நித்தியமானவன்


ரண்டு மாத வாடகை பாக்கி இருந்தது அட்வான்ஸ் தொகையில் கழித்துக் கொள்ளச் சொல்லி ரூம் நண்பரிடம் சொல்லிவிட்டேன். 

புத்தகங்களையும், துணிமணிகளையும் மட்டும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் வைத்து கட்டி வைத்துக் கொண்டேன். வெவ்வேறு தருணங்களில் சேகரித்து வைத்திருந்த பலமொழிப் படங்களின் சீ.டி, டிவீடி கேஸட்டுகளை ஒரு பையில் போட்டுக் கொண்டேன் இனி அவற்றை எடுத்துப் போவதற்கில்லை வேறு யாருக்காவது பயன்படட்டும் என்று அறையிலேயே வைத்துவிட்டேன்.. இரவு அறைக்கு திரும்புகையில் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ரூம் நண்பர்’ வந்தபிறகு சொல்லிக்கொண்டு புறப்பட வேண்டியதுதான். 

என் பொருட்களையெல்லாம் எடுத்த பிறகு அலமாரியில் நான் பயன்படுத்திக்கொண்டிருந்த அடுக்கு வெறுமைகூடியிருந்தது. சட்டைகளை மாட்டும் கம்பிகள் அனாதைகளாக சுவற்றில் ஒட்டியிருந்தன. அறையின் முக்கால் பங்கு இடத்தை என் பொருட்கள்தான் நிறைத்திருந்திருக்கின்றன என்பதை உணர்த்தும் விதமாக துடைத்து எடுக்கப்பட்டதைப் போல தோற்றமளித்தது அறை. 

எடுத்துப் போவதற்கு வேறு எதுவும் இல்லை நல்ல நினைவுகளும் கூட.. சுவற்றில் போட்டோவாக ஒட்டி வைத்திருந்த மார்லன் பிராண்டோவும், சார்லி சாப்ளினும் என்னைப் பார்த்து ஏளனமாக சிரிப்பதைப் போல இருந்தது. உடனே அந்தப் படங்களைக் கிழித்தேன். 

போன் அடித்தது.. ஈரத் தலையை துவட்டிக் கொண்டே எடுத்தேன். ஏஜென்ட் யுவராஜ் தான் அழைத்தான்.

சண்முகம்..தாசில்தார் கேரக்ட்ருப்பா..சின்ன பட்ஜெட்டுங்கறதால.. கம்பெனி காஸ்ட்யூம் கிடையதாம்.. நீ ஃபார்மல் ஷர்ட் ரெண்டும், பேண்ட்டும் எடுத்துட்டு வந்துடு” 

மளமளவென சொல்லிவிட்டு துண்டித்துவிட்டான். இரண்டு செட் சட்டைகளை இஸ்திரி செய்து மடித்து வழக்கமாக எடுத்துச் செல்லும் பையில் வைத்துக் கொண்டேன். 

வடபழனி பேருந்து டெப்போவை வந்தடையும்போது வானம் நீலத்திலிருந்து கறுப்பைப் பிரிக்கவில்லை. இரவு நிறுத்திவைக்கப் பட்டிருந்த பேருந்துகள் எல்லாம் நின்றுகொண்டே உறங்குவதைப் போல காட்சியளித்தன. பசித்தது டீ குடிக்கப் போகலாம் அதற்குள் ஏஜென்ட் வந்துவிடக் கூடும். வந்தால் அவனே டீ வாங்கித் தருவான். சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே சென்றுகொண்டிருந்தன. டெப்போவில் சில பேருந்துகள் புறப்படத் தயாராகி உறுமிக் கொண்டிருந்தன. 

இடதுபுறம் பார்த்தேன் வசந்தபவன் பக்கமாக பல வயதுக் கலவையான ஆண்கள் பெண்களென ஆட்கள் வரத் தொடங்கினர். அவர்கள் திரைப்படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிற்குமான உதிரி நடிகர்கள். 

ஆமாம்” “இல்லை” “ஓகோ” இதுபோன்ற ஒற்றை வார்த்தைகளை கூட்டமாக முழங்கவும், பிரதான கதாபாத்திரங்களின் செய்கைகளுக்கு பின்னால் நின்று கைகளை உதறி பதட்டமடையவோ, கைதட்டி ஆர்ப்பரிக்கவோ, வாய் பொத்தி ஆச்சர்யப் படவோ செய்யும் துணைநடிகர்கள். 

சென்னையின் பல மூலைகளிலும் ஏதோ ஒரு அறையில் ஒண்டிக்கொண்டு என்றைக்காவது தமிழ்சினிமாவின் மறக்கமுடியாத நட்சத்திரமாக ஆகிவிட வேண்டுமெனத் துடிக்கும் மின்மினிகள். தினசரி வடபழனி டெப்போ, ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் என அதிகாலையிலயே வந்து நிற்பார்கள். இவர்களை படப்பிடிப்புகளுக்கு துணைநடிகர்களை அழைத்துவரக் கூடிய ஏஜென்ட்கள் அன்றைய நாளின் படப்பிடிப்புக்குத் தேவையானவர்களை அழைத்துச் செல்வது அன்றாட நிகழ்வு! கமிஷன் போக ஏஜென்ட் கொடுக்கும் சொற்பத் தொகைக்கு அன்றாடக் கூலிகளாய் செல்பவர்கள்.  ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்பது இவர்களின்  சினிமா வட்டாரத்துப் பொதுப்பெயர்.

வணக்கம் தம்பி” முதுகில் விழுந்த குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

வலதுகையில் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த துணிக்கடை கட்டைப்பையை உயர்த்தி காட்டினார் தாடிகிருஷ்ணன். கண்களையும், மூக்கையும் தவிர மொத்த முகமும் தாடிக்குள் புதைந்திருந்தது. தொண்ணூறுகளில் இருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக துணைநடிகர்.

“வணக்கம்ணே” 

”தம்பிக்கு எங்க சூட்டிங்..? சீரியலா படமா?” என என் வலதுகரத்தைப் பிடித்துக்கொண்டு கேட்டார். விழிகளால் புன்னகைத்தார்.

”படம்தாண்ணே.. திருவான்மியூர்ல..உங்களுக்கு?” போலியாக வலிந்து ஒரு சிரிப்பை உருவாக்கிக் கொண்டேன்.

