புறாக்கூண்டு

ஜன்னல் வழியாக திடீரென்று வீசிய காற்றே அவளுக்கு அவ்வெண்ணத்தை ஏற்படுத்தியது. வேலைகளை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை அரைகுறையாய் சாப்பிட்டு அசதியாக அறைக்குள் வந்து ஜன்னல் ஓரமாக இருந்த கட்டிலில் ஜன்னலை பார்த்தவாறு சாய்ந்தவாக்கில் படுத்துக்கொண்டாள். வோல்டேஜ் மாறி மாறி வந்துக்கொண்டிருக்க மின்விசிறி வேகமாகவும், மெதுவாகவும் ஓடிக்கொண்டிருந்தது.

அவள் வெறுமையாக உணர்ந்தாள். ஏன் என்று அவளுக்கே புரியவில்லை. வெளியே அக்கம்பக்கத்து வீடுகளின் பேச்சு குரல்களும், சாலையில் செல்லும் வாகன சத்தத்தையும் உணராமல் எந்த சிந்தனையும் இல்லாமல் ஆனால், எதையோ சிந்தித்தவாறே படுத்திருந்தாள்.

அது ஓரு ஹவுஸிங் போர்ட் வீடு. அவள் வீடு முதல் மாடியில் இருந்தது. கட்டிமுடிக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரவர் வசதிக்கு ஏற்றவாறு மராமத்து வேலைகள் செய்து பாதுகாத்துக் கொண்டிருந்தனர். ஹால், சமயலறை, ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீடுகள் அவை. அதில் ஓருவர் துவங்கி எட்டு முதல் பத்து பேர் வரை உள்ள குடும்பமாக பலர் வாழ்ந்து வந்தனர். எப்பொழுதும் எதாவது ஒரு சத்தம் வந்து கொண்டே இருக்கும். எந்த சத்தமும் இல்லாத ஒரு அமைதி எப்போதாவது ஏற்படும்போது அங்குள்ளவர்களுக்கே அது வித்தியசாமாகவும், சில சமயம் அச்சமாகவும் இருக்கும்.

அவள் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பாள். அந்த சிறிய வீட்டை நன்றாக பராமரித்தால். எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கவில்லை என்றால் அவளுக்கு வரும் கோபத்தை அந்த வீட்டில் எவராலும் தாங்க முடியாது. அந்த வீட்டில் அவள் கணவன், குழந்தை, மாமியார் மற்றும் மாமனார் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். மாமனாரும், மாமியாரும் ஹாலிலும், அவளும் கணவனும் படிக்கையறையிலும், குழந்தை இரண்டு இடத்திலும் உறங்கும்.

இதமான அந்த காற்று அடித்ததும் தான் அவளுக்கு அந்த நினைப்பு வந்தது. கணவனுடன் கூடி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று. இடையில் இரண்டு மூன்று முறை கணவன் கேட்டும் அவள் உடம்பு முடியல்லை என்று சொல்லிவிட்டாள். அவனும் எதுவும் சொல்லவில்லை. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது போல் உணர்ந்தாள். அன்று இரவுக்கு அவள் மனதார தயராகத் துவங்கினாள். கணவனை பற்றி அவளுக்குத் தெரியும். அவன் எந்த மனநிலையில் இருந்தாலும் இவளால் அவனை தயார் செய்துவிட முடியும். அதைபற்றியெல்லாம் கவலை இல்லை. மகளை ஹாலில் படுக்க வைத்து விடலாம். வேறு என்ன, நினைக்கும்போதே அவளுக்கு மனதிலிருந்து ஏதோ பறப்பது போல் இருந்தது. கதவு லேசாக தட்டும் சத்தம் கேட்க சுய நினைவுக்கு வந்தவளாய் எழுந்துசென்று கதவைத் திறந்தாள். மாமனார் நின்றுருந்தார், இவள் திரும்பி கடிகாரத்தை பார்த்தாள்.

“ஸ்கூலுக்கு போய் பாப்பாவ கூட்டிட்டு வரேம்மா… ஏதாவது வாங்கிட்டு வரணுமா?”

இவள் சமையலறைக்கு சென்று ப்ரிட்ஜை திறந்துப்பார்த்துவிட்டு, “பால் இல்ல வாங்கிட்டு வந்துடுங்க” என்றாள். அவர் சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு வாசலை நோக்கி சென்றார். இவள் ஹாலை ஒரு முறை சுற்றி பார்த்தாள். மாமியார் வாசலுக்கு எதிர்பக்கம் படுத்துக் கொண்டிருந்தாள். கண்களை மூடிக்கொண்டிருந்தாள். ஆனால், அவள் தூங்கவில்லை என்று இவளுக்கும் தெரியும். மீண்டும் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். உடல் இருக்கமடைவது போல் தோன்றியது. தன் கையைப் பார்த்தாள். அதில் இருந்த மெல்லிய முடிகள் குத்திட்டு நின்றன. மெல்ல சிரித்துக்கொண்டாள். அறையை ஒருமுறை சுற்றிப்பார்த்தாள். அது லேசாக கலைந்துகிடப்பது போல் தோன்றியது. அதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அப்படியே படுத்திருந்தாள். கடைசிமுறை நடந்ததெல்லாம் துண்டு துண்டாக நினைவிற்கு வந்து சென்றது.

