அஞரின்ப உயிரிகள்

சுமரி நீக்கச் சடங்கு முதல் உடலியற் கலை வரை :

நியு யார்க்கில் ,இருவேறு ஆனால் உள்ளமைவில் ஒத்தமைந்த கலாச்சார செயற்பாடுகளை நம்மால் கவனிக்க முடியும்.உடலில் துளையிட்டு அலங்காரம் செய்யதுகொள்ளும் அமெரிக்க இளைஞர்களின் எண்ணப்போக்கும், (சுயவதையை கலையாக முன்வைப்பவர்கள்) 

சுமரி நீக்கம் செய்துகொள்ளும் புலம்பெயர் ஆப்ரிக்கப் பெண்களின் கலாச்சார மரபும் இணை நிலைப்போக்குகளாக இருப்பதை அறியலாம். புலம்பெயர் ஆப்ரிக்கர்கள் மேற்கத்திய சமூகத்தின் பொதுச்செயற்பாடுகளில் பங்கெடுத்துக்கொண்டாலும், அவர்களுடைய சடங்குப் பழக்கங்களில் அது எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சுமரி நீக்கம் போன்ற சடங்குகளை மரபின் தொடர்ச்சி என்றளவில் மட்டும் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளது. பின்-நவீனச் சமூகத்தின் கட்டுக்கோப்புகளையும் ,மைய சிதைப்புக் கூறுகளையும் ஒரு தன்னிலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உடல்-மைய மற்றும் அஞரின்ப கலைச்செயற்பாடுகளுக்கும் இவ்வகைப்பட்ட புரிதல் அவசியமானது.

இவ்விரு சமூக செயற்பாடுகளை ஒப்புநோக்கவதன் மூலம் இரண்டின் உடலியல் சார் மாற்றத்தினை நான் முடிச்சுப்போடவில்லை. என்னுடைய பேசுபொருளின் எல்லை என்பது இவ்விரு செயற்பாடுகளின் சமூக-உளவியல் பின்னணியை ஆராய்வது மட்டுமே.தற்கால சமூகத்தில் இவ்விரு அகநிலைகளின் இடமென்ன எனும் கேள்வி என்னை இந்த ஒப்புமைக்கு இட்டுச்சென்றது.

இவ்விரு பழக்கங்களுக்கிடையேயான தொடர்பை ஆராயும் முன்பு அவற்றின் அகநிலைகள் முன்னை-நவீன , நவீனத்துவ மற்றும் பின்-நவீன சமூகங்களோடு கொண்டிருந்த குறியீட்டுத் தொடர்பை ஆராய வேண்டும். என்னுடைய நோக்கம் மரபார்ந்த தொடர்ச்சியை விளக்குவதல்ல. மாறாக,சமூகத்தின் குறியீட்டு அமைப்பாக்கத்தோடு அகநிலைகள் கொண்டுள்ள தொடர்பை விளக்க முயல்கிறேன். (*சமூகத்தோடு ஒரு மனித உயிர் கொள்ளும் இடையக உறவை லக்கான் big Other என்பார்.இடையகங்களின் தொகுப்பு சமூகத்தின் குறியீட்டு அமைப்பை உறுவாக்குகிறது.உதாரணமாக – சட்ட ஒழுங்கு)

தொன்மையான சடங்குகளை பின்பற்றுவதென்பது பண்டைய கலாச்சாரத்தை நகலெடுப்பதென்பதையும் தாண்டி தற்காலத்தில் அது புதிய  அர்த்தங்களை தருவிக்கிறது. இத்தகைய அர்த்தப் பிறழ்வை விளங்கிக்கொள்ள, சுமரி நீக்கம் போன்ற சடங்குகளின் உண்மையான அர்த்த தளத்தை நோக்கிச் செல்ல வேண்டி வரும்.

தனியராக்கமும் சடங்குகளும் : 

சுமரி நீக்கம் தொடர்பான விவாதங்களை அவ்வப்போது மேற்குலக ஊடகங்கள் முன்னெடுக்கப்படும்போது இரண்டு வகையான நிலைப்பாட்டுக் குரல்கள் எழுவதைப் பார்க்கலாம். (அத்தகைய விவாதங்களின்போது, பொதுமக்கள் இச்சடங்கிற்க்கெதிராக தங்களுடைய எதிர்ப்புக் குரல்களை பதிவுசெய்யத் தவறுவதில்லை.)

1.மனித உரிமை பாதுகாப்பாளர்கள் இச்சடங்கை கடுமையாக எதிர்கின்றனர்.

2.பண்பாட்டு வேற்றுமைகளை பாராட்டுவோரும் இச்சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆனால்,அவர்கள் குரலானது “மேற்கத்தியர்கள் அல்லாதோரிடையே மேற்கத்தியர்கள் தங்களுடைய மதிப்பீடுகளை வலியுறுத்த எந்த உரிமையும் இல்லை” என்பதால் இக்குரல் இருமைநிலை பெற்றமைகிறது.

சுமரி நீக்கம் லண்டன் ,பாரிஸ் மற்றும் நியு யார்க்கின் மைய பகுதிகளில் கூட ஆப்ரிக்க புலம்பெயர் பெண்களால்  பின்பற்றப்படுகிறதென்பதை மேற்கத்தியர்கள் உணரும்போது இப்பிரச்சனை மேலும் சிக்கல் கொண்டதாக உருவெடுக்கிறது.சுமரி நீக்க சடங்கு பொதுவெளிச் செயற்பாடாக அல்லாமல் அந்தரங்க சடங்காக இருப்பதனால் அதற்கெதிரான தடைச்சட்டம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மேற்குலகப் பார்வையில் இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்று.ஜனநாயக நாடுகளில் இத்தகைய சடங்குகள் இன்னும் பின்னடைவைச் சந்திக்காததை ஒட்டி உலகளாவிய-முதலாளித்துவத்தின் வளர்ச்சியை கேள்விக்குட்படுத்தச் செய்யலாம்.

முன்னோர்களின் சடங்குகளை பின்பற்றுவதன்மூலம் தொன்மையான எங்களுடைய கலாச்சாரத்தை உயர்வாழ வைக்கிறோம்.மேலும்,இது எங்களுடைய பண்பாட்டு அடையாளம் என்கிறனர் இனமைய குழுக்களைச் சேர்ந்த பெண்கள்.மேற்குலக நாடுகளுக்குக் குடிபெயர்ந்த இப்பெண்கள் தங்களுடைய அடையாளத்தை நிறுவும் விதமாக சுமரி நீக்கச் சடங்கைப் பின்பற்றுகின்றனர்.இச்சடங்கை ஒட்டி அமைந்த அடிப்படையான கட்டமைப்புகளைக் கொண்டு அதற்கு காரணமாக்கமும் செய்கிறனர்.சுமரி நீக்கம் மேற்கொள்ளாத பெண்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ‘எனக்கு நற்பயனை ஈட்டிய இச்சடங்கு என்னுடைய மகளுக்கும் நற்பயனீட்டும்’ என்று நியாயம் கற்பிக்கின்றனர் தாய்மார்கள். புலம்பெயர்ந்தவர்களின் பழக்கவழக்கங்கள் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை பாதிக்குமென்று பொதுமக்களும், மேற்குலக சட்ட திட்டங்கள் தங்களுடைய இன அடையாளத்தை அழிக்கிறதென்று புலம்பெயர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றுள் உள்ளமைவாக இருப்பது இரண்டு இனக்குழுக்களின் அடையாளம் குறித்த பயம்.

இச்சடங்கினை ஒட்டிய விவாதங்கள் இரண்டக நிலைக்கே பெரும்பாலும் இட்டுச் செல்லும். பெண்களின் பால் அடையாள கட்டமைப்பில் இச்சடங்கின் பங்கு என்ன ? பாலியல் நியமங்களை பாரம்பரியமாக கடத்திச் செல்வதில் இச்சடங்கு முக்கியப்பங்காற்றுகிறதா ?  முன்னை-நவீன மற்றும் நவீனத்துவ சமூகங்களில் பால் அடையாள வேற்றுமைகள் எவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளன ? பின்-நவீத்துவ சமூகத்தில், உடல் மையக் கலையின் அடித்தளமாக விளங்கும் அஞர் மற்றும் உருவ அழிப்புப் பண்பின் மீட்டுருவாக்கத்தை எவ்வாறு புரிந்துகொள்வது ?

முதலில் , சுமரி நீக்கச் சடங்கை ஆதரிப்போரின் நேர்வுகளைத் தொகுத்துக்கொள்வோம். இச்சடங்கினை ஆதரிக்கும் குழுக்களிடையே பலவகைப்பட்ட தொன்ம விளக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இருந்தாலும், அடிப்படைப் புரிதலுக்கு வேண்டி பரவலாக நம்பப்படுவனவற்றையே இங்கு முன்வைக்கிறேன். இச்சடங்கை மேற்கொள்ளாத பெண்ணிற்கு குழந்தைப்பேறு இருக்காது, என்பது அவர்களிடையே நிலவும் பொதுவான நம்பிக்கை.சில தொன்மங்கள் பெண்ணின் பாலுறுப்பை தூய்மையற்றதாக பாவிக்கிறது. சுமரி நீக்கப்படாத பெண்ணின் பால் உறுப்பு, ஆணின் குறியளவு வளர்ந்து, பின்னர் அது கருத்தரித்தலை தடுக்கும் என்று எத்தியோப்பியக் குடிகள் நம்புகின்றனர்.மாலியைச் சேர்ந்த பம்பாரா மக்களிடையே, சுமரி நீக்கப்படாத பெண்ணோடு பாலுறவு கொள்ளும் ஆண் இறந்துபோவான் எனும் நம்பிக்கை நிலவி வருகிறது.அங்கு சுமரி நீக்கம் செய்யப்படாத பெண் குறி நஞ்சை வெளியேற்றும் என்கிற நம்பிக்கையும் உண்டு. சுமரி என்பது பெண்ணில் ஆண் குறியீடாகவும், ஆண்குறியின் முன் தோல் பெண் குறீயாடகவும் இருப்பதாகக் கொள்கினறனர்.சடங்குகள்(சுமரி நீக்கம், சுன்னத்)வழியான குறியீட்டு அழிப்பு குழந்தையின் பால் அடையாள நிர்மாணத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

குழு அடையாளம் இச்சடங்கினை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது. சடங்கைப் மேற்கொள்ளாத ஒரு பெண் தன்னுடைய இனக்குழுவின் மற்ற பெண்களோடு சமமானவராக உணர்கிறார். தன்னைத் தூய்மையானவராகவும் மற்றவர்களோடு பொருத்திப்பார்த்தும் பெருமிதம் அடைகிறார். வலியை வெளிப்படுத்தாமல் இருப்பதும் ஒரு உயர்வான எண்ணத்தை அளிக்கிறது. இச்சடங்கை பின்பற்றாத பெண்கள் விலக்கப்பட்டவர்களாகவும், தங்களுடைய இனக்குழுவினுள் திருமண உறவு வைத்துக்கொள்ளாத நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.

சில இனமைய குழுக்கள் சுமரி நீக்கம் பெண்களின் அதீத பால் உணர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் வைக்குமென்றும், அவர்களை நெறிதவறாதவர்களாக்குமென்றும், பெண்ணின் கற்பு இதன் மூலம் பாதுகாக்கப்படுகிறதென்றும் கூறுகின்றனர்.

கற்பு என்கிற புனைவாக்கத்தை திருமண உறவின் அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமூகங்களில், முறைசாரா உறவு தீவிர விலக்கத்திற்குரியதென்பதால் சுமரி நீக்க சடங்கின் எல்லைகள் அத்தகைய சமூகங்களில் பரந்துபட்ட செல்வாக்குடையவை.

சுமரி நீக்கச் சடங்கினை அழகியல் செயற்பாடாக பார்ப்பவர்களும் உண்டு.சுமரி நீக்கத்திற்குப்பிறகு, பெண் உறுப்பு அழகான தோற்றத்தை பெறுகிறது என்பர்.

மிகுந்த வலியேற்படுத்தக்கூடிய இச்சடங்கிற்கு எதிராக அச்சமூகத்தின் பெண்கள் ஏன்  குரல் எழுப்பவில்லை ? தங்களுடைய பிள்ளைகளுக்கும் ஏன் அதனை வலியுறுத்துகின்றனர் ? தந்தை வழி சமூகத்தில் வாழ்வதால் அதற்கெதிராக குரல் எழுப்பவில்லை என்றில்லை. சில சமுதாயங்களில் ஆண்களின் அதிகாரம் எல்லைகுட்பட்டதுதான். அவர்களுக்கு சடங்குசார் விஷயங்களில் அதிகாரம் மறுக்கப்படும். மாறாக, மரபின் காப்பாளர்களாகவும், பண்பாட்டுத் தொடர்புறுத்திகளாகவும் விளங்கும் மூதாட்டிகளுக்குத்தான் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதனால், பெண்களே கூட தங்களுடைய எதிர்ப்பு குரல்களை பதிவு செய்ய முன்வருவதில்லை.சுமரி நீக்கச் சடங்கில் அச்சமூகப்பெண்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்களில் இழையோடும் இருமைநிலை என்பது,அப்பெண்கள் தங்களுடைய இனக்குழுவின் பண்பாட்டு விசையோடு எவ்வாறு சிக்குண்டு கிடக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

சமகாலத் தன்னிலைகள் குடும்பம், கலாச்சாரம், தேசிய உணர்வு முதலியவற்றோடு உறவு கொண்டிருப்பதை மறுக்க முடியாது.ஆனால், இக்காலகட்டத்தில் அவை யாவும் பெரியளவில் நம்பிக்கை அளிக்கத் தவறிவிட்டன. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தனியராக்கத்தை ஒவ்வொருவரும் உணர்கின்றனர் என்பதை ஜெர்மன் தத்துவவாதியான மாக்ஸ் ஹொர்ஹைமர்(1972)சுட்டிக் காட்டுகிறார். சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பதால் சமூக அசைவியக்கத்தில் தங்களுடைய இடத்தை சுயமாகத் தேடிக் கண்டடைவது இப்போதைய தனிமனிதர்களின் நிலை.

நவீன சமூகம் நம்மிடையே எந்த சடங்குகளையும் வலியுறுத்தவில்லை.தனிமனதர்களுக்கென ஒரு சுதந்திர வெளி உருவாகியிருக்கிறது.சுதந்திரமான முடிவுகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால், இந்த விருப்பேற்பு சுதந்திரமும் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சமூகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத தன்னிலை உளச்சிக்கலுக்கு உள்ளாக்கப்படும் என்பதை உளப்பகுப்பாய்வு நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறது.

ஆனால், கட்டாயப்படுத்தப்பட்ட இந்த தேர்வு சுதந்திரம் ‘மெய்யான’ சுதந்திரத்தையும் அளித்துள்ளதுதான். உதாரணமாக, தன்னுடைய இனக்குழுவின் சடங்கை நிராகரிக்கும் சுதந்திரம்.சமூகத்தில் ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவோ,  இருப்பை நிறுவ வேண்டியோ தொன்மையான சடங்குகள் எவற்றையும் பின்பற்ற வேண்டுமென்பதில்லை.

தொன்மையான பழக்கவழக்கங்களை கேள்விக்குட்படுத்தும் இடத்தை தனியராக்கம் நமக்கு வழங்கியிருக்கிறது. மரபிலிருந்து தன்னை விலக்கம் செய்து கொள்கிற போது சுமரி நீக்கம் போன்ற சடங்குகளுக்கு எதிராக குரல் எழுப்பும் தன்னிலைகள் உருவாக்கின்றனர். பண்டைய சமூகங்களில் தன்னிலைகள் மரபிலிருந்து விலக்கம் கொள்ளாமல் சமூக அடையாளத்தின் சாராம்சமானவைகளைப் பின்பற்றினர். தற்காலத்தில், சுமரி நீக்க சடங்கிற்கு ஆதரவு தெரிவிப்போரையும் இதே இடத்தில் வைப்பது தட்டையான பார்வை. மாறாக, சமகாலத்தின் அதீத தனியராக்க நிலையை எதிர்கொள்ள முடியாமல் தொன்மை கால சடங்குகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன எனலாம். எனவே,பழங்கால சடங்குகளின் மேல் உள்ள பற்று, சுமரி நீக்க சடங்கின் தொடர்ச்சிக்கு காரணமல்ல. அதன் இயங்குதளம் வேறு. சிதறுண்ட சமூக உலகில், குறிப்பிட்ட இனக்குழுவினர் தங்களுடைய தனித்த அடையாளத்தை நிலைநிறுத்த எத்தனிக்கும் முயற்சியின் வெளிப்பாடு என்று இதனைப் புரிந்துக்கொள்ளலாம்.

தற்கால சமூகத்தில் இந்த தனியராக்கத்தை தன்னிலைகள் பல வழிகளில் அணுகுகின்றனர். தனியராக்கத்திற்கு சமகால இளைஞர் ஒருவர் ஆற்றும் எதிர்வினை, மிகுந்த தீவிரமானதாகவே இருக்கும்.தனித்துவமான தோற்றத்திற்காக வேண்டி தொடர் தேடலில் இருக்கிறார்கள். இப்போக்கு அதிவேக பண்பாட்டு மாற்றங்களின் விளைபயன்.

புழக்கத்தில் இருக்கும் பொதுவான நயப்புப் போக்குகளிலிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்து புதியதொரு பண்பாளர் குழாமில் ஒருவர் இணைகிறார். தனிமனிதத்துவத்தினை இவ்வாறு எதிர்கொள்ளும் அந்த இளைஞர் தன்னுடைய இருப்பை வேறொரு குறுங்குழு ஒன்றில் நிறுவி புதிய அடையாளம் ஏற்கிறார். அப்படியான குறுங்குழு அடையாளங்கள் தனித்தன்மையை ஊக்குவித்தாலும், காலப்போக்கில் மைய நீரோட்டத்தில் இணைந்து பொதுப்போக்கிற்கு இணைவாக மாறிவிடும்.

