இரண்டு விடியல்கள்

காட்டுக்குயில புடிச்சு போனுக்குள்ள உட்டது கணக்கல்லச் சத்தம் வருது.”  

சார்ஜரில் மாட்டியிருந்த உமாவின் மொபைலிலிருந்து  வந்த குறுஞ்செய்திக்கான சத்தத்தைக் கேட்டுவிட்டு அத்தை சொன்னாள்

“காட்டுக்குயிலு இப்படியா சத்தங் கொடுக்கும்.”

அதுவரையிலும் அடுக்களையில் நின்றபடியே குரலை மட்டுமே அனுப்பி அத்தையோடு பேசிக் கொண்டிருந்தவள் விறுட்டென வந்து அத்தையின் பக்கத்து சோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

“நாங்க சின்னபிள்ளையில விளையாடுக மாந்தோப்பில இந்தச் சத்தத்துக்கு நடுவுல தான் எங்க ஆட்டமே”

அத்தை இப்போது  ஊரிலுள்ள  மாந்தோப்பிற்கே போயிருந்தாள்.

“அதெல்லாம் ஒரு காலம். இப்ப எல்லாம் மங்கிப் போச்சு.”

அத்தையின் மார்பு ஏக்கத்தில் ஏறி இறங்கியது.

*

ரெங்கு அத்தானுக்கு உமாவை கட்டி வைத்துவிட வேண்டுமென்று அத்தைக்குக் கொள்ளை ஆசை. அத்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அத்தானின் பிடிவாதத்தைத் தளர்த்திவிடும் முயற்சியில் அத்தை உமாவின் பக்கம் திரும்பியபோது அவள் ஏற்கனவே அத்தானின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.

“அவனுக்கு இவதான”

“பொசுபொசுன்னு வளந்தாலும் ரெங்கு உயரத்த தாண்டல. அது போதாதா”

இப்படியான பேச்சுகள்  நடமாடிக் கொண்டிருந்த காலத்திலேயே ரெங்குவும் உமாவும் அவர்களின் தீர்மானத்தை  எடுத்து முடித்திருந்தார்கள்.   கிட்டத்தில் வந்து நின்று கேட்கிறபோது பெரியவர்களுக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்பதாக முடிவெடுத்து அதுவரையிலும் வந்த பேச்சுக்களுக்குக்  காதடைத்தவர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள்.

ரெங்கு கல்லூரியில் உடன் படித்த ஜெஸ்ஸியை விரும்பி மணம் முடித்துக் கொண்டான்.

“அம்மையும் அப்பனையும் தலை குனிய வச்சுதான் தன் வாழ்க்கைய விளங்க வைக்கணும்ன்னு அப்படி என்ன பிடிவாதம் இந்தக் காலத்து பிள்ளேலுக்கு.”

“வேத கோயில்ல வச்சு கல்யாணம் வைக்கணும்ன்னு அவங்க போடுற சட்டத்துக்கு இவனும் இப்படி மண்டய ஆட்டீட்டு  பல்ல இழுச்சிகிட்டு போய் நிக்கான் பாரு. அப்படி என்ன காதலோ கருமமோ.”

தேவாலயத்தில் திருமணத்தின்போது உமாவின் அத்தையும் மாமாவும் மனம் வாடி நின்றது பொறுக்க மாட்டாத கோவத்தில் உமாவின் அம்மா ரெங்குவை திட்டித் தீர்த்தாள்.

“கடவுள் சேர்த்த இவ்வுறவை மனிதன் பிரிக்காதிருக்கக் கடவுக”

பாதிரியார் உரக்கச் சொன்னார்.

