பொறியாளர் ஹென்றி வில்லியம்ஸ் தான் 1878
அந்த வாய்க்காலை
வடிவமைத்தார்.
அரசு அதை செலவு பிடித்த திட்டமென
நிராகரித்தது.
187 கி.மீ நீள
வாய்க்கால் அது.
விடாப்பிடியாக
போராடி
வாய்க்காலை
நிகழ்த்தினார் வில்லியம்ஸ்
கட்டி முடித்த ஆண்டிலிருந்து
மூல நதியில்
வெள்ளம்
பெருக்கெடுக்கவேயில்லை.
அந்நூற்றாண்டில்
செலவு கூடிய
வீணான திட்டமென
பொருளியல் வல்லுனர்கள் அதை சொல்வதுண்டு.
William’s waste
என்றொரு புதிய வார்த்தை
அகராதியில் ஏறியது.
நேற்றிரவு வீட்டில்
அழ முடியாத
ஒருத்தி
அதன் ஓரம் நின்று
கண்ணீர் பெருக்கினாள்.
இரு நூற்றாண்டுக்கான
தண்ணீர்
ஓரே இரவில் பெருகியது.
வில்லியம்ஸ்
தன் கல்லறையில்
புரண்டு படுத்தார்.
-சாம்ராஜ்