விக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். குற்றாலத்தில் இரண்டு வாரமாகவே நல்ல சாரல். பொழுது விடிந்து ஒன்பது மணியாகியும் கூட சூரியன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வானம் மப்பும்மந்தாரமுமாக இருந்தது. வாடைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. கருத்த மேகங்கள் கூட்டம் கூட்டமாகக் கிழுக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
அதிகாலையில் மழை பெய்திருக்க வேண்டும். தெருவில் எங்கே பார்த்தாலும் திட்டுத்திட்டாகத் தண்ணீர்தேங்கியிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு இடது புறம் தெருவோரத்தில் நின்றுகொண்டிருந்த கோவில் தேரின் மீது வேய்ந்திருந்த தகரக்கூரையின் மீது இன்னும் ஈரம் காயாமல் இருந்தது. கீழ்பக்கம் பஸ் ஸ்டாண்ட் காம்புவுண்ட் சுவரிலிருந்து ஆரம்பித்த வயல்வெளி அடிவானம் வரை விரிந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னால்தான் நடுகை முடிந்திருக்க வேண்டும். பிரம்மாண்டமான பச்சை வண்ண ஸாட்டின் மெத்தையொன்றை கண்ணுக்கெட்டிய தொலைவு வரை விரித்திருந்த மாதிரி இருந்தது. அதன் நடுவே வெள்ளைத் துணியைக் கிழித்துக் குச்சிகளில் சொருகி வைத்திருந்தது போல் கொக்குகள் நின்று கொண்டிருந்தன.
எப்போதும் பரபரப்போடிருக்கிற பஸ் ஸ்டாண்டுக்கருகே இதுபோல் தண்ணீரும் பசுமையுமாய் இருப்பது எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. தென்காசியில் கூட பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இப்படித்தான் வயல்கள் இருக்கும். சேர்மாதேவி பஸ் ஸ்டாண்டை யொட்டி வாய்க்கால் ஓடும். ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஆறே ஓடுகிறது. இப்படி வயல்களுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்டுகளைக் கட்ட வேண்டுமென்று யாருக்கோ முதலில் தோன்றியிருக்கிறதே.
ராத்திரியே புறப்பட்டேன். ஆனால் ராசா சித்தப்பா விடவில்லை. “மணி ஒம்பதுக்கு மேல் ஆவுது. இந்நேரத்துல அங்கபோயி என்ன பண்ணப்போற? .. படுத்திருந்திட்டு காலம்பற எந்திரிச்சுப்போடா ” என்று சித்தப்பா நிறுத்தி வைத்து விட்டார்கள். கொஞ்சநேரம் கழித்து, “பொறப்படு..சினிமாவுக்குப் போயிட்டு வரலாம்” என்றார்கள். செகண்ட் ஷோவுக்குக் கூட்டிக்கொண்டு போவதற்காகவே சித்தப்பா என்னைப் போக வேண்டாமென்று சொன்னது மாதிரி இருந்தது. சினிமா விட்டு வந்த பிறகும் மூணு மூணரை மணி வரை படுத்துக்கொண்டே பழைய கதைகளையெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம்.
எதிரே இருந்த காபி கிளப்பில் தோசை மாவைக் கல்லில் விடுகிற சத்தம் கேட்டது. அம்பாசமுத்திரம் வந்தால் அந்த ஹோட்டலில் சாப்பிடாமல் போனதே இல்லை. அங்கே சாப்பிடுவதற்காப் பல தடவை பஸ்களைக் கூடத் தவறவிட்டிருக்கிறேன். இத்தனைக்கும் அது ஒன்றும் ரொம்பப் பெரிய ஹோட்டலல்ல. எதனாலோ ஒரு விஷயம் மனசுக்குப் பிடித்துவிட்டால் அதை லேசில் விட்டு விட முடிவதில்லை. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு ரொம்ப அற்பமாகப் படலாம். இதையா இவ்வளவு பிரமாதப்படுத்தினான் என்று தோன்றும். அம்பாசமுத்திரத்துக்கு வந்துவிட்டு அந்தக் கிளப்பில் நுழைந்து கை நனைக்காமல் போவதா? ஒரு காபியாவது சாப்பிட வேண்டும் போலிருந்தது.
கக்கத்தில் சுருட்டி வைத்திருந்த துணிப்பையைக் கைக்கு மாற்றிக்கொண்டு காபி சாப்பிடுவதறகாகப் புறப்பட்டேன்.
“தம்பி நீ செல்லப்பாதானே?..” என்று யாரோ பேர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பினேன். பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண். ரொம்பப் பரிச்சயமான முகம் போலிருந்தது. ஒருகணம் தடுமாறினேன். பேர் ஞாபகத்திற்கு வரவில்லை.
திரும்பவும் அவள், “நீ செல்லப்பா தானே?” என்று நிச்சயத்தோடு கேட்டாள்.
“ஆமாம் நீங்க?”
“தெரியலையா?” என்று விரல்களை விரித்துக் கேட்டுவிட்டுச் சிரித்தாள். சட்டென்று பொறி தட்டியது.
“ராதா அக்காவா நீங்க?”
”பரவாயில்லையே?.. ஞாபகமிருக்கே!”
ஆச்சரியமும் சதோஷமும் முதுகுத் தண்டில் மின்னலைப் போல் ஓடியது. இப்படியும்கூட நடக்க முடியுமா என்ன? என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் ராதா அக்கா, ரொம்ப சகஜமாகப் பேச்சைத் தொடர்ந்தாள்.
“அப்பமே ஒன்னைப் பாத்துட்டேன். மொதல்ல கொஞ்சம் சந்தேகமாத்தான் இருந்திச்சு. வேற யாருமே இருந்துட்டா என்ன பண்றதுன்னு நெனச்சேன். நீ இந்தப் பக்கம் திரும்புவேன்னு பாத்தேன். நீ என்னடான்னா திரும்பவே இல்லை. பெறவு எங்கியோ பொறப்படுகிற மாதிரி இருக்கவுந்தான் … சரி, துணிஞ்சு கேட்டுர வேண்டியதுதான்னு பேர்சொல்லிக் கூப்புட்டேன்!”
பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களின் கவனமெல்லாம் எங்கள் மீதுதான் இருந்தது. எங்களது பரவசமும் சந்தோஷமும் அவர்களையும் தொற்றிக்கொண்டிருந்தது. ராதா அக்காவைப் பார்த்த பிறகு அந்த பஸ் ஸ்டாண்ட், அந்தத் தெரு, தேர், வயல்கள் எல்லாமே சொப்பனத்தில் வருகிற மாதிரி இருந்தது.
“காபி சாப்பிடத்தான் கெளம்பிக் கொண்டிருந்தேன். வாங்கக்கா… காபி சாப்பிடுவோம்…” என்று கூப்பிட்டேன். ராதாக்காவின் முகத்தில் லேசான தயக்கம் ஓடி மறைந்தது. அவ்வளவு தான். பிறகு என்னுடன் புறப்பட்டாள்.
”அன்னைக்கு இருந்த மாதிரிதான் இருக்கே. ஆள் தான் கொஞ்சம் தாட்டிக்கமா இருக்கே” என்று சொல்லிக்கொண்டே என்னுடன் ரோட்டைக் கடந்தாள். தலையில் ஒன்றிரண்டு நரை முடிகள் தென்பட்டன. அதைத் தவிர முப்பது வருஷத்துக்கு முன்னால் பார்த்துப் பழகின, தாவணியணிந்த அதே ராதா அக்காவோடு நடக்கிற மாதிரிதான் இருந்தது.
“கதையில வர்ற மாதிரியில்ல இருக்கு அக்கா .. இத்தனை வருஷத்திற்குப் பிறகு நாம திரும்பச் சந்திப்போமுன்னு நான் நெனச்சுப் பார்த்ததே இல்லே அக்கா …” என்றான்.
”கதைதான்… வாழ்கையே கதை மாதிரித்தானே இருக்கு? “ என்று தலையைக் குனிந்துக்கொண்டே சொன்னாள். பெருமூச்சு விட்டாள். நெஞ்சு ஏறித் தாழ்ந்தது. எங்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய விஷயமிருப்பது போலிருந்தது. கிளப்பினுள் நுழைந்தோம். ஆமை வடையின் வாடையடித்தது. ராதா அக்காவே ஒரு ஓரமாக இருந்த டேபிளில் உட்கார்ந்தாள்.
“ஒங்களுக்கு ஒண்ணும் அவசரமில்லையே அக்கா?” என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு எதிரே உட்கார்ந்தேன். அக்கா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். இளநீல வண்ணத்தில் அவள் கட்டியிருந்த சேலை ரொம்ப அழகாக இருந்தது.
“சொன்னா நம்ப மாட்டீங்க அக்கா… “ தயக்கத்துடனே பேச ஆரம்பித்தேன்.
“இத்தனை வருஷத்துக்குப் பிறகு சந்திச்சிருக்கோமே… இதை நம்பவா முடியுது?”
“நேத்து ராத்திரி நானும் சித்தாப்பாவும் காத்திருந்த கண்கள் போயிருந்தோம். படம் போட்டதும் உங்க ஞாபகந்தான் வந்திச்சுக்கா. பாளையங்கோட்டையில நாம எல்லாரும் வளவோட அந்தப் படத்துக்குப் போனோமே உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
“அதுக்கு மட்டுமா போயிருக்கோம்? … எத்தனையோ படத்துக்கு நாம சேந்து .. ஹூம்! சொப்பனம் மாதிரியில்லா இருக்கு. ஏதோ ஒரு ஜென்மாந்திரத் தொடர்பு இருக்கு. அதுதான் ஒன்னையும் என்னையும் இங்கே இழுத்துக்கிட்டு வந்திருக்கு … “ சொல்லிக் கொண்டிருக்கும் போது அக்காவுடைய குரல் கம்மிவிட்டது. கண்கள் கலங்கி இருந்தன.
காசுக்கடை பிள்ளை வீட்டு வளவில்தான் நாங்கள் குடியிருந்தோம். ராதா அக்காவுடைய வீடு தெருவடியில் இருந்தது. பள்ளிக்கூடம் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் ராதா அக்கா வீட்டில்தான் எங்கள் வளவுப்பிள்ளைகள் எல்லாம் இருப்பார்கள். அவர்களுடைய வீட்டின் முன்பகுதியில் பெரிய வராந்தா ஒன்று உண்டு. வராந்தா சுவர் பூராவும் போட்டோ படங்கள் மாட்டியிருக்கும். ஒரு மர ஸ்டாண்டின் மீது ரேடியோ பெட்டி. அந்த வராந்ததாதான் எங்களுடைய உலகம். இருட்டி விட்டால் வரிசையாக உட்கார்ந்து படிப்போம். லீவு நாட்களில் தாயம், பல்லாங்குழி, சீட்டு, டிரேட் விளையாட்டு என்று அமர்களப்படும். சிமெண்ட் தளம் போடும்போதே தரையில் தாயக் கட்டத்தைப் பதித்திருந்தார்கள்.
ராதா அக்காவின் அப்பா பயோனீயர் பஸ்ஸில் டிரைவராக ஓடிக்கொண்டிருந்தார்கள். அக்காவுடன் பிறந்தவர்கள் இரண்டு அக்காவும், ஒரு அண்ணனும். ராதா அக்காதான் கடைசி. இரண்டு அக்காமாருக்கும் கல்யாணமாகி இருந்தது. அண்ணனுக்கு அப்போது இருந்த திருநெல்வேலி, தூத்துக்குடி எலெக்ட்ரிசிட்டி கம்பெனியில் வேலை. அக்கா எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாள். அச்சு அசல் அப்படியே ஈ.வி.சரோஜா மாதிரி இருப்பாள்.
அக்கா அருமையான ரசிகை. வீட்டில் என்ன வேலை செய்தாலும் பாடிக்கொண்டேதான் செய்வாள். ‘சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா ‘ என்ற பாட்டை ரொம்ப அருமையாகப் பாடுவாள். ராதா அக்காவுடைய அண்ணன், அவள் படிக்கிறதுக்காவே நிறைய பத்திரிகைகள் வாங்கிப் போடும். அப்போது கல்கியில் ‘குறிஞ்சி மலர்’ வந்து கொண்டிருந்தது. அதில் வருகிற பூரணி மாதிரியே அக்காவும் இருக்கிற மாதிரிப் படும்.
எங்கள் வளவிலேயே ராதா அக்கா வீட்டில்தான் ரேடியோ இருந்தது. ரேடியோவில் வருகின்ற நிகழ்சிகளெல்லாம் அக்காவுக்கு அத்துபடியாகி இருந்தது. ரேடியோ பெட்டிக்குப் பக்கத்திலேயே ‘வானொலி’ பத்திரிகையும் இருக்கும். இப்போது டெலிவிஷனில் ஞாயிற்றுக்கிழமை படம் பிரபலமாக இருக்கிற மாதிரி, அப்போது ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்துக்கு மேல் ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம் ரொம்பப் பிரபலமாக இருந்தது.
ராதா அக்காவுடைய அண்ணனும் கோபால் அண்ணனும் ரொம்ப ஸ்னேகம். இரண்டு பேரும் ஒன்றாகப் படித்தவர்கள். கோபால் அண்ணனும் எங்கள் தெருவில்தான் இருந்தது. அண்ணனுக்குச் சொந்தமாகத் தெற்கு பஜாரில் ஜவுளிக்கடை இருந்தது. தெருவாசலில் மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்தென்றால், கோபால் அண்ணன் வந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம். அந்த அண்ணனும் ராதா அக்கா வீட்டு அண்ணனும் அந்த வண்டியிலயே திருச்செந்தூர், குற்றாலமெல்லாம் போவார்கள்.
கோபால் அண்ணன் வீட்டு மதனியும், வீட்டுவேலை ஒழிந்த நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்காக ராதா அக்கா வீட்டுக்கு வந்துவிடும். சம்யங்களில் அந்த அண்ணனே கடைக்கு போகிறபோது லீலா மதனியை பைக்கில் பின்னால் வைத்து கூட்டிக்கொண்டு வந்து ராதா அக்கா வீட்டில் விட்டுப் போகும். கோபால் அண்ணன் வந்துவிட்டால் ராதா அக்காவுடைய போக்கே மாறிவிடும். ராதா அக்காவைக் கேலி செய்வதென்றால் கோபால் அண்ணனுக்கு ரொம்ப இஷ்டம்.
அந்த வருஷம் கால் வருஷப் பரீட்சை முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்திருந்தது. சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது ராதா அக்காவுடைய வீடு பூட்டிக்கிடந்தது. அவர்களுடைய வீடு பூட்டிக் கிடந்து நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. ராதா அக்காவுடைய அம்மா வீட்டை விட்டு ஒரு பக்கமும் போக மாட்டார்கள். விசேஷ வீடுகளுக்குப் போனால் கூட யாராவது ஒருத்தர் வீட்டில் இருப்பார்கள். வீடு பூட்டிக் கிடந்ததைப் பார்த்ததும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
வளவிலுள்ள பெண்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வளவு நாளும் ராதா அக்கா வீட்டுடன் அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தவர்கள், அன்று ராதா அக்கா வீட்டாரை யாரோ எவரோ என்பதுபோல் பாவித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். நடு வீட்டுக் கைலாசத்துப் பெரியம்மா அன்று காலையில்கூட அக்காவுடைய அம்மாவோடு வாசல் நடையில் உட்கார்ந்து பழக்கம் பேசிக்கொண்டிருந்தாள். அவள் இப்போது கூடிநின்ற பெண்கள் மத்தியில், “ஏளா, அது என்ன குடுத்தனக்காரங்க இருக்க வீடு மாதிரியா இருந்துச்சு? … கண்ட ஆட்களும் வாரதும் போறதுமால்ல இருந்திச்சு !…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா கூட, “இனிமே அவ வீட்டுக்கெல்லாம் போகாதே” என்று சொன்னாள்.
ராத்திரி எட்டு மணி போல அவர்கள் வீட்டில் எல்லோரும் வந்தார்கள். ராதா அக்காவை மட்டும் காணவில்லை. அவளுடைய அப்பா ராத்திரி வெகு நேரம் வரை வீட்டில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். ஒரே சண்டையாகக் கிடந்தது. ராதா அக்கா கோபால் அண்ணன் வீட்டுக்கு போய்விட்டாளாம். இரண்டு, மூன்று நாள் கழித்து ராதா அக்கா வீட்டில், வீட்டைக் காலி செய்துகொண்டு போய்விட்டார்கள்.
கோபால் அண்ணன் வீட்டு வழியாகத்தான் நாங்களெல்லாம் பள்ளிக்கூடம் போவோம். ராதா அக்கா வீட்டுக்குள் ஜன்னல் பக்கம் நின்றுகொண்டு எங்களைக் கூப்பிட்டு வைத்துப் பேசுவாள். வளவுக்காரர்களையெல்லாம் விசாரிப்பாள். அவளுக்கு எங்கள் பேரில் இருந்த பிரியம் மாறவே இல்லை. என்றாலும் அவள் கோபால் அண்ணன் வீட்டுக்குப் போன பிறகு, அவளுடன் பேச எனக்கு என்னவோ போலிருந்தது. பிறகு கொஞ்ச நாளில் கோபால் அண்ணனும் வீடு, கடையெல்லாம் விற்றுவிட்டு வெளியூர் போய்விட்டதாகச் சொன்னார்கள்.
கோவில்பட்டியிலோ, செங்கோட்டையிலோ இருப்பதாகச் சொன்னார்கள். அதற்கப்புறம் நான் ராதா அக்காவைப் பார்க்கவே இல்லை.
ராதா அக்காவைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினேன். மறுத்துவிட்டாள். காபி மட்டுந்தான் சாப்பிட்டாள். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் பேசுவதற்கு வசதியாக இருந்தது. நாங்கள் இருந்த டேபிள் பெரிய கல்தூணையொட்டி இருந்தது. பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ராதா அக்கா இப்போது செங்கோட்டையில்தான் இருக்கிறாளாம். கோபால் அண்ணன் இறந்து விட்டதாம். இரண்டு வருஷத்திற்கு முன்னால் நிமோனியா ஜூரம் வந்து இறந்திருக்கிறார். அண்ணனுடைய முதல் சம்சாரமான லீலா மதனிக்குப் பிள்ளையே இல்லை. ராதா அக்காவுக்குதான் ஒரு பெண் இருக்கிறது. அவளை அம்பாசமுத்திரத்தில்தான் கட்டிக் கொடுத்திருக்கிறது. அவளைப் பார்க்கத்தான் அக்கா நேற்று முன் தினம் செங்கோட்டையிலிருந்து வந்திருக்கிறாள். இப்போது ஊர் திரும்புகிற வழி. செங்கோட்டைக்குப் போன பிறகு, கோபால் அண்ணன் திரும்பவும் ஜவுளி வியாபாரத்தைத் துவக்கியிருக்கிறது. எதனாலோ வியாபாரம் விருத்தியாகவில்லை. போன புதிதிலேயே இரண்டு மூன்று வீடுகளை வாங்கிப் போட்டிருக்கிறது. அந்த வீடுகளிலிருந்து வருகிற வாடகையில்தான் ராதா அக்காவும், லீலா மதனியும் ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெளியே திரும்பவும் மழை தூற ஆரம்பித்திருந்தது.
“நீ கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுப் போகணும். லீலாக்காவும் உன்னைப் பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவா..” என்றாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. நெஞ்சு கனத்துப்போன மாதிரி இருந்தது. அந்த மனோநிலையில் அக்காவுடன் செங்கோட்டைக்குப் போக முடியுமென்று தோன்றவில்லை. வேறொரு சமயம் அவசியம் வருவதாகச் சொல்லி, வீட்டு அட்ரஸை வாங்கி வைத்துக் கொண்டேன். அக்காவுக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.
ராதா அக்கா குடை வைத்திருந்தாள். குடையை விரித்துப் பிடித்தாள். இரண்டு பேரும் தேரடிப் பக்கத்து வாசல் வழியாகப் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். நான் பேருக்கு குடைக்குள் தலையை மட்டும் நுழைத்திருந்தேன். முதுகுப் புறம், கையெல்லாம் நனைந்து கொண்டிருந்தது.
“குடைக்குள்ள வா !… முதுகெல்லாம் நனையுது பாரு .. கூச்சப்படாம பக்கத்துல வந்து நில்லு. கல்யாணமாகி பிள்ளைக்குட்டிக்காரனாகிட்டெ… இன்னும் கூச்சம் போகலியே… “ என்றாள்.
ஒரு விஷயம் ரொம்ப நாளாக என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. அதை அக்காவிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். கேட்டால் ஏதாவது தவறாகிவிடுமோ என்று தயக்கமாகவும் இருந்தது. இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு துளிர்த்திருக்கிற இந்த உறவைப் பாழாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அலைக்கழித்தது. இன்னொரு பக்கம் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை.
“என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே?” என்று அக்காவே கேட்டாள்.
”ஒண்ணுமில்லக்கா …”
“வாய்தான் ஒண்ணுமில்லேன்னு சொல்லுது.. ஆனா, மொகத்தைப் பார்த்தா அப்படித் தெரியலையே?”
அதற்கு மேலும் மனசைக் கட்டிப்போட முடியவில்லை. தயக்கத்தோடு ஆரம்பித்தேன்.
“தப்பா எடுத்துக்கிட மாட்டீங்களே?”
என் இடுப்பில் மெதுவாகக் குத்தினாள். “ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரியெல்லாம் பேசுதீயே? சும்மா சொல்லு?” என்றாள்.
“கோபால் அண்ணன் உங்க வீட்டுக்கு வந்தா நீங்க அந்த அண்ணன் கூடவே சிரிச்சுப் பேசிக்கிட்டு இருப்பீங்க .. அதெல்லாம் என்னன்னு எனக்கு அப்பம் தெரியாது. ஆனா அந்த அண்ணன் வந்தா மட்டும் நீங்க ஏதோ வித்தியாசமா இருக்கீங்கங்கிறது புரிஞ்சுது … “
உதடுகள் பிரியாதா மென்முறுவலுடன் ராதா அக்கா என்னைப் பார்த்தாள். “பெரிய ஆளுதான் ! … எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கியே?” என்றாள்.
“ஆனா கோபால் அண்ணாவோட சம்சாரம் லீலா மதினி எப்படி உங்களை ஏத்துக்கிட்டாங்க? அதுதான் அக்கா எனக்குப் புரியாத புதிரா இருக்கு .. “ என்றேன். ஏதோ வேகத்தில் கேட்டு விட்டேனே தவிரம் உள்ளூர மனம் தவித்துக் கொண்டிருந்தது. நான் கேட்டது அக்காவுடைய மனதைப் புண்படுத்தியிருக்குமோ? ஆனால், அவளுடைய முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. குனிந்து தரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கண்கள் கலங்கின. நான் பதறிப் போனேன்.
”மன்னிச்சிருங்கக்கா …” என்று அவசர அவசரமாகச் சொன்னேன். அக்கா என்னை அண்ணாந்து பார்த்தாள்.
“ச்சே! …. இதிலே என்ன இருக்கு மன்னிக்கிறதுக்கு? நீ அப்படி என்ன தப்பா கேட்டுட்டே? ஒண்ணுமில்ல …. பழசெல்லாம் ஞாபகம் வந்தது. அதான்… வேற ஒண்ணுமில்லே… “
திருநெல்வேலி போகிற பஸ் வளைந்து திரும்பியது. மழைத்தூறலில் இன்ஜின் ஓடுகிற சத்தமே வேறு மாதிரியாக இருந்தது. எங்களுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், தோளின் மீது முகம் வைத்துத் தூங்கி கொண்டிருந்த குழந்தையைத் துண்டால் போர்த்தியபடி பஸ்ஸைப் பார்த்து ஓடினார். வெள்ளாடு ஒன்று தெருப்பக்கமிருந்து வந்து எங்களுக்குப் பின்னால் சுவரோடு சுவராய் மழைக்கு ஒதுங்கியது. அதனுடைய முகத்தில் மழைத்துளிகள் வழிந்து கொண்டிருந்தன. முதுகு மட்டும் நனைந்திருந்தது.
“செல்லப்பா! … என்னை, கோபால் அண்ணனையெல்லாம்விட லீலா அக்கா ரொம்பப் பெரிய மனுஷி! அன்னைக்கு, நான் வீட்டை விட்டுப் போன அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான் ஒனக்குப் புரியும். அண்ணனும் நானும் ஏற்கனவே பேசி வச்சிருந்த மாதிரி, நான் வாய்க்காலுக்குப் குளிக்கப் போராப்பிலே, என் துணிமணிகளை எல்லாம் குடத்துக்குள்ளே போட்டுக்கிட்டு அப்படியே அண்ணன் வீட்டுக்குப் போயிட்டேன். மொதல்ல லீலா அக்காவுக்கு நான் எதுக்கு வந்திருக்கேன்னு தெரியலை. வாய்க்காலுக்குக் குளிக்கப் போறவா, சும்மா பேசிக்கிட்டு இருந்துட்டுப் போறதுக்காக வந்திருக்கான்னுதான் நெனைச்சிருந்திருக்கா. மத்தியானம் வரைக்கும் நான் போகலைன்னதும் ‘வீட்டுல ஏதாவது தகராறா’ன்னு கேட்டா. நான் என்னன்னு சொல்லட்டும். அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னுட்டேன் … பின்னே, ஒனக்குச் சக்களத்தியா வந்திருக்கேன்னா சொல்ல முடியும்? அவளைப் பார்த்தா சங்கடமா இருந்திச்சு. பேசாம வீட்டுக்கே திரும்பிப் போயிரலாமான்னு நெனைச்ச்சேன். அண்ணன் கடையிலேருந்து வந்ததும், அக்காவுக்குத் தெரியாமே அவங்கிட்டே சொல்லிட்டு வீட்டுக்கே போயிருவோம்னு இருந்தேன். அதுக்குள்ளே வீட்டிலேருந்து, வெசயம் தெரிஞ்சு அம்மாவும் அண்ணனும் வந்துட்டாங்க. ஒரே ரணகளமாயிட்டுது. நான் என்ன நெலயிலே வீட்டைவிட்டு வந்திருக்கேன்னு அப்பந்தான் அக்காவுக்குத் தெரிஞ்சுது. அப்போ அக்கா எங்க அம்மாவையும் அண்ணனையும் பார்த்து என்ன சொன்னா தெரியுமா? ‘அவ என் வீட்டுக்குத் தஞ்சமுன்னு வந்துட்டா …. இன்னமே அவ என் தங்கச்சிதான். எங்கூடத்தான் இருப்பா … நீங்களெல்லாம் சண்டை போடுறதா இருந்தா வெளியில போயிருங்கன்னு சொல்லிட்டா …. செத்துப்போன ஒங்க கோபால் அண்ணன், நான் எல்லாம் அவக் கால் தூசிக்குச் சமமாக மாட்டோம். அவ மனுஷப் பொறவியே இல்லை ….” என்றாள்.
சிறு குழந்தைகள் வைத்திருக்கிற கிலுக்குச் சத்தம் மாதிரி, தூறல் குடையில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தது. தேரை மூடியிருந்த தகரக் கூரையில் உச்சியில் ஒரு கிருஷ்ணப்பருந்து நனைந்து கொண்டே உட்கார்ந்திருந்தது. அக்காவை அனுப்பி வைப்பதற்காக செங்கோட்டை பஸ்ஸை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன்.
எழுத்தாளர் வண்ணநிலவனின் “ தேடித் தேடி” சிறுகதைத் தொகுப்பிலுள்ள இந்த சிறுகதை, ஆசிரியரின் உரிய அனுமதி பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது
‘இராதா அக்கா’ நினைவுகளைக் கிளறுகிற உணர்ச்சிப்பூர்வமான கதை. நானும் இதை மாதிரியான அக்கா தம்பி உறவை அடிப்படையாக வைத்து ‘வசந்த காலத்தில் உதிர்ந்த இலை’ என்றொரு சிறுகதை எழுதியருக்கிறேன். ஆனால், அதன் கதைப்போக்கு வேறு மாதிரி இருக்கும். ஆண்களில் பல பேருக்கும் இந்த மாதிரி பால்ய வயதில் அக்காக்கள் உண்டு. பல அக்காக்களுக்குசர சிறு வயது ஆண் குழந்தைகள்தான் நெருங்கிய நண்பர்கள். கல்யாணத்தில் மாப்பிள்ளைத் தோழனைப் போலக் கூடவே எங்கும் அலைவார்கள். பள்ளிக்கூடம் திரும்பியதும் அக்காவிடம் சென்றுவிடுவார்கள். பல நேரங்களில் அம்மாமார்கள் அவளோடு (அக்காக்களோடு) சேரக்கூடாது என்று தடுப்பார்கள். கண்டிப்பார்கள். அடியும் விழுவதுண்டு. அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு காதலனைப் போல அக்கா-தம்பி உறவை ரகசியமாய்த் தொடர்வார்கள். அக்காக்களின் காதலுக்கும், காதலனுக்கும் அடுத்த இடம் இந்தத் தம்பிகளுக்குத்தான். காலம் அக்காக்களையும், தம்பிகளையும் எலுமிச்சைப்பழத்தைத் துண்டாய் நறுக்கித் தூர எறிவதைப் போலத் திசைக்கொன்றாய்த் தூக்கிப் போட்டு விடுகிறது. காலம் கருணை காட்டினால் செல்லப்பா, ராதா அக்காவைப் போல எங்கேயாவது ஓரிடத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். காலம் எல்லோருக்கும் கருணை காட்டுமா என்ன?
நல்ல சிறுகதை… நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
என்ன சொல்வது ராதா அக்கா மாதிரி இனிய இளமை கால உறவுகள் எனக்கு கிடைக்க வில்லை. இருந்திருந்தால் வாழ்நாள் முழுக்க அசை போட்டு கொண்டு கழிக்கலாம்.
வண்ணநிலவனின் எழுத்துக்களின் இரசிகன் நான்.தொடர்கதையாக “கடல்புரத்தை”வாசித்த காலத்திலிருந்து,அவர் எழுத்துகளைத் தேடித்தேடி வாசிப்பேன்.”அன்பு” என்ற மகத்துவத்தை,கடல்புரத்தில் அவருணர்த்தியதுபோல, தமிழில் எவரும் எழுதவில்லை என்றே சொல்வேன் அவரின் “ராதா அக்காவை”வாசிக்க தந்த உங்களூக்கு என் நன்றிகள்.அவருக்கு என் அன்பும்,நன்றியும்.