புதைமணல்

‘ஸ்கூட்டரில் செல்பவனை இதற்கு முன் பார்த்ததில்லை, இனியும் பார்க்கப் போவதில்லை”

“கல்லூரியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் இந்தப் பையன் தினமும் இந்த நேரத்தில் தான் தெருவைக் கடந்து செல்பவனாக இருக்க வேண்டும். ஆனால் இவனை அடிக்கடி பார்த்தது போல் இல்லை’

‘இந்தப் பெண் எப்போதும் போல் இன்றும் இதே நேரத்திற்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்’

தன் குரலைக் கேட்டு எத்தனை நாளாகிறது? கடைசியாக, இவனுடைய வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்யும் சந்தோஷ் பத்து பதினைந்து நாட்களுக்கு முன் இவனைத் தொலைப்பேசியில் அழைத்து

‘ஸார், இந்த வருஷம் உங்க எர்நிங்க்ஸ் சிக்ஸ்டி எயிட் தௌசண்ட் தான் இருக்கு, வேற எதுவும் இல்லையா’ என்று கேட்டதற்கு

‘இப்ப ஜாப்ல இல்ல, ப்ரீலான்சிங் வர்க் ஸ்டார்ட் பண்ணிட்டிருக்கேன். அதான்’ என்று இவன் பதில் சொல்லியது தான் இதற்கு முன் இவன் கடைசியாகப் பேசியது. இல்லை, சென்ற புதன் வீட்டு வேலையோடு, சமையலும் செய்யும் ஜெயா ஏதோ கேட்டதற்குப் பதில் சொன்னான். என்ன கேட்டாள்? நினைவில் இல்லை. புதனன்று தானா? இன்று வெள்ளியா. அலைப்பேசியை எடுத்துப் பார்த்தான், வெள்ளி தான். அப்போது அவளிடம் பேசியது செவ்வாயாக இருக்கலாம். தேதி, கிழமை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து தெளிவில்லாமல் உள்ளன.

மீண்டும் ஜன்னலுக்கு வெளியே கவனிக்க ஆரம்பித்தவன், தெருவில் சென்றுகொண்டிருந்தவர்களின் முகங்களை, தினசரி பார்ப்பவை, முதல் முறையாக இன்று பார்த்து, இனி எப்போதும் பார்க்க வாய்ப்பில்லாதவை, அவ்வப்போது பார்ப்பவை என்று பிரித்துக் கொண்டிருந்தான். அறையில் ஒளி குறைய ஆரம்பிக்க, திரும்பியவன் அலைப்பேசி மினுங்குவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.

‘ஆர் யு ப்ரீ நெக்ஸ்ட் வீக். ந்யு டைட்டில்’ என்று ஜெயஸ்ரீ பதினைந்து நிமிடங்களுக்கு முன் கேட்டிருந்தார். பதினெட்டு வருடங்களாக வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்திலிருந்து ஒரு வருடத்திற்கு முன் ராஜினாமா செய்த போது அலைப்பேசியையும்  ‘சைலன்ட் மோடில்’ வைத்தான். அடுத்த சில மாதங்கள் வேலைக்குச்  செல்லவில்லை என்பதைத் தவிர எப்போதும் போல் கழிந்தன. பின் எழுத்து சார்ந்த ஏதேனும் பணிகளைச் செய்யலாம் என்று தோன்றியது, குறிப்பாக மொழிபெயர்ப்பு. அது குறித்துத் தேடியபோதுதான் ஜெயஸ்ரீயின் அறிமுகம் கிடைத்தது. நினைவோடைக் குறிப்புகள், உயர்படிப்பு நூல்கள் இவற்றிலுள்ள புகைப்படங்கள், வரைபடங்கள் பற்றி ஓரிரு வரி விளக்கங்கள்,  இரண்டு நிமிடங்கள் வரை நீளும் காணொளிகளைச் சிறு சிறு காட்சித் துண்டுகளாகப்  பிரித்து, ஒவ்வொன்றைப் பற்றியும் முன்னூறு வார்த்தைகளுக்கு மிகாத விவரிப்புகள் என விழியற்றவர்களுக்கு வாசிக்க உதவும் வேலையைப் பெரிய பதிப்பக நிறுவனங்களுக்குச் செய்து கொண்டிருந்தார். ஒரு குறிப்பு எழுத இருபது ரூபாய், காணொளி என்றால் ஒரு நிமிடத்திற்கு அறுபது ரூபாய். முதலில் ஓரிரு மாதங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஆனால் அதற்குத் தேவையான உழைப்பும், அதில் கிடைக்கும் ஊதியமும் நேரெதிர் திசைகளில் உள்ளன என விரைவில் புரிந்தது. இந்தச் சில மாதங்களில் மொத்த ஊதியமாகக் கிடைத்துள்ள அறுபதாயிரத்துச் சொச்சத்தை விட அதிகமான சம்பளத்தை ஒரு மாதத்தில் வாங்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த இரு வாரங்களுக்குத் தன்னால் ஈடுபட முடியாதென்று ஜெயஸ்ரீக்கு பதிலனுப்பினான். இப்போதெல்லாம் இது போல் தான் வரும் வேலைகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறான். இன்னும் ஓரிருமுறை கேட்டு, அதன் பின் மற்றவர்களைப் போல் அவளும் தொடர்பை நிறுத்திக் கொள்வாள்.

அறையிலிருந்து வெளியேறியவன் வீட்டின் மற்றொரு படுக்கையறைக்குச் சென்று விளக்கைப் போட்டான். பெற்றோரின் அறை. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு  இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கிக் குடி வந்தான். அடுத்த இரண்டாம் வருடம் அம்மா சென்றாள். ஒரு வருடம் கழித்து அப்பா. மனைவி பிரிவு தாங்க முடியாமல் இறக்கவில்லை, வாழ்நாள் முடிந்து விட்டது அவ்வளவு தான். அப்பா இறந்த அடுத்த சில நாட்களுக்கு இரவு நேரத்தில் தன் அறையை விட்டுச் சமையலறைக்குச் செல்ல கொஞ்சம் பதட்டமாக இருந்தது. இரவு முழுவதும் அனைத்து அறைகளிலும் விளக்கை அணைக்காமல் வைக்க ஆரம்பித்தான். பின் பதட்டம் குறைய, மாலை நேரத்தில் ஓரிரு மணி நேரங்கள் மட்டும் விளக்கைப் போடுகிறான். இவனைத் தவிர யாருமில்லாத இந்த ஆயிரத்தி இருநூற்றடி வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை நான்கு வருடங்களுக்கு முன் தான் அடைத்தான்.

சமையலறை விளக்கைப் போட்டவன், பாத்திரங்களைத் திறந்து பார்த்தான். இரவிற்குப் போதுமான அளவு சாதமும், ரசமும் இருந்தது. அம்மா சென்ற பின், வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டிருந்த ஜெயாவை சமைக்கவும் வைத்துக் கொண்டார்கள். முதலில் இருவேளை வந்து சமைத்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் இறந்த பின், காலையில் மட்டும் வந்து நாள் முழுதிற்கும் சமைத்து விட்டுச் சென்று விடுவாள். இன்று எதைச் சமைக்க வேண்டும் என்று இவன் எதுவும் சொல்வதில்லை, வாரமொருமுறை காய்கறி வாங்க அவளிடம் பணம் கொடுத்து விடுவான். மளிகைப் பொருட்கள் மட்டும் இவன் பொறுப்பு.

காலையில் அவளுக்குக் கதவைத் திறந்து விட்டுத் தன்னறைக்குச் சென்று விடுவான். வீட்டு வேலைகளையும், சமையலையும் முடித்த பின் இவனிடம் சொல்லிச் செல்வாள். பெரும்பாலும் எந்த பேச்சும் இருக்காது. தக்காளி விலை பற்றித்தான் அவள் இந்த வாரம் ஏதாவது கூறியிருக்க வேண்டும்.

மணி ஆறு. இப்போது நடை கிளம்பினால் ஏழு மணிக்கு வந்து விடலாம். குளித்து, ஏழரை மணிக்குச் சாப்பிட்டு, சிறிது நேரம் வாசித்து, எப்போதும் போல் ஒன்பது மணிக்குத் தூங்கி விடலாம். சில நாட்களாகத் தூக்கம் வருவது கடினமாக உள்ளது. வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான்.

