ஆக்டேவியோ பாஸின் பிருந்தாவனம்

ஆக்டேவியோ பாஸ் (1914-1998) மெக்ஸிக்கோவை சேர்ந்த கவிஞர், லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமை, 1990ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர், பாஸின் ஆளுமை என்பது சர்ரியலிசம், தாந்ரீகம், பெளத்தம் என எல்லைகளுக்குட்படாத மேற்கத்திய-கிழக்கத்திய சிந்தனை முறைகளின் ரசவாதத்தாலானது. தனிமனிதனின் தேடல்களுக்காகவும் ஆன்மிக வறட்சியை பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் சர்ரியலான படிம பெருக்கினூடாக சொற்களின் சிற்றின்பத்தினூடாக (Eroticism) இயற்கையோடு இயைந்து கொள்ளலலின் மூலமாக நடத்திய அலைச்சலின் வெளிப்பாடுகள் பாஸின் கவிதைகள். பாஸின் கவிதைகளில் காணக்கிடைக்கிற குறிப்பிட்ட அம்சமே அவை எல்லைகளை கழற்றி எறிகின்றன என்பவைதான். ஒருவேளை சொந்த வரலாற்றின் சுமையிலிருந்து விடுபட்டுக்கொள்ளத்தான் அவருடைய கவிதைகள் வேறுவேறு கலாசாரங்களை பின்னணிகளாக சுவீகரித்துக்கொள்கின்றனவோ. அவர் இந்தியாவில் வசித்த காலகட்டத்தில் இந்தியாவை மெக்ஸிக்கோவின் உடன்பிறந்த சகோதரன் என்றே எண்ணியிருக்க்கூடும். அவற்றிற்கு சாட்சியமாக, கன்னியாக்குமரி, மதுரை, உதகமண்டலம், கொச்சின், உதய்ப்பூர், இமாச்சல பிரதேசம், மைசூர் போன்ற நகரங்களில் அவருக்கு கிடைத்த அனுபவங்களை குறித்த கவிதைகள் நமக்கு கிடைக்கின்றன. அவை மொத்தமாக A Tale of two gardens: Poems from india 1952-1995 என்று தொகுக்கப்பட்டிருக்கின்றன.  பாஸின் கவிதைகள் அளவிற்கே அவருடைய உரைநடைகளும் முக்கியமானவை, அவருடைய Alternative Current தொகுப்பு பிரெஞ்சு கவிஞர் ஹென்றி மீசாக்ஸ் (Henri Michaux) , ஸ்பானிய ஓவியர் ரெம்டியோஸ் வேரோ (Remedios varo) போன்றவர்களின் படைப்புலகை குறித்த விரிவான கட்டுரைகளுடன் கவிதையியலை குறித்த உரைநடைகளை உள்ளடக்கியது. இரட்டை ஜ்வாலை (Double flame) எனும் தலைப்பில் சிற்றின்பம், காதல் போன்றவற்றைக் குறித்த நூலொன்றையும் எழுதியுள்ளார். மேலும் Labyrinth of solitude, conjunction and disjunction, convergence, Children of mire போன்றவை அவருடைய உரைநடை நூல்களில் குறிப்பிடத்தகுந்தவை. பிருந்தாவனம் உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்திலுள்ள ஒரிடம். பிருந்தா என்றால் சமஸ்கிருதத்தில் துளசி என்று அர்த்தம். ஐதீகங்களின்படி, கிருஷ்ணர் தன் பால்யத்தை கழித்த இடம். இந்தியாவின் முக்கியமான வைணவ வழிபாட்டுத்தலம். பாஸின் இந்த நீள்கவிதையை குறித்து சொல்லவதென்றால், கவிதை எழுதும் நடைமுறையையே கவிதையாக தகவமைத்துக்கொண்டு அகத்துக்கும் புறத்திற்குமாய் தாவும் ஒரு கார் பயணத்தின் வெளிப்பாடு என்றோ மந்திர உச்சாடனம் போன்ற மொழியில் இந்தியர்களின் ஒரேபோக்காய் போய்விடும் துறவு நிலைக்கும் சரித்திரத்தின் சுமையை தாங்கிக்கொள்ளலுக்கு இடையிலான உரையாடல் என்றோ சொல்லலாம். மேற்கண்ட கவிதை A Tale of two gardens: Poems from India 1952-1995 என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 


பிருந்தாவனம்

இரவின் சூழுகை
மூச்சிரைப்பின் மிகப்பரந்த காடு
தொட்டுரணயியலாத விசாலத் திரைகள்
முணுமுணுப்புகள்
நான் எழுதுகிறேன்
நான் நிறுத்துகிறேன்
நான் எழுதுகிறேன்
(யாவும் இருக்கிறது இல்லாமலும் இருக்கிறது
மேலும் இப்பக்கத்தின் மேல்
அதெல்லாம் தனித்தனியாக விழுகிறது மெளனத்தில்)

சற்று முன்
இவ்வீதியில்
அணைக்கப்பட்ட இல்லங்களினூடாக
ஒரு கார் விரைந்தது
என் ஒளிரும் எண்ணங்களினூடாக
நான் விரைந்தேன்
எனக்கு மேலே நட்சத்திரங்கள்
அவ்வளவு அமைதியான தோட்டங்கள்
நானொரு விருட்சமாகயிருந்து பேசினேன்
தழைகளாலும் விழிகளாலும் கவியப்பட்டிருந்தேன்
படிமங்களின் திரள்தனை முன்னுந்திச்செல்லும் வதந்தியாகயிருந்தேன்

(விளக்கொளியில் நட்டுவைக்கப்பட்டுள்ள
அட்சரங்களின் வெண்தோட்டத்தில்
நான் இக்கணம்
சில திருகலான கறுப்பு வரிகளை எழுதிவைக்கிறேன்)

துயிலும் புறநகரினூடாக அந்த கார் விரைந்தது
என்னுடையதும் பிறருடையதுமான என் எண்ணங்களை பின்தொடர்ந்து நான் விரைந்தேன்
ஞாபகங்கள்.. எஞ்சியவைகள்.. கற்பனைகள்.. பெயர்கள்
தீப்பொறிகளின் எச்சங்கள்
பின்னிரவு விருந்துகளின் சிரிப்பு
நேரங்களின் நாட்டியம்
தாராகணங்களின் அணிவகுப்பு
மற்றும் பிற பொதுவிடங்கள்

நான் நம்பிக்கை வைத்திருப்பது
மனிதனிலா இல்லை
நட்சத்திரங்களிலா?
நான் நம்புகிறேன்
(இங்கே தொடர்புள்ளிகள்)
நான் காண்பவற்றை

வானிலை அரித்த தூண்களின் நெடுங்கடை
கொள்ளைநோயால் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
கையேந்திகளின் இருவரிசை
அதன் துர்நாற்றம்
ஆசைகிழத்திகளாய் இருந்தவையென்பது போன்று வந்து செல்லும் நறுமணங்களை
தன் அரியணையை சூழப்பெற்றிருக்கிறான் ஒரு மன்னன்
சந்தனக் கட்டை முதல் மல்லிகை வரை
அவற்றிலிருந்து அலையலையாய் வரும் ஏறக்குறைய அப்பட்டமான உடல்த்தன்மை
மற்றும் அதன் மாயத்தோற்றங்களும் அழுகலும்
வடிவங்களின் கொதிப்பு
காலத்தின் தகிப்பு
அவற்றின் சேர்க்கைகளிலுள்ள மதோன்மத்தம்
இந்த அகில சராசரமும் ஒரு மயிலின் தோகை
எண்ணிறந்த விழிகள்
ஏனைய கண்களால் பிரதிபலிக்கப்படும் ஒழுங்கமைவுகள்
ஒற்றைக் கண்ணின் எதிரொலி
ஒர் ஏகாந்தச் சூரியன் மறைந்துள்ளது துலக்கிக் காட்டும் அதன் ஆடைகளுக்குப் பின்னால்
அதன் அற்புத அலைகளுக்குப் பின்னால் எல்லாம் எரிந்து கொண்டிருந்தன
கற்கள் மகளிர்கள் தண்ணீர் என எல்லாம் செதுக்கப்பட்டிருந்தன
வண்ணங்களிலிருந்து வடிவமாக வடிவிலிருந்தது நெருப்பாக எல்லாம் மறைந்து கொண்டிருந்தன
கடவுளின் அறையில் மரங்களின் உலோகங்களின் இசை
கோவிலின் கருவறையில் காற்றும் புனலும் அணைத்துக் கொள்வதைப் போன்ற சங்கீதம்
பின்னிப்பிணைந்த சப்தங்களின் மேல் மானுடக் குரல்
உச்சிப்பொழுதில் ஒரு வெம்மை நிலா
உடலற்ற ஆன்மாவின் நடுகல்

(நான் எழுதுகிறேன் எழுதுபவற்றின் விளைவுகளையறியாது.
நான் பார்க்கிறேன் வரிகளுக்கிடையில்
என் படிமமோ
இரவின் மத்திமத்தில் ஏற்றப்பட்ட விளக்கு)

அறிவுப்பகட்டாளர்
பூரணத்தின் போலச்செய்பவர்
கூனிக்குறுகிய பானைகளை தொங்கவிடும் கொக்கி
சோகையான சாம்பல் பூசிய ஒரு சாது என்னைப் பார்த்து சிரித்தார்
தூராதிதூரத்திலிருந்த மறுகரையிலிருந்து என்னைப் பார்த்தபடி
மிருகங்களை போல் முனிவர்களைப் போல் என்னைப் பார்த்தபடி
பரட்டைத்தலையுடன் அழுக்குபடிந்தபடி நிர்வாணியாகயிருக்கும் அவர்தம் கண்களில் ஒரு நிதானித்த கிரணம்
ஒர் உலோகப் மினுமினுப்பு
நான் அவரிடம் உரையாட விரும்பினேன்
அவர் பதிலுரைத்தார்
குடலிலிருந்தெழுந்த கடகடவென்ற ஒலியுடன்
அதன்பிறகு ஒரே போக்காய் போய்விட்டார்
எங்கே ?
உளல்பவற்றின் எந்தப் பிரதேசத்திற்கு
எவ்வுலகத்தின் வெட்டவெளிதனில் என்னவாய் இருப்பதற்கு
எக்காலத்திற்கு?

(நான் எழுதுகிறேன்
ஒவ்வொரு எழுத்தும் ஒரு கரு
நினைவு தன் அலையை திணித்து
தன் சொந்த நடுப்பகலை மீளச்சொல்கின்றது)
ஒரே போக்காய் போய்விட்டார்.

துறவி.. போக்கிரி.. துறவி

பசி அல்லது போதைப் பொருட்களின் பேரின்பத்தில் அவர் கிருஷ்ணரைப் பார்த்திருக்கக்கூடும்
மின்னும் நீலவிருட்சம்
பஞ்சகாலத்தின் மத்தியில் மடவேகம்கொள்ளும் இருண்ட நீருற்று
பிளந்த கல்லிலிருந்து அவர் பற்றியிருக்கக்கூடும் பெண்ணின் உருவத்தை
அதன் வாடகைக்கு வடிவமற்ற கிறுகிறுப்பு
இறந்தவர்களை பொசுக்கும் ஆற்றின் படித்துறையில் இதற்காகவோ அதற்காகவோ அவர் சீவிக்கிறார்
ஏகாந்த வீதிகள்
இல்லங்களும் அவற்றின் சாயைகளும்
யாவும் ஒரே மாதிரியாகவும் வித்தியாசமாகவும்
கார் விரைந்தது
தப்பிச்செல்லும் என் எண்ணங்களுக்கு மத்தியில் நான் அமைதியாக.

(ஒரே போக்காய் போய்விட்டார்
துறவி.. கோமாளி.. துறவி.. கையேந்தி.. மன்னன்.. நாசமாய்ப் போனது..
அது ஒன்றுதான்
எப்போதும், அதற்குள்ளாகவே ஒன்றுதான்
அது எப்போதும் இருக்கிறது
அதற்குள் ஒன்றாகவே
ஒன்றுபோல் மூடப்பட்ட ஒன்றிற்குள்ளாக மூடப்பட்ட அழுகிய பிரதிமை)

ஒரே போக்காய் போய்விட்டார்
மறுகரையிலிருந்து என்னை அவர் பார்த்தார்
அவர்தம் முற்றுப்பெறாத உச்சிவேளையிலிருந்து என்னை பார்க்கிறார்
அலைந்து திரியும் மணிநேரத்தில் நான்
இல்லங்களுக்கிடையில் கார் விரைகிறது
நான் எழுதுகிறேன் விளக்கொளியால்
முழுமைகளும் நிரந்தரத்துவங்களும்
அவற்றின் சுற்றுப்புறத்திலிருக்கும் வட்டாரங்கள் அல்ல என் பேசுபொருள்
நான் வாழ்வுக்கான பசியிலிருக்கிறேன்
மரணத்திற்கான பசியிலும்
எனக்கு தெரியும் எனக்கு என்ன தெரியுமென்று
எனவே அதை நான் எழுதுகிறேன்
காலத்தின் சித்துருவம்
செயல்
செதுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட முழு உளலின் இயக்கம்
நேரத்தை பூரணமாக பற்றிக்கொள்வதற்கான கைகளும் பிரக்ஞையும்

நானே சரித்திரம்
தன்னைத்தானே கண்டுபிடிக்கும் ஒரு நினைவு
ஒருபோதும் தனியாகயில்லை
நான் எப்போதும் உங்களுடன் பேசுகிறேன்
நீங்கள் எப்போதும் என்னுடன் பேசுகிறீர்கள்
நான் இருளில் நகர்கிறேன்
அங்கே குறியீடுகளை நட்டுவைக்கிறேன்.


தமிழில்: வே.நி.சூர்யா

Previous articleச.துரை கவிதைகள்
Next articleகட்டக்கால் வேட்டை
வே.நி.சூர்யா
நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து பங்களித்துவருகிறார். கடற்கரைகளிலும் வெட்டவெளிகளிலும் நடப்பதில் விருப்பமுடையவர். கரப்பானியம் எனும் கவிதை தொகுதி வெளிவந்திருக்கிறது.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments