இரா.பூபாலன் கவிதைகள்: தன்னை வெளியேற்ற முயலுதல்

“கவிதையை எழுதியவரின் நோக்கம் என்பது இனி ஒரு பொருட்டல்ல. கவிதையின் எழுதுபிரதி என்பதிலிருந்து வாசிப்புப்பிரதி என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.”

நாகார்ஜுனனின் மேற்கண்ட கூற்று, கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குகிறது. ஒரு கவிதையை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நெருக்கடியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கவிதையின் புரிதல் குறித்து வாசகரிடம் குறைகாணும் பிரதியாசிரியனின் குணத்தை நாகார்ஜுனன் வெளியே நிறுத்துகிறார். ஒரு பிரதி ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புக்கு இடமளிக்கும்போது அந்தப் பிரதியின் இயங்குதளம் விரிவடைகிறது. அதேபோல், வாசகரிடம் அடைந்த பிரதிக்கு பிரதியாசிரியர் உரிமை கோர முடியாது. வாசகர், தன்னுடைய வாசிப்பு எல்லையிலிருந்தும் அவரது பிரக்ஞையில் பதிவாகியுள்ள நினைவுகளிலிருந்தும் அந்தப் பிரதியை உள்வாங்கிக் கொள்கிறார். சில கவிதைகள் அவரது பிரக்ஞைக்கு வெளியே நின்று இருண்மையை உருவாக்குவதையும் தவிர்க்க முடியாது. அந்த இருண்மைக்கு பிரதியாசிரியர் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்பதையும் வாசகர் உணர்ந்தேதான் இருக்கிறார். கடந்தகால அனுபவத்தின் நினைவு சேகரத்தை நிகழ்காலத்திற்கு நகர்த்தி, மொழியால் புகைப்படமாக்கும் ரசவாதம்தான் கவிதை என்று வரையறுத்துக்கொண்டால், அந்தக் கவிதையை வாசிக்கும் வாசகனுக்கு அந்த அனுபவம் ஒத்திசைவாகும்போது அக்கவிதை தரும் மகிழ்ச்சி எல்லையற்றதாகிறது. மாறாக, அந்தக் கவிதை வேறொரு வாசிப்பைத் தரும்போது அது இன்னொரு படைப்பாகிறது.

பொள்ளாச்சியைச் சார்ந்த கவிஞர் இரா.பூபாலனின் ‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை’, ‘அரூபத்தின் வாசனை’, ‘தீ நுண்மிகளின் காலம்’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை ஒருசேர வாசிக்க நேர்ந்தது. இவர் ஏற்கனவே ‘பொம்மைகளின் மொழி’, ‘பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு’, ‘ஆதி முகத்தின் காலப்பிரதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆக கவிதைதான் இவர் பயணிக்கும் இலக்கிய வடிவம். இரா.பூபாலன், ‘பொள்ளாச்சி இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பினூடாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு பல கவிஞர்களைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பெண்களின் எண்ணிக்கைக் கணிசமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு எழுத ஊக்கப்படுத்துவதுடன், அவர்களது ஆக்கங்களை நூல்களாக்கி வெளியிடுவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான் இரா.பூபாலனின் கவிதைகளை அணுக வேண்டும். ‘எந்த அளவு ஒரு தனிநபர், இந்தச் சமூக இயல்புணர்வானது மொழிவழிச் செயல்பட, தன் தனிநபர் குணத்தை அமைத்துக் கொள்கிறாரோ அல்லது சமூக வயமாகிறாரோ, அந்த அளவு அவர் படைப்பாளியாய் உருவாகிறார்’ என்று தமிழவன் (படைப்பும் படைப்பாளியும்) குறிப்பிடுகிறார். ‘தீ நுண்மிகளின் காலம்’ தொகுப்பை வாசித்தபோது, இந்தக் கூற்று முழுக்க முழுக்க இரா.பூபாலனுக்கும் பொருந்தும் என்றே கருதினேன். சமூகத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட கவிஞன், தான் வாழும் சமூகமும் அந்தச் சமூகத்தை ஆளும் அதிகார வர்க்கமும் அறத்தை மீறும்போது அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றக் கடமைப்பட்டிருக்கிறான். அந்த எதிர்வினையில் கவிதையின் அழகியல் நிரம்பி வழியாது; வெடித்துச் சிதறும் கோபமும் ஏதும் செய்ய முடியாத குற்றவுணர்ச்சியுமே நிறைந்திருக்கும். அப்படித்தான் இந்தத் தொகுப்பு உருப்பெற்றிருக்கிறது.

கொரோனா எனும் பெருந்தொற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களைவிட மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பதை இக்காலத்தைக் கூர்ந்து அவதானித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். அரசு இந்நோயை அறிவியல்மூலம் எதிர் கொள்ளவில்லை; சடங்குகள் மூலமே எதிர்கொண்டது. விளக்கேற்றுவதையும் கைதட்டுவதையும் நோயை ஒழித்துவிட்ட பாவனையை மக்களிடையே பரப்பும் உத்தியாகவே பார்க்கப்பட்டது. இன்றுவரை இந்நிகழ்வு பலராலும் நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. நோயை எதிர்கொள்வதற்குண்டான வலிமையை மக்களிடையே கொண்டுசேர்க்க ஆளும் அரசு தவறிவிட்டது. பயம் பலரைச் சொந்த நாட்டிற்குள்ளேயே அலைகுடிகளாக மாற்றியது. இன்றும் அரசு அந்தப் பாவனையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

“பசியில் செத்திருக்க வேண்டியவன்

பயத்திலும் வலியிலும் செத்தான்

அன்றைய நாளின் பின் மாலையில்

வீட்டுக் கூரையில்

விளக்கேற்றிக் கை தட்டிக் கொண்டிருந்தவர்களில்

அவன் தாயும் ஒருத்தி”

          இந்தக் கவிதை ஒரு காலகட்டத்தின் வரலாற்றைப் புகைப்படமாக மாற்றியிருக்கிறது. இந்தக் கவிதை வாசகருக்குச் சில தகவல்களைத் தருகிறது. கல்வியறிவற்ற தாய் ஒருத்தி கிராமத்தில் இருக்கிறாள். அவள் எந்த நிலப்பரப்பைச் சார்ந்தவள் என்பது கவிஞருக்கு முக்கியமில்லை. அவளுடைய மகன் ஒரு புலம்பெயர் தொழிலாளி. இருவருமே அரசு அவ்வப்போது வெளியிடும் அவசர அறிவிப்புகளை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள். அதனால்தான் அவனுடைய தாய் அரசு சொன்னவுடன் ஏனென்று எதிர்க்கேள்வி கேட்காமல் விளக்கேற்றினாள்; கைதட்டினாள். விளக்கேற்றுவதன் மூலமாகவும் கைதட்டுவதன் மூலமாகவும் இப்பெருந்தொற்றிலிருந்து விடுபட முடியுமா என்று அவள் சிந்திக்கவில்லை. அரசின் அறிவிப்பை அவள் சந்தேகப்படவில்லை. அரசு அந்தத் தாயை அவ்வாறு வடிவமைத்து வைத்திருக்கிறது. இந்தத் தாயின் மகனைத்தான் காவல்துறை சந்தேகப்படுகிறது. நடந்தே அந்தப் பெருந்தொலைவைக் கடந்து வருபவனின் தோற்றம் அரசுக்குச் சந்தேகத்தை உண்டாக்குகிறது. மழிக்காத தாடிகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்படிப் பல்வேறு திறப்புகளை இக்கவிதை உண்டாக்குகிறது.

          பெருந்தொற்றுக் காலத்தில், முன்திட்டமில்லாத அரசு உருவாக்கிய அளவற்ற அதிகாரம் குறித்து இரா.பூபாலன் கவனிக்கத்தக்க கவிதைகளை எழுதியிருக்கிறார். நோய்க்கும் அதிகாரத்துக்கும் இடையில் நசுங்கும் சமூகம் அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் ‘மன்றாடிக் கொண்டிருக்கிறான் / நோயை விடவும் / கொடிதான அதிகாரத்திடம் ’ என்று எழுத முடிகிறது. இந்தக் கவிதை கழிவிரக்கத்தின் வெளிப்பாடு இல்லை. இதற்குப் பின்னால் ஒரு பெருங்கோபம் இருக்கிறது. நிகழ்கால அரசின் முகத்தில் காலத்தால் மறைக்க முடியாத ஒரு வடுவைக் கவிஞனின் கோபம் உண்டாக்கும். அதனை இக்கவிதை செய்திருப்பதாகவே நினைக்கிறேன். மேலும், இக்கவிதையினூடாக வெளிப்படுவது ஒரு கூட்டுக்குரல். அது எழுப்பும் ஒலி கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். இக்கவிதையின் அர்த்தம் சமூகத்துடன் இணைந்திருக்கிறது. அதனால் இது நிற்கும்.

          ‘தீ நுண்மிகளின் காலம்’ தொகுப்பைத் தவிர்த்து மீதமுள்ள இரு தொகுப்புகளை வாசிக்கும்போது பூபாலனின் கவிதைகளில் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. இயல்பாகவே இவருக்குப் பெண்மொழி சாத்தியப்பட்டிருக்கிறது. எனது பிரக்ஞையில் ‘வாசகன்’, ‘எழுதினான்’, ‘வந்தான்’ போன்ற ஆண்பாலை ஈறாகக்கொண்ட சொற்களே சேகரமாகியுள்ளன. தன்னுணர்வற்று எழுதும்போது ‘வாசகர்’ என்ற இருபாலுக்கும் பொதுவான சொல்கூட இயல்பாக எழுத்தில் வருவதில்லை. இதனைத் தன்னுணர்வுடன் அவதானித்து ஒவ்வொருமுறையும் திருத்துகிறேன். ஆனால் பூபாலனின் கவிதைகளில், ‘விளையாடிக்கொண்டிருக்கிறாள் சிறுமி’, ‘பிஞ்சுப் பாதங்களைத் தடவித் தருகிறாள்’, ‘சிக்னலில் காத்திருக்கும் பள்ளிச் சிறுமி’, ‘மழைப்பூ என்றாள்’, ‘படிகளில் இறங்குகிறாள்’, ‘பேசத் துவங்குவாள்’ என்று பெண்களை முன்னிறுத்தியே கவிதைகள் அமைந்திருக்கின்றன. நான் கவனித்தவரை ஓரிடத்தில் மட்டும் ‘எடுத்து வந்த சிறுவன்’ என்றொரு வரி இடம் பெற்றிருக்கிறது. இந்த மொழிப்பிரயோகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மொழிகூட ஆண்களுக்குச் சாதகமானதாகவே இருக்கிறது என்பதை அறிவோம். பல ஆண்பால் சொற்களுக்குப் பெண்பாலில் பதிலிச் சொற்கள் இல்லை. நவீன எழுத்தாளர்கள்தாம் இப்பிரச்சனையைப் பிரக்ஞையுடன் அணுகுகிறார்கள். அந்த வகையில் பூபாலன் கவனிக்கப்பட வேண்டியவர்.

          பூபாலன், தம் கவிதைகளூடாகத் தன்னை அழிக்கத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறார். ‘நான்’ என்கிற தன்னிலையைக் கவிதைக்கு வெளியே நிறுத்திவிட்டு எழுத முயல்கிறார். சில கவிதைகளில் இதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. பல கவிதைகளில் அது வெறும் முயற்சியாகவே இருக்கிறது. கூட்டுச் சிந்தனையால் ஒருங்கிணைக்கப்பட்ட கவிஞன், தன்னைப் புற உலகிலிருந்து விடுவித்துக்கொண்டு அக உலகத்தைப் பார்க்கும்போது கவிதை பொதுமைப்படுத்தப்படும். அவ்வாறு விடுவிப்பதில் சிக்கல் நேரும்போது அக்கவிதை தன்னனுபவமாகச் சுருங்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. பூபாலனுக்கு ஒரு பெண்குழந்தை இருக்க வேண்டும்; அவருடைய அப்பா தற்போது நினைவுகளில் வாழ்பவர்; அவரது களவு வாழ்க்கை வரைவில் முடியவில்லை என்பது போன்ற குறிப்புகள் தொகுப்பில் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்தத் தனிப்பட்ட தகவல்கள் வாசகருக்குத் தேவையில்லைதான். ஆனால் திரும்பத் திரும்ப இந்தக் குறிப்புகளைக் கவிஞன் தம் படைப்புகளில் விட்டுச்செல்லும்போது வாசகர் அதனைப் பிரதியாசிரியனின் வாழ்க்கையுடன் சுருக்கிப் பார்த்து விடுகிறார். இதுவொரு பக்கச் சார்பான அனுமானம்தான். கவிஞன் உருவாக்கும் படிமம் அவனது கண்முன் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற எந்தவொரு அவசியமும் இல்லை. வாசிப்பில் கண்ட காட்சியும் பிறரால் பகிரப்பட்ட அனுபவமும் வலியும்கூட கவிதையில் இடம்பெறும். எல்லாவற்றையும் உள்ளிழுத்துக்கொள்ளும் ஆற்றல் கவிதைக்கு இருக்கிறது. பிறரின் அனுபவங்களையும் தன்னுடையதாக்கும் ரசவாதம்தான் கவிதை. சங்கக் கவிதையே இதற்குச் சான்று.

