செத்த காலேஜும் உயிர் காலேஜும்
கி.மு 280 ஆண்டுகளிலேயே அலெக்சாண்ட்ரியாவில் தாலமி மியூசியத்தை உருவாக்கினான். என்று வரலாறு சொல்கிறது. ஒட்டு மொத்த ஆசியாவிலும் அருங்காட்சியகங்கள் அமைத்த பெருமை வெள்ளையர்களையே சாரும், இன்று உலகத்திலேயே அதிக அருங்காட்சியகங்களைக் கொண்ட நாடு ஜப்பான், அங்கே 1800 அருங்காட்சியகங்கள் இருக்கின்றதாம்.
இந்தியாவில் முதல் அருங்காட்சியகம் துவங்கப்பட்டது கல்கத்தாவில் 1784, ஒரு வேளை அதற்கு முன்பும் துவக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவை அரசர்கள் ,சிற்றரசர்கள் ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனைகளில் கலைப்பொருட்களின் காட்சிக் கூடங்கள் ,விலங்கு கூடங்கள், வைத்திருந்திருக்கலாம் அது அவர்களது செல்வச் செழிப்பையும் அவர்களது பொழுதுபோக்குக்காகவும் வைத்திருந்தது. சாதாரண மக்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்படியான கூடங்கள் இருப்பதும் பலருக்குத் தெரியாது. அந்த நாட்களில் ஜமீன்தார்கள் வேட்டைக்குப் போகும் போது சிக்கும் புலி, சிறுத்தை, கரடி, மான், யானை, இவற்றின் குட்டிகளைத் தங்கள் குழந்தைகளுக்குப் பரிசாகத் தருவார்களாம் பிறகு அவற்றைப் பராமரிக்க ஆட்கள், மருத்துவர் என இதெல்லாம் வசதி படைத்த தனிப்பட்ட மனிதர்களின் படாடோபத்தின் அடையாளமாக இருந்தது. எளிய மனிதர்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால் வெள்ளையர்கள் அனைத்து மக்களுக்குமான அருங்காட்சியகங்கள் வழியே வரலாற்றுக்காலத்தை, உலகின் பல்வேறு உயிரினங்களை பொது மக்கள் அறிந்துகொள்ளவும், அதே நேரம் பொழுதுபோக்குக்காகவும் ஏற்படுத்திய உயிர்காலேஜ், செத்தகாலேஜ். இதில் முதலில் தோன்றியது செத்த காலேஜ் என்கிற அருங்காட்சியகம் ( மியூசியம் ).
1846ல் மெட்ராஸில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க கிழக்கிந்திய கம்பெனி லண்டனிலிருந்து அனுமதி பெறுகிறது. அதனடிப்படையில் அரசு மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான எட்வர்ட் கிரீன் பல்பர் அவர்களை இயக்குனராகக் கொண்டு புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியின் முதல் மாடியில் 1851ல் 1100 தொல் பொருட்களுடன் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்கிறார்கள். அந்த கட்டிடம் மிகப் பழமையானதாக பாதுகாப்பற்று இருப்பதால் 1854 டிசம்பரில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது. சரி அருங்காட்சியகம் என்றால் மக்கள் வரவேண்டுமல்லவா …அதுதான் நடக்கவில்லை. அருங்காட்சியகம் தொடங்கி இரண்டாண்டுகள் ஆன நிலையில் அருங்காட்சியகத்தைப் பார்க்க வர ஆர்வம் காட்டாத மக்களை ஈர்க்க பால்பர் ஒரு புதுமையைச் செய்ய திட்டமிடுகிறார். பிரியாணி பொட்லமும் கொக்கோ கோலா இலவசம் என்று சொல்வதற்குப் பதிலாக அருங்காட்சியகத்தில் 1 சிறுத்தை, 1 புலி, 1 உராங்குட்டான் இவற்றைக் காட்சிக்கு வைத்ததும் மக்கள் ஓரளவு வரத் தொடங்குகிறார்கள். செத்த விலங்குகளின் பாடம் செய்த உடல்களைப் பார்ப்பதைவிடவும் உயிருள்ள விலங்கைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஊக்கமடைந்த மருத்துவர் பால்பர் தன் நண்பரான கர்நாடக நவாபிடம் பேசி கொஞ்சம் மிருகங்களை அனுப்பி வைக்கும்படி கேட்கிறார் அவரும் நிறைய விலங்குகளை அனுப்புகிறார். இப்படியாக 1856களில் மியூசியத்தில் ஏறக்குறைய 360 விலங்குகள் சேர்ந்துவிட்டன…அதோடு சுற்று வட்டார மக்கள் விலங்குகளின் கர்ஜனை உறுமல்களால் நிம்மதி இழப்பதாகப் புகார் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த சூழலில் மெட்ராஸ் கார்பரேசன் விலங்குகள் பராமரிப்பை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது. மக்களின் புகார்கள், மியூசியத்தின் தனித்தன்மையைப் பாதுகாக்க, அதே நேரம் விலங்குகள் பெருகியதால் ஏற்பட்ட இடப் பற்றாக்குறை காரணமாக உயிர்காலேஜை 1863ல் 116 ஏக்கர் பரப்பளவு கொண்ட பீப்புள் பார்க் அதாவது மைலேடிஸ் பார்க்கின் வட மேற்கு மூலையில் மிருகக்காட்சி சாலைக்காக 12 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்குகிறார்கள் அதாவது ரிப்பன் கட்டிடத்திற்குப் பின்புறமாக வடக்கே பழைய நேரு விளையாட்டரங்கம் அதற்கும் 100 மீட்டர் வடக்கே தள்ளி உயிர்காலேஜ் வளாகம் நிறுவப்பட்டது அதற்கும் வடக்கே ஆஷ்லி சமூக அரங்கு ஒன்றும் அதற்கு எதிரே சால்ட் கோட்டர்ஸ் என்கிற சால்த்து கொட்டாவும் இருந்தது. அங்கிருந்து வடக்குப் புறமாகப் பார்த்தால் மின்நிலையம் பிரமாண்டமாகத் தெரியும்.
இது தான் நாட்டின் முதல் அறிவியல் தன்மையில் வடிவமைக்கப்பட்ட உயிர்காட்சிசாலை..அன்றைய லண்டனில் உள்ள மிருகக்காட்சியகத்துக்கு இணையானதாகச் சொல்லப்பட்டது. நுழைவாயிலுக்கு சைடாம்ஸ் சாலை வழியாகவும் வரலாம், இன்னொரு வழியும் இருக்கிறது அதற்கு முன்பாக சில விடயங்களைப் பார்ப்போம்.
இவ்வளவு சீரும் சிறப்புமாகக் கட்டமைக்கப்பட்ட உயிர்காலேஜிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்க உயிர்காலேஜுக்கு இரண்டாம் உலகப்போரின் வடிவில் ஆபத்து வருகிறது அது தான் இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பானிய ஜீரோ விமானங்கள் வங்கக் கடல் பரப்பில் பறந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்துகிறது அதனால் பீதியுற்ற மெட்ராஸ் வணிகர்களான வட இந்தியப் பணக்காரர்கள், உள்ளூர் பணக்காரர்கள் ஒரே குரலில் மிருக காட்சி சாலை மீது குண்டு வீச்சு நடந்தால் கூண்டு சிதைந்து தப்பும் மிருகங்களால் மக்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால் அவற்றை வேறு எங்காவது மாற்றிவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள்….மிருகங்களை மைசூருக்கும், ஈரோட்டுக்கும் மாற்ற திட்டங்கள் தயாராக, போருக்கு அஞ்சி மேற்கு நோக்கிப் போகும் மக்களுக்கு ரயில்களை ஏற்பாடு செய்வதால் விலங்குகளை வேறிடத்திற்கு அனுப்புவதற்காக ரயில்களை ஏற்பாடு செய்யக் கால தாமதமாகும் என்ற நிலையில் மிருகங்களை சுட்டுக்கொல்ல முடிவெடுக்கிறார்கள். இதற்காக மலபார் போலீஸ் வரவழைக்கப்படுகிறது…அவர்கள் தங்கள் வீர தீர பராக்கிரமத்தால் கூண்டுக்குள் சிக்கியிருக்கும் அப்பாவிகளான
3 ஆண் சிங்கம், 6 பெண் சிங்கம், நான்கு புலி, 8 சிறுத்தைகள், நான்கு கரடி, 1 கறுஞ்சிறுத்தை, என 1 மணி நேரத்தில் சுட்டுக்கொன்றார்களாம். இந்தச்செய்தி நமக்கு வருத்தத்தை உண்டாக்கினாலும், உண்மையில் நம்மூர் ஜமீன்தார்களும், சிற்றரசர்களும், அரசர்களும், வெள்ளையர்களுமாகச் சேர்ந்து நம் காடுகளில் ஆயிரக்கணக்கிலிருந்த புலி சிறுத்தைகளைப் போட்டி போட்டுக்கொண்டு படாடோப கேளிக்கைக்காக சுட்டு ஒழித்துக்கட்டிவிட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை…. நல்ல வேளையாக மலபார் போலீஸ் குறிபார்த்து சிங்கத்தின் வாயில் சுட்டுக்கொல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் மூன்று சிங்கக் குட்டிகள் கர்நாடகா போய்ச் சேர்ந்திருந்தன அதனால் இக்கொடும் பலியிலிருந்து அவை தப்பின. மிஞ்சியிருந்த மக்களுக்குத் தீங்கு செய்யாத வரிக்குதிரை, யானை, ஒட்டகச்சிவிங்கி, இவை ரயில் மூலம் ஈரோடு, மைசூர் காப்பகங்களுக்குக் கொண்டு போகப்பட்டன. பிறகு 1945ல் போர் முடிவுக்கு வந்ததும் திரும்பவும் மெட்ராஸ் உயிர் காலேஜ் புதுப் பொலிவுடன் இயங்கத் தொடங்கியது. இந்த கலவரங்கள் ஓய்ந்து பத்தாண்டுகள் கழிந்து உயிர்காலேஜின் நூற்றாண்டு விழாவும் 1955ல் கொண்டாடப்பட்டது அப்படிக் கொண்டாடப்பட்டபோது கட்டப்பட்டதுதான் அந்த புடைப்பு சிற்பங்களுடனான செந்நிற கோபுரம் அந்த நுழைவாயிலுக்கு டார்வின் கேட் என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.
இந்த மிருகக்காட்சி சாலைக்கு உலகின் பல அறிஞர்கள் வந்திருக்கிறார்கள் அப்படி வந்த சிகாகோ உயிரியல் பூங்கா இயக்குநர் மெர்லின் பெர்கின்ஸ் 1961 சென்னை உயிரியல் பூங்காவைப் பார்வையிட்டு இங்கு பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இவ்வளவு விலங்குகளுக்கு 12 ஏக்கர் பரப்பளவு என்பது மிகக் குறைவு 20 ஏக்கர் நிலப்பரப்பாவது இருந்தால்தான் விலங்குகள் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னாராம்.
1963ன் குறிப்பின் படி உயிர் காலேஜின் விலங்குகளுக்கான ஒரு நாள் உணவு செலவு 200 ரூபாய் இதில் 25 கிலோ ஆட்டுக்கறி, 120 கிலோ மாட்டுக்கறி, காய்கறிகள், விதைகள், புல் தென்னங்கீற்றுகள், மலைப்பாம்புக்கு முயல், பன்றி தொடையென இவ்வளவும் பட்டியலில் இருக்கிறது.
நிறுவப்படாத கூடுதல் தகவலாக பேசின் பிரிட்ஜ் நாய்கிடங்கிற்கு மாநகராட்சி ஊழியர்களால் பிடித்து வரப்படும் நாய்களின் உரிமையாளர்கள் வராவிட்டால் நான்கு நாட்களுக்குப்பிறகு நாய்கள் அடித்துக்கொல்லப்படும். நாய்களின் இறைச்சியை சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் போட்டார்கள் என்று ஒரு கதை உண்டு …அது கண்டிப்பாக நடந்திருக்க வாய்ப்புண்டு 200 ரூபாயில் கையாடல் செய்ய இந்த வேலையைச் சட்ட விரோதமாகச் செய்திருக்கக் கூடும்….அதை அப்படி சட்டப்படி செய்திருந்தாலும் தப்பில்லை அவற்றை வீணே அடித்துக் கொலை செய்து நூற்றுக்கணக்கில் வேன்களில் அள்ளிப் போவதை நான் பல முறை கண்ணெதிரே பார்த்திருக்கிறேன். ஓட்டேரியில் சுடுகாட்டின் பின்புறம் பெரிய பள்ளத்தில் அதைக்கொட்டுவார்கள் அது அழுகி கொடூரமான நாற்றைத்தை கிளப்பும். அது வேறு கதை. உயிர்காலேஜ் இருந்த இடம் குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கிறது அதைத் தீர்க்க சைடாம்ஸ் ரோடு வழியாக உயிர்காலேஜ் போகும் வழியைப் பற்றிப் பேசினோம். அந்தச் சாலை ரிப்பன் கட்டிடத்துக்கு மேற்கே பெரிய மேட்டுக்குப் போகும் சாலை, இன்னொரு வழி மூர் மார்கெட் கட்டிடத்துக்கும் விக்கடோரியா பொது கூடத்துக்கும் இடையில் வடக்கு நோக்கிப் போகும் பாதையில் நடக்கும் போது நமக்கு இடது பக்கம் அல்லிகுளம் இருக்கும் அதன் கரையில் பழைய துணி, முதல் கிராம போன், புத்தகங்கள், இன்னும் என்னென்வோ அங்கு கிடைக்கும். மரங்களடர்ந்த அந்தப் பாதையில் நடக்க வலது புறம் அசோகா மருத்துவமனை வெள்ளையர் கால தர்மாஸ்பத்திரி அங்கே மலேரியாவுக்கு மருந்து தருவார்கள். மேலும் நேராக நடந்தால் சாலை நடுவில் செயற்கை குளம், வெளிர்நீல பீங்கான்கள் பதித்த இரண்டு அலங்கார குளங்கள் சாலைக்கு நடுவே இருக்கும். அதன் கரைகளில் ஒரு பெண் குடத்துடன் நிற்கும் சிலை, அலங்கார வார்ப்பிரும்பாலான விளக்கு கோபுரங்கள் இருக்கும். அதனெதிரே மை லேடிஸ் பார்க்கின் நுழைவாயில் இருக்கும். நாம் இப்போது உயிர்காலேஜிக்கு போக இடதுபுறம் திரும்பி பொது போக்குவரத்து அற்ற சாலையில் 150 அடி தூரம் நடக்க வலது புறம் சிறுவர் ரயில் புகையைக் கக்கிக்கொண்டு மெதுவாகக் கூக்குரல் எழுப்பியபடி கடந்து போகும், இடது புறம் தந்தை சிவராசு மேயராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட மக்கள் விளையாட்டரங்கம் இருக்கும் ( நேரு மறைவுக்குப்பிறகு நேரு விளையாட்டரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்டது ) நீங்கள் மீண்டும் வலது புற சாலையில் திரும்பினால் இடது புறம் அடர்ந்த மரங்களினடியில் கூடை முடைகிற ஆட்கள் மூங்கிலைச் சீவி பதப்படுத்திக்கொண்டிருப்பார்கள் நரிக்குறவர்கள் கூடாரம் அடித்து மணி கட்டிக்கொண்டிருப்பார்கள். நகரிலிருந்து பிடித்து வரப்பட்ட பூனைகளைத் தீயில் வாட்டுகிற காட்சியைப் பார்க்கலாம் இந்தக் காட்சிகள் சைடாம்ஸ் ரோடு சாலை வரை பரவியிருக்கும் உயிர் காட்சி சாலைக்கு வெளியே இந்த கூத்துகளையெல்லாம் தாண்டி நடந்தால் 150 அடி தொலைவில் அந்த மிருகக்காட்சி சாலை தெரியும் அதன் வாயிலுக்கு முன்பாக பத்து பேருக்குக் கூடுதலாக நான் கும்பல் பார்த்ததில்லை மூர்மார்கெட் வந்தால் தான் ஆட்கள் கும்பலாக இருப்பார்கள். நுழை வாயிலின் இடது புறம் நுழைவு சீட்டு அலுவலகம், நுழைவுக்கட்டணம் 25 பைசா. பள்ளி ஆசிரியர்களால் அழைத்துவரப்படும் மாணவர்களுக்குத் தனிச் சலுகை… அங்கே நுழைந்தவுடன் 12 அடி உயர விசாலமான கூண்டுகளில் பஞ்சவர்ணக்கிளிகள் இருக்கும் அடுத்து குரங்கு என வரிசையாக சிங்கம் புலிகளுக்குத் தீனி போடுவதைப் பார்ப்பது ஒரு தனி மகிழ்ச்சி அதற்கு உணவு தருபவர் கூண்டின் உள் பக்கமாக இருக்கும் ஒரு கதவைத் திறப்பார் அதை வெளியிலிருந்து இயக்கும் ஒரு அமைப்பு இருக்கும் அதைத் திறந்தவுடன் புலி அதன் வழியே பக்கத்து அறைக்குப் போய்விடும் பிறகு அந்தக் கதவை தாழிட்டு கூண்டுக்குள் போய் மரப்பலகையில் இறைச்சியை வைத்துவிட்டு வந்து வெளிக் கதவைப் பூட்டி புலியிருக்கும் கூண்டைத் திறந்துவிடுவார். புலி எந்த அவசரமும் இல்லாமல் மென்நடை நடந்து வந்து இறைச்சியை விழுங்கும் …சில வேலைகளில் சிறுத்தை குட்டிகளை நம் கையில் தூக்கித் தருவார்கள் அதற்குத் தனியாக சில்லறைகள் தர வேண்டும் நிர்வாகத்திற்குத் தெரியாமல் நடக்கிற வேலையிது. எனக்கு இதில் சொந்த அனுபவம் உண்டு 2 ரூபாய் தந்து குடும்பமே சிறுத்தை குட்டியைக் கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. முக்கியமாக எம்ஜிஆர் சிங்கம் நான் பார்க்கும் போது அது அவ்வளவாக ஆரோக்கியமாக இல்லை ஆனால் அதைப் பார்த்து சிலர் ராஜா ராஜா என்று கத்த அது அமைதியாகக் கிடக்கும் பெரிதாக வாயைத் திறந்து கொட்டாவி விட வாயைத் திறந்த போது அங்கிருந்து நாங்கள் ஓடுவதும் பிறகு கூண்டைத் தட்டுவதும் விளையாட்டுகள் நினைவுக்கு வருகிறது பாவம் அந்த சிங்கம் இதனால் நிம்மதியிழந்திருக்கும்…உயிர் கலேஜில் ஒரு ஏரியும் இருந்தது. அதில் படகு சவாரிகள் நடக்கும்.
1955ல் உயிர்காலேஜின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது அதற்காக நூற்றாண்டு விழா மண்டபம் கட்டப்பட்டது டீகோ மாடல் செந்நிற கோபுரத்துடன் வடிக்கப்பட்ட நுழைவாயிலுக்கு டார்வின் பெயர் சூட்டப்பட்டிருந்து. அந்த கோபுரத்தில் மேலிருந்து கிரானைட்டில் செதுக்கிய உயிரினங்களின் புடைப்பு சிற்பங்கள் இருக்கும் …நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சோவியத் ரஷ்யா உயிர் காலேஜிக்கு இரண்டு போலார் கரடிகளைப் பரிசாகத் தந்தார்கள் ஆனால் வெப்பச்சூழல் காரணமாக அவையிரண்டும் வெகு காலம் உயிரோடு இல்லையென்பது வருத்தத்துக்குரியதே. அமெரிக்க இயக்குனர்
எல்லிஸ் டங்கன் எம்ஜிஆர் படங்களை இயக்கியவர் உயிர் காலேஜ் பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கியிருக்கிறாராம்.