அம்மா ரெங்கு அத்தானைத்  திட்டிக் கொண்டிருந்ததைப் பற்றியெல்லாம் உமாவிற்கு எந்தப் புகாரும் இல்லை. தனது கதை அம்பலத்திற்கு வரும்போது என்னென்ன களேபரங்கள் நிகழுமோ என்று உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தாள். இதற்கே “ வேதக் கோயில் வேதக் கோயில்” என்று அம்மா கிடந்து அடித்துக் கொள்கிறாள். தனது திருமணத்திற்கு ஜமாத் வரை போக வேண்டி வருமென்று தெரிந்தால் என்ன செய்வாளோ என்பதை நினைத்துப் பயந்து கொண்டிருந்தாள்.கூடவே எந்த எதிர்ப்பும் தங்களுடைய காதலைப் பலவீனப்படுத்தி விடமுடியாதென்பதையும் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

இரண்டு வருட நட்பில் உமாவிற்கும் அலியத்தை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால் அவன் காதலைச் சொன்னபோது உடனே சம்மதித்துவிடும் தைரியம்  வந்திருக்கவில்லை.  அவள் வீட்டின் தெரிந்த மனிதர்கள் , அலியத் வீட்டின் முகம் அறியா மனிதர்கள் என்ற இருதரப்பு மனிதர்களைப் பற்றியும்  யோசித்தாள். ஹமீத் மாமாவை கட்டிக் கொண்டதற்காக இன்றுவரையிலும் வீட்டில் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரியப்பாவின் மகளான கொடி அக்காவின் முகம் கண்முன்னே வந்து போனது. தன்னுடைய யோசனையில் ஹமீதை இப்படி மாமா என்று  நினைத்துக் கொள்வது தெரிந்தாலே அம்மா நிச்சயம் திட்டுவாள். அப்படி இருக்கையில் தான் எப்படி அலியத்தின் காதலுக்குச் சம்மதம் சொல்ல முடியுமென்று குழம்பிப் போனாள்.

சில மாதங்களாகக் குழப்பங்களுக்கு நடுவே பயணித்துக் கரை சேர்ந்தவள், என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு அல்லியத்திற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தாள். காதலுக்குச் சம்மதம் தெரிவிக்காமலிருந்த நாட்களில் பொறுமையாக நட்பைத் தொடர்ந்திருந்த அலியத்தின் குணமும் அவளது சம்மதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

இறுதி ஆண்டின் பரீட்சைகள் நடந்து கொண்டிருந்தன. இருவருக்கும் உள்வளாக நேர்முகத் தேர்வில் வேலை கிடைத்திருந்தது. வேலைக்குப் போக ஆரம்பிக்கும் போது நிச்சயம் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைத் தொடங்குவார்கள். அப்போது விஷயத்தைப் பக்குவமாக பிரித்து வைக்க வேண்டுமென்று மனக்கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.

அலியத்தும் உமாவும் வெவ்வேறு இடத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்த பிறகும் அவர்களின் காதல் அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. உமா நினைத்திருந்தது போலவே வீட்டில் வரனின் பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. அலியத்திடம் சொன்னபோது கொஞ்சம் பொறுத்து வீட்டில் சொல்லிக் கொள்ளலாமென்று தள்ளிப் போட வைத்தான். அவள் மிகவும் நெருக்கி நின்றபோது குறைந்த அவகாசம் தரும்படி கேட்டு வாங்கிக்கொண்டான்.

“வீட்டில பேசிப் பாத்தேன். எல்லாரும் ரொம்ப வருத்தபடுறாங்க. குடும்பமா செத்து போயிடுவோம்ன்னு சொல்றாங்க. எனக்கு உன்ன ரொம்ப புடிக்குந்தான். ஆனா எனக்கு வேற வழி இல்ல.வாப்பாவை வருத்தப்படுத்தி  நம்ம சேருறதுல எனக்கு விருப்பமில்லை. அது நம்ம வாழ்க்கைய சீரழிச்சிரும்.” எதிர்பாராத ஒருநாளில் முன் வந்து நின்றிருந்தவன், சுருக்காக முடித்துவிட்டு நகர்ந்துகொண்டான்.

உமாவால் எதையும் அப்படிச் சுருக்காக மறந்துவிட முடியவில்லை. ஏதனோடும் ஒட்டிக் கொள்ள முடியாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். அலியத்தின் திருமணம் முடிந்திருந்த செய்தி காதுக்கு வந்து எட்டியிருந்த பிறகும் கூட அவளுக்காக வந்த வரன்களின் பேச்சுகள் எதையும் அவளால் உள்ளிழுத்துக் கொள்ள முடியவில்லை.

