புளகிதம்

மேகங்களுக்குப் பின்னிருந்த இளஞ்சூரியன் தன் வெளிச்சக்கரங்களால் பூமியைப் பிரகாசமாக்கிக் கொண்டிருக்க, அதன் தங்கப் பிரதிபலிப்பைத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டாலும் வசுமதியாறு தயக்கத்துடனேயே நகர்ந்து கொண்டிருந்தது. கோசல்வாடி, நீரவாடு, மணலாடு, காந்தாசி எனத் தனது கரையெங்கிலுமிருக்கும் கிராம மக்களின் புழக்கம் தன்னுள் குறைந்து போனதில் அது திகைத்துத் தடுமாறியிருக்க வேண்டும். கிராமங்களை ஆற்றோடு இணைக்கும் ஒற்றையடிப் பாதையில் செழித்து வளைந்து கிடக்கும் மூங்கில்களின் அணைப்பிற்குள் நீர் முடிச்சிட்ட கூந்தலோடும் தோள்களில் துவைத்து வழியும் துணிகளோடும் இடுப்பில் நீர்க்குடத்தோடும் இரவு கவியும் வரை ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களோ, வியாபாரம், வெளி விவகாரமெனத் தன்னுள் சுறுசுறுவென்று இயங்கும் ஆண்களோ தன்னுடன் கடனே என்றும் கடமையே என்றும் இயங்குவதும் கோவிலுக்குள்ளிருந்தபடியே தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் காளியம்மன் அங்கில்லாததும் அதன் துள்ளாட்டத்தைச் சுணங்க வைத்திருந்தது. கரையோரங்களில் சிறுபடகுகளும் பரிசல்களும் செருகிக் கிடக்க, இரண்டொன்று அசைந்தாடிக்கொண்டே பயணம் புறப்பட்டிருந்தது. சதுப்புகளில் ஒதுங்கிக் கிடந்த குப்பைகளை உணவென எண்ணிய மீன்கள் தனது கரிய உடல்களை நெளித்து முன்னேறின. சில நாட்களுக்குமுன் தின்னக் கிடைத்த மனித மாமிசங்கள் அவற்றின் ஆவலைத் தூண்டியிருக்க வேண்டும்.

தாறுமாறாக வெட்டப்பட்ட மூங்கில் மரங்கள் கன்னாபின்னாவென்று கிடக்க அதன் சிம்புகள் வழியெங்கும் சிதறிக் கிடந்தன. ஊணான் கொடிகள் பரவிக் கிடந்த புதர்களின் மீது சிறு குருவிகள் க்வீக்… க்வீக்… என ஒலியெழுப்பியபடி தலையை வலஇடமாகத் திருப்பிவிட்டுத் திகைத்துப் போனவையாய் எங்கோ பறந்து போயின. எதையுமே அறியாததுபோல அணிலொன்று நடுவுடலை லேசாக உயர்த்தி வாலைத் தூக்கிக்கொண்டு எதையோ கொறித்துக் கொண்டிருந்தது. அங்குத் தரையிறங்க வந்த பறவைக் கூட்டம் இரத்தவாடை தாளாது வெருண்டு பதறிப் பறந்தன. காட்டுப்பாதையில் விறகுக்காகச் செல்பவர்கள் வழிகளில் சிதறிக் கிடந்த இலந்தை முட்களை அப்புறப்படுத்த மறந்தவர்களாக நடந்து சென்றனர். கதுவா கரையோரத்தில் கிடந்த பாறையின் மீது அமர்ந்திருந்தான். வசுமதி குசலம் விசாரிப்பதுபோல அவனது பாதத்தின் மீதேறிக் கடந்து சென்றுகொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்து விடும் அறிகுறிகளோடு வானம் இருளத் தொடங்கியது. மழை வீசினால் வசுமதி இரத்தவாடையை அடித்துக் கொண்டுபோய்க் கடலில் சேர்த்துவிடும். ஆனால் எல்லாவற்றையும் எதிலாவது கொண்டுபோய்ச் சேர்த்துவிட முடியாது.

இங்கும் கூட வானிலை எப்போதும் மழை வருவது போலவேயிருந்தது. மாலை நெருங்கும்போதே பெரிய குடையைக் கவிழ்த்தது போல் அரையிருள் சூழ்ந்து விடுகிறது. பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கியிருந்தது. கதுவாவும் அந்த கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருந்தான். உடலை லேசாக நகர்த்திக்கொண்டபோது அவன் அணிந்திருந்த குர்த்தாவின் மிகையான துணிச்சுருளில் பதுங்கிக் கிடந்த பொருள் உடலோடு அழுந்தி தனது சில்லி்ப்பை அவனது உடல் வெப்பத்துக்குள் பரப்பியது. சிலிர்ப்பை ஏற்படுத்தும் சில்லிப்பு.  அதனை அவன் வசுமதியின் கரைக்கப்பால் வானத்தை இணைக்கும் காட்டுப்பாதையில் நடந்து சென்றபோது சருகுகளூடே கண்டெடுத்திருந்தான். தனது இழுவிசைக்குள் உயிரறுக்கும் திறனை ஒளித்து வைத்திருந்த அந்தச் சிறிய உலோகத்தை வன்முறையாளர்கள் எப்படியோ தவற விட்டிருந்தனர். துப்பாக்கியைக் குனிந்து கையிலெடுத்தபோது ஏற்பட்ட நடுக்கம் பிறகெப்போதும் இருக்கவில்லை.  சொல்லப்போனால் அந்த விசைதான் நவகாளி என்ற ஜில்லாவின் பெயரை மட்டுமே தெரிந்து வைத்திருந்த அவனை மேற்கு வங்காளத்திலிருந்து ரயில் வண்டி, மோட்டார் படகு, பரிசல், நடைப்பயணம் எனப் பலவழிகளிலும் பயணிக்க வைத்து அங்கு வந்து சேர்த்திருந்தது.