இதற்கு எதிர்நிலையில் இருப்பது புலம்பெயர்ந்த ஆப்ரிக்க இளைஞர்.அவர் பண்டைகால மரபோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அதீத தனிமனித்த்துவத்தைக் கடக்க முயல்கிறார். புதிய பண்பாட்டு குழாம் அல்லது மரபான பழக்கவழக்கங்களுக்கு திரும்புவது எனும் இருமைநிலை உருவாக்கத்தை தனியராக்கம் செய்கிறது.தன்னிலைகள் வேர் அற்றவர்களாக உணர நேர்கையில் நிகழ்வது இரண்டு : 1 .எதிர்ப்பண்பாட்டு உருவாக்கம் அல்லது  2.தொன்மை மீட்டுருவாக்கம்.

அதிகாரத்தின் வலுவிழப்பு : 

பண்டைய கால சமூகத்தில் விருத்த சேதன சடங்கும், சுமரி நீக்க சடங்கும் பால் அடையாள நிர்ணயத்திற்காகப் பின்பற்றப்பட்டது. இனப்பெருக்க காரணங்களுக்காக மட்டுமே இச்சடங்குகள் பின்பற்றப்படுவதில்லை. தன்னிலையின்மீது குறியீட்டு பண்பை ஏற்றவும் சடங்குகள் பயன்பட்டன .அது சட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு குறியீட்டு அடையாளம் .அவை பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுத்துச் செல்லவற்காக வேண்டியும் மேற்கொள்ளப்படுகிறது.மனித உயிரியை சமூக உயிராக மாற்றவதற்குரிய அத்தனை சடங்குகளையும், பழக்கங்களையும் பண்டைய கால சமூகங்கள் கொண்டிருந்தன.உடலின் இருப்பை பால்மயமாக்குவதை  சமூகம் எப்போதுமே முன்னிலைப்படுத்தியிருக்கும்.

பின்னர் பால் அடையாள சொல்லாடல்களும், பழக்க வழக்கங்களும் கற்றுத்தரப்பட்டு சமூகத்தினுடைய அறுதிப்பாட்டியலின் ஒரு பகுதியாக தன்னிலையை உணர செய்வது இரண்டாவது நிலை.

ஆனால் , தற்கால குறியீட்டு அடையாளங்கள் தன்னிலையின் அங்கமாகவே மாறிப்போயிருக்கிறது.அதாவது புறநிலையானது ‘பகுதி-புறநிலை’ யாக மாற்றம் பெற்றிருக்கிறது. தன்னிலையின் அடையாளத்தோடு அது பின்னிப் பிணைந்துவிடுகிறது. தன்னிலையின் மீது ஏற்றப்படுகின்ற இக்குறியீட்டு அடையாளமானது உடலின் மீது வண்ணம் பூசிக்கொள்வதின் மூலமோ டாட்டூ குத்துக்கொள்வதின்மூலமோ நிகழ்ந்தேறுகிறது.

சடங்குகள் பதின்பருவ வயதினரின் உளத்தை ஆழமாக பாதிக்கிறது.அவர்களுக்கு அவ்வயதில் சுயம் குறித்த நிலையற்ற சிதறுண்ட புரிதலே இருக்கும்.வலுவான சுயக்கட்டமைப்புகளை கொண்டிருக்கமாட்டர்.இத்தகைய சடங்குகளுக்குப் பிறகு அவர்களுடைய பாலூக்க செயற்பாட்டில் மாற்றமேற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கின்றனர் மானிடவியலாளர்கள்.

தொல் குடிகளுக்கு தங்களுடைய பால் அடையாளம் குறித்த நம்பிக்கைகள் உடல் வெட்டுகள் (சுமரி நீக்கம் ஓர் உதாரணம்) மூலம் கடத்தப்பட்டன.பால் அடையாளத்தை நியாபகமூட்டியபடியே இருப்பதற்கும் அவ்வடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன.சமூகத்தின் இடையக உறவுகளும் பால் அடையாளத்தை மையமாகக்கொண்டு கட்டமைப்பட்டவைகளே. இடையக உறவுகள்  இப்போது சோர்விழந்த நிலையில் உள்ளது.

பொதுச்சமூகத்தில் தன்னை ஏதேனுமொரு பால் உயிராக அடையாளங்காண வேண்டியிருக்கிறது. ஏனெனில், சமூகத்தின் இயங்கியல்கள் பால் அடையாளத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன. பால்மயமாக்கப்படாத ஒருவர் பொதுச்சமூகத்தோடு உறவு பாராட்ட முடியாது அல்லது சமூகத்தின் பிரஜையாகவே கருதப்படமாட்டார். இடையக உறவுகள் வலுவிழந்ததன் அடையாளமாகத்தான் இக்காலப் பழக்கங்களும், சடங்குகளும் விளங்குகின்றன. சமூக உறவுகளின் மேல் நம்பிக்கையிழந்த தன்னிலைகள் உருவச்சிதைப்பையும், உடல் வதையையும் தங்களுடைய பதிலாக முன்வைக்கின்றனர்.

பண்டைய கால சமூகத்தில் இடையக உறவு தான் தனியர்களை படுநிலையாக்கி வைத்திருந்தது.  இப்போதிருப்பதோ தலைகீழான நிலைமை. தன்னிலைகள் இடையக உறவின் இருப்பை கேள்விக்குட்படுத்துகின்றனர்.

(*சமூகத்தோடான உறவு சட்ட திட்டகளையும் அடையாள கட்டமைப்புகளின் கீழும் தன்னை வகைபடுத்திக்கொள்தல்.the Big Other)

உடல் வெட்டு அடையாளங்களை ஆராய்வதற்கு முன்னர் சுமரி நீக்கத்தினை உளவியல்பகுப்பின் துணைகொண்டு பார்ப்போம்.  இச்சடங்கை மேற்கொள்ளும் தொல்குடிகள் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இது பின்பற்றப்படுகிறது என்பர். இச்சடங்கை பின்பற்றாத மேற்கத்திய கலாச்சாரம் அவர்களுக்கும் உவப்பளிக்கிறது.

பெண்களுக்கான மரியாதை மேற்கத்திய சமூகங்களில் தரப்படுவதில்லை என்று புரிந்துகொள்கின்றனர். இங்கு இருவகைப்பட்ட கருத்துநிலையை நாம் பாரக்கிறோம்.

1.மேற்கத்தியர்களுக்கு இச்சடங்கு பெண்களை துன்புறத்துவதாகவும், அவமரியாதை செய்வதாகவும் இருக்கிறது.

2.சுமரி நீக்கத்தை பின்பற்றாத கேற்கத்தியர்களின் கலாச்சாரம் பெண்களை அவமரியாதை செய்கிறது என்று இதற்கு ஆதரவளிக்கும் தரப்பு கருதுகின்றது.

பெண்களுக்கான மரியாதையை நிர்ணயிக்கும் இதுபோன்ற முரண்பாடான தர்க்கங்களை உளவியல் துறை எவ்வாறு விளக்குகிறது ? 

ஃப்ராய்ட் பெண்களின் தயக்க உணர்ச்சியை விளக்க முற்பட்டுள்ளார்.லிங்க குறியீடு இல்லாததால் அவ்வுணர்ச்சி ஏற்படுகிறதென்றார்.காலப்போக்கில், அது தாழ்வுணர்ச்சியாகவும் மாறுகிறதென்றார்.இருப்பினும், இந்த தயக்க உணர்ச்சியினுள்ளேயே லிங்க குறியீடு இருக்கிறது.லீங்க குறியீடு இல்லாததனை சமன் செய்ய, பெண் தன்னுடைய முழு உடலையோ ,குறிப்பிட்ட உடல் உறுப்பையோ லிங்க குறியீடாகப் பாவனை செய்ய வேண்டி வருகிறது.

பெண்களுக்கான மரியாதை கோரல் மறைமுகமாக ஒன்றை உணர்த்துகிறது. அவர்களிடம் தீண்டப்படக்கூடாத அல்லது பார்க்கப்படக்கூடாது ஒன்று இருக்க வேண்டிய அவசியத்தையே அது வலியுறுத்துகிறது.

தயக்க உணர்ச்சியும், மரியாதையும் காயடிப்பு சிக்கலை குறிக்கின்றன. மரியாதை வலியுறுத்தபடுவதற்குக் காரணம் தன்னிலை விலக்கப்பட வேண்டும் என்பதற்காக. லிங்க குறியீடு இல்லாத தன்னிலைகள் விலக்கப்பட வேண்டி இப்படியான கருத்துகள் எழுகின்றன.