மதிவாணனின் போட்டோவை அம்மா நீட்டியபோது கடனுக்கென்று ஒருமுறை பார்த்து வைத்தாள். போட்டோவில் இருந்த அவனது முகம் அவளுக்குள் பதியவில்லை.பதியும் படியாக அவள் பார்த்துக் கொள்ளவுமில்லை.

“மாப்பிளை வீட்டில பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க பொண்ணுகிட்ட ஒருவார்த்த கேட்டுகிடுங்க.”

தரகர் சொல்லியிருந்த செய்தியைக் கேட்டு அம்மாவின் முகம் பூரித்துப் போனது.

“உங்களுக்கு சரிண்ணு படுறது எதுன்னாலும் எனக்கு சம்மதம் ம்மா.”

 உமாவின் முடிவைக் கேட்டு அம்மா நின்றபோது உமாவிடமிருந்து வந்த பதில்.

உமாவின் பதிலில் பூரித்துப் போயிருந்த அம்மா நான்கைந்து நாட்களுக்கு அதே பெருமிதத்தோடு திரிந்துக் கொண்டிருந்தாள். யார் யாருக்கோ ஃபோனை போட்டு தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.

“பெரியவங்களுக்கு பிடிச்சிருந்தா சரிண்ணு சொல்லிட்டியாமே. ராசாத்தி.”

 நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தை உமாவின் முகத்தைச் சுற்றி கைகளை வட்டமடித்து தனது ஓர நெற்றிகளில் வைத்துச் சொடக்கு போட்டுக் கொண்டாள்.

பக்கத்தில் உமாவை அழகு படுத்தியபடி நின்று கொண்டிருந்த பார்லர் பெண்மணியின் இருப்பைப் பற்றியெல்லாம் அத்தைக்கு எந்தக் கவலையுமில்லை.

ரிசப்சனில் மேடையில் பூச்செண்டோடு நின்றுகொண்டிருந்த போது அத்தை மேடையேறிப் போய் உமாவின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.

“ஹேப்பி மேரிட் லைஃப்” நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.

குரலில் பெரும் பூரிப்பு இருந்தது. யாரிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு  இதனை இப்படிச் சொல்வதற்காக முன் ஒத்திகைகள் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் என்பதை அத்தையின் வார்த்தைகளிலிருந்த சிரத்தை உமாவிற்கு  காட்டிக் கொடுத்தது.

“ ஜோடி பொருத்தம் அம்சம்”

லேசாக எக்கி உமாவின் காதருகில்  சொல்லிவிட்டு மேடையை விட்டுக் கீழிறங்கினாள். அத்தை இப்படியெல்லாம் நடந்துகொள்கிறவள் இல்லை. நிரம்பி வழியும் பூரிப்பின் மிகுதியால் இப்படிச் செய்கிறாள் என்பதை உமாவால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

தனக்குள்ளேயே முட்டி மோதி  எடுத்துக் கொண்டிருந்த பிரயத்தனங்கள் சரியாக கைகொடுத்திருந்ததில் அலியத்தை விட்டு விலகி மதிவாணணின் பக்கத்தில் இப்படி முழுமையாக நின்று கொள்ள முடிகிறது என்பதே உமாவிற்கு ஆசுவாசமாக இருந்தது. பக்கத்தில் கலகலப்பாக நிற்க வேண்டியவன் இப்படி சிலையாட்டம் விறைப்பாக நின்று கொண்டிருக்கிறானே என்று மதிவாணணின் மீது செல்லக் கோபமும் சேர்ந்தே வந்தது.

திருமணம் முடிந்திருந்த இரவு அவன் விலகிப் படுத்துக் கொண்டபோதும் அசதி என்றே அவள் நினைத்திருந்தாள். அடுத்தடுத்த நாட்களில் அவனுக்குள்ளிருந்த விலகலில் பெரும் காரணம் இருக்க வேண்டுமென்று மனதிற்குத் தீர்க்கமாய் உரைத்திருந்தபோதும் அவளாக முன்வந்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.  பக்குவமும் பொறுமையும் அவளுக்குக் கச்சிதமாகக் கூடி வந்திருந்தன.

“வாயி எங்க வர நீளுகு. இந்தத் துடுக்குக்கு போற வீட்டுல எப்படி பொழைக்க போறியோ.”

அம்மா அடிக்கடி உமாவை இப்படியாக நொந்துக் கொண்டிருக்கிறாள்.

அலியத்தோடு இருந்த நாட்களில் உமா அப்படிதான் இருந்திருக்கிறாள். அவன் மூன்று வார்த்தைக்கு இரண்டு வார்த்தையாகக் குறைத்துப் பேசினால் காரணம் கேட்டே அவனைக் குடைந்து எடுத்து விடுவாள். பொறுமை என்கிறதெல்லாம் அவளது அகராதிக்கே புதிது. அலியத்தின் பிரிவு அவளுக்குள்ளிருந்த துடுக்குத்தனத்தை மொத்தமாகச் சுருட்டி வாரிப் போயிருந்தது. ஓர் அன்பின் தோல்வி மனிதனை இத்தனை பக்குவப்படுத்தி விடுமா என்பதை அவள் அவளுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டபோது, காதலித்து விட்டு திருமணத்திற்குப் பிடி கொடுக்காமல் விலகிச் சென்ற காதலியைக் கொலை செய்துவிட்டதாகத் தொலைக்காட்சி செய்தியில் காட்டப்பட்ட ஏதோவொரு அந்நிய முகம் நினைப்பில் வந்து போனது. அன்பின் நிராகரிப்பிற்கு இரு கூர் முகங்கள் இருப்பதாகவே அவளால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

அவனது விலகலுக்கான காரணத்தைப் பக்குவமாகப் பேசி தெரிந்து கொள்ள வேண்டுமென்று அதற்கான தருணத்திற்காக உமா காத்துக் கொண்டிருந்தாள். அவள் குறி வைத்த தருணங்கள் நழுவிக் கொண்டே போவது தற்செயலா அல்லது மதிவாணனின் தீர்மானமா என்கிற முடிவிற்கு அவளால் எளிதில் வந்துவிட முடியவில்லை.

குழப்பத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மாலை வேளையில் உமாவின் மொபைல் சிணுங்கியது. புது எண்ணிலிருந்து அழைப்பு.

“ ஹலோ ”

உமா சிரத்தையில்லாமல் சொன்னாள்.

“ ……… ”

எதிர்முனையில் மெளனம்.

“ ஹலோ.. யாரு.. ஹலோ”

“ ஹலோ”

இப்போது ‘ஹலோவோடு’ சேர்ந்து பெருமூச்சின் இரைச்சலையும் உமாவால் கேட்க முடிந்தது.

“ நான் கல்யாணி. மதியோட காலேஜ்மெட்.”

“ ம்ம். சொல்லுங்க”

“ நானும் அவனும் ஆறு வருஷம் லவ் பண்ணோம். அவன் எவ்வளவோ பேசியும் அவன் அப்பா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிடல. அவரும் அம்மாவும் சேர்ந்து செத்து போயிருவோம்ன்னு மிரட்டித்தான் உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க. என்ன தவிர யாரோடையும் அவனால வாழ முடியாது. உங்ககிட்ட எப்படி சொல்லுகதுன்னு யோசிக்கிறான். அதான் நானே பேசுறேன்னு உங்க மொபைல் நம்பர் வாங்கிகிட்டேன். இப்படி கேக்குறதுக்கு ஸாரி. ஆனா பிடிக்காத வாழ்க்கைய வலுக்கட்டாயமா பிடிச்சுகிட்டு மூணு பேரும் கஷ்டபட்டுக்கிறதுக்கு நீங்க புரிஞ்சுகிட்டு….. ..”

 உமாவின் எதிர்முனையிலிருந்த குரல் முடிக்க முடியாமல் திக்கி நின்றது.

“ இதை நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவரோட அப்பாகிட்டேயே பேசியிருக்கலாமே.”

 உமாவிற்குள்ளிருந்து கிளம்பி வந்த மொத்த ஆத்திரமும் வார்த்தைகளில் அனலேற்றியிருந்தது.

“நீங்க கேக்குறதெல்லாம் சரிதான். ஆனா கல்யாணத்துக்குபிறகுதான் தன்னோட வாழ்க்கையப்பத்தின முடிவெடுக்கிற உரிமையைப் பிள்ளைகளுக்கு தரணும்னு  நம்பிகிட்டு இருக்க வீட்டுல பிறந்த பாவப்பட்ட ஒருத்தனா அவனால அப்ப எதையும் பண்ண முடியல. அவன் அப்பா வீம்ப பத்தி அவன் வழியா கேட்டுத் தெரிஞ்சுகிட்டவங்கிற முறையில  என்னாலயும் எதுவும் மேற்கொண்டு நகர்த்த முடியாம இருந்திட்டேன்.”

முகம் தெரியாத அந்தக் குரலில் நிரம்பி நின்றிருந்த வருத்தத்தை உமாவால் உருவகம் செய்து பார்த்துக் கொள்ள முடிந்தது.

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் எதிர்பாக்குறீங்க”

“..…..”

உமாவின் கேள்விக்கு எதிர்முனையில் மெளனம் நீட்டித்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு உமா இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அடுத்தடுத்த நாட்களின் நடமாட்டத்தில் மதிவாணின் பார்வை உமாவின் செயல்களில் அதிகமாகப் பதியத் தொடங்கியிருந்தது. அவளும் அதனை கவனியாமலில்லை.

மதிவாணணின் சுயநலத்தின் மீதும், கல்லுள்ளித்தனத்தின் மீதும் உமாவிற்கு பெரும் வெறுப்பு உண்டானது. எத்தனை பெரிய துரோகம் செய்யப் பார்க்கிறானென்று ஆத்திரம் எழுந்தது. அவனது பெற்றோரை அழைத்து அவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தலாமென்று மனம் கணக்குப் போட்டது. உணர்வின் தளும்பலில் தோன்றிய எந்த முடிவினையும் உடனே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் தள்ளிப் போட்டபடியே மனதிற்குள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தாள்.

ஒருவர் மீதான அன்பு இன்னொருவருக்கான துரோகமாக மாறுவதின் குரூரம் மனிதர்களிடையே புதிதில்லையே என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். தன்னை அம்போ வென்று விட்டுப் போயிருந்த அலியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இவன் அத்தனை மோசமில்லையென்கிற புள்ளிக்கு அவளது மனம் மெல்ல நகரத் தொடங்கியிருந்தது. ஏதோ ஒரு முடிவுக்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள அவளது மனம் ஒவ்வொரு கட்டமாக நொண்டியடித்துக்  கொண்டிருந்தது.

“ மியூச்சுவலுக்கான ப்ரொஸீஜர் என்னன்னு பாருங்க. மேற்கொண்டு ஆக வேண்டியத பாக்கலாம்.”

திடீரென்று ஒரு காலையில் அவளிடமிருந்து இப்படியான வார்த்தைகளை மதிவாணன் எதிர்பார்த்திருக்கவில்லை.

பெரியவர்களின் முன் நடக்கப்போகும் பேச்சு வார்த்தைகள், உமாவின் ஆர்ப்பாட்டங்கள் என்று வெவ்வேறு கோணங்களின் தீர்மானங்களில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு உமாவின் வார்த்தைகள் ஆச்சரியத்தைத் தந்தன.

“ உங்கள சங்கடபடுத்தீட்டதா நினைக்க வேண்டாம். எனக்கு வேற வழி இல்ல.”

மதிவாணன் சொன்னபோது உமா மொண்ணையாகச் சிரித்தாள்.

“ என் நிலமைய புரிஞ்சுகிட்டு விட்டுக் கொடுக்குறதுக்கு ரொம்ப தேங்ஸ்”

அவனது கண்கள் அவளது முகத்திற்கும் தரைக்குமாக அலையடித்துக் கொண்டிருந்தன.

“ என்ன திரும்ப சொல்லுங்க.”

அவளது குரலில் நிதானம் கூடியிருந்தது.

அவன் தரையைப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான்.

“ உங்களுக்காக விட்டுக் கொடுக்கிறதா சொன்னீங்கலா….சரியாப் போச்சு.”

லேசான புன்னகையோடு இடமும் வலமுமாகத் தலையை உருட்டினாள்.

“ஆமா விட்டுத்தான் கொடுக்குறேன். இல்லன்னு சொல்லவே மாட்டேன். ஆனா உங்களுக்காகக் கிடையாது. எனக்காக.படபடத்திட்டு நிக்க பறவைய புடிச்சு வைக்கிறேன்னு என் உள்ளங்கைய காயப்படுத்திகிட முடியாதுல . அதுக்காக விட்டுக் கொடுக்குறேன்.”

இவ்வளவு நேரமும் போனால் போகிறதென்று ஓரமாய் ஒட்டிக் கொண்டிருந்த மதிவாணணின் குற்ற உணர்வு இப்போது மார்பின் நடுப்பகுதியில்  குத்தும்  முள்ளாக மாறியிருந்தது.

உமா பேச்சை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்திருந்தாள்.

நீதிமன்ற வாசல் வரைக்கும் போய் எட்டிய பிறகுதான் இரண்டு வீட்டுப் பெரியவர்களுக்கும் விசயம் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் நீதிமன்ற வளாகத்தில் பார்த்ததாக மாமனாரின் பள்ளி சிநேகிதரான வக்கீல் போய் சொல்லியிருக்காவிட்டால் இன்னும் கூட தாமதமாகியிருக்கலாம்.

“ பைத்தியமாட்டி புடிச்சிருக்கு. என்னவா இருந்தாலும் பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம். எங்க  இருந்து இத்தன திமிரு வந்திச்சு. கோட்டி கழுத.”

உமாவின் அம்மா ஆத்திரம் தீர கத்தினாள்.

மதிவாணனின் அம்மாவும் அப்பாவும் இருப்பதைக் கூட பார்க்காமல் அம்மா இப்படிப் பேசுகிறாளே என்பது மட்டுந்தான் உமாவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மற்றபடி ஒரு தாயாக அம்மாவின் ஆதங்கத்திலிருந்த  நியாயம் அவளுக்குச் சரியாகவே பட்டது.

அவள் மெளனமாக அமர்ந்திருந்தாள். கண்கள் அமைதியாக எதிரில் அமர்ந்திருந்த முகங்களுக்குள் தாவிக் கொண்டிருந்தன. மதிவாணன் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. தலைக் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தது.

“ ஒத்துவரல….”

எப்படிப் புரட்டிக் கேட்டாலும் உமா கிளிப்பிள்ளையாக ஒரே பதிலையே எடுத்து முன்வைத்தாள். மதிவாணனிடமிருந்து அதுவும் இல்லை.

அப்படிச் சரிசெய்து கொள்ளுங்கள் இப்படி அனுசரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கான எந்தப் பிரச்சினைகளும் தங்களின் முன் வைக்கப்படவில்லை என்பதே உமாவின் வீட்டாருக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தது. என்னவென்றே தெரியாமல் எதைச் சரி செய்து வைப்பது என்று அவர்கள் விழிபிதுங்கி நின்றார்கள். மதிவாணின் பெற்றவருக்கு மகனின் காதல்தான் பிரிவிற்குக் காரணமோ என்கிற சந்தேகம் இல்லாமலில்லை. எனினும் உமாவின் உறுதியைப் பார்க்கும் போது இருவருக்குமிடையே வேறேதேனும்  மனக்கசப்புகள் இருக்குமோ என்று குழப்பினார்கள்.

“ படிச்ச திமிருல இஷ்டத்துக்கு ஆடுக கழுத என் வீட்டு வாசப்படி ஏறிடக்கூடாது. அப்புறம் மனுஷனா இருக்க மாட்டேன்.”

கோபத்தின் உச்சத்தில் பேசிய உமாவின் அப்பாவிற்குத் தொண்டை லேசாகக் கமறியது. அம்மா கண்கள் குளமாக அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். சமாதானம் செய்து வைப்பதற்கான எந்தத் துருப்புச் சீட்டும் கிடைக்காமல் திரும்பியிருந்த உமாவின் பெற்றோர்கள்  மீண்டும் வரவேயில்லை.மொத்தமாக விலகியிருந்தார்கள்.

