Sunday, Jun 26, 2022
Homeபடைப்புகள்தொடர்கள்பேதமுற்ற போதினிலே – 7

பேதமுற்ற போதினிலே – 7

எனக்கு பூனைகளைப் பிடிக்காது. ஒன்றிரண்டு தடவை பூனை வளர்க்க முயற்சிசெய்து கடைசியில் எனக்கும் அதற்கும் சண்டையில்தான் முடிந்திருக்கிறது. விளையாட்டுக்கு அதனுடன் சண்டைபோட முடியாது. பிறாண்டிவிடும். பூனைகள் கவர்ச்சியானவை ஆனால் அவை எந்தவிதத்திலும் நம்மைச் சார்ந்து இருப்பதில்லை. உணவு வேண்டி இரைஞ்சினாலும் அதன்மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. மாறாக நாய்களிடம் சார்புநிலை அதன் இயல்பிலேயே இருக்கிறது. அதற்கு செல்லக்கடி கடிக்கத் தெரியும்.

ஆனால் எனக்கு ஆட்டுக்குட்டிகள், கோழிக்குஞ்சுகளே விருப்பமானவை. கோழிக்குஞ்சுகளின் அதியற்புத அறியாமை, நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டு அது ஜனித்திருப்பது பார்த்துத் தீராதது. அதேபோல உலகின் மிக அழகிய விலங்கு ஆட்டுக்குட்டியாகத்தான் இருக்கமுடியும். ஏதோவொரு விதத்தில் எனக்கும் அவற்றுக்கும் அப்படியொரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. அவற்றை பூமிக்கு வந்த அதிசயங்களாகவே இன்றும் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.

சிறுவயதில் கலர் குஞ்சுகள் விற்க தலையில் பெரிய நார்க்கூடையை தூக்கிக்கொண்டு எப்போதாவது வியாபாரி வருவார். ஒரு குஞ்சு ஒரு ரூபாய். பத்து காசு கொடுத்து ஒரு அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். பத்து அட்டைகள் வாங்கப்பட்டதும், ஒன்று முதல் பத்து வரை எழுதியுள்ள தாள்களை சுருட்டி குலுக்கிப் போடுவார். அதில் எடுக்கப்படும் எண்ணுக்கு கோழிக்குஞ்சு. ஒருமுறை நானும் என் அண்ணனும் விதவிதமான வண்ணங்களில் 10 குஞ்சுகள் வாங்கினோம். பக்கத்துவீட்டுப்பூனை சத்தமில்லாமல் கூடையைத் திறந்து பத்தையும் மிச்சமில்லாமல் தின்றுவிட்டது. கோழிக்குஞ்சுகள் நாம் எங்குபோனாலும் கால் பின்னாலேயே வரும். நாம் படுத்தால் மேலே ஏறி உட்கார்ந்து தூங்க ஆரம்பித்துவிடும். உட்கார்ந்தால் மடியில் அமர்ந்துகொள்ளும். சிறுவயதில் பனியனுக்குள் எடுத்து விட்டுக்கொள்வேன். தாயின் சிறகுகளுக்குள் இருக்கையில் குஞ்சுகள் பாதுகாப்பாய், சுகமாய் இருப்பதை வெளிப்படுத்த கீச்சொலிகள் எழுப்பும். அதுதரும் உணர்வை வார்த்தைகளில் சொல்ல இயலாது. ஆனால் இப்படி சட்டைக்குள் விட்டு, உறக்கத்தில் புரண்டுபடுத்து இரண்டு குஞ்சுகளைக் கொன்றிருக்கிறேன். 

மனிதன் இயற்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விடாது முயன்றபடியே இருக்கிறான். ஒட்டுமொத்த உலகிலும் கூடுதல் அறிவுகொண்டவன் தானே என்ற எண்ணத்தில், அறிவியல் தந்த அறிதலில் அனைத்தையும் புரிந்துகொள்வதன் மூலம் ஆதிக்கம் செலுத்த முயல்கிறான். மனிதனுக்கு எவ்விதத்திலும் எதிர்ப்பு காட்டாமல் தன்போக்கில் ஒழுகிச் செல்கிறது உலகு. பிற உயிர்களை உணவுக்காக வேட்டையாடினான். உணவுக்காக வீட்டு விலங்குகளை வளர்த்தான். உழைப்புக்குப் பயன்படுத்திக்கொண்டான். ஆனால் இங்கே செல்லப்பிராணிகளின் அவசியம் எங்கே வந்தது?

