செல்வசங்கரன் கவிதைகள்

பழக்குதல்
எங்கும் வரவில்லையென்று சொல்லிவிட்டேன்
முன்னால் இருக்கின்ற காட்சியை விட்டுவிட்டு
எங்கு செல்வது
பின் அவை யாவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்
பார்த்துக் கொண்டிருப்பதற்கு எல்லாருக்கும் ஒன்று வேண்டும்
பழைய சுவர்கள் பழைய ஜன்னல்கள் எனக்கு
மிகவும் வசதி
எத்தனை இடங்களை நபர்களை பழையதாக்கியுள்ளேன்
என்னை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கின்றது

உண்மையின் தூரம்
திருடன் திரும்பவும் அதே வீட்டில்
திருட முயல்கிறான்
திரும்பவும் அவனைப் பிடித்துவிடுகிறார்கள்
எங்கே தோற்கிறேன் என்று பார்க்க வருவதாக
சபையின் முன்னால் சொன்னான்
அவன் தலையை அரிந்த இடத்திலிருந்து
வழியும் ரத்தத்தால் பாவங்களை
அவனே துடைத்துக் கொள்ளவா என்று கேட்டான்
எடுக்க முடியாத தூரத்திற்குத் திரும்பவும்
எல்லாவற்றையும் எல்லாவற்றையும் எறிந்தான்

தனிமையின் கடினப் பாதை
பார்வை மங்கலாகி வருவதை யாரிடமும்
சொல்லவில்லை
மின்விசிறியை சுழற்ற ஸ்விட்சை தட்டினான்
மங்கல் ஒவ்வொன்றின் மீதும் காற்று அமர்ந்தது
நன்றாக இருக்கிறாயா என்றது மங்கல்
ஒளி குறைந்த சுற்றிய எல்லா பொருட்களையும்
வைத்துக் காற்று தலையை ஆட்டியது
மங்கலும் காற்றும் பேசமுடியாத எல்லாவற்றையும்
பேசிக் கொண்டன
மிகவும் தனிமையாக இரண்டும் அங்கு இருந்தன
ஆமாம் ஆமாம் என்று
சுற்றியிருந்த மற்ற எல்லா பொருட்களும்
ஒருசேர கூச்சலிட்டன
பாவம்
அவைகள் அப்படி கூச்சலிட்டிருக்கக் கூடாது

அழுத்தம்
எனக்கு எல்லாம் முக்கியம்
மிச்சத் தோசையை வீசியெறிய மனமில்லை
சாலையின் தனிமைக்கு அது தேவைப்படலாமென
கீழே வைத்தேன்
ஒரு நாயின் சிறிய பசிக்கு ஒரு கவளம் போல ஆனது
அந்தத் தோசை என்னிடமே இருந்திருக்கலாம்
ஒரு சாலை ஒரு நாய்
தேவையில்லாமல் குறுக்கே சென்றுவிட்டேன்
யாருக்கும் எந்தத் தொந்தரவுமில்லாது
இருக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு சாலை அதன் விஸ்தீரணங்கள் அதன் தகிக்கும் சூடு
அதைக் கால்களால் பிராண்டி அங்கு வந்த நாய்
எதனிடமுமிருந்தும்
நான் தப்பித்துச் செல்ல முடியாது போல

பிதற்று
இறந்த உடல் மீதும் வெயில் பட்டு நிழல் விழுகின்றது
இறந்தவருக்கு மேலேயும் வானம் விரிந்துள்ளது
இறந்தவர் மீதும் இலை உதிருகின்றது
இறந்தவருக்கும் ஏனையவொன்றைப் போல
ஒரு எடை காணப்படுகின்றது
இப்படித்தான் ஒரு மலையைக் கடுகு மறைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.