புரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்

ள்ளிக்கூடப் பூங்காவை ஒட்டிய பாதையில் உலவிக்கொண்டிருந்த ஆசிரியர் கேப்ரியேல் ஆண்டர்சன் அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நின்றார். தொலைவில் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால், வெண்பனி உறைந்திருந்த வயற்பரப்பைச் சுற்றிலும் நீல நிறச் சரிகைப் பின்னல் போல மரங்கள் விளிம்புகட்டி நின்றிருந்தன. அது ஒரு அழகான நாள். ஈரமான வெண்பனித் தரையும், பூங்காவின் சுற்றுக் கம்பிகளும் எண்ணற்ற வண்ணஜாலம் காட்டின. வசந்தத்தின் துவக்கக் காலத்துக்கே உரித்தான காற்று இதமாகவும் தூய்மையாகவும் வீசியது. கேப்ரியேல் ஆண்டர்சன் மரங்களுக்கிடையில் உலவிவரும் எண்ணத்தோடு சரிகைப் பின்னலை நோக்கி நடைபோட்டார்.

“என் வாழ்நாளில் இன்னுமொரு வசந்தகாலம்!” ஆழமாய் மூச்சை உள்ளிழுத்துவிட்டு, மூக்குக் கண்ணாடி வழியே ஆகாயத்தைப் பார்த்துச் சொன்னார். அவருக்கு அவ்வப்போது உணர்வுப்பூர்வமான கவிதைகள் தோன்றும். பின்புறம் கட்டியிருந்த கைகளில் கைத்தடியைத் தொங்கவிட்டபடி அவர் நடந்தார். சில அடி தூரம் நடந்ததுமே பூங்காவின் சுற்றுக்கம்பிகளுக்கு அப்பால் சற்று தூரத்தில் சில இராணுவ வீரர்களும் குதிரைகளும் குழுமியிருப்பதைப் பார்த்தார். வெண்பனிப் பின்னணியில் அவர்களுடைய சாம்பல் நிறச் சீருடைகள் மங்கலாகத் தெரிந்தன. ஆனால் அவர்களுடைய உடைவாள்களும், குதிரைகளின் உலோகக் கழுத்துப் பட்டைகளும் வெளிச்சம்பட்டு மின்னிக்கொண்டிருந்தன. குனிந்திருந்த குதிரைகளின் கால்கள் பனியில் முன்னும் பின்னுமாகத் தடுமாறிக்கொண்டிருந்தன.

அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று ஆண்டர்சன் வியந்தார். அவர்களுடைய பணியின் தன்மை குறித்த சிந்தனை சட்டென்று அவர் நினைவில் மின்னலாய் வெட்டியது. காரணத்தை ஆராயும் முன்பே அது ஒரு கீழ்த்தரமான காரியமாகத்தான் இருக்கும் என்று உள்ளுணர்வு யூகித்தது. வழக்கத்துக்கு மாறான, படுபயங்கரமான ஏதோ ஒன்று அங்கு நடக்கப்போகிறது. அதே உள்ளுணர்வு, அவரை அந்த வீரர்களின் கண்பார்வையிலிருந்து தப்பி மறைவாய் இருக்குமாறும் எச்சரித்தது. அவர் சட்டென்று இடப்பக்கமாகத் திரும்பி, மண்டிபோட்டு, இளகியிருந்த பனியின்மீது மெதுவாக ஊர்ந்து, அங்கிருந்த சிறிய வைக்கோல் போருக்குப் பின்னால் சென்று பதுங்கினார். தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கிருந்து அவரால் அந்த வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முடியும்.

அவர்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் இருந்தனர். சாம்பல் நிற மேலங்கியோடு கட்டை குட்டையாக இருந்த இளம் அதிகாரியை அவர் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி பெல்ட்டைக் கொண்டு எளிதில் பார்க்கமுடிந்தது. அவருடைய முகம் செக்கச் செவேல் என்று இருந்தது. அவ்வளவு தொலைவிலிருந்தபோதும் கூட ஆண்டர்சனால் அவரது, செந்நிற முகத்துக்கு மாறாக வெள்ளை நிறத்தில் காணப்படும், விநோதமான, லேசாகத் துருத்திய மீசையையும் புருவங்களையும் பார்க்க முடிந்தது. அதிகாரியின் கரகரப்பான குரலின் உடைந்த ஒலித் துணுக்குகள், மறைவிலிருந்தபடி, கவனத்தை அங்கு ஊன்றியிருந்த ஆசிரியரின் காதுகளை வந்தடைந்தன.

“என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். யாருடைய அறிவுரையும் எனக்குத் தேவையில்லை” இடுப்பில் கைகளை ஊன்றி நின்ற அதிகாரி, சலசலத்த படைவீரர் குழாமுக்குள் யாரையோ பார்த்துக் கத்தினார். “எப்படிப் புரட்சி செய்வது என்று நான் உனக்குக் கற்றுத் தருகிறேன், இழிந்த பிறவியே!”

ஆண்டர்சனின் இதயம் வேகமாய்த் துடித்தது. “கடவுளே! இது சாத்தியம்தானா?” திடீரென்று குளிர்க்காற்று தாக்கியதைப் போன்று அவரது தலை ஜில்லிட்டுப்போனது.

“ஆபிஸர்! இதைச் செய்யும் உரிமை உங்களுக்குக் கிடையாது. இது நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது. நீங்கள் நீதிபதி கிடையாது. இது திட்டமிட்ட கொலை மட்டுமே. இது ஒன்றும்…” வீரர்களின் மத்தியிலிருந்து மென்மையான, மறுப்புத் தெரிவிக்கும் குரலொன்று எழுந்தது.

“அமைதி!” வன்மம் தொண்டையை அடைக்க, “நான் உனக்கு நீதிமன்றத்தைக் காட்டுகிறேன், இவானோவ். நான் சொன்னதைச் செய்”

அதிகாரி உறுமிவிட்டு பாதணியின் குதிமுள்ளால் தான் அமர்ந்திருந்த குதிரையை உசுப்பினார். குதிரை நடன அடிகளை எடுத்துவைப்பதைப் போன்று வெகு கவனமாக அடியெடுத்துவைப்பதை கேப்ரியேல் ஆண்டர்சன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். விறைத்து நின்ற அதன் காதுகள் எல்லாத் திசையையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்துக்கு வீரர்களின் நடுவே சிறு சலசலப்பும் ஆரவாரமும் உண்டாயின. பிறகு கருப்பு  உடையணிந்த மூன்று பேரை நடுவில் விட்டுவிட்டு மற்றவர்கள் அனைவரும் சற்று விலகி நின்றனர். மூவரில் இருவர் உயரமாக இருந்தனர். ஒருவன் குள்ளமாகவும் நோஞ்சானாகவும் இருந்தான். குள்ளமாய் இருந்தவனின் மெல்லிய தலைமுடியை ஆண்டர்சனால் பார்க்க முடிந்தது. இரண்டு பக்கமும் ஒட்டிக்கொண்டிருந்த இளஞ்சிவப்பு நிறக் காதுகளையும் கூட அவரால் பார்க்க முடிந்தது.

அங்கே என்ன நடக்கப்போகிறது என்பது அவருக்கு இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆனால் அசாதாரணமான, கொடூரமான அது, கனவாக இருக்கவேண்டும் என அவர் விரும்பினார்.

“பனி, வயல், வனம், ஆகாயம் யாவுமே அழகாகவும் பிரகாசமாகவும் இருக்கின்றன. வசந்தகாலத்தின் சுவாசம் யாவற்றின் மீதும் படிந்திருக்கிறது. ஆனாலும் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள். இது எப்படி நடக்க முடியும்? சாத்தியமே இல்லை” அவர் சிந்தனைகள் குழம்பிக்கிடந்தன. ஒருவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றைப் பார்க்கவோ, கேட்கவோ, அனுபவிக்கவோ கூடாத ஒன்றை, திடுதிப்பென்று பார்த்து, கேட்டு, அனுபவிக்க நேர்ந்தால் அவன் எப்படிப் பித்துப் பிடித்த நிலைக்குப் போவானோ அப்படியொரு உணர்வு அவருக்குள் உண்டானது.

கருப்பு உடையணிந்திருந்த மூவரும் சாலையோரத் தடுப்புக் கம்பியை ஒட்டி வரிசையாக நின்றிருந்தனர். இருவர் மிக நெருக்கமாக நின்றிருந்தனர். குள்ளமாக இருந்தவன் சற்றுத் தள்ளி நின்றிருந்தான்.

“ஆபிஸர்! கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஆபிஸர்!” ஒருவன் அவலக்குரலில் கத்தினான்.

அது யார் என்று ஆண்டர்சனுக்குத் தெரியவில்லை.

எட்டு வீரர்கள், குதிமுள் பாதணியும், உடைவாளும் எக்குத்தப்பாகச் சிக்க, அவசர அவசரமாகக் குதிரைகளை விட்டிறங்கினர். திருட்டுத்தனத்தில் ஈடுபடுவதைப் போன்ற அவசரம் அவர்களிடம் அப்பட்டமாகத் தெரிந்தது. மூன்று கருப்பு உருவங்களிடமிருந்தும் சில அடி தொலைவில் வரிசையாக நின்று துப்பாக்கிகளைச் சரியாகப் பிடித்துக் குறிபார்க்க அவர்களுக்குச் சற்று அவகாசம் எடுத்தது. அப்படிச் செய்யும்போது ஒரு வீரனின் தலையிலிருந்து தொப்பி கீழே விழுந்துவிட்டது. அதில் படிந்திருந்த பனித்துகளைத் தட்டக்கூடச் செய்யாமல் அப்படியே எடுத்துத் தலையில் பொருத்திக்கொண்டான்.

அதிகாரியின் குதிரை ஒரே இடத்தில் அடியெடுத்து வைத்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் காதுகள் நிமிர்ந்து கூராக இருந்தன. மற்றக் குதிரைகளும், சுற்றுப்புற ஒலிகளைத் துல்லியமாய்ச் செவிமடுக்கும் வகையில் செவிகளை விறைப்பாய் வைத்திருந்தாலும், சாதுர்யமிக்க தங்கள் தலைகளை ஒரு பக்கமாகச் சாய்த்து, கருப்பு உடையணிந்த மனிதர்களையே பார்த்தபடி ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன.

“அந்தப் பையனையாவது விட்டுவிடுங்கள்” மற்றொரு குரல் காற்றைத் துளைத்து ஒலித்தது. “ஏன் ஒரு குழந்தையைக் கொல்ல வேண்டும்? அநியாயம் செய்கிறீர்களே! அந்தக் குழந்தை என்ன செய்தது?”