”தேவதையின் கணவன் சீரியல்ல..கேரக்டரு பண்றன் தம்பி.. டைரக்டரு நமக்கு எட்டு ஒம்பொது வருசத்துக்கு முன்னாடிலருந்து பழக்கம்..கதைப்படி ஹீரோயினிக்கி ஒரிஜினல் அப்பாவா பிளாஷ்பேக்கில் வர்ற மாதிரி.. அருமையான கேரக்டரு..” மிகுந்த உற்சாகமாக சொல்லிக்கொண்டே இருந்தார். அவ்விடத்தை விட்டு துரிதமாக நீங்க வேண்டுமென்ற மனநிலையில் அவர் பேசுவதை கவனிப்பது போலவே தலையை திருப்பிப் பார்வையை வேறுபக்கம் செலுத்தினேன். 

அங்கே மரத்தடிக்குக் கீழ் குழுவாக நின்றிருந்தவர்களை நோக்கி கணேசன் வந்தார். முன் வழுக்கை விழுந்த நெற்றியில் சந்தனமும், குங்குமமும் துலங்கியது, கரிய நிறம், பிரேம் இல்லாத கண்ணாடி பளபளத்தது, புலிப்பல் வடிவில் மீசை முறுக்கம். ஒரு காலத்தில் துணை நடிகராக இருந்து தற்போது ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுக்கு ஏஜென்ட்.. நல்ல பணப்புழக்கம்.. கணேசன் கூட்டத்திற்கு மையமாக நின்று “ரெண்டு பாட்டி.. தொப்பையோட மூனு போலீஸ்.. அப்புறம் அஞ்சு லேடீஸ்..” என்று சொல்ல பத்து பேர் அவர் சொன்ன விதத்தில் கூட்டத்தில் இருந்து தனியே உதிர்ந்தார்கள்.. “கொஞ்ச நேரத்துல நம்ம வேன் வந்துரும் நீங்கள்லாம் வளசரவாக்கம் தீபா சூட்டிங் ஹவுஸ்  வந்திடுங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை நோக்கியவர் என்னைப் பார்த்துவிட்டார். 

“சண்முகம் நானே ஒனக்கு போன் பண்ணனும்னு இருந்தேன்..

கணேசன் பேசிக்கொண்டே வந்தார்.. இடையில் அவருக்கு தாடிகிருஷ்ணன் வைத்த வணக்கத்தை அவர் கவனிக்கவில்லை.. 

ஆனந்த் சார் படத்துல ஒரு சின்ன ரோல் இருக்காம்.. நான் உன் போட்டோ அனுப்சிட்டேன்..ஆபீஸ் அட்ரஸ் அனுப்புறேன் போய் பாருய்யா” என்றார். 

அண்ணன் இல்லண்ணே இன்னைக்கு ஊருக்குப் போறன்ணே..” 

அட நல்ல வாய்ப்புய்யா..போயி பாரு” 

இல்லண்ணே ஊருக்கே போயிடலாம்னு..”

நான் முகத்தை திருப்பிக் கொண்டு சொன்னது அவருக்கு வெறுப்பேற்றியிருக்க வேண்டும். “சரி சண்முகம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.அவருக்கு ஒரு மாதிரியான சாய்ந்த  நடை.. 

கணேசன் போனவுடன் கிருஷ்ணன் அடங்கிய குரலில் கேட்டார் “ஏன் தம்பி வந்த வாய்ப்ப இப்புடி ஒதறி உடுற?”

”அடப் போங்கண்ணே வாய்ப்பு வாய்ப்புன்னு வயச உட்டதுதான் மிச்சம்” எனக்கு குரல் உடைந்துவிட்டது

“அப்டி நம்பிக்கை இல்லாம பேசப்புடாது சண்முகம்.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு நம்பிக்கதான் உரம் அத எதனாலயும் உட்றக்கூடாது”

”நம்பிக்க நம்பிக்கன்னுதான்ணே இத்தன வருசமா ஓட்டிக்கிட்டு இருந்தேன்.. நடிக்கணும்ங்கற ஆசையில இருவது வயசுல ஊரவிட்டு ஓடி வந்தன்.. இன்னய வரைக்கும் வீட்டுக்குன்னு நான் எதையுமே செஞ்சதில்ல.. என் தம்பிதான் எல்லா பொறுப்பையும் எடுத்துக்கிட்டான். என் அம்மா செத்தப்போ அடக்கம் பண்ணக்கூட என் கையில இருந்து காசு கொடுக்க முடியல.. என் தங்கச்சி கல்யாணத்துல கூனிக் குறுகி ஒன்னுமே செய்ய முடியாம போயி அவமானத்தோட நின்னேன்..முப்பத்தியேழு வயசுல கல்யாணத்தப் பண்ணி பொண்டாட்டிகிட்ட ஒரு மாசத்துல சென்னைக்கு கூட்டிட்டுப் போயிடுறேன்னு சொல்லி சொல்லி இந்தா அந்தான்னு வருசம் எட்டாயிருச்சி.. அஞ்சு வயசுல ஒரு பொம்பளப்புள்ள இருக்கு அதுக்கு ஒரு பொட்டு தங்கம் வாங்கிப் போட வக்கில்லாத நாய் வாழ்க்க என்னத்துக்குன்ணே? ஊருல ஒரு நல்லது கெட்டதுல நிம்மதியா கலந்துக்க முடியாம, யாருகிட்டையும் முகம் கொடுத்துப் பேச முடியாம, குடும்பத்த விட்டு அனாதையா ஒரு சின்ன ரூம்ல ஒண்டிகிட்டு வாய்ப்பு வரும் மயிரு வரும்னு ஏங்கிக் கிட்டே இருந்தது போதும்னுதான் சொந்த ஊருக்கே போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஊருக்குப் போகனும்னு முடிவு பண்ணதுக்கு அப்றம் ஏஜென்ட் கூப்ட்டான்..  ஆயிரம் ரூவா கெடைக்கும் ஊருக்குப் போகுற செலவுக்கு ஆகும்ங்கற ஒரே காரணத்துக்காகதான் கடசியா இன்னைக்கிப் போறேன்” சொல்லும்போதே எனக்கு விதிர்விதிர்த்தது. கைகளில் வந்த நடுக்கத்தை மறைக்க கைகளை பின்னால் கட்டிக்கொண்டேன். 

சற்று அமைதியாயிருந்த கிருஷ்ணன் சமாதானப்படுத்தும் தொனியில் பேச ஆரம்பித்தார் “இது எல்லா சினிமாக்காரனுக்கும், எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் நடக்குறதுதான் சண்முகம்.. இன்னைக்கி ஜெயிச்சி நிக்கிற எல்லார் வாழ்க்கைக்குப் பின்னாடியும் இந்த மாதிரி ஒரு கத இருக்கு.. ஜெயிக்கனும்ங்கற வெறியை.. அவமானத்தையும், பசியையும் விட வேற எதாலயும் கொடுக்க முடியாது சண்முகம். அதப்புடிச்சு ஜெயிச்சவனதான் இன்னைக்கி உலகம் அன்னாந்து பாக்குது”

“அண்ணன் வெறும் பேச்சு பேசியே பாதி வாழ்க்கை போயிடிச்சின்ணே.. இதவிட நம்பிக்கை வார்த்தைய நான் நிறய பேருக்கு சொல்லிருக்கேன்.. கைக் கொழந்தைய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போக எரநூறு ரூவா இல்லாம தலையப் பிச்சிக்கிட்டு நின்னுருக்கேன்ணே.. எனக்குப் புடிச்ச மாதிரி சினிமாவுலயும் முன்னுக்கு வர முடியாம, குடும்பத்தோடயும் நிம்மதியா இருக்க முடியாம ரெண்டு வாழ்க்கையையுமே தொலச்சிட்டு நிக்கிறேன்ணே.. அதான் இனிமேலாவது ஊர்ல போயி எதாவது பொழைக்கிற வழிய பாக்கலாம்னு மொத்தமா சென்னைய விட்டே போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” இதுதான் இறுதிச்சொல் என்பதுபோல அழுத்திச் சொன்னேன். அவர் எதுவுமே சொல்லாமல் தாடியைத் தடவியபடி நின்றிருந்தார். அவருக்கான வண்டி வந்ததும் சட்டென்று ஒரு சின்ன தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். எனக்கு அவரை விவாதத்தில் வென்றுவிட்ட சிறிய பெருமிதத்தில் புன்னகைக்கத் தோன்றியது.

தாடிகிருஷ்ணன் குடும்பம் உறவு என யாருமின்றி தனியாக இருப்பவர். அவருக்கு எந்தவிதமான குடும்ப அழுத்தமோ, இத்தனை வருடங்களாக துணைநடிகராகவே இருப்பதைப் பற்றிய வருத்தமோ எதுவுமில்லை.

ஹாரன் சத்தம் அழைத்தது.. என் ஏஜென்ட் யுவராஜ் வந்துவிட்டான்.  பக்கத்துக் கடையில் டீ குடித்தோம். அவனது இருசக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டேன்.  

ஏஜென்ட்கள் அழைத்துப் போன பின்னே மீதமிருந்த துணைநடிகர்கள் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் மரத்தடியிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். யாரும் அழைத்துச் செல்லாததால் இன்று அவர்களுக்கு வேலை இல்லை அதனால் இன்றைக்கு அவர்களுக்கு சம்பாத்தியமும் இல்லை.

திருவான்மியூர்  தாண்டி கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து முட்புதர்கள் அடர்ந்திருந்த ஓரிடத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது.  

லைட்மேன்கள் கனமான லைட்களைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாக  பேசிக்கொண்டு நடந்தார்கள், மூன்றுபேர் இருபதடி கிரேனை தள்ளிக்கொண்டே வந்தார்கள், புரடக்‌ஷன் பையன் கையில் மாட்டியிருந்த இரண்டு பிளாஸ்க்குகளில் இருந்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள எல்லோருக்கும் தேநீர், காபி என கேட்டுக் கேட்டு ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வட்டத் தொப்பியும், கண்ணாடியும் அணிந்த கைகளை விரித்து கேமரா கோணம் காட்டி ஒளிப்பதிவாளரிடம் விளக்கிக் கொண்டிருந்தவர்தான் இயக்குனர் என்று தெரிந்தது.

சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் சூடான தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்து தோசை ஊற்ற தயாரான மாஸ்டரின் முன்பு ஏற்கனவே பாதி சாப்பிட்டிருந்த பொங்கல், இட்லி மிச்சங்களின் எச்சில் தட்டோடு பத்து பதினைந்து பேர் முற்றுகையிட்டிருந்தார்கள்.

நான்கு லைட்மேன்கள் டிராக் போடுவதற்காக சிறு தண்டவாளங்களை பரபரப்பாக முடுக்கிக் கொண்டிருந்தனர். உடைகளுக்கென்று நிற்கும் பெட்ஃபோர்ட் வேனில் போலீஸ் உடைகளை அணிந்தபடி நிற்கும் துணை நடிகர்களுக்கு பெல்ட், ஷூ என மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார் காஸ்ட்யூமர் செல்வம். எனக்கு நன்கு தெரிந்தவர் 

 “சண்முகம் எப்டிப்பா இருக்க?”

“நல்லா இருக்கேன்ணே.. சொந்த காஸ்ட்யூம்னாங்க.. தாசில்தார் ரோலு”

“ஆமா..ஆமா.. இந்தா இந்த ஷூவ மாட்டிக்க பத்தாம் நம்பர்தான ஒனக்கு?”

அவர் பார்க்காமலே அளவு சொன்னதைப் பார்த்து பக்கத்தில் இருந்த அவரது உதவியாளருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. 

“இன்னைக்கி நேத்தி பழக்கமா?” சிரித்துக்கொண்டே ஷூவை எடுத்து சாக்ஸை உதறி என் கையில் கொடுத்தபடி சொன்னார் செல்வம். வாங்கிக் கொண்டு அங்கிருந்து விரைந்தேன்.  

கலைந்த தலையும், வியர்வையில் நனைந்த சட்டைகளுடன் தலையில் தொப்பியணிந்து குறுக்கும் நெடுக்குமாக விரைந்து ஓடிக் கொண்டிருந்தவர்களை பார்க்கும்போதே அந்தப் படப்பிடிப்பின் உதவி இயக்குனர்கள் யாரென்று எளிதில் அறிய முடிந்தது.

துணை நடிகர்கள் சாப்பிட்டுவிட்டு பேசி சிரித்தபடி அங்கிருந்த கட்டிடத்தின் புறவாசல் ஓரமாக குவிந்திருந்தார்கள். கல்யாண வீட்டின் கலகலப்பு, திருவிழாவின் குதூகலம் என படப்பிடிப்பு தளமே சுறுசுறுவென இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர்  வடம் பிடித்து இழுக்கும் மாயுரநாதர் கோவிலின் ஐப்பசி மாத தேரோட்டம் நினைவில் வந்து போனது.  

ஒரு உதவி இயக்குனர் சில ஆட்களை மேக்கப் மேனிடம் அழைத்து வைத்து எதையோ விளக்கிச் சொல்ல அவர்களுக்கு ஒப்பனை தொடங்கப்பட்டிருந்தது. நான் எடுத்து வந்திருந்த சொந்த உடைகளை அணிந்து கொண்டு அந்த உதவி இயக்குனரிடம் சென்று “எனக்கு என்ன மேக்கப்?” என்றேன். “நீங்க தாசில்தாருல்ல..கொஞ்சம் வெயிட் பண்ணுங்கண்ணே உங்களுக்கு ஸ்பெஷல் மேக்கப் இருக்கும்.. நீங்க போய்ட்டு சாப்டுருங்க..நான் கூப்பிடுறேன்” எனச் சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த நோட்டோடு ஓடினான். அவன் ஓடிய திசை பார்த்து  “என் டையலாக்” என்று எனக்குள்ளேயே முனகிக்கொண்டேன்.

படத்தின் கேஷியர் அமர்ந்திருக்கும் இடத்தைத் தேடிப் பார்த்தேன். ஒரு சிறிய மாமரத்து நிழலில் மேனேஜருடன் கேஷியரும் அமர்ந்திருந்தார். ஐந்து மணிக்குள் என் பகுதி முடிந்துவிட்டால் பணம் வாங்கிக் கொண்டு புறப்பட்டுவிட வேண்டும். பல கம்பெனிகளில் பணம் விஷயத்தில் ஏமாந்த முன்னனுபவத்தினால் எந்த தளத்திற்கு சென்றாலும் முதலில் கேஷியரைப் பார்த்துவிடுவது தற்போதெல்லாம் அனிச்சையாகிவிட்டது.

சாப்பிட்டு வந்து அமர்ந்திருந்தேன். காட்சிக்காக நெடுநேரம் காத்திருப்பது என்னைப் போன்ற குறுங்கதாபாத்திரங்கள் செய்பவர்களுக்கு புதிதல்ல. நிதமும் ஐந்திலிருந்து பத்து பட அலுவலங்களுக்கு சென்று புகைப்படங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து அழைப்பு வரும் வரும் என்று காத்திருந்தால் நூற்றுக்கு பத்து சதவீதத்தினர் மட்டுமே அழைப்பார்கள். ஒரு படத்தில் அரைநொடிக்கும் குறைவான நேரமே வந்த “ஓகே சார்” என்ற துளி வசனத்தைப் பேசுவதற்காக ஐந்து மாதங்கள் காத்திருந்திக்கிறேன்.

அலைபேசி அடித்தது ஊரிலிருந்து மனைவி அழைக்கிறாள் 

என்னங்க..பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க” 

ம்” பிறந்தநாளை நினைவில் வைத்திக்கொள்ளும் அளவிற்கு காலம் ஒன்றும் நட்புடன் இல்லை என்னிடம். 

எப்பங்க ஊருக்கு வர்றீங்க முந்தாநாளே கெளம்பறதா சொன்னீங்களே”

ஒரு சின்ன வேலை இருந்துச்சு…இன்னைக்கு நைட் கெளம்பிடுவேன்” 

நீங்க இங்கியே வேல பாத்துக்குறேன்னு சொன்னதும் அப்பா கண்ணாரத்தெருவுலயே ஒரு கட வந்துருக்குன்னு சொன்னாங்கங்க..”

சரி..சரி.. நான் அப்பறம் பேசுறேன்” எனச்சொல்லிவிட்டு அழைப்பை  துண்டித்துவிட்டேன். 

போட்டோ கொடுத்த ஒரு சில திரைப்பட அலுவலகங்களில் இருந்து வரும் அழைப்புகளால் அங்கே நடிப்புத் தேர்வுக்கு செல்வேன். கற்றறிந்த அத்தனை வித்தைகளையும் அபிநயிக்க வேண்டுமென்று உத்வேகத்துடன் சென்றால் முப்பது நொடிக்குள் எதையாவது நடித்துக் காட்டச் சொல்வார்கள். அங்கிருக்கும் உதவி இயக்குனர்கள். நடித்துக் காட்டியதும் வியந்து பாராட்டுவார்கள். படப்பிடிப்பு தேதி அறிவித்த பின் அழைப்பதாக சொல்வார்கள். நெடுநாட்கள் அழைக்கமாட்டார்கள் திரும்ப போன் செய்தால் நாளை, நாளை மறுநாள் என எதாவது ஒரு தேதியை சொல்லி விடுவார்கள். பிரசவ தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிறைசூலியைப் போல நான் அந்த தேதி குறித்தே கனவு கண்டுகொண்டிருப்பேன். குறிப்பிட்ட தேதியில் போன் செய்வேன்  கனவுகளில் வெடிகுண்டு வைத்ததைப் போல படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பார்கள்.

மேக்கப் போட கூப்பிட்டார் அந்த உதவி இயக்குனர். மேக்கப் மேன் நீண்ட அனுபவஞானம் உடைய வயதானவர். இரண்டு தேசிய விருது உட்பட பல அங்கீகாரம் பெற்றவர். என்னை அலட்சியமாக நோக்கினார். என்னை அருகில் இருத்தி தாடையை இடவலமாகப் பார்த்தார். தலைமுடியெல்லாம் கலைத்துவிட்டு. முகத்தில் கறுப்படிக்கத் தொடங்கினார்கள். பற்களில் ரத்தம் காய்ந்த சிவப்புக்கறை தடவப்பட்டது. இறந்துகிடக்கும் ஒரு சடலத்தின் குளோசப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு கன்றிப் போன காயத்தை ஒப்பனையிலே உருவாக்கத் தொடங்கினார் மேக்கப் மேன்.  அரைமணிநேரத்திற்கு பின் கண்ணாடியில் பார்க்கும்போது என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியவில்லை.

சிறிது நேரத்தில் காஸ்ட்யூம் அசிஸ்டண்ட்டோடு வந்த அதே உதவி இயக்குனர் நான் அணிந்திருந்த சட்டையை முள் மாட்டி கிழிந்ததைப் போல நறுக்கச் சொல்ல அப்படியே நறுக்கப்பட்டு சட்டை மீது சேற்றைக் குழைத்துப் பூசி அழுக்காக்கப்பட்டது. 

உதவி இயக்குனரிடம் “சார் இப்பவாவது என் டயலாக் என்னன்னு சொல்லுங்க..நான் ரெடியாகிக்கிறேன்..” எனக்கேட்டேன். 

