உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் “தெய்வத்தன்மையை” விட்டு இறக்கப்பட முடியாதது. நாத்திகனாக இருப்பவன் கூட கிறிஸ்துவின் “அன்பு செய்தல்” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவே செய்வான். ஒரு இடதுசாரி சிந்தனையாளன் கிறிஸ்துவினுள் உறையும் சமத்துவ சமுதாயத்துக்கான ஏக்கத்தை அடையாளம் காண முயலலாம். ஆனால் கிறிஸ்துவை நாம் என்னவாக கற்பனை செய்தாலும் ஒரு எல்லைக்கு கீழே கிறிஸ்துவை இறக்கத் துணியமாட்டோம். கிறிஸ்துவை அணுகிப் பார்ப்பது நம் இருப்பினை தொந்தரவு செய்யும் ஒரு விஷயமாக வாய்ப்பிருக்கிறது. கிறிஸ்து விசேஷ சக்திகளுடன் பிறக்கவில்லை. அரசினை எதிர்க்கவோ அதிகாரம் பெறவோ அற்புதங்களை நிகழ்த்தவில்லை. கிறிஸ்துவின் இந்த “அற்புதமின்மை” தான் அவரிடத்தில் நம்மை விலக்கமும் எச்சரிக்கையும் கொள்ளச் செய்கிறது. நம் மனதில் ஆழ்த்தில் படிந்து போயிருக்கும் ஒரு லட்சிய வாழ்வுக்கான ஏக்கத்தை நம்முடைய தர்க்கமனம் எதிர்முனையில் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். ஒழுங்குகளற்ற உலக இயக்கத்தில் நம்மால் விதிகளைச் சார்ந்திருக்க இயலுமேயன்றி லட்சியத்தை சார்ந்திருக்க இயலாது என்று நம் தர்க்கமனம் நம்மை நம்ப வைக்கிறது. லட்சிய வாழ்வுக்கான சாத்தியங்கள் கண் முன் தட்டுப்படும் போதெல்லாம் ஒன்று அதனை தர்க்கத்தால் உடைக்கிறோம் அல்லது அந்த சாத்தியத்துக்கு தெய்வத்தன்மை கொடுத்து தள்ளிநின்று கொள்கிறோம். கிறிஸ்துவுக்கு நிகழ்ந்ததும் இதுவே. கிறிஸ்துவின் இறுதிச் சபலம் என்ற இந்த நாவல் நம்மை அபாயகரமான நெருக்கத்தில் கிறிஸ்துவை தரிசிக்கச் செய்கிறது.
பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் இடதுசாரி அறிவுஜீவியான அருணாசலம் கோபமும் ஆற்றாமையுமாக கதிரிடம் கேட்பான். “பேரம் பேசுவதற்கான ஒரு மேசையை உருவாக்குவதுதான் இந்த லட்சியவாதத்தின் பயனா?” என்று. நம்முடைய லட்சியத்தை நான் என்னவாக வேண்டுமெனினும் உருவகிக்கலாம். உலகின் இறுதி மீட்பு நாம் நம்பும் லட்சியத்தில்தான் இருக்கிறது என்று ரகசியமாக நாம் நம்பலாம். ஆனால் அந்த லட்சியம் அல்லது கனவு யாருடன் உரையாட முற்படுகிறதோ அவர்களுக்கு என்னவாக பொருள்படுகிறது என்ற கோணத்தில் பெரும்பாலும் லட்சியவாதிகள் சிந்திப்பதில்லை. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக வெறும் பகற்கனவாக நடைமுறைக்கு ஒத்துவராததாக சமூகம் பயணிக்கும் திசைக்கு எதிராக பயணிப்பதாக என எப்படி வேண்டுமெனினும் அது பொருள் கொள்ளப்படலாம். அவ்வாறு “பொருந்தாதவை” என்று கருதப்பட்ட லட்சியங்கள்தான் மானுட வரலாற்றை கட்டமைத்துள்ளன என்பது நகைமுரண்தான். ஒரு லட்சியவாதி வாழும் காலத்தில் பொருந்தாது அவன் லட்சியம் ஒதுக்கப்படும்போது அவன் மனம் அடையும் பதற்றங்களையும் வீழ்ச்சிகளையும் சொல்வதாக கிறிஸ்துவின் இறுதிச் சபலம் நாவலை வாசித்துச் செல்ல முடியும். பல நுண்ணிய அக மாற்றங்களை சித்தரிக்கும் இந்த நாவல் பல்வேறு வகையான கோணங்களில் இருந்து வாசிப்பினை சாத்தியப்படுத்துகிறது.
அபத்தவாதத்தின் தரப்பாக நின்று கூட இந்த நாவலை வாசிக்க இயலும். இயேசுவின் “புறவயமான” வரலாற்றுப் புனைவாகவும் வாசிக்கலாம். நான் இந்த நாவலை தெய்வீகத் தன்மைக்கும் லௌகீக இச்சைகளுக்கும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய இடைவெளியை அழித்துவிட்டு இந்த இரு தன்மைகளுக்கு இடையேயும் அல்லாடும் ஒருவனின் அகத் தடுமாற்றங்களின் விசாரணையாக வாசிக்க விரும்புகிறேன்.
இயேசு காணும் ஒரு கனவிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. அந்தக் கனவின் வழியாக யூதர்களின் ஏக்கம் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் யூதர்கள் தங்களுக்கான மீட்பினை நல்கும் ஒரு தேவதூதனுக்காக காத்திருக்கின்றனர். ரோமப் பேரரசின் கீழ் அடிமைகளாக துயர் நிறைந்த வாழ்க்கையை மேற்கொள்கிறவர்களின் தேவதூதனுக்கான ஏக்கம் உச்சத்தில் இருக்கும் காலகட்டமாக இயேசுவின் வாழ்நாள் சித்தரிக்கப்படுகிறது. இயேசு தன் கனவில் யூதாஸைக் காண்கிறார். செந்நிற தாடியுடைய பெரிய உடல் கொண்ட முரடனாக யூதாஸ் வருகிறான். இயேசு அவனை அஞ்சுகிறார். அவன் தன்னை கொன்று விடுவான் என்ற அச்சமும் வன்முறை வழியிலான புரட்சியின் மூலம் யூதர்களை மீட்க முடியும் என்ற அவன் நம்பிக்கையின் மீதான பிரம்மிப்பும் கொண்டவராக இயேசு அக்கனவில் தெரிகிறார். அக்கனவின் தொடர்ச்சி போல இயேசுவின் குடும்பம் சித்தரிக்கப்படுகிறது. நோய்மை கொண்ட தந்தை. பெரிதாக சோபிக்காத சகோதரர்கள். மகனுக்கு மணமாகவில்லை என்பதை எண்ணி வருந்தும் இயேசுவின் தாய் மேரி.
ரோம் மீட்புக்கான கற்பனையை மக்கள் மனதில் விதைக்கும் தூதர்களை வேட்டையாடுகிறது. அந்த வேட்டைகளில் ஒன்றாக ஒரு மதப் புரட்சியாளர் சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாள் இயேசு இக்கனவினைக் காண்கிறார். அந்த புரட்சியாளனுக்கான சிலுவையை தயாரிப்பது இயேசுதான். சக யூதனை அறைந்து கொல்வதெற்கென சிலுவை தயாரித்துக் கொடுக்கும் தச்சனை மக்கள் வெறுக்கின்றனர். ரோமானியர்களின் ஆட்சியில் எந்த நலனையும் கண்டுவிட முடியாத யூதர்கள் திருவிழாவுக்குச் செல்வது போல அந்த சிலுவை ஏற்றத்தை காணச் செல்கின்றனர். இயேசுவும் தான் செய்த சிலுவையை எடுத்துக் கொண்டு அங்கு செல்கிறார். சிலுவையில் அறையப்பட்டவரின் ரத்தம் தோய்ந்த துண்டு ஒன்றினை இயேசுவுக்கு ஒரு ரோமானிய வீரன் ஏளனமாக பரிசளிக்கிறான். அதனைத் தலையில் கட்டிக்கொண்டு இயேசு திரும்புவதில் இருந்து அவரது பயணம் தொடங்குகிறது.
பைபிளின் வழியாக அல்லது கதைகளின் வழியாக இயேசுவை அறிந்த யாருக்கும் இந்த சித்தரிப்புகள் கடுமையான மன விலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் வறுமையையும் அடக்குமுறையையும் அதில் உழலக்கூடிய மக்களின் மனநிலையையும் உண்மைக்கு நெருக்கமாக (பின்னாட்களில் ஒரு தூதன் வந்து போக்குவதற்காக இந்த துயர்கள் நீடிக்கின்றன என்கிற வகையில் அல்லாமல்) சித்தரித்திருப்பதை தவிர இயேசுவின் வாழ்க்கையில் இந்த நாவல் பெரிய மாற்றங்களை புகுத்திவிடவில்லை என்பதை சில அத்தியாயங்களிலேயே கண்டு கொள்ள முடிகிறது. கடவுள் இயேசுவை துன்புறுத்துகிறவராகத்தான் நாவலின் தொடக்கத்தில் வருகிறார். இயேசுவை பின் தொடரும் காலடிகளாக இயேசுவின் தலைக்குள் காலின் உகிர்களை செலுத்தும் கழுகாகத்தான் இருக்கிறார். மகதலீனை மணமுடித்துக் கொள்ள இருபது வயதில் அவளைத் தேடிச் செல்லும் இயேசுவை தடுக்கிறார். இயேசுவை மணமுடிக்க இயலாத ஆற்றாமையில் மகதலீன் விலைமகளாகிறாள். யூதப் புரட்சியாளனுக்கு இயேசு சிலுவை செய்வதும் கடவுளின் ஆணைப்படியே நிகழ்கிறது.
