யாதும் ஊரே
தொலைக்காட்சியை நான் வெறுக்கிறேன். பேர்பாதி காரணம் நிகழ்ச்சிகள் என்றால் இன்னொரு பாதி விளம்பரங்கள். தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்று சொல்வது தவறு. முட்டாள்களுக்கான பெட்டி என்றுதான் சொல்லவேண்டும். ஒரே விளம்பரத்தைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அதனால் சிறிதும் பாதிப்படையாமல் இருப்பவர் மரமண்டையராகத்தான் இருக்கமுடியும். ஒருகாலத்தில் சாந்தி ஜூனுன் தொடர்கள் வந்தபோது ஜூனுன் தமிழ் என்ற பதம் உருவானது. அதேபோல் விளம்பரங்கள் பெருகியபின் விளம்பரத்தமிழ் உருவாகியுள்ளது. அபத்தங்களின் உச்சம் அவை. இன்னொருபுறம் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க என்னென்னவோ உளறிக் கொட்டுகின்றன. துரதிர்ஷ்டவசமாக இவைமீது கிஞ்சித்தும் கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அமலாபால் விளம்பரத்தில் சொல்கிறார், ‘வெளியே சூடு, வெயிலினால் சருமத்துக்கு கேடு ஏற்படுகிறது’. சூரியன் நம் கிரகக் குடும்பத் தலைவன். சூரியனின்றி பூமியே உருவாகியிருக்காது. பச்சையாய் நம்மைச் சுற்றிக் காண்பவைக்கு உணவளிப்பது அதுதான். சூரியனின் நகர்வை வைத்தே காலம். பரிதி படாத உயிரில்லை. அப்படிப் படாவிட்டால் அவ்வுயிர் இம்மண்ணில் வாழத் தகுதியற்றது. நோய் எதிர்ப்புத் திறனைத் தருவதும் அதுவே. எப்படியொரு இயற்கை விரோத, குரூரமான விளம்பரம். ஆனால் எத்தனைபேரால் இது கவனிக்கப்படுகிறது? அல்லது இந்தக் கோணத்தில் பார்க்கப்படுகிறது? இந்தச் சலனமற்ற நிலைதான் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
நவீனத் தொழில்நுட்பம் எல்லாவிதங்களிலும் நமது சிரமங்களைக் குறைக்க முயல்கிறது. இதன்மூலம் நிறுவனங்கள் நம்மைச் சுரண்டுகின்றன. நாம் சோம்பேறியாய் இருக்க வேண்டிக் கேட்டுக்கொள்கின்றன. சிரமப்படுதல் அறிவார்ந்த செயலல்ல என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன. இது இந்திய அடிப்படை ஆன்மீக மனதுக்கு நேர் எதிரானது. இந்திய மனம் துறவை அடிப்படையாகக் கொண்டது. இகவுலக இன்பங்கள் மாயை. கடவுளை அடைய முயல்வதும், ஞானத்தை அடைவதும் வாழ்க்கை நோக்கமாகச் சொல்லியுள்ளது.
ஆனால் பெருவாரி ஜனங்களிடம் அது இப்படிப் பேசாது. அதன் தொனி கடவுளை வணங்கு. அவர் உனக்குத் தேவையானதைத் தருவார். எல்லா மதங்களும் வெகு ஜனங்களிடம் இதைத்தான் சொல்கின்றன. ஆன்மீகத்தை நான் உணர்ந்துகொண்டது காதல் தோல்வியில்தான். ஒரு சாதாரண, உடல்சார்ந்த அன்றாட வாழ்வில் ஈடுபட்டிருக்கும்போது காதல் மாபெரும் வெடிப்பாய் என்னுள் நிகழ்ந்தது. அது மையம் கொண்டிருந்தது இன்னொரு சக ஜீவியை நோக்கி என்றாலும், அந்த உலகம் என்னுள் இருந்தது. அந்தக் காதல் தோல்வியுற்றபோது மிக ஆழமான வலி ஏற்பட்டாலும், அந்தப் பெண் மீதான எனது காதல் மகத்தானதாக என்னுள் நிறைந்திருந்தது. ஒருவித தன்னிலையற்ற தன்மை. ஆனால் முழுமையாக நிறைந்திருத்தல். இந்தத் தன்னிலையற்ற தன்மையை ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ உட்பட பல ஞானியர் சொல்லியிருந்தாலும், ஆன்மீகம் என்ற சொல்லே இந்நிலைக்கான வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆன்மீகம் மிகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ளது. மதங்கள் இந்த வார்த்தையைக் கெடுத்து வைத்துள்ளன. இலோகாயத வாழ்வோடு குறுகிய அர்த்தம் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உனக்கு, உன் குடும்பத்துக்கு நலனை வேண்டி கடவுளை உருகி வேண்டி காணிக்கை செலுத்தினால் அவர் உன்னை ’ஷேமமாய்’ இருக்கப் பண்ணுவார். கடவுளை ஒரு தரகராய் கூச்சமேயின்றிப் பயன்படுத்துகிறோம். இதன் அபத்தம் யாருக்கும் புரிவதில்லை. ஒரு கடவுளுக்கு எதற்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கிறார்கள்? மேலும் பல கோடிகள் பணம் வேண்டுமென்பதற்காக. அந்தக் கோடிகளைத் தான் சம்பாதிப்பதில் உள்ள குற்றவுணர்ச்சியை மறைத்து அதில் கடவுளை கேள்விகேட்காத கூட்டாளியாக கடவுளை மாற்றுகிறார்கள்.
