பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்


  1. சுவிட்சுகளை மனனம் செய்தல்

பறவையினங்களில் இந்த மின்விசிறிதான்

அமானுஷ்ய குணம்கொண்டதுபோலும் 

இரக்கம் கொண்டு ஒருநாள்

அதைக் கூண்டிலிருந்து விடுவித்து 

வானத்தில் மாட்டி வைத்தேன்

இப்போது

இந்நகரத்திற்கேயான மின்விசிறியென  

கழுகொன்று சுழன்றுகொண்டிருக்கிறது 

மேலும்

விசிறியை இணைக்கும் மின்வயர்களை 

அது பாம்புகளென நினைத்துக்கொள்ள 

இந்த அபத்தத்தை நிறுத்தவேண்டி

அறையில் ஒவ்வொரு சுவிட்சாக 

அமர்த்தி அமர்த்தி பரிசோதிக்கும் நான்

ஒவ்வொருமுறையும் குழம்பிக்கொள்கிறேன் 

எந்த சாதனத்திற்கு எந்த சுவிட்ச் என 

எப்போதும் தீராத சந்தேகங்கள்

எல்லாவற்றின்மீதும்…….

உண்மையைக் கூறவேண்டுமெனில்

காற்றுதான் பறந்துகொண்டிருக்கிறது

பறவையோ நடித்துக்கொண்டிருக்கிறது.

 

  1. புகழ்பெற்ற வாள்

வயது முதிர்ந்த வாளொன்று நடை திணறி 

சுவரோடு சாய்ந்து நிற்கிறது

முன்பெல்லாம் வேண்டாம் என்றாலும்

கைப்பிடித்துக் கூட்டிப்போக அரசனே காத்திருப்பான்

ஆசைதீர போர்க்களம் கண்டு சலித்துப்போன இதுநாள்வரை

அதன் கூர்நுனியோடு மோதுவதற்கு எதற்கும் துணிவில்லை

இவ்வுலகில் தெரியும் யாவும்

தனித்தனி துண்டுகளால்தான் ஆனதெனக் கண்டறிந்த

அப்பேற்பட்ட அதன்முன்னே 

எங்கே தைரியமிருந்தால்என்னை இரண்டாக்கு

என்கிறது ஒரு செங்குளவி

கைப்பிடி சுருங்கிப்போன வயதான வாளிற்கு சிரிப்பு தாங்கவில்லை 

எல்லாம் தன் நேரம் என ஒதுங்கி நின்றாலும் 

விடாமல் மோதி மோதி உசுப்பும் குளவி

அதன் காலைத் தடுக்கி நிலைகுலையச் செய்கிறது

தொடர்ந்து அத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் 

அப்புகழ்பெற்ற வாள் கீழே சாய்ந்தபோது

கேட்கவேண்டிய இரும்பொலிக்குப் பதிலாக  

வேறு எதோவொரு சப்தம் கேட்கிறது 

உண்டான இந்த அதிர்ச்சியைவிடஇதுவரை 

அந்த அட்டையால் தலைதுண்டான வீரர்களெல்லாம்

இன்று வசமாய் மாட்டிக்கொண்டனர்.

 

  1. சிறுகோட்டுப் பெரும்பாடல்

சுவரில் உண்டானால் விரிசல் 

பாறையில் என்றால் பிளவு

வானத்தில் என்றால் மின்னல் 

அகன்று நின்றால் தூண்

காகிதத்தில் கோடு 

வரைபடத்தில் பாதை 

பூவில் காம்பு 

தேகத்தில் நரம்பு

விளக்கில் திரி 

வளைந்தால் புழு

சொடுக்கிட்டால் விரல்……..

……………..

அதென்ன அநியாயம்..?

எவ்வளவு நேரமானாலும்

தீப்பந்தத்தின் நுனியைவிட்டு நகராத நெருப்பு 

தீக்குச்சியில் மட்டும் அத்துமீறுகிறது 

தற்சமயம் தோல்வியை ஒப்புக் கொள்வதைவிட 

வேறுவழியில்லை

என்ன முயன்றாலும் 

நம்மால் ஒருபோதும் ஒரு நேர்க்கோட்டை

தலைகீழாய் வரைய முடியாது 

 

  1. சரீரா

 

பல்துலக்கும் பழக்கமின்றி

மஞ்சள்கறை பீடித்த மக்காச்சோளத்தை 

நெருப்பிற்குக் காட்டும் நாம்

உருப்படியாய் ஒரு நிலையில் வைத்தால்தானே

சுழற்றிக்கொண்டே இருந்தால் 

சொல்வது எப்படி தெரியும்

நெருப்புக்குள் நீந்தப் பழகும் அது

எங்கு மூழ்கிவிடுவோமோ என்ற பயத்தில் 

நமதொரு கையைப் பற்றியபடியே நீந்துகிறது

மேலிருந்த பற்களைத் திருப்தியாக தின்றபின்பு

பொக்கைவாயென எஞ்சிய 

உயிர்போன உடலே” 

உண்மையாகவே இனி நீ 

ஒன்றுக்கும் ஆகமாட்டாயா

நம்ப முடியவில்லையே

எங்கே 

உன் பெருவிரலை அசைத்துக்காட்டு பார்ப்போம்.


  • பெரு விஷ்ணுகுமார்

1 COMMENT

  1. //உண்மையில் காற்று தான் பறந்து கொண்டிருக்கிறது
    பறவையோ நடித்துக் கொண்டிருக்கிறது//
    இந்த வரியில் நான் மின்சாரமற்ற காற்றாடியாய் சுழன்று கொண்டிருக்கிறேன்.இன்றைய நவீன காலத்தின் பிடிப்பற்ற தன்மை, சந்தேகம்,குழப்பம் எல்லாம் இந்த கவிதையைத் தீர்மானித்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.
    பழைய மதிப்பீடுகளை எள்ளி நகைத்தல்,மரபான நம் நம்பிக்கைகளின் அடிமடியிலேயே கை வைத்து அவிழ்த்துப் பார்த்தல் இரண்டாவது கவிதையின் மீதான எனது பார்வை.
    நவீன நிலத்தின் விளைச்சலான கட்டுப்பாடற்ற நுகர்வு “உயிர் போன உடல்” என்று அழைத்து உயிர் இருக்கிறதா என்று சோதிக்கும் குரூரத்தனமான குரலில் உறைந்திருக்கிறது.
    //நல்ல வாசிப்பனுபவம்.//

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.