தென்னைகளும் கமுகு மரங்களும் நிறைந்த ஈரம் சொட்டும் அப்பூமியில் மனித மனதின் ஈரங்கள் வற்றிப் போயிருந்தன. கல்கத்தாவில் நடத்திய கொலைவெறியாட்டத்தின் தொடர்ச்சியை அவர்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளியில் அரங்கேற்றியிருந்தனர். அப்போதைக்குதான் போர் முடிந்த சமர்க்களம் போன்றிருந்த அப்பகுதிக்கு அவன் விடை தேடி வந்திருந்தான். அடர்ந்த மரங்கள் கவிகையாகப் படர்ந்து சூரியனை மறைத்திருப்பதால் கிராமமே ஒளியிழந்தது போன்றிருந்தது. குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள் ஓடிக் கொண்டிருந்தன. அறுப்போரின்றி நெல் வயல்கள் தழைந்தும் சில எரியூட்டப்பட்டுச் சாம்பலாகியும் கிடந்தன. மூங்கில் பாலங்களைத் தாண்டிச் சதுப்புகளில் நடந்தபோது புதைந்துகொள்ளும் கால்களை இழுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது.  

பிரார்த்தனைக்காகக் கூடியிருந்தவர்களை அவன் லேசான பார்வைக்கான பாவனையுடன் மேய்ந்தான். இந்துக்களும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சமமாகவே இருந்த அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தனர். அந்த மனிதர் கல்லாலான சிறு மேடையின் மீது கால்களை ஒருக்களித்து அமர்ந்திருந்தார். வட்ட வடிவ கண்ணாடி சற்றே முன் சரிந்திருந்த மூக்கின் மீது தொற்றிக் கொண்டிருந்தது. அவருக்கு மான்களைப் போன்று நீண்ட ஒல்லியான கால்கள். வழுக்கைத் தலையிலிருந்து இருபுறமும் முளைத்தது போன்றிருந்த காதுகளும் மொந்தையான மூக்கும் அவர்தான்.. அவர்தான் என்றது. கண்ணாடிக்குள்ளிருந்த கண்கள் மூடிக் கிடந்தன. அவரருகே அமர்ந்திருந்த மௌல்வி ஒருவர் குர்ஆனின் வசனங்களை மிக மிக இணக்கமான குரலில் வாசித்துக் கொண்டிருந்தார்.

“நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம்  அல்லாவின் கட்டளையை நோக்கித் திரும்பும்வரை வலியுறுத்துங்கள். அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள். நீதி செலுத்துவோரையே அல்லாஹ் விரும்புகிறார்” மௌல்விக்குள் இறை துாதரே இறங்கி வந்தது போன்று அத்தனை அணுக்கமான குரல். மீண்டும் அதையே கூறினார். “அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும்வரை வலியுறுத்துங்கள்”

எதை வலியுறுத்துவது? யாரிடம் வலியுறுத்துவது? பதிலடிகளால் இனிமேல் வலியைத்தான் உணர்த்த வேண்டும். நன்றாகத் தொடங்கிய அன்றைய தினத்தின் முடிவு கோரமாக மாறி விடும் என்று யார் எண்ணியிருப்பார்கள்? ஏன் இப்படி நடந்தது? யார் யாருக்கு என்ன துரோகம் செய்தார்கள்? அவன் வியாபாரத்துக்காக வெளியூர் சென்றுவிட்டு வீடு வந்து சேர்வதற்குள் எல்லாமே மாறியிருந்தது. காஸிம், அப்துல்லா, நசீர் கூட மாறியிருந்தனர். அவனையும் அண்ணன் மூனுவையும் தவிர வீட்டில் யாருமே மிஞ்சவில்லை. கல்கத்தாவில் கலவரமாம். இந்துக்களின் வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டனவாம். எதிர்த்தவர்களை வெட்டிக் கொல்கிறார்களாம். பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்கிறார்களாம். இஸ்லாமுக்குக் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம் என்று மைதானத்தில் மக்கள் பேசிக் கொண்டபோது வாசீம் “ஓ.. அப்படீன்னா இந்துக்கள் வாயில் விரலை வச்சிக்கிட்டு அமைதியா இருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா..? இந்து மகாசபைக்காரங்களும் இந்துத்துவ அமைப்புகளும் வெறியாட்டம் நடத்துவது உங்களுக்குத் தெரியலையா? இல்ல தெரியாதமாதிரி நடிக்கிறீங்களா?” ஆத்திரத்தில் கண்கள் சுருங்கக் கத்தியதையும் கோபப்பட்டதையும் பார்த்திருக்கிறான். ஆனால் இத்தனை வெறியாட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் உள்ளங்களில் யார் வஞ்சத்தை ஏற்படுத்தியது? நாங்கள் இந்தியாவைப் பிரிப்போம்… அல்லது இந்தியாவை அழிப்போம் என்று ஜின்னாவின் வெளிறிய உதடுகள் உச்சரித்தவை முஸ்லிம்கள் மனதில் உத்தரவாகிப் போனதோ?

அவர்களை மதம் பிடித்துக்கொண்டது. தங்களுக்குள் ஜென்ம பகை கொண்டிருந்தவர்களைக்கூட அந்த மாயம் கட்டி இழுத்து ஒன்று கூட்டிக் கொண்டது. இரத்தம்… இரத்தம்… எதிரிகளின் இரத்தம்… கிடைத்ததும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டாடிக்கொண்டனர். நீ மகத்தானவன். ஆம்… நான் மகத்தானவன்… நாம் மகத்தானவர்கள். இறந்துபோக நேரிட்டாலும் நாம் எதிரிகளைக் கொன்றுவிட்டே இறப்போம். மனிதனின் வாழ்வுக்கு இதைவிட அர்த்தமுள்ள முடிவு என்ன இருக்க முடியும்? ஆயுதங்களோடு புகுந்திருந்த வன்முறைக் கூட்டத்தின் சிந்தனை நெறிப்படுத்தப்பட்டு ஒன்றென ஆகி செயல்வடிவம் எடுத்திருந்தது. துப்பாக்கிகள், வன்ஆயுதங்கள் போதாதென்று மூங்கில்காடுகள் வெட்டிச் சாய்க்கப்பட்டு உயிரெடுக்கும் கழிகளாயின.