ஆறாவது குறுக்குத் தெருவில் திரும்பி, அந்தோனியார் கோவில் தெருவுக்குள் நுழைந்தான். சாலையெங்கும் ரோஜாப்பூக்கள். யாருடைய சவ ஊர்வலமோ? அம்மா, அப்பா இருவரையும் வேனில் வைத்துத்தான் இடுகாட்டிற்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு அவளுடைய உறவினர் தான் அதிகமாக வந்திருந்தார்கள். அப்பாவிற்கு யாரும் வரவில்லை, அவர் இருக்கும் போதே இரு தரப்பு உறவினர்களுக்கும்  அவரிடம் மிகச் சிறிய அளவிலான மரியாதையோ நல்லபிப்ராயமோ இருந்ததில்லை. அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது, அதற்குத் தகுந்த காரணங்களும் அவர்களுக்கு உண்டு. குடியிருப்புவாசிகள், இவனுடன் வேலை பார்த்தவர்கள் தான் அப்போது உதவியிருப்பார்கள். அம்மாவிற்கு முதல் வருடச் சடங்கு மட்டும் நடந்தது,  அதன் பின் அப்பாவும் காலமாக, எதையும் செய்வதில்லை. நம்பிக்கையில்லை என்றில்லை, செய்யத் தோன்றவில்லை.

நான் இறந்தால் யார் வருவார்கள்? திருமணம் செய்திருந்தால் மனைவி இருந்திருப்பாள். ஓரிரு குழந்தைகள்?. மணமாகாமல் இருப்பதற்கு அம்மா, அப்பாவின் மரணத்தைக் காரணம் சொல்ல முடியாது. அம்மா இருக்கும்போதே அதைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தாள், ஓரிரு வருடங்கள் போகட்டும் என்றான், அது பதினைந்து வருடங்களுக்கு மேலாக நீண்டு விட்டது. திருமணம் செய்யக் கூடாது என்ற எண்ணமில்லை, அப்போதும் சரி இப்போதும் சரி அது குறித்து எந்த உறுதியான உந்துதலும் ஏற்படவில்லை. உடல் கிளர்ச்சியடையும் பிரச்சினை மட்டும் தான், அதையும் கூட தனியறையில் தற்காலிகமாக, அது அடுத்தமுறை மீண்டும் எழும் வரை, தணிக்க முடிகிறது.

வியட்னாமில் போரில் ஈடுபட்ட புதுச்சேரி ராணுவ வீரர்களுக்கான  அஞ்சலி சிலையைப் பார்த்தபடி பிரதான சாலைக்கு வந்தான். வேலையில் இருக்கும்போது இவன் திருமணம் பற்றி சக ஊழியர் யாரும் இவனிடம் பேசியதில்லை. சகஜமாகப் பழகக் கூடியவன் தான், இருந்தும் ஏன் கேட்கவில்லை? பாலியல் இச்சையற்றவன், ஓர் பால் விழைவு கொண்டவன், ஏதேனும் பெண்ணை நேசித்து, அது கைகூடாமல் போக  அதனால் திருமணம் செய்யாமல் இருப்பவன் என இவனைக் குறித்து அவர்களுக்கு அபிப்ராயம் இருந்திருக்கக் கூடும். ஒருவேளை இப்போதும் வேலையில் தொடர்ந்திருந்தால், இவன் மரணத்திற்கு அனைவரும் வந்திருப்பார்கள். இறுதிக் காரியங்களை அவர்களே முன்னின்று கவனித்திருக்கக் கூடும்.  

வேலையை ராஜினாமா செய்வதாகச் சொன்னபோது, நிறுவன முதலாளி இவனை இன்னும் காலமெடுத்து அது குறித்து மீண்டும் யோசிக்கச் சொன்னார். ராஜினாமாவிற்கு முன் இரண்டு மாத அறிவிப்பு போதுமென்றாலும், இன்னும் இரு மாதங்கள் தொடரும்படி கேட்டுக் கொண்டார். இவன் மிகத் திறமையான ஊழியன், இவனில்லாவிட்டால் நிறுவனம் சரியாக இயங்காது என்பதற்காக அல்ல, பதினெட்டு வருடச் செயல்பாட்டை இன்னொருவருக்குக் கைமாற்ற அத்தனை காலம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தில் முடிவை மாற்றிக் கொள்கிறானா என்றும் அவர் எதிர்பார்த்திருக்கலாம்.

இப்போது இறந்தால் அவர்கள் கூட வர மாட்டார்கள். யாருடனும் எந்தத் தொடர்பும் இல்லை. மிகச் சுமூகமான பிரிவு தான். வேலை செய்து கொண்டிருக்கும்போதும், அனைவருடனும் நல்லுறவில்தான் இருந்தான். ஆனால் ஒருபோதும் அவர்களை மிக நெருக்கமாக அணுக விட்டதில்லை, அவர்களை மட்டுமல்ல, யாரையுமே. வண்டியில் அலுவலகம் செல்ல பதினைந்து நிமிடம்கூட ஆகாது. ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை. இவனை ஒரேயடியாக மறந்திருக்க மாட்டார்கள், ஆனால் அன்றாட நினைவிலிருந்து நீங்கியிருப்பான். பிறந்தநாள், புத்தாண்டு, பிற பண்டிகை வாழ்த்துகள் எல்லாம் முன்பு அவர்களிடமிருந்து மட்டும்தான் வரும்.

தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தைக் கடந்து கொண்டிருந்தான். இன்னும் எத்தனை காலம் மிச்சமிருக்கும்?. ஐந்து வருடங்களில் அரை சதத்தை அடைந்து விடுவேன். ஆனால் அதுவரை உயிருடன் இருக்க வேண்டுமே? இப்போதே வாழ்நாளில் பாதிக்குமேல் கடந்து விட்டாயிற்று. மூன்றில் இரண்டு பங்கு? அறுபது சதவீத ஆயுள் முடிந்திருக்குமோ? எழுபது வயது வரை இருப்பேனா?

எதிரே பழக்கடையில் அம்மா வாழைப்பழம் வாங்கிக்கொண்டிருக்க, பைக்கின் முன் பகுதியில்  அப்பாவையொட்டி அமர்ந்திருக்கும் குழந்தை இன்னும் எண்பது வருடங்கள் இருக்கும். அந்த தம்பதியருக்கு இன்னும் நாற்பதைம்பது வருடங்கள். பழக்கடைக்காரருக்கு இருபது ஆண்டுகள் மிச்சமிருக்கலாம். ட்யூஷனுக்கு சென்று கொண்டிருக்கும் இந்தச் சிறுவனுக்கு அறுபது ஆண்டுகள்? விநாயக முருகன் பேக்கரியின் வாசலில் நின்றுகொண்டு டீ, போண்டா தின்று கொண்டிருக்கும் அந்தச் சிறு குழுவில், ஆளுக்கு முப்பதாண்டுகள்?

மூலக்குளம் சிக்னல் வரை பார்த்துக்கொண்டு வந்ததில், எண்பது ஆண்டுகள் தான் அதிகபட்ச மிச்சமிருக்கும் ஆயுளாக  இருந்தது. மாதாகோவில் தெருவின் முனையிலிருந்த சின்ன பலகையில் படுத்திருந்த முதியவருக்கு மிச்சமுள்ளவை என்று தோன்றிய ஒன்றிரண்டு ஆண்டுகள்தான் குறைந்த பட்சம். இந்த இரண்டிற்கும் நடுவில் நானெங்கே? எனக்கே கூட ஓரிரு வருடங்கள் தான் இருக்கலாம். நாற்பது வயதானால் வருடாந்திர மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள், செய்ததில்லை. சிகரெட், மது கிடையாது என்றாலும் கூட இதுவரை வெளியே தெரியாத நோய் அல்லது உடல்நலக் கேடு இருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொண்டு செல்லலாம்.

மூலக்குளம் வசந்த ராஜா திரையரங்கு வரை சென்றுவிட்டுத் திரும்பினான். இப்போது எதிர்புறத்தில், மீதியுள்ள ஆயுள் குறித்த யூகங்கள். அதே ஒன்றிரண்டில் ஆரம்பித்து எண்பது வயது வரை. மீண்டும் அந்தோனியார் கோவில் தெருவில் நுழைந்து நடந்து கொண்டிருந்தபோது ரோஜா இதழ்களை மிதித்துவிட்டான். நடையை ஆரம்பிக்கும்போது அவற்றைக் கவனித்தபடி மிதிக்காமல் கடந்திருந்தான், இப்போது இருட்டி விட்டது, சாலையில் அவை கிடப்பது தெரியவில்லை, செருப்பின் வழியாக ரோஜாவின் வாசம் உடலெங்கும் பரவியது.

வீட்டிற்கு வந்து குளித்த பின்பும் அந்த வாசம் போகவில்லை. இரவுணவிலும் அதே வாசம். மரணம் நெருங்குகிறது என்பதற்கான அறிகுறியா? மற்ற அறைகளின் விளக்குகளை அணைத்துவிட்டு தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்தான்.

உயில் எழுதுமளவிற்குச் செல்வந்தன் அல்ல, அது குறித்து இதுவரை யோசித்ததே இல்லை. ஆனால் நான் இன்றிரவு இறந்தால் இந்த வீடு  யாருக்குச் செல்லும்? வங்கியில் உள்ள பணம்? முதலீட்டுத் திட்டங்களில் உள்ளவை? உறவினர் யாருடனும் தொடர்பும் இல்லை. பெரியம்மாவின் மகள் அமெரிக்காவில் இருக்கிறாள், அதுவும் கடைசியாக எப்போதோ கிடைத்த தகவலின் படி. இப்போது எங்கிருக்கிறாளோ? மாமனின் மகள் அப்போது திருச்சியில், இப்போது எங்கோ? அவர்களெல்லாம் வர மாட்டார்கள். இந்த வீடும், பணமும் அவர்களுக்குத் தேவைப்படாது. வழக்கறிஞர் யாரையாவது தொடர்பு கொள்ளலாமா, ஆனால் இப்போது எட்டு மணிக்கு யார் இருப்பார்கள். நாளை? ஆனால் நாளை நான் விழிப்பேனா?

நான் இறந்தால் அது தெரியவரவே சில நாட்களாகும். நாளிதழ்களில் படிப்பது போல, வீட்டிலிருந்து துர்நாற்றம் பரவி, குடியிருப்புவாசிகள் கதவைத் தட்டுவார்கள். குடியிருப்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஸ்ரீனிவாசன் ஸார் தான் காவல்துறைக்குத் தகவல் சொல்லி அவர்கள் வந்து, கதவை உடைத்து, இந்த அறைக்கு வந்து என் சவத்தைப் பார்ப்பார்கள்

பெருந்தொற்றிற்கு முந்தைய ஆண்டு முதல்தளத்தில் குடிவந்த கல்லூரிப் பேராசிரியரால் உருவான பிரச்சினையையும் அவர் தான் சரி செய்தார். இவன் காலை நடைக்குக் கிளம்பி படியிறங்கும்போது, பேராசிரியரின் வீட்டிலிருந்து, அவருடைய மிக உரத்த குரல் கேட்கும். தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பார். இவன் திரும்பி வரும்போதும் குரல் கேட்கும். இவன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் குடிவந்த இரண்டாவது வாரம் முதல் தளத்தில் கூச்சல் கேட்பதாக ஜெயா சொல்ல சென்று பார்த்தான். தன் வீட்டின் கதவைத் திறந்துகொண்டு, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றதாக எதிர் வீட்டில் வசிப்பவர்களின் புகார். பேராசிரியர் கதவை மூடிக்கொண்டு உள்ளே சென்று விட்டிருக்க, ஸ்ரீநிவாசன் ஸார் அவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்று கொண்டிருந்தார். ‘தினோம், காலேல ஒரே சத்தம் வேற, தானா பேசிட்டிருக்கார்’ என்ற இவனுக்குத் தெரிந்த விஷயத்தையும் புகாராகக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஜன்னலைத் திறந்து இரு பாட்டில்களை வெளியே வீசினார் பேராசிரியர். பின் வீட்டின் உரிமையாளரைத் தொடர்புகொண்டு, அவர் மூலமாகப்  பேராசிரியரின் மகனிடம் பேசி, அவரை வரவழைத்து, கதவைத் திறக்கச் செய்து காலி செய்ய வைத்தார் ஸ்ரீநிவாசன்.

பேராசிரியர் ஏன் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்தார் என அப்போது ஸ்ரீனிவாசனிடம் கேட்கத் தோன்றவில்லை. இப்போது அவர் என்ன செய்து கொண்டிருப்பார்?. அப்போது அவர் ஏதோ கல்லூரியில் வேலையில் இருந்தார், ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். அவருக்கு என்ன ஆயுள் மீதமிருக்கும்? வேறு வீட்டிற்குக் குடி சென்றாரா, குடும்பத்தினருடன் இணைந்தாரா? மனநல  மையத்தில் சேர்க்கப்பட்டாரோ? ‘டிஸ்டர்ப் செஞ்சீங்கன்னா சூஸைட் பண்ணிப்பேன்’ என்று கத்திக் கொண்டிருந்த, உள்ளிருந்த பொருட்களை வீசியெறிந்து கொண்டிருந்த பேராசிரியரையே சமாளித்த ஸ்ரீநிவாசனுக்கு என் சடலம் சவாலாக இருக்காது.

தன்னறையின் விளக்கையும் அணைத்தான். என் சடலத்தை அவர்கள் பார்க்கும்போது கண்டிப்பாக அழுக ஆரம்பித்திருக்கும். உடல் கழிவுகள்?

‘மண்டை உச்சி பொளந்து போனா நல்ல சாவு, கண் வழியா போனாலும் நல்லது தான். இப்படி நாறி போறது ரொம்ப மோசம். மொத்தமா கழிஞ்சுட்டார் அவர் படுத்திருந்த பெட்ல. அதுல இனி யாரும் படுக்கவே முடியாது, எங்க பாத்தாலும் பீ, பேதி வழிஞ்சிருச்சு’ என்று பாட்டி இவனுக்கு ஐந்தாறு வயதிருக்கும் போது குடியிருந்த வீட்டின் உரிமையாளர் இறந்தபோது கூறினாள். கோவணம் மட்டும் உடுத்திக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி கீழேஉள்ள மூன்று குடித்தன வீடுகள் முன் நின்று பேச வேண்டுமென்றே ஏதேனும் பேசிச் செல்லும், போதை தலைக்கேற மனைவியை, பேரனை, அடிக்கும், தடுக்க வரும் மருமகள் மீது கோவணத்தை உருவி எறியும், மகனுடன் அடித்துக்கொள்ளும் அந்த மனிதர் மலங்கழிந்து இறந்தது வியப்பில்லை.

நான் அந்தளவிற்கு மோசமானவனில்லை என்றுதான் நினைக்கிறேன், பின்புற மரணம் நேர வாய்ப்பில்லை. மண்டை பிளந்து இறக்குமளவிற்கு நல்லுள்ளமும் கிடையாது. கண் வழி? அதற்கான சாத்தியமும் குறைவுதான். மற்றெல்லாவற்றையும்  போல இதிலும் இரண்டு எல்லைகளுக்கு நடுவே எங்கோ இருப்பேன். கழியாமல் இருந்தால் சரி.

படுத்திருந்தவன் எழுந்து கழிவறைக்குள் சென்று அணிந்திருந்த பெர்முடாவை கழற்றிப் பார்த்தான். சிறுநீர் கறை. யாரவது உடலைச் சுத்தம் செய்வார்கள். அவர்கள் இழிவாகப் பேசுவது போல் இருக்கக் கூடாது. மீண்டும் சிறுநீர் கழித்துவிட்டு வேறு பெர்முடாவை அணிந்து கொண்டான். உடலில், ஆடையில் எங்கும் கழிவுகள் இருக்கக் கூடும். முடிந்தளவு அழுக்காக இல்லாமல் மரணிக்க  வேண்டும். ஆனால் உடல் அழுக ஆரம்பித்த பின், ஆடையில் உள்ள கரைகளும், கழிவுகளும், அத்துடன் கலந்து விடும். ஒரு வேளை வெளியே எங்கேனும் இருக்கும்போது இறந்து விட்டால்? எப்போதும் உடலை ஓரளவிற்கேனும் சுத்தமாக வைத்திருக்க  வேண்டும்.

ரோஜா வாசம் இன்னும் நீங்கவில்லை. மல்லிகை மணத்தில் அறைகளுக்கான பிரத்யேக வாசனைத் திரவியத்தை வீடு முழுதும் அடித்த பின்பும் ரோஜா மணம் எங்கும் சூழ்ந்திருக்கிறது. நாளை ஜெயாவிடம் வீட்டை முழுதும் கழுவச் சொல்ல வேண்டும்.