தனிமனித அகவிடுதலை, வாழ்க்கையைப் புரிந்துகொள்வது, அகவிசாரம், தன்னுள் ஆழ்ந்து இறைநிலையைக் கண்டடைதல் இவையெல்லாம் இன்றைய நவீன வாழ்விலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது. இன்று இருக்கும் ஆன்மீகக் குருக்கள் எல்லாரும்கூட நுகர்வைத் தூண்டுபவர்களாகவே உள்ளனர். அவர்களே பொருட்களைத் தயாரித்து விற்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு குழந்தை பொம்மைகளிடம் ஆர்வம் காட்டுகிறது. வாலிபம் எதிர்பாலினத்தை நாடுகிறது. இனவிருத்தி, பிள்ளை வளர்ப்பு இல்லறத்தில் மூழ்கிக்கிடக்கச் செய்கிறது. பின் ஒருவயதில் செய்வதற்கு ஏதுமற்ற, சமூகச் செயல்பாடற்ற ஓரிடத்தில் எல்லாவற்றிலிருந்தும் ஒரு விலகல் ஏற்படுகிறது. மனம் ஆன்மீகத்தை நாடி, இதுவரை செய்ததற்கெல்லாம் அர்த்தமென்ன, உண்மையில் செய்ய வேண்டியதென்ன என கேட்டுக்கொள்கிறது. இதுதான் ஓர் இந்திய மனம்.
ஞானத் தேடல் என்பதற்கு இன்றைய உலகில் இடமே இல்லை. அதற்கான வழிகாட்டுதலும் இல்லை. அந்தவகையில் ஜி.கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரிதான். பாதையற்ற பாதை. துறவுக்கும் அர்த்தமில்லை. துறந்து செல்வதற்கு இடமுமில்லை. முன்னே காடுகளில் முனிவர்கள், சித்தர்கள் தவம் செய்தார்கள். இன்றைக்கு காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில். சமூகத்தை விட்டு ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ஒட்டுமொத்த சமூகத்துடன், பொதுப்புத்தியுடன், அவை உங்களை மண்டையில் சம்மட்டியால் அடிக்க அடிக்க பொறுத்துக்கொண்டு கைகளில் வேலிக்கம்பிகளால் கட்டுண்டபடி இத்தோடு ஓடவேண்டும்.
வைதீகச் சடங்குகளைக் கடுமையாக எதிர்த்த சித்தர் மரபு தமிழுக்கு உண்டு. சைவம் சித்தர் பரம்பரையை தன்னுள் சுவீகரித்துக்கொண்டாலும் சைவத்தில் அகத்தேடலுக்கான வழி அகண்டது என்றாலும் இன்றைய காலத்தில் அத்தகைய தேடலுடையோர் யாருமில்லை. இலக்கியத்திலும் நீட்ஷே கடவுளைக் கொன்றபின், அத்தகு தேடலுடைய படைப்புகள் அருகிவிட்டன. கோட்பாட்டுக் குப்பைகள் சார்ந்த எழுத்துக்கள், வடிவ யுக்திகளை பெரிதுபடுத்தும் படைப்புகள் வாழ்க்கை அனுபவத்தையும் தாண்டி பொருட்படுத்தத் தக்கவையாய் முன்னே நிறுத்திக் கொண்டுள்ளன.
ஞான விழிப்புக்கும், பண்டித்யத்துக்கும் சம்பந்தமேயில்லை. ஒருவர் வாய் ஓயாது நாள்தோறும் மந்திர ஜபம் செபித்தாலும் ஞான விழிப்பு அதனால் ஏற்படுவதில்லை. தனக்குள் விழிப்பு ஏற்படுதலே ஞானவிழிப்பு. அது வெளியே எங்கும் இல்லை. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் விடமறுத்ததும், கல்வி மறுப்பும் கேலிக்கூத்தானது. கடவுளை சொந்தம் கொண்டாட எவருக்கும் உரிமையில்லை. உண்மையான கடவுளுக்கு இடை நிலையர் தேவையில்லை. கடவுள் மழைபோல, காற்றுபோல, சூரியன்போல, எல்லோரையும் தாங்கும் இந்நிலம்போல, நம் அனைவர் தலைக்கும் கூரையாய் நிற்கும் வான்போல எல்லோருக்குமானவர். இது தமிழர் ஆன்மீகம். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
-பாலா கருப்பசாமி