மதிவாணணின் பெற்றோர் அவனைச் சமாதானப்படுத்த முயன்றிருக்க வேண்டும் என்பதாக உமா புரிந்து கொண்டாள். பக்கத்து அறையில் அவன் பெற்றோரோடு கைபேசியில் நடத்திய விவாதங்கள் அவளது அறை வரையிலும் கேட்டது. அவனது குரலின் தொணி அவன் பெற்றோர் மீது சேர்த்து வைத்திருந்த மொத்தக் கோபத்தையும் கொட்டித் தீர்க்கிறான் என்பதைத் தெளிவாகக் காட்டியது. இரண்டு தடவைகள் அப்படியான விவாதங்களில் அவன் ஈடுபட்டதை உமா கேட்டிருந்தாள்.பின்னர் அதுவும் ஓய்ந்து போனது. நீதிமன்றம் குறிப்பிட்ட தேதிகளில் இருவரும் சரியாக ஆஜராகி வழக்கை சுமுகமாக முன் நகர்த்தினதன் விளைவாய் அவர்கள் எதிர்பார்த்திருந்த விவாகரத்து அவர்களுக்குக் கிடைத்தது.

இருவரும் பிரிந்து கொள்ளலாமென்று நீதிமன்றம் அறிவித்திருந்த  மாலையில் கல்யாணியிடமிருந்து உமாவிற்கு அழைப்பு வந்தது.

“ ரொம்பவும் தேங்ஸ்”

 தனது காரியத்தை முடித்துக் கொள்ளத் தடையில்லாமல் விலகி நிற்பவரின் மீது ஏற்படுகிற கரிசனம் எதிர்முனைக் குரலில் இருந்தது.

அவள் பேசிக் கொண்டிருந்தபோதே மதிவாணன் அவனது உடைமைகளோடு கிளம்பினான்.

“ எதுவும் ஹெல்ப் தேவையானா தெரியப்படுத்துங்க.”

அவனால் இப்படிச் சொல்லிவிட்டுக் கிளம்ப முடிகிற அளவில் அவர்களுக்குள்ளாகச் சிறிய புரிதல் உருவாகியிருந்தது.

உமா  தலையசைத்து வழியனுப்பி வைத்தாள்.  அதே வீட்டில் தொடர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அவள் ஏற்கெனவே செய்து முடித்திருந்தாள்.

இரவு உறக்கம் பிடிக்கவில்லை. மெத்தையில் இடமும் வலமுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். அடுத்து என்ன என்கிற கேள்வி அவள் அனுமதியின்றியே மண்டைக்குள் பல் இழித்தபடி நின்று கொண்டிருந்தது. உறங்குவதற்கான முயற்சியில் வேறு வேறு கோணங்களில் உடம்பைக் கிடத்தி எப்படியோ உறங்கிப் போனாள்.

அகலப் பாதாளத்திலிருந்து கேட்பதான காலிங் பெல் சத்தம் துண்டுத் துண்டாக ஓடிக்கொண்டிருந்த கனவின் முகங்களுக்கு நடுவே அலைந்து கொண்டிருந்த அவளை எழுப்பியது. கண்ணைக் கசக்கியபடி இடத்திலிருந்து புரண்டு நிமிர்ந்தாள். எப்போது உறங்கிப் போனாள் என்பது நினைவிலில்லை.

கதவைத் திறந்தபோது உமாவின் அத்தை நின்று கொண்டிருந்தாள். எல்லாமும் முடிந்து போனதாகச் சொல்லி விடியும் ஒரு விடியலில் வானம் சரியாக வெளுப்பதற்கு முன்பாகவே அத்தை இப்படி வந்து நிற்கிறாள் என்பது ஆச்சரியத்தைத் தாண்டிய மகிழ்ச்சியை உமாவிற்குள் கொண்டு வந்து சேர்த்தது. அவள் என்ன கேள்விகளை இடுப்பில் செருகி எடுத்து வந்திருக்கிறாளோ என்கின்ற தவிப்பும் கூடவே கைகோத்து நின்றது.

“ வாங்கத்தே..”