பெண்களின் அகச் சிக்கல்களை ஆராய முயன்ற ஃப்ராயட் காயடிப்பு சிக்கலை முன்னிலைப்படுத்தினார். பெண்களுக்கு ஆண்குறி ஏக்கம் இருக்கிறது என்றார். அந்த ‘இன்மை’ பலவகைகளில் வெளிப்படுகிறது. அத்தியாவசியமான ஒன்று மறுக்கப்பட்டதைப்போலவும், பொதுபோக்குகளில் பங்கெடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுதல், சில சமயங்களில் உடல் வலிமையற்றதாகவும் தோன்றச் செய்வதற்கு காரணம் இக்குறியீட்டு இன்மை என்கிறார்.

இதற்கான விடையாக ஃப்ராயட் முன்வைத்தது குழந்தைப்பேறு. 

லக்கான் ஃப்ராய்டைக் காட்டிலும் இச்சிக்கலை ஆழமாகப் பார்த்தார். பெண்ணின் அகச் சிக்கல் ஆண் குறி இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே சார்ந்ததல்ல என்றார். ஆண்களும், பெண்களும் தங்களுடைய இன்மைகளின் மூலமே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.அதற்கான எதிர்வினையென்பது ஒன்றுபோல இருக்காது. குழந்தைப்பேறு அடைவதன்மூலம் இன்மையைக் கடக்க முடியாது. குழந்தைப்பேறு இவ்விடத்தில் நிறைவூட்டலாக அமையாது. ‘இன்மை’ இருத்தல் மூலமே நிறைவு செய்யப்படுமேயன்றிப் புறநிலைத் தெறிவின் மூலம் அல்ல என்கிறார் லக்கான்.

மரியாதை என்கிற கருத்துரு மறைமுகமான செயல்பாடுகளுக்கு வழிவகை செய்கிறது. உதாரணமாக, அப்பாவிற்கு அளிக்கும் மரியாதையானது அவருடைய அதிகாரம் மற்றும் இயலாமையின் மீதுள்ள நம்பிக்கையின்மையை அவரிடமிருந்து  மறைப்பதற்காகவென்று எடுத்துக்கொள்ளலாம். இங்கு நாம் மறுபடியும் காயடிப்பு சிக்கலுக்குத் திரும்புகிறோம். காயடிப்பு சிக்கலை என்பதை, தன்னிலை தன்னுள் கொண்டிருக்கும் வெற்றிடத்தோடு இணைத்துப் பேசுகிறார் லக்கான்.

தன்னிலை தன்னளவில் எதுவாகவுமில்லை. புறநிலைத்தெரிவுகள் மூலமே(குறியீட்டு முத்திரைகள்- symbolic insignias)அவை அதிகாரத்தைப் பெறுகின்றன. அப்பாவிற்கு மரியாதை அளிக்கும்போது குறியீட்டு முத்திரைகளுக்கு மெய்யான அதிகாரம் இருப்பதாக நம்பிக்கொள்ளவது அவருடைய அதிகாரமற்ற இருப்பை மறைக்க பயன்படுகிறது.

மரியாதை என்பது கற்பனையான பொருண்மை. தன்னிலை மற்றொரு தன்னிலையோடு கொள்கின்ற கற்பனையான உறவு. (தன்னிலை உறவோடு மரியாதை நிற்பதில்லை.அது மேலும் தன்னுடைய எல்லையை விஸ்தரித்துக்கொண்டு சமூக குறியீட்டு தொகுப்பினுள் முக்கியப் பங்காளராக மாறுகிறது. பிறந்த நாட்டிற்கு மரியாதை அளித்தல், சட்ட திட்டகளுக்கு மற்றும் நாட்டின் கொடிக்கும் தன்னிலை அளிக்கும் மரியாதை பூடகமாக ஒன்றை உணர்த்துகிறது.தன்னிலையானது சமூக குறியீட்டினை நிலைபெற்ற தொடர் அமைவாக ஏற்றுக்கொள்கிறது.)

சமகால மனித உரிமைச் சட்டங்கள் காண்டிய(Kantian) சார்ப்புடையவை.எனவே, அது தன்னிலையின் உள விடுதலையின் மேல் அக்கறை கொள்ளும் விதமாக கட்டமைப்பட்டுள்ளது.அதனைக் குலைக்கும் உரிமை, சமூகத்தில் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

(இங்கு சுதந்திரம் தன்னிலையின் உடலியல் பாதுகாப்பினையும் உட்படுத்தியிருக்கிறது.இதன்படி  பார்க்கப்போனால் சுமரி நீக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்போரின் பார்வை மனித உரிமை சட்டத்தோடு முரண்படுகிறது. மனித உரிமை கருத்துகள் பேசும் ‘மரியாதை’ முன்னர் சொல்லப்பட்ட தன்னிலையின் மறைப்பு செயல்பாட்டிலிருந்து வேறுபடுகிறது.மனித உரிமையின் உள சுதந்திரம், தன்னிலை ‘பேசும் உயிராக’ அடையாளங்காட்டும் போது குலைகிறது.

தன்னிலைக்கு மெய்யான உடல் ஓர்மை கிடையாது.குறியீட்டு காயடிப்பு மூலம் கட்டமைப்படுவது உடல் ஓர்மை.இதை மறைக்க உதவும் விதமாக ‘மரியாதை’ எனும் கருத்தாக்கம் இருக்கிறது.இதன்மூலம் தன்னிலைக்கும் குறியீட்டு அதிகாரம் வழக்கப்படுகிறது.ஆனால், தன்னிலையோடு சம்மந்தப்பட்ட ‘இன்மை’ அச்சம் மறையாது.

மனித உரிமை அமைப்புகள் புத்தொளி காலத்தின் போது இயற்றப்பட்டன. தன்னிலைகள் இயற்கையிலிருந்து முழுவதும் அந்நியப்பட்டுப்போன காலம் அது.  அப்போதைய அரசியல் போக்குகளும் பாகுபாடில்லாமல் மனித உரிமை சட்டங்களை உள்வாங்கிக்கொண்டன.

பாலினம், மதம்,இனம் கடந்து தன்னிலைகள் மதிக்கப்பட வேண்டுமென்று சமகால மனித உரிமைச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.சுமரி நீக்கத்தை ஆதரிப்போரின் ‘மரியாதை’யிலிருந்து, மனித உரிமை அமைப்புகளின் மரியாதை கருதுகோள் பெரியளவில் மாறுபடுகிறது.முதல் வகையினர் சுமரி நீக்கம் செய்தோருக்கு மட்டுமே மரியாதை வழங்குவர்.அதுபோலவே ,மேல்துண்டு அணிந்த பெண்களை மட்டுமே மதிக்கும் சமுதாயங்களும் உள்ளன.எல்லா பெண்களுக்கும் மரியாதை தருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.சமகால மனித உரிமைக் கருத்துகள் சுதந்திரத் தேர்வையும் கொண்டிருக்கின்றன.சுமரி நீக்கம் போன்ற சடங்குகளை ஒழிக்க பெண்களுக்கு கல்வி அறிவு அவசியம் என்கின்றனர் தனிமனித உரிமை பேசுவோர்.

ஆனால், படித்த பெண்கள் சுமரி நீக்கம் போன்ற சடங்குகளை மேற்கொண்டால் ‘நாம் இது தொடர்பாக என்ன செய்ய முடியும். அது அவருடைய தனிப்பட்ட முடிவு’ என்று கடந்துவிடுவர். கல்வியறிவு தனிமனித சுதந்திரத்தோடு சேர்த்து பலதரப்பட்ட கருத்துகளையும் திணிக்கிறது. சமூகமும் தன்னுடைய பங்கிற்கு அதனுடைய கருத்தியல்களை தனிநபரிடம் வலியுறுத்துகிறது.

உடல்-மைய கலைகளில் உள்ள சுய வதையை எவ்வாறு அணுகுவது ? தனிமனிதர்கள் தங்களுடைய உடலை விருப்பப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்று இதனைப் புரிந்துகொண்டுள்ளோம். இருப்பினும், உடல் வதை மிக சமீபத்தில் தான் கலைவடிவாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

கலாச்சாரம் தனியர்களின் தேர்வையோ விருப்பத்தையோ கலையெனக் கொள்ளாது. பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்திசைவு இருக்கும்போதுதான் அது கலையாக அங்கீகாரம் பெறும் என்கிறார் லக்கான்.இதற்குமுன்பும் சுய வதை, உடல் வதை உள்ளிட்ட பழக்கங்கள் இருந்துள்ளன.ஆனால், இத்தகைய செயல்பாடுகள் சமூக குறியீட்டு இயங்கியலில்(changes in the Big Other) மாற்றம் ஏற்பட்டபோதுதான், கலை செயற்பாடாக கருதப்பட்டது எனலாம்.

உடல் வதை கலையாக அங்கீகாரம் பெற்றமைந்ததற்கான சமூகவியல் காரணிகள் என்ன என்கிற கேள்வி நம்முன் எழுகிறது.தன்னிலை, சமூக இடையக உறவுகளோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என்பது பொதுவாகச் சொல்லப்படும் பதில்.மரபான குடும்ப அமைப்புகளும் மாற்றம் கண்டுள்ளன.அதிகார மையங்கள் மேலும் சிக்கலாவையாக உருப்பெற்றிருக்கின்றன.தன்னுடை அடையாளத்தை தேர்ந்தெடிக்கும் முழு சுதந்திரமும் தன்னிலைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பால் அடையாளத்தேர்வு உட்பட.

தொன்மை சமூகங்களில் சடங்குகளின் வழி தனியர்களின் மீது அடையாளம் கட்டமைக்கப்பட்டு பால் அடையாளமும் அதன் அடிப்படையில் முறைமை படுத்தப்பட்டது.புத்தொளி காலத்தில் நம்மிடையே சடங்குகள் இல்லை.ஆனால்,சட்டங்களின் அதிகாரம் அதன் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.தன்னை சட்ட திட்டங்களிலிருந்து விலக்கி கொள்வதன் மூலம் தன்னிலை விடுதலை உணர்வை பெறுகிறது.பின்-நவீன காலத்தில் இவை பெரிதும் பாதிப்புக்குள்ளாப்பட்டது.சமூகத்தின் இடையக குறியீடுகளின் பலம் குன்றிப்போனது.இந்த அவநம்பிக்கை தனிமனித விடுதலைக்கு மட்டுமே வழிவகுக்கவில்லை.அதன்பின்பு நிறுவனங்கள் தங்களிடம் ஆதிக்கம் செலுத்துவதை தனிமனிதர்கள் விரும்பவில்லை.அடையாள உருவாக்கத்தில் நிறுவனங்களின் ஆதிக்கத்தை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினர்.சுயமான அடையாள உருவாக்கத்தை நோக்கி சென்றனர்.தங்களையே கலை படைப்பாக்க முனைந்தனர்.

இடையக உறவுகள் நிராகரிப்பை சந்தித்தன.அது தனியர்களின் கோபத்திற்குள்ளாகியது.சமூக உறவுகளின் ஆதிக்கத்தில் அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பது வெள்ளிடை. இடையக உறவுகளின் இருப்பை அவர்கள் கேள்வியெழுப்பவில்லை.மாறாக,அத்தகைய சமூக உறவு கட்டமைப்புகள் தங்களுக்கு  உதவப்போவதில்லை என்று கருதினர்.இவ்வகைப்பட்ட விடுதலையுமே கூட தன்னிலையின் மீது ‘கட்டாயப்படுத்தப்பட்ட’ தேர்வு சுதந்திரத்தின் விழைவு என்பதை மறக்கலாகாது. 

இடையக உறவுகளின் மீதான அவநம்பிக்கை என்பது என்ன ? இடையக உறவுகள் கருத்துப்புனைவு என்றும் அதனை குறிப்பிட்ட இடங்களில் உண்மையென மக்கள் பாவிக்கும் போக்கும் உள்ளது என்பதை அறிவோம்.நாடு,சமயம்,அல்லது குடும்பச் சடங்குகளின் போது அது வழக்கமாக நடப்பது.ஒரு சிலர் சடங்குகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் அவற்றை நாம் பின்பற்றுகிறோம் :பிறரின் நம்பிக்கையை புண்படுத்தாதிருக்கும் விதமாக சடங்குகளைப் பின்பற்றுவது.பிறருடைய நம்பிக்கை மீதான நம்பிக்கை பாராட்டல்.குழந்தை தங்களை நம்புவதான நம்பிக்கையே பெற்றோர்களை சான்டா க்ளாஸ் போல வேடமிட உந்துகிறது. சான்டா க்ளாஸ் வெறும் புனைவு என்று தெரிய வரும் குழந்தை தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்களுக்காக நம்புவதுபோல காட்டிக்கொள்கிறது.இன்று நாம் சந்திக்க கூடிய சிக்கல்களும் இதனை ஒத்தது.இடையக உறவுகளுடைய கருத்துப்புனைவின் மீதான அவநம்பிக்கை அது.

“நீ எதை நம்புகிறாய் ? என்னுடைய வார்த்தைகளையா அல்லது உன்னுடைய கண்களையா ? ” – க்ராச்சோ மார்க்சின் பிரபலமான மேற்கோள் வரிகள்.இடையக உறவுகளின் மீதான நம்பிக்கை இழப்பு எனலபது வார்த்தைகளின் மீதான நம்பிக்கையிழப்பு.இன்று,பெரும்பாலானவர்களுக்கு புனைவுகளின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.குறியீடுகளை வெட்டி ஆராய எத்தனிக்கும் போக்கு மேலோங்கியுள்ளது.புனைவுக்கு பின்னால் உள்ளவற்றை மக்கள் காண விரும்புகின்றனர்.

ஆனால்,புனைவை கலைத்துப்போட்டு பார்ப்பது தன்னிலையை உளச்சோர்வுக்கு உள்ளாக்கலாம்.’தன்மையாகப் பேசுவது’ என்பது  இடையக உறவுகளினுடைய புனைவுகளுள் ஒன்றாகும்.விரும்பாதவரை சந்திக்கும் போது வரவேற்கும் மொழியையே பயன்படுத்துகிறோம்.விருப்பம் இல்லாவிட்டாலும் நலம் விசாரிக்கிறோம்.உள்ளூர நினைப்பதை அப்படியே வெளிப்படுத்த நம்மை அது அனுமதிக்காது.ஒருவேளை அத்தகைய பயன்பாட்டை தவிர்த்து உண்மையான நம்முடைய எண்ணத்தைப் பகிர்வோமானால் அங்கு புனைவு விடுதலை பெறுகிறது.ஆனால் சமூக உறவுகள் பாதிப்படையும்.

குறியீடுகளிலிருந்து விலக்கப்பட்டது திரும்பவந்து ‘மெய்யாக’ தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் என்கிறார் லக்கான்.உளப்பிறழ்வு உள்ளோரைக்கொண்டு இதனை விளக்க முற்படுகிறார்.அவர்கள் தங்களை குறியீட்டு உறவுகளோடு அடையாளப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் ‘உண்மையான’வற்றோடு அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.கடவுள் என்கிற கருத்துபுனைவை நம்பாது போனாலும் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளதாகவும்,கடவுளின் குரலை தான் கேட்பதாகவும் நினைத்துக்கொள்வர்.

கருத்துப்புனைவின் மீதான அவநம்பிக்கை, இளவரசி டயானா இறந்தபோது பெரியளவில் வெளிப்பட்டது.ஒரு கருத்துக்கணிப்பின்போது பெருவாரியான பிரிட்டிஷ் மக்கள் அரசாட்சி முறை பழதான ஆட்சி முறையென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றே தெரிவித்தனர்.

ஆக, மக்கள் ராஜ்ஜியம் என்கிற புனைவை நம்ப மறுத்தனர்.

ஆனால், இறுதிச்சடங்கின்போது ராணி போதுமான அளவு சோகத்தை வெளிப்படுத்தவில்லையென்று மக்கள் நொந்துகொண்டனர்.ராணி தன்னுடைய சோகத்தை புறவயமாக வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினர்.ராயல் பேலசின் முன்பு கொடி அரை கம்பத்தில் பறக்கப்பட வேண்டும் என்றனர்.அரசாட்சியின் மீது நம்பிக்கை இழந்தாலும் புனைவு அதனளவில் நிகழ்ந்தேற வேண்டும் என்றே விரும்பினர்.அதாவது, ராணி என்பவர் பழங்கால வழக்கப்படி துயர நிகழ்வின் போது அழ வேண்டும் மற்றும் கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும்.புனைவு அதனை நிகழ்த்திக்காட்ட வேண்டுமென மக்கள் எண்ணினர்.அப்போதுதானே அதன் புனைவு தர்க்கத்தை கலைத்துப்போட முடியும்.

லட்சிய படிவங்களோடு மக்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை இது உணர்த்துகிறது.அதி அற்புதமான குணங்களை லட்சிய உருவங்களுக்கு அளித்தனர் – வீரம், அறிவு, விவேகம். மக்களுக்கு டயானா ‘செயலூக்கமற்ற’ லட்சிய உருவமாக இருந்தார்.அவருடைய குணங்கள் யாவும் சாதாரண மக்களை ஒத்திருந்தன. முக்கியமாக, நிறுவனங்களுக்கு பெரும்பங்கு ஆற்றியபடியே அதனைக் குறைகூறுவது மற்றும் பிறருக்கு உதவி எதுவும் செய்யாது கரிசனம்  மட்டும் கொள்வது.

இப்பழக்கம் பிந்தைய காலக்கட்டங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டது. அப்போது தங்களைப்போல் அல்லாதவர்களோடு அடையாளப்படுத்திக்கொண்டனர். இப்போது தங்களை ஒத்தவர்களோடு அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

இப்போது அதிகரித்துவரும் சுயமோகம்,சமூக இடையக உறவுகளின் மீதான நம்பிக்கையிழப்பிற்கு ‘நிறைவூட்டல்’ ஆகிறது.ஈகோ ஐடியலோடு (ego-ideal) அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது போனால் கற்பனையான லட்சிய ஈகோ(ideal-ego) உருவாக்கப்படும். 

அப்படியான லட்சிய-ஈகோ தன்னைத்தானே விருப்பத்திற்குரியவராக்கி நிறைவு காண்கிறது.கச்சிதமான படிவத்தை அடைய வேண்டி சுயமோகம் தன்னிலையை உந்துகிறது. அதன் விழைவே உடலை மாற்றத்திற்குள்ளாக்க விரும்புவது.ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாகவோ கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகள் மூலமாகே இதனை அடைகிறது. குறைகூறும் கலாச்சார்மும் இதனோடு வளர்ந்து வருகிறது.மேற்கத்திய சமூகங்களில் இதன் வளர்ச்சியை அதிகப்படியாகக் காணலாம்.தன்னிலைகள் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில்  துன்பம் இழைக்கப்பட்டவர்களாக கருதுகின்றனர்.தங்களுடைய நல் வாழ்வையும் மரியாதையும் யரோ ஒருவர் சிதைத்துவிட்டதாக கூறி பிறர் மீது குற்றம் சாட்ட விரும்புகின்றனர்.அவர்கள் எதிர்பார்க்கும் சட்ட மற்றும் பொருளாதார பதிலீடுகள், சமநிலைக் குழைவை கட்டுக்குள் கொண்டுவருமளவு மட்டுமே இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

உடல்-மைய கலையில் சமூக இடையக உறவுகளின் மீது உள்ள நம்பிக்கையின்மை அழுத்தமாக வெளிப்படுகிறது.இடையக உறவுகளின் செயல் இழப்பை ஈடு செய்யும் விதமாக வதைத்துறு கலை இருக்கிறதா ?தொடக்கநிலை சடங்குகள் தன்னிலையின் விருப்பத் தேர்வினுள் அடங்கிவிட்டதா ? 

பாப் ஃப்ளானகனின்(Bob Flagnan) ‘பிறப்பும் இறப்பும்’ என்கிற ஆவணப்படம் உடல் வதையைப் பற்றி பேசுகிறது.அவர் சுய வதை செய்யும் கலைஞர்.தன் மனைவியின் உதவியோடு உடலின் பல பகுதிகளில் தேகத்தைக் கிழத்துக்கொள்கிறார்.

செயற்கை சுவாசக்குழாய் இல்லாமல் அவரால் சுவாசிக்க முடியாது.கலை அரங்கங்களில் நிகழ்த்தப்பட்ட அவருடைய அரங்கேற்றங்களின் தொகுப்பு அப்படம்.படத்தின் முடிவில் அவருடைய இறப்பும் பதிவுசெய்யப்படுகிறது.அவருடைய உடலை மனைவி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.திரைப்படம் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய காட்சிகளை உள்ளடகியிருந்தன.அவர் தன்னுடைய ஆண் குறியை மரப்பலகையில் ஆணியடித்துகொள்ளும் காட்சியை பலரால் பார்க்க முடியவில்லை.ஆணியை அகற்றும் போது  ரத்தம் திரையை நிரப்புகிறது.அப்போது ,மேலும் சிலர் அரங்கத்தை விட்டுப் போயினர்.

இதன்மூலம் ஏற்படும் கலையனுபவம் எத்தகையது ? சுயவதையும் சாடிஸமும் ஒன்றானதா ?

சாடிஸ்ட் தன்னை மேலான விருப்புறுதியொன்றின் பிரதிநிதியாகக் கருதிக்கொள்கிறார். அவர் அச்சமயத்தில் லட்சியத்தை நிறைவேற்றும் கருவி.அவ்வளவே.பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி கொள்கிறார்.சுயவதை செய்பவர் இதற்கு நேர் எதிர்.துன்புறுத்தப்படும் நபர் துன்புறுத்துபவரின் மூலம் பேசுகிறார்.துன்புறுத்துபவர் தண்டனைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. துன்புறுத்தப்படுபவரே அதனை தேர்வு செய்பவரும் ஆகிறார்.இங்கு துன்புறுத்தப்படுபவரும் துன்புறுத்துபவரும் ஒருவரே என்கிறார் கில்லஸ் டெல்யூஸ் என்கிற அறிஞர்.(துன்புறுத்தப்படுவர் மற்றும் துன்புறுத்துபவர் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களும் ஒரே தன்னிலை தான்.உளம், இருவேறு தன்னிலைகள் இருப்பதாக பாவித்துக்கொள்கிறது.)

துன்புறத்தும் இடத்தில் இருப்பது பெரும்பாலும் தாய் படிமம்.தன்னையொரு கடுமையான அம்மாவாக புனைந்துகொள்கிறார்கள்.துன்புறுத்தலுக்கு உள்ளாவது தாழ்மையுணர்ச்சி நிரம்பிய அப்பா படிமம்.தாயின் மூலம் அப்பா என்கிற குறியீட்டு அடையாளத்தை விலக்க நினைக்கிறார் செயற்பாட்டாளர். சுய வதை செய்பவர் தன்னை வலிமை குன்றிய அப்பாவாகவே அடையாளப்படுத்தியிருப்பார். துன்புறுத்துபவர் கடுமையான நடத்தை உடைய அம்மாவாகவும் அப்பாவின் உருவத்தை சிதைப்பவராக இருப்பார்.(இந்த இருநிலை பகுப்பு ஒருவரினுள் நடப்பது:சுய வதை செய்வோரின் உளநிலை செயல்பாடு).ஆதிக்கம் மிகுந்த தாய் ,தந்தை படிமத்தை குறியீட்டுத் தொகுப்பிலிருந்து விலக்கிவிடுகிறார். குறியீட்டு தொகுப்பிலிருந்து விலக்கப்பட்டவை மறுபடியும் பிரசன்னமாகும் என்ற லக்கான் கூற்றினை வைத்துப் பார்க்கும்போது சுயவதை செய்துகொள்பவரின் இடத்திற்கு அப்பா படிமம் திரும்ப வருகிறது.

சுய வதையாளருக்கும் காயடிப்பு சிக்கல் முடிவடையவில்லை.அதனால் ,தன்னுடைய வதைச் சடங்குகளில் காயடிப்பு போல ஒன்றை துணைவியாரின் மூலம் நிகழ்த்துவதைக் கவனிக்கலாம்.சட்டங்களும் விழுமியங்களும் மகிழ்ச்சியை தடைசெய்வதாகக் கூறும் தன்னிலை மேற்கூரிய போலிக்காயடிப்பு  செயலின்மூலம் ஆசுவாசமடையாது.போதாமையிலும் மகிழ்ச்சி கொள்கிறார்.சுய வதை செய்பவர் ,அவரே சுயமாக ஏற்படுத்திக்கொண்ட சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறார்.குறியீட்டு ரீதியான(சட்டம்,ஒழுக்கம்,விழுமியங்கள்) தடை அவருக்கில்லையென்பதால் தன்னைத் தானே தண்டையாளராகவும் மாற்றிக்கொள்கிறார்.

வக்கிரச்செயல்பாடு சமகால கலையினுள் எவ்வாறு நுழைந்தது?

சுய வதை செய்பவர் மேடையில் நிகழ்த்தும் போலிக் காயடிப்புச் செயலை வக்கிரச்செயல்பாடு எனலாம். ஆனால், அனைத்து உடல்-மைய கலைஞர்களையும் அப்படி அடையாளப்படுத்த முடியாது. டாட்டூ குத்துவது, உடலில் அலங்கார வளையம் குத்திக்கொள்வதையெல்லாம்  வக்கிர செயல்பாடு என்று சொல்ல முடியாது.உள பிரச்சனை என்று கூறுலாமே தவிர வக்கிர செயல்பாடாக அவற்றைக் கருத முடியாது.இத்தகையவர்கள் வக்கிரமான செயல்களை நகல் எடுக்கின்றனரே தவிர, உண்மையான வக்கிர செயற்பாடுகளை செய்வதில்லை.வக்கிர செயற்பாட்டாளர்களுக்கும், உள பிரச்சினை உடையோருக்கும் என்ன வித்தியாசம் ? இருவரும் மேடையில் தங்களுடைய உடலுக்கு வண்ணம் பூசுவதையும் உருவமழிப்பு செய்வதையும் நாடகீயமான முறையில் அரங்கேற்றுகின்றனர். வக்கிர செயற்பாட்டாளர்கள் காயடிப்பு சிக்கலை பகடி செய்யவே மேடையில் வதைத்துறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தன்னிலையின் உளக் கூறு பாதிக்காத வகையில் புற நிகழ்ச்சியாக காயடிப்பை பகடி செய்கின்றனர்.உள சிக்கல் உடையவர்கள் தங்களைச் சட்ட திட்டங்களிலிருந்து விலக்கபட்டவர்கள் என வெளிப்படுத்தும் விதமாக காயடிப்பை பகடி செய்கிறனர்.

போலி பிம்பங்களின் இயங்கியல்:

தன்னிலைகளின் நம்பிக்கையின்மை இடையக உறவுகளின் இருப்பை பாதிக்கவில்லை.

குறியீட்டு அமைவுகளின் இடத்தை தற்போது கற்பனையான போலி பிம்பங்கள் பிடித்துள்ளன.போலி பிம்பங்கள் அடையாளப் பொறிகளாக மாற்றம் கண்டுள்ளன.வாழ்க்கை ஒரு கணினி விளையாட்டு போலாகிவிட்டது. அடையாளத்தை வைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். விருப்பமான நயப்புப்போக்குகளை பின்பற்றலாம்.நாட்டுப்பற்று, சமயப்பற்று என எவ்விதப் பற்றும் அற்று இருக்கலாம்.எளிதில் மாற்றயமைக்கூடிய திரைச்சீலையாக இருக்கிறது வாழ்க்கை. இது தன்னிலைகளை புதுவிதமான தேடலை நோக்கி தள்ளியிருக்கிறது.அதாவது, புனைவுக்கு உள் இருக்கும் ‘மெய்மையை’ தீவிரமான தேடலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உடலின் மீது தன்னிலை  ஏற்படுத்துகின்ற வெட்டுக்கள், சமூகத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் கற்பனையான பிம்பகளிலிருந்து அவர் வெளியேறத் துடிப்பதின் அடையாளம்.ஆதிக்கம் செலுத்தி வரும் நயப்புப்போக்குகளில் இருந்து தப்பிக்கவே டாட்டூ மற்றும் உடல்-துளை அலங்காரங்கள் செய்துகொள்வதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊடங்களும் நயப்புப்போக்குகளை ரசிக்கும்படி  தொகுத்ளிப்பதால் உடனே செயலில் குதிக்கின்றனர் ; மாற்றத்திற்கு உள்ளாகாதபடி உடலை மாற்றியமைத்துக்கொள்ளல்.

இப்போதைய சமூகவியல், அடையாளம் குறித்து பேசுகிறது.அடையாளம் என்பதை கலாச்சார கட்டமைப்புகள் என்றும் அது விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் நீர்மை பண்புடையது என்றும் பேசி வருகிறது.பால் பாகுபாடு மற்றும் பெர்ஃபார்மேட்டிவிட்டி (performativity) சொல்லாடல்கள் தன்னிலைக்கு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. பால் அடையாளத்தை விருப்பப்படி மாற்றயமைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை அது வழங்கியுள்ளது. 

உடலில் வெட்டுகள் ஏற்படுத்திக்கொள்வதை ‘அடையாளத் திரிபு விளையாட்டு’ என்று மட்டும் புரிந்துகொள்ள முடியாது.மாற்றத்திற்கு உள்ளாகாதபடி உடலில் குறிப்பு ஏற்படுத்திக்கொள்வது, எல்லாமும் மாற்றி அமைக்கப்படலாம் என்கிற கருத்துநிலையை பொய்யாக்கும்படியும் இருக்கிறது.தன்னிலையின் உடல் என்பது தனியொரு அடையாளம்.பொதுவில் உள்ள நயப்புபோக்குகளில் கலந்துவிடாமலும், கற்பனையான போலி பிம்பங்களுக்கு ஆட்படாதபடியும் இருப்பதற்கான முயற்சியே உடலினுள் மெய்யான ஒன்றை தேடுதல்.

“கலையின் குறியீட்டு தளம் ஆட்டங்கண்டுள்ளது.இப்போது நிகழ்த்தப்படுவது எல்லாம் மெய்மை ஒன்றே.உடல் கருந்துளைகளாக மாற்றப்பட்டு குறியீட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.”

இது பாடி ராடிக்கல்ஸ்(Body Radicals)என்கிற கலைக்குழுவனரால் சொல்லப்பட்டது.அவர்கள் பொதுமக்கள் மத்தியில் கலைஞர்களாக அங்கீக்ககாரம் பெறாதவர்கள். ஆனால், மாற்றுப்போக்குகளில் தங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

சமூக அங்கீகாரத்திற்கான விழைவு ஒன்றை உணர்த்துகிறது ; குறியீட்டு ஒழுங்கமைவுகள் மொத்தமாக அழிந்துவிடவில்லை.உடல்-மைய கலை சமகால சிக்கலைப் பேசுகிறது.உடலினுள் உண்மையான ஒன்றைத் தேடிக் கண்டடையும் செயல்பாடு அது. 

பாடி ராடிக்கல்ஸின் கலைஞர்கள் பலவகைகளில் தங்களுடைய உடல்களைப் பயன்படுத்தினாலும் அவர்களுக்கிடையேயும் சில பொதுப் பண்புகள் இருக்கின்றன.ஆய்வுக்காக வேண்டி ஆர்லான்(Orlan) மற்றும் ஸ்டீலார்க்(Stelarc) ஆகிய கலைஞர்களின் மீது மட்டும் என்னுடைய கவனக் குவிப்பு இருக்கும்.

ஆர்லான் பலமுறை தன்னுடைய முகத்தில் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.அறுவை சிகிச்சை மேகராவில் பதியப்பட்டு, அவருடைய சொந்த பின்னணிக்குரலோடு கலை அரங்கங்களில் ஒளிபரப்படுகிறது.’என்னுடைய உடலை பொதுச்சமூகத்தோடு விவாதத்திற்கு எடுத்துச்செல்கிறேன்’ என்று

தன்னுடைய கலை குறித்து விளக்குகிறார்.அவருடைய கலை, பொதுச்சமூகத்தின் அழகு சார் கருத்தியல்களை கேள்வி எழுப்பும் விதமாக இருக்கறது.

மக்கட் திரளின் ஏற்பைப் பெற்ற ஆதிக்கப் போக்குகளை விவாததிற்கு அழைத்து வருகிறது.அறுவைசிகச்சைமூலம் அகநிலை படிமத்தை புறநிலைக்கு இணையாக மாற்றலாம். மேலும், இயற்கை அளித்த தோற்றத்தோடு என்னை நான் அடையாளப்படுத்த வேண்டியதில்லை என்கிறார்.

இங்கு , உடல் என்பது தனியொரு மொழியாக மாற்றம் பெறுகிறது.

இறந்த பின் தன்னுடைய உடல் கலை கூடத்தில் பதப்படுத்தப்பட வேண்டுமென்றும் விரும்புகிறார்.ஆர்லான் பல்வேறு அடையாளங்களுக்குள் தன்னை புகுத்திப் பார்க்க முயல்கிறார். அவருடைய உடல் மாற்றத்திற்குள்ளாக்கப்படும் கலைக்கருவி. இதன் மூலம் தன்னை ஒருவிதத்தில் அழிவற்றவராக மாற்றிக்கொள்ள எண்ணுகிறாரோ என்றும் யோசிக்கிறேன். நவீன கண்டுப்பிடிப்புகளின் உதவியோடு தன்னுடைய தேகத்தில் ஏற்படுத்திக்கொண்ட குறிகளை கலை வடிவமாக முன்வைக்கிறார்.ஆதிக்க கருத்தியல்களை நீர்த்துப்போகச் செய்யும் எதிர்ப்பண்பாட்டை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார் ஆர்லான்.

தன்னுடைய உடலியல் மாற்றம், புதிய ஆற்றல் தருவதாகக் கூறும் ஆர்லானின் மேடையேற்றங்கள் சுமரி நீக்க சடங்கோடு  ஒப்பிடத்தக்கவை. சுமரி நீக்க சடங்கிற்கு ஆதரவு தெரிவிப்போர் கூறவதும் இதே கருத்துதான் : சுமரி நீக்கச் சடங்கு பெண்களுக்கு புதிய ஆற்றலைப் பிறப்பிக்கிறது.

உடல், மொழியாக உருமாற்றும் பெறும்போது ,சடங்குகள் கேலிச்சித்திரமாக்கப்படுகிறது. இதுவும் தன்னளவில் ஒரு மொழிக் குறிதான்.(உடலை மொழியென குறிப்பது)

சமகால சமூகத்தினுடைய மைய அழிப்புக் கூறு, சுமரி நீக்கம் போன்ற சடங்குகள் புத்துயிர் பெறுவதற்கு வழிவகை செய்கின்றன. பண்பாட்டு அழிப்பு,உலகளாவிய சந்தைப் பெருக்கம்,பின்னை-தொழில்முறைச் சமூக அமைப்புகள் யாவும் ஒரு தனி மனிதரை நிலையான அடையாளத்தை பற்றிக்கொள்ளுமாறு செய்துள்ளது.புலம்பெயர் ஆப்ரிக்க மக்கள் தற்கால சமூக சக்திகளை நம்பாவிட்டாலும் தங்களுடைய மூதாதையர்களுக்கு இன்றும் மரியாதை செலுத்துகின்றனர்.அதன் எச்சமே இன்றும் தொடர்ந்து பின்பற்றப்படுகின்ற சடங்குகள்.இடையக உறவுகளின் புனைவுத் தர்க்கம் சிதையத்தொடங்கிவிட்டது.அதற்கு பதிலிகளாக இருப்பவை சடங்குகள்.அதாவது,உடலை ஆதாரமாக வைத்து உருவாக்கப்படும் நிலையான அடையாளம்.

உடல்-மைய கலைஞர்களின் வதைத்துறு செயல்பாடுகள், உடலை மையமாகக் கொண்ட அடையாளத்தைச் சிதறடிக்கிறது. அவர்கள் உடலுக்குப் பின்னால் உள்ள மெய்மையைத் தேடுகின்றனர்.பல்வேறு அடையாளங்களை நிகழ்த்திக்காட்டும் விளையாட்டு மைதானம் தான் உடல் என்றால் இங்கு மெய்யானது எது ? 

இறுதியில் ,மாற்றியமைக்கப்படாத ஒன்றாக இருப்பது ஆர்லானின் குரல் மட்டுமே.குரலைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய கலை வடிவத்திற்கு உருவம் அளிக்கிறார்.முன்னர் சொன்னது போல அவருடைய பின்னணிக்குரல், அறுவை சிகிச்சை முறைகளையும் அனுபவங்களையும் எடுத்துரைக்கும் கருவியாக இருக்கிறது.அவருடைய கலைச் செயற்பாட்டில் மாற்றமடையாத அம்சம் குரல் மட்டந்தான்.குரல் மட்டுமே மெய்யானதாகத் தங்குகிறது.ஆர்லான் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சையின் காட்சிகள் பார்வையாளர் உள்ளத்தை குலைப்பவை.மேலதிகமாக அவருடைய குரல் துன்புறுத்தச்செய்கிறது. முகத்திலிருந்து தோல் நீக்கப்படும் போது எழுகிற அவருடைய பிதற்றல் மொழி பார்வையாளர்களுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்.குரல் பயன்படுத்தபடாதிருந்தால் பார்வையாளர்கள் ஓரளவு செளகரியமாக உணர்ந்திருப்பர்.உயிரற்ற உடலுக்கு அறுவை சிகிச்சை செய்வதைப் பார்க்கிறோம் என்கிற எண்ணத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.திகில் படம் பார்த்ததுபோல இருந்தது. திகில் படங்களின்போது கோரமான காட்சியை காண விரும்பாதவர்கள் கண்களை மூடிக்கொள்வர்.இருப்பினும் கதறல் சப்தங்கள் கேட்கும்.உருவத்தை துறந்த குரல் அவ்வளவு  பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால், ஆர்லானின் படத்தில் குரல் தான் பிரதானமாக பயத்தையும் அசெளகரியத்தையும் உண்டு பண்ணுகிறது.கண்களை மூடிக்கொண்டு ஆர்லானின் குரலைக் கேட்டாலும் துன்புறுத்தலாகவே இருக்கும்.குரல், அவரின் நிலையான அடையாளமாகிறது.ஆர்லான் தன்னுடைய அடையாளத்தை வைத்து வித்தை காட்டுகிறார். ஆனால், அவருடைய குரல் தான் உண்மையான ‘சுயம்’.

தன்னைக்காட்டிலும் அவரின் குரலே உண்மையான சுய அடையாளமாக இருக்கிறது.இவ்விடத்தில் புறநிலை அடையாளம் பின்நகர்த்தப்பட்டு அகநிலை அடையாளம் சுயத்தைக் கட்டமைக்கிறது.

மேலும் சிலர் மெய்நிலையை உடலைக் கடந்தவற்றிலும் கண்டடைய முயன்றுள்ளனர்.அது மனிதக் குரல்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு மாற்றியமைக்கும் புதிய கலைச் செயற்பாடு.பின்னை-முதலாளித்துவ யுகத்தில் உடலின் பங்கு குறித்த கேள்வியை எழுப்புகிறார் ஆஸ்திரேலிய கலைஞர் ஸ்டெர்லாக்.அவர், மீவிய-உடலை உருவாக்கும் முயற்சியில் உள்ளார்.தற்போதிருக்கும் உடலின் ஆற்றலை செயல் இழக்க வைப்பதன் மூலமாக பல சாத்தியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார்.நவீன உயிரணுத் தொழில்நுட்பத்தைக்கொண்டு மேற்தோலை மாற்றியமைத்தும்,ஆசைகளின் அடிப்படையில் இயங்காத உடலையும்,கட்டுப்பாட்டுக்குள் இல்லாத தேகத்தையும் உருவாக்கலாம்.இவ்வழியே தன்னிலை ,உடலுக்கு அப்பாற்பட்ட இருப்பை பெறும்.பிறப்பு ,இறப்பு போன்ற தவிர்க்கமுடியாதவற்றைக் கடக்க நினைக்கிறார்.தொழிநுட்பத்தோடு உடல் ஒன்றிச் செயல்படும்போது அப்படியொன்று சாத்தியமாகும் என நம்புகிறார்.இறுதியில், அதுவும் குறியீட்டுப் புனைவு என்கிற இடத்திற்கே வந்து சேரும்.அத்தகைய வாழ்க்கையும் முழுமையான விடுதலையுடையதாக இருக்காது.

உடல்-மைய செயற்பாடுகள் பின்- நவீன யுகத்தில் தன்னிலையின் இருப்பு குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.சிலர் சமகாலத்தின் முக்கியப் பிரச்சனையாக குறியீடுகளின் வலுவிழப்பை மட்டுமே பார்க்கின்றனர்.லட்சிய-ஈகோவை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரம் தன்னிலையிடம் இருப்பது தான் முதன்மை பிரச்சனை என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.இடையக உறவுகளின் மீதான நம்பிக்கையின்மை பல எதிர் பண்பாடுகளை உருவாக்கியுள்ளது.உடல் மையச் சடங்குகளின் மீள் வருகையும் சுயவதை கலைஞர்களும் எதிரொலிப்பது அதைத்தான். குறியீட்டு ஒழுங்கமைவின் இன்மையைச் சந்திக்க வேறு வழிகள் ஏதுவுமில்லையா ? குறியீட்டுத் தொகுப்புகள் சோடை போனதற்கான எதிர்வினை இவ்வாறு தான் இருக்க முடியுமா ? 


குறிப்புகள் :

1.தன்னிலை எனும் பிரயோகத்தை உடல் பால் பொருள் கட்டுரைத் தொகுப்பில் கவிஞர் பெருந்தேவி பயன்படுத்திய பதத்திலேயே நானும் பயன்படுத்துயிருக்கிறேன்.

“இந்தக் கட்டுரையில் ஆண்,பெண் என்ற பிரயோகங்களை சமூகத்தில் இடையறாது கட்டமைப்படும் தன்னிலைகள் என்ற அளவில் புரிந்துகொள்ள வேண்டும்.’சுயம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தாமல் ‘தன்னிலை’ என்று பயன்படுத்துவதற்குக் காரணமுண்டு.சுயம் எனும்போது ஏற்கனவே ஒருவருக்குத் தரப்பட்டிருப்பதாகப் பொருள் வருகிறது.மாறாக,சுயம் தன்னாளுகை கொண்டதல்ல என்பதையும் அது சமூகத்தின் பல்வேறு சமூக,வரலாற்று விசைகளால் இந்த்விசைகளின் ஊடே உருவாகும் சொல்லாடல்களால் தொடர்ந்து வடிவமைக்கப்படுகிறது என்பதையும் ‘தன்னிலை’ எனும் சொல் குறிக்கிறது.”(உடல் பால் பொருள் – பெருந்தேவி) 

2.Castration எனும் அகச்சிக்கல் காயடிப்பு என்று தமிழில் வழக்கப்பட்டுவருகிறது. சி.மணியும், தி.கு.ரவிச்சந்திரனும்  ‘காயடிப்பு சிக்கல்’ என்றே உபயோகப்படுத்தியுள்ளனர்.இம்மொழிபெயர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை.காயடிப்பு என மொழிபெயர்க்கும்போது அகச்சிக்கல் புறநிலையாக்கம் செய்யப்படுகிறது.Castration வினையாக்கமாக மாற்றமடைகிறது.

 

எழுத்தாளர்கள் குறிப்பு:

ரெனாட்டா சலீகல்(Renata Salecl): ஸ்லோவேனியாவைச் சேர்ந்த தத்துவவாதி மற்றும் சமூகவியலாளர்.The Spoils of Freedom மற்றும் Perversions of Love and Hate முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
குற்றவியல் ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.
நிஷாந்த்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் துறை (B.Sc Viscom) மாணவர் .சொந்த ஊர் கோவை மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.