மீண்டும் வாசகர் பங்கேற்பைக் கோரும் மிலன் குந்தேரா!

மிலன் குந்தேராவின் கடைசி நாவல் (Ignorance) வெளியாகி 13 வருடங்கள் உருண்டோடிவிட்டது.  2015 ஜூன் 18ம்தேதி அவருடைய அடுத்த நாவல் The Festival of Insignificance ஆங்கிலத்தில் வெளிவந்தது.  ஃபிரெஞ்சில் ஏற்கனவே 2013ல் இந்நாவல் வெளிவந்து ஐய்ரோப்பா முழுவதும் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. ஃபிரான்சில் நான்கு நண்பர்களின் வாழ்வு பின்புலத்தில் நாவல் நகர்கிறது. வழக்கம்போல் தன்னுடைய பகடி மொழியில் காதலையும், காமத்தையும் வெளூத்துக்கட்டியுள்ளதாக பல விமர்சகர்கள் எழுதியுள்ளார்கள். பலமுறை நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டும் இன்னும் இவருக்கு கிட்டவில்லை. தற்போது ஃபிரான்சில் வசித்துவரும் 85 வயதாகும் குந்தேராவுக்கு உடனடியாக நோபல் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. செக்கஸ்லோவிக்கியாவில் 1929ல் பிறந்து, 1975லிருந்து ஃபிரான்சில் வசிக்கிறார்.இவருடைய அனைத்து படைப்புகளிலும் இவரை பற்றி இந்த ஒரு வரி தகவல் மட்டுமே உண்டு.இவரின் கதை தொகுப்பு மற்றும் _புனைவுகள் நூல்களிலும் இன்றளவளிலும் இவரைப்பற்றிய நாம் தெரிந்து கொள்வது இவ்வளவுதான். தனிப்பட்ட வாழ்க்கை தகவல்களை முற்றிலும் ஒதுக்கி தன் படைப்பை மட்டுமே முன்னிருத்தியவர் இருபதாம் நூற்றாண்டின் அதிமுக்கிய எழுத்தாளர்.

பின்னாளில்(80களில்) இவரின் பின் புலன்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தவர்களும் உண்டு. இதைப்பற்றி அவர் விவரிக்கையில்நாம் வியாபார நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அலுவலங்களுக்கு விண்ணப்பிக்கும்போது நம்முடைய தனிநபர் தகவல்களை கொடுக்கிறோம்.இந்த பழக்கம்தான் நமக்கு அனைத்து துறையிலும் பிரயோகிக்கும் உந்துதல் வருகிறது.கலை,இலக்கியத்திற்கு இது தேவையில்லைஎன்கிறார்.

இதை பற்றி வேடிக்கையாகவும் குறிப்பிடுகிறார்.அதாவது சிறுவயதில் ஒரு வகையான களிம்பை தன் மேல் பூசிக்கொண்டால் மாயமாகி விடுவோம் என தான் நம்பியதாகவும், இப்போது பிரபல எழுத்தாளராக மாறியுள்ளதால் தனக்கு அந்த களிம்பு வேண்டும் என்கிறார். பியோனோ இசைக்கலைஞரான தன் தந்தையிடம் முறையாக இசையை பயின்றவர்.அதனால்தானோ அவருடைய பெரும்பாலான படைப்புகள் ஏழு அத்தியாயங்கள் அல்லது ஏழு கதாபாத்திரங்கள் அல்லது ஏழு சம்பவங்கள் என உள்ளடக்கமாக இருக்கிறது.அதாவது ஏழு ஸ்வரங்களை நினைவூட்டும் வகையில். ஆக அவரின் புனைவுகளில் இசை,காதல்,காமம்,போரினால் அவதியுறும் தனிநபர் அவலம்/வாதை,நிர்பந்தத்தில் வாழும் தன்னிலை என பகடி நடையில் அவர் எழுத்து உள்ளுறையாக உள்ளது.

கவிதை,நாடகம்,சிறுகதை,விமர்சனக் கட்டுரை, நாவல் எனறு எழுதும் அவருக்கு பன்முகங்கள் உண்டு.இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.ஆனால் கட்சி விரோத நடவடிக்கையால் இயக்கத்திலிருந்து வெளியற்றப்பட்டவர். ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி பற்றியும், செக் நாட்டில் ருஷ்யாவின் ஆக்கிரமிப்பின் பின்புலத்தில் The Joke  என்ற காதல் கதையை  தன்னுடைய முதல் நாவலாக அங்கத நடையில் எழுதி வெளியிட்டார். உண்மை/பொய், கனவு/நனவு, பின்னிப்பிணைந்து அனாயசமாக தன் புனைவுகளை எழுதிச் செல்கிறார். இது ஒரு வகையான எழுத்து விளையாட்டு என்கிறார்.அதாவது புற உலகை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளகூடாது. அப்படி செய்தால் புற உலகு திணிக்கும் உண்மைகளை நம்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம் என்கிறார்.ஆக அவருடைய எழுத்தில் அங்கதம் முக்கிய பங்கு வகிக்கிறது.அதாவது புற உலகை உண்மையும்,பொய்யும் கலந்து பிரமீப்பூட்டும் நடையில் எழுதி, வாசகர்களுக்கு பன்முனை சாத்தியங்களை முன்வைக்கிறார்.

தன்னுடைய மற்றொரு நாவலான Book of laughter and forgetting ல் பல கதாபாத்திரங்களை உரையாட வைக்கிறார். ஆனால் எந்த கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதில்லை. ஏழு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் வாசகர்மேல் எந்த உண்மையையும் திணிக்காமல் பல கேள்விகளை முன் வைக்கிறது.தன்னுடைய சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒருவருக்கு வரும் வாதைநினைவுகளை மறத்தல்‘. இதை இந்நாவல் முழுவதும் தன் அனுபவங்களின் வாயிலாக கோடிட்டு காட்டி தனிநபர் அவலத்தை எழுதிச்செல்கிறார். தன்னுடைய அடுத்த நாவலான The Unbearable Lightness of Being ல் கிரேக்க தத்துவஞானி Parmenides தத்துவப்படி, வாழ்க்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு வகையான அபத்த விளையாட்டாக இரு தம்பந்தியர்களின் கதைகளின் வாயிலாக வாழ்வின் இரட்டைத் தன்மையை அபாரமாக எழுதிச் செல்கிறார். உலகில் எல்லாமே இரட்டைத் தன்மைகளாக இருக்கின்றன. மொத்த வாழ்வும் கணம் மற்றும் கணமற்ற தன்மை என்ற இருமை எதிர்வில் ஊசலாடுவதை இந்நாவலில் விவரிக்கிறார். விவிலியம். அரசியல், தத்துவம், இதிகாசம், அறிவியல் போன்ற பல அறிவார்த்த துறைகளின் இழைகளை இந்நாவலில் கோர்த்துள்ளார்ருஷ்ய ஆக்கிரமிப்பில், செக் நட்டிலிருந்து குந்தேரா  வெளியற்றப்பட்டவர்செக் நாடு இருக்கும் மத்திய ஐரோப்பாவின் கலாச்சார வேர்களை இந்நாவலில் தேடினேன் என பின்னாளில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.

Immortality என்ற குறுநாவல் மத்திய ஐரோப்பில் அரங்கேரும் காதலும்,காமமும் பிணைந்த கதை. அதிகாரத்தால் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்ட காமத்தை அனாசயமாக எழுத்தில் விளையாடி அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்இந்நாவலின் தலைப்பைப்போல், மனிதர்களின் அடையாளச் சிக்கல் பிரச்சினையை சுவாரஸ்யமாக புனைவில் பிணைத்துள்ளார். நவீன உலகில் பல தொழிற்நுட்ப வளர்ச்சிகள் மனிதனை ஒரு அகன்ற கண்காணிப்பு வளையத்திற்குள் பொருத்தி உள்ளது. இத்தகைய திறந்த உலகில் அந்தரங்கம் என்பது கேள்விக்குரியதாகிறது. இந்த வளையத்தை விட்டு வெளியேறி அடையாளம் இன்றி ஒரு மனிதன் வாழமுடியுமா? என்ற கேள்வியை இந்நாவலில் எழுப்பியுள்ளார்.

குந்தேரா அரசியலை இலக்கியத்தில் கலந்த அபூர்வ ரசவாதி. இவருடைய அனைத்து நாவல்களிலும் இறுக்கமான சர்வாதிகார ஆட்சியின் பின்புலத்தில் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குடும்பம் அல்லது இரு நண்பர்கள். காதலர்களின் கதையை அங்கத நடையில் எழுதியுள்ளார். ஆக ஒரு கோணத்தில் அரசியல் நாவலாக வாசிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் ஒரு காதல் கதையாகவும் வாசிக்கமுடியும். உதாரணமாக இவருடைய The Joke வெளிவந்தபோது, விமர்சகர்கள் ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சியை இந்நாவல் பிரதிபலிக்கிறது என எழுதியதற்கு எதிர்வினையாக குந்தேராஇந்நாவல் ஒரு காதல் கதைஎன்றார்.  Book of laughter and forgetting என்ற நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம், அரசாங்கத்திற்கு எதிராக எழுதியதற்காக சிறை தண்டனையை அனுபவிக்கிறது. The Unbearable Lightness of Being என்ற மற்றொரு நாவலில் தாமஸ் என்ற மருத்துவர் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுதியது குற்றம் என தீர்ப்பு வழங்கப்பட்டு, தன் மருத்துவ வேலையை இழந்து துப்புறவு தொழில் செய்யும் வேலைக்கு தள்ளப்படுகிறார். குந்தேரா கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது, 1968ல் செக் நாட்டை ருஷ்யா ஆக்கிரமித்தது, 1970ல் அவர் நூல்களூக்கு தடை, பிறகு 1979ல் செக் குடியுரிமை அவரிடமிருந்து பறித்தது என அவர் வாழ்க்கையில் சந்தித்த  கசப்பான அனுபவங்கள் இத்தகைய சித்தரிப்புகளுக்கு காரணம் என பல விமர்சகர்களின் கருத்து. 1990 வரை செக் மொழியில் எழுதியவர் அதற்குப்பிறகு ஃபிரென்ச் மொழியில்தான் தன் நூல்களை எழுதி வெளியிடுகிறார். நாவல் மட்டுமின்றி பல விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இசை, காஃப்கா, ஐய்ரோப்பிய நாவல், ருஷ்ய இலக்கியம் என பல தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். மத்திய ஐரோப்பாவில் பிறந்த காஃப்கா, ஃப்ராய்டு பற்றி விரிவாக ஆய்வு பூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தாஸ்தேவஸ்கி சாடியவர்கள் உலக இலக்கியத்தில் முக்கிய மூவர்.(1) விளாதிமிர் நபக்கோவ் (2) மிலன் குந்தேரா (3)  சர்ரியலிஸ இயக்கத்தை தோற்றுவித்த ஆந்தரே பிரத்தன்.

மிலன் குந்தேரா பிறந்த செக் நாட்டை 1968ல் ருஷ்யா ஆக்கிரமிக்கிறது. குந்தேராவுக்கு போர் காலத்தில் வாழ்வதற்கு பல சிக்கல். அப்போது ஒரு நாடக இயக்குநர் குந்தேராவிடம் தாஸ்தேயவஸ்கியின்இடியட்நாவலை நாடகமாக எழுதித் தர கேட்கிறார். குந்தேரா மறுத்து, பட்டினியால் சாவேனே ஒழிய இதை எழுதி தரமுடியாது என்கிறார். ருஷ்யாவின் ஆக்கிரமிப்பால் அவர் தாஸ்தேயவஸ்கியை நிராகரிக்கவில்லை. மாறாக ருஷ்யாவின் செக்காவை போற்றுகிறார். ஆனால் அவர் குறிப்பிடுவது தாஸ்தேயவஸ்கி முக்கியத்துவம் கொடுக்கும் அதிக மிகை உணர்ச்சிகள்,உண்மை மற்றும் Sentiments. வாழ்வின் விழுமியங்களை அதீத உணர்ச்சிகரமாக அணுகி வரலாறு முழுவதும் போரும் வன்முறையும் மனிதன் முன்னிருத்தியுள்ளான் என்கிறார். இதற்கு கிருஸ்துவ மதத்தின் முக்கிய சொற்றொடரை மேற்கோள் காட்டி விளாசுகிறார்.

‘Love God and do as you will,” said Saint Augustine. அதாவது கடவுளை நேசித்து எதை வேண்டுமானலும் மனிதன் செய்யலாம் கொலை உட்பட என அக்ஸ்டினனின் மேற்கோளை சுட்டிக்காட்டுகிறார்மேலும் வரலாறு முழுவதிலும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் துன்பத்தையும்,வலியையும், தியாகத்தையும் வியந்து போற்றப்படுகிறது. ஆக வரலாறு முழுவதும் மிகை உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவின் பாற்பட்ட எழுத்தை புறந்தள்ளியுள்ளார்கள் என்கிறார்.

இதற்கு மாறாக ஐரோப்பாவின் மறுமலர்ச்சி (Renaissance) காலத்தை சிலாகிக்கிறார்.அதாவது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளித்ததை குறிப்பிட்டு ஐரோப்பாவுக்கும், ருஷ்யாவுக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை முக்கிய காரணியாக முன்வைக்கிறார். நாவலுக்கு பல சாத்தியப்பாடுகள் உண்டு எனக்கூறி 18ம் நூற்றாண்டு லாரண்ஸ் ஸ்டேர்ன் எழுதிய  டிரிஷ்ட்ராம் ஷாண்டி  நாவல் முக்கியமானது என்கிறார். இந்நாவலில் உண்மை இல்லை, வாசகர்களை மயக்கவில்லை, உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தாமல் வாசகர்களின் பங்களிப்பை கோருகிறது என்கிறார். ஐரிஷ் நாட்டில் பிறந்த ஸ்டெய்னை பின்பற்றியவர் அதே 18ம் நூற்றாண்டில் பிறந்த பிரெஞ்சு எழுத்தாளர்  டெனிஸ் திதெராத்தை போற்றுகிறார். ஐரோப்பிய நாவல் வரலாற்றின் தொடக்கம் செர்வான்டிசிலிருந்து தான் தொடங்குகிறது  என குறிப்பிடுகிறார்ஆக குந்தேரா பொறுத்தமட்டில் வாசகர்களை பார்வையாளராக (spectator) ஆக்காமல் பங்கேற்பாளராக (Participator) மாற்றும் நாவலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் கருத்துகள், பண்டங்கள் உட்பட எளிமையாகவும்,சுருங்கியும் உள்ளது. நுகர்வு கலாச்சாரத்தினால் உருவத்திலும்,உள்ளடகத்திலும் இம்மாற்றம் வந்துள்ளதை மாற்றவேண்டும் என்கிறார்.இதை நாவல் என்ற வடிவம் தான் முறியடிக்கும் என்கிறார். மற்றும் நாவல்களில் கதாபாத்திரங்களின் புறத்தோற்ற விவரிப்புகளை புறந்தள்ளி, புறநிகழ்வால் கதாபாத்திரங்களுக்கு நடக்கும் மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என The Art of the Novel கட்டுரை தொகுப்பில் குறிப்பிடுகிறார். உலகம் முழுவதிலும் அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2010ம் வருடம், செக் நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. 1983ம் வருடம் ஒரு துருவ நட்சத்திரத்திற்கு அவரை கவுரவிக்கும் பொருட்டு அவர் பெயர் சூட்டப்பட்டது. செக் குடியுரிமையை அவரிடமிருந்து பறித்தப்பிறகு 1975ம் ஆண்டு முதல் ஃபிரான்சு குடியுரிமை பெற்று பாரிசில் வாழும் மிலன் குந்தேரா நோபல் பரிசுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட அதிமுக்கிய எழுத்தாளர்.


-எஸ்,வாசுதேவன்

*குறிப்பு: எஸ் வாசுதேவனின்யாதென அழைப்பாய்கட்டுரை தொகுதியில் 2015-ல் எழுதப்பட்ட கட்டுரையின் மீள் பிரசுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.