தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு சாமுவேல் ஸ்பேட், தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இன்னமும் நான்கு மணியாகவில்லை. “யூ –
ஹூ” என்று அழைத்தார்.
எஃபி பெரின் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தாள். ஒரு துண்டு சாக்லெட் கேக்கை அவள் தின்று கொண்டிருந்தாள்.
“இன்று மதியம் என்னால் சித் வைஸை என்னால் பார்க்கமுடியாது என்று சொல்லிவிடு” என்றார்.
கேக்கின் கடைசித்துண்டை வாயில் போட்டுவிட்டு, சுட்டுவிரல் மற்றும் கட்டைவிரலின் நுனியை நக்கிவிட்டு, “இந்த வாரத்திலேயே இது மூன்றாவது முறை” என்றாள்.
அவர் சிரித்த போது, அவரது தாடை, வாய், புருவங்கள் நீண்டன. “தெரியும், ஆனால் நான் ஒரு உயிரைக் காப்பாற்ற செல்ல வேண்டியிருக்கிறது.” என்று தொலைபேசியைப் பார்த்து தலையசைத்தார். “மாக்ஸ் பிலிஸ்ஸை யாரோ பயமுறுத்துகிறார்களாம்”
அவள் சிரித்தாள். “அவரது மனசாட்சியாக இருக்கும்.”
அப்போதுதான் உருட்ட ஆரம்பித்திருந்த சிகரெட்டில் இருந்து பார்வையை எடுத்து, அவளை நோக்கி “அவனைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்க வேண்டிய எதுவும் உனக்குத் தெரியுமா?”
“அப்படி எதுவும் இல்லை. அவரது சகோதரனை சான் குவென்டின் சிறைக்கு அனுப்பியதை நினைத்துக் கொண்டேன்.”
ஸ்பேட் தோளை குலுக்கிக் கொண்டார். “அவன் செய்ததிலேயே மோசமானது அதுவல்ல.” சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு, எழுந்து, தன்னுடைய தொப்பியை எடுத்தார். “ஆனால் இப்போது திருந்திவிட்டான். சாமுவேல் ஸ்பேட்டின் வாடிக்கையாளர்கள் அனைவரும் நேர்மையான, கடவுளைக் கண்டு பயப்படுபவர்கள்தான். மூடும் நேரத்திற்குள் நான் வரவில்லை என்றால், நீ கிளம்பிவிடு.”
நோப் ஹில்லில் இருந்த ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நுழைந்து 10K என்று குறித்திருந்த கதவில் இருந்த பொத்தானை அழுத்தினார். கசங்கிய ஆடையுடன், ஒரு பருமனான கருப்பு மனிதன் உடனடியாகக் கதவைத் திறந்தான். கிட்டத்தட்ட வழுக்கையாக இருந்த அவன், ஒரு கையில் தொப்பியை வைத்திருந்தான்.
அவரைப் பார்த்து “ஹலோ சாம்!” என்று சிரித்தான். அவனது கண்ணில் தெரிந்த புத்திசாலித்தனம் கொஞ்சமும் மாறியிருக்கவில்லை. “இங்கே என்ன செய்கிறாய்?”
ஸ்பேட் பதிலுக்கு “ஹலோ டாம்!” என்று முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் சொல்லிவிட்டு, “பிலிஸ் இருக்கிறாரா?”
“இருக்கிறாரா!” என்று தன்னுடைய தடிமனான உதடுகளைத் திறந்து கொண்டு, “அது பற்றி நீ கவலை கொள்ள வேண்டியதில்லை!”
புருவங்களை நெறித்துக் கொண்டு, “அப்படியென்றால்” என்றார் ஸ்பேட்.
டாமிற்குப் பின்புறமிருந்த முன்னறையில் இருந்து இன்னொரு மனிதன் தோன்றினான். அவன் ஸ்பேட் அல்லது டாமை விட உருவில் சிறியதாக ஆனால் நல்ல பலசாலியாக இருந்தான். அவனுடைய கரடுமுரடான, சதுரமான முகத்தில் நன்றாக ஒதுக்கப்பட்ட மீசை இருந்தது. அவனது துணிகள் மிகவும் சுத்தமாக இருந்தன. தலையின் பின்பக்கமாக ஒரு பௌலர் தொப்பியை அணிந்திருந்தான்.
டாமின் தோளிற்கு மேல் பார்த்துக் கொண்டு, அவனிடம் ஸ்பேட் “ஹலோ டண்டி!” என்றார்.
டண்டி தலையை அசைத்துவிட்டு, கதவிற்கு அருகில் வந்தான். அவனது நீல நிறக் கண்கள் கடுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
“என்ன விஷயம்?” என்று டாமிடம் கேட்டான்.
“பி-ளி-ஸ்-மா-க்-ஸ்” என்று ஸ்பேட் பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாகக் கூறினார். “அவரைப் பார்க்க வேண்டும். அவரும் என்னைப் பார்க்க விரும்புகிறார். புரிகிறதா?”
டாம் சிரித்தான். டண்டி சிரிக்கவில்லை. “உங்களில் ஒருவரின் விருப்பம்தான் நிறைவேறப் போகிறது.” என்றான் டாம். அப்போது டண்டியை பார்த்த அவன் சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிறிது சங்கடப்பட்டது போல நெளிந்தான்.
ஸ்பேட் கோபத்துடன் பார்த்தார். “சரி, அவர் இறந்துவிட்டாரா அல்லது யாரையாவது கொன்றுவிட்டாரா?” என்று எரிச்சலுடன் கேட்டார்.
டண்டி அவனது முகத்தை ஸ்பேட்டின் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து, “எதனால் அப்படி நினைக்கிறாய்?” என்றான்.
ஸ்பேட் “பிலிஸ்ஸை பார்க்க வந்திருக்கிறேன். வாசலிலேயே இரண்டு கொலைகளைத் துப்பறியும் போலீசார் என்னை நிறுத்திவிட்டார்கள். உள்ளே நீங்கள் எல்லாம் ரம்மி விளையாடுகிறீர்கள் என்று நினைக்க வேண்டுமா?” என்றார்.
“நிறுத்து, சாம், “ என்று சலித்துக் கொண்டே சொன்ன டாம், இருவரையும் பார்க்காமல், “அவன் இறந்துவிட்டான்” என்றான்.
“கொலையா?”
டாம் மெதுவாகத் தலையை ஆட்டிக் கொண்டே, “உனக்கு என்ன தெரியும்?”
ஸ்பேட் குரலில் எந்த மாற்றமும் இல்லாமல், “என்னை இன்று மதியம் – நான்கு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் போது – தொலைபேசியை வைத்துவிட்டு என்னுடைய கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன் – அவரை யாரோ துரத்துவதாகத் தொலைபேசியில் சொன்னார். என்னை உடனே வரச் சொன்னார். அவர் சொன்னது உண்மை போலத்தான் இருந்தது.” ஒரு கையை ஆட்டிக் கொண்டு, “இதோ வந்து விட்டேன்.”
“யாரென்று சொல்லவில்லையா?” டண்டி கேட்டான்.
ஸ்பேட் தலையை ஆட்டினார். “இல்லை. யாரோ தன்னைக் கொல்லப் போவதாகச் சொன்னதாகவும், தான் அதை நம்புவதால், என்னை உடனே கிளம்பி வரச் சொன்னார்.”
“அவன் வேறொன்றும்…?” என்று டண்டி வேகமாக ஆரம்பித்தார்.
“வேறெதுவும் அவர் சொல்லவில்லை. நீங்கள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்கிறீர்களா?”
“உள்ளே வந்து, பாருங்கள்” என்று டண்டி சொன்னார்.
அவர்கள் முன்னறையைத் தாண்டி ஒரு கதவின் வழியாகப் பச்சையும், ரோஸ் வண்ணமும் அடித்த அறையில் நுழைந்தார்கள்.
அங்கிருந்த சிறிய கண்ணாடி மேசையின் அருகில் வெள்ளையாக ஒரு பொடியை தூவி கொண்டிருந்த ஒருவர், “ஹலோ, சாம்!” என்றார்.
ஸ்பேட்டும் “ஹலோ பல்ஸ்!” என்று சொல்லிவிட்டு, ஜன்னலுக்கு அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவரை நோக்கி தலையை அசைத்தார்.
கொலையுண்டவன் வாயைத் திறந்து கொண்டு கீழே கிடந்தான். அவனது சில உடைகள் அகற்றப்பட்டிருந்தன. அவனது தொண்டை கருப்பாகவும், வீக்கமாகவும் இருந்தது. அவனது வாயின் ஓரத்தில் துருத்திக் கொண்டிருந்த அவனது நாக்கு நீல நிறத்தில் இருந்தது. உடையில்லாமல் இருந்த அவனது மார்பு பகுதியில், இதயத்தின் மீது நட்சத்திரம் ஒன்று கறுப்பு மையில் வரையப்பட்டு, அதன் நடுவே ‘T’ என்ற எழுத்து இருந்தது.