          “முதலில்

காதுகளுக்குள் நடப்பவள்

பின்பு மனதில்

பின்பு நினைவில்

சதா நடந்துகொண்டே இருக்கிறாள்

சகலமும் அதிர அதிர”

          இது சிறிய கவிதைதான். இக்கவிதை உருவாக்கும் படிமம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கலாம். ஆனால் இதில் நடந்துசெல்லும் அந்தப் பெண்ணின் உருவம் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. காதின் வழியாக ஊடுருவிய அந்தப் பெண்ணின் சித்திரம், மனதில் மையம் கொள்கிறது. நடத்தல் என்கிற செயல் பொதுக்குறிப்பான். ஆனால் நடத்தல் என்கிற செயலைச் செய்யும் பெண் சிறப்புக் குறிப்பான். இதுபோன்று ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பூபாலன் அனைவருக்குமான பொதுக் குறிப்பானை உருவாக்கிக்கொண்டே செல்கிறார். இந்தக் குறிப்பான்கள்தாம் வாசகரைக் கவிதையுடன் ஒன்றிணைக்கும் கண்ணியாகச் செயல்படுகிறது. தங்கள் மனதில் சகலமும் அதிர இன்றும் நடந்துகொண்டிருக்கும் பெண்ணின் உருவம் இக்கவிதையைப் படிக்குந்தோறும் உருவாகும்போது இக்கவிதைக்கான இடம் விரிகிறது. ‘நான் அவனது துயரத்தை / தின்னத் தொடங்குகிறேன்’ என்ற கவிதையில் வெளிப்படும் படிமமும் தனித்துவமாக இருக்கிறது. மேற்கண்ட இரண்டு வரிகளும் கவிதையில் இறுதியில் உள்ளவை. இந்த இரு வரிகள் மட்டுமே கவிஞனின் எண்ணத்தை வாசிப்பவரிடம் கடத்திவிட முடியாது. இந்த வரிகளின் முந்தைய வரிகளுடன் இணைத்து வாசிக்கும்போதுதான் அதன் அடர்த்தி அதிகரிக்கிறது. இக்கவிதையில் வெளிப்படும் பருண்மைப் பொருளை நீக்கிவிட்டு, தொனிப்பொருளை வாசகர் அடையும்போது அதன் தீவிரம் இன்னும் கூடுகிறது.

          காதலின் துயரம் இவ்விரு தொகுப்புகளிலும் தனியிடம் பெறுகிறது. காதலின் கொண்டாட்டங்களைக் கடந்து துயரத்தை எழுதும்போது கவிஞன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டான் என்றே சொல்லத் தோன்றுகிறது. பெண் குழந்தையைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதற்குப் பின்னும்கூட காதலின் தீராத வலியைச் சமன்படுத்தும் முயற்சி இருப்பதாகவும் அவதானிக்கலாம். அந்த வலிதரும் நினைவுகளை அழிக்க நடக்கும் போராட்டமும் இதனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறது. நினைவுகளை அழித்தலுக்கும் அதிலிருந்து மீளுதலுக்கும் ஒரு வழிதான் உண்டு. எழுதிக் கடத்தல். ‘நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு / அப்பாலேயே இருந்தும் / அலைபேசியில் அழித்திடவே / முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது’ என்ற கவிதையை வாசிக்கும்போது நினைவுகளை ஒருநாளும் அழிக்கவே முடியாது என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் தற்காலிகமாக மறைத்து வைக்கலாம். இதுபோன்று வாசிப்பவனின் நினைவுகளுடன் நெருக்கமாக ஊடாடும் பல கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பூபாலன் கவிதைகளைப் பொறுத்தவரை நேர்க்கூற்று அணுகல்தாம். இன்னும் பத்துவருடம் கழித்துத்தான் இவரது கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்ற ‘அர்த்தத்தை ஒத்திப்போடுதல்’ இவரது ஆக்கங்களில் இல்லை.

பல கவிதைகள் வாசகரின் பங்கேற்புக்கு இடமளித்து எழுதப்பட்டுள்ளன. தான் யாருக்காகக் கவிதை எழுதுகிறோம்; யாரை இக்கவிதைகள் சென்றடைய வேண்டும் என்பதில் பூபாலன் தெளிவாகவே இருக்கிறார். அதனால் எளிய சொற்சேர்க்கைகளையே தம் கவிதைகளுக்குப் பயன்படுத்துகிறார். புத்தனின் தொன்மம் இரண்டு கவிதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் ஒரு கவிதை தனித்தன்மையுடன் இருக்கிறது. தொன்ம மதிப்பீடுகள்மீது வேறொரு ஒளியைப் பாய்ச்சும் பணியை இக்கவிதை சிறப்பாகச் செய்திருக்கிறது. கவிதையை நவீனப்படுத்தி தற்காலத்திற்குள் கவிதையைப் பிடித்து வைக்கும் முயற்சி இது. எத்தனைமுறை வாசித்தாலும் ஒரு மெல்லிய புன்னகையைப் பரிசளிக்கும் கவிதையாக இது உருப்பெற்றிருக்கிறது.

……………….. ……………..

எப்போதும் கூடலின்போது

படுக்கையறை

நாட்காட்டியிலிருக்கும்

கடவுளைக் கூட

சுவருக்குத் திருப்பி வைக்கும்

வழக்கமுடைய அவள்

இரவாடையில் இருக்கும்

புத்தனை மறந்து விடுகிறாள்

திசைக்கொன்றாய்

திரு திருவென

முழிக்கிறான்

ஆசைகளைத் துறந்த புத்தன்.”

          இதுபோன்ற கவிதைகள்தாம் பூபாலனின் அடையாளக் கவிதைகளாக இருக்கும் என்பது என் அவதானிப்பு. இத்தன்மையில் பல கவிதைகளை முயன்றிருக்கிறார். அரச வன்முறை பற்றியும் குறிப்பிடும்படியாக எழுதியிருக்கிறார். ஆனால் அந்தக் கவிதைகளில் எல்லாம் தெரியாத ஒரு செவ்வியல் தன்மை இந்தக் கவிதையில் வெளிப்பட்டிருக்கிறது. இக்கவிதை புத்தனின் புனிதத்தின்மீது எந்த விரிசலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் புத்தனின் வரலாற்றின்மீது சிறு கீறலை உண்டாக்குகிறது. தனது குடும்பத்திலிருந்து வெளியேறிய புத்தன், ஒவ்வொருவரின் குடும்பத்திற்குள்ளும் பேசுபொருளானான். புத்தன் இன்று ஒரு தர அடையாளம். புத்தனை இரவு உடைவரை உள்ளிழுத்ததின் மெல்லிய பகடி இக்கவிதையின் தொனிப்பொருளாகிறது. பூபாலன் ஒவ்வொரு கவிதையிலும் வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்கிறார். சில கவிதைகள் அந்தக் குறிப்பான்களின் ஒத்திசைவுடன் முடிகிறது. பல கவிதைகளின் இறுதி வரிகள் ஒட்டுமொத்தமாகத் தடம் புரண்டுவிடுகின்றன. அந்த இடத்தை வாசகர்கள்தாம் நிரப்பிக்கொள்ள வேண்டும்.

          சமகாலப் பிரச்சினைகளையும் பூபாலனின் கவிதைகள் காத்திரமாகப் பேசுகின்றன. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் விவசாய நிலங்களைத் தார்ச்சாலைகளாக மாற்ற முயலும் அரசின் வன்மத்தைப் பல கவிதைகளில் எழுதியிருக்கிறார். அரச வன்முறைகள் பற்றிய கவிதைகளில் தன்னையும் ஒரு குறிப்பானாக இணைத்துக் கொள்கிறார். அரசை எதிர்க்க முடியாததன் குற்றவுணர்ச்சி இக்கவிதைகளுக்குப் பின்னணியாக இருக்கிறது. எழுதுவதனூடாக அந்தக் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளியேற முயல்கிறார் என்பதாகவும் வாசிக்கலாம்.

தொகுப்பில் விரவிக்கிடக்கும் குழந்தைகள் குறித்த கவிதைகளையும் கவிதை குறித்த கவிதைகளையும் நீக்கிவிட்டு வாசிக்கும்போது தொகுப்புக்குக் கனம் கூடுகிறது. குழந்தைகள் எப்போதும் கவிதைக்கான கச்சாப்பொருள்தாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு கவிஞன் அதன் அழகிலேயே மயங்கி, தேங்கிவிடக் கூடாது. கவிதைகளைப் பற்றி கவிதை எழுதுவதுகூட ஒரு தேக்கநிலைதான். பூபாலன் இவற்றையெல்லாம் அடுத்தடுத்தத் தொகுப்புகளில் கடந்துவிட வேண்டும். ஏனெனில் இச்சமூகத்தின்மீது அவருக்கு ஒரு பார்வை இருக்கிறது. அந்தப் பார்வையில் ஒரு தரிசனம் தெரிகிறது. அதில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொள்ளும்போது அவரிடமிருந்து வெளிப்படும் கவிதைகள் கூடுதல் கவனம் பெறும். தன்னை அழித்து இப்புறச்சூழலை அணுகும்போது இது சாத்தியம்தாம். அந்த முயற்சியைப் பூபாலன் தொடங்கிவிட்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்தகால ஏக்கங்கள் குறித்து எழுதும்போது வாசகனின் இரக்கத்தைக் கோரும் ஒரு தொனி கவிதைக்குள் வந்துவிடுகிறது. அந்த ஏக்கத்திலிருந்து தன்னை அழிக்கும்போது அந்தக் கவிதை தன்னிலிருந்து பொதுத் தளத்திற்கு நகர்ந்து விடுகிறது.

          மகளின் நடவடிக்கைகள் வியப்பாகவும், அப்பாவின் நினைவுகள் துயரமாகவும், நிறைவேறாத காதல் கடக்க முடியாத வலியாகவும் அரச பயங்கரவாதம் கோபமாகவும் பூபாலனிடம் வெளிப்படுகிறது. இவையெல்லாம் யதார்த்தத்தில் பலருக்கும் நிகழக்கூடியவைதான். ஆனால் இவற்றால் அடையும் பாதிப்புகளைச் சொன்ன விதத்தில்தான் இவரது கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கோபத்தைப் பகடியாக மாற்றும் கலையும் பூபாலனுக்குக் கைகூடியிருக்கிறது. நினைவுகளின் நிழலை மொழியில் அடைக்கும்போது சில திரிபடையும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். அந்தவகையில் சில கவிதைகள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருக்கின்றன. இரா.பூபாலனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தல் என்பது உங்களின் பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போன்றதுதான். அந்தப் புகைப்படத்தோடு நம்மைக் கரைத்துக்கொள்ளும் அனுபவத்தை இக்கவிதைகளும் அளிக்கும்.

சுப்பிரமணி இரமேஷ்

[email protected]

Previous articleபுரட்சியாளன்-மிகையீல் அர்ஸிபாஷேவ்
Next articleயார் சக்கரவர்த்தி?
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

2 COMMENTS

  1. மிக்க மகிழ்ச்சி.. இந்தக் கட்டுரை என் கவிதைகளின் முகத்தை எனக்கே மீளவும் காட்டுகிறது. மிகச் சரியான அவதானம். கனலிக்கும், எழுத்தாளர் சுப்பிரமணி இரமேஷ் அவர்களுக்கும் என் அன்பும் நன்றியும்

  2. தோழர் பூபாலன் அவர்களின் கவிதைகள் குறித்து இவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தோழர் பூபாலன் அவர்கள் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.