இயேசுவின் இந்த தடுமாற்றங்களை “மேலிருந்து” வருவதாகக் காண்பதற்கு பதிலாக அவருள்ளே ஏற்படுவதாகவும் வாசிக்க நாவல் இடம் தருகிறது (The kingdom of god is within you?). இயேசுவுக்குள் நடைபெறும் போராட்டங்கள் நன்மை தீமை என தெளிவாக வரையறுக்கப்பட்ட இரண்டுக்கு இடையே நடைபெறுவதல்ல.மனித இயல்புக்கும் மனித இயல்பினைத் தாண்டிய தெய்வத்தன்மைக்கும் இடையே நடைபெறுவது.
தலையில் இரத்தம் தோய்ந்த துண்டினை கட்டிக்கொண்டு இயேசு துறவிகள் மடத்துக்கு புறப்படுகிறார். செல்லும் வழியிலேயே மக்தலீனை பார்க்கத் தோன்றுகிறது. மக்தலீனின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக அவளிடம் சென்று வர அவள் குறித்து பேசிக்கொள்ள இயேசு இறுதியாக அவளைப் பார்ப்பதெற்கென காத்திருக்கிறார்.
“இன்னும் யாரும் இருக்கிறீர்களா?” என்று அவள் கேட்டதும் அவளை சந்திக்க இயேசு அறைக்குள் நுழைகிறார். உடல் முழுக்க கடித்தடங்களும் வியர்வையும் பெருக நிர்வாணமாகக் கிடக்கும் மக்தலீனை இயேசு சந்திக்கிறார். அவரை எதிர்பார்க்காத மக்தலீன் வசைபாடத் தொடங்குகிறாள். “உனக்கு என் உடல் வேண்டும். அதனை மறைத்துக் கொண்டு என் ஆன்மாவை காக்கப் போவதாக நீ சொல்கிறாய். பெண்ணின் ஆன்மா அவள் உடல்தான். இவ்வுடலை எடுத்துக் கொள். இதனை முத்தமிடுவதன் வழியாக என் ஆன்மாவை நீ காக்க முடியும்” என்கிறாள்.
எந்த ஆணும் அந்த கணத்தில் இயல்பாக செய்யத் துணிவதை இயேசு மறுதலிக்கிறார். இயல்புக்கும் இயல்பினைத் தாண்டிய தன்மைக்குமான போராட்டம் இயேசுவுக்குள் இப்புள்ளியில் தொடங்கி விடுகிறது. தன் மீதான மக்தலீனின் காதலையும் அவள் மீதான தன்னுடைய விருப்பத்தையும் இயேசு அக்கணம் தெளிவாகவே உணர்கிறார். ஆனால் அவ்விருப்பத்தை மறுதலித்து மடலாயம் செல்கிறார். அங்கு அவரைக் கொல்வதற்கென (புரட்சியாளனை அறைய சிலுவை செய்து கொடுத்ததற்கென) யூதாஸ் காத்திருக்கிறான். “உன் விருப்பம் அதுவென்றால் என்னைக் கொன்றுவிடு” என்று சொல்லும் இயேசுவை யூதாஸ் கடுமையாக வெறுக்கிறான். உயிருக்கென தன்னிடம் மன்றாடாத உயிர் பயமற்ற ஒருவனை யூதாஸால் கொல்ல இயலவதில்லை. வன்முறை மீதான அவனது நம்பிக்கையின் மீது முதல் கல் இப்புள்ளியில் விழுகிறது. முரணாக இயேசு தெய்வத்தன்மை அடையத் தொடங்குவதும் அப்புள்ளியில்தான். இயேசு யூதாஸைவிடத் தன்னை உயர்ந்தவனாக உணரும் இடம் என்றும் இதனைச் சொல்லலாம். பாலைவனத்தில் பெரும் காற்றாக வீசும் ஜெகோவாவை சற்று முன் தரிசித்திருந்த இயேசுவின் மனம் யூதாஸ் தன்னைக் கொல்ல வரும் கணத்தில் பரிபூரண அமைதியைக் கொண்டிருக்கிறது.
அடுத்த நாளில் வெள்ளையுடை அணிந்தவராக இயேசு ஜெபிதியின் திராட்சை தோட்டத்துக்கு வருகிறார். பராபஸ் தலைமையில் மக்தலீனை கொல்ல வரும் கூட்டத்தில் இருந்து அவளைக் காக்கிறார். இந்த இடத்திலும் பராபஸை இயேசுவுக்கு ஆதரவாக யூதாஸ்தான் எதிர்த்து நிற்கிறான். இயேசுவின் முதல் பிரசங்கம் தொடங்கும் இடம் இது. கல்வி அறிவில்லாத சஞ்சலங்கள் கொண்ட மனிதனிடமிருந்து கடவுளின் செய்தி வரத்தொடங்குகிறது. ஜெபிதியின் திராட்சை தோட்டத்தில் அறுவடைக்குப் பிறகு எஞ்சிக்கிடக்கும் திராட்சைகளை பொறுக்கிச் செல்ல வரும் பரதேசிகளின் மத்தியில்தான் இயேசு பேசத் தொடங்குகிறார். வக்கற்ற அந்த மனிதர்களைப் பார்த்து அன்பு செய்யச் சொல்கிறார். ஒருவகையில் இயேசுவின் சொற்கள் அந்த வக்கற்றவர்களின் அகத்தில்தான் மிகத் தெளிவாக சென்று விழுகின்றன. ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் யூதர்களுக்கு ரோமானியர்களை வெல்லும் விருப்பமிருக்கிறது. அவர்களுக்கு எதிரிகள் தேவை. தங்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கேனும் எதிரிகள் தேவை. ஆனால் இயேசு அனைவரையும் சகோதர்களாக எண்ணச் சொல்கிறார். அவர் சொற்கள் வறுமையாலும் அவமானங்களாலும் புண்பட்ட மனங்களுக்கு மருந்திடுகின்றன. அந்த மலைப்பிரசங்கம் முடியும் விதம் நுட்பமானது. அனைவரும் எழுந்து சென்ற பிறகு இயேசு தனிமையில் அமர்ந்திருக்கிறார். இந்த தனிமையை நாவலுக்குள் மீண்டும் மீண்டும் இயேசு உணர்கிறார். அவர் மனம் அந்த தனிமையில் இருந்து மீளும் வழியைத் தேடிக்கொண்டே இருக்கிறது. மக்தலீன் அத்தனிமையை போக்கக்கூடியவளாக இருக்கிறாள். லாசரஸின் சகோதரிகளான மேரியும் மார்த்தாவும் இருக்கின்றனர். எனினும் இயேசுவால் அவர்களைத் தேர்ந்தெடுக்க இயல்வதில்லை.
இயேசுவின் அடுத்தகட்ட நகர்வு ஒரு அருட்தந்தையால் நிகழ்கிறது. அவர் இயேசுவை பாலையில் தனித்து நடக்கச் சொல்கிறார். ஜெருசலேமின் மக்கள் தங்களுடைய பாவங்களை ஒரு ஆட்டின் மீது ஏற்றி அதனை பாலையில் தனித்து அலையவிடும் ஒரு உருவகச் சடங்கினை செய்கின்றனர். இயேசு அந்த ஆட்டினை பாலையில் சந்திக்கிறார். அந்த ஆடாக தன்னை உணரும் இயேசு அந்த ஆடாக தான் அல்லாமல் ஆவதற்கான சாத்தியங்களையும் அந்த பாலையில் சந்திக்கிறார். பெண் விழைவாக(நாகம்) அதிகார நிமிர்வாக(சிம்மம்) தெய்வத்தன்மையாக (தேவதை) என்று அவரது சபலங்கள் அந்தப் பாலையில் மேலெழுந்து வருகிறது. இயேசு அவற்றைக் கடந்து செல்கிறார். உருவகங்களாகச் சொல்லப்படும் இந்த விருப்பங்களைக் கடந்த பின்னும் இயேசு தூண்டுதல்களில் இருந்து விடுபடுவதில்லை. ஒரு அமைதியான கிராமத்தில் காலம் கடந்தும் மணமாகாத இரண்டு சகோதரிகளை இயேசு சந்திக்கிறார். இவரைப் போல உலகின் எந்த நலன்களையும் அனுபவிக்காதவர்களாக தங்களுடைய நோயுற்ற சகோதரனான லாசரஸுடன் மேரியும் மார்த்தாவும் வசிக்கின்றனர். அங்கு தங்கியிருக்கும் போது இயேசுவுக்கு லாசரஸின் வழியே அருட்தந்தை மன்னனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்ட தகவல் கிடைக்கிறது. இயேசு தன்னை நோவாவாக கற்பனை செய்து கொள்கிறார். நோவாவின் காலத்தில் கடவுள் உலகை நீரால் மூழ்கடித்தது போல இம்முறை நெருப்பால் மூழ்கடிப்பார் என்றும் அந்த அழிவிலிருந்து தப்பிச் செல்ல தன்னிடம் வருமாறும் இயேசு அழைக்கிறார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்ன இயேசுவுக்கும் , நான் உலகில் சமாதானத்தை உண்டு பண்ண வரவில்லை வாளுடன் வந்திருக்கிறேன் என்று சொன்ன இயேசுவுக்குமான முரண் இந்தப் புள்ளியில் தொடங்குகிறது. அநீதியில் திளைப்பவர்களை கடவுள் அழிப்பார் என்று இயேசு சொல்லத் தொடங்குகிறார். இந்த சீற்றம் கொண்ட இயேசுவை யூதாஸ் தனக்கு நெருக்கமாக உணர்கிறான். ஆனால் இயேசுவின் கோபம் ரோமானியர்கள் மீது என்று குறுக்கிப் புரிந்து கொள்கிறான். இயேசு ஒட்டுமொத்த மானுடத்தின் மீதும் கோபம் கொள்கிறார். அவர் ரோமானியர்கள் யூதர்கள் என்று பிரித்து சிந்திப்பதில்லை.
யூதாஸைப் போல இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கான தேவைகள் இருக்கின்றன. அனைவருக்கும் பொது குறிக்கோளாக பரலோக ராஜ்ஜியம் இருக்கிறது. மேத்யூ இயேசுவின் சொற்களை குறிப்பெடுக்கிறான். தாமஸுக்கு இயேசுவுடன் பழகுவதில் தெளிவாக வணிக நோக்கங்கள் இருக்கின்றன. ஆண்ட்ரூவும் ஜானும் இயேசுவை சரணடையும் சீடர்களாக இருந்தாலும் கோழை மனம் கொண்டவர்களாக இருக்கின்றன. பீட்டரும் ஜேக்கப்பும் விருப்பமில்லாதவர்களாகவே இயேசுவுடன் இருக்கின்றனர். மக்தலீனின் தந்தை (இயேசுவின் மாமா) இயேசு தேவனா சாத்தானா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
நாட்கள் அதன் போக்கில் நகர்கின்றன. இயேசு சில அற்புதங்களை நிகழ்த்துகிறார். அவரை பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. நோயுற்றவர்களும் ஊனர்களும் தங்களை குணப்படுத்தும்படி இயேசுவிடம் வந்து மன்றாடுகின்றனர். அவரை மிரட்டவும் செய்கின்றனர். இயேசு வெறுப்படைகிறார். ஜெருசலேமில் உள்ள சாலமனின் ஆலயம் பல்வேறு இறை நம்பிக்கைகளின் கூடாரமாக இருப்பது கண்டு அதனை மூன்று நாட்களில் தன்னால் அழிக்க முடியும் என்கிறார். அவர் ஜெருசலேமை விட்டு அதன் ஆளுநர் பிளேட்டால் வெளியேற்றப்படுகிறார். இயேசு தன்னுடைய மரணம்தான் மக்களுக்கான மீட்பு என்பதை கண்டு கொள்கிறார் அல்லது அந்த முடிவினை நோக்கி உந்தப்படுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்படும் கணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் மிகுந்த நுட்பத்துடனும் நேர்த்தியுடனும் நாவலில் சித்தரிக்கப்படுகின்றன
இயேசுவின் காலத்தில் யூதர்கள் பல பிரிவுகளாக பிரிந்துள்ளனர். கலீலி என்ற பிரிவைச் சேர்ந்தவராக நாசரேத்தின் இயேசு சித்தரிக்கப்படுகிறார். சாமரிட்டன்கள், செக்டூசிஸ் என வேறு சில பிரிவினர் இயேசுவை வெறுக்கின்றனர். யூதர்களின் திருச்சபை இயேசுவை மதத்துக்கு எதிரானவனாக சித்தரித்து அவரை சிலுவை ஏற்ற முயல்கிறது. இயேசு அந்த ஏற்பாட்டினை துரிதப்படுத்த யூதாஸை அனுப்புகிறார். இந்த இடத்தை இயேசு தன்னை யூதாஸை விட