இறந்து கிடந்தவனைச் சிறிது நேரம் ஸ்பேட் பார்த்துக் கொண்டிருந்தார். “இப்படியேதான் இருந்தாரா?” என்று கேட்டார்.
“கிட்டத்தட்ட” என்ற டாம், “கொஞ்சம் நகற்றி இருக்கிறோம்.” மேசையில் இருந்த சட்டை, பனியன், கோட் முதலியவற்றைச் சுட்டிக் காட்டி, “இவையெல்லாம் கீழே கிடந்தன”
ஸ்பேட் தாடையைத் தடவினார். “எப்போது?”
டாம், “எங்களுக்கு நாலு-இருபதிற்குத் தெரியும். அவரது மகள் தொலைபேசினாள்” என்று அருகில் மூடியிருந்த கதவைக் காட்டி, “அவளையும் பார்க்கலாம்.”
“எதாவது தெரியுமா?”
“யாருக்கு தெரியும்? அவளுடன் பேசுவது எளிதாக இல்லை.” என்று டண்டியை நோக்கி திரும்பி, “திரும்பப் பேச முயற்சிக்கலாமா?”
டண்டி தலையை ஆட்டினார். ஜன்னல் அருகில் இருந்த மனிதன் ஒருவனிடம் “அவரது பேப்பர்களை எடுத்துப் பார்க்க ஆரம்பியுங்கள். யாரோ அவரை மிரட்டியிருக்கிறார்கள்.”
மாக் பதிலுக்கு “சரி” என்றான். தலையில் தொப்பியை சரி செய்து கொண்டு, அறையின் இன்னொரு மூலையில் இருந்த பெரிய அலமாரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
இப்போது முன்னறையில் இருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க, பருமனான மனிதன் ஒருவன் கருப்பு தொப்பியணிந்து உள்ளே வந்தான். “ஹலோ சாம்” என்று சொல்லிவிட்டு, டண்டியை நோக்கி “இரண்டரை மணிக்கு யாரோ பார்க்க வந்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் இருந்திருப்பது போலத் தெரிகிறது. நாற்பது அல்லது நாற்பத்தியைந்து வயது இருக்கும். பெயர் தெரியவில்லை. லிப்ட் இயக்கும் பையனிடம் இருந்து இதைத் தெரிந்து கொண்டேன்.“
“ஒரு மணி நேரம்தான் என்று நன்றாகத் தெரியுமா?” என்று டண்டி கேட்டார்.
வந்தவன் தலையை இல்லை என்பது போல ஆட்டினான். “மூன்றரைக்கு அவன் வெளியே சென்று விட்டதாக பையன் தெளிவாகச் சொல்கிறான். மதிய பத்திரிகைகள் வருவதற்கு முன்பே அவன் இறங்கி சென்றுவிட்டதாகக் கூறுகிறான்” தொப்பியை சிறிது பின்னே தள்ளி, தலையைச் சொறிந்து கொண்டான். தன்னுடைய விரல்களால் இறந்து கிடந்தவனின் மார்பை சுட்டிக் காட்டி, “இதற்கு என்னதான் அர்த்தம்?”
யாரும் பதில் சொல்லவில்லை. டண்டி “லிப்ட் பையனால் அவனை அடையாளம் காட்ட முடியுமா?”
“காட்ட முடியும் என்கிறான். ஆனால் இதற்கு முன் அவனைப் பார்த்ததும் இல்லை என்றும் சொல்கிறான்.” இறந்து கிடந்தவனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, “அவர் பேசிய கடைசித் தொலைபேசி எண்களை அந்தப் பெண் எடுத்துக் கொண்டிருக்கிறாள். எப்படி இருக்கிறீர்கள், சாம்?”
ஸ்பேட் பதிலுக்கு நன்றாக இருப்பதாகக் கூறினார். “அவரது சகோதரரும் பருமனாகவும், நாற்பது, நாற்பத்தியைந்து வயது உடையவர்.” என்று மெதுவாகக் கூறினார்.
டண்டியின் கண்கள் பிரகாசமாