சுஜா கவிதைகள்

வாழ்ந்தென்ன?
தரையில் கையூன்றி எழுந்தவாறே
எதிர்ச்சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள்.
மாலை நான்கு
நல்ல நேரம்தான்
யாருக்கும் அகாலத் தொந்தரவாகாத நேரம்
வீடு திரும்பும்போது செய்தியாகக் காதை எட்டும்.
அள்ளி முடிந்து கொண்டையிட்டு
வாசற்கதவைத் திறக்கிறாள்.
மேல்மாடிக்குச் சென்று குதித்துவிட்டால்
அவ்வளவுதான்
முடிந்தது.

வழக்கம்போல் தடுக்கிவிடாமல் இருக்க
சற்றே தூக்கிப் பிடித்தபடி
படிக்கட்டில் கால் வைக்கும்போதுதான்
கவனிக்கிறாள்
உள்பாவாடையுடன் ஒட்டியிருக்கும் சேலை

விழுந்ததற்குப் பின்னான காட்சிகளைக்
கற்பனை செய்தவாறே
நினைவிடுக்கிலும் தோண்டிப் பார்க்கிறாள்
எங்கேனும் நேரிலோ அல்லது செய்திகளிலோ
ம்ஹூம்…
எப்படியும் இது சரியான உடையாகத் தோன்றவில்லை
தொடை மச்சம் வரை வெளிக்காட்டிடும் சாத்தியமுண்டு.

அறைக்குள் விரைந்து அலமாரியைத்
துழாவும் அவள் கண்ணில்
பழைய துணிகளுக்குள்
அடி வண்டலாய்த் தங்கிவிட்ட
கத்திரிப்பூ நிறப் பூக்கள் போட்ட வெள்ளைச் சுடிதார்
ஏதோவொரு பிறந்த நாளுக்கென்று அம்மா வாங்கித் தந்தது
வெண்மை தொலைத்துப் பழுக்கத்
தொடங்கியிருந்த அது அணிந்ததும்
இடுப்பை இறுக்கமாய்ப் பிடித்துக்கொள்கிறது
அனிச்சையாய்க் கண்ணாடி பார்க்கும் அவள் முகத்தில்
தற்கொலைக்கேற்ற உடை கிடைத்துவிட்ட திருப்தி.


அத்தனை நல்லவனா நீ?
திசை தப்பிச் சென்றுவிடுமோ
என்ற அச்சத்தில்
நான் கரம் பொதிந்து வைத்திருக்கும்
காற்றை விடுவிக்கிறாய்.

வெளியைக் கிழித்துக்கொண்டு
சீறிப் பாயும் ஒற்றைக் கோடாய்ப் பறந்தலைகிறது.
இன்னமும் பெயரிடப்படாத பல உருவங்கள்
அங்கு உருவாகி மறைகின்றன.
புலப்படாதவைகளுக்குப் பெயரும்
அவசியமில்லை.

எந்நொடியும் திரும்பிவிட முடிவெடுத்து
என்னை நோக்கி விரையலாம்
சற்றே தள்ளி நில்
இம்முறை கைகளை விரித்தே
வைத்திருக்கப் போகிறேன்.


-சுஜா

Previous articleமூட்டைப்பூச்சிகள்
Next articleதன் கல்லறையில் புரண்டு படுத்தார்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
1 Comment
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
Shekher M
Shekher M
3 years ago

வாழ்ந்தென்ன?

சுஜா….

வாழ்த்துகள்…
தற்கொலையின்போதும்
ஒரு ஒழுக்கம்…

சிந்திக்க வைக்கும்
வரிகளின் தொகுப்பு…
வெகு சிறப்பு..