மேலானவனாக நிறுத்திக்கொள்ள விழையும் புள்ளியாக வாசிக்க இடமிருக்கிறது. சிலுவையேற்றத்தின் முந்தைய கணங்கள் அதன் அத்தனை தெய்வீகத்தன்மையும் நீக்கப்பட்டு அபத்தவாதத்திற்கு அருகில் செல்லும் தரத்தில் சித்தரிக்கப்படுகின்றன. இறுதி விருந்துக்குப் பிறகு ஒரு மலையடிவாரத்தில் கைது செய்யப்படுவதற்காக இயேசு சீடர்களுடன் காத்திருக்கிறார். தொடர்ச்சியான பயண அலைச்சல்கள் மற்றும் உணர்வுக் கொந்தளிப்புகளால் களைப்படைந்த சீடர்கள் உறங்கத் தொடங்கவிருக்கின்றனர். ஆண்ட்ரூ மட்டுமே விழித்திருக்கிறான்.மறுநாள் அவர்களின் குரு கொலை செய்யப்படவிருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. எனினும் உறக்கத்துக்கான விருப்பத்தை அவர்களால் வெல்ல இயலவில்லை. இயேசு அவர்களை இருமுறை உலுக்கி எழுப்புகிறார். அப்போதும் அவரைத் தவிர்த்து உறங்கவே செல்கின்றனர். மறுநாள் இயேசுவின் மீதான விசாரணையை பிளேட் முன்னெடுக்கிறார்.
இயேசுவால் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்து உயிருள்ள பிணம்போல நடமாடும் லாசரஸை பராபஸ் முந்தைய நாள் கொன்று விடுகிறான். இயேசு பராபஸ் இருவரில் ஒருவரை விடுதலை செய்வதாக பிளேட் தெரிவிக்கிறார். யூதர்கள் கொலைகாரனான பராபஸை விடுதலை செய்யச் சொல்கின்றனர். இயேசுவின் சீடர்கள் அத்தனை பேரும் ஓடி மறைகின்றனர். அவர்களுடைய பரலோகக் கனவுகள் அதிகாரத்தின் இரக்கமின்மையால் கிழித்தெறியப்படுகின்றன. அதன் மையமாக இருந்த மனிதனிடமிருந்து தங்களை முடிந்த அளவு விலக்கிக் கொண்டால் மட்டுமே உயிர்தரித்திருக்க முடியும் என்ற யதார்த்தம் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இயேசு சிலுவையில் அறையப்படும் கணமும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் மிகுந்த நுட்பத்துடனும் நேர்த்தியுடனும் நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. முதலில் இயேசு மக்தலீனின் வழியே காமத்தை அறிகிறார். பின்னர் மக்தலீன் கொல்லப்படுவது சொல்லப்படுகிறது. பின்னர் இயேசு தனக்கான தேவதையை சந்திக்கிறார். அந்த தேவதை ஒரு நீக்ரோ சிறுவனின் ரூபத்தில் அவருடனேயே இருக்கிறது. உலகியலில் ஒரு மனிதன் அடையக்கூடிய அத்தனை இன்பங்களையும் இயேசுவுக்கு அச்சிறுவன் அளிக்கிறான். இயேசு மேரியையும் மார்த்தாவையும் மணக்கிறார். மனைவியர் இருவரும் போட்டிபோட்டு கருவுறுகின்றனர் .அவர் இல்லம் பிள்ளைகளாலும் பேரக்குழந்தைகளாலும் நிறைகிறது. நீக்ரோ சிறுவன் எந்நேரமும் இயேசுவுடன் இருக்கிறான். அவருடைய “முந்தைய” வாழ்க்கையின் நினைவுகள் அவரை பல்வேறு வடிவங்களில் வந்து அலைகழிக்கின்றன. மக்தலீனை கொன்ற சவுல் இப்போது பவுலாக மாறி சிலுவையில் அறையப்பட்ட அவரது நற்செய்தியை உலகுக்கு கொண்டு செல்லப் போவதாகச் சொல்கிறான். அவரை சிலுவையில் அறைந்த பிளேட் தன்னுடைய மரணத்தை தேடிக் கொள்கிறான். இயேசுவின் சீடர்கள் நலிந்து போனவர்களாக அவரிடம் வருகின்றனர். இத்தனை அலைகழிப்புகளுக்கும் நடுவில் இயேசுவின் லௌகீக வாழ்க்கை அமைதியாகவே தொடர்கிறது.
இவை அனைத்தும் தன்னுடைய விருப்பங்கள் மட்டுமே தான் இந்த விருப்பம் எதற்கும் ஆட்படவில்லை என்று சிலுவையில் உயிர்துறக்கும் கடைசி கணங்களில் இயேசு எண்ணுவதோடு நாவல் முடிகிறது.
கிறிஸ்துவின் குழப்பங்களை யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்குமான வேறுபாட்டிலிருந்து புரிந்து கொள்ளலாம். யூதர்களைப் பொறுத்தவரை இயேசு ஒரு இறைத்தூதர் (அவர் காலத்தில்). ஆனால் இயேசுவுக்கு தான் யார் என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு சமயம் அவர் தன்னை தாவிதின் மகன் என்கிறார், மற்றொரு சமயம் கடவுளின் புத்திரன் என்கிறார், மற்றொரு சமயம் மனிதப் புத்திரன் என்று சொல்கிறார். கிறிஸ்துவர்கள் தங்களுடைய Trinity circle வழியாக பிதா-சுதன்-பரிசுத்த ஆவி என்று இந்த குழப்பத்தை விளங்கிக் கொள்கிறார். ஆனால் இயேசுவின் காலத்தை சற்று யோசித்துப் பார்க்கலாம். அவருக்கு முந்தைய தீர்க்கதரிசிகள் அத்தனை பேரும் உலகியளார்கள். ஆதாம் ஆப்ரஹாம்,நோவா,மோசஸ் என யாருமே உலகியலில் ஈடுபடாதவர்கள் அல்ல. குல வரலாறு என்ற தொடர்ச்சி அவர்களுக்கு உள்ளது. ஆனால் இயேசு மேலும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் பிறக்கிறார். முந்தைய தீர்க்கதரிசனங்கள் அவருக்குப் போதவில்லை. மரணமின்மையை அவர்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்வதன் வழியாக அவர்களை தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றபடி வளர்ப்பதன் வழியாக அடைகின்றனர். இயேசு கூட மரணமின்மையை சந்ததிகளின் வழியாக கற்பனை செய்யும் நிலையை ஒரு சமயம் அடைகிறார். ஆனால் இயேசு உலகம் வழிவழியாகப் பின்பற்றும் மைந்தர்கள் வழியிலான மரணமின்மையை கைவிடுகிறார். அவர் தன் லட்சியத்தின் வழியிலான மரணமின்மையை முன்வைக்கிறார்.
நாவலில் ஒரு இடத்தில் இயேசு சொல்வதாக இவ்வரிகள் வருகின்றன
“நான் பத்துக் கட்டளைகளை மறுதலிக்க வரவில்லை. அவற்றை கூர்மைப்படுத்த வந்திருக்கிறேன். பத்து கட்டளைகள் கொலை செய்யாதே என்று சொல்கின்றன. நான் உன் சகோதரனுக்கு எதிராக நீ கையை உயர்த்தினாலோ மனதளவில் துவேஷம் கொண்டாலோ கூட நரகத்துக்குச் சென்றவனாகிறாய் என்று சொல்கிறேன். கட்டளைகள் பிறன் மனைவியை விழையாதே என்கின்றன. ஆனால் நான் உன் மனதில் உனக்கு உரிமையில்லாத ஒரு பெண்ணை இச்சித்தால் கூட நீ விபச்சாரம் செய்தவனாகிறாய் என்று சொல்கிறேன்”
வரலாறு நேர்க்கோட்டுத்தன்மை அற்றதாகவே இருக்கிறது. ஆனால் அதன் ஒழுக்கில் இருந்து சில சீர்மைகளை நம்மால் அவதானிக்க முடியும். சிறிய அரசுகள் வலுவான குலங்களால் அமைக்கப்படுகின்றன. ஆனால் பேரரசு குலங்களின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்து வேறொரு உருவகத்தை மையத்தில் நிறுத்துகிறது. குல அதிகாரம் வலுவிழக்குந்தோறும் மனிதன் கண்காணிப்பு அற்றவனாக மாறுகிறான். அவன் யாருக்கு அஞ்சுவது எதை நம்புவது எதை விலக்குவது என்ற குழப்பத்துக்குள் தள்ளப்படுகிறான். யூதர்கள் அத்தகையதொரு குழப்பத்தில்தான் ரோம சாம்ராஜ்யத்தில் வாழ்கின்றனர். அவர்கள் நம்பும் “மீட்பர்கள்” சிலுவையில் அறையப்படுகின்றனர். சாம்ராஜ்யத்தின் அங்கமாக அடங்கி வாழ விதிக்கப்படுகின்றனர். ஆனால் யூதர்கள் மட்டுமே