கவி
நிரம்பியிருந்தது அறை.
எவ்வளவு புரட்டியும் அந்த நோட்டில்
ஏதுமெழுதாத பழுப்பை உற்றுப் பார்த்தான்
சுவரின் ஓவியத்துள்
ஒளிந்திருந்து அவன் சிரித்ததை
ஒரு கணம் திரும்பி
மீண்ட இவன்.
ஏதுமற்றது வெளி.
[ads_hr hr_style=”hr-fade”]
பதில்
நீதானே,
உன் பெயர்தானே என்றான்.
ஊமையாக, செவிடாக இருந்தேன்.
நன்றாக குலுக்கிய ஒரு பாட்டில்
போலாகாதிருக்க முயன்றேன்.
நான் ஒரு விளையாட்டு “க்ளே”
ஆகியிருந்ததைக் கண்டுபிடித்தது
இதே கணம்தான்.
ஒரு நாயாக வாலாட்டவோ,
கடித்து வைக்கவோ பயமாகவும்
தயக்கமாகவும் இருக்கிறது.
நீங்கள் முயல்வது சரிதான்
என்மேல் பரிவுதான்
ஆனால் எனக்கு உருவமற்ற
ஒரு கொழகொழப்பாக இருக்கவே விருப்பம்.
அது என்னைக் காக்கின்றது.
அது விபரீதங்களை தவிர்க்கிறது
அது உங்களிடமிருந்து
வெகு தொலைவுக்கு விரிக்கிறது.
உங்கள் சுருக்கு பையில்
புகையிலையைத் திணித்து
வைத்திருப்பது ஏதோ பழக்கமல்ல.
அதுதான் நீங்கள்.
நான் தலைபிரட்டைபோல
பரிமாணம் தெரிந்த பிசின்.
யுகங்களுக்குள் யுகங்களை
சேமிக்கத் தெரிந்த
மரமொன்றின் கண்ணீர்த் துளி.
[ads_hr hr_style=”hr-fade”]
தீட்சை
ஒவ்வொரு மனிதனும்
ஒரு வகையான பூச்சியினம்.
கோடான கோடி சப்தம்.
எனக்கு எதுவும் புரியவில்லை.
கனவில் ஒரு பூச்சி சொன்னது
இன்னும் ஞாபகம் இருக்கிறது.
“குழந்தைகள்தான் எவ்வளவு
ஆர்வமாக இருக்கிறார்கள்
எல்லாம் தெரிந்து கொள்ள!”
காஃப்கா ஏதோ
முயன்றிருக்கிறான்.
[ads_hr hr_style=”hr-fade”]
தனிமையின் கீழே
முட்டை ஓடொன்று கிடக்கிறது
அது தனிமையின் பெருங்காட்டில்
மறைவான ஒரு பொந்தில்
கைவிடப்பட்ட, மூலவரற்ற
பெருங்கோவில் பாலூட்டிகளின்
மீயொலியை எதிரொலித்தபடி
தன்னைத்தானே கண்படி
முழுமையடைய போராடிக் கொண்டிருக்கிறது.
கீழே
பறவைகள் தானியங்களைத் தேடி
வானத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.
[ads_hr hr_style=”hr-fade”]
செத்துப்போகிறவர்கள்
ஒரு குழந்தை வளர்கிறது.
சீராட்டி பாராட்டி
கூடவே ஒரு கரும்புள்ளியை
வைக்கின்றனர்.
காலத்தின் பிறழ்நிகழ்வின்
ஓர் இடுக்கில் நிரந்திர
புள்ளி வைக்கப்படுவது
கை மாற்றிக் கொள்ளும்போது
கழுத்தெழும்பு நொறுங்க
ஒரு கயிறு முடிச்சிடப்பட்டு
தாங்கும் மரம்
தீட்சையடைகிறது.
– சாகிப்கிரான்
கவிதைகள் எல்லாம் அருமை புதிய கோணம் புதிய பார்வைஅருமை