உமா முடிப்பதற்கு முன்பாகவே அத்தை விருட்டென வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். நேராக சோபாவில் வந்தமர்ந்தாள்

“ நாக்கு வரலுகு ஒரு காப்பித் தண்ணி போடேன்.”

சோபாவில் கூடுதல் ஆசுவாசத்தோடு சாய்ந்து கொண்டாள்.

*

“ காட்டுகுயிலுன்னு சொன்னதும் ஏதோ ஒரு ஆர்வத்தில் வந்து உட்காந்திட்டேன். அடுப்புல பாலு வச்சேன்”

 உமா அடுக்களைக்கு விரைந்தாள். அத்தை அவளது பார்வையை வீட்டுச் சுவரில் படர்த்திக் கொண்டிருந்தாள்.

இரண்டு குவளைகளில் காப்பியோடு உமா மீண்டும்  அத்தை அருகில் வந்து அமர்ந்து கொண்டபோது அத்தையின் கண்கள் எதிர் சுவரில் லேசாக அசைந்து கொண்டிருந்த ராதா கிருஷ்ணர் படத்தில் பதிந்திருந்தது.  எந்தக் கவலையுமின்றி காதலில் மூழ்கியிருந்த ராதையும் கண்ணனும் அடர்ந்த வனத்தின் பச்சையத்திற்கு நடுவில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார்கள். கண்ணனின் ரோஸ்நிற அங்கவஸ்திரம் காற்றில் மேலெழும்பிப் பறந்து கொண்டிருந்தது.

“ நிரம்ப எடுத்துட்டு வந்துட்டேன். பாத்து”

உமா குவளையை அதிகக் கவனத்தோடு நீட்டினாள். உமா நீட்டிய காப்பி குவளையை அத்தை வலது கையில் வாங்கி, பின்பு இடது கைக்குக்கு மாற்றிக் கொண்டாள்.

வலது கையோடு உமாவின் இடது கையை கோர்த்துப் பிடித்துக் கொண்டாள். முதல் உறிஞ்சு காப்பியை நிதானமாக உள்ளிழுத்துக் கொண்டவள் எதையோ நினைத்துப் பெருமூச்செறிந்தாள்.

“ என்னத்த சொல்லன்னும் தெரியல. எப்படி விளங்கிகிடனும்ன்னும் புடிபடல.”

“ அவதான் வேணும்ன்னு குறுக்கும் நெடுக்குமா நடந்து கெட்டிகிட்டவன் இப்ப தெனம் ஒரு பாட்டம்….நெல்லுக்குப் புலம்பி தீக்கான்.நின்னா குத்தம் இருந்தா குத்தமன்னு அவன போட்டு படுத்தி எடுக்கா சண்டாளி”

அத்தை ரெங்கு அத்தானைப் பற்றித்தான் பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு உமாவிற்கு சில மணித்துளிகள் பிடித்தன.

“ நேத்து ராத்திரி பேசுகையில அவன் அழலங்கிறது மட்டுந்தான் கொற. பிள்ளைக ரெண்டுல ஒரு பாசத்துக்கு ஏங்கி வளருகது சரியா இருக்காதேன்னு பல்ல கடிச்சிட்டு அவக்கூட வாழ்ந்திட்டு இருக்கான். அதுக மட்டும் இல்லேனா நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம்ன்னு எப்பவோ அத்துவிட்டுட்டு வந்திருப்பான்”

உமாவின் அத்தையின் வலது கண் விளிம்பில் கோர்த்திருந்த கண்ணீரில் காற்றில் அசைந்த அவளது முன்நெற்றி முடியின் நுனி ஒட்டிக் கொண்டு நின்றது.

“ ஏனோ அவன் பேசப் பேச உன் நெனப்பு வந்திட்டு. அதான் காலையிலேயே பொறப்பட்டு இங்கன வந்திட்டேன். இந்நேரம் அவனுக்கு அங்க எப்படி விடிஞ்சிருக்குமோ.”

உமா அத்தையின் கைக்குள் இருந்த தனது கையை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டாள். உமாவின் வலது கையில் ததும்பிக் கொண்டிருந்த குவளையிலிருந்து ஒற்றை காப்பித்துளி குவளையின் விளிம்புத் தாண்டி வெளி வழிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.