- செம்மந்தி
கிழவி தனது விற்பனை மீன்களுக்குத்
தானாகவே புதுப் பெயரிடுவாள்
தரிசு தாண்டி சர்ச் போகும் வழியே
அந்தக் கூடையை தூக்கித்தாவென்றாள்
என்ன மீனென்று கேட்டேன்
செம்மந்தி என்றாள்
வித்தியாசமான பெயர்
உச்சரித்துக்கொண்டே கரையில் நிற்கிறேன்
அதைக் கேட்டதும் கடல் தனது உடலை
பாத்திரத்தைப் போல அலசிக் குலுங்கியது
இல்லவே இல்லாத செம்மந்தி
கூடையில் இருந்தபடி கண்ணடித்தது
- பிரகாசமான வாழ்வு
பிரகாசத்தை வெளிப்படுத்தாத எந்த வார்த்தையும் இருளை நோக்கியதுதான்
அன்று அணுகுண்டை வீச வேண்டிய நாள்
முகாமின் நரைதாடி வீரன்
நற்காலையிலே அதை எழுப்பி குளிப்பாட்டினான்
வெண்ணெய் தடவிய ரொட்டிகளால் உபசரித்துச் சர்க்கரை அளவைச் சோதித்தான்
மூச்சை நன்கு இழுத்து விடச் சொல்லி சில
மாத்திரைகளை காலையிலே
விழுங்க வைத்தான்
பிறகு வழக்கமான நன்னெறிக் குறிப்புகளையும் இறைமையையும்
போதித்த பின்னர் விழத் தயார்
என உரக்கக் கத்தினான்
பிற வீரர்கள் ஒன்று கூடினார்கள்
அணுகுண்டு கால் மேல் போட்டு
அமர்ந்திருந்தது எல்லோரும் அதன் முன்
கைகட்டி நின்றிருந்தார்கள்.
- இன்மை
காலியாகிவிட்ட கூடை நிரம்ப விழுகின்றன இறகுகள்
பிறகு ஒரு சதைத்துண்டு
காலியாகிவிட்ட கன்னம் நிரம்ப
விழுந்தன முத்தங்கள் பிறகொரு அறை
காலியாகிவிட்ட வீடு நிரம்ப
விழுந்தன நபர்கள் பிறகு சச்சரவு
காலியாகிட்ட இன்மை நிரம்ப
விழுந்தது காற்றாடும் சப்தம்
பிறகொரு சிலந்தி வலை.
- பொன் நிறத் தனிமை
என் கால்களுக்கு அடுத்தபடியாக
விரும்புவது அந்த பொன் நிறச் சால்வை
போர்த்திய தேக்கு ஃபர்னிச்சரின்
இல்லாத காலைதான்
அதுபோலவே வீட்டின் மேற்கில் இல்லாத
தூண் ஒன்று இருக்கும்
அதில் சாய்ந்தபடி இருப்பேன்
சமயங்களில் அணில்கள் அந்தத்
தூணில் குதித்தாடும்
அப்போதெல்லாம் இல்லாத வீடு அசையும்
அதனுள் இருக்கிறவனைப் போல
அச்சப்படுகிற என்னை விலகிப்போன
எல்லோரும் சமாதானிப்பார்கள்.
- திறக்க மறுக்கும் மறுநாள்
லிட்டர் கணக்கில் ஒயின் ஊற்றினோம்
எல்லோரும் குதித்தெழுந்து
பலூன்களை நோக்கி ஓடினார்கள்
பூங்காக்களைத் திறந்துவிடும் பூதங்களை
ஓய்வெடுக்க சொன்னேன்
முன்பற்கள் இல்லாத நண்பனொருவன்
என்னைக் குளத்தில் தள்ளி இனி நீ
எங்களுக்குத் தேவையில்லை என்றான்
எழுந்த போது பாறையை உருட்டி விட்டான்
குளம் தலைகீழானது
எனது பூச்சி மருந்துகள் உருண்டன
உயிரோடிருந்த சிலர் மறுநாள்
கதவுகளைத் தட்டினார்கள் திறந்தேன்
ஆகாயம் மூடி இருந்தது
பிறகு யாரும் தட்டாத போதும்
திறந்து பார்க்கிறேன் இன்னமும்
மூடியேதான் இருக்கிறது.
- மீளாத தொழுகை
சங்காயத்தி ஒருத்தி
சதுரக் கற்கள் ஒதுங்கிய தரவையில்
காயப்போடுகிறாள் தனது
பேரிளம் கால்களை
மீளாத கவுச்சியில்
தொடர்ந்து உலர்த்துகிறாள் இறால் நண்டு ஓடுகளை
சும்மாவே இருக்காத ஏதோவொரு வாய்
எப்போது இறக்குவாய்
உடலையென கேட்டது
முள் குத்தி நோகாத பாதங்கள்
அன்றிலிருந்து உலர்த்துவதை நிறுத்தி
தொழத் தொடங்கின
ஒரு பெரும் மழைநாளில் இறந்தும் போனாள்
எப்போதுமே வளராத கடல்
இப்போதெல்லாம் இரவு மட்டும்
தரவை வரை அலைகளை அனுப்பிவைக்கிறது
-ச.துரை