ச.துரை கவிதைகள்

ஏனெனில்

கைகள் தேயிலை தோட்டத்திற்கு
குத்தகைவிடப்பட்டதும்
சிலந்திகளோடு உறங்கி
எச்சில் கோப்பைகளை கழுவுவேன்
என்னிடம் அறுபது மணிநேரம்
இயங்ககூடிய போதை வஸ்து
இருந்தாக நம்பினார்கள்
தோட்டத்திலிருக்கு சூளைக்கு மாற்றப்பட்டதும் எனது கைகள்
வெட்டப்பட்டு வேறு கைகள் பொருத்தப்பட்டன
யார் இந்த அந்நியனென்று கேட்ககூடாது
என் உடையென்று கதறகூடாது
கொஞ்சமும் பொருத்தமற்ற
உணவுக்காக சட்டங்களில் மணல்களை
நிரப்பி வெட்டுவேன்
என் குழந்தைகள் அழாதிருக்க  கற்றுக்கொண்டன
நாட்காட்டியை தேடுவேன்
பெயர் தெரியாத கருவிகளை சுமப்பேன்
எண்களின்படி நிற்பேன்
ஒரு நிசியில் அவனுக்கு
தீ மூட்டத்தில் வீசப்படுகிற
சின்ன குச்சிபோல இருக்குமென்றாள்
எனக்கு‌ அந்த நகைசுவை பிடித்துவிட்டது
நம்புவதற்காக வாழ்வதாய் எண்ணி
நல்ல தடிமனான உடையை
போர்த்திக்கொள்வேன்
நன்கு சுட்ட செங்கல்லை போல
என் மார்பு விரைக்கும் போதெல்லாம்
உன் கரத்தை தேடுவேன்
கொஞ்சம் கூட கூச்சமற்ற இந்த
வதைமுகாமை என்ன செய்யலாம்
என் விரல்கள் அடிக்கடி பிசுபிசுக்கின்றன
ஏதேதோ கொடிகளுக்கு வணக்கமிட்டு
யாரரோ கரங்களில் ஒப்படைக்கபடுவேன்
அப்போதெல்லாம் கத்துவேன்

“ஏன் ஏன் எனக்கு மட்டும் இப்படி”
எல்லோரும் ஒரு சேர சொல்வார்கள்

“எனெனில் நீ மட்டும்தான் அவித்து விடப்பட்டிருக்கிறாய்.

சந்தோஷ புகை

 

என்னவிருந்தாலும் அவனுக்கு
இவ்வளவு ஞாபகமறதி கூடாது

நேற்றிலே நின்றுவிட்டான்
எல்லோரும் நாளைக்குள்
போய்விட்டார்கள் அவனால் ஒரு
அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை
நாளைக்கும் சேர்த்து
நேற்றிலே நின்று உண்கிறான்

“மந்தமாகவாது வா நாளைக்கு”

அவன் கால்கள் இறுகிவிட்டன
நாளைக்காக நேற்றிலே குளிக்கிறான்

“உனக்கு என்னதான் பிரச்சனை
கடப்பதை நீ விரும்பவில்லையா”

அதை கேட்டதும் அவன் மேனி முழுக்க
சந்தோஷ இலைகள்
கண்களை இறுக்க மூடினான்
நாளைக்குள் இருந்த
பேன் சுவிட்சை அணைத்து
ஊதிபத்தி ஏற்றி நேற்றுக்குள்
உறங்கிக்கொண்டிருந்தவனின் தலைமாட்டில் வைத்தார்கள்
இரு பொழுதுகளுக்கும் இடையில்
பரிதவித்து அலைந்தது புகை.

-ச.துரை

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.