அந்தக் குரலை அமுக்கியது அதிகாரியின் இடிமுழக்கக் குரல். “இவானோவ்! நான் உன்னை என்ன செய்யச் சொன்னேனோ அதைச் செய்!” சிவப்புக் கம்பளத் துண்டைப் போன்று அவருடைய முகம் சிவந்திருந்தது. தொடர்ந்து வந்த அதிபயங்கரக் காட்சி வெறித்தனமாகவும் வெறுப்பின் உச்சக்கட்டமாகவும் இருந்தது. கருப்பு உடையில் குள்ளமாய், மெல்லிய தலைமயிரோடும், இளஞ்சிவப்பு நிறச் செவிகளோடும் இருந்த அந்தக் குழந்தை உருவம், கீச்சென்ற காதைக் கிழிக்கும் வீறிடல்களோடு ஒரு பக்கமாய்ச் சரிந்துவிழுந்தது. உடனடியாக, இரண்டு மூன்று வீரர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. சிறுவன் திமிறத் தொடங்கியதும் இன்னும் இரண்டு வீரர்கள் ஓடிவந்தார்கள்.

“ஆவ்…ஆவ்..ஆவ்…ஆவ்…” சிறுவன் கதறினான். “என்னை விடுங்க.. என்னை விடுங்க… ஆவ்…ஆவ்…”

கொல்வதற்காகப் பிடிபட்ட குட்டிப்பன்றியின் கதறலைப் போன்று அச்சிறுவனின் அபய அலறல் காற்றைத் துளைத்தது. சட்டென்று அவன் அமைதியானான். யாரோ அவனை அடித்திருக்க வேண்டும். அடக்குமுறையால் உண்டாக்கப்பட்ட அமைதி. சிறுவன் முன்னோக்கித் தள்ளப்பட்டான். தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆண்டர்சன் மறுபடியும் நடுங்கத் தொடங்கினார். கனவில் காண்பதைப் போன்று தெளிவாகவும் தெளிவில்லாமலும், சுத்தமான பிரகாசமான அந்த இடத்தில் மின்னிய மங்கலான தீப்பொறிகளையும் மெலிதான புகையையும் பின்னணியில் சரிந்து விழும் இரண்டு கரிய உருவங்களையும் பார்த்தார். வீரர்கள் அந்த உடல்களைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அவசரமாகத் தங்கள் குதிரைகளின் மீதேறிப் புறப்பட்டதை அவர் பார்த்தார். தரித்திருந்த ஆயுதங்கள் கலகலக்க, குதிரைகளின் குளம்படிகள் தடதடக்க, சேறும் சகதியுமான சாலையில் அவர்கள் பாய்ந்து சென்றதை அவர் பார்த்தார்.

அத்தனையும் பார்த்த அவர், அப்போது சாலையின் நடுவில் தான் நின்றிருப்பதையும் பார்த்தார். வைக்கோல் போரின் மறைவிலிருந்து எப்போது, ஏன் வெளியில் குதித்தார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் மரணபீதியில் வெளிறிக்கிடந்தார். அவருடைய முகத்தில் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது. உடல்ரீதியாகப் பெரும் உபாதை உண்டாகி அவரைச் சித்திரவதை செய்தது. அந்த உணர்வின் தன்மை இன்னதென அவரால் அறிந்துகொள்ள இயலவில்லை. குமட்டலும், நடுக்கமுமாகத் தீவிர நோயின் பிடியில் சிக்கியதைப் போன்று இருந்தது. வீரர்கள் அனைவரும், மரங்களடர்ந்த பாதையின் வளைவில் திரும்பியதும், மக்கள், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நோக்கி விரைந்தோடினார்கள். அதுவரையிலும் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்றே தெரியவில்லை. இறந்தவர்களின் உடல்கள், சாலையின் மறுபுறம் தடுப்புக் கம்பியை ஒட்டி, கால்களால் மிதிபடாத, மின்னி ஒளிரும், தூய்மையான உறைபனியின் மீது கிடந்தன. இரண்டு ஆண்களும் ஒரு சிறுவனும் என மூன்று உடல்கள். சிறுவனின் மெல்லிய நீளமான கழுத்து பனிக்குள் புதைந்திருந்தது. சிறுவனுக்கு அடுத்தாற்போல் கிடந்த ஆளின் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. குருதி வெள்ளத்தில் அவன் குப்புறக் கிடந்தான். மூன்றாமவன் பெருத்த உடம்பும் கருப்பு நிறத் தாடியும், பெரிய, திண்ணென்ற கைகளுமாய் இருந்தான். குருதிக்கறை படிந்த பனித்தரையில் கைகளை நன்றாக நீட்டி அவ்வளவு பெரிய உடலைக் கிடத்தியிருந்தான். சுடப்பட்ட அந்த மூவரும் வெண்பனியில் கரும் உருவங்களாய் அசைவற்றுக் கிடந்தார்கள். குறுகிய சாலையின் ஓரத்தில் இயக்கமற்றுக் கிடந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தைத் தொலைவில் இருக்கும் எவரும் அறிய வழியில்லை. ஆயினும் மக்கள் அங்கே கூடியிருந்தார்கள்.

அன்று இரவு, பள்ளி வளாகத்திலிருந்த தன்னுடைய சிறிய அறையிலிருந்த கேப்ரியேல் ஆண்டர்சன் வழக்கம்போல் கவிதைகள் எழுதவில்லை. அவர் ஜன்னலுக்கு அருகில் வந்து நின்று மூடுபனி படர்ந்த நீல வானத்தையும் தூரத்தில் தெரிந்த வெளிர் வட்டநிலவையும் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். மண்டைக்குள் எதையோ இறக்கிவைத்தாற்போல் அவருடைய எண்ணமும் சிந்தனையும் குழப்பமாகவும், இருளாகவும், பாரமாகவும் இருந்தன. இருண்ட தடுப்புக் கம்பியும், மரங்களும், ஆளரவமற்ற பூங்காவும் மங்கலான நிலவொளியில் தெளிவற்ற கோட்டோவியமாய்த் தெரிந்தன. அந்த மூன்று பேர், இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை – அவர்களின் உருவங்கள் கூட அவர் கண்களுக்குத் தெரிவது போல் தோன்றியது. சாலையோரத்தில், வெறுமையும் அமைதியும் நிலவும் வயற்பரப்பில் கிடக்கும் அவர்கள், தொலைதூர குளிர் நிலவை, இப்போது அவர் தமது உயிர்ப்புள்ள கண்களால் பார்ப்பதைப் போலவே, அவர்களும் தங்களுடைய உயிரற்ற, வெண்ணிற விழிகளால் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.

“ஒரு நாள் அந்தக் காலம் வரும். அப்போது மக்கள் பிறரால் கொல்லப்படுவது முற்றிலும் சாத்தியமற்றுப் போகும்” என்று அவர் நினைத்தார். இவர்களைக் கொன்ற அந்த வீரர்களும் அதிகாரிகளும் கூடத் தங்கள் தவற்றை உணர்ந்துகொள்ளவும், அவர்களைக் கொல்வது என்பது தங்களுக்கு எப்படித் தேவையான, முக்கியமான, பிடித்தமான விஷயமோ, அப்படித்தான் கொல்லப்பட்டவர்களுக்கும் அது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியான காலமும் வரும். “ஆமாம், அந்தக் காலம் வரும். அப்போது அவர்களுக்குப் புரியும்” கண்கள் பனிக்க அவர் உரத்த குரலில் உறுதியாகச் சொன்னார். வெளிர் வட்டநிலவு அவரது கண்களின் ஈரத்தால் கரைந்துபோனது. துயருடனும், பார்வையற்றும் நிலவில் விழிகுத்திக் கிடக்கும், பாதிக்கப்பட்ட அந்த மூன்று பேரையும் நினைக்குந்தோறும் அவரது நெஞ்சைக் கழிவிரக்கம் குத்தித் துளைத்தது. ஆத்திரத்தின் கூர் கத்தி அவரைக் கூறுபோட்டது. ஆனால் கேப்ரியேல் ஆண்டர்சன், “அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென அறியாதிருக்கிறார்கள்” என்று சன்னமான குரலில் மென்மையாகச் சொல்லி மனதைச் சாந்தப்படுத்தினார். அந்த பண்டைய மரபுச் சொற்றொடர் அவருடைய கோபத்தையும் உள்ளக் கொந்தளிப்பையும் கட்டுப்படுத்தும் மனோபலத்தை அவருக்கு அளித்தது.

II

அன்றைய தினம் பிரகாசமாகவும் பளிச்சென்றும் இருந்தது. ஆனால் ஏற்கனவே வசந்த காலம் ஆரம்பித்துப் போய்க்கொண்டிருந்தது. ஈர மண்ணில் வசந்தத்தின் வாசனை வீசியது. இளகிய பனியின் கீழே எங்குப் பார்த்தாலும் தெளிவான குளிர்ந்த நீர் ஓடியது. மரக்கிளைகள் யாவும் உறைகுளிரிலிருந்து விடுபட்டு, காற்றில் ஆடி அசைந்துகொண்டிருந்தன. ஊரைச் சுற்றிப் பல மைல்களுக்குத் தெள்ளிய நீல வானம் விரிந்து பரவியிருந்தது. ஆனாலும் வசந்த காலத்தின் பொலிவும் மகிழ்வும் அந்தக் கிராமத்தில் இல்லை. அவை கிராமத்துக்கு வெளியே வயல்வெளி, காடு, மலை என மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் மட்டுமே இருந்தன. ஊருக்குள் காற்று, கொடுங்கனாவைப் போன்று பயங்கரமாகவும் செறிவாகவும் திணறடிப்பதாகவும் இருந்தது. கேப்ரியேல் ஆண்டர்சன் சாலையில் கூடியிருந்த இருண்ட, துயரார்ந்த, ஏதோ சிந்தனைவயப்பட்டிருந்த கூட்டத்தின் நடுவே தலையை நீட்டிப் பார்த்தார். அங்கே ஏழு குடியானவர்களுக்குச் சவுக்கடி கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அவர்கள் இளக்கமான பனித்தரையின் மீது நின்றிருந்தார்கள். அவர்களை அவருக்கு நீண்ட நெடுங்காலமாகத் தெரியும் என்பதால் கேப்ரியேல் ஆண்டர்சனால் தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ளவே இயலவில்லை. இப்போது என்ன நடக்கவிருக்கிறதோ, அந்த அவமானகரமான, கொடுமையான, காலத்தால் அழிக்கவியலாத அந்த விஷயம் நடந்து அவர்கள் இந்த உலகத்தின் மற்ற அனைவரிடமிருந்தும் விடுபடவிருக்கிறார்கள். கேப்ரியேல் ஆண்டர்சன் என்ன உணர்ந்தார் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள இயலாது. அதைப் போலவே அவர்கள் என்ன உணர்ந்தார்கள் என்பதை அவராலும் உணர்ந்துகொள்ள இயலாது.

அவர்களைச் சுற்றிலும் வீரர்கள், பெரிய போர்ப்புரவிகளின் மீது கம்பீரமாகவும் அழகாகவும் அமர்ந்திருந்தனர். குதிரைகள், கூர்மதி மிக்கத் தலைகளை அசைத்து, புள்ளிவிழுந்த முகங்களை மெதுவாக அப்படியும் இப்படியுமாய்த் திருப்பி, கேப்ரியேல் ஆண்டர்சனை வெறுப்புப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தன. கொடூரமான, அருவருப்பான காட்சியைக் காணவிருக்கும் அவர் எதுவும் செய்யவில்லை. எதையும் செய்யும் துணிவும் அவருக்கில்லை. அப்படித்தான் கேப்ரியேல் ஆண்டர்சனுக்குத் தோன்றியது. நகர முடியாமல், கத்த முடியாமல், முனகவும் இயலாத வகையில் இரண்டு பெரும் பனிப்பாறைகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டதைப் போன்று மரத்துப்போன உணர்வும் தாளமுடியாத அவமானமும் அவரைப் பீடித்தன.

வீரர்கள் முதல் ஆளை அழைத்துச் சென்றார்கள். கேப்ரியேல் ஆண்டர்சன் விசித்திரமான, மன்றாடுகிற, நம்பிக்கையிழந்த அவரது தோற்றத்தைப் பார்த்தார். அவருடைய உதடுகள் அசைந்தன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை. அவரது கண்கள் அங்குமிங்கும் அலைந்தன. பைத்தியக்காரனின் கண்களில் தெரிவது போன்றதொரு பிரகாச ஒளிக்கீற்று அந்தக் கண்களில் தெரிந்தது. என்ன நடக்கிறது என்பது அவரது புத்தியில் உறைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.    

அமைதியும் ஆத்திரமும் மாறி மாறிக் காட்சியளித்த அம்முகத்தைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அவர்கள் அவரை பனிக்குள் குப்புறத்தள்ளிய காட்சி இரக்கமற்ற, கொடூரமான, மிகக்கேவலமான காட்சியாக இருந்தபோதும், குடியானவரின் கனல் வீசும் கண்களுக்குப் பதிலாகப் பளபளக்கும் வெற்று முதுகைப் பார்க்க நேர்ந்த ஆண்டர்சனுக்கு அதுவே சற்று ஆசுவாசத்தைத் தந்தது. சிவப்புத் தொப்பி அணிந்த, பெரிய சிவந்த முகத்தைக் கொண்டிருந்த வீரன் ஒருவன் குடியானவரின் அருகில் சென்றான். கீழே கிடக்கும் உடலை உவகை பொங்கப் பார்த்துவிட்டுத் தெளிவான குரலில் உரக்கச் சொன்னான், “சரி, நடக்கட்டும், கடவுள் ஆசியோடு!”

ஆண்டர்சனின் கண்களுக்கு அந்த வீரர்கள், வானம், குதிரைகள், மக்கள் கூட்டம் எதுவுமே தெரியவில்லை. குளிர், திகில், அவமானம் எதையும் அவரால் உணரமுடியவில்லை. சாட்டைகளின் விளாசல் சத்தமோ, வலியாலும் இயலாமையாலும் எழும் அவல ஓலங்களோ எதுவுமே அவர் காதில் விழவில்லை. ஒரு இடம் விடாமல் வெள்ளை ஊதா வரிகளோடு வீங்கிக் கிடக்கும் அந்த வெற்று முதுகை மட்டுமே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெற்று முதுகு, மனித உறுப்பின் சாயலை இழந்துகொண்டிருந்தது. பீறிட்ட இரத்தம் ஆங்காங்கே திட்டு திட்டாய், சொட்டு சொட்டாய்த் தெறித்து, பின் சிற்றோடைகளாக மாறி உருகிய வெண்பனியில் ஓடின. கீழே விழுந்துகிடக்கும் அம்மனிதன் எழுந்து நின்று, தன் உடல் நார்நாராய்க் கிழிக்கப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்ணுற்ற அனைவரையும் எதிர்கொள்ளும் அந்தத் தருணம் கேப்ரியேல் ஆண்டர்சனின் மனக்கண்ணில் தோன்றியதும் அவரது உடல் நடுநடுங்கியது. அவர் கண்களை மூடிக்கொண்டார். திறந்தபோது சீருடையும் சிவப்புத் தொப்பியும் அணிந்த வீரர்கள் நால்வர், இரண்டாமவரைப் பனியில் பிடித்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அவமானகரமான, கொடுமையான, அப்பட்டமான கேலிக்கூத்தான துயரார்ந்த காட்சியாய், அவனுடைய முதுகுத் தோலும் உரிக்கப்பட்டது. பிறகு மூன்றாமவர், அடுத்து நான்காமவர்… காட்சிகள் தொடர்ந்து இறுதியில் முடிவுக்கு வந்தன.

ஈரமான, உருகிய பனியில் நின்றபடி, தலையை உயர்த்தி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த கேப்ரியேல் ஆண்டர்சன், ஒரு வார்த்தை கூடப் பேசாத போதும் அவரது உடல் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்த உடலும் வியர்த்துக் கொட்டியது. அவமான உணர்வு அவரது உள்ளும் புறமும் ஊடுருவிப் பரவியது. அவர்களுடைய பார்வையில் படாமல் தப்பிக்கத் தூண்டும் இழிந்த உணர்வு அது. அப்போதுதான் அவர்கள் அவரை, கேப்ரியேல் ஆண்டர்சனைப் பிடிக்க மாட்டார்கள். பிடித்து, பனித்தரையில் தள்ளி, வெற்றுடம்போடு கிடத்தமாட்டார்கள்.

வீரர்கள் ஆத்திரமும் ஆவேசமுமாய் இருந்தார்கள். குதிரைகள் தலைகளை ஆட்டின. சாட்டையின் சொடுக்கல் ஓசை காற்றைக் கிழித்தது. அவமதிக்கப்பட்ட அந்த நிர்வாண மானுடப் பிண்டம் ஊதிப் புடைத்து, கிழிந்துத் தொங்கி, குருதிவெள்ளத்தில் அரவத்தைப் போல் சுருண்டது. அந்த வசந்த நாளின் தூய்மையான காற்றில் கிராமம் முழுவதும் சூளுரைகளும் ஆவேசக் கூச்சல்களும் நிறைந்திருந்தன.

நகரசபையின் படிக்கட்டுகளில் ஐந்து பேரின் முகங்களை ஆண்டர்சன் பார்த்தார். ஏற்கனவே இப்படியான கொடூர அவமானத்துக்கு ஆளான முகங்கள் அவை. ஆண்டர்சன் சட்டென்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். இதையெல்லாம் பார்த்த பிறகு ஒருவன் உயிரோடு இருக்கவே கூடாது என்று எண்ணினார்.

III

அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். பதினைந்து வீரர்கள், ஒரு துணை அதிகாரி மற்றும் தாடியற்ற இளம் அதிகாரி. அந்த அதிகாரி கணப்புத் தீயின் முன்பு கிடந்தபடி தீச்சுவாலைகளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார். வீரர்கள் வாகனத்தில் ஆயுதங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சாம்பல் உருவங்கள் பனி உருகிய கருந்தரையில் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன. எரியும் நெருப்பில் நீட்டிக் கொண்டிருந்த மரக்கட்டைகளில் அவ்வப்போது தடுக்கி தடுமாறிக்கொண்டிருந்தன.

மேலங்கி அணிந்து, கைத்தடியை பின்னால் பிடித்தபடி கேப்ரியேல் ஆண்டர்சன் அவர்களை நெருங்கினார். மீசை வைத்துச் சற்றுப் பருமனாக இருந்த துணை அதிகாரி, அவரைப் பார்த்தவுடன் சட்டெனக் கணப்பை விட்டு எழுந்து வந்தார். “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” பதற்றத்துடன் கேட்டார்.

மக்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது, அழித்தொழிப்பது இதுவே வேலையாக இருப்பதால் அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் பயம் உண்டாகிறது என்பது அவர் கேட்கும் தொனியிலிருந்தே அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஆபிஸர்! எனக்குத் தெரியாத ஒருவர் இங்கே வந்திருக்கிறார்!” என்று அதிகாரியை அழைத்தார்.  

அதிகாரி எதுவும் பேசாமல் ஆண்டர்சனைப் பார்த்தார்.

ஆண்டர்சன் கம்மிய குரலில், “ஆபிஸர்! என் பெயர் மிக்கெல்சன். நான் ஒரு வியாபாரி. என்னுடைய வியாபார நிமித்தம் நான் இந்த ஊருக்குள் போய்க்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை வேறு யாரோ என்று தவறாக நினைத்துவிடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.”

“பிறகு எதற்காக இங்கே வந்து தலையைக் காட்டுகிறாய்?” அதிகாரி ஆத்திரத்துடன் கேட்டுவிட்டுத் திரும்பினார்.

“வியாபாரி!” ஒரு வீரன் ஏளனத்தோடு சொன்னான், “இவரை, இந்த வியாபாரியை சோதனைபோட வேண்டும். அப்போதுதான் இரவில் இப்படி இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருக்க மாட்டார். இவருக்குத் தேவையானது இப்போது ஒன்றே ஒன்றுதான். தாடையில் ஓங்கி ஒரு குத்து!”

“இவர் சந்தேகத்துக்கு உரியவராக இருக்கிறார், ஆபிஸர்!” துணை அதிகாரி சொன்னார். “இவரைக் கைது செய்வதுதான் நல்லது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஆபிஸர்?”

“வேண்டாம். அவர்களைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. வீணாய்ப் போனவர்கள்!” அதிகாரி அலுப்புடன் சொன்னார்.

கேப்ரியேல் ஆண்டர்சன் எதுவும் பேசாமல் அங்கேயே நின்றிருந்தார். கணப்புத்தீயின் ஒளியில் அவருடைய கண்கள் வித்தியாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தன. இரவில், வெட்டவெளியில், இராணுவ வீரர்களுக்கு மத்தியில், மேலங்கியுடனும், கையில் கைத்தடியுடனும் நெருப்பு வெளிச்சத்தில் ஒளிரும் மூக்குக் கண்ணாடியுடனும் நின்றிருந்த அவருடைய கட்டையான, கட்டுறுதியான, தூய்மையான, நேர்த்தியான தோற்றம் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தது.

வீரர்கள் அவரை விட்டு விலகிச் சென்றனர். கேப்ரியேல் ஆண்டர்சன் சற்று நேரத்துக்கு அசையாமல் அப்படியே நின்றிருந்தார். பிறகு அவர் திரும்பி அங்கிருந்து வேகமாக நடந்து இருளில் மறைந்துபோனார். நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. காற்று மிகவும் குளிர்ந்து வீசியது. இருளிலும் புதர்களின் விளிம்புகள் தெளிவாகத் தெரிந்தன. கேப்ரியேல் ஆண்டர்சன் மறுபடியும் இராணுவ முகாமுக்குப் போனார். ஆனால் இந்தமுறை மறைவாக. புதர்களுக்கு இடையில் மிகவும் தணிவாகக் குனிந்து சென்றார். அவருக்குப் பின்னால் நிழல்களைப் போல ஊர்மக்கள் தாங்களும் அமைதியாகவும், கவனமாகவும் ஊர்ந்து புதர்களைக் கடந்து சென்றார். கேப்ரியேல் ஆண்டர்சனின் வலப்பக்கம் சற்று உயரமான ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் நடந்துவந்தான்.

மலையின் மேலே ஒரு படைவீரனின் உருவம் நிழலுருவமாய்த் தெரிந்தது. அங்கே ஒருவன் காவலுக்கு இருப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அணைந்துகொண்டிருக்கும் நெருப்பின் ஒளியில் அவனுடைய உருவம் மங்கலாகத் தெரிந்தது. கேப்ரியேல் ஆண்டர்சன் அவனை அடையாளம் கண்டுகொண்டார். அவரைச் சோதனைபோட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவன் அவன்தான். ஆண்டர்சனின் மனதில் எந்தக் கலக்கமும் இல்லை. உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனைப் போன்று அவருடைய முகம் இறுக்கமாகவும், சலனமற்றும் இருந்தது. கணப்புத்தீயைச் சுற்றி வீரர்கள் கை கால்களை நீட்டிப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். துணையதிகாரி மட்டும் உட்கார்ந்த வாக்கில் முழங்கால்களுக்குள் தலையைக் கவிழ்த்திருந்தார். ஆண்டர்சனின் பக்கத்திலிருந்த ஒல்லியான உயரமான மனிதன் துப்பாக்கியை உயர்த்தி விசையை இழுத்தான். பளீரென்று கண்ணைப் பறிக்கும் ஒளியுடனும் காதைக் கிழிக்கும் சத்தத்தோடும் துப்பாக்கி வெடித்தது. காவலுக்கு நின்றவன் கைகளால் மார்பைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்து உட்கார்ந்தான். எல்லாத் திசைகளிலிருந்தும் ஒருமித்த உறுமலோடு தீப்பொறிகள் பறந்தன. குதித்தெழுந்த துணை அதிகாரி நேராக நெருப்புக்குள் விழுந்தார். பிசாசுகளைப் போல அங்கும் இங்கும் அலைந்த வீரர்களின் சாம்பல் நிற உருவங்கள் கைகளை விரித்த நிலையில், தரையில் விழுந்து துடித்தன. இளம் அதிகாரி, விசித்திரமான, பயந்துபோன பறவையைப் போல ஆண்டர்சனைக் கடந்து ஓடினார். சட்டென்று எதையோ நினைத்துக்கொண்டவர் போல ஆண்டர்சன் தன் கைத்தடியை ஓங்கினார். தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அதிகாரியின் மண்டையில் ஒரே போடாகப் போட்டார். அதன் பின் விழுந்த ஒவ்வொரு அடியும் மிக மோசமான அடியாக இருந்தது. இரண்டாவது அடிக்குப் பிறகு அதிகாரி வளைந்து ஓடி புதர் தடுக்கி கீழே உட்கார்ந்தார். குழந்தைகள் செய்வது போல இரு கைகளாலும் தலையை மறைத்துக்கொண்டார். யாரோ ஒருவன் ஓடிவந்து, கைத்துப்பாக்கியால் ஆண்டர்சனே சுடுவதுபோல அவரைச் சுட்டான். அதிகாரி நிலைகுலைந்து தலை தரையில் மோத கீழே விழுந்தார். கொஞ்ச நேரத்துக்கு அவருடைய கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. பிறகு சுருண்டு அமைதியானார்.

துப்பாக்கிச்சூடுகள் முற்றுப் பெற்றன. வெள்ளை முகங்களைக் கொண்ட கருப்பு மனிதர்கள் இருட்டில் முன்னேறிச் சென்று, இறந்துகிடக்கும் வீரர்களின் வசமிருந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினர். ஆண்டர்சன் அனைத்தையும் இறுக்கத்தோடும், பிசகாத கவனத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அவர், நெருப்பில் விழுந்துகிடந்த துணை அதிகாரியின் கால்களைப் பிடித்து இழுத்து அவரது உடலை நெருப்பிலிருந்து வெளியே எடுத்துப் போட முயற்சி செய்தார். ஆனால் அவரால் இழுக்க முடியாத அளவுக்கு கனமாக இருந்ததால் முயற்சியைக் கைவிட்டார்.  

IV

ஆண்டர்சன் நகரசபையின் படிக்கட்டில் அசைவற்று அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடி, கைத்தடி, மேலங்கி மற்றும் கவிதைகள் என இருந்த, கேப்ரியேல் ஆண்டர்சனாகிய தான், எப்படிப் பொய் சொல்லி, அந்தப் பதினைந்து பேரையும் ஏமாற்றினார் என்பதை யோசித்துப் பார்த்தார். நினைக்கும்போதே பயங்கரமாக இருந்தது. ஆனால் எந்த விதக் கழிவிரக்கமோ, அவமானமோ, குற்ற உணர்ச்சியோ அதனால் அவருக்கு உண்டாகவில்லை. அவர் ஒருவேளை விடுவிக்கப்பட்டால், மூக்குக் கண்ணாடியும் கவிதைகளுமாய் மறுபடியும் நேராக அதே விஷயத்தில்தான் ஈடுபடுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சுய பரிசோதனை முயற்சியில் இறங்க விரும்பினார். ஆனால் அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் கனத்துக் குழம்பி இருந்தன. தலையில் இரண்டே இரண்டு அற்ப அடிகளை வாங்கி கொலையான அதிகாரியைக் காட்டிலும், தூரத்து நிலவை உயிரற்றக் கண்களால் வெறித்த நிலையில் சாலையோரம் பனியில் கிடந்த அந்த மூன்று பேரின் நினைவு அவருக்கு மிகுந்த வலியைத் தந்தது. அவர் தன்னுடைய மரணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. எல்லாமும் ஏற்கனவே முடிந்துவிட்டதைப் போன்று அவருக்குத் தோன்றியது. சூன்யமாய் அவரை விட்டுவிட்டு, மொத்தமாய் விலகிவிட்ட அதைப் பற்றி இப்போது யோசிக்கக்கூடாது. அவர்கள் அவரைத் தோள்களைப் பற்றி இழுத்தனர். அவர் எழுந்தார். தங்கள் வறண்ட தலைகளைக் கொண்ட முட்டைக்கோஸ் தோட்டத்தின் வழியாக அவரை வேகமாக இழுத்துச் சென்றபோது அவருக்குள் எந்தச் சிந்தனையும் இல்லை. சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சாலையோரத் தடுப்புக் கம்பியில் இரும்புக் கம்பத்தை ஒட்டி நிறுத்தப்பட்டார். கேப்ரியேல் ஆண்டர்சன் மூக்குக் கண்ணாடியைச் சரியாக அணிந்துகொண்டார். கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டார். தலையைப் பக்கவாட்டில் லேசாகச் சாய்த்தபடி, நிமிர்ந்து நேராக நின்றார். கடைசிக் காட்சியாக, அவருடைய தலை, மார்பு, வயிறு ஆகியவற்றைக் குறிபார்க்கும் துப்பாக்கிகளையும், நடுங்கும் உதடுகளோடு வெளிறிய முகங்களையும் பார்த்தார். அவருடைய நெற்றியைக் குறிபார்த்திருந்த ஒரு துப்பாக்கி, அவரைச் சுட்டுவிட்டுச் சட்டென்று தாழ்ந்ததை அவர் தெளிவாகப் பார்த்தார். இனிமேல் இந்த உலகம் கிடையாது, இந்த வாழ்க்கை கிடையாது என்பது போன்ற விசித்திரமான விநோதமான எண்ணம் அவருடைய மனதில் தோன்றியது. தன்னுடைய குள்ளமான உருவத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிமிர்த்தி நேராக நின்று, மிகுந்த பெருமிதத்தோடு அந்தத் துப்பாக்கிக் குண்டை நெற்றியில் வாங்கிக்கொண்டார். தூய்மையும், வலிமையும், பெருமையும் என விசித்திரமான தெளிவற்ற உணர்வுகள் அவரது ஆன்மாவை நிறைத்தன. சூரியன், ஆகாயம், மக்கள், வயல்வெளி, மரணம் யாவும் அவருக்குத் தொடர்பற்ற, முக்கியமற்ற, தேவையற்றவையாகத் தோன்றின.

அவருடைய மார்பிலும், இடது கண்ணிலும், வரிசையாகப் பொத்தான் இடப்பட்டிருந்த தூய்மையான மேல் கோட்டைத் துளைத்து வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. அவருடைய மூக்குக் கண்ணாடி உடைந்து சில்லுசில்லானது. அவர் கிறீச்சென்ற அலறலோடு சுழன்று கம்பத்தில் மோதி, மிச்சமிருந்த ஒற்றைக் கண் அகலத் திறந்திருக்க, கீழே விழுந்தார். இரு பக்கமும் நீட்டியிருந்த இரு கைகளும் பிடிமானத்துக்காகப் பற்றியிருப்பதைப் போலத் தரையை இறுகப் பற்றியிருந்தன. அதிகாரி ஆவலோடு அவசரமாக அவரை நெருங்கினார். அர்த்தமே இல்லாமல் அவருடைய கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தி இரண்டு முறை சுட்டார். ஆண்டர்சன் பிடிமானத்தை விட்டு கை கால்களை நீட்டிக் கிடந்தார். அவருடைய இடது கையின் ஆட்காட்டி விரல் மட்டும் தொடர்ச்சியாகப் பத்து வினாடிகளுக்குத் துடித்துக் கொண்டிருந்தது.  

மூல ஆசிரியர் குறிப்பு:

மிஹயீல் பெத்ரோவிச் அர்ஸிபாஷேவ் (1878-1927)

ரஷ்ய எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர். இவர் பிறந்த ஓஹ்தரிக்கா நகரம் தற்போது உக்ரைன் நாட்டைச் சேர்ந்ததாக உள்ளது. இவரது படைப்புகள் வாழ்வின் இருண்ட பகுதிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இயல்புத்தன்மை அடிப்படையிலானவை. ‘இயலறிவு, நிலைத்த தன்மை, முறையான வாதம், படைப்பின் மையத்தை நோக்கி நகர்த்தும் கதைக்களம் குறித்த தீர்க்கமான பார்வை, நாவலில் அறிமுகப்படுத்தப்படும் சூழல்களின் துல்லியமான மதிப்பீடு, தெளிவு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றையே ஒரு இலக்கியப் படைப்பின் அம்சங்களாகக் காண்கிறேன்’ என்னும் இவர், தமது இலக்கிய ஆசான்களாக டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், விக்டர் ஹியூகோ மற்றும் யோஹன் ஃபோஃப்கன் ஃபான் கோத்தே ஆகிய ஐவரையும் குறிப்பிடுகிறார். இவர் தனது நாற்பத்தெட்டாம் வயதில் காசநோயால் இறந்துபோனார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.