வரைந்த சித்திரங்களுக்குப் பெயரிடுவது கஷ்டமான வேலை.
மனம் என்பது முடிவறாது நீளும் குகைத் தொகுதி. அதன் இடுக்குகள், வளைவுகள், நீர்ச்சுனைகள், மர்மங்கள் எல்லாவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. எப்போதும் அற்புதங்களையும் முடிவற்ற சிக்கல்களையும் தேக்கி வைத்திருக்கும் மனம் எப்போது எதை வெளிப்படுத்தும் என்பதை எதிர்வு கூறவும் முடியாது.
இந்த ஒவியங்கள் ஜூன் மாதத்தில் கோடுகள்,நிறங்களூடாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவை.
சில காலங்களில் மாதக்கணக்கில் எதுவும் வரையவோ எழுதவோ முடியாத முற்றுக்குள் மனம் சுற்றிச் சுற்றி வரும். சில பொழுதுகளில் உட்கார்ந்து ஒரே இருப்பில் நாலைந்து சித்திரம் கீற மனசுக்கு சிறகு முளைக்கும்.
இந்த நிச்சயமின்மை எரிச்சலூட்டும், ஆனாலும் அது அப்படி இருப்பதில் ஒரு நிறைவு, ஒரு ஆசுவாசம்.
அன்பின் நீட்சி
டெய்ஸி – இங்கு கோடை காலத்தில் காடு போல் பூத்துக் கொட்டிக் கிடக்கும் இந்த மலர்கள் எனக்கு மிகப்பிடிக்கும். அந்த வெள்ளையும் நடுவில் இருக்கும் மஞ்சளும் ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான அழகு. மினிமலிஸ்ட் மலர் என்று சொல்லலாம். டெய்ஸி மலர்கள் ஒரு எதிர்பார்ப்பற்ற அன்பின் நீட்சியாக எனக்குத் தோணும்.
ஏரியும் கொக்குகளும் பேரமைதியும்
நொடிக்கு நூறு முறை நிறம் மாற்றும் அகன்ற வானத்தையும் மாயங்களைத் தனக்குள் ஒளித்து வைத்துள்ள ஏரிகளையும் பார்க்கும் போது என் மனம் பறவையின் இறகு போல பாரமில்லாததாகி விடுகிறது. ஏரிக்கு மேல் சிறகு விரிக்கும் சாம்பல் கொக்குகளோடு அலைந்து திரிவது எனக்குப் பிடிக்கும்.
உனக்குச் சுற்றியிருந்தவர்களுக்கு உன் பதட்டங்களோ,தேடலின் தாகங்களோ குறைந்தபட்ச அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு பெண்ணுக்கு திருமணம்,கணவன்,குழந்தைகளுக்கப்பால் எது வேண்டியிருக்கிறது ஹைபேசியா
ஒன்றுமேயில்லை. காலங்காலமாய் இருந்து வருகின்ற பெண் என்கிற புராதன பிம்பத்திற்குள் நீ பொருந்தவில்லை.
அது உன் தவறு.
ஓவியமும் வர்ணனையும் : ஷமீலா யூசுப் அலி
Shameela yosuf aly உங்கள் அனைத்து படைப்புக்களும் என்னைக்கவர்ந்தவை