பெரிய ஆடு

த்தனை நாளும் ஆட்டைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென மனிதனாக நீண்டு படுத்திருக்கும் தாத்தாவை வேடிக்கையாக பார்த்துச் செல்வதை அவளால் கோபமும் பட முடியவில்லை அழுகையும் வரவில்லை. ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். ஆடுகளின் ம்..மே..ம்.மே… சத்தம் காலையிலிருந்தே கேட்டுக்கொண்டிருந்தது. தாத்தா சொன்னால் மட்டுமே கேட்கும் ஆடுகள். அவளையும் அறிந்து வைத்திருந்தது.

தாத்தாவின் இறப்பு யாருக்குள்ளும் இல்லை. அவருக்காக அழும் ஆடுகளை இனிமேல் நான் தான் பாக்க வேண்டும் என்ற பொறுப்புடன் இரண்டு  நாளுக்கு முந்திய புல் பிளாஸ்‍டிக் சாக்கில் அடைக்கப்பட்டிருந்தன. பச்சை புல் வாசனையுடன் நீர்த்துளிகளின் ஈரம் தாங்கி இன்னும் செழிப்புடன் அமுங்கி இருந்தன. கூடையில் வைத்து ஆடுகளுக்கு ‍கொடுத்தாள்.  பீச்சி ஆடு அவளுக்காக தாத்தா கொடுத்தது. ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. புல் அவ்வளவாக சாப்பிடாது அவள் சாப்பிடும் மீன், கறி வகைகளைத் தவிர எல்லாவற்றையும் கொடுத்துப் பழக்கியிருந்தாள். பீச்சி அவளுடனே தான் இருக்கும்.  தாத்தாவின் வீடு  அவள் வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருந்தது.

அவள் அப்பாவுக்குள்  எந்த சலனத்தையும் ஏற்படுத்தாத தாத்தாவின் உடலைப் பார்க்க வருபவர்களுக்கு  இருக்கைகளை ஒழுங்குபடுத்தி, முகத்தில் விருந்துக்கான பரபரப்பு. இவருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று.  யாரிடமோ போன் மூலம் சொல்லிக்கொண்‍டிருந்தார். ‘நீங்க நாளைக்கி பத்து மணிக்கு போல வந்துருங்க  கு‍‍டிசைய பிரிக்கணும்’  இறப்பிலும் நடிக்கத் தெரியாத மனம் அப்பாவுக்கு.

அரை சென்டிற்கும் குறைவான இடத்தில் கு‍டிசை இருந்தது. ஊர் கிணற்றையொட்டிய குடிசை, கிணற்றில் ‍தென்னைமரத்தின் நிழல் நீரில் ஆடியபடியே இருக்கும். சிறு வயதிலிருந்தே அந்தக் கு‍டிசையை பார்த்து வளர்ந்தவள். கல்லூரி சென்ற பின்பும் அவளுக்கான ஆறுதல் அதில் கிடைப்பதாக உணர்வாள். எல்லா சந்தோஷங்களையும் தாத்தாவால் கு‍டிசைக்குள் கொண்டு வந்து சேர்க்க மு‍டிகிறது! அவர் வைத்துவிட்டு செல்லும் சந்தோஷங்களை திருட்டுத்தனமாக எடுத்துச் செல்வதுபோல் இருக்கும்  கு‍டிசைக்குள் போய் வருவது.

சுற்றிலும் பெரிய மாடிவீடுகள் வசதியுடன் இருந்தாலும் சிறுவர்கள் கும்மாளமடிப்பது இவர் வீட்டில்தான். பூட்டாமல் சாத்தியே போட்டிருக்கும் தாத்தாவின் வீடு. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே தாத்தா கூனித்தான் நடந்து திரிந்தார்.. சிறுவயதில் அவளோடு விளையாடும் பிள்ளைகள் அவரை ‘பெரிய ஆடு வருது’ என கேலி செய்து சிரிப்பார்கள். கேலி செய்வதற்கும் காரணமுண்டு தன் பேரப் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை அதட்டி, விரட்டுவார். மற்ற பிள்ளைகளும் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் என பயன்படுத்திக்கொள்வார்கள்.

அவள் தோழிகளோடு தாத்தாவின் குடிசைக்குள் விளையாடிக் கொண்டிருக்கும்போது தூரமாக ஆட்டின் சத்தம் கேட்டவுடனே பின்புறம் ஓலை வழியாக ஓட்டையைப்போட்டு தப்பித்து சென்றுவிடுவார்கள். இவளோ அவரின் அழுக்கு துணிகளுக்குள் முகம் புதைத்து தூங்குவதுபோல் கிடப்பாள்.

அந்த சின்ன இடத்தையும் மூன்றாகப் பிரித்திருப்பார்.  முன் அறையில் உட்கார்ந்து கொள்வார், நடு அறையில் படுத்துக்கொள்வார், பின் அறையில் சமையல் செய்துகொள்வார். மழை வந்தால் நீர் உள்ளே விழாது. ஓலைகளை அவரே முடைந்து, மேற்கூரை கட்டுவதற்கு மட்டும் ஆள் வைத்திருந்தார். துள்ளி விளையாடும் குட்டி ஆடுகள். புழுக்கையோ மூத்திரமோ வீட்டினுள் போடுவதில்லை. கண்டிப்புடன் சொல்லி வைப்பார் அதுகளிடம்.  இருட்டு பூச்சியின் சத்தம் கேட்குமே தவிர அது எங்க இருக்கு என கண்டுபிடிக்க மு‍டியாது. இடைவெளிகள் விட்டு குறுக்கு நெடுக்காகப் போட்‍டிருக்கும் மூங்கில் கம்பில் பல பைகள் தொங்கவிட்டிருப்பார். தனக்கான ரேசன்கார்டு,  ஆதார்அட்டை, மருத்துவமனை சீட்டுகள்  பத்திரப்படுத்தி வைத்திருப்பார். வீட்டின் நடுவில் கூரையைத் தாங்கியிருக்கும் மரமோ வடிவங்களற்று வளைந்து நெளிந்து உறுதியாக இருந்தது. எந்த வடிவத்திலும் சேராத கரடு முரடான மூன்று கருங்கற்கள் அடுப்பாக மாறியிருந்தது.

ஆடுகளை மேய்ச்சலுக்காக மலைக்கு கொண்டு சென்றதும். அவள் கால்கள் தானாக அவர் வீட்டைத் தேடிப் போவது யாரும் அறியாத விந்தை. அதிக நேரம் காணவில்லை என்றாலே தாத்தா வீட்டில் இருப்பாள் என்பதை அம்மா அறிந்துகொள்வாள். முன்னறையில் வெற்றிலையின் வாசம் நிரம்பிய சின்ன உரல். பல் குத்துவதற்கு சின்னச் சின்ன குச்சிகளை ஒடித்து வைத்திருப்பார்.

ஒருநாள் கூனலுக்கான காரணத்தை அவரிடம் அவள் கேட்டபோது, ‘மலைக்கு ஆடுகளை மேய்சலுக்கு கொண்டு போறச்சில  கடவுளின் வாழைத்தோட்டத்தை ஆடுகள் மேய்ஞ்சிட்டு, அதுக்கு பொறவு எங்கிட்ட சண்டைபோட்டும் ஆத்திரம் தீராத கடவுள் கோபத்தோடு என்னை சாபம் போட்டு தள்ளிவிட்டுட்டான். அதுக்குப் பொறவு இப்படி ஆயிட்டேன் என்றார்.  இதை விசித்திரமான கதைபோல் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு பிறகு தான் தெரிந்தது தோட்டத்தின் உரிமையாளரின் பட்டப்பெயர் கடவுள் என்று.

கம்பை ஊன்றியபடி டவுனுக்கு போய் சாயா குடிச்சிட்டு தினமும் நியூஸ்பேப்பர் வாங்கி, விவசாய நண்பர்களைப் பார்த்து நாட்டுநடப்பை கேட்டறிந்த பின்னரே வீடு வருவார். விவசாய சங்கம் அவருக்கு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்திருந்தது. வயல்களுக்கு தண்ணீர் ஷட்டர் திறந்து மூடுவது. இதற்காக அவர் எந்த சம்பளமும் வாங்கியதில்லை. சில வேளை  காணாமல் போகும் ஷட்டர்களின் பாகத்திற்காக மனுக்கள் எழுதிக்கொடுத்து மீண்டும் புதிது வைக்கும்படி செய்வார். தேவைப்படும்போது சாலையில் கிடக்கும் மதுகுப்பிகளில் சில  எடுத்து மண்ணெண்ணெய் விளக்கு, குட்‍டி ஆடுகளுக்கான பால் பாட்‍டிலாக நிப்பிள் போட்டு வைத்திருப்பார்.

பெண் ஆடுகளை வாட்‍டி, போட்டி என்றே உரிமையாக அழைப்பார். ஆண் ஆடுகள் சத்தம்போடும் போது வாறண்டே…வாறண்டே…என பதில் சத்தம் குடுப்பார். கூனி நடந்ததில் இருந்து தாத்தாவின் சத்தம் ஆடுகளின் சத்தம் போலவே மாறிவிட்டதாக நினைத்தாள். ஒரு சமயம் சூலி ஆடு ஒன்றை மலைப்பாம்பு விழுங்கிவிட்டது. ஆடுகளிலேயே மூத்த ஆடு அதுதான். நல்ல ராசியான ஆடு என்று செல்லமாக அழைப்பார். அவர் சோகத்தை எப்போதும் முகத்தில் பார்க்க முடிவதில்லை. அவர் ஆடுகளைப்போல் நிலம்பார்த்து நடப்பதாலோ என்னவோ.

எவ்வளவோ எடுத்துச் சொன்ன பிறகும் ‍அவள் தாத்தா மகனது வீட்டு வாசலை மிதித்ததே இல்லை. எதாவது வேண்டும் என்றால் அவளிடமே கேட்டு வாங்கிக் கொள்வார். இந்த வைராக்கியமான செயல் அவளுக்குள்ளும் இருந்தது இரண்டு மாதத்திற்கு முன் சுற்றுலாவிற்குச் சென்ற கோயில் தலத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்ட அப்பாவை இதுவரையிலும் மன்னிக்கும் மனம் அவளுக்கில்லை. அவரிடம் முகம் கொடுத்துப் பேசியே இரண்டு மாதமாகிறது.

அப்போது அவளுக்கான சிறந்த நண்பனாகவே இருந்தார் தாத்தா. அந்த நேரத்தில் அப்பாவைப்பற்றிய கதைகளை அவள் தாத்தா சொல்லியிருந்தார். பத்து வயசில ஊரைவிட்டு ஓடிப்போனவனுக்காக ஆடு வளர்த்தேன் எப்படியும் திரும்ப வருவான். ஆடு வெட்டி சோறு போடுவதாக நேர்ச்ச போட்டு வைத்திருந்தேன். இருபத்தியொண்ணு வயசில ஊருக்கு வந்தான். வந்த பிறகும் பேசவேமாட்டான்.

எனக்கு ராப்பகலா காடு மலையையும் காவகாக்கிற வேல. உடையக்காரன் கொடுக்கும் கூலியும், ஆடு, மாடுகளில் உள்ள வருமானமும் போதுமானதாக இருந்தது. அதுனால எப்பவாவது அவனை ஊருக்கு வந்து பாப்பேன். அவனுக்கு கல்யாணம் ஆன பிறகு சில வருஷம் கழிச்சிதான் ஊருபக்கம் வந்தேன். ஒரு நாள் உங்க அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தான். அவரு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சாருன்ன நானிருக்கமாட்டேன் பாத்துக்கன்னு சொன்னான். உங்கப்பன் காணாமல்போன காயத்தின் தழும்புகள் வலித்தது.

தாத்தா இரண்டாவதாக திருமணம் பண்ணியிருந்தார். தீக்காயம்பட்டு கைவிடப்பட்ட பெண்ணை ஆதரவாக சேர்த்துக்கொண்டார். ஏற்கெனவே அவளுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. அவளின் இறப்பிற்கு பிறகு தனிமையிலேயே வாழ்ந்து வந்தார். மலை பக்கம் வேலைக்காகவும் விறகிற்காகவும் போகும்போது  அவர் வீடு தேடி வருபவர்களுக்கு அந்ததந்த சீசனில் என்ன காய்க்குமோ அந்த பழங்களோ காய்களோ கொடுப்பார்.

தாத்தாவை குளிப்பாட்டுவதற்காக தெருக்குழாய் தண்ணீரை எடுத்து வந்தார்கள். அப்போது இவள் சொல்ல நினைத்ததை யாரோ கூட்டத்தில் சொன்னார்கள். எல்லாரும் கிணத்த புறக்கணிச்சிக்கிட்டு வீட்டு பைப்பு எடுத்துக்கிட்டாங்க தண்ணி கோராம போட்டதால தண்ணி கெட்டுப்போச்சி ஆனா அவரு கு‍டிக்கிறதுல இருந்து எல்லாத்துக்கும் கடைசி வரையிலும் இந்த கெணறுதான்.

‘கொண்டு வாங்க கெணத்துத் தண்ணிய’

அடிக்கடி தாத்தா கிணத்தை சுத்தம் பண்ணிக்கொண்டேயிருப்பார். தனது கூனான உடலை மேலும் வளைத்து கிணற்றில் விழுந்து கிடக்கும் ஓலை தூசி துரும்புகளை சின்ன கப்பிகளை வைத்து அரித்து எடுப்பார். எச்சி துப்பிச்செல்லும் சிறுவர்களை கண்டால் கண்டபடி திட்டி குச்சியை எடுத்து அடிக்க ஓங்குவார். நீரில் நடக்கும் நீர்பூச்சிகளை பிடித்துத் தரும்படி அவள் தாத்தாவிடம் கேட்டு நச்சரிக்கும்போது சொல்லுவார் நான் செய்யும் இந்த வேலையை அதுகளும் செய்யுது. கிணற்றின் கல் இடுக்குகளில வளர்ந்திருக்கும் செடிகளை கம்போ குச்சியோ வைத்து தட்டி முறித்துவிடுவார். வீட்டின் பக்கவாட்டில் மண்தொட்டியில் நீர் நிரம்பியே இருக்கும். ஆள் அரவமற்ற நேரத்தில் காக்கை குருவிகள் குளித்துச்செல்லும்.

கிணற்றைச் சுற்றி குடம் வைப்பதற்காக போட்‍டிருக்கும் சின்ன பள்ளமான குழிகளில் தண்ணீர் நிரப்பி வைப்பார். தாகம் எடுக்கும் பறவைகள் வந்து நீர் அருந்திவிட்டு செல்லும். அந்த குழிகளில் சிகப்பு நிற குளவிகள் நீரின் மேற்பரப்பைத் தொட்டுத் தொட்டு விளையாடுவதைப் பார்த்து அதை பிடித்துத் தரும்படி அவரோடு அழுது சண்டையிட்ட நாட்களை நினைத்தாள்.  ஆச்சரியமாக ஒரு நாள் துணி வைத்து அமுக்கி பிடித்து அவரிடமே காண்பித்தாள். அதை விட்டுவிடச் சொன்னார் அது கோபம் கொண்டது விரட்டி, விரட்‍டி கொட்டிவிடும் என்றார். தாத்தா ஊருக்காக கிணறு தோண்ட நிலம் கொடுத்தார். வாடை, கோடைக்கும் வற்றாத கிணறு. ஊரையே வாழவைத்த கிணற்றை புறக்கணிப்பது நல்லதல்ல என்று சொல்லுவார். அறுபதடி ஆழம் கொண்ட கிணற்றில் ஐம்பதடிக்கும் மேலே வரையிலும் நீர் உள்ளதால் தாத்தவிற்கு நீர் இறைக்க சிரமமாக இருப்பதில்லை.

அவருக்கு முதுகு வலிக்கும்போதெல்லாம் இவளை விட்டு தைலம் தடவிவிடச் சொல்லுவார். அப்போது முதுகில் உருண்டையாக தொங்கியபடி இருக்கும் முதுகு கழலையோடு விளையாடுவது அவளுக்கு பிடித்தமான செயல்.  விளையாடுவதை தாத்தாவும் மறுத்து பேசமாட்டார்.

மற்ற ஆடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு பீச்சி ஆட்டை தேடிச்சென்றாள்.  அது அடுக்களைக்கு பின்புறம் போட்டிருந்த டைல்ஸ் தரையில் கால்களை அங்குமிங்கும் பரத்தி நடக்க முடியாமலும் சில அடிகள் எடுத்து வைத்து சறுக்கி விளையாடுவதுமாக இருந்தது. பீச்சியை கூட்டிக்கொண்டு குடிசைக்குள் சென்றாள். ஓரமாக அடுக்கி வைக்கப்பட்‍டிருந்த ஆடுகளுக்கான வாய்மூடியை பார்த்தாள்.

ஒருமுறை நான்கு ஆடுகள் ஒன்றாக நுரைதள்ளி இறந்து போய்விட்டது வாய்மூடி போடாததால. பூச்சி மருந்து அடித்த வாழையிலை‍யை சாப்பிட்டதால் இப்படி ஆகிவிட்டது. அதிலிருந்து இந்த வாய்மூடி தான் பாதுகாப்பு. மேய்ச்சலுக்கான குறிப்பிட்ட இடம் வந்ததும் வாய்மூடியை கழற்றி விடும்படி நான், நீ என போட்டிபோட்டுக்கிட்டு அவரிடம் வந்து நிற்கும் ஆடுகள்.  இந்த வாய் மூடி செய்வதற்காக குருத்து பனையோலைகளை எடுத்து அவரே ஆடுகளுக்கான தாடை அளவுகளை தேர்வு செய்து முடைவார். அப்படி கிணற்றடியில் இருந்து முடைந்துகொண்டு இருக்கும்போது அந்த வழியாக வந்த காதாட்டி கிழவி சொன்னா

‘என்ன கொழுந்தனாரே வாய்பூட்டு உனக்கா’

‘இல்ல ஒனக்கும் சேத்துதான் மைனி’  என்பார்.

இருட்டோடு ஒன்றியிருக்கும் நிறமுடையவர். உடுத்தியிருக்கும் மங்கலான வெள்ளை நிற உடையை வைத்துதான் அவரை அடையாளம் காண முடியும். கருக்கல் நேரம் ஆடுகளை பத்திக்கிட்டு வீடு வரும்‍போது முதுகில் சாக்கை தொங்கவிட்டபடி வருவார் தேயிலைத் தோட்டத்து பெண்களைப்போல்.

அவரின் துணி, அவர் பயன்படுத்தும் பொருட்கள் இவற்றை எடுத்து வரும்படி அவள் அம்மாவிடம் வந்திருந்த பெண்ணொருத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்.  குடிசைக்குள் இருந்தவளின் காதில் விழவே சட்டென ஞாபகம் வந்தவளாக எப்போதும் அவரோடு இருக்கும் கைத்த‍டியை எடுத்து மறைத்து வைத்தாள். தாத்தாவின் கைரேகைகளாகவே மாறியிருந்து. அதை தடவிப் பார்க்கும்போது  அவர் கைகளைப் பற்றியபடியே நடந்த ஞாபகத்தை உண்டுபண்ணியது. எத்தனையோ கைத்தடிகள் முறிந்துவிட்டது. இதுதான் ரொம்ப நாளாகவே அவரோடு இருந்தது.

அவளுக்கு ரொம்ப நாளாக இருந்த ஆசை. திருமணமாகி கணவனோடு தாத்தாவின்  குடிசைக்குள் வாழ வேண்டும், கல் அடுப்பில் வைத்து ஒரு நாளேனும் சமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற   நினைப்பு வந்தவுடன் அந்த நாள் இன்று இரவாக இருந்துவிடாதா!  நாளைக்கு தடம் தெரியாமல் போகும் தாத்தாவின் குடிசை. ஒக்கிப் புயலில் அதிகமான சேதம் அடையாமல் இருந்த குடிசையைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டாள். அதை கேட்ட மற்றவர்கள் ‘ஆமா சுத்தியும் காங்கிரீட் வீடுகள் உயரமாக இருந்ததால உங்க தாத்தா தப்பிச்சாரு’ ஆனாலும் இந்த திமிரு ஆவாது எவ்வளவு நேரம் எல்லாரும் கூப்பிட்டாங்க மனுஷன் வரவேயில்லையே ஆடுகளோடு ஆடுகளாய் படுத்துக்கிட்டாரு’

மனச்சோர்வும், உடல்சோர்வும் சேர்ந்து அவளை சற்று நேரம் குடிசைக்குள் கண்ணயர வைத்தது. தன் தாத்தா நிமிர்ந்த நடையுடன் ஒரு இளைஞனை அழைத்து வருவதுபோலவும்  அவனுக்காக  கல் அடுப்பில் சமைக்க முற்படுகிறாள் ஒருநேரமும் ஒழுங்குக்கு வராத பானை சரிந்து விழவே பிடிப்பதுபோல் சட்டென விழித்தாள். கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரைத் துடைத்த வண்ணம் எழும்பி குடிசையை புதிதாகப் பார்க்கும் பார்வையோடு பார்த்தாள்.