1963ல் வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது.
உயிர்காலேஜிக்கு கிழக்கே ஓடும் பக்கிங்காம் கால்வாய் கழிவு துர்நாற்றமும், உயிர்காலேஜின் நான்கு புறமும் ஓடும் வாகனங்களின் புகையும் காரணமாகச் சொல்லப்பட்டது. அந்த நாட்களில் வாகனங்கள் குறைவாக இருந்தாலும், அவை வெளியே தள்ளும் புகையின் நச்சு அளவு அதிகமென்பதுடன், ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கிழக்குப்புறத்திலிருந்த அனல் மின்நிலையத்திலிருந்து வெளியேறும் கரிதூசு, சாம்பல், சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் புகை வண்டிகள் வேறெங்கும் எழும்புவதை விட சென்ட்ரல் நிலையத்தில் அதிக புகையைக் கக்கும். நாட்டின் அத்தனை ரயில்களும் வரும் இடம் என்பதாலும், விலங்குகளும், பறவைகளும் அதிகம் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு விலங்குகள் இறந்துபோவதாக புகார்கள் எழுந்தன. அதைவிடச் சுற்று வட்டாரமெங்கும் இரவில் புலி,சிங்கம், சிறுத்தைகளின் உறுமல்கள் சிலருக்கு அவதியாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் இப்போதும் எழ தொடங்கியது நான் பல வேலைகளில் கடும் உறுமலை இரவில் கேட்டிருக்கிறேன் உயிர்காலேஜில் இருந்து கிழக்கு பக்கத்தில் தொடங்கும் முதல் குடியிருப்பு வரிசையில் எங்கள் வீடு இருந்தது.
விலங்குகளின் பாதுகாப்பு கருதி உயிர் காலேஜை வேறிடத்துக்கு மாற்றத் திட்டம் எழ அவர்கள் முதலில் புறநகர் பகுதியான அமைந்தகரையைத் தேர்ந்தெடுத்து அங்கே 100 ஏக்கரில் மிருகக்காட்சி சாலையை அமைக்கத் திட்டம் போட்டார்கள். ( அதற்கும் ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறது இன்றைய அண்ணா நகர். அவர்கள் திட்டம் போடும் போது அண்ணாநகர் உருவாகவில்லை ) கூவத்தின் மாசற்ற நீர் ஓடி வரும் இடமென்பதுடன் பெரிய புதர் காடுகளுடனான பசுமையான நிலப்பரப்பு என்பதால் அங்கு மாற்ற நினைத்தார்கள்..அதுவும் தள்ளிப்போக கடைசியாக எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1490 ஏக்கர் நிலப்பரப்பில் மிருகக்காட்சி சாலை 1985ல் வண்டலூருக்கு அண்ணா உயிரியல் பூங்கா என்கிற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பாவம் எம்ஜிஆர் சிங்கத்துக்கு வண்டலூர் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் கதை முன்பே முடிந்து. அதன் தோலை உரித்து பாடமாக்கி வைத்திருந்தார்கள் இப்போதும் அது எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின் குறிப்பு : செத்தகாலேஜில் 1863ல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பல்லாவரத்தில் கண்டெடுத்த கற்கால மனிதரின் கற்கருவிகள், ( கீழடி நாகரீகத்திற்கும் முன்பான காலம் ) ஆந்திர எல்லை பூண்டியில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்லாவரத்தில் மேலும் ஆய்வுகள் நடத்தப்படவில்லை…அந்த ஆய்வுகள் தொடர வேண்டும். இதே காட்சியகத்தில் மிகப்பழமையான பிராமி எழுத்தும், அமராவதி ஆற்றுப்படுக்கையில் கண்டெடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லில் செதுக்கிய புத்த சிற்பமும் இருக்கிறது.
-கரன் கார்க்கி
வழமை போல கட்டுரை நிறைய தகவல்களை கொண்டிருக்கிறது.