அப்படி வாழவில்லை. ஒரு சாதாரண தொழிலாளியில் இருந்து ஜெருசலேமின் ஆளுநர் பிளேட் வரை தங்களை எந்தக்கரம் எங்கு தூக்கி வைக்கும் என்ற உத்திரவாதம் இல்லாதவர்களாகவே காலத்தை கழிக்கின்றனர். இந்த பதற்றமான காலத்தின் மீட்பராகவே இயேசுவைக் காண வேண்டி இருக்கிறது. பிளேட் போல அந்தந்த கணங்களுக்கான நியாயத்தை பின்பற்றி வாழ்வதா அல்லது தன்னுடைய லட்சியத்துக்கென தன்னையே அழித்துக் கொள்ளும் ஒரு வாழ்க்கையைத் தேர்வதா என்பது இந்த நாவல் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது. அனைவரும் சேர்ந்து நம்பக்கூடியதாக ஏற்கக்கூடியதாக இருப்பது என்ன என்பதே இயேசுவின் தேடலாக இருக்கிறது. இயேசு அதனை அன்பென்று கண்டு கொள்கிறார். சகமனிதனை எந்தவித விலக்கங்களும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை என்று வகுக்கிறார். அதிகாரம் வேற்றுமைகளின் வழியாகவே செயல்படுகிறது. ஆனால் இயேசு அதிகாரத்தை பலகீனர்களின் தரப்பாக காண்கிறார். அன்பு செய்வதற்கே தைரியமும் அகச்சான்றும் தேவை என்கிறார்.
இயேசுவின் வாழ்க்கை குறித்த இந்த மறுகூறலை பொருத்தப்பாடு உடையதாக மாற்றுவது ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அகச்சான்றினை பின்பற்றுவதும் அது அளிக்கும் துயரங்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம் என்ற இந்த கோணமே. இன்று மனிதர்கள் மேலும் சுதந்திரமானவர்களாக மாறி இருக்கிறார்கள். நம்முடைய அந்தரங்க வெளி மேலும் பன்மடங்கு பெருகி இருக்கிறது. இன்று பொது உரையாடல்கள்களை விட தனிப்பட்ட உரையாடல்கள் பெருகி இருக்கின்றன. சரியானவற்றுக்கும் சரி இல்லாதவற்றுக்குமான கோடுகள் அழிந்து கொண்டே வருகின்றன. நம்முடைய மனம் நம்மிடம் தவறு என்று சொல்கிறவற்றைக்கூட தர்க்கத்தைக் கொண்டு நாம் சரியென நிறுவிக் கொள்கிறோம். நம் அகச்சான்றினை கைவிட்டு தர்க்கத்தை இறுகப் பற்றப் பற்ற நம்முடைய வாழ்வு பொருள் இழந்ததாக திசையற்றதாக மாறுகிறது. கிறிஸ்துவின் சிலுவையேற்றம் என்ற குறியீட்டு நிகழ்வு இன்று இவ்வாறுதான் பொருள்கொள்ளப்பட வேண்டும். துயரத்தை தெரிவு செய்தல் என்பது கடுமையான வலி நிறைந்ததாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது ஏதோவொரு வகையில் நம் கடமையாகிறது. மாயை என்று இந்து மதம் வகுக்கும் ஒன்றுதான் இயேசுவை நாவல் முழுவதும் அலைகழிக்கிறது. அன்னையின் அன்பாக, மக்தலீனின் துயரமாக, மேரி மார்த்தா இருவரின் ஏக்கமாக, யூதர்களின் அடிமை வாழ்வாக தான் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் அத்தனை உலகியல் இடர்களையும் இயேசு கடக்கிறார். தன்னை சிலுவையில் ஏற்றிக் கொள்வதன் வழி சிலுவையேற்றத்துக்கு தயாராகும் லட்சியவாதிகளுக்கான நம்பிக்கையை இயேசு அளிக்கிறார். லௌகீக வாழ்வின் ஒரு கரையில் தெய்வமும் மறுகரையில் அரசும் உள்ளன. இயேசு தெய்வீகத்தன்மைக்கான சிக்கலான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதனை தொட்டுக் காட்டுவதும் இயேசுவின் அலைகழிப்புகள் வழியாக நம்மை பயணிக்கச் செய்வதும் இந்த நாவலின் நோக்கம். அதில் கசாண்ட்சாகிஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.
-சுரேஷ் பிரதீப்