மூங்கில் கம்பு ஓட்டைக்குள் நிறைய நியூஸ் பேப்பர்களை சுருட்டி அடைத்து வைத்திருந்தார். வீட்டை சுற்றிப் பார்த்தவண்ணம் இருந்தவளின் கண்களில் அது தென்படவே சின்ன குச்சி எடுத்து குத்தி வெளியில் எடுத்தாள். நிறைய பேப்பர்கள் வந்த பின்னால் இரண்டு பாலித்தீன் பேப்பர்கள் சுற்றப்பட்ட தனித்தனி பொதிகள் கிடைத்தன. அவற்றில் அவருடைய இறப்பிற்கு தேவைக்கு மீறிய பணம் இருந்தது. எல்லாம் ஐநூறு ஆயிரம் ரூபாய் தாள்கள். எடுத்து அம்மாவிடம் கொடுத்தாள். வாழைக் கறைபட்ட வெள்ளை சட்டைத்துணியை சுருட்டி மடக்கி வாரியில் சொருகி வைத்திருந்தார். அந்த சட்டை சூலி ஆடு சாகும்போது போட்டிருந்தது.. சில வருத்தங்களை மறைப்பதற்காக தடயங்களை மறைப்பது அவரின் பழக்கம்.

இருக்கும் ஆடுகளை விற்றுவிடலாம். யாரு அதுகள வைத்து பாராத்தியம் பண்ணுவது  பீச்சியை மட்டும் விட்டுவிடலாம் என்றாள் அம்மா.

கடைசியா ஒரு தடவை பாக்கிறவங்க பாருங்க என உடலை  எடுப்பதற்கு முன்னே ஒருவர் சொல்ல. ஏனோ கடைசி என்ற வார்த்தை வெற்றிடத்தின் குறியீடு போல. அந்த வார்த்தை ஆடுகளுக்கும் போய் சேர்ந்தது. கழுத்து மணிகளை விசித்திரமாக ஆட்டி சத்தம் போட்டது. மனம் எந்நிலையோ அதே நிலையில் இயற்கையும் நம்முடன் கலந்துவிடுகிறது. மெல்லத்தான் வீசுகிறது காற்று ஆனாலும் பெருத்த சத்தம் இடுகிறது தாத்தாவீட்டு மேற்கூரை. அவர் உடலை எடுக்கும் முன் ஒன்றிரண்டு மழைத்துளிகளோடு அவரது உடலை எடுத்துச் சென்றார்கள். இரவு எல்லோரும் பல கதைகளைப் பேசிப் பேசியே தூங்குவதற்கு வெகுநேரம் பிடித்தது.

தாத்தா கைத்தடியை எடுத்து தட்டித் தட்டி நடப்பதுபோலவே கனவு கண்டு கிடந்தாள். திடுக்கிட்டு விழித்தவளுக்கு  மீண்டும் டொக்…டொக் சத்தம் இடைவெளி விடாமல் கேட்டது. மணியைப்பார்த்தாள் மணி பத்தைத் தாண்டியிருந்தது. எல்லோரும் புது மனிதர்களாக மாறியிருப்பதுபோல் தோன்றியது.

குடிசையை பிரிக்கும் ஒருவன் மூங்கில் குச்சிகளில் கட்டியிருக்கும் குழவிக்கூட்டை சின்ன கல்லை வைத்துத் தட்‍டிக்கொண்டிருந்தான்.


-அமுதா ஆர்த்தி

2 COMMENTS

  1. போலிகளுக்கு மத்தியில் ஒரு மெய் மனிதம். ஆடுகளுக்கு மட்டுமல்ல, பாசத்தை வெளிப்படுத்த முடியா வண்ணம் பேத்திக்கும் போடப்பட்டிருக்கிறது அரூபமாய் ஒரு வாய்மூடி.

  2. பெரிய ஆடு கதை என்னுள் பல நினைவுகளை தூண்டியது. கிராமத்து வாழ்க்கையை ரசித்து அனுபவித்தவர்கள் தான் இப்படியான கதையை படைக்க முடியும் என நினைக்கிறேன். பெரும்பாலும் வயதான பெரியவர்கள் வைராக்கியத்துடன் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். முக்கியமாக தன்னுடைய சாவு செலவிற்கு கூட பணம் சேர்த்து வைத்து யாரையும் தொந்தரவு செய்யாத தலைமுறையான தாத்தா பாட்டிகளை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம். நன்றி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.