இன்றைய இரவைக் கழித்துவிட்டால் நாளை யாரேனும் வழக்கறிஞரைத் தொடர்புகொள்ள வேண்டியது தான். ஸ்ரீனிவாசன் ஸாருக்குத் தெரிந்திருக்கலாம். வீடு, பணம் குறித்து முடிவெடுத்தாலும், இறப்பைப் பற்றி என்ன செய்ய முடியும். தினமும் காலை, மாலை இருவேளை என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், நான் பதிலளிக்காவிட்டால் இவரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஸ்ரீனிவாசனின் அலைப்பேசி எண்ணைக் கொடுக்கலாமா? இதையெல்லாம் ஒரு வழக்கறிஞர் செய்யுமளவிற்கு வசதியானவன் கிடையாது. ஸ்ரீனிவாசனிடமே செய்யச் சொல்லலாமா? மனநிலை பிசகி விட்டது என்று எண்ணுவாரோ? அல்லது பரிதாபம் கொள்ள வேண்டியவனாக என்னைப் பார்க்கலாம். அது இன்னும் இழிவானது. இன்றைய இரவைக் கடக்க வேண்டும்.

விழிப்புத் தட்டியது. உயிருடன் தானிருக்கிறேன். அலைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்று இருபது. எழுந்து கழிவறைக்குச் சென்றவன், சிறுநீர் கழித்துவிட்டு, சிறு துளி கூட பெர்முடாவில் படவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் படுத்தான். இரவுணவு ஜீரணமாக ஆரம்பித்திருக்கும். இப்போது மரணிக்க நேர்ந்தால் கழிந்து விடுமோ? மலங்கழித்த பின் எதுவும் உண்ணாமல் அடுத்த  ஒரு மணிநேரத்தில் இறப்பது சரியாக இருக்கும். எந்தக் கழிவும் வெளியேறாது. ஆனால் அப்படித் திட்டமிட முடியாது.

திட்டமிட்டு இறக்கலாமே. தூக்கில் தொங்குவது, ரயில் முன் விழுவது, மணிக்கட்டை அறுத்துக் கொள்வது எல்லாம் சரியாக இருக்காது. வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு, குளித்து முடித்தவுடனேயே, நிறைய தூக்க மாத்திரை உட்கொண்டால், எளிமையான, சுத்தமான மரணம். அதற்கு முன் யாருக்காவது தகவல் கொடுக்க வேண்டும், ஆனால் அந்தத் செய்தி, குறைந்தபட்சம் அரைமணி நேரம் கழித்துத்தான் அவர்களைச் சென்றடைவது போல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் என்னைக் காப்பாற்றவும் இயலாது, உடலும் சுத்தமாக  இருக்கும், அழுகவும் செய்யாது.

ரோஜா வாசம் இப்போது உடல் முழுவதையும் மூடித் தரையைப் பிளந்து என்னைப் பாதாளத்திற்குக் கொண்டு செல்கிறது. அடர்மஞ்சள் நிறக் கண்கள் கொண்ட பாதாள கருநாகங்கள், பாதாளத்தின் கிரேக்கக் கடவுள் ஹேட்ஸ், மூன்று தலைகள் கொண்ட அவனுடைய காவல் நாய் எல்லாம் எனக்காகக் காத்திருக்கிறார்கள். பிளந்த தரை மூடி, இவன் எங்குச் சென்றான் என்று யாருக்குமே தெரியாமல் போனால் அதுவும் சிறந்த மரணம் தான். அது சாத்தியமில்லை. இதெல்லாம் வீண் சிந்தனை, எளிய, சுத்தமான மரணம்தான் தேவை. அதற்கு முதலில் இன்றைய இரவை எப்படியாவது கடக்க வேண்டும். இன்னும் சில மணி நேரங்களில் விடிய ஆரம்பித்துவிடும். இன்னொரு பகல். மீண்டும் இரவு. அதற்குள் முக்கிய முடிவுகளை எடுத்துவிட வேண்டும். ஆனால் தன்னுள் என்னைப் புதைத்துக் கொண்டிருக்கும் இந்த எடைமிகுந்த ரோஜா வாசத்தை உடைத்துக் கொண்டு வெளிவர முடியுமா? சீறல்களாக,  குறைப்புச் சத்தமாக வரும் கருநாகங்களின்,  ஹேட்ஸின் காவல் நாயின் அழைப்பைப் புறக்கணிக்க என்னிடம் வலுவுள்ளதா? இன்னும் சிறிது நேரத்தில்  தெரிந்து விடும். மின்விசிறியின் இறகுகளைப் பார்த்துக்கொண்டே காத்திருக்க ஆரம்பித்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.