பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்

 பண்பாடுகளின்  நிழல்பிரதிகளைப் பரிசீலிப்பதன் சாத்தியப்பட்ட எல்லைகள்

பெருமாள் முருகனின் மூவியல் புனைவுகள்

( மாதொருபாகன் –அர்த்தநாரீ- ஆலவாயன்) 

 

பண்பாட்டு அமைப்புகள் எப்போதுமே ஒரு மூடுண்ட அமைப்பாக தொடர்ந்து பிழைத்திருக்க முடியாது. அவை தம்மைத் தற்காத்துக்கொள்ள எப்போதும்  மீறல்களையும் , பூடகமான விடுதலை வெளிகளையும் தம்முள் திறந்தும் மூடியும் பேணிவருகின்றன. ஆனால் அந்த எதிர் வழக்காறுகள் எப்போதுமே பெரிய உடைப்புகளுக்கானவை அல்ல. அவை  அழுத்தச் சமைகலன்களின் பாதுகாப்புத் திறப்பிதழ்களைப் போன்றவைதான். மனித இயல்பூக்கங்களுக்கு சிறிய ஆசுவாசங்களை அனுமதிப்பதன் வழி தன் கண்காணிப்பையும் வரையறைகளையும் அவை மேலும் வலுப்படுத்திக்கொள்கின்றன. சமூகம், வரலாறு, பண்பாடு போன்றவற்றின் வளர்ப்புப் பிராணிகளாகிய மனிதர்கள் தங்களது உயிரியல் இயல்பூக்கங்களைத் திறந்துகொள்வதற்கான பண்பாட்டுப் புறனடைவுகளை  ஒரு இணை மரபில் எப்போதும் ரகசியப்படுத்தி வந்திருக்கிறார்கள். அதில் புனிதங்கள் கவிழ்க்கப்படும், தலைகீழாக்கங்கள் நிகழும், விளையாட்டுக்கு இடம் உண்டு.  கொண்டாட்டங்களும் தொல் இச்சைகளும் கைகோர்க்கும். காமமும் இச்சைகளும் பல்வேறு பாவனைகள் கொண்டுவிடும் அதன் திருவிழாக்கள், சடங்குகளில் தெய்வங்கள்-மனிதர்கள் என்ற துண்டிப்புகள் கலைந்த மையமிழப்பும் பித்தமும் சாத்தியம். ஒரு இனத்திரளின் வாழ்விருப்பு, பிழைத்திருத்தல் எனத் தொடங்கி அதன் தன்மையம்,  நீடித்திருப்பு, எதிர்காலவியல், விஸ்தரிப்பு எனப் பெருந்திட்டங்கள் இலட்சியங்கள் நோக்கி பண்பாட்டு அமைப்புகள் பரிணாமமடைகின்றன. இப்போக்கில் அது மொத்தத்துவத்தின் நோக்கம், நன்மைகள், எதிர்காலம் என்னும் அந்தர இலக்குகளின் பெயரில் தனிமனிதர்களை தன் பேரமைப்பின் கருத்தியல், விழுமிய ஒழுங்குகளின் அலகுகளாக, சுயதணிக்கைக்கும் கண்காணிப்புக்குமான நுண் நிறுவனங்களாகவும், சாதிய வருண, பாலி அதிகாரக் குறிகளால் புனையப்பட்ட உடல்களாகவும் கட்டமைத்துவிடுகின்றன. 

மனிதன்  ஒரு பண்பாட்டுத் தொகுதி என்பதன் பேராலான பொறுப்புகளுக்கும் அவனது ஆதாரமான உயிரியல்புகளுக்குமான இடைவெளிகளை கலாச்சாரப் புறனடை கூறுகள் ஏதோ ஒரு வகையில் சமாதானம் செய்து மூடுகின்றன. எல்லா பண்பாடுகளுமே தனக்குள் பராமரிக்கும் எதிர்க் கூறுகளின் நிழல்பிரதிகள் பெருமாள் முருகன் புனைவுகளில் பரிசீலனைக்கு வருகின்றன. பண்பாடு சார்ந்த புனிதத்துவங்களை அதன் கட்டமைப்புக்குள்ளாகவே, வரம்புகளுக்குள்ளாகவே நின்றபடி மனிதர்கள் எப்படிக் காலகாலமாக தம் வாழ்விச்சை உந்துதல்களுடன் மீறுவதற்கான சமன்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள், பண்பாட்டுக் கட்டுமானங்கள் அதன் உள்முகங்களில் எத்தனைச் சுயமுரண்களும் பாவனைகளும் கொண்டவை என்பதைப் பெருமாள் முருகனின் உலகம் ஊடுருவிக் காண்கிறது. 

 மாதொரு பாகன்,  அர்த்தநாரீ, ஆலவாயன் ஆகிய இந்த மூவியல் புனைவுகள் புறநிலையில் இயல்புவாதப் புனைவுச் செறிவுடன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியல்  நெறிகள், திணைவெளி, பண்பாட்டுக் கூறுகள், தொன்மங்கள், வழக்காறுகள், ஐதீகங்கள், மெய்மைகள் முதலிவற்றின் இனவரைவியல் ஆவணம்போலவும் அகநிலையில்,  பண்பாட்டு மேலாண்மைக்குள் அதன் புழங்காளர்கள் உருவாக்கிக் கொள்ளும் எதிர் வழக்காறுகளையும் நேர்நிறுத்திப் பரிசீலிக்கிறது. 

மாதொருபாகன் , சாதியம் இறுகிய ஒரு சமூகத்தில், வாரிசு மைய அதன் நிலமானியக் கட்டமைப்பில், குழந்தைப்பேறின்மையின் அழுத்தத்தை, அதனாலான பொன்னா-காளி என்ற தம்பதியரின் அலைக்கழிப்பை மையமிட்டுச் சுழல்கிறது.  ஆங்கிலேயர் காலத்து திருச்செங்கோட்டுப் பகுதி வழக்காறுகள், கதைகள் வழியாக நாவலுக்கு ஒரு வலுவான பண்பாட்டு யதார்த்த அடித்தளத்தை அமைத்துள்ளார் பெருமாள் முருகன். பொன்னா – காளி குடும்பத்தின் வம்சாவளிக் கதைகளில், குலத்தை தொடர்ந்து பீடித்து வரும்  சாபங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாப் பரிகாரங்களும் முயற்சிக்கப்பட்டு தோல்வியே நேர்கின்றது. சாபங்கள்-பரிகாரங்கள் குறித்த கதைகளிலெல்லாம், அந்தக் குடிகள் தம்மைப் பெருங்குடியாக நிறுவிக்கொள்ளும் வரலாற்றில் இயற்கை மீதும், மற்றமைத் தொல்சிறுகுடிகள் மீதும் நிகழ்த்திய அநீதிகள், ஆக்கிரமிப்புகளின் குற்றவுணர்வுகளும், பீதியும் பொதிந்துள்ளது. பலியான சக்திகள் தெய்வங்களாகி எழுகின்றன.  குழந்தை என்பது ஒரு நிலமானிய சாதிய சமூகத்தில் வெறும் உயிர்த்தொடர்ச்சியாக இருபதில்லை. அது சாதிய நீட்சி, குல நீட்சி, அதிகார, உடமை நீட்சி என்பதாக உள்ளது. நாவலெங்கும் உறவுகள், ஊரார்களின் ’குழந்தை’ பற்றிய பேச்சுகளும் சொத்துரிமை குறித்த பேச்சுகளும் ஒரே முடிச்சில் இருக்கின்றன. 

காளி – பொன்னா வின்  குழந்தை இன்மையை மையச் சரடாகக் கொண்டு  அந்தச் சமூகத்தின் சாதிய, பால்நிலை அதிகாரங்கள், உடைமை மனோபாவம், பண்பாட்டுப் பெருமிதங்களின் உள்ளான ஒடுக்குமுறைகளை ஒரு உள்ளார்ந்த அமைதியுடன் ’மாதொருபாகன்’ பேசிவிடுகிறது. ஒரு மூடுண்ட சமூகத்துக்குள் காலனிய சீர்திருத்தங்கள்,  நவீன மாற்றங்கள் போன்றவற்றின் மெல்லிய அதிர்வுகளைப் பரவவிட்டு அதன்வழியான உரையாடல்களையும் பரிசோதித்துப் பார்கிறார் பெருமாள் முருகன். அவ்வகையில் அதற்கான ஒரு பிரதிநிதியாக காளியின் நல்லையன் சித்தப்பா முன்வைக்கப்படுகிறார். இவர் திருமணம் – வாரிசுருவாக்கம் என்னும் சாதிய நிலவழிச் சமூகத்தின் புறனடையாக, மீறலாக இருக்கிறார். ஊரில் முதலில் குடுமி நீக்கி ’கிராப்’ வைத்துக்கொள்பவர். சொத்துடைமைவாத திருமண அமைப்பை கேலி செய்யும் இவர் வாரிசுமையத்திற்கு அப்பாலான பாலியல் சாத்தியங்களைத் தேர்ந்துகொண்டவர். ’அர்த்தநாரி’ நாவலில்  சுய மரியாதை இயக்க குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விதவைப் பெண்ணை நல்லையன் மணந்துகொள்வதற்கான பேச்சுகளும் நடக்கின்றன. காலனியச் சூழலின் தகவமைப்புகளில் மெல்ல உள்வாங்கப்படும் அச்சமூகத்திற்குள் வரலாறு முன்னகர்ந்துச் செல்லும் இயக்கத்தை நல்லானை முன்வைத்து பிரதிநிதித்துவம் செய்கிறார் பெருமாள் முருகன். 

பல்வேறு பரிகாரங்கள், வழிபாடுகள், வறடிக் கல் சுற்றி வருதல் என்ற எல்லாப் பிரயத்தனங்களும் தோல்வியுற்ற பின் பொன்னாவின் முன் திறந்திருக்கும் ஒரே வாய்ப்பு   ‘பெருநோம்பி’ தான். கரட்டூர் மலையில் அர்த்தநாரியாக வீற்றிருக்கும் தெய்வத்திற்கான பெரு நோம்பித் தேர்த்திருவிழாவில் தெய்வம் மீண்டும் கரடேறும் இறுதிநாள் கலாச்சாரம் தனக்குள் பல கலைத்துப்போடல்களை அனுமதிக்கும் நாள்.  குழந்தைப்பேற்ற பெண்கள் அந்நாளில் கரட்டூர் தெய்வத்தின் பெயரால் முன்னறிமுகமில்லாத எந்த ஆணுடனும் கூடிக் கருத்தரிக்கும் வாய்ப்பை நாடுவது அதில் முக்கியமானது. அன்று அந்த சாத்தியத்தை வழங்கும் எந்த ஆணும் சாமியின் வடிவம். அப்படிப் பெறப்பட்ட பிள்ளைகள் ”சாமி குழந்த” என்பது ஒரு வழக்காறு. பொன்னா இறுதியில் அந்த வாய்ப்பை நோக்கி உந்தித் தள்ளப்படுகிறாள். பொன்னா பெருநோம்பி இரவில்  தனக்கான ஆணைத் தேர்வது ( அவள் எதிர்ப்பட நேரும் ஒவ்வொரு ஆணிலும் தன் பாலூக்க விழைவுகள், மனவியல்புகள் சார்ந்த அவளது தேடலும் தேர்வும் ), அவளுக்கான ‘சாமியை’ அவள் கண்டடைவது, அந்த கணநேரக் காதலும் முயக்கமுமான தருணங்களில் , மாதொருபாகன் , ஒரு கடும் நிலமானியக் கட்டமைப்ப்பின் ஒரு தற்காலிக விடுவிப்பில் ஒரு பெண்ணின் சுய பாலியல் தேர்வுகள், இயல்பூக்கங்கள் அவளுக்கான பாலிமை விடுதலை வெளிகளை  நுட்பமாகத் திறந்து பார்க்கிறது. ஆனாலும் அதற்கு தீர்க்கமான வரம்புகள் உண்டு; நோக்கங்கள் உண்டு. அது ஒரு பாவனை மட்டுமே. அந்த முகமற்ற ஆண் பொன்னாவை , ‘செல்வி’ எனப் பெயர் சொல்லி அழைப்பதன் மூலமாக அவர்கள் ஏற்கனவே மணமான தம்பதியர்தான் என்ற பாவனையை , நம்பவைத்தலை சமூகத்தின் முன் செய்ய வேண்டும். பொன்னா தான் தேடும் ஒவ்வொரு ஆணிலும் காளியின் சாயலைத் தேடுவதும், தான் தேர்ந்துகொண்ட அந்த ஆணுடனான உறவிலும் அது ’காளியின்’   வடிவமே என்ற சுயவலியுறுத்தலும் பெருநோம்பியின் எதிர் வழக்காறுகளின் வரம்புகளைச் சுட்டி விடுகின்றன. (அர்த்தநாரி, ஆலவாயன் ஆகிய இரு நாவல்களிலும் பொன்னா கருத்தரிப்பதற்கு முன்பாக அவளது கனவுவெளியில் காளியின் மாயரூபத்திலான முயக்கம் நேர்வதையும் இங்குப் பொருத்திப் பார்க்கலாம். தனது கரு காளியினுடையதே என அவள் தொடர்ந்து வலியுறுத்திக்கொள்கிறாள்.) பொன்னாவின் பாலூக்கமும் , சுதந்திரமும் மீண்டும் ‘கற்பிலும்’ ‘வாரிசு’ மையத்திலும்  நிலைகொள்ளும் இடம் அது. வேற்று ஆணுடனான நேர்வு என்பதும், பொன்னாவின் ’கற்பை’ இன்னும் தீவிரமாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பமாகவே உள்ளது. இந்த இடத்தை உடைத்து பொன்னாவின் பாலூக்கத் தன்னியல்புகளை  கொஞ்சம் திறந்து பார்ப்பதற்கான வெளிகள் “ஆலவாயன்” நாவலில் வழங்கப்படுகின்றன. ஆலவாயன் என்பது பெருநோம்பியில் அவளோடு கூடும் அந்த வேற்று ஆண் தனது செல்லப் பெயராக பொன்னாவிடம் குறிப்பிடுவது. இந்த நாவலில், பொன்னா தன் குழந்தையிடம்(காளியின் மரணத்துக்குப் பிறகுதான்) அதன் தந்தையாகிய அந்த வேற்று ஆணின்(ஆலவாயனின்) சாயல்களைத் தேடுவதும் அதில் களிப்புறுவதும் , அவனது நினைவுகளில் தோய்வதுமான கிளர்தல்கள் உண்டு. ”ஆலவாயனில்”  காளி மெல்ல தேய்வுற்று ‘ஆலவாயன்’ அழுத்தம் பெறுமிடம் உண்டு. ஊரின் எல்லா பூவரசாகளிலும் ஆடும் காளியின் சாயையை,   ஒவ்வொரு பூவரசாகப் படர்ந்து தொண்டுப்பட்டிக்குள் வரும் காளியை, அவளை அழுத்தமாக சூழ்ந்திருக்கும் காளி என்னும் நினைவை,  நிலத்தில் கல்லூன்றி ஒரு சிறுதெய்வமாக, வழிபாட்டுருவாக மாற்றிக்கொள்வதின் வழி அவள் அமைதிபடுத்துகிறாள். விடுவித்துக்கொள்கிறாள். மறுபுறம் பொன்னா தனது கடந்த காலத்தின் துயரங்கள், வடுக்களை   நிலத்துடனான தீவர உழைப்பின் மூலமாகவே வென்றெடுக்கிறாள். நிலமும் உழைப்பும் அவளது பாலாற்றலின் பதிலீடாகவும் இருக்கிறது.

  இந்த மூன்று நாவல்களிலும்   பெண்கள் சதா தீவிரமாக நிலத்தோடும் இயற்கையோடும் மூர்க்கமாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். பெண்ணுடலின் உள்ளார்ந்த உழைப்பாற்றலும் , படைப்பூக்கமும் அழகியல் நேர்த்தியும் ‘ஆலவாயன்’ ‘அர்த்தநாரி’யின் ’பொன்னா’ மூலமாக அழுத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளன.  ’காளியை’ தெய்வாகமவும், நிலத்தின் மீதான உழைப்பை தன் பாலிமை பதிலீடாகவும் உருவாக்கிக்கொள்ளூம் பொன்னாவின் ‘ஆலவாயனின்’ குறித்த நினைவுகளில் சிறிய பாலூக்கத் திறப்புகள் இருக்கின்றன. இந்த மூன்று நாவல்களுமே பெண்களின் பாலூக்கம், விடுதலை சார்ந்து பல வெளிகளைத் திறந்தாலும் பெண்ணுடலின் பாலிமை ஆற்றல்கள், அதன் படைப்பூக்கங்கள் சார்ந்து தீவிரமான தளங்களுக்குள் புக முடியாமல் ஆண்மைய நிலமானிய இல்லற வரம்புகளின் எல்லைகளுக்குள்ளேயே அது சார்ந்த ஒரு சமூக எதார்த்தத்திற்குள்ளாகவே  வரம்பிட்டுக்கொள்கிறது. 

குழந்தையின்மையால் சபிக்கப்பட்ட பெண்கள்  பிரபஞ்சக் கூறுகள், மீமானுட சக்திகளுடனான உறவால் கருத்தரிக்கும் கதைகள்  பல புராணங்கள், ஆதிகதை மரபுகளில் உண்டு. பெண் என்னும் பாலிமை ஆற்றலை ஆணுடலின் பதிலீட்டுத் தன்மையிலிருந்து பெறாமல், ஆணுடல் என்பதிலிருந்து விடுவித்துக் கொண்ட பெண் பாலிமைச் சக்தியின் சுயமையிலிருந்தும் அதன் சுதந்திர அறிதல்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளும் எதிர்க்கதையாடு தன்மைகள்  அக்கதைகளில் உண்டு. (பரிணாமவியல்படி ஆண் என்ற பாலுருவாக்கத்தில், தன் மரபணுக்களை பேரழிவுகளிலிருந்து தற்காக்கக்வும், ஈருடல்களில் அதைப் பகுத்துப் பெருக்குதலின் வழியான பல்வேறு மரபினைச் சாத்தியங்களுக்காகவும் பெண்ணுடல் தனக்குள்ளேயே சில சுரப்புகளை ஊற்றெடுத்து ஆணுடல் என்ற ஒரு புதிய படைப்பை   நிகழ்த்தியது என்பதான கண்டுபிடிப்புகளை இன்று உயிர் அறிவியல் கூறுகிறது.) தனது உயிர் நீட்சிக்கான பெண்ணுடலின் ஒரு தற்காலிகத் தந்திரோபாயமே ’ஆண்’பாலிமை உருவாக்கம் என்னும்போது அவளது பாலியல் என்பது ஆணுடலோடு கட்டுண்டதல்ல. ஆணுடலோடு துண்டித்துக்கொண்ட நிலையிலும் தான் என்பதை முன்னெடுத்துச் செல்லும் பெண்ணின் உயிர்வேட்கையின் வெவ்வேறு சுதந்திர சாத்தியங்களை  நாட்டார் எதிர்வழக்காறுகள் ஏதோ ஒரு வகையில் பொதிந்து வைத்துள்ளன. (நட்சதிதிரங்கள், மீன்கள், சூரியன், நெருப்பு எனப் பல இயற்கைக் கூறுகளோடும் அவள் சூல்கொள்ளக் கூடியவள்)  மாதொருபாகனின் பெருநோம்பி அத்தகைய தளங்கள் கொண்டதா என்பது விவாதத்துக்குரியது. பெருநோம்பியின் அந்த ‘கலைத்துப்போடல்’ கணம் என்பது பெண்ணின் பாலூக்கத் தேர்வை முன்னிறுத்துவதாகவோ  பண்பாட்டின் ஒடுக்குதல்களுக்கு எதிராக அதற்குள்ளேயே எழும் கலகத் தருணங்களை அதன் கச்சாத்தன்மையுடன் சொல்வதாகவோ இல்லை. மாறாக அது பண்பாட்டு ஏற்புடன் ( குடும்பத்தாரால் அனைவராலும் விவாதிக்கப்பட்டு, ஒழுங்கமைவான திட்டமிடலுடன், கணவனுக்கும் தெரிவிக்கப்பட்டு அனுமதிபெறும்) ஒரு தெளிவான சமயச் சடங்கு  போன்ற தொனியில் முன்வைக்கப்பட்டுள்ளது. குழந்தையற்ற பெண் தன் கருத்தரிப்புக்காக ஓர் அந்நிய ஆணோடும் கூடி வரும் செயலும், திருவிழாவின் மறைவெளியில் பெண்களை நாடிச் செல்லும் ஆண்களும் என்ற ஒரு சந்தர்ப்பம், சமூக வரையறுப்புகளால் கட்டுண்டவர்கள் திருவிழாவின் மீறல்வெளிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் தங்கள் வேட்க்கைக்கும் பாலூக்க விடுதலைக்குமான சந்தர்ப்பங்களே. வாரிசு வேண்டும் என்ற ஒரு ‘புனித’ கற்பிதத்தில் தான் அது நிகழ வேண்டும் என்றில்லை. திருமணமான குழந்தையற்ற பெண்கள்தான் அங்கு செல்ல வேண்டும் என்பதுமில்லை. அவற்றைத் தாண்டிய, அந்த மையத்தில் சுற்றாத பல்வேறு பாலியல் சாத்தியங்கள் அங்கு திறக்கின்றன. பண்பாடுகளால் மூடுண்ட மனித உடல்களின் இயல்பூக்கங்கள் வேட்கையுடன் பீறிட்டுக் கிளம்பும் உடைப்புகளே உண்மையில்  திருவிழாக்களின் மறைபிரதிகளாக இருப்பவை. ஆனால் மாதொருபாகனின் ‘பெருநோம்பி’ அந்த இடங்களை மௌனப்படுத்திவிடுகிறது அல்லது அதன் மையத்தில் அவை இல்லை. புனிதத்துவமும் நாடகீயமும் கூடிய காளி-பொன்னாவின் உணர்ச்சிமிகு இல்லறக் காதல் என்பதே மூன்று நாவல்களிலும் அழுத்தம்பெறுகிறது. வாரிசு என்ற புனித நோக்கிற்காக மட்டுமே வேற்று ஆணுடன் உறவுற நேர்ந்த ஆனால் மனத்தளவில் கற்புநெறி பிறழாத ( காளியை மட்டுமே நினைப்பவள்) பொன்னா. மறுபுறம் திருமணத்துக்கு முன் சில பாலியல் சாகசங்கள் இருந்தாலும், பொன்னாவுக்குப் பிறகு தீவிர ‘ஏக’பத்தினியனாக , தன் உடல் உயிரில் பொன்னாவை சரிபாதி தரித்துக் கொண்ட மாதொருபாகனான ’காளி’. இவர்களுக்கிடையிலான உணர்ச்சிமிகு உறவுச்சித்திரம் என்பதே முப்புனைவுகளிலும் மையமாக இருக்கிறது. இதனால் பெருமாள் முருகன் தனது மூன்று நாவல்களிலும் பலவிடங்களில் பொதிந்து வைத்திருக்கும் பாலியல் எதிர்ப்பண்பாட்டுக் கதைகள் யாவும் அவற்றின் ”சாராம்சமான” எதிர்த்தன்மை கொண்டுள்ளனவா என்பதும் விவாதத்துக்குரியதாகிவிடுகிறது.

பெருமாள் முருகனின் இந்த முப்புனைவுகளிலும் பாலியல் பேசப்படும் இடம் விவாதத்துக்குரியதாகவே உள்ளது. இவற்றில் இடம்பெறும் வாய்மொழிக் கதைகளிலும் சரி, நடப்புச் சம்பவங்களிலும் சரி ஆணைப் பாலியல் சாகசவாதியாகவும் பெண் தன்னை நுகரப்படும் இடத்தில் வைத்து ஆணின் ஏற்புக்கு ஏங்குபவளாகவுமான சித்திரங்களே உள்ளன. பெண்கள் பாலியல் வேட்கைசார்ந்த திருப்தியின்மையில் தவிப்பவர்களாகவும் ஒரு ”சாகச”  ஆணால் சாந்தப்படுத்தப்படுவர்களாகவுமான பதிவுகளே உள்ளன. நல்லான் சித்தப்பாவின் சமூகப் பார்வை, மதிப்பீடுகள் வழி ஒரு சமூக விமர்சனக் கண் உலாவினாலும் , அவரது பாலியல் சாகசவாதங்கள் ஆணுடல் வல்லாண்மையின் குறிப்பீடுகளை தாங்கியவையாகவே உள்ளன. பெண் பாலிமை ஆற்றல்கள், தேர்வுகள் என்பதன் சாத்தியங்களை இப்புனைவுகள் மெல்லத் திறந்து பார்த்துவிட்டு  பின் மௌனமாக மூடிக்கொள்கின்றன.  நாட்டார் வழக்காறுகள் அடர்ந்து உள்வாங்கப்பட்டுள்ள இந்நாவல்களில் பெண்ணுடலின் பாலிமை ஆற்றல்களும் வீரியமும் இன்னும் ஆழ்ந்த தளங்களுக்குள்ளான சாத்தியங்கள் கொண்டதே. 

 நல்லையன் சித்தப்பா போகுமிடமெல்லாம் பெண்களை எளிதில் வசப்படுத்திவிடுகிறார். எல்லாப் பெண்களும் அவருக்காக ஏங்குகிறார்கள். சொத்துக்காக அவரிடம் அனுப்பப்படும்  தம்பி மனைவி அவரே கதியென்றும், அவர் மேல் தீராப் பித்து கொண்டும் திரிகிறாள். பன்றி மேய்க்கும் குடியொருவர் தன்னால் இயலாத நிலையில், தன் மனைவியை திருப்திப்படுத்த நல்லையனை வேண்டுகிறார். அங்கும் அவரது சாகசம் தொடர்கிறது. நல்லையனைச் சுற்றிய கதைகள் அணைத்திலும் தொடர்ந்து  பெண்கள் குறித்த இத்தகைய சித்திரங்களே வருகின்றன. பெண்களின் உரையாடல்களில் , (உதாரணமாக காளியின் அம்மா சீராயிக்கும் பொன்னாவின் அம்மா செல்லாயிக்குமிடையிலான ‘பழமை’ பேச்சுகள்) ஏராளமான எதிர்ப் பண்பட்டு பாலியல் வழக்காறுகளை திறந்து போடுகிறார் பெருமாள் முருகன். இது ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. ஆனால் அவற்றிலும் ‘சாகச’ ஆண் என்ற மையம் பெரிதாக கலைக்கப்படவில்லை. ( தந்தைகள் தன் மருமகள்களோடு கூடுவது போன்ற அக்கால  குடும்பப் பண்பாடுகளில் ஒளிந்திருந்த வரம்பற்ற பாலியல் மீறல்கள் அவற்றில் சொல்லப்பட்டாலும் அவை நிலமானிய ஆண் மைய மதிப்புகள் கொண்டவை என்ற உட்குறிப்பின்றி கலக வழக்காறுகளாக முன்வைக்கப்படும் தொனி இருக்கிறது.)

 அதே சமயம் பெண்களுக்கிடையிலான உரையாடல்களில் அவர்களது உலகம் சார்ந்தும், அவர்களது பாலூக்கங்கள், உடல்சார்ந்த உத்வேகங்கள், அவர்களது உழைப்பு படைப்பூக்கம், பெண் தன்னிலையின் சாதிய ஆண்மைய சாதிய கட்டமைப்பை மீறும் சில எத்தனங்கள், பெண்ணுலகின் தனிப்பட்ட வழக்காறுகள் குறித்தெல்லாம் ஒரு நுட்பமான அகத்தளத்தை மூன்று நாவல்களிலும் ( குறிப்பாக அர்த்தநாரீயும் ஆலவாயனும்) பொதிந்துள்ளார் பெருமாள் முருகன். குறிப்பாகப் பொன்னாவுக்கும்  அவளது நிலத்தில் பண்ணயக் கூலியாக வேலை பார்க்க வரும் வெங்காயிக்குமான பேச்சுகளை இங்கு பொருத்திப் பார்க்கலாம். சாதிய வரம்புகள் கடந்த சில உத்வேகங்கள் அவர்களுக்குள் எப்போதும் திறந்துகொள்கின்றன. வெள்ளைச் சீலையுடுத்தி ‘கைம்மை’ பேணவேண்டிய’ சாதிய மேலடுக்கில் இருக்கும் பொன்னாவுக்கு ’தீண்டத்தகா’ சமூகமான வெங்காயின் சுதந்திரமும் வரம்பின்மைகளும் ஆர்வமூட்டுகின்றன. எசமான நிலையில் தன்னை அழைக்க வேண்டிய வெங்காயியை, தன்னை ‘பொன்னு’ எனப் பெயர் சொல்லி விளிக்க வற்புறுத்துகிறாள். (ஆலவாயன்).  மதொருபாகனில் ‘ பெருநோம்பிக்கு மாட்டு வண்டியில் செல்லும் போது காரானின் குறுகுறுப்பான குழந்தைகள் மீது பரிவும் சிலிர்ப்புமடையும் பொன்னாவை,  அக்குழந்தைகளை தொட்டு அணைத்துக்கொள்ளமுடியாதபடி சாதிய வரம்பு குறுக்கிடுகிறது. ’பொன்னா’  யாரோ ஒருவனோடு கூடி வந்து பிள்ளை பெற்றால் அது ’தீண்டா’ சாதி ஒருவனின் கருவாக இருக்காது என்பதற்கு உத்தரவாதமில்லை என்பது காளியை மேலும் கலவரமூட்டுகிறது. இப்படி அந்த சமூகத்தின் சாதிய அழுத்தங்கள், தணிக்கைகளை புனைவின் ட்டத்தோடு  நுட்பமாக சமூக ஆவணப்படுத்தி விடுகிறார் பெருமாள் முருகன். பெரிய வீட்டுக் குடும்பங்களின் சுப காரியங்கள், கெட்ட காரியங்களை அவர்களது அயலூர் உறவுகளுக்கு ,  ஊரின் தாழ்த்தப்பட்டசாதி வேலையாட்கள்தான் போய் சொல்ல வேண்டியிருக்கும் ‘சேதி போய் சொல்லி வருதல்’ குறித்த பதிவுகளும் வருகின்றன. தமிழில், சாதி இனக்குழு வழக்காறுகள்தான், பண்பாடுகள்தான் வட்டார வாழ்வியல் புனைவுகளாக உருவாகிவருகின்றன. அந்த கட்டமைப்புக்குள் இருந்தபடிதான் அதன் மீதான விமர்சனங்களைச் செய்வதும் சாத்தியப்படுகிறது. இந்த சமன்பாட்டுக்குள்தான் இந்த நாவல்களும் இருக்கின்றன. நல்லையன் சித்தப்பா, பொன்னா வழியாக சில முன்னகர்வுகள் பரிசோதிக்கப்படுகின்றன.

பொன்னாவின் ’பிறழ்வை’ எவ்விதத்திலும் சமாதானப்படுத்திக் கொள்ள முடியாத காளி தான் பேணி வளர்த்த பூவரசிலேயே தூக்கிட்டுக் கொண்டான் என்னும் ஒரு சாத்தியத்தில் காளிக்குப் பிறகான பொன்னாவின் வாழ்வாக  ஆலவாயன் விரிகிறது என்றால், பூவரசில் தூக்கிட்டுக்கொள்ளப் போகும் காளியை அவனது அம்மா மன்றாடித் தடுத்துவிட அதற்குப் பிறகான காளி-பொன்னா வாழ்வைச் சூழும் வெறுமையைப் பரிசீலிக்கிறது ’அர்த்தநாரி’. பொன்னாவிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொள்ளும் காளி தொண்டுப்பட்டியிலும் குடியிலும் தன்னை புதைத்துக்கொள்கிறான். பொன்னா காளியின் ஏற்புக்காக ; காளியின் மானசீகக் கருவென்றே  தான் தரித்து ஈன்ற அக்குழந்தைக்கான அவனது தந்தைமைக்காக விழைந்து காத்திருக்கிறாள். தன் மனத்தின் அச்சு முறிந்து பெருநோம்பிக்கு உடுத்திச் சென்ற அதேசேலையில் அவள் தூக்கிடப் போகும் தருணம் காளியின் கரங்கள் அவளைப் பற்றுகின்றன. மாதொருபாகன் – அர்த்தநாரீ இரண்டிலும் காளியிலிருந்து பிரித்தறிய முடியாத பொன்னா, ஆலவாயனில் தனக்கான சுய வெளிகளைத் தேர்பவளாக இருக்கிறாள். காளியின் மரணத்துக்குப் பிறகு, பொன்னாவின் கரு  காளியினுடையதுதான் என்பதை உற்றார் ஊரார்முன் அறிவித்து சமூக ஏற்பை உறுதிப்படுத்த வேண்டிய ‘சேதிக்கூட்டம்’ ஆலவாயனில் மிக முக்கியப் பதிவாக உள்ளது. அந்த சடங்கைச் சூழந்த விவரணைகள், பேச்சுகளிலேயே  அந்த சமூகத்தின் உள்ளார்ந்த ஆதிக்கங்கள், சுயமுரண்கள் அழுத்தமாகச் சொல்லப்பட்டுவிடுகின்றன. 

இந்த மூன்று நாவல்களிலும் பண்பாடு என நாம் காணும் அதிகார ஒழுங்குக்குள் உள்ள சூக்ம எதிர்வெளிகள் உபகதையாடல்களாக தொடர்ந்து வருகின்றன. ஆனால் அதன் சாத்தியங்களையும் மீறி ஆழ்ந்த உணர்வுத்தளத்தில் பின்னப்பட்ட பொன்னா-காளி இணையின் மென்சோக இல்லறக் காதல் கதையாகவே அழுத்தம்ப் பெறுகிறது. ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தியங்க முடியாத ஒரு முழுமையின் சரிபாதிகளாக விதிக்கப்பட்ட இரு உயிர்களின் இரு கூறுகளின் முயங்கலும் விலகலும் சலித்தலுமான ஊடாட்டங்களின் ஊழ் என்ற மையத்திலேயே ‘காளி-பொன்னா’ வைக்கப்படுகின்றனர். அதற்கான அபாரமான புனைவுசமத்காரமும் மொழியும், சாரமான பண்பாட்டுத்தளமும் கொண்டு வாசிப்பில் ஆழ்ந்த ஊடுருவலைச் செய்யும் வலிமைவாய்ந்தவையாக இந்த படைப்புகள் அமைகின்றன. 


– பிரவீண் பஃறுளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.