வெள்ளிக்கிழமை காலை இப்படிக் கலவரமாக விடியும் என்று செல்வி நினைத்திருக்கவில்லை. ஆறு மணிக்கெல்லாம் சுடரிடம் இருந்து அழைப்பு வந்தது. எட்டு மணிவாக்கில் ஒருவர் நாய்க்குட்டி கொண்டு வருவார் என்றும் ‘வாங்கி வைத்துக்கொள்’ என்றும் கட்டளையாகச் சொன்னாள். ‘அதெல்லாம் என்னால முடியாது’ என்று வேகமாகச் சொல்லியும் சுடர் கேட்கவில்லை.
‘சொல்லி வெச்ச குட்டி இப்பத்தான் கெடச்சிருக்குதும்மா. வேண்டாம்னா அப்பறம் இதுமாதிரி எப்பக் கெடைக்குமோ தெரியாது. பெரிய கஷ்டமில்லம்மா. என்ன செய்யணும்னு நாஞ் சொல்றன்’ என்றாள் சுடர்.
‘உங்கொப்பனும் இல்லாத நேரத்துல இந்தக் கருமாந்தரத்த எதுக்குக் கொண்டாரச் சொன்ன?’
‘கருமாந்தரம் அதுஇதுன்னு பேசாதம்மா. மொதல்லயே சொல்லி வெச்சிருந்ததுதான். குட்டி வந்திருக்குதுன்னு ராத்திரித்தான் சொன்னாங்க. நீ தூங்கியிருப்பன்னுதான் எழுப்பல. இது அடிக்கடி கெடைக்காது, ரேர் குட்டின்னு அப்பவே பணங்கூட அனுப்பீட்டம்மா. கெடைக்கறப்ப வாங்கிக்கோணும். நீ ஒன்னும் பண்ண வேண்டாம். வாங்கிக் கூண்டுக்குள்ள உட்டுட்டுப் பால் மட்டும் ஊத்தி ஊத்தி வெய்யி போதும்.’
‘உங்கப்பனுக்குச் சொன்னயா?’
‘சொல்லீட்டம்மா. அவரு உனக்குத்தான் பயப்படறாரு. நீயே உங்கம்மாகிட்டச் சொல்லுங்கறாரு. அவரு வர்ற வரைக்கும் பாத்துக்கிட்டாப் போதும்.’
‘மகாராசா ஒருமாசம் வனவாசம் போயிருக்கறாரு. அப்பறமில்ல வருவாரு. ரண்டு பேரும் சேந்துக்கிட்டு என்னய ஏன்டி இமுசு பண்றீங்க. ஊட்டுக்குள்ளயெல்லாம் உட மாட்டம் பாத்துக்க.’
அம்மா இறங்கி வருவது தெரிந்ததும் சுடர் உற்சாகமாகி ‘அதெல்லாம் வேண்டாம். வெளியிலயே இருக்கட்டும். செரி, எனக்குக் கெளம்போணும்’ என்று சொல்லித் துண்டித்துவிட்டாள்.
ஒருமாதப் பணியிடைப் பயிற்சிக்காக முருகேசு கிளம்பிப் போய் இரண்டு நாள்தான் ஆகிறது. தேர்வு முடிந்து சுடர் வீட்டுக்கு வரக் கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகும். ஒற்றை குழந்தை என்று சிறுவயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவு இது. அங்கிருந்து கொண்டு கட்டளை போடுகிறாள். கோபமும் குழப்பமும் சேரக் குமுறலுடன் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே உட்காந்தார். இதில் அப்பனும் பிள்ளையும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். எப்போதும் அப்படித்தான். தனிமையில் நிற்பது தான்தான் என்று தோன்றவும் அவரை அறியாமல் அழுகை வந்தது. பிடிக்காதவற்றை எல்லாம் பிள்ளைக்காகப் பொறுக்கவும் சகிக்கவும் வேண்டியிருக்கிறது. காலையில் எழுந்ததும் அழ வேண்டியிருக்கிறதே என்று நினைக்க அழுகை கூடியது.
‘நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும்’ என்பது செல்வியின் ஆழ்ந்த நம்பிக்கை. சிறுவயதிலிருந்தே நாயைக் கண்டால் பிடிக்காது. குழந்தையாக இருந்தபோது பிரியத்தோடு தொத்துக்கால் போட்டு ஏறிய நாயைக் கண்டு ஏற்பட்ட பயம் போகவேயில்லை என்று அவர் அம்மா சொல்வதுண்டு. அதுதானோ என்னவோ நாயைப் பார்த்தால் தன்னையறியாமல் உடல் சிலிர்த்துக் கொள்ளும். எந்த நேரமும் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக்கொண்டு திரியும் அருவருப்பான ஜீவன் இது என்று மனதில் தோன்றும்.
நாய்க்கு மூக்கு எதற்கு இருக்கிறது? பூப்போல மூச்சுவிட வேண்டாமா? ங்கெஸ் ங்கெஸ் என்று உடலே அசையும்படி வாயால் மூச்சு வாங்கிக்கொண்டு நிற்கிறது. இதைப் போய் எப்படித்தான் கட்டித் தழுவுகிறார்களோ என்றிருக்கும். முருகேசுவுக்கு அப்படியில்லை. மனைவி இல்லாமல் வாழ்ந்துவிடலாம், நாய் இல்லாமல் வாழ முடியாது என்று நினைப்பவர். கிராமத்தில் ஆடுகளும் பட்டி நாய்களும் எனத் திரிந்தவர். அரசு வேலை கிடைத்து நகரத்துக்குக் குடிவந்த பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. சுடர் பிறந்து ஐந்து வயதான போது அவளைத் தூண்டிவிட்டு நாய் வளர்ப்புக்குச் செல்வியைச் சம்மதிக்கச் செய்துவிட்டார். அப்போதும் ‘வீட்டுக்குள் விடமாட்டேன்’ என்று நிபந்தனை போட்டுத்தான் செல்வி ஒத்துக்கொண்டார்.
மூவாயிரம் சதுர அடி மனையில் பாதிகூட வீடு இல்லை. சுற்றிலும் இடமிருந்தது. தோட்டம் போட்டிருந்தார்கள். முன்பகுதியில் நாய்க்கூண்டு ஒன்றைக் கட்டி அதிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அந்த நாய்க்குப் பீம் என்று சுடர் பெயரிட்டாள். பதின்மூன்று வருசம் உடனிருந்து ஆறுமாதத்திற்கு முன்தான் உயிர்விட்டது. அதன் இறப்புக்குச் சுடர் வர மறுத்துவிட்டாள். அது ஓடித் திரியும் காட்சியே மனதில் இருக்கட்டும், ஓய்ந்து கிடக்கும் உடலை என்னால் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டாள். அதன் தாக்கத்திலிருந்து மகளைத் தேற்ற ‘இன்னொரு நாய்க்குட்டி எடுத்துக்கலாம்மா’ என்று முருகேசு உறுதி கொடுத்திருந்தார். இருவரும் இந்த இனம், அந்த இனம் என்று பேசி இப்போது புதிதாக ஒன்று வரப் போகிறது.
பதின்மூன்று வருசம் வீட்டில் வாழ்ந்தாலும் பீமோடு செல்விக்கு எந்த நெருக்கமும் இல்லை. உணவு கொடுப்பது, கூண்டைச் சுத்தம் செய்வது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, காலையில் நடைக்குக் கூட்டிப் போவது என எல்லா வேலையையும் முருகேசுவே செய்தார். சுடருக்கு அதுதான் விளையாட்டுத் தோழன். அதற்கான வேலைகளிலும் சிறுசிறு உதவி செய்வாள். பத்து வயதுக்குப் பிறகு அப்பா வெளியில் போயிருக்கும் போது அவளே முழுமையாகக் கவனித்துக் கொள்ளும் அளவுக்குப் பழகிவிட்டாள். குழந்தையிலிருந்து பழகியதால் சுடர் மேல் பீமுக்கு அப்படிப் பாசம். அவள் என்ன செய்தாலும் பீம் பொறுத்துக் கொள்வான். தூரத்திலிருந்து செல்வி திட்டுவதோடு சரி.
‘ஏம்மா…அவனத் திட்டற? பிரியமாப் பேசும்மா’ என்று சுடர் சொல்வாள்.
‘நாய்கிட்டக் கொஞ்சறதெல்லாம் எனக்கு வராது’ என்பதுதான் செல்வியின் பதில்.
நாயைப் பற்றிப் புகார் சொல்லும்போதோ திட்டும்போதோ செல்வியின் வாயை அடைக்க ஒருமந்திரம் வைத்திருந்தார் முருகேசு.
‘சுடரோடு வெளையாட இன்னொரு கொழந்த பெத்துக்கலாம்னு சொன்னன். நீ எங்க கேட்ட? ஒன்னே போதும். அத ஒழுங்கா வளத்து ஆளாக்குவம்ன. இப்ப ஓரியா அவ எப்படி வெளையாடுவா? இப்பனாலும் இன்னொன்னுக்குச் செரின்னு சொல்லு. நாய ஆருக்காச்சும் குடுத்தர்றன்’ என்று சிரித்தபடி சொல்வார்.
அது விளையாட்டுக்கு இல்லை என்று செல்விக்குத் தெரியும். ஒருகுழந்தையோடு நிறுத்தியதில் இருவீட்டாருக்கும் வருத்தம்தான். முருகேசு தன் வருத்தத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘ஓரியாவா கொழந்தய வளப்பாங்கன்னு அம்மா கேக்குது செல்வி’, ‘என்னருந்தாலும் வாரிசுன்னு ஒருபையன் வேண்டாமான்னு ஊர்ல கேக்கறாங்க செல்வி’ என்று யார் மீதாவது போட்டுச் சொல்வார். யார் எப்படிச் சொன்னபோதும் ஒருகுழந்தை போதும் என்பதிலிருந்து செல்வி பின்வாங்கவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்திருந்தால் இப்படி ஒருமனை வாங்கி வீடு கட்டியிருக்க முடியாது. சுடரை நினைத்த பள்ளியில் படிக்க வைத்திருக்க முடியாது. முருகேசு அரசு ஊழியர் என்றாலும் ஒருகுழந்தையை வளர்க்கத்தான் ஊதியம் போதுமானது என்னும் தெளிவு திருமணமான புதிதிலேயே செல்விக்கு வந்துவிட்டது அவளுக்கே ஆச்சரியம்தான்.
பீம் இருந்த போதே படிப்புக்கெனச் சுடர் வெளியூர் போய்விட்டாள். பீம் இறந்ததும் இனி நாய்த்தொல்லை இல்லை என்று செல்வி நம்பியிருந்தாள். அப்பனும் மகளும் சேர்ந்து இப்படித் திட்டம் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது முருகேசு என்ன சமாதானம் சொல்வார்? மகளுடன் விளயாட இன்னொரு குழந்தை கேட்பாரா? இருவரும் இல்லாத சமயத்தில் வரப்போகும் நாய்க்குட்டியை நினைத்து வேலையே ஓடவில்லை. அதைக் கையில் எப்படி வாங்குவது, என்ன வைப்பது, கத்தினால் என்ன செய்வது என்பதை எல்லாம் நினைக்க நினைக்கப் பதற்றமாக இருந்தது.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே போய்ச் சுற்றுச்சுவர் கதவைத் திறந்தார். இடப்பக்க நாய்க்கூண்டுக்குப் பார்வை திரும்பியது. பீமை அருகில் விடவில்லை என்றாலும் வீட்டுக்கு வெளியே எப்போதும் ஓராள் நடமாடும் உணர்வு இருக்கும். அவன் போன பிறகு தான் மட்டும் தனியாக இருக்கையில் ஒரு வெறுமை சூழும். அது பீம் இல்லாததால்தானோ என்று தோன்றியது. தனியாக இருக்கும்போது அந்தக் கதவைத் திறக்கவே தோன்றாது. திறக்க வேண்டிய தேவையும் இல்லை. கதவைத் திறக்காமலே சிலநாள் கழிந்துவிடும். ஓராளுக்கு என்ன பெரிதாகச் செய்ய?
கதவைத் திறந்து வாசலைப் பார்த்தார். இரண்டு நாட்களாகக் கூட்டாமல் இலைகளும் பூக்களுமாய் நிறைந்திருந்தது. தெருவோரக் கொன்றையில் இருந்து பூக்கள் பறந்து வந்து வாசலை நிறைத்திருந்தன. மஞ்சளைக் கரைத்துப் பூக்களின் வடிவில் தெளித்து விட்டது போலிருந்தது. அப்படியே இருக்கட்டும் என்று தோன்றியது. நாய்க்குட்டி கொண்டு வருகிறவன் வாசலைப் பார்த்துவிட்டு ஆளில்லை என்று திரும்பிப் போய்விட்டால்? விளக்கமாற்றை எடுத்துக் கூட்ட ஆரம்பித்தார். லேசாக நீர் தெளித்துச் சிறுகோலமும் போட்ட பிறகு எதையோ சாதித்த மாதிரி இருந்தது.
இஞ்சி தட்டிப் போட்டு மணம் கமழத் தேநீர் போட்டுத் தனக்குப் பிடித்தமான கோப்பையில் எடுத்துக்கொண்டு வந்து முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். அதில் எப்போதும் முருகேசுதான் உட்கார்வார். மிகச்சிறு முற்றம். ஒருநாற்காலிதான் போட முடியும். யாராவது வந்தால் அவர் எழுந்து உள்ளே வந்துவிடுவார். அந்த நாற்காலியில் அமர்ந்ததும் ஏதோ பலம் வந்த மாதிரி தோன்றியது. குட்டிநாய் தானே, என்ன செய்துவிடும், பார்த்துக் கொள்ளலாம் என்று மனம் சொன்னது. ஒவ்வொரு மிடறு தேநீர் உறிஞ்சும் போதும் பார்வை வாசலுக்குப் போய் மீண்டது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் சத்தம் கேட்டது. முருங்கையில் வந்தமர்ந்த கிளிகள் வறண்ட காய்களைக் கொத்திக்கொண்டு கத்தின. குப்பை வண்டியின் மணியோசை தொலைவில் கேட்டது.
அப்படியே சற்று நேரம் இருந்தவர் ஆழ்ந்த பெருமூச்சோடு எழுந்து உள்ளே சென்றார். உணவுக்கு என்ன இருக்கிறதென்று கண்ணை மூடி யோசித்தார். கொஞ்சம் பழங்கள் இருந்தன. தோசை மாவு இருந்தது. பழைய குழம்புகளும் சட்னிகளும் இருப்பதும் நினைவு வந்தது. ரொம்பவும் பழையதாகிப் போனவற்றை வெளியே கொட்டிவிட வேண்டும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றார். குட்டிநாய் வர போகிறது, நாய்க்கூண்டு எப்படி இருக்கிறதோ என்று நினைவோடியது. பீம் இறந்த பிறகு அதை முருகேசு கழுவி விட்டது ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் எப்போதாவது கூட்டியிருப்பாரா என்று தெரியவில்லை. காலை நடைக்குக் கிளம்பும்போது அப்படியே நின்று கூண்டை ஏக்கமாகப் பார்ப்பார். தலையைக் குனிந்தபடி போய்விடுவார். மகளுக்குப் பிறகு அந்த நாயைத்தான் மகனாக நினைத்தாரோ என்னவோ.
விளக்கமாற்றை எடுத்துக்கொண்டு கூண்டுக்குப் போனார் செல்வி. சுற்றுச்சுவரின் இருபக்க மூலைகளையும் இணைத்து அட்டை வேய்ந்த கூரை. ஒருபுறம் அதே அட்டையால் அடைப்பு. அதில் ஒரு சதுரம் வெட்டி வெளிச்சத்திற்கு ஜன்னல். முன்பக்கம் முழுக்கத் திறப்புதான். உள்ளே வேறெதுவும் இல்லை. பீம் படுக்கவென்று கால்மிதி போன்ற எதையோ வாங்கி விரித்திருந்தார்கள். அதை வெளியே கொண்டு வந்து தட்டிப் போடும்போது பார்த்ததுதான். காரை போட்டிருந்த தரையில் சங்கிலி கட்டுவதற்காகப் பதித்திருந்த இருவளையங்கள் இருந்தன. சங்கிலியைக் காணோம். தோட்டத்தில் தான் பீமைப் புதைப்பதாக முருகேசு சொன்னார். செல்விக்கு அது பயமாக இருந்தது. அதைச் சொன்னதும் ‘சரி’ என்று சொல்லி ஒருஆளைக் கூட்டி வந்து வண்டி முன்பக்கத்தில் வைத்து எடுத்துச் சென்றார். புதைத்த இடத்தில் பீமுக்குரிய பொருள்களையும் போட்டுப் புதைத்திருப்பார்.
கூண்டுக்குள் தொங்கிய ஒட்டடைகளை அடித்துச் சுத்தமாக்கினார். தரையைக் கழுவிவிட்டார். முன்பக்கம் திறந்திருக்கிறதே நாய்க்குட்டி எப்படி உள்ளே நிற்கும் என்று சந்தேகம் வந்தது. இந்தப் பக்கத்திலும் பாதியளவு அடைத்திருக்கலாம். குட்டிநாயைக் கட்டிப் போட முடியாது. எவ்வளவு பெரிதாக இருக்குமோ தெரியவில்லை. பால்தான் கொடுக்கச் சொல்லியிருக்கிறாள். அப்படியானால் பூங்குட்டிதான். தோட்டத்தில் பழைய பலகைகள் கிடப்பது நினைவு வந்தது. வீடு கட்டும்போது சில இடங்களில் அட்டாலிக்குப் பலகைதான் வைத்திருந்தார்கள். பிறகு அதை மாற்றிவிட்டுத் தளம் அமைத்தபோது பலகைகளைச் சுவரோரம் சாத்தினார்கள். அவ்வப்போது கரையானைத் தட்டிப் பாதுகாத்திருந்த பலகைகள் இப்போது உதவுகின்றன. தூக்க முடியாமல் தடுமாறி ஒன்றைக் கொண்டு வந்து கூண்டின் முன்பக்கம் நீளவாக்கில் வைத்தார். ஓராள் உள்ளே புகும்படி சந்து இருந்தது. கூரியரில் ஏதோ வாங்கியபோது வந்து சேர்ந்த மரப்பெட்டி கிடந்தது. அதை அந்த இடத்தில் வைத்ததும் சரியாகப் பொருந்தியது.
எல்லாம் போதுமா என்று ஒருமுறை பார்த்தார். அது படுத்துக்கொள்ள ஏதாவது போட வேண்டும். வீட்டுக்குள் போய் எதற்காவது ஆகும் என்று கட்டைப்பை ஒன்றிற்குள் போட்டு வைத்திருந்த நூல்புடவைகளை எடுத்தார். சாயம் மங்கிய ஒன்றை இரண்டு துண்டாகக் கிழித்தார். நான்காக மடித்து வைத்துப் பார்த்தார். மெத்தென்றிருந்தது. வெறுந்தரையில் விட்டாலும் ஒன்றுக்குப் போகும். புடவையைப் போட்டால் அதை நனைத்துவிடும். எடுத்துத் துவைக்க வேண்டும். பிறந்த குழந்தைக்குச் செய்வது போல ஏராளம் வேலைகள் இருக்கும் போல. புடவையை விரித்துவிடலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சுடருக்குப் பேசிக் கேட்கவும் சங்கடம். அவள் இன்னும் கூடுதல் வேலைகளைச் சொல்லக் கூடும்.
கூண்டுக்குள் ஓரிடத்தில் துணியை விரித்து அதன் மேல் கூடை எதையாவது போட்டு இரவில் மூடிவிடலாம். ஒரே இடத்தில் படுத்திருக்கும். இன்னொரு புடவையையும் எடுத்துக் கிழித்து வைத்தார். மாற்றி மாற்றிப் போடலாம். துணி அலசுவதற்காக வாங்கி இப்போது தோட்டத்துக் குப்பை அள்ளப் பயன்படும் நெகிழி அன்னக்கூடை நினைவுக்கு வந்தது. பின்னால் போய்க் கூடையை எடுத்துத் தட்டித் துடைத்துக் கொண்டு வந்து கூண்டுக்கு முன்னால் வைத்தார். இந்த நாய்க்கு எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று சலிப்பாக இருந்தது. மணியைப் பார்த்தார். எட்டே கால் ஆகியிருந்தது. நாய்க்குட்டியைக் கொண்டு வருபவனை இன்னும் காணவில்லையே.
கதவைத் திறந்துகொண்டு போய் வாசலில் நின்று பார்த்தார். கிளம்பிச் செல்லும் சிலர் பேச நேரமில்லாததால் சிறுசிரிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். குழந்தைகளை அவசரமாகப் பள்ளிப் பேருந்துக்குக் கூட்டிச் செல்வோர் நேரம் இது. தெருவுக்குள்ளிருந்து வெளியேறுவோர் மட்டுமே இருந்தனர். உள்நுழைவோரைக் காணவில்லை. சுடரை அழைத்துக் கேட்கலாமா என்றிருந்தது. நாயை ஆவலாக எதிர்பார்க்கிற மாதிரி ஆகும். வந்தால் நல்லது. வராவிட்டால் ரொம்ப நல்லது. வீட்டுக்குத் திரும்பிப் பழங்களை அரிந்து மிளகுத்தூளைத் தூவி எடுத்துக்கொண்டு முற்றத்து நாற்காலியில் உட்கார்ந்தார். நன்றாகச் சாய்ந்து வயிற்றை ஒட்டிப் பழத்தட்டை வைத்து ஒவ்வொன்றாக எடுத்துத் தின்றார். ஆடும் நாற்காலியாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்படி ஓய்வாக உண்பது ஆனந்தமாக இருந்தது.
பாதித் தட்டு காலியாவதற்குள் வாசலிலிருந்து ‘மேடம் மேடம்’ என்று அழைப்பு கேட்டது. தட்டை அப்படியே வைத்துவிட்டுப் போய்க் கதவைத் திறந்தார். கல்லூரி மாணவன் போலத் தெரிந்த பையன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்கூட்டரில் வந்திருந்தான். அதன் முன்பகுதியில் இருந்த ஒயர்ப்பைக்குள் இருந்து நாய்க்குட்டியை ஒருகையில் தூக்கி வந்து ‘இந்தாங்க மேடம்’ என்று நீட்டினான். அவன் கையில் பெரும்புழு ஒன்று முன்னும் பின்னும் நெளிந்தது. அருவருப்பில் கண்கூசச் சிலிர்த்துப் பின்வாங்கினார். ‘புடிங்க மேடம்’ என்றான் அவன். தடுமாறிக் கதவை நன்றாகத் திறந்து ‘அந்தக் கூண்டுக்குள்ள உட்ரு’ என்று சொன்னார். கால்களை உதைத்து நெளியும் குட்டியையே பார்த்துச் சிரித்து ‘இன்னமே இதுதான் உன்னூடு. பாத்துப் பத்தரமா இருந்துக்க’ என்று சந்தோசமாகச் சொன்னான். சட்டென்று தலைக்கு மேலே தூக்கி அதன் நெற்றியில் பச்சென்று முத்தம் கொடுத்தான். ‘ச்சீய்’ என்று உதட்டைச் சுழித்துத் திரும்பிக் கொண்டார் செல்வி.
‘மொட்டுக்குட்டிப் பயலே, அம்மாவப் பாக்க முடியாது போ. இவுங்கதான் இன்னமே உனக்கு அம்மா. பாத்துப் பதனமா இருந்துக்க. செல்லப்பயலே, செவந்த பயலே, கண்ணுப்பயலே, கருவாய்ப் பயலே…’
குட்டியை முகத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு அப்படிக் கொஞ்சியபடி கூண்டை நோக்கி நடந்தான் அந்தப்பையன். கடித்துத் தின்றுவிடுவானோ என்றிருந்தது. தூக்கத்தில் லயித்திருந்த குட்டி முருகிக்கொண்டு அவன் காதுக்குள் பேசுவது போல முனகியது. தடுப்பை எட்டிக் கூண்டுக்குள் விட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் அதையே பார்த்து நின்றான். பிறகு ‘டாட்டாடா தம்பிச்செல்லம், முத்துக்குட்டி… வரட்டுமா?’ என்று விடைபெற்றுத் திரும்பியவன் செல்வியைப் பார்த்து ‘இப்பத்தாங்கம்மா தாய்கிட்ட நல்லாப் பால் குடிச்சிருக்குது. ரண்டுமணி நேரம் தூங்கும். அப்பறமாப் பால் குடுங்க. தங்கமான குட்டிம்மா… நல்லாப் பாத்துக்கங்க’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை நோக்கிச் சென்றான்.
அவன் குட்டியைத் தூக்கியதும் முத்தம் கொடுத்ததும் அதனிடம் பேசியதும் வியப்பாக இருந்தன. அவன் வண்டி நின்ற இடம் வெறுமையாய்த் தெரிந்தது. முருகேசும் சுடரும் நாயிடம் பேசுவார்கள். எப்படி, என்ன பேசுவார்கள் என்பதைச் சரியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டோமோ? அவன் சட்டென்று கிளம்பிவிட்டான். இன்னும் சிலவற்றைக் கேட்டிருக்கலாம் என்று பட்டது. அவன் குரலிலும் சிரிப்பிலும் பெருகிய அன்பில் குட்டி நன்றாக நனைந்திருக்கும். இன்னும் இரண்டு வார்த்தை அவனைப் பேசவிட்டுக் கேட்டிருக்கலாம். பராமரிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை. நாய்க்கூண்டு இருப்பதால் ஏற்கனவே நாய் வளர்த்த அனுபவம் இருக்கும் என்று நினைத்திருப்பான். செல்பேசி எண்ணையாவது வாங்கியிருக்கலாம். அவன் போன வழியையே பார்த்துக் கொண்டு சற்றே நின்றிருந்துவிட்டுப் பிறகு கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தார்.
நாய்க்குட்டியிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. கூண்டுக்கு அருகே போய் மெல்ல எட்டிப் பார்த்தார். வெறுந்தரையில் ஊர்வது போல உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தது. லேசான பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். நீட்டியிருந்த வாய்ப்பகுதி அடர்கறுப்பு. மூடியிருந்த கண் தலைக்கு மேலே ஒட்ட வைத்தது போலிருந்தது. தொங்கிய காது மடல்களை முகத்திற்குப் போர்வையாகப் போர்த்தியிருந்தது. மெலிந்த உடம்புதான். தாய் நிறையக் குட்டிகள் போட்டிருக்குமோ? பால் போதாமல் இருந்திருக்கும். உடலில் தலை மட்டும் பெருத்திருந்தது. வெளியிலிருந்து பார்க்க லேசாகச் சிவந்த போண்டாவைப் போலத் தெரிந்தது. ‘போண்டாத் தலையன்’ என்று சொல்லிச் சிரித்துக்கொண்டார்.
தரையோடு ஒட்டியிருந்த வாய் ஏதோ முனகியது. உடல் மெல்ல அசைந்தது. கழுவிக் கொஞ்ச நேரமே ஆன வெறுந்தரை சில்லென்று இருக்கும். அதுதான் அசைந்து நெளிகிறது. முற்றத்தில் வைத்திருந்த புடவைக் கிழிசல் ஒன்றை எடுத்து வந்தார். வழியைத் தடுத்திருந்த பெட்டியை நகர்த்தி ஒருபுறத்தில் துணியை விரித்தார். குட்டியைத் தூக்கித் துணிமேல் வைக்க வேண்டும். கை நீளவில்லை. அந்தப் பையன் நடுவில் பிடித்துத் தூக்கிக்கொண்டு வந்தான். நெஞ்சோடு ஒட்டிய கையை வற்புறுத்திப் பிரித்துக் குட்டியைச் சட்டென்று தூக்கித் துணி மேல் எறிவது போலப் போட்டார். பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போலிருந்தது.
தடுப்பை வைத்துவிட்டு எட்டிப் பார்த்தார். துணிச்சூட்டை அனுபவித்துக் குட்டி படுத்திருந்தது. தன்கையை நீட்டி ஒருமுறை பார்த்தார். முதன்முதலாக நாய்க்குட்டியைத் தொட்டுத் தூக்கிய கை. ஒருநொடியில் தூக்கிப் போட்டுவிட்டாலும் குட்டியின் தொடுதல் நன்றாக வெந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் போலத்தான் இருந்தது. சுவரோரம் இருந்த குழாயைத் திறந்து கைகளைக் கழுவினார். சோப்புப் போட்டுக் கழுவினால் நல்லது. மிருகத்தைத் தொட்டுவிட்டு அப்படியே வைத்திருக்க முடியாது. வெளியில் இருந்த குளியலறைக்குச் சென்று சோப்புப் போட்டு நன்றாகக் கழுவினார்.
மீதமிருந்த பழத்தை உண்ணும்போதும் மதிய உணவுக்குக் கொஞ்சம் சோறு மட்டும் வைத்தால் போதுமென்று ஏற்பாடு செய்த போதும் பாத்திரங்களைத் துலக்கிய போதும் நாய்க்குட்டியே நினைவில் இருந்தது. பீமுக்கு வைத்திருந்த பாத்திரங்கள் எதுவும் இல்லை. எல்லாவற்றையும் எங்கே போய்ப் போட்டார் என்று தெரியவில்லை. இன்னொரு நாய்க்குட்டி வாங்க எண்ணமிருந்தால் அதையெல்லாம் அப்படியே வைத்திருந்திருக்கலாம். வீட்டிலிருந்த தட்டுக்களை எல்லாம் பொறுக்கி நோட்டம் விட்டுக் குழிவாகவும் விளிம்பு வெடித்துமிருந்த இரண்டை எடுத்தார். கழித்துக்கட்ட மனமில்லாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஏனங்கள். இப்போதைக்கு இவை போதும்.
அந்தப் பையன் சொன்னது போல இரண்டு மணி நேரம் ஆனதும் மெல்லப் போய்க் கூண்டுக்குள் பார்த்தார். துணிமேல் குட்டியைக் காணோம். கூண்டின் இன்னொரு மூலைக்கு நகர்ந்து போய் வாயைக் குவித்து ஊட்ட முயன்று கொண்டிருந்தது. பசி எடுத்துவிட்டது போல என்று உடனே வீட்டுக்குள் ஓடித் தட்டையும் பாலையும் கொண்டு வந்து ஊற்றி வைத்தார். ‘த்தா… வா… வந்து குடி’ என்று சொல்லிப் பார்த்தார். கண்களை நன்றாக விழித்திருந்தது. அண்ணாந்து மேலே பார்க்காமல் தரையிலேயே தவழ்ந்து தாய்முலையைத் தேடியது.
மனதைத் திடப்படுத்திக் கொண்டு குட்டியைத் தூக்கி அதன் வாயைத் தட்டுப் பாலில் வைத்தார். வாயில் பால் சுவை தெரிந்ததும் சுறுசுறுப்பாகி வெறும்வாயைச் சப்பியது. வீச்வீச்சென்று கத்தவும் தொடங்கியது. தாய்முலையில் பாலூட்டிப் பழக்கம், இன்னும் தனியாகக் குடித்ததில்லை போல. குழந்தைக்குப் பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி வைத்திருக்கலாமோ? அதற்கு இன்னும் நேரமாகும். அப்படிக் கொடுத்துப் பழகினால் அதை மாற்ற நாளாகும். அதன் கழுத்தைப் பிடித்துப் பாலில் வாய் படுவது போல வைத்தார். நாக்கை நீட்டிச் சப்பியது. நக்கிக் குடிக்கத் தெரியவில்லை. லேசாக அழுத்தினார். மூக்குவரை பாலில் புதைந்து செருமியது. அடடா… புரையேறிவிடுமே என்று துணியால் வாயைத் துடைத்தார். குழந்தைக்குப் பழக்கும் கைப்பக்குவம் வந்திருந்தது. மூக்கு அழுந்தாமல் வாய் மட்டும் பாலின் மேல்மட்டத்தில் படும்படி வைத்துப் பிடித்தார். சப்புவது மாதிரியும் நக்குவது மாதிரியும் நாக்கை நீட்டிக் குடிக்கத் தொடங்கியது. அப்படியே கொஞ்ச நேரம் பிடித்ததும் தட்டில் இருந்த பால் முழுதும் காலியாகிவிட்டது. மெல்ல உடலைத் தூக்கி நின்று மண்டது.
‘உள்ள போனதும் வெளிய வருதா உனக்கு?’ என்று சிரித்தார்.
உள்ளேயே விட்டுவிட்டுக் குளியலறைக்குப் போய்க் கைகளைக் கழுவினார். வெளியே வந்தபோது பெருமிதச் சிரிப்பு கட்டுப்படுத்த முடியாமல் வந்தது. தன் வாழ்வில் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்திவிட்ட மாதிரி இருந்தது. சுடரை அழைத்துப் பேச வேண்டும் என்றிருந்தது. இந்நேரம் வகுப்பில் இருக்கக்கூடும். உணவு நேரத்தில் அழைக்கலாம். குட்டியை இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூண்டுக்குப் போனார். துணியைச் சுருணையாக உருட்டி அதன் மேல் படுத்துக்கொண்டிருந்தது. கண்கள் விழித்திருக்க வாசலைப் பார்த்தது. செல்வியின் அசைவு தெரிந்ததும் உருமலோடு மென்மையாக ‘லொள்’ என்றது.
‘பாலுக் குடிச்ச கொழுப்புல என்னயவே பாத்து ஒலைக்கிறயாடா?’ என்று சிரித்தபடி கேட்டார்.
செல்வியின் குரல் பழக்கமானது போல உடல் முருக லேசாக அண்ணாந்து பார்த்தது.
‘எங்கொரலு அதுக்குள்ள உனக்குத் தெரிஞ்சிருச்சாடா செல்லக்குட்டி?’ என்று கேட்டார்.
அந்தப் பையன் பேசியது போலவே பேசினால் குட்டிக்குப் புரியும் என்று நினைத்தார்.
‘சரி சரி… தூங்குடா முத்துக்குட்டி’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனார்.
உடல் பரவசம் கொண்டு துள்ளியது. மணியைப் பார்த்துக்கொண்டே ஏதேதோ வேலைகள் செய்தார். இரண்டாம் முறை குட்டியைப் பால் குடிக்கச் செய்தார். இப்போது நன்றாகவே குடித்த மாதிரி தெரிந்தது. தூக்கி வயிற்றைப் பார்த்தார். ஒட்டித்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் வைக்கலாம் என்று ஊற்றினார். ஆனால் குடிக்கவில்லை. வாயை அழுத்தினால் இருபுறமும் ஆட்டி வேண்டாம் என்று சொல்வதாகப் பட்டது. ‘நல்ல அறிவாளிதான்’ என்று பாராட்டிச் செல்லமாகத் தலையில் தட்டினார். செல்பேசி அழைப்பது கேட்டு ஓடிவந்து எடுத்தார். சுடர்தான்.
‘என்னடி இப்பிடி மாட்டி உட்டுட்டு ரண்டு பேரும் போயிட்டீங்க?’ என்று எடுத்ததும் கேட்டார்.
அம்மாவின் பேச்சில் குற்றம் சாட்டும் தொனி இருந்தாலும் அது பொய் என்பதையும் குரலில் சந்தோசம் கொப்பளிப்பதையும் சுடர் தெரிந்துகொண்டாள். அம்மாவைப் பேசவிட்டுக் கேட்டாள். அந்தப் பையன் வந்ததிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக விரிவாகச் சொன்னார்.
‘ஒடம்பெல்லாம் ஒருபுடிக்குள்ள அடங்கீரும். தலதான் போண்டாவாட்டம் பெருத்து நிக்குது’ என்றார்.
‘இதுக்குத் தலை அவ்வளவு பெருசா இருக்காதே’ என்றாள் சுடர்.
‘நீ கண்டயா? நான் பாத்துட்டுத்தான சொல்றன். போண்டாத் தலையந்தான்’ என்றார் செல்லமாகக் கோபித்துக்கொள்ளும் குரலில்.
‘செரி, போண்டான்னே பேரு வெச்சரலாமா?’ என்றாள் சுடர்.
‘அதுக்குன்னு போண்டான்னா பேரு வெப்ப? கேக்க நல்லா இருக்க வேண்டாமா? பீமு மாதிரி எதுனா வெய்யி’ என்றார் செல்வி.
‘பீமு மாதிரியா? போண்டா… போடா… போண்… போடு… போண்டு… போண்டு… செரிம்மா போண்டுன்னு வெச்சரலாம். போண்டான்னு தெரியாது. வித்தியாசமா இருக்கும்’ என்றாள் சுடர்.
அவள் குரலில் நல்ல பெயர் கிடைத்துவிட்ட குதூகலம் ஒலித்தது. ‘போண்டு போண்டு’ என்று செல்வி சொல்லிப் பார்த்தார். நன்றாகத்தான் இருந்தது. எந்தப் பெயரையும் ஐந்தாறு முறை சொல்லி அழைத்துவிட்டால் நாக்குக்குப் பழகிவிடும்.
‘நல்லாத்தான்டி இருக்குது’ என்றார் செல்வி.
‘செரி. அதயே வெச்சுக்கலாம். போண்டு போண்டுன்னு சொல்லிக் கூப்புடு. அப்பத்தாம்மா பழக்கமாகும்’ என்று சொன்ன சுடர் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று வைத்துவிட்டாள்.
பேசியை வைத்ததும் நாய்க்கூண்டுக்கு ஓடி ‘டேய் போண்டு… போண்டு’ என்று அழைத்துப் பார்த்தார். அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். ‘கொழந்ததான். பால் குடிக்கறது, மல்லறது, தூங்கறது இதுதான் வேல’ என்று அவனைக் கோபிப்பது போலத் திட்டிக்கொண்டு வந்து சாப்பிட்டார். உறங்கி எழுந்து மணியைப் பார்த்ததும் பதற்றமானார். நான்கு பத்து. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போண்டுவுக்குப் பால் கொடுக்க வேண்டுமே. இப்படியா மறந்து போவது? பாலைக் கையில் எடுத்துக்கொண்டு ஓடினார்.
கூண்டுக்குள் இரண்டு இடத்தில் ஆய் இருந்து வைத்துவிட்டுத் துணிமேல் உடலை நீட்டி வாசல் பக்கம் பார்த்துப் போண்டு படுத்திருந்தான். செல்வியின் அரவம் கேட்டதும் எழுந்து தலையை நிமிர்த்திக் கத்தினான். இந்தக் கத்தல் கெஞ்சுவது போலிருந்தது. பசி பொறுக்க மாட்டாமல் பாலுக்குக் கெஞ்சுகிறானோ? ரொம்ப நேரம் தூங்கியிருக்கக் கூடாது. அடைப்பை எடுத்ததும் வெளியே ஓடி வந்தான். உள்ளிருந்து தட்டை எடுத்து வந்து பாலை ஊற்றி வெளியிலேயே வைத்துக் குடிக்க வைத்தார். இது மூன்றாவது முறை. நாக்கை நீட்டி நக்கிக் குடிப்பதில் தேர்ச்சி வந்திருந்தது. கழுத்தை லேசாகப் பிடித்திருந்தாலே போதும். விட்டுவிட்டால் அண்ணாந்து கத்துகிறான். ஓரிரு நாளில் பால் தட்டைப் பார்த்து அவனே குடித்துக்கொள்வான் என்றிருந்தது.
குடித்ததும் வெளியிலேயே விட்டார். போண்டு மெல்லச் செடிகளுக்குள் நடந்தான். உள்ளே போய்த் துண்டை எடுத்து வந்து மூக்கை மூடிக் கட்டிக்கொண்டு போண்டு போயிருந்த ஆயின் மேல் மண்ணைத் தூவிக் காயவிட்டு அள்ளினார். செடிக் கழிவுகளுக்கென வெட்டியிருந்த சிறுகுழியில் அதைப் போட்டார். கோப்பையில் தண்ணீர் எடுத்துப் போய் அந்த இடங்களைத் துடைத்தது போலக் கழுவினார். கழிப்பறையில் இருக்கும் பழைய பிரஷை இதைக் கழுவவென வைத்துக்கொள்ளலாம். அங்கே வைக்கப் புதிதாக வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஒருமாதத்திற்கேனும் உள்ளேயே மல்லுவதையும் ஆய் போவதையும் தடுக்க முடியாது. அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும். அதற்குள் முருகேசு வந்துவிடுவார்.
பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்வது போலத்தான் இவனையும் பார்க்க வேண்டும் போல. செடிகளுக்கு இடையிலிருந்து வீச்வீச்சென்று சத்தம் வந்தது. இந்தக் கத்தல் வேறுமாதிரி. ஆபத்தில் சிக்கிக்கொண்ட குரல். செடிகளை விலக்கி உள்ளே போனால் செம்பருத்தியின் இருகிளைகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறான். காயம் பட்டிருக்குமோ என்று மெல்ல விடுவித்து மேலே தூக்கிப் பார்த்தார். ஏதுமில்லை. வீட்டுக்கும் சுற்றுச்சுவர் கதவுக்கும் இடையில் நடைபாவாடை விரித்தது போலப் போட்டிருந்த நீளக் காரையின் மேல் விட்டார். ‘இங்கயே வெளையாடு. செடிக்குள்ள போனயின்னா சிக்கிக்குவ பாத்துக்க’ என்றார். அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடும்படி சுடர் சொன்னது ஞாபகம் வந்தது. ‘போண்டு… டேய் போண்டு… போண்டுப் பயலே’ என்று தொடர்ந்து அழைத்தார்.
பக்கத்து வீட்டு மல்லிகா அவர்கள் வீட்டுச் சுவரை ஒட்டி வந்து நின்று ‘என்னக்கா புதுநாயா?’ என்று கேட்டாள். சுவருக்கு மேல் மல்லிகாவின் தலை மட்டும் தெரிந்தது.
‘ஆமா மல்லிகா. இன்னக்கித்தான் கொண்டாந்து குடுத்தாங்க. ரண்டு பேருமே இல்லயா, எனக்குத்தான் இமுசா இருக்குது’ என்று சிரிப்புடன் சொன்னார்.
குட்டியைத் தூக்கி மல்லிகாவுக்குக் காட்டினார்.
‘ஒடம்பு நல்லா நெடிக்கமா வருமாட்டந் தெரீது. இப்பிடி நாயி நல்லா வேட்ட புடிக்கும்’ என்றாள் மல்லிகா.
‘அப்படியா சொல்ற? உனக்கு நாய்வ கூடப் பழக்கமிருக்குது. நாய்னாவே எனக்கு ஆவாது. இப்பப் பாரு இதோட அல்லாடிக்கிட்டுக் கெடக்கறன்’ என்றார்.
‘பிள்ளையும் வெளியூரு போயிட்டா. அண்ணனும் வேலைக்கிப் போயிருவாரு. அப்பறம் என்ன, உங்களுக்குத் தொணையா இருக்கட்டுமே. நாம திங்கற சோத்துல ரண்டு வாயி போட்டாப் போவுது’ என்று மல்லிகா சொன்னாள்.
‘அட நீ வேற. நாய்க்கின்னு என்னென்னமோ வாங்கிப் போடுவாங்க. செலவக் கேப்பன்னு எங்கிட்டச் சொல்ல மாட்டாங்க.’
‘அப்படித்தான் போடட்டுமே. என்ன செலவாயிருது? ஊட்டுல இன்னொரு ஆளிருந்தாப் போட மாட்டமா?’
மல்லிகாவுக்கு இரண்டு குழந்தைகள். தனக்கு ஒன்றே ஒன்று என்பதைத்தான் மறைமுகமாகச் சுட்டுகிறாளோ என்று எண்ணிச் செல்வி முகம் சுருங்கினார். மல்லிகா அதை உணரவில்லை.
‘என்னுது ரண்டும் இன்னம் அஞ்சாறு வெருசத்துல ஒன்னொன்னா வெளியூருக்குப் படிக்கப் போயிருங்க. அப்பறந்தான் நானும் ஒருநாய் வாங்கோணும். ஊர்ல எப்பவும் ரண்டு நாயி இருக்கும். இவருகிட்ட இப்பக் கேட்டாப் பிள்ளைவள ஒழுங்காப் பாருன்னு பேசறாரு. என்னமோ ஒழுங்காப் பாக்காத மாதிரி.’
போண்டுவின் மேல் கண் வைத்தபடி மல்லிகாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. லேசாக இருட்டு பரவ ஆரம்பித்துவிட்டது. போண்டுவைக் கூண்டுக்குள் விட்டுவிட்டுப் போய் விளக்கைப் போட்டார். இருளில் போண்டு பயந்துகொள்வானோ என்றிருந்தது. பால்காரரிடம் கூடுதலாகக் கால்படி சேர்த்து வாங்கினார். காலையிலும் வேண்டும் என்று சொன்னார். இந்தப் போண்டுவுக்குத் தினமும் அரைப்படி பால் வேண்டும். மனம் பணக்கணக்குப் போட்டது. இந்தக் கணக்கு எதற்கு என்றும் தோன்றியது.
போண்டுவுக்குப் பால் வைத்தார். முருகேசுவும் சுடரும் பேசினார்கள். இருவரையும் திட்டுவது போலவே பேசினார். அவர்கள் கெஞ்சுவது போலப் பேசிப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்கள். நடந்த எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னார். அடிக்கடி ‘போண்டு போண்டு’ என்றார். அந்தப் பெயர் முருகேசுவுக்கும் பிடித்திருந்தது. நாய்க்குட்டியைப் படம் எடுத்து அனுப்பச் சொன்னார்கள். படம் எடுத்துவிடலாம், அதை எப்படி அனுப்புவது என்று தெரியாது. யாராவது அனுப்பினால் பார்க்க முடியும். சுடரிடம் கேட்டு நன்றாகத் தெரிந்திருக்கலாம். நாளைக்குச் சுடருக்கு விடுமுறைதான். அவளிடம் கேட்டால் அங்கிருந்தே சொல்லித் தருவாள்.
எப்போதும் ஓரிரு நிமிடத்தில் முடிந்துவிடும் பேசியுரையாடல் இன்று கால்மணி நேரத்திற்கும் மேல் நீண்டது. இருவரிடமும் பேசிவிட்டுப் பார்த்தால் நேரம் கடந்திருந்தது. வழக்கமாகப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர் முடிந்திருக்கும். சரி, நாளைக்குப் பார்த்தாலும் கதை தெரிந்துவிடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்ததைப் பார்க்க உட்கார்ந்தார். இடையில் தோசை ஊற்றிச் சாப்பிட்டார். பத்துமணிக்குப் பால் கொண்டு போய்ப் போண்டுவுக்கு வைத்தார். தலை மேல் மென்மையாகக் கையை வைத்துக்கொண்டார். அவன்பாட்டுக்கு நக்கிக் குடித்தான். கைப்பிடி சோற்றை மிக்சியில் அடித்துப் பாலோடு கலந்து வைத்தால் அவனுக்குப் பசி கட்டும். அடிக்கடி பால் ஊற்ற வேண்டியிருக்காது. திடவுணவு செரிக்கும் அளவு நாளாகியிருக்குமா? நாளைக்கு இதையெல்லாம் சுடரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.
பத்துமணிக்கெல்லாம் படுத்துவிடுவது வழக்கம். அரைமணி நேரம் கூடிவிட்டது. படுத்ததும் வந்துவிடும் தூக்கம் இன்று எங்கோ ஒளிந்துகொண்டது. புரண்டு புரண்டு படுத்தார். எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியே போய் விளக்கைப் போட்டுப் போண்டுவைப் பார்த்தார். புடவைக்குள் சுருண்டிருந்தவன் அரவம் கேட்டு எழுந்தான். ‘தூங்கு தூங்கு’ என்று சொல்லிவிட்டு வந்தவர் விளக்கு எரியட்டும் என்று அப்படியே விட்டார். வந்து படுத்தவர் எந்நேரம் தூங்கினார் என்று தெரியவில்லை. நள்ளிரவில் திடுமென விழிப்பு வந்தது. இருளில் தடுமாறி எழுந்தார். வரவேற்பறை விடிவிளக்கு வெளிச்சம் பனிபோலப் படர்ந்திருந்தது. போண்டுவுக்கு இப்போது கொஞ்சம் பால் வைக்க வேண்டும். கழிப்பறை போய்விட்டு வந்து தண்ணீர் குடித்தார். வெளியில் இடிச்சத்தம் கேட்பது போலிருந்தது.
பாலோடு வெளியே வந்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஈசானி மூலையில் மின்னல் கொடி ஒன்று ஓடியது தெருவிளக்கு வெளிச்சத்திலும் தெரிந்தது. வானம் கருகும்மென இருண்டு கிடந்தது. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியிருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் எல்லாம் இருந்தன. பாலைக் குடித்ததும் போண்டுவைத் தூக்கிச் செடியோரம் விட்டார். அவன் கால்களை அகட்டி மண்டான். செம்பருத்தி மொக்குப் போன்ற நாக்கை நீட்டி வாயைத் துடைத்துக்கொண்டான். ‘புத்திசாலிதான்’ என்றவர் சட்டென்று அவனைத் தூக்கிக்கொண்டார்.
‘போண்டுப்பயலே, மழ வந்தாப் பயந்துக்குவியா? இடி இடிச்சா அழுவியா? அத்தன பயமா உனக்கு? பயப்படாத நானிருக்கறன்’ என்று கொஞ்சிப் பேசிக்கொண்டே வீட்டுக்குள் போய்ச் சோபா மேல் அவனை விட்டுவிட்டுக் கதவைத் தாழிட்டார்.
—