என் முகத்தை நோக்கி “அண்ணே சாரிண்ணே சொல்ல மறந்திட்டேன்..உங்களுக்கு இதுல டயலாக்லாம் இல்ல..ஹீரோவ மெரட்டுரதுக்காக.. வில்லன் உங்கள அடிச்சுக் கொன்னு முள்ளுக் காட்டுல போட்டுட்டு போய்டுவாரு..ஹீரோவோட ஃபிரண்ட் வந்து கண்டுபிடிச்சு ஹீரோவுக்கு ஃபோன் பண்ணுவாரு..அதான்ணே இப்ப எடுக்கப் போறோம்” 

டெட் பாடியா நடிக்கனுமா?”  பதட்டத்தில் சற்று மிகை ஒலியோடு கேட்டுவிட்டேன். 

இல்லண்ணே கதைப்படி போன சீன்ல ஹீரோ தாசில்தார்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணப் போறதா சொல்லிருப்பாரு..அதான் ஒடனே வில்லன் தாசில்தார் அதாவது உங்கள கொன்னுடுறாரு..குத்துயிரும் கொலை உயிருமாக் கெடந்து கொஞ்சம் கொஞ்சமா சாகற மாதிரி…” 

எனக்கு சட்டென்று நெற்றிப்பொட்டில் ஸ்பிரிங்கை இழுத்து அடித்ததைப் போல இருந்தது.

நல்ல நடிகனாக வேண்டுமென்ற கனவே செத்துவிட்ட பிறகு செத்துப் போவது போல நடிப்பதிலே என்ன சிரமம் இருக்கப் போகிறது. 

என்னைக் கடந்து போய் பின் திரும்ப வந்து 

ஸாரிண்ணா ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்க லஞ்ச்க்கு அப்புறம் அநேகமா உங்க சீன்தான்” என்று சொல்லிவிட்டுப் போனார் உதவி இயக்குனர்.

சினிமாவில் ஒரு வார்த்தைக்கு இரண்டு இரண்டு அர்த்தங்கள் உண்டு. அப்புறம் பார்க்கலாம் என்றால் இனி பார்க்கவே முடியாது என்று அர்த்தம். இரண்டு நிமிஷம் காத்திருங்கள் என்றால் இரண்டு மணிநேரம் என்று அர்த்தம், நடிக்க அழைத்து, தளத்திற்கு வந்து நடித்து, படத்தொகுப்பில் வெட்டுப்படாமல் தப்பித்து திரையில் பார்ப்பது வரை சினிமாவில் எதற்குமே உறுதி இல்லை. இங்கு நீர்க்குமிழியால் எழுப்பப்படும் பிரம்மாண்ட கோட்டைகள் அசாதாரண நம்பிக்கையை அடித்தளத்தமாகக்கொண்டு உருவாகின்றன. அதை அலைக்கழிப்புகளும், நிராகரிப்புகளும் தகர்த்தெறிந்து கொண்டேயிருக்கின்றன. காத்திருப்பின் பெருவெளியில் நம்பிக்கையெனும் காற்று இன்றி எத்தனை காலம்தான் மூச்சடைத்து நிற்பது? வேண்டாம் இதுபற்றி இனி நினைக்க வேண்டாம். நினைக்க ஒன்றுமில்லை. இரவு ஊருக்கு கிளம்பிவிட வேண்டும். தீர்மானமாக உள்ளூரச் சொல்லிக்கொண்டு மனதின் புலம்பலை முடிவுக்குக் கொண்டு வந்து நிறுத்தினேன். 

உதவி இயக்குனர் ”ஷாட் ரெடி” என்று அழைத்தார். 

ஒரு சிவந்த இளைஞன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து நின்றிருந்தார். கதைப்படி அவர்தான் நான் கொலையுண்டு கிடப்பதை கண்டறியப்போகிறவர் என்று யூகித்துக்கொண்டேன். அவருக்கு அந்த உடை சற்றும் பொருத்தமில்லாமல் இருப்பதை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுட்க்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது என்ற நிதர்சனம் திரையாக மறைத்தது.

”டேய் இன்ஸ்பெக்டருக்கு பின்னாடி நிக்க வேண்டிய நாலு கான்ஸ்டபிள்ஸ் எங்கடா?” இயக்குனர் உதவி இயக்குனர்களைப் பார்த்து மைக்கில் கத்த ஆளுக்கொரு புறமாய் சிதறிய உதவி இயக்குனர்கள் மரத்தடிக்கு கீழ் அரைத் தூக்கத்தில் இருந்த போலீஸ் சிப்பந்தி உடையணிந்த துணைநடிகர்களையும், இரண்டு மூன்று பொதுஜனமாக நடிக்கும் துணைநடிகர்களையும் அழைத்துக்கொண்டு திரும்பினர். 

படப்பிடிப்பு நேரத்தில் இப்படி எங்காவது சென்று புகை பிடிக்கவும், இளைப்பாறவும் சென்றுவிடும் துணைநடிகர்களால் நேரத்துக்கு காட்சி துவங்காத கோபத்தால் உதவி இயக்குனர்களுக்குத்தான் திட்டுகள் கிடைக்கும்.

வந்த கான்ஸ்டபிள் உடையணினிந்த ஒருவரிடம் துணைநடிகை ஒருவர் எதோ சங்கேத பாஷையில் சைகை காட்ட அவர் சட்டென்று திரும்பி தனது பேண்ட் ஜிப்பை சரி செய்தார்.

நான் இயக்குனர் எனக்கு சொன்ன முள்காட்டின் நடுவே சென்று படுத்தேன். போலீஸ் வேடமிட்டவர்கள் கேமராவிற்கு பின்னாலிருந்து வருவார்கள் என்று ஏற்கனவே எனக்கு சொல்லப்பட்டிருந்தது. நான் படுத்திருந்த இடத்திற்கு சற்று தொலைவில் கிடந்த நைலான் கயிறிலிருந்து நகரத்துவங்கும் கேமரா எனது காலிலிருந்து பயணப்பட்டு என் முகத்தில் வந்தடையும்போது உயிர் பிரிவதாக நடிக்க வேண்டும்

“கேமரா ரோல்” என இயக்குனர் கட்டளையிட,

“ரோலிங்” என்று ஒளிப்பதிவாளர் ஆமோதிக்க

“ஆக்‌ஷன்” என இயக்குனர் சொன்னவுடன் ட்ராலியிருந்து கேமரா மெதுவாக நகர்ந்தது பூட்ஸ் சத்தங்கள் படபடவென கேட்க இயக்குனர் “கட்” என்று எரிச்சலுடன் கத்தினார். “ஜூனியர்ஸ் நீங்க ஏன்யா முன்னாடி போறீங்க..  இன்ஸ்பெக்டர் சார்.. நீங்கதான் முன்னாடி போகனும் இவங்கள்லாம் உங்கள பின்தொடர்ந்து வருவாங்க” என்று அந்த இன்ஸ்பெக்டர் இளைஞனிடம் சொன்னதும் அவர் ஆமோதிப்பதற்காக வேகமாக தலையாட்டினார். 

”ஒன்மோர்” என்றார் இயக்குனர்

மறுபடியும் கேமரா நகர்ந்தது.. இந்த முறையும் அந்த இளைஞர் முன்னால் வரவில்லை.. “கட்ட்ட்..” இயக்குனரின் குரல் சற்று ஓங்கி ஒலித்தது.

இது திரும்ப திரும்ப நான்கு முறைக்குமேல் சென்றது.

இந்த சினிமா உலகில் பணத்தையும், பரிந்துரைகளையும் மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு வந்தவர்கள்தான் பெரும்பான்மையாக நிறைந்திருக்கிறார்கள். ஒரே டேக்கில் சில நிமிடங்களில் எடுத்து முடியவேண்டிய காட்சியை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். போலீஸாக நடிக்க வேண்டியவனை பிணமாகவும், பிணமாக நடிக்க வேண்டியவனை போலீஸாகவும் நடிக்க வைத்துக்கொண்டிருக்கும் காலத்தை நம்பி இதற்கு மேலுமா இத்துயரத்தில் உழல வேண்டும்?

இன்ஸ்பெக்டருக்கும்,கான்ஸ்டபிளுக்கும் தனியே சிறப்பு நடிப்பு ஆலோசனைகளை வழங்கினார் இயக்குனர். அவர்கள் வருவதைப் பார்த்தால் இந்தமுறை சரியாக செய்துவிடுவார்கள் என்று தோன்றியது.

“ஸார் லைட் போயிருச்சு ஸார் டூ மினிட்ஸ்..” என்று வானத்தைப் பார்த்துக்கொண்டே லைட் மீட்டர் வைத்திருந்த உதவி ஒளிப்பதிவாளரின் குரல் கேட்க எல்லோரின் முகமும் வெவ்வேறு கோணங்களில் தொங்கியது.

தரையில் படுத்திருந்ததால் புழுதி பட்டு முகத்தில் போடப்பட்டிருந்த கன்றிய காயத்துக்கான ஒப்பனை, கன்னத் தசைபரப்பை இறுக்கி லேசாக வலித்தது. மேலுதட்டை மடக்கி கீழுதட்டால் ஊதிக்கொண்டேன் காற்று முகத்தில் பட்டதும் சற்று இதமாக இருந்தது. 

உயிர்விடுவது போன்று முன்பு நான் பார்த்த படங்களில் நடிகர்கள் நடித்த காட்சிகளை எல்லாம் ஒருமுறை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தேன். மகளிர் மட்டும் படத்தில் பிணமாகவே வந்த நாகேஷ் நினைவுக்கு வந்தார். ஒரு நடிகன் இறந்துபோவது போல நடித்தாலும் கூட காலம் கடந்தும் உயிரோடுதானே இருப்பான். நினைக்குந்தோறும் அவனைக் கண்ணாரக் காண முடியும். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் பார்க்கப்பட்டு…நினைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறான் எனில் எல்லோர் நினைவிலும் வாழ்கிறவனுக்கு நிஜத்தில் இறப்பு ஏது? உண்மையில் இறப்பு என்பது ஒரு வாழ்க்கை கொண்டவனுக்குத் தானே.. போன படத்தில் டாக்டராக நடித்தேன் இந்த படத்தில் தாசில்தார்… பல வாழ்க்கையைக் கூட விதிவிலக்காக ஒருசிலர் வாழ்ந்து பார்த்துவிட முடியும். ஆனால் நடிகனால் மட்டும்தானே செத்துப்பார்த்து விடவும் முடிகிறது.. உயிரை உடலுக்குள் மட்டும் வைத்திருந்தவனுக்குத்தான் மரணத்துக்குப் பிறகு ஒன்றுமில்லை. உயிரை தன் கலைக்குள் வைத்திருப்பவனுக்கு மரணம் என்ற ஒன்றே இல்லைதானே?

”சைலன்ஸ்” 

இயக்குனரின் குரலால் எல்லோரும் அமைதியானார்கள்

“ஆல் ஓக்கே சார்..லைட் வந்திருச்சி போகலாம்” என்று மறுபடியும் உதவி ஒளிப்பதிவாளரின் குரல்..

இயக்குனர் “ஆக்‌ஷன்” எனச் சொல்ல கேமரா நகர்கிறது. 

பக்கவாட்டில் கேமரா வரும் திசை நோக்கிப் பார்த்தபடி நான் படுத்திருக்கிறேன். கயிற்றால் கழுத்தை இறுக்கிய பிறகு எப்படி இருக்குமென கற்பனை செய்து பார்க்கிறேன். பூட்ஸ் காலடி சத்தம் காதில் விழுந்ததை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு தொண்டைக்குழியை ஏற இறங்கவிட்டேன்.  சிறுவயதில் ஒன்று இரண்டு என எண்ணச்சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூச்சடக்கி இருப்பதைப்போல மூச்சடக்கிக் கொண்டேன். உடல் எடையற்று நீரில் சருகாக மிதப்பதைப்போல நினைத்துக்கொள்கிறேன்.. தொண்டைக்குள் சுவாசம் மற்றும் உணவுக்குழல் நெறிக்கப்பட்டபிறகு கருவிழிகள் மேலே சொறுகிக்கொள்வதைப்போல விழிகளை மெல்ல மெல்ல மேல் இமைக்குள் இழுத்துக்கொண்டேன். விழிகள் நிலைகுத்தி வானத்தையே வெறித்துப் பார்த்தேன் மெல்ல என் பார்வையிலிருந்த வானம் மறைந்து முழுவதுமாக இருண்டது.. சிறு ஓட்டைக்கூட இல்லாத இருட்டு அறையில் என்னைப் போட்டு அடைத்துவிட்டதாய் கற்பனை செய்துகொண்டேன். யோகா கற்றிருந்ததால் மூச்சைப் பிடித்து வைத்துக்கொள்ள முடிந்தது. சுற்றிலும் கேட்கும் சத்தங்கள் ஏதோ குகைக்குள் இருந்து கேட்பதைப்போல இருக்கிறது. சத்தங்கள் சன்னமாக குறைகிறது.. இப்போது சுத்தமாக ஓசைகள் எதுவும் கேட்கவில்லை. பூரண அமைதி..

“டம்” என ஏதோ ஒலி கேட்க “கட்… டேக் ஓக்கே” என்ற குரல் ஆழத்திலிருந்து கேட்கிறது.. என் உடல் அசைகிறது.. யாரோ என்னைப் பிடித்து உலுக்குகிறார்கள்.. வேகவேகமாக இழுத்துப் நெடுமூச்சு விடுகிறேன்.. தலைக்குப் புறையேறி இருமத் தொடங்கினேன். கண்களில் இன்னமும் இருள்கவிந்த புகையென எதிரில் இருக்கும் எதுவும் தெரியவில்லை.. தொண்டையில் காற்றடைத்து இருமல் தொடர்ந்தது.. என்னைச் சுற்றி ஆட்கள் கூடிவிட்ட சலசலப்பு கேட்டது. யாரோ “தண்ணி..தண்ணி” என்றார்கள். முகத்தில் நீர்த்துளிகள் வேகமாக வந்து அறைந்தன. கண்களில் மங்கிய பளபளப்பில் ஆட்கள் தெரியத் தொடங்கினார்கள்.

“என்னண்ணே பிணமா நடிக்கச் சொன்னா..அதுக்குன்னு இப்படியா.. கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டீங்களே?” உறைந்த முகத்தோடு கேட்டார் அஸோஸியேட் டைரக்டர். 

“இல்ல..கீழே படுக்கிற வரைக்கும் தோணல…ஆனா பொணம்னு காட்டனும்ல” 

”அரை மணிநேரம் அப்டியே பிணமாவே இருந்தீங்களேண்ணே” அஸோஸியேட் டைரக்டர் குனிந்து செவியோரத்தில் சொல்லிவிட்டுச் சென்றார்.

படுத்திருந்தபடியே கண்களை மெதுவாக விரித்துப் பார்க்கிறேன் வானத்தின் விசாலம் மனதை என்னவோ செய்தது. நீலப்பின்னணியில் விஸ்வரூப பஞ்சுக்குழுமங்களைப் பறக்கவிட்டுக்கொண்டு பளீரென ஒளிர்ந்து கண்கள் கூசியது.. 

கேமரா அஸிஸ்டெண்ட் சொன்னார் ”சார் கேமராவ பார்த்து மூணு தடவ சிரிங்க” சினிமாவில் யாராவது இறந்துபோவதுபோல நடித்தால் இப்படியொரு சடங்கு..

உயிர்த்தெழுகிறேன். என் உடலிலிருந்து வெளியேறி வேறு உடலிலிருந்து உயிர் உண்டாகி எழுவதைப்போல உணர்ந்து எழுந்து அமர்ந்தேன்.

கேமராவைப் பார்த்து மூன்று முறை மிகுந்த சத்தமாக சிரித்தேன்.. முழு உடலையுமே வாயாக்கி அப்படியொரு பிரம்மாண்ட சிரிப்பு.. ஓடாமலிருந்து திடீரென இயங்கும் எந்திரம் ஓடத்துவங்கும்போது அதன் மேலிருந்து துரு கொட்டுவதைப்போல.. பசி, அவமானம், கழிவிரக்கம், வெறுமை எல்லாம் என்னிடம் இருந்து உதிர்ந்து கொட்டும்படி அதிர அதிர சிரித்தேன். அடக்கி வைத்த எதையோ வெளியேற்றிவிட்ட மனவிடுதலையால் விழிகளில் கண்ணீர் துளிர்த்து வழிந்தது. 

ஆர்ட் அசிஸ்டண்ட் தேங்காயில் சூடம் ஏற்றி எனக்கு முன்னே வந்து மூன்று முறை சுற்றினார். என் மேனி சிலிர்த்தது.. நாளங்களில் ரத்தம் தடதடத்து ஓடுவதை உணர்ந்தேன். பாதங்களுக்குக் கீழே பூமி நழுவுவதைப்போல தோன்றியது…தளத்திலிருந்த எல்லோரையும் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்று தோன்றியது. கன்னத்தசைகள் விரிய சிரித்தபோது முதுகுத்தண்டில் ஐஸ்கட்டியால் கோடு இழுப்பதைப்போல இருந்தது.

சட்டென்று நினைவில் விளக்கெரிய ஏஜென்ட் கணேசனுக்கு போன் செய்தேன்.. இரண்டு ரிங் போனதும் எடுத்தார்.

“அண்ணே.. ஆனந்த் சார் படத்துல எதோ கேரக்டர் இருக்குன்னு சொன்னீங்களேன்ணே….நான் போயி ஆபீஸ்ல பாக்குறன்ணே..”


 • செந்தில் ஜெகன்நாதன்

நன்றி : ஓவியம் – lenamacka.com

19 COMMENTS

 1. ’நித்தியமானவன்’ சிறப்பான சிறுகதை. கண்முன் காட்சியாக பார்க்கும்படியான அருமையான நடை. ’நெற்றிப்பொட்டில் ஸ்பிரிங்கை இழுத்து அடித்ததைப் போல்’ என்ற உவமை வெகு சிறப்பு. வாழ்த்துகள் செந்தில்.

 2. அருமை தலைவரே
  நடிகர்களுக்கு மட்டும் அல்ல உதவி இயக்குனர்களுக்கும் பொருந்தும் கதைதான் 🤝🤝🤝👍👍

 3. சிறப்பான எழுத்துநடை
  ஒரு தொழில் அதன் களம் சார்ந்த பதிவுகள் (பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள்) இங்கு எத்தனை பதிவு செய்யப்பட்டது என தெரியவில்லை. ஆனால் தங்களின் இந்த கதை சிறுகதை என்பதால் கடுகின் அளவுதான் ஆனால் காரம் எக்கச்சக்கம். இந்த தொழிலில் சோக கதைகள் எத்தனையோ உண்டு. ஆனால் அதையெல்லாம் சொல்ல இந்த சோகங்களைக் கடந்த வெற்றியாளன் ஒருவன் தேவைப்படுகிறான்.
  தோல்வியுற்றவனின் இதிகாசங்கள் இன்னும் எத்தனையோ.
  ஆனால் இந்த கதையிலேயே அனைத்து துயரங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

  பிணமாக நடிக்கும் காட்சியில் எழுத்தின் வீரியம் அற்புதம்.
  முடிவு ஊகிக்க முடிந்த ஒன்றுதான் என்றாலும்.
  வெற்றியின் புறக்கணிப்பால் துவண்டு போன நேரங்களில் எப்போதும் துணை வரும் ஊக்க வார்த்தைகள் (அண்ணே அரை மணி நேரம் அப்படியே பிணமா கிடந்தீங்களே) அதே தொழிலில் நீடிக்க வைப்பதில் ஆச்சரியமல்லைதான்.

 4. நித்தியமானவன்‌‌, எதிர்நீச்சல் போட கூடிய ஒவ்வொருவர் வாழ்விலும் வரகூடியதே, சினிமாவில் சாதிக்க போராடும் போராளிக்குரிய சோதனை இது.இதுபோன்ற சோதனைகளை தகர்த்தெழுந்து வெற்றிக்கொள்பவனே சாதனையாளர், நித்தியமானவன் ஒரு சாதனையாளன்.அதை வெளிக்கொணர்ந்த ஆசிரியர் செந்தில் ஜெகன்னாதன்?
  நன்றி, ஆசிரியருக்கு . இயக்குனராக யோசிக்கும் பலருக்கும் தடைகளை தகர்த்தெறிய ஆயுதமாக நித்தியமானவன்.

 5. கலையின் வீரியத்தைத் தனக்குள் தேக்கி வைத்து, அந்தக்கனத்தை மேற்கொண்டு சுமக்கவும் முடியாமல், இறக்கி வைக்கவும் முடியாமல், அவமானத்திலும் ஏமாற்றத்திலும் அவஸ்தையை அனுபவிப்பவனின் உண்மை நிலை.

  நடிகன் மட்டுமல்லாது தினந்தோறும் கோடம்பாக்க கனவுத் தொழிற்சாலையில் நம்பிக்கையுடன் கண்விழிக்கும் ஒவ்வொருவரு கலைஞனும் தன்னைத் தொடர்படுத்திக் கொள்ள முடியும். அட்டகாசமான
  மிகச்சிறப்பான நடை, அருமையான கதை. சிறுசிறு பாத்திரங்களையும் வர்ணித்த விதமும், அவர்களைப் பயன்படுத்திய விதமும் மிக இயல்பாக இருந்தது. நன்றாக எழுதப்பட்ட கதை எங்கே வழமையான முடிவில் சலிப்பாக முடிந்து விடுமோ என பயந்த நிலையில் ஒரு அழகான முடிவு. அந்தக்கடைசி போன்காலில் தான் ஒவ்வொரு சினிமாக்கலைஞனின் கனவுக்கயிறும் அறுபடாமல் இருக்கிறது.

 6. குறும்படம் பார்த்த உணர்வு இந்த் சிறுகதையை படித்து முடித்த பிறகு அவ்வளவு அழகாக சாதாரண நடையில் எழுதி இருக்கிறார்…
  வாழ்த்துகள் செந்தில் ஜெகநாதன் அவர்களுக்கு

 7. இந்த நொடி ஏமாற்றம்
  அடுத்தநொடி நம்பிக்கை

  திரைத்துரையில் சாதிக்க தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு…நாளும் தடுமாற்றங்களையும் ஏமாற்றங்களையும் எதிர் கொண்டு போராடும் உதவி இயக்குனாராய்
  நானும் இந்த கதையின் ஓர் அங்கமாகிறேன்.

  கதையின் நிறைவில் வந்த தேங்காய் சுற்றும் சடங்கு போலத்தான் ஏதோவொரு மாயவிசை நம் எல்லோருள்ளும் முடிவில் எப்படியாவதொரு நம்பிக்கையை உசுப்பி விட்டு தொடர வைக்கிறது.

  விடாப்பிடியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நித்தியமான வனுக்குள்ளும் கதையாய் ஒரு வாழ்வியல்
  வாழ்வியலாய் ஒரு கதை.

  நன்றி…💐 செந்தில் ஜெகநாதன் அண்ணா

 8. கதை ஆழ்மனக் காயங்களோடு சொல்லப்பட்டுள்ளது.மிகுந்த வேதனையைத் தருகிறது. இப்படித்தான் முடியும் என்பதை ஊகிக்க முடிந்தாலும், என்னிக்காவது ஜெயிக்க மாட்டமாங்கிற ஏக்கமும்,நம்பிக்கையும்,வெறியும் எவ்வளவுதான் மனசு தளர்ந்தாலும் வெளியேற விடாதுங்கிறதை நிலை நிறுத்தி விடுகிறது. புதிய களத்திலான சிறந்த கதை.
  உஷாதீபன்

 9. துணைநடிகர்களின் நிலையை புடம் போட்டு வார்த்த விதம் அருமை.

 10. சிறப்பாக எழுதப்பட்ட சினிமா துணை நடிகர்களைப் பற்றிய கதை.உண்மைக் கதை என எண்ண வைத்தது.மொழி நடை மிகப் பிரமாதம்.

 11. “நித்யமானவன்” சத்யமானவன். ஆமாம் சினிமா கனவோடு சென்னை போன்ற வேகமாக இயங்கும் நகரங்களில் ஏன் நாடு முழுவதும் வயது வித்யாசமில்லாமல் கலை பைத்தியகாரர்கலை கானமுடியும். அதில் நானும் ஒருவன்.
  கதையை வாசிக்க தொடஙகியதும் காட்சிகள் கன்முன் விரியதொடங்கிவிட்டு. அந்தந்தகாட்சிக்கான உவமயை மிகவும் தத்ரூபமாக தந்தது ஆசிரியர் அவர்களின் மிகச்சிறப்பு.

 12. writing extraordinary,, naane bus stand ku poi, van la yeri, make up pottu veyil la mallaaka padutthu nadichu endhricha madhiri irundhuchu.

  • அருமையான படைப்பு… வாழ்த்துக்கள்… எனது மகன் நடிகர் ஶ்ரீராமின் வயதிற்கேற்ற கதையிருந்தால் தொடர்பு கொள்ளவும்…

 13. இது சிறுகதையல்ல பெருங்கதை ….நானே என்னை பார்த்தேன் வீடு காலி செய்த போது அந்த வெறுமை-தோல்வி-ஏக்கம்-ஏமாற்றாம்-அவமானம்-இனி கேட்க போகும் அவமானம் சொல் என்று குனிகுறுகி நின்ற போது ….தேடினேன் எனக்கு தெரியாமல் என்னைப்பார்த்த உங்கள் தேடினேன் சுற்றி ..சுற்றி… கண்ணீரோடு வாழ்த்துக்கள் தோழரே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.