மூட்டைப்பூச்சிகள்

    இன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலிலிருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு முழுமையான தூக்கம் கிடைப்பதில்லை. 

     இரண்டாம் லயன் பதினெட்டாவது வீடு (எண் கொஞ்சம் வண்ணம் மங்கியிருக்கும்) இருக்கிறதே, அதான் வாசலிலிருந்த வேப்ப மரம்கூட போன வாரம் கூரையில் விழுந்து சிவக்குமார் மகன் செத்துப்போனானே அந்த வீடு. தனித்து நிற்கும்   மருமகளுக்குப் பாதுகாப்பாகவும் வீட்டிற்குக் காவலாகவும் சிவக்குமாரின் அப்பா மட்டுமே இருக்கிறார் . வேலை வீடு என்பதில் எந்த மாற்றமும் இதுவரையில் இருந்ததில்லை. 

    மகன் சென்றதிலிருந்து மருமகளைக் கண்போல காத்துக்கொண்டிருந்தார். தன் மகள் போல நினைத்தார். பேரன் என்றால் கொள்ளை ஆசை அவருக்கு. எல்லாம் கொஞ்ச நாள்தான் இருந்தது. ஏனோ மருமகளிடம் பேசுவது குறைந்துகொண்டே வந்து ஒரு சமயத்தில் பேசுவது முழுதாக நின்றும் விட்டது. அடுத்தடுத்த கொஞ்ச நாளில்  வீட்டினுள் இருந்த தனது கட்டிலையும் வெளி வாசலில் போட்டுவிட்டார். பேரனைக் கொஞ்சும் போதும் சரி, ஒரு வேளை உணவுக்கும் சரி எல்லாமே அந்த வாசல் கட்டிலில்தான். அதிகாலை பால்மரம் வெட்டச் செல்வார். நண்பகல் தோட்டத்திலேயே தூங்கிவிடுவார். நண்பகலிற்குக் கையில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட்டுக்கொள்வார். அங்கிருக்கும் ஊற்றுநீரைத் தாகத்திற்கு பருகிக்கொள்வார். இத்தனை வயதில் முறுக்கு குறையாத மனிதர் அவர். பழைய உடம்புகளுக்கே உரிய வரம் அது. பால் வாளிகளைச் சகஜமாக கைகளில் பிடித்து நடந்துவருவார். அந்த மிடுக்கும் அந்த வேகமும் அவருக்கே உரித்தான அழகைக் கொடுத்தது. இந்த வயதிலேயே இப்படியென்றால் இளம் வயதில் எப்படியெல்லாம் இருந்திருப்பார் என்று நினைத்து ஏங்காதவர்கள் குறைவுதான்.

    நரம்பில்லா நாக்கு கொண்டவர்கள் வாழும் இடத்தில் எதற்கு நாமே சென்று வாய்க்குத் தின்ன எதையாவது கொடுக்க வேண்டும் என நினைத்துப் படுக்கையை வெளியில் போட்டுக்கொண்டார். இருந்தும் ஊர்வாய் பேசியது. ஊர்க்கதைகளைப் பேசியும் உருப்படாத கதைகளைக் கேட்டும் பழகிவிட்டவர்களுக்கு எதில்தான் திருப்தி கிடைத்துவிடப்போகிறது. மகனும் மகளும் இருக்கும் போது பயன்படுத்திய கட்டிலை மகன் வெளியூர் சென்ற பின் திண்ணையில் போட்டுப் படுத்துக்கொண்டு மருமகளையும் பேரனையும் தரையில் படுக்க வைத்துவிட்ட கிழவனுக்கு பழையபடி திண்ணையில் கிழிந்த பாய் போட்டுப்  படுப்பதில் என்ன வலிக்குதாம். பாவம் ராஜம் புருஷன் வாடையைக்கூட முகர்ந்து படுக்கக் கட்டில் இல்லாமல் தவிக்கிறாள்.

    கருப்பையா எதையும் காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஆனாலும் மனதில் ஏதோ நெருடிக்கொண்டே இருந்தது. எங்குமே இல்லாத மூட்டைப்பூச்சிகள் கட்டில் முழுக்க ஊடுருவுவதாக நினைத்தார். எத்தனை  முறை சுத்தம் செய்தாலும். எரிக்கும் சூரியனிடம் ஒப்புக்கொடுத்தாலும், ஒவ்வொரு இரவும் அவரால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை. கடித்து எழுப்பிவிடும் மூட்டைப்பூச்சிகள் காலையில் தென்படுவதில்லை. பூச்சிகள் மட்டுமல்ல அவை கடித்து விட்ட அடையாளங்களும் தெரிவதில்லை. ஆனால் வலி மட்டும் மதிய தூக்கம் போடும் வரை இருக்கும். 

    ஒரு நாள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவரை ரங்கநாயகி மெல்லியக் குரலில் எழுப்பினாள். அவருக்கு எழுவதற்கு மனமில்லை. இந்த நேரத்திலுமா கண்ட கதைகளைப் பேசவேண்டும். மகன் வரவரைக்குமாவது மருமகளை நிம்மதியாக இருக்க விடலாம்தானே. எல்லாவற்றையும் குறை சொன்னால் எப்படி. 

“யென்னங்க”

“ரங்கு என்னய தூங்க விடறயா..?”

“யென்னங்க…”

“காலைல சீக்கிரமா போவுனும், ஒரு பக்கம் மூட்டை பூச்சின்னா இன்னொரு பக்கம் நீ…”

“யென்னங்க..”

“ரங்கு சொல்றேன்ல..”

“யென்னங்க..”

“சரி சொல்லித்தொல…”

   பட்டென்று கட்டிலிலிருந்து எழுந்தார். ஏதோ ஒன்று அவர் மேலிருந்து விழுந்து விறுவிறுவென ஊர்ந்து புதருக்குள் மறைந்தது.

“யென்னங்க…”

   குரல் வந்த திசையை அவரால் கணிக்க முடியவில்லை. நான்கு புறத்திலிருந்தும் ஒரு சேர வந்த குரலை எங்கிருந்து பார்ப்பது. உடல் கூச ஆரம்பித்தது. கை கால்கள் எல்லாம் நடுங்கின. நிலவு வெளிச்சத்தில் இப்போதுதான் ஓரளவிற்குத் தன்னைச் சுற்றிலும் பார்க்க முடிந்தது. கட்டிலில் தன் பின்பக்கத்தில் யாரோ அமர்வதை உணரமுடிந்தது. தன் கழுத்தில் பெருமூச்சின் உஷ்ணம் படவும் உடல் சிலிர்த்தது. மெல்லத் தலையைத் திருப்பினார். காலில் ஏதோ கடித்துவிட, சட்டெனத் தலையை காலுக்குத் திருப்பி பட்டென அடித்தார். கையில் எதுவும் அகப்படவில்லை. ஆனால் கடித்த வலியை விட இவர் அடித்துக்கொண்ட வலிதான் மண்டையில் சுருக்கென்றது.

   ரங்கநாயகி பாம்பு கடித்து இறந்தது முதல் அந்த கட்டில் அவளது நினைவுகளைச் சுமந்துகொண்டு கருப்பையாவிடம் பேசிக்கொண்டே இருக்கிறது. தனக்கென ஒரு குடும்பம் உருவாகும் சமயத்தில் தன் சொந்த உழைப்பிலும் ரங்கநாயகியின் ஆலோசனையிலும்  வீட்டிற்குத் தேவையான ஒவ்வொன்றாகச் சேர்த்து வைக்க ஆரம்பித்தார்கள். அதிலும் முதன்மையாக வந்தது இந்த கட்டில்தான். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கருப்பையாவிற்கும் ரங்கம்மாவிற்கும் உறவினர்கள் யாரும் அதிகமாக இல்லாததால் எந்தச் சிக்கலும் இன்றி அவர்களுக்குத் திருமணம் முடிவானது.

   தாங்கள் பார்த்து வளர்ந்த பிறரின் கஷ்டம் போல தாங்களும் அனுபவிக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் முதல் தீர்மானம்.

   “ஏங்க இப்ப எதுக்கு கட்டிலைப்போயி முதல்ல வாங்கிப்போடறீங்க.. எல்லோரும் ஏதும் நினைச்சிக்க போறாங்க..”

“நினைச்சா நினைச்சிட்டுப்போறாங்க..”

“உங்களுக்கு என்ன.. எனக்குத்தான் அசிங்கமா இருக்கு..”

“என்ன அசிங்கம் உனக்கு..?”

“ஆமா.. இன்னும் கலியாணமே கட்டல.. அதுக்குள்ள கருப்பையாக்கு கட்டில் ஆசை வந்துடிச்சின்றாங்க…”

“ஓ.. அப்போ கருப்பையாக்குத்தான் அந்த ஆசையா… இந்த கருத்தம்மாக்கு இல்லன்றயா..?”

“…”

“என்ன ரங்கு சத்தத்தையே காணோம்..?”

“யாருக்குத்தான் ஆசை இல்ல.. ஆசை இல்லாமலா.. உங்க பின்னாடி சுத்திகிட்டு இருக்கேன்..”

“அப்ப விடு.. காட்டுலயும் தோட்டத்திலும் அவசர அவசரமா பயந்து படுக்கறதை விட நம்ம வீட்டுல நம்ம கட்டில்ல  அவசரமில்லாம பயப்படாம படுத்துக்கலாம்..”

“அட போயா…. எதைச் சொன்னாலும் இங்கயே வந்து நின்னுக்கோ… உன்னைய…”

“அடிப்பாவி… கலியாணத்துக்கு முன்னாடி அடிக்கலாம் ஆனா ப…”

    முடிப்பதற்குள், ரங்கநாயகி கருப்பையாவின் வாயை மூடினால். அவர்களின் நெருக்கம் அதிகமானது. வாயை மூடியதற்குப் பதில் அவனது கையை கட்டிப்போட்டிருக்கலாம் என நினைத்தாள். அதற்குள் இருவருக்கும் மூச்சு வாங்கிவிட்டது. ஆளுக்கு ஆள் தங்களின் ஆடைகளை மீண்டும் அணிந்து கொண்டார்கள். கட்டிலில் எங்கெல்லாம் சத்தம் வரும் எங்கிருந்தெல்லாம் சத்தத்தைக் குறைக்கலாம் என்ற நுணுக்கங்களை ஒரே நாளில் இருவரும் கற்றுக்கொண்டார்கள்.

   நேற்றுவரை காட்டிற்கும் தோட்டத்திற்கும் புற்பூச்சிகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று கட்டிலுக்கும் தெரிந்தது. இன்று முதல் அதற்கான முழு பொறுப்பையும் கட்டில் எடுத்துக் கொண்டது. அவர்களும் சும்மா இருக்கவில்லை. விரைவாகவே சேர்ப்பதைச் சேர்த்துப் பார்ப்பதைப்பார்த்து முடிப்பதை முடித்துக்கொண்டார்கள்.

   காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் கணவன் மனைவியாக உலா வருவதை எல்லோரும் பார்த்து ரசித்தார்கள். தோட்ட வேளையில் கங்காணியின் பார்வை சரியில்லை என ரங்கநாயகி சொல்லிக்கொண்டிருந்தாள். ஒன்றாக வேலை செய்தவர்கள் டிவிஷன் மாறி வேலை செய்வதற்கும் கங்காணிதான் காரணம் என்பதையும் கண்டறிந்து சொன்னாள்.

   காதலனாக இருக்கும் போது இருந்த ‘விடு விடு அப்பறம் பார்த்துக்கலாம்’ என்கிற பழக்கம் இப்போது அவனிடம் இல்லை என்பதை அவள் யோசித்திருக்க வேண்டும். முழுவதும் சொல்லி முடிக்கும் முன்பாகவே கருப்பையா வீறு கொண்டு கிளம்பினான். என்ன செய்வது என்று தெரியாமல் ரங்கநாயகி சிலையானாள். என்ன நடக்குமோ என்கிற பதட்டம் அவளைத் தொற்றிக்கொண்டது. போதாததற்கு சாலையில் கருப்பையாவைக் கண்ட சிலர் நேராக ரங்கநாயகியின் வீட்டிற்கே வந்து அவளிடம், 

“ரங்கு எங்கடி உம் புருஷன்.. எங்க இவ்வளவு வெறியோட போறான் என்ன ஆச்சி..” என்றார்கள்.

   அவள் எப்படிச் சொல்வது எங்கிருந்து சொல்வது எனப் புரியாமல் தவித்தாள். அழுகை ஆறாக வந்தது. வந்தவர்கள் யாவரும் தலையும் தெரியாமல் வாலும் தெரியாமல். அவளுக்கு ஆறுதலும், புருஷன் மனசு நோகாதபடி எப்படி நடப்பது எனவும் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

   எல்லோரும் பரபரப்பானார்கள். கையில் வெட்டுக்கத்தியுடன் வந்து நின்றான் கருப்பையா. அதுவரை அவளுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்றுகொண்டார்கள். எப்படியும் ஒருவரை வெட்டி இன்னொருவருக்கு வருவதற்கு முன்பாகவே ஓடிவிடக்கூடிய தூரம் அது.

“ஐயோ என்னய்யா இப்படி பண்ணிட்டு வந்திருக்க.. கடவுளே”

   என அவனின் காலில் விழுந்து கதறினாள். நின்றவர்கள் கால்கள் நடுங்க ஆளுக்கு ஆள் பார்த்துக் கொண்டார்கள்.

   பின்னால் அந்த கங்காணியும் மோட்டாரில் வந்து நின்றான். ரங்கநாயகிக்கு ஒன்றும் புரியவில்லை. எழுந்து நின்று கருப்பையாவையும் கங்காணியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மோட்டாரை நிறுத்திய கங்காணி, இருவருக்கும் அருகில் வந்து நின்றான்.

“என்ன தங்கச்சி.. தோட்டத்துல யாரோ உன்னை ‘கச்சாவ்’ பண்ணாங்களாமே..”

   கங்காணியின் வாயிலிருந்து வந்த தங்கச்சி என்னும் வார்த்தை அவளை மட்டுமல்ல அங்குக் கூடியிருந்த எல்லோரையும் ஏதோ செய்தது. நின்றவர்களுக்கு நடந்திருந்த கதை புரிந்தது ஆனால், முழுமையாகப் புரியவில்லை. கங்காணி முழுதாக வந்திருப்பதும். கருப்பையாவின் கையிலிருந்த வெட்டுக்கத்தி ரத்தக் கறை இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

“அட சும்மா சொல்லு தங்கச்சி.. அண்ணன் மாதிரி நான் ஒருத்தன் உனக்கு இருக்கேன். நல்லவேளையா கருப்பையாவ வர வழியில பார்த்தேன். கைல கத்தியோட போய்க்கிட்டு இருந்தான். என்னன்னு நின்னு விசாரிச்சுப்பார்த்தா… எவனோ உன்னை கச்சாவ் பண்றான், அவன் தலையை எடுக்காம விடமாட்டேன்றான்.. எனக்கு உசுரே போயிருச்சி..  இருப்பா பேசிக்கலாம்ன்னும் கூட்டிவந்திருக்கேன்.. இனிமே யாரு கச்சாவ் பண்ணாலும் அண்ணன்கிட்ட சொல்லு.. எதுக்கு மத்த வம்பெல்லாம். ”

நிற்பர்வகளையும் பார்த்து, 

“தங்கச்சிங்களா நீங்களும்தான் , தீம்பார்ல ஏதும் பிரச்சனைன்னா அண்ணன்கிட்ட சொல்லனும் சரியா..”

“சரிங்கண்ணே”

என எல்லோரும் ஒருசேரக் கத்தினார்கள். அந்த கத்தலில் இருந்த நையாண்டி எல்லோர்க்கும் புரிந்தது.

கருப்பையா ரங்கநாயகியைப் பார்த்துச் சிரித்தவாறு முன்னேறி நடக்கலானான்.

இரவு. கட்டிலில் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

“நான் பயந்தே போய்ட்டேன்.”

“எதுக்கு பயம்”

“நீ போன வேகத்துல அவனை வெட்டிட்டுதான் வருவேன்னு நினைச்சேன்”

“ ஏன் ரங்கு, நான் உன் கூட இருக்கும் போதே ஒருத்தன் உன்னை ‘கச்சாவ்’ பண்றான்னா.. நான் இல்லாதப்ப யாரெல்லாம் உன்னை ‘கச்சாவ்’ பண்ண வருவானுங்க.. அதை யோசிச்சேன்…”

“யோவ்.. இவ்வளவு அறிவா உனக்கு…??”

“பின்ன இன்னும் கொஞ்ச நாள்ல நமக்குன்னு புள்ளைகுட்டின்னு வந்திடும். அப்பான்னா பொறுப்பா இருக்கனும்ல..”

“என்னது இன்னும் கொஞ்ச நாளா.. என்னமோ ஒளிச்சு வச்சிருக்கற மாதிரில சொல்லிக்கற… ”

“விதைக்கறவனுக்கு தெரியாதா மண்ணோட பலமும் விதையோட வேகமும்..”

   கொஞ்ச நேரம் கழித்ததும்தான் ரங்கநாயகிக்கு புரிந்தது. கட்டில் அந்த பேச்சில் குலுங்கி தன் பங்கிற்கும் சிரிக்கத் தொடங்கியது. 

அரசு மருத்துவமனை.

ரங்கநாயகிக்கு இன்று பிரசவம். 

ஆண் குழந்தை.

பெயர்சூட்டு விழா.

சிவக்குமார்.

   மகனை முதலாம் ஆண்டு சேர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களுடன் நடக்கலானார்கள். 

பரிட்சையில் நல்ல தேர்வு.

   ஐந்தாம் ஆண்டு படிக்கும் சிவக்குமாருக்கு எந்த குறையும் இருக்கவில்லை. அவர்களுக்குத்தான் ஒரு குறை  அறிவுக்கு ஓர் ஆண் குழந்தை போல அழகுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்கவில்லை. அந்த குறையும் தீர்ந்தது. ரங்கநாயகி கர்ப்பமானாள்.அதற்கிடையில் தான் அவர்கள் வாழ்வின் தடம் மாறியது. 

   மகனின் பள்ளியில் அன்று ஒன்று கூடல் நிகழ்ச்சி. தோட்ட மக்கள் அனைவரும் வண்ண வண்ண ஆடைகளில் கூடியிருந்தார்கள். வகுப்பறைகள் போதவில்லை என்பதால் விளையாட்டுத் திடலில் மரங்களின் நிழலில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பள்ளிக்கூடத்தில் அடுத்தடுத்த மாற்றங்களைப் பற்றி ஆசிரியர்கள் பேசினார்கள். பாடத்திட்டத்தில் மாற்றம் நிகழவுள்ளதால் அடுத்த ஆண்டு மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பு இருக்கலாம். அதே சமயத்தில் புதிய புத்தகங்களும் வாங்க வேண்டிவரும் என பேசியபொழுது கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இப்படித்தான் பாடத்தில் மாற்றம் என்று சொல்லி புத்தகங்களைப் புதிதாக வாங்க வைத்தார்கள். இவ்வாண்டும் இதையே சொல்கிறார்கள். 

   அமளிதுமளி ஆனது. அந்நேரம் பார்த்து கூட்டத்தில் புகுந்த விஷப் பாம்பு ரங்கநாயகியைக் கடித்துவிட்டது. அங்கு முதலுதவிப் பெட்டியும் இல்லை. முதலுதவி செய்யவும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. உடனே சிகிச்சை கொடுக்க இயலாததால் காப்பற்ற முடியவில்லை. 

   அன்று முதல் சிவக்குமார் தான் கருப்பையாவிற்கு உலகம். அவனுக்காகவே வாழ்ந்தார். அவனாலேயே வாழ்ந்தார்.  அவன் விரும்பியதைப் படித்தான் விரும்பும் போதெல்லாம் படித்தான். படித்து முடித்த கொஞ்ச நாளில் வேலையும் கிடைத்தது. கல்யாண வயசும் வந்து அதுவும் நடந்தது. ஒரு குழந்தை என்றானது. 

   கருப்பையா, சிவக்குமார்,ராஜத்திற்கு மட்டுமே அந்த வீடு போதுமானதாக இருந்தது. வீட்டின் இரண்டு அறைகளை ஆளுக்கு ஒன்றென எடுத்துக்கொண்டார்கள். வரவேற்பறையை இரண்டாகத் தடுத்து கடைசியை சமையல் அறையாக மாற்றிக்கொண்டார்கள். பின் வாசலைத் திறந்ததும் தெரியும் சிறு தோட்டத்தை ஏதும் செய்துவிட அவர்களுக்கு மனது வரவில்லை. அதுவும் அங்கிருக்கும் சாக்கடையின் வழிப்பாதையை மாற்றுவது என்பது அத்தனை எளிதல்ல.

   சிவக்குமாருக்கு மகன் பிறந்தான். குடும்பத்தில் இதைவிட வேறென்ன வேண்டும். குடும்ப சுமை அதிகமானது. ஆனாலும் ராஜம் வேலைக்குப் போவதை சிவக்குமார் விரும்பவில்லை. வேலைக்குச் செல்லும் பல பேர்களைக் குறித்து பலவிதமாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறான். மகன் தொழிற்சாலைக்கும் கருப்பையா தோட்ட வேலைக்கும் சென்றாலும் சமாளிக்க முடியவில்லை.  

   நிலமையை புரிந்துகொண்ட செல்வராஜு சிவக்குமாருக்கு ஒரு யோசனை சொன்னான். யோசனையா தியாகமா எனத் தெரியவில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ‘ஹவாய்’ வேலையை நண்பனுக்கு விட்டுக்கொடுத்தான். ஆனால் ‘ஹவாய்’ செல்வதாகத் தெரிந்தால் செல்வராஜுவின் குடும்பத்தினர்க்குத் தெரிந்துவிடும். அதனால் மனக்கஷ்டம் வரலாம் ஆக துபாய் செல்வதாக ஊரில் சொல்லிக்கொண்டார்கள்.

   நண்பனின் தியாகத்தை ராஜத்திடம் மட்டுமே சொல்லிக்கொண்டான். ஏற்பாடுகள் வேகமாயின. விற்க முடிந்த எல்லாவற்றை விற்றான். அடகுக்குக் கொடுக்க வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்தான்.  

   கருப்பையாவைச் சம்மதிக்க வைப்பதுதான் பெரும்பாடாக ஆயிற்று. ஐந்தாறு வருடங்களின் வந்துவிடலாம் என்றார்கள். குழந்தைக்காகவாவது கூடுதல் வருமானம் வேண்டும் என்றார்கள். விற்றவற்றையும் ஓராண்டுகளில் வாங்கிவிடலாம் என்றார்கள். அடகு வைத்தவைகளை ஓராண்டில் மூட்டிவிடலாம் என்றார்கள். எதற்கும் அவர் சம்மதிக்கவில்லை.

ராஜம் மட்டுமே வேறு மாதிரி சொன்னாள்.

“மாமா, இது என்னோட, என்னோட பிள்ளையோட எதிர்காலம்.. அதை கெடுத்துடாதீங்க.. நானே போய்ட்டு வரட்டும்னு சொல்றேன்.. நீங்க ஏன் தடுக்கறிங்க..”

   மருமகளின் கண்களை ஊடுருவிப்பார்த்தவர் சரி என்று தலையாட்டினார். தன் பங்கிற்கும் முடிந்ததை ஏற்பாடு செய்து கொடுத்தார். சிவக்குமார் புறப்பட்டான். 

  முதல் சில மாதங்களில் சரிவரப் பணம் அனுப்ப முடியவில்லை.  மீண்டும் செல்வராஜின் உதவி தேவைப்பட்டது. வீட்டிற்குத் தேவையானதை அவ்வப்போது கொடுத்தும் நம்பிக்கையான சில வார்த்தைகளையும் பேசிவிட்டுப் போக ஆரம்பித்தான்.

    இரண்டு ஆண்டுகளில் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவில் கருப்பையாவிற்கு மகனிடம் இருந்து கடிதங்கள் ஏதும் வருவது இல்லை. செல்வராஜு மூலமாகவே  சிவக்குமார் குறித்து அவர்கள் தெரிந்துகொண்டார்கள். தன் பேரனின் அகால மரணத்திற்குக்கூட மகன் வராதது அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. துபாயில் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டவர்கள் பதறினார்கள்.  செல்வராஜு தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து வருவதாகச் சொல்லி, நிலைமையைக் குறித்து இவர்களுக்குத் தெரியப்படுத்தினான். 

கருப்பையாவையும் தோட்ட மக்களையும் பொருத்தவரை மகன் துபாயில் இருக்கிறான். ஆதலால் அவர்கள்  பதட்டமாகிறார்கள். ‘ஹவாயில்’ மிகவும் ஆரோக்கியமாகவும் கைநிறைய சம்பாதிப்பதும் தெரிந்த ராஜமும் செல்வராஜும் ஊருக்கும் கருப்பையாவிற்கும் ஏற்ற மாதிரி முன்னமே பேசி ஒரு கதையைத் தயார் செய்து பேசிக்கொள்வார்கள். சமயங்களில் இரவில் கூட யாருக்கும் தெரியாமல் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். சிவக்குமார் கொடுத்தனுப்பும் பணபட்டுவாடாக்கள் எல்லாம் அந்த இரவில்தான் ராஜத்திற்குக் கிடைக்கும். இப்படியாக அவள் சேர்த்து வைத்திருப்பதே இன்னொரு கல்யாணம் செய்வதற்குத் தேவையான பணம் வந்திருக்கும்.

    வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீட்டிற்கு வந்தார் கருப்பையா. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி வந்தவர் திண்ணையில் அமர்ந்தார். அப்போதும் மூச்சு வாங்கினார். அவருக்குப் போட்டியாக இன்னொரு மூச்சு சத்தம் அவருக்குக் கேட்டது. அது அசதியில் வரும் மூச்சல்ல என்பதை அவரின் வயது கூறியது. அத்தனை வேகமாய் வீட்டிலிருந்து வரும் மூச்சுக்காற்று அவரைச் சுட்டது.

    அது அவரது கட்டிலின் மூச்சு. தானும் தனது ரங்கநாயகியும் பார்த்துப்பார்த்துச் சேர்த்த இந்த கயிற்றுக்கட்டில்தான் அவர்களின் முதல் சொத்து. தங்களுக்குப்  பின் தன் வம்சம் வளர மகனுக்குக் கொடுத்துவிட்ட கட்டில். தன் வம்சத்தை காலாகாலத்துக்கும் காக்கும் ரங்கநாயகியின் ஆன்மா ஆசீர்வதித்த கட்டில். 

   கொஞ்ச நேரத்தில் மூச்சு சத்தம் நின்றது. பின் வாசல் கதவு திறந்து மூடப்படுகிறது. வாசல் கதவு திறந்ததும் ராஜம் அதிர்ச்சியானாள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. கருப்பையா எழுந்தார். அவளது கண்களை ஆழமாகப்பார்த்தார். உள்ளேச் சென்றார். கட்டிலை வெளியில் கொண்டு வந்து போட்டார்.

“இனி நான் வெளியவே படுத்துக்கறேன் மா..”

   என்றார். அதுதான் அவர் மருமகளிடம் பேசிய கடைசி வார்த்தைகள். பக்கத்திலிருந்த வாளியைக் கொண்டுவந்தார். அதில்  இருந்த தண்ணீரை எடுத்துக் கட்டிலைக் கழுவலானார். கட்டில் முழுக்க ஈரமானது. முடிந்தவரை கைகளாலேயே பிழிந்தும் அடித்தும் தண்ணீரை வெளியேற்றினார். நல்ல வெயில் அவருக்கு உதவியது. சில மணி நேரத்தில் மிச்சமிருந்த நீர்ப்பசைகள் ( ஈரமெல்லாம் ) எல்லாம் நீராவியாகிப்போனது.

     இன்று இரவுதான் முதன் முதலாக அந்த கட்டிலில் இருந்த மூட்டைப்பூச்சிகள் அவரை கடிக்கத் தொடங்கின. எத்தனை அசதியில் தூங்கினாலும் அவருக்கு நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை. இன்றுவரை அந்த மூட்டைப்பூச்சிகள் யார் கண்களுக்கும் தென்பட்டதில்லை.


தயாஜி  

1 COMMENT

  1. தேர்ந்த ஒரு நடை.சல சலவென நீரோடையில் அடித்து செல்லும் இயலாத ஒரு மீனின் நுட்பம்.கதை அதன் போக்கில் விட்டுக்கொடுதே போகிற மனநிலையில் ஏதார்த்தமாய் செல்கிறது.கருப்பையாவின் பாத்திர படைப்பு. தன் மன ஓட்டத்தை சரியாக சொல்கிறது.சேரம் போகும் மருமகளை ஒரு வார்த்தை பேசாமல் கட்டிலை தூக்கி வந்து வெளியில் போடுவது கதையின் உச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.