உலகம் முழுவதிலும் வளர்ப்பு நாய்களும் பூனைகளும் முறையே 22.3 கோடிகள், 22 கோடிகள் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பிராட்ஷா ‘மானுடவிலங்கியல்’ (anthrozoology) என்ற வார்த்தை உருவாகக் காரணமானவர். அவர் சொல்கிறார், ‘செல்லப்பிராணிகளை நாம் வளர்க்கக் காரணம், அவை பயனுள்ளவை, அழகானவை என்பதற்காக அல்ல. அவை நம் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கின்றன என்பதும் காரணமல்ல. மாறாக, மனிதார்த்தத்தின் உள்ளார்ந்த பகுதியாக நம் உயிரினத்தின் ஆழத்தில் வேர்கொண்டுள்ள உணர்வு அது’. பரிணாமத்தின் ஒரு பங்கு நினைவுகூறலாக அவற்றின் மீதான பிடிப்பு நம்மிடம் உள்ளதாகச் சொல்கிறார். பிராணிகள் நம் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு உதவுகின்றன என்பது உண்மையில்லை. உதாரணமாக, பூனை வளர்ப்பவர்கள் பிராணிகள் எதையும் வளர்க்காதவர்களைவிட மன அழுத்தம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

இன்னும் சில ஆய்வுமுடிவுகள் சொல்வது என்னவென்றால், ஒரு காலை நடைப்பயிற்சிக்கு ஒரு நாயுடன் உலாவச் செல்பவர் சமூக நம்பிக்கைக்கு உரியவராகத் தோன்றுகிறார். பிறருடன் பழகுவதற்கு, பேச்சை இலகுவாக்குவதற்கு அதில் பங்கேற்காத ஒரு உறுப்பினராக நாய் அல்லது பூனை உள்ளது. அந்தஸ்துக்காக செல்லப்பிராணிகளை சிலர் வளர்க்கிறார்கள்; சிலர் தனிமைக்குத் துணையாய்.

இன்னொரு முக்கியக் காரணம் மனிதர்களிடம் காணமுடியாத நேரடித்தன்மை (அல்லது நேர்மை?) விலங்குகளிடம் மட்டுமே உள்ளது. மனித மனத்தின் சூட்சும ரூப வெளிப்பாடாக நாயைச் சொல்வார் எழுத்தாளர் பாலகுமாரன். அவை தனது விருப்பங்களை அப்பட்டமாக முகத்தில் வெளிக்காட்டுகின்றன. அந்த உண்மை அழகானது. மனிதர்களிடம் சாதாரணமாகக் காணமுடியாத இந்தத் தன்மை நம்மை உள்ளுக்குள் விடுவிக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். புரிந்துகொள்கிறோம். இந்தக் குழப்பம் நிறைந்த வாழ்க்கையில் ஓர் எளிய வாழ்வு இருப்பதை நாம் ஆச்சரியத்துடன் காண்கிறோம். அவற்றின் மரணங்களைப் பார்க்கிறோம். எனினும் உயிர்ப்பின் கொண்டாட்டமும் போராட்டமும் தொடர்கிறது.

இதையொட்டி இன்னொன்றையும் சொல்லலாம். சமூகப் பழக்கங்களோடு இணைவதில் சிரமமுள்ள, ஒத்திசைவதில் சிரமமுள்ள நபர்களுக்கு செல்லப்பிராணிகள் மிகச்சிறந்த துணையாகிவிடுகின்றன. அவற்றுடன் மிக நெருக்கமானதோரு உறவை அவர்களால் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இது சமூக உறவுக்கு அவர்களைத் தயார்படுத்தவும் உதவக்கூடும். அதேபோல, கூடுதல் பளு என்றாலும், நம்மைச் சார்ந்து இருப்பதை நாம் விரும்புகிறோம். ஏதோவொரு விதத்தில் இது நமக்கு ஆதிக்க நிறைவைக் கொடுப்பதோடு, நமது தாய்மைக்குணத்தை ஈடுகட்டுகின்றன. நமக்காக என்றில்லாமல் இன்னொரு உயிருக்காக அக்கறை எடுத்துக்கொள்வதன் மகிழ்ச்சியை செல்லப்பிராணிகள் நமக்களிக்கின்றன. இன்று தமிழ் இந்து நடுப்பக்கக் கட்டுரையில் (22/3/2020), ஓவியர் கணபதி சுப்ரமணியம் அவர்களின் பேட்டி வெளியாகியிருந்தது. தாய்ப்பூனை விட்டுச்சென்ற பூனைக்குட்டியை அவர் வளர்க்கிறார். இவருடன் நெருக்கமாகும் அந்தப் பூனை, பறவையின் இறகையும் எலியையும் கொண்டுவந்து வீட்டில் போடுகிறது. அவருக்கு இது அசூயையாய் இருந்தாலும் பின்னர் அந்தப் பூனை தன்னையும் இன்னொரு பெரிய பூனையாகப் பார்க்கிறது, ஒரு நட்பு பாராட்டலாக தனக்கு இவற்றை அளிக்கிறது என்று உணர்ந்து கொள்கிறார். இது எத்தனை அற்புதமானது.

சில விஷயங்கள் கேட்க கிறுக்குத்தனமாய்த் தோன்றும். வீட்டில் அழகுக்கு மீன் வளர்ப்பவர் சில நாட்களிலேயே போதாமையை உணர ஆரம்பித்துவிடுவார். மேலும் மீன்கள் வாங்குவார். மேலும் தொட்டிகளை அழகுபடுத்துவார். விரிவுபடுத்துவார். இது எல்லையற்று தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. அமெரிக்காவில் அறுபத்தேழு சதவீதம் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. செல்லப்பிராணிகள் சார்ந்த துறையின் விற்பனை மட்டுமே ஆண்டுக்கு 2000 கோடி அமெரிக்க டாலர்கள். சராசரியாக ஒவ்வொரு நாய்க்கும் வருடத்துக்கு 1380 டாலர்கள் செலவழிக்கிறார்கள். பூனைக்கு 910. அமெரிக்கர்கள் நாய், பூனை, மீன்கள் தவிர்த்து என்னென்னவெல்லாமோ வளர்க்கிறார்கள். உதாரணமாக விதவிதமான எட்டுக்கால் பூச்சிகள், பூச்சியினங்கள், பாம்புகள், எலிகள், ஓணான், பச்சோந்தி இப்படி. இந்த வளர்ப்புப் பிராணிகளுக்கு காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. கிட்டத்தட்ட வருடத்தவணையாக 150 கோடி டாலர்கள் காப்பீட்டு நிறுவனங்கள் பெறுகின்றன. 243 கோடி செல்லப்பிராணிகளுக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. 

விலங்குகளின் அழகு, நடத்தை, விளையாட்டுக்களைக் காட்டும் காணொளிகள் உலகெங்கிலும் விரும்பிக் காணக்கூடியவையாய் உள்ளன. செல்லப்பிராணி விற்கும் கடைகளில் கையைப் பொத்தினால் வெளியில் தெரியாத அளவுகளில் எல்லாம் குருவிகள் (from Fletcher family) விற்கிறார்கள். நின்ற இடத்திலேயே தேன் சிட்டுக்களைப் போல இறக்கைகளை படபடவென்று அடிக்கின்றன. அதன் உடலுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது. காற்றே பறவையாகி வந்ததுபோல இருக்கிறது. ஒரு ரீங்காரப்பறவையின் இதயம் நிமிடத்துக்கு 1260 தடவை துடிக்கிறது. இவற்றையெல்லாம் கூண்டில் அடைப்பது பாவம். அவை நம்மை எவ்விதத்திலும் சார்ந்து இல்லை. மாறாக இதுபோன்ற கோடை காலங்களில் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களுக்கு நீரும் ஆகாரமும் வைக்கலாம். வீட்டைச் சுற்றி மரம் வளர்க்கலாம். 


பாலா கருப்பசாமி  

No comments

leave a comment

error: Content is protected !!