அரைமணி நேரம் கழித்து மகள் படிகளில் ஏறி ஓடிவரும் சத்தம் கேட்க, எழுந்து வாசலை நோக்கி சென்றாள். மகள் வேகமாக ஓடிவந்து வாசலில் ஷுவை கழட்டிவிட்டு உள்ளே வந்து பையை ஓரமாக வைத்துவிட்டு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தாள், சோகமாக இருந்தாள். மகளை பார்த்ததுமே இவளுக்கு தெரிந்துவிட்டது பள்ளிகூடத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்று. ஆனால், கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தாள். எதன் பொருட்டும் தன் மனநிலை சீர்குலைய அவள் விரும்பவில்லை.

“தாத்தா எங்க?”

“பால் வாங்கிட்டு வராரு.”

அவள் மகளின் யுனிபார்மை பார்த்தாள், வெள்ளை பாவாடை மிகவும் அழுக்காக இருந்தது.

“யேய்… ஸ்கூலுக்கு போயிட்டு வரியா? இல்ல தெருவுல சுத்திட்டு வரியா…ஓன்னாவது போய் இன்னும் இரண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படி ஆக்கி வெச்சிருக்க… எரும, போய் யுனிபார்ம் கழடிட்டு மூஞ்சி கழிவிட்டு வா” என்று தன் முடிவையும் மீறி கோவமாக அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே பால் வாங்கிக் கொண்டு மாமனார் வந்தார். அவர் வேறு ஏதோ  வாங்கி மறைத்துக் கொண்டு வருவது போல் அவளுக்கு தோன்றியது. ஆனால், அதையெல்லாம் அவள் எப்போதும் கண்டுகொள்ளமாட்டாள். பால் பாக்கெட்டை மட்டும் வாங்கிகொண்டு சமையலறை நோக்கி சென்றாள்.

அடுப்பில் பால் காயவைத்துவிட்டு, அறைக்குள் வந்து செல்போன் எடுத்து கணவனுக்கு சிக்கிரம் வரும்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தாள். அந்த ஓரு மெசேஜ் போதும் எதற்கு என்று அவன் இந்நேரம் கண்டுபிடித்திருப்பான். செல்போனை வைக்கும்போது பதில் மெசேஜ் வந்தது. எடுத்து பார்த்தாள், உதடுகளை குவித்தவாரு இரண்டு கண்களிலும் இதயம் இருக்கும் எமோஜி உருவத்தை அனுப்பியிருந்தான். அதைப் பார்த்ததும் மெல்ல சிரித்துவிட்டு இரண்டு மெசேஜையும் டேலிட் செய்தாள்.

திரும்ப சமையலறைக்கு செல்லும்போது சரியாகப் பால் பொங்க ஆரம்பித்தது. நான்கு பேருக்கு தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து மூவருக்கும் கொடுத்துவிட்டு சமையலறை ஒட்டியுள்ள பால்கனியில் நின்றவாறு அவளும் தேநீர் குடிக்க ஆரம்பித்தாள்.

காற்று நன்றாக வீசிக்கொண்டுருந்தது. ஆடி மாசம் ஆரம்பிக்கப் போகிறது. இனி இப்படித்தான் அடிக்கும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். திடீரென்று ஏதோ சத்தம் கேட்க, அது என்னவென்று  உணர்ந்தவளாக லேசாக கோபம்கொண்டு வேகமாக  ஹாலுக்கு வந்தாள். அங்கே மகள் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தாள். வேகமாக சென்று அதை பிடுங்கி அவள் முதுகில் லேசாக அடித்தாள். அதற்கு மகள் அழலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில் வெம்பினாள்.

“செல்போன எடுக்காதன்னு எத்தனவாட்டி சொல்றது. ஏன் இப்பவே கண்ணாடி போட்டுட்டு சுத்தனுமா?”

“கொஞ்ச நேரம் தானமா” மாமனார் பேத்திக்கு துணைக்கு வந்தார்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.. நீங்க கொடுக்கர செல்லம் தான், இவ க்ளாஸுல பாதிபேரு கண்ணாடி போட்டுன்னு சுத்துதுங்க..”

அவர் உடனே அமைதியானார். பேத்தியை அழைத்து மடியில் அமரவைத்து கொண்டு டிவியை இயக்கினார். அதில் பழைய பாடலை வைத்தார். பேத்தி இன்னும் கொஞ்சம் கோவமாக வேகமாக அவர் மீதிருந்து இறங்கி அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

“யேய் தூங்கிட போற, ஹோம்வர்க் செஞ்சிட்டு சாப்ட்டு படு” என்று அதட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

வேலைகள் அனைத்தும் முடித்து மகளுக்கு உணவு கொடுத்து தூங்க வைத்துவிட்டு, மாமனாருக்கும், மாமியாருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு நேரத்தை பார்த்தால் மணி எட்டு ஆகிக்கொண்டுருந்தது. எப்படியும் எட்டரையிலிருந்து ஒன்பதுக்குள் கணவன் வந்துவிடுவான். அதற்குள் தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அறைக்கு சென்று மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளில் இருந்து ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். நேரம் எடுத்துக்கொண்டு குளித்து முடித்துவிட்டு அவள் வெளியே வருவதற்கும் கணவன் வீட்டுக்குள் வருவதற்கும் சரியாக இருந்தது. இவளை பார்த்ததுமே அவன் லேசாக சிரித்தான். மகள் ஹாலில் மாமியாருடன் தூங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே வந்தவன் அப்பாவை பார்த்து,

“சாப்ட்டியாப்பா..”

“ஆ..ஆச்சு..”

“தூங்கறதுதான..”

“இப்பதா சாப்ட்டேன்..கொஞ்ச நேரம் ஆவட்டும், நீ சட்ட பேண்ட்லாம் மாத்திட்டு வந்து சாப்பிடு..”

அவன் பதிலேதும் சொல்லாமல் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிவிட்டு கை, கால்களை கழுவி விட்டு வருவதாய் சென்று சந்தேகம் வராத அளவிற்கு லேசாக குளித்துவிட்டு  வந்து ஹாலில் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்ததுமே கையில் வைத்திருந்த டிவி ரிமோட்டை அவர் மகனிடம் கொடுத்தார், அவன் அதை வாங்கி ஒவ்வொரு சேனல்களாக மாற்றிக்கொண்டிருந்தான். அதற்குள் அவள் கணவனுக்கு தோசை சுட்டுக் கொண்டுவந்தாள். அவன் டிவியை பார்த்தவாறே மெதுவாக சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்ததும் எழுந்து சென்று கை கழிவி விட்டு வந்தான். அதற்குள் அவன் அப்பா டிவியை நிறுத்திவிட்டு கதவை சாத்திவிட்டு பாயை போட்டுக் கொண்டிருந்தார். அவன் எதையும் கவனிக்காதது போல் அறைக்குள் சென்று  கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். அவள் சமையலறையிலேயே சப்பிட்டு, சில பாத்திரங்களை மட்டும் கழுவி விட்டு லைட்டை நிறுத்திவிட்டு ஸிரோ வாட்ஸ் பல்பை மட்டும் போட்டுவிட்டு அறைக்குள் சென்றாள் அதற்குள் மாமனார் ஹாலின் லைட்டை நிறுத்திவிட்டு படுத்திருந்தார்.

அறைக்குள் சென்ற அவள் மெல்ல கதவை சாத்தினாள். அந்த கதவு சாத்தும் பொழுது எந்தவித சத்தமும் எழுப்பாது ஆனால், தாழ்ப்பாள் போடும்போது சத்தம் கேட்கும். எவ்வளவு மெதுவாக போட்டாலும் நிச்சயம் அந்த சத்தம் கேட்கும். அவள் மெதுவாக கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்து ஜன்னல் கதவுகளை அடைத்தாள் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனைக் கவனிக்காததுபோல் எதேதோ செய்துக் கொண்டிருந்தாள். அவனாகத் துவங்க வேண்டும் என்று அவள் விருப்பம். அது அவனுக்கும் தெரியும். இருந்தாலும், சிறிது நேரம் இந்த விளையாட்டு எப்பொழுதும் நடக்கும். அவன் என்னதான் நடக்கிறது என்று  அமைதியாக இருப்பான். அவளும் ஒன்றும் தெரியாததுபோல் படுத்துக்கொள்வாள். ஆனால், அவனால் ஒரு கட்டத்திற்க்கு மேல் பொறுமை காக்க முடியாது. மெல்ல அவளை நோக்கி நகருவான். இப்போதும் அதுவே நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் நடந்து அவன் மெல்ல தன் உதடுகளை அவள் உதட்டில் வைத்து  கண்களை மூடியவாறு முத்தமிட்டான். அவளும் மதியத்திலிருந்து காத்திருந்த தவிப்பை மெல்ல வெளிகொண்டுவந்திருந்தாள். அனைத்தையும் கலைக்கும்படி வீல் என்று வெளியே குழந்தை அழும் சத்தம் கேட்க இருவரும் வேகமாக எழுந்து ஆடைகளை சரி செய்துக் கொண்டு கதவை திறந்துகொண்டு வெளியே சென்றனர்.

வெளியே குழந்தை கண்களை மூடியவாறு அழுதுகொண்டிருந்தது. மாமனார் லைட்டை போட்டு என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார். அது அம்மாவை பார்த்ததும் ஓடிவந்து அவளிடம் ஏறிக்கொண்டது. அவன் என்ன என்று கேட்டால் அது எதுவும் சொல்லாமல் அழுதவாறே இருந்தது. அவள் குழந்தையை தூக்கிகொண்டு வந்து கட்டிலில் போட்டு சமாதனபடுத்தினாள். கதவை லேசாக மூடிவிட்டு பின்னாலயே அவனும் வந்து குழந்தையின் அருகில் வந்து படுத்துக் கொண்டு அவளுக்கு மெல்ல தட்டிக் கொடுத்தான். இருவரும் தட்டிக் கொடுத்ததும் அது அழுகையை நிறுத்தியது. ஆனால், தூங்கவில்லை, அழுகை சத்தம் நின்றதும் வெளியே லைட் அணைத்து படுக்கும் சத்தம் கேட்டது.

அவள் மெல்ல குழந்தைகயை தட்டிக்கொண்டிருந்தாள். அருகில் கணவன் கொட்டாவி விட்டதும் அவளுக்கு அன்றைய நாளின் முடிவு முழுவதுமாக தெரிந்துவிட்டது போல் உணர்ந்தாள். அவன் மெல்லத் தூங்கிக் கொண்டிருப்பதை அவள் குழந்தையைத் தட்டிக் கொடுத்தவாறு பார்த்துக் கொண்டுருந்தாள். குழந்தை மெதுவாக,

“அம்மா வலிக்குதும்மா”

“எங்கடா..”

அது தொடையை காண்பித்தது. அவள் கவுனை தூக்கிப் பார்த்தாள். தொடையின் நடுவில் லேசாக சிவந்திருந்தது. அவள் “என்னாச்சி” என்றாள்.

“பூச்சி கடிச்சிடுச்சி” என்றது குழந்தை.

அவள் உற்றுப் பார்த்தாள், பூச்சி கடித்ததுபோல் இல்லை. கிள்ளி விட்டது போல் இருந்தது. வெளியே யாரோ கழிவறைக்கு போகும் சத்தம் கேட்டது. அவள் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்து மீண்டும் குழந்தையை தட்டிக் கொடுத்தாள். அது, மெல்ல தூங்கிவிட்டது. அவள் கணவனும் நன்றாகவே தூங்கிக் கொண்டுருந்தான்.

அவளுக்கு எரிச்சலும், கோவமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. தூக்கம் வரவில்லை, யாரை என்ன சொல்ல. கண்களை மூடித் தூங்க முயற்சித்தாள், தூக்கம் வரவில்லை தாகம் எடுத்தது. திரும்பிப் பார்த்தாள், தண்ணீர் கொண்டு வரவில்லை. எழுந்து வந்து தாழ்ப்பாள் மேல் கை வைத்தாள். தாழ்ப்பாள் போடாமலேயே இருந்தது. மெல்ல கதவைத் திறந்து, அடுத்து இருந்த சமையலறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்தாள். சமையலறை விளக்கை போடலாம் என்று கையை நீட்டியவள் அப்படியே நின்றாள். ஹாலில் இருந்த ஸிரோ வாட்ஸ் வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தாள். மாமனாரும், மாமியாரும் லேசாக ஆடைகள் கலைந்தபடி இருக்க அணைத்துக்கொண்டு இருந்தனர். அவள் ஒரு கணம் கோவத்தின் உச்சிக்கே சென்றாள். எதாவது செய்தாக வேண்டும் போல் இருந்தது. குழந்தையின் தொடை சிவந்து இருந்த காரணமும் அவளுக்கு புரிந்தது. சில நொடிகள் அப்படியே நின்றிருந்தாள். பாத்திரத்தை உருட்டி விடலாமா அல்லது விளக்கை போடலாமா என்று சிந்தனை ஓடியது. ஒரு கணம் மனம் அனைத்தையும் நிராகரித்தது. அவர்களைப் பற்றி யோசித்தாள் அவர்களுக்கு  என்று என்ன இருக்கிறது. ஏதோ இந்த வயதிலும் இவ்வளவு அன்பாய்தானே இருக்கிறார்கள் என்று தோன்றியது. அவள் தண்ணீர் குடிக்காமலேயே மெல்ல வந்த மாதிரியே அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். தாகத்துடனே உறங்கியும் போனாள்.


-அரிசங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.