் கதை நிலவுகிறது
மலையின் நெகிழ்ந்த அடுக்கில்
கிழங்கு அகழும் பன்றிகள் கூட
அங்குதான் புணர்கின்றன ஈனுகின்றன
என்றான் பாணன்
யாழின் உடைந்த பாகத்தை
அலகில் கொத்திக்கொண்டு
குகையை அடைகிறது பறவை.
——
மிகுந்த காமத்தை இயற்றச் சொல்லி
புலவரை அழைக்கிறாள் தலைவி
கவிதையாகாத காதல் துயரமானது
அதுகண்டு ஆற்றாளாகிய தோழி
‘புலவர்காள்.. புலவர்காள்’ என்று
குகைக்குள் குரல் கொடுக்கிறாள்
மட்கிய சுவடிக்கட்டை தூசி தட்டும் ஓசை கேட்கிறது
வயதாகி உதிரும் மொழியைப் பாட இயலாது
கல்லில் மண்டையை உடைத்துக்கொள்ளும்
ஒலி கேட்கிறது
ஐயோ புலர்க்கு நேர்ந்த பாவமே என்று
மலையின் சமகால வார்த்தையொன்றை
குகைக்குள் வைக்கிறது பறவை .
——
வேட்டையில் கிடைத்த இறைச்சியை
மிளகால் காரமேற்றி சுவைத்த பாணன்
லாந்தரைக் கொளுத்திக்கொண்டு போய்
குகையின் முகப்பில் கறி படைக்கிறான்
முற்ற நரைத்த உடலொன்று அதை
எடுத்துக்கொண்டு உள்ளே போயிற்று
கறி சமைப்பதில் புதிய வகையைக்
கண்டறிந்த
தம் குடியினர் பற்றி நெக்குருகிய புலவர்கள்
அந்த இரவில் பறவையின் சாட்சியாய்
ஒரு செய்யுளின் துறை குறித்து
நெடுநேரம் விவாதித்தனர்.
-மௌனன் யாத்ரிகா