மௌல்வி தொடர்ந்தார். “உங்களை எதிர்த்துப் போரிட இயலாதவர்களை எதுவும் செய்துவிடக் கூடாது… நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதைப் போலப் பாவத்திலும் பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது சரியானதாக இருக்காது”

ஆனால் பகைவர்கள் பாவம் செய்ய ஒன்று கூடிவிட்டதை யாரால் தடுக்க முடிந்தது? தடுக்க வேண்டிய அரசாங்கம்தானே இதை வழி நடத்துவது! நேற்றுவரை அணுக்கமாக இருந்தவர்கள் மதம் கிழித்துவிட்ட கோட்டை வன்மத்தால் அடர்வாக்கிப் பெண்களின் ஆடையற்ற உடல்களின் மீது உதிரங்களால் வர்ணம் தீட்டத் தொடங்கியபோது யார் வந்து தடுத்தது? எங்கோ தொலைவிலிருக்கும் கல்கத்தாவில் கலவரம் என்றார்கள். அது மின்னல் வேகத்தில் இத்தனை தூரம் பயணித்து இங்கிருக்கும் கிராமங்களைத் துவம்சம் செய்து விடும் என்று யாருமே எண்ணியிருக்கவில்லை. சீவி எறிந்த வாழைக்குலைகளெனத் தெருவெங்கும் பிணங்கள். ஓட ஓட வெட்டப்பட்டும் தீ வைத்து   எரிக்கப்பட்டதுமாகக் குப்பையைப் போலக் கிடந்த மனித உடல்கள். வசுமதியின் கரையில் முன்பொருமுறை மீன்கள் இப்படிதான் செத்துக் கரையொதுங்கிக் கிடந்ததாகச் சொல்லக் கேட்டிருக்கிறான். ஏதோ கழிவு கலந்து விட்டதாம். சமூகத்தில் கூட இப்படித்தான் கழிவு கலந்துவிட்டிருந்தது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே பெரிய அகழி வெட்டப்பட்டு அதில் நிரப்பப்பட்ட இரத்தத்தில் பிணங்கள் சுழித்துக்கொண்டு ஓடுகின்றன. துள்ளத் துடிக்க வெட்டப்பட்ட தகப்பனின் தலையை எந்த முண்டத்துடன் சேர்ப்பிப்பான்? பெண்ணுறுப்புகள் சிதைந்து ஊதி உப்பிக் கிடந்த பெண்ணுடல்களில் எது அவளுடையது? அய்யோ… கபு…

அவனைக் கத்துவா… என்றழைப்பாள் கிசுகிசுப்பாக. வெட்கம் பூசிய கபுவின் முகம் இரத்தம் பூசிக் கிடந்ததில் அடையாளம் தெரியாமல் போனது. காதல் செய்த நாட்களில் நாணம் வழியும் முகத்தின் மீது முக்காடைக் கவிழ்த்து விட்டுக்கொண்டு வளையல்கள் சலசலக்க அவள் நடந்து வரும்போதே கதுவாவின் காடு முழுவதும் பூக்கள் மலர்ந்து விடும். நாணற்புதர்களுக்கு மேல் பசேலெனப் படர்ந்திருக்கும் ஊணான் கொடிகளைப் போல அவளைத் தன்மீது படர்த்திக்கொள்ள எழும் ஆசையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொள்வான்.  மூங்கில் காட்டில் மண்டிக்கிடக்கும் சப்பாத்திக்கள்ளிப் புதரைத் தாண்டிச் சென்று சீத்தாப்பழத்தைப் பறித்து வருவதற்குள் அவள் கொடியில் மலரக் காத்திருக்கும் வெள்ளை மொக்குகளைப் பறித்து மூக்குத்திபோல ஒட்ட வைத்துக் கொள்வாள். மெத்தென்ற அவளது உள்ளங்கையைத் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டு பேசும்போது விரல்கள் கூச்சத்தில் நெளியும். வழுவழுப்பான கரங்களில் அசைந்தாடும் அரக்கு வளையல்களை விரல்களால் அளைவான். அடர்ந்த புருவத்துக்கடியில் மினுமினுப்பாக மேயும் கண்கள் என்னை அணைத்துக் கொள்ளேன்… என்று அவனிடம் பேசுவதை நம்பி அருகில் நெருங்கும்போது அவள் தன்னை விடுவித்துக்கொண்டு நகர்ந்து விடுவாள். முக்காடு வழிந்து இடுப்பில் இறங்குமிடத்தில் தொங்கும் குஞ்சங்களை உருவிக்கொண்டே பேச மட்டுமே அவனுக்கு அனுமதி. ஆனால் அவள் அனுமதியின்றி எத்தனை ஆண்கள் அவளை மேய்ந்து விட்டனர்? நிர்வாணமாகச் சிதைந்து கிடக்கும் உடல்களில் எது அவளுடல்?

அந்த மனிதர் பேசத் தொடங்கியிருந்தார். எத்தனை கிழவர் இவர்… அவன் அனிச்சையாக எழுந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்பதற்காகக் காதுகளைத் தீட்டிக் கொண்டான். ஏதேதோ அவர் பேசி முடித்தபிறகு வங்காள மொழியில் ஒருவர் அதை மொழிபெயர்த்துச் சொல்லத் தொடங்கினார். அங்கிருந்த முஸ்லிம்கள் தொழுகை நேரம் வந்துவிட்டதாகக் கூற, அவர்கள் தொழுது முடிக்கும்வரை காத்திருக்குமாறு  மொழிபெயர்ப்பாளரிடம் கூறிய அந்த மனிதர் எதுவுமே நடக்காததுபோல மடியின் மீது தாள்களை வைத்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதிவிடப் போகிறார்…? ஆயுதம் வேண்டாம்… அகிம்சை வேண்டும் என்பார். துப்பாக்கியால் சுடுவதற்குப் பதில் பிரார்த்தனை செய்யுங்கள். பயங்கரவாதிகளின் குண்டுகளை நெஞ்சில் தாங்கிக்கொண்டு புன்னகை பூத்தபடியே இறந்து போய்விடுங்கள்  என்பார். ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தக் கோழையால் வேறென்ன சொல்லிவிட முடியும்? அல்லது தான் சொன்னபடிதான் நடந்துகொள்ள முடியுமா…? அதிமுக்கியமான அரசியல் பிரச்சினை நடக்கும்போது தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையைக் கையிலெடுப்பார். போராட்டம் தீவிரப்படும்போது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு பிரம்மச்சரியத்தைப் பற்றியும் இனிமா கொடுப்பது பற்றியும் பாடம் நடத்துவார், என்று மூனு இவரைப் பற்றிச் சொல்வான். அதுதான் சரி. இவரை நம்பக்கூடாது.

தொழுகை முடிந்து உரை வாசிக்கப்பட்டபோது கூட்டம் மொத்தமும் அதில் கவனம் செலுத்த, அந்த மனிதர் கால்களை மாற்றிச் சம்மணமிட்டுக்கொண்டு எழுத்தைத் தொடர்ந்தார்.

புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்துகொண்டு போவதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவராக இங்கேயே தங்கப் போகிறேன். என்னிடம் எந்த மாகாண பித்தும் இல்லை. நான் இந்தியன் மட்டுமே. குஜராத்தியாக இருப்பதைப்போல வங்காளியாகவும் இருக்கிறேன். இங்கேயே இருந்து அவசியமானால் இங்கேயே இறப்பது என்ற பிரதிக்ஞை கொண்டிருக்கிறேன். முஸ்லிம்கள் மத்தியில் ஒரு இந்துப் பெண் தனியாகப் பயமின்றித் தாராளமாக நடமாட முடிகிற வரையில் நான் இங்கிருந்து போக மாட்டேன். பதிலாக இந்துக்களும் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளங்களிலிருந்து பயத்தை அடியோடு விலக்கிக்கொள்ள வேண்டும். ஆபத்தைச் சமாளிப்பதை விட்டுவிட்டு ஓடிப் போய்விடுவது என்பது மனிதனிடமும் கடவுளிடமும் இருக்கும் நம்பிக்கையையும் தன்னில் உள்ள சக்தியையும் மறுக்கும் செயல். நீங்கள் எங்கே பிறந்து வளர்ந்தீர்களோ அங்கேயே வீரமுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து அவசியம் வந்தால் அங்கேயே சாகவும் வேண்டும். உங்களுக்கு அதைச் செய்யக்கூடிய ரட்சை எது? போலீஸ், ராணுவம் ஆகியோரின் பாதுகாப்பில் நீங்கள் பத்திரமாக உணர முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ராணுவத்தினரே கூட எங்களைப் பாதுகாப்பவர் கடவுளே என்பார்கள். என்னுடைய ரட்சை என்றும் தவறாத துணையாக இருந்துவரும் ராமநாமமே. புனித குர்ஆன் நல்வழிகளையே போதிக்கின்றது. ஒரு உயிரை நியாயமின்றிக் கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு உயிரை வாழ வைத்தால் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் என்கிறது இஸ்லாம் மார்க்கம்.

மொழிபெயர்ப்பவர் உரையை வாசித்து முடித்தபோது அவன் கோபத்தில் பற்களைக் கடித்துக்கொண்டான். இவரையும் இவரின் உதவாக்கரை அகிம்சை கொள்கைகளையும் பற்றியெரியும் நெருப்பில் போட்டால்தான் என்ன?  என்ன… ஏது… எதற்கு என்று சுதாரிக்கும் முன்பே மக்கள் பிணங்களாகித் தெருக்களில் குப்பை மேடுகள் போல அடுக்கிக் கிடந்ததில் என்ன நியாயம் இருந்து விட முடியும்? பிணங்களாவதற்கு முன்பு எங்களுடைய வானிலும் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருந்ததை இவர் அறிவாரா? இரவு உணவுக்குப் பின் கிராம மக்கள் மத வேறுபாடின்றி மைதானத்திலிருக்கும் பெரிய அரச மரத்தினடியில் லாந்தர் வெளிச்சத்தில் அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தானே உறங்கச் செல்வோம்? பேசுவதற்கு ஏதொன்றும் இல்லாதபோது வாசீம் பாடத் தொடங்கிவிடுவான். அவன் முஹரம் பண்டிகையின்போது வாத்தியத்துக்கேற்ப சிலம்பமாடுவதில் விற்பன்னன். காளி பூஜைக்கான பூக்களை மொத்தமாக வாங்கி விற்கும் வியாபாரம் அவனுக்கு. நாஸர் வீட்டில் விருந்து விசேஷம் என்றால் ஏற்பாடுகள் அனைத்தும் கந்துனுவின் தலைமையில்தான் நடக்கும். அப்போது யாருக்குள்ளும் எந்த கொலைத்திட்டமும் இருக்கவில்லையே? தங்களின் தூண்டுதல்கள் கண்மூடித்தனமான செயல்களாக மாறுவதைத் தலைவர்கள் உணர்வதில்லையா? அதனை நெறிப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் இந்தக் கோழை ஒழிந்தால்தான் அவரின் பக்தர்களுக்கு வீரம் பிறக்கும்.

திருமணத்துக்குப் பிறகு கபுவும் அவனும் சேர்ந்து வாழ்ந்த வீட்டில் பனைமரச் சட்டங்களாலான இரண்டு அறைகளிருந்தன. காற்றில் படபடக்கும் கரையோர மூங்கில்கள் இரவுக்குச் சங்கீதம் கற்றுத் தந்துகொண்டிருக்க, அவளுடைய அருகாமையில் சித்திரை மாதம் கூட மாசிக் குளிரைப் போலிருக்கும் அவனுக்கு. மதியமோ இரவோ கணவன் வீடு திரும்பும் நேரத்தை அனுசரித்துச் சமைத்துவைத்த பீங்கா மீன் குழம்பைச் சோற்றில் அள்ளி ஊற்றிக் குழம்பு மீன்களை நோகாமல் காட்டாமணக்கு இலையில் எடுத்துவைப்பாள். கலவரத்துக்கு முந்தைய நாளிரவு ஈச்சம்பாயில் படுத்தபடியே தசரா பண்டிகைக்கு புவனமுகர்ஜியிடம் சந்தேஷும் இனிப்பு பீடாவும் நிறைவாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள். எப்போதோ பிறக்கவிருக்கும் தங்கள் குழந்தைக்கு கதுவா… கபு… என்று சிறிய எழுத்துகளில் பெயரிடாமல் நீளமான பெயர் வைத்து அதனை க..து…வா… என்பது போலச் சுருக்கி அழைக்க வேண்டும் என்றாள். எல்லாமே சுருக்கமான பெயர்கள்தான். காந்தி… ஜின்னா… என எல்லாமே. ஒருவர் தன் இனத்துக்காக வாழ்கிறவர். மற்றொருவர் தன் இனத்துக்கே துரோகம் செய்கிறார்.

அவன் ஜின்னா என்ற பெயரைக் கேள்விப்பட்டதோடு அவரை நேரிலும் பார்த்திருக்கிறான். பலாப்பழ விற்பனையில் இடைத்தரகர்களிடையே எழுந்த பிரச்சினையின்போது கரையோர கிராமங்கள் அனைத்தும் ஒன்று கூடி சுமைகளைக் கல்கத்தாவிலிருக்கும் பெரிய சந்தைக்கு ஏற்றி அனுப்பிய சரக்கு வாகனத்தில் மூனுவுடன் அவனும் சென்றிருந்தான். மூனு, கதுவாவை விட நாலைந்து வயதே பெரியவன் என்றாலும் அதிக விபரங்கள் அறிந்தவன். அவன்தான் ஜின்னாவின் கூட்டத்துக்கும் அவனை அழைத்துச் சென்றிருந்தான். கூட்டத்தில் உரையாற்றி விட்டுக் காரில் ஏறிச் சென்ற ஜின்னாவை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒல்லியான தேகம். சதைப்பற்றில்லாத கன்னம். சிரிப்பில்லாத உதடுகள்.. உயிரைத் தேக்கி வைத்துக் கொண்டது போன்ற கண்கள். குச்சிக்கு அணிவித்தது போலக் குழாய் போன்ற நீள கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்திருந்தார்.

“பாவம்.. எவ்ளோ ஒல்லியா இருக்கிறார் இவர்?” கதுவா அப்போது அப்பாவியாக இருந்தான். “பொல்லாதவர். இவர்தான் இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்களைப் பிரி்த்துத் தனிநாடு ஆக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்” என்றான் மூனு. கதுவாவுக்குப் பிறகெல்லாம் புரிந்தது. நேரடி நடவடிக்கை நாள் என்ற தினத்தைத் திட்டமிட்டுக்கொண்டு இந்துக்களைக் கொன்றதுவரை எல்லாமே அவனுக்குப் புரிந்தது. ஆனால் புரிதலுக்கான விலை மிக அதிகமானது. அதனை ஈடு செய்தேயாக வேண்டுமென்ற தீராத வேட்கை அவனை நவகாளியை நோக்கிப் பயணிக்க வைத்திருந்தது.

அவன் அந்த மனிதரைத் தொடர்ந்துகொண்டிருந்தான். சந்தர்ப்பம் இன்றாவது வாய்க்கட்டும். உடுப்புக்குள் மறைத்திருந்ததை உடலோடு அழுத்தி அதன் இருப்பை உறுதி செய்துகொண்டான். அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக வீடு வீடாகச் சென்று அழைப்பு விடுத்துவிட்டு அங்கிருந்த பாறை போன்ற பெரிய கல்லின் மீது அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்குச் சளி பிடித்திருக்க வேண்டும். தும்மலும் இருமலுமாக இருந்தார். கடித கற்றைகளும் எரியக் காத்திருக்கும் மண்ணெண்ணெய் விளக்கும் அவரருகே இருந்தன. உதவியாளர்கள் யாரும் அருகிலில்லாதது எப்போதாவதுதான் வாய்க்கும். யாரோ ஒரு சிறுமியிடம் பொக்கையான சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார். மூனுவின் மகளையொத்த வயதுடையவளாக இருந்தாள் அந்தச் சிறுமி. அவர் ஒரு காலை வளைத்து மற்றொரு காலின் மீது பக்கவாட்டில் தளர்வாக வைத்திருந்தார்.  காலணிகளின்றி நடந்ததால் கால்கள் புண்ணாகியிருந்தன. அவனிருப்பை அவர் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு ஜின்னா இருப்பதைப் போல இவரால் ஏன் தான் சார்ந்த மதத்தின் சார்பாக இருக்க முடிவதில்லை? நேற்றைய வாக்குவாதங்களை எண்ணிக் கொண்டபோது செய்யவிருக்கும் செயலுக்கான தீவிரம் கூடியிருந்தது அவனுக்கு.

நேற்று பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு அமைதிக் குழுக்கள் சம்பந்தமாக அவரிடம் விவாதிப்பதற்காக இந்துத் தலைவர்கள் சிலர் காத்திருந்தனர். அவர் தனது காத்திரமற்ற குரலில் அவர்களுடன் உரையாடியபோது அவனும் அருகிலிருந்தான்.

“ஒரே ஒரு இந்துவாக இருந்தாலும் அவர் முஸ்லிம்களுக்கு நடுவே போய் வசிக்க வேண்டும். சாக வேண்டியிருந்தாலும் அச்சம் கொள்ளக்கூடாது. போராடாமலேயே இறப்பதற்கு வேண்டிய அகிம்சை பலம் அவருக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் தவறுக்கு உடன்படாமல் இருக்கிறார் என்றால் அதுவும் வீரமே. எவ்வளவுதான் கொடியவனாகவும் கல் நெஞ்சனாகவும் இருந்தாலும் வீரனுக்குரிய மரியாதையைக் கொடுக்காத மனிதர்கள் எவரும் உலகில் இருக்க முடியாது”

“ரவுடிகள் நியாயத்தை உணருவதில்லை” அந்த இந்து முக்கியஸ்தர் கோபத்தைத் தாடையிடுக்கில் அடக்கியது போலிருந்தது.

“ஆனால் அவர்கள் வீரத்தை உணர்வார்கள். தன்னைவிட வீரமுள்ளவர்கள் நீங்கள் என்று அறிந்தால் உங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். நான் இப்போது விவாதிக்கும் விஷயங்களில் ஆயுதங்கள் உபயோகிப்பதைக் கைவிடவேண்டும் என்று நான் கூறவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். சிட்டகாங் ஆயுதசாலையில் கொள்ளையிட்டவர்களுக்கு நான் ஆயுதங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. அந்தக் கொள்ளையில் ஈடுபட்டபோது காட்டிய அதே வீரத்தையும் அஞ்சாமையையும் இந்த நெருக்கடி சம்பந்தமாகவும் காட்டியிருப்பின் அவர்களை வீரர்களெனச் சரித்திரம் போற்றியிருக்கும்”  

“இங்கே முஸ்லிம்களும் இந்துக்களும் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளனர்.. அவ்வளவு பேரை நாங்கள் எப்படி எதிர்த்திருக்க முடியும்?”

“பிரிட்டிஷாருக்கு இந்தியா அடிமைப்பட்டபோது ஒரு கோடி இந்தியருக்கு எதிராக 70000 ஐரோப்பியச் சிப்பாய்களே இருந்தனர்… அறிவீர்கள்தானே?”

“நம்மிடம் ஆயுதங்களில்லை. வங்காள அரசாங்கம் தனது துப்பாக்கிமுனை கொண்டு அவர்களுக்கு ஆதரவளித்ததை மறந்து விட்டீர்களா நீங்கள்?”

“தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கு இதைவிட இன்னும் அதிக ஆபத்துகள் இருந்தன. ஏராளமான ஐரோப்பியருக்கும் நீக்ரோக்களுக்கும் நடுவே இந்தியச் சமூகம் மிகச் சிலரையே கொண்டிருந்தது. ஐரோப்பியரிடம் ஆயுதங்கள் இருந்தன. எங்களிடம் ஏதுமில்லை. சத்தியாகிரகம்தான் எங்கள் ஆயுதம். வெல்லவில்லையா நாங்கள்?”

“அப்படியானால் சிறுபான்மையினர் பெரும்பான்மை சமூகத்தாருடன் அனுசரித்து இருந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்களா”

“என்னைப் பொறுத்தவரை ‘அனுசரிப்பது’ என்ற சொல்லே துர்நாற்றமானது. மானத்தை இழந்துவிட்டுச் சரிக்கட்டிக்கொண்டு போவது என்பது எதிலும் கூடாது. பயத்தை விட்டு விடுவதும், எப்படியாக இருப்பினும் நியாயமானதை மட்டுமே எண்ணி நியாயமாக மட்டுமே செயல்பட வேண்டும் என்பதே உண்மையில் செய்ய வேண்டியது”

“அனுசரிப்பது தேவையில்லை என்றால் நம்மிடமிருக்கும் ஒரே வழி இறப்பதுதானே?”

“ஏசு சிலுவையில் மாண்டார் என்றாலும் வெற்றி பெற்றது ஏசு என்றுதானே உலக சரித்திரம் காட்டுகிறது. கிறிஸ்துவின் எதிர்ப்பின்மையால் சமூகத்தில் நல்லவற்றின் சக்தி வெளிப்பட்டிருக்கும்போது உடல் அதன் அழிவை அடைந்து விட்டால்தான் என்ன? உயிரை இழப்பதனால் மனிதன் பெருவாழ்வை அடைகிறான்” என்று கூறியபடியே அந்த மனிதர் தன்னருகே நின்றிருந்த அவனை நேருக்கு நேர் பார்த்தபோது இன்னதென்று சொல்லவியலாது எழுந்த உணர்வை அவன் அடக்கிக் கொண்டான்.

“எங்கேயிருந்து வர்றீங்க…?” என்றார். வைஸ்ராயிலிருந்து இங்கிலாந்தின் பெருந்தலைகள்  வரை உரையாடியிருக்கும் இவர் இப்போது தன்னிடமும் உரையாடுகிறார் என்று பைத்தியக்காரத்தனமாக எழுந்த எண்ணத்தைத் தூக்கியெறிந்து விட்டு, “மேற்கு வங்காளத்திலேர்ந்து…” என்றான்.

“அத்தனை துாரம் பயணம் செஞ்சு என்னைப் பார்க்க வர்றதுக்குப் பதிலா அங்கேயே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக எதையாவது செய்திருக்கலாமே?” பற்கள் இல்லாமையால் பேசும்போது வாய் குழந்தையுடையது போன்றிருந்தது.

அதை மொழிபெயர்த்துச் சொன்னபோது, “உங்களைப் பார்க்கவோ தரிசிக்கவோ வர்றளவுக்கு உங்களைப் பெரிய ஆளுன்னு நான் நினைக்கல…” இப்போது அவன் நிதானத்துக்கு வந்திருந்தான்.

அவர் சலனமற்றவராக இருந்தார்.

“உங்களது அகிம்சை, இந்துக்களைக் கோழைகளாக்கிப் புழுவைவிட மோசமானவர்களாக ஆக்கிவிட்டது. எங்களுக்கெதிராக அவர்கள் ஒற்றைப் பெரும் சக்தியாக ஆகி விட்டார்கள். நீங்களோ எங்கள் வீரத்தையெல்லாம் கரைத்து விட்டு இப்போதும் அவர்களிடம் அடிப்பட்டுச் சாகச் சொல்கிறீர்கள்”

“சத்தியாகிரகம் ஒத்துழையாமை போன்ற ஒற்றை மனமும் ஒரே இலக்கும் கொண்ட ஆக்க சக்திகளும் வெற்றி பெற்றுள்ளனவே”

“உங்களின் போராட்டங்களில் விழைவது கோழையின் சக்தி. அவர்கள் அழிவின் சக்தியாகத் திரண்டு கல்கத்தாவில் அடித்தார்கள்.  நவகாளியில் அடிக்கிறார்கள். பீகாரில் பதிலடி கொடுப்பது எங்களின் கடமை. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? வன்முறையால்தான் வன்முறைக்கான நியாயங்களை வழங்க முடியும். நீங்களும் உங்கள் அகிம்சையும் காலாவதியாகிவிட்டது விளங்கவில்லையா உங்களுக்கு… மகாத்மாவாம் மகாத்மா…” குரல் அவனையுமறியாமல் உயர்ந்துகொண்டே போனது.

பத்திரிக்கைகளில் அவர் வாசிக்க வேண்டிய பகுதிகளை அடிக்கோடிட்டுக் கொண்டிருந்த அவரது உதவியாளர் அவனை நிமிர்ந்து நோக்கியது முறைப்பது போலிருந்தது. அந்த மனிதர் செய்தித்தாள்களின் மீது வெற்றாகப் பார்வையைச் செலுத்தினார். பிறகு மெதுவாகச் சொன்னார், “அவர்களின் வன்முறைக்கு நாம் பீகாரில் காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறோம்”

“கொல்லப்பட்டது உங்கள் குடும்பமாக இருந்தாலும் உங்கள் பேச்சு இப்படித்தான் இருக்குமா காந்தி அவர்களே?”

சீற்றமாக வந்த கேள்வியை அவர் நிதானத்தோடு எதிர்கொண்டார்.

“நான் உங்கள் வலியை உணர்கிறேன். நீங்கள் கூற வருவதையும் புரிந்துகொள்கிறேன். நம்மை இந்தளவு பாதிப்புக்குள்ளாக்கிய முஸ்லிம்களை ஏன் கொல்லக் கூடாது என்று நீங்கள் நினைப்பது இயற்கைதான். ஆனால் நான் கூறுவதெல்லாம் தீமையைத் தீமையின் மூலம் சந்திக்கக் கூடாது என்பதே. தீமையில் ஈடுபடுவது நம்மை அறிவற்றவர்களாக மாற்றி விடுகிறது. இதை நான் என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். தீமை செய்பவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும்”

 “ஓ… உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த கதி நேர்ந்தாலும் இப்படிதான் வசனம் பேசிக் கொண்டிருப்பேன் என்கிறீர்களா?”

“நிச்சயமாக என் பதில் எல்லா நேரத்திலும் ஒன்றாகத்தானிருக்கும். சத்தியமே கடவுள். சத்தியத்தை அடையும் மார்க்கம்தான் அகிம்சை. இது என்னுள் முறையாக வெளிப்படுகிறதா என்று சந்தேகமின்றி உணர்ந்த பிறகே மற்றவர்களிடம் எடுத்துக் கூறுகிறேன். நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என் கொள்கை மாறுகிறதா என்று இப்போது கூட சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்”

“ஓ… அப்படிச் செய்ய மாட்டேன் என்ற தைரியமோ?”

“பாப்புக்கு வேலைகள் காத்திருக்கின்றன என்று தடுத்த உதவியாளரை அந்த மனிதர் சைகையால் மறுத்தார்.

“நாம் துன்பமடைவதற்கு நாமேதான் காரணம். வன்முறையாளர்களின் வன்முறையை ஏற்றுக்கொண்டுவிட்டதுதான் காரணம். அவர்களின் கைகளால் கோழையாகக் கொல்லப்படுவதைவிடக் கொல்லாமலேயே வீரத்துடன் சாவது என்ற நிலைப்பாடு ஒன்றும் இருக்கிறதல்லவா? சமரசங்களின்  வழியே வெற்றி பெறுவது நம் பலவீனம். அது நம்மிடமிருக்கும் கோபத்தையும் வெறுப்புணர்வையும் ஒருபோதும் மாற்றாது. போராட்டங்களின்போது நம் மக்கள் காத்த அமைதியை நான் அகிம்சை என்று தவறாகப் புரிந்துகொண்டேன். அது பலவீனத்தின் அமைதி. வன்மமும் வெறுப்புணர்வும் நம் மனங்களுக்குள் உறைந்திருப்பதால்தான் சகோதரர்களாக வாழ்ந்த நாம் இன்று பரம விரோதிகளாகி ஒருவரையொருவர் அழித்துக் கொண்டிருக்கிறோம். வாளால் தொடங்கும் யுத்தத்தை வாளால்தான் முடித்து வைக்கவும் முடியும்”

“ஆ… போதும் உங்கள் போதனை. நாங்கள் சிந்திய இரத்தத்துக்கு எங்களின் உருவிய வாளால்தான் நீதி பெறறுத் தர முடியும்”

“தவறு… வாளை உருவி விட்டாலே நீதி அங்கிருந்து நகர்ந்துவிடும். அநீதி அச்சத்தை உண்டாக்கும். எதிரிகளைப் போல நாமும் மாறிவிடுவது வெற்றியா… எதிரிகளை நம்மைப்போல மாற்றிவிடுவது வெற்றியா…?

“நான் உங்களை வெறுக்கிறேன்… மனதார வெறுக்கிறேன்”

“நிறையப் பேர் இப்போது அதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் அது என் கொள்கையை மாற்றி விடாது”

பிடிவாதக்கார அரசியல் கிழவர் இவர். பேசி பேசி எந்த நியாயத்தையும் இவருக்கு உணர்த்தி விட முடியாது. எதிரிகளுக்கு முன்னால் கைகட்டி வாய் பொத்தி தலைகுனிந்து வாளுக்குக் கழுத்தைக் காட்டச் சொல்பவர்… ச்சே… இவர் ஒழியட்டும்… ஒழியட்டும்… இனி காலம் தாழ்த்துவது சரியில்லை. உதவியாளர்கள் வந்து விடுவார்கள். பிரார்த்தனைக்கு ஆட்கள் வரத் தொடங்கி விடுவார்கள். அவன் தன்னுடலைத் தாவரப் புதருக்குள் நன்றாக மறைத்துக்கொண்டு குர்த்தாவுக்குள் கையை நுழைத்தான்.

“க்ளக்… க்ளக்…” ஏதோ சத்தம் வரச் சட்டென்று விறைப்பானான். அய்யோ… இதென்ன…? யாரிவன்…?  எப்போது வந்தான்? என்ன நடக்கிறது? அந்த மனிதரின் கழுத்தை யாரோ ஒருவன் நெரித்துக் கொண்டிருந்தான்.  இங்கு… இங்கிருப்போரெல்லாம் எங்கே..? தடுப்பதா…? வேண்டாமா…? அரை நொடிக்குள் அவனால் அவ்வளவுதான் எண்ண முடிந்தது.

அவர் கண்கள் துறுத்த முயன்றன. அடைபட்ட தொண்டையிலிருந்து திக்கிக் திணறி வார்த்தைகள் வெளியேறின. “இறை.. வன்… மி…க…ப் பெரி… ய… வ…ர்”

நெரித்துக் கொண்டிருந்தவன் அந்த மனிதரின் கழுத்திலிருந்து சட்டென்று கைகளை விலக்கினான். அவர் இருமத் தொடங்கினார். கதுவா கனவு போன்று சில வினாடிகளுக்குள் நடந்து முடிந்த சம்பவத்தை உள்வாங்கவியலாத பதற்றத்தோடிருந்தான். கழுத்தை நெரித்தவனின் கைகள் லேசாக நடுங்கியது போலிருந்தது. கண்களைத் தவிர்த்து முகம் முழுக்க மூடியிருந்த துணியை விலக்கினான். தாடி கழுத்துவரை நீண்டிருந்தது. சட்டென்று அவன் அந்த மனிதரின் கால்களில் விழுந்தான்.

“என்னை மன்னியுங்கள்… நான் பாவம் செய்யத் துணிந்து விட்டேன். அதற்குப் பரிகாரமாக உங்களுடனேயே இருந்து உங்களைப் பாதுகாப்பேன். என்னை நம்பி எனக்கு ஏதேனும் பணியை வழங்கி உத்தரவிடுங்கள் அய்யா”

அந்த மனிதர் சற்றுமுன் தன்னைக் கொல்லவிருந்தவனைப் பார்த்தார். தொண்டையில் அடைபட்ட காற்று இப்போது சீராகிப் பேச்சைச் தெளிவாக்கியிருந்தது. “ஒன்றே ஒன்று மட்டும் செய்யுங்கள். என்னை என்ன செய்ய முயன்றீர்கள் என்பதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். இல்லையென்றால் இங்கு மறுபடியும் ஒரு இந்து முஸ்லிம் கலவரம் உருவாகி விடும்” என்றார்.

நடப்பவற்றின் மௌனசாட்சியாக நின்றிருந்த கதுவாவின் கண்கள் இமைக்க மறந்திருந்தன. கூட்டம் நடக்கவிருக்கும் மைதானத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பது மெதுவாக விளங்கத் தொடங்கியது.  விளக்கொளியில் நிழலுருவமாகத் தென்பட்டது அவரின் உருவம். வழுக்கையான தலைப்பகுதியில் காதோரம் கண்ணாடியின் சொருகல். மேலுடலைப் போர்த்தியிருந்த கம்பளி ஏத்தியும் தாழ்த்தியுமாக உடலின் முக்கால் பாகம் வரை வழிந்திருக்கக் காலணிகள் இல்லாத கால்களோடு அவ்வுருவம் குச்சியைத் தாங்கிக்கொண்டு நடந்து சென்று இருளுக்குள் மறைந்தது.

அவன் குளிர்காற்றால் சில்லிட்டிருந்த துப்பாக்கியை உடைக்குள் போட்டுக் கொண்டபோது அவனுடல் சிலிர்த்தது. இது வேறு விதமான சிலிர்ப்பு என்று தோன்றியது. அவரை மீண்டும் பார்க்க வேண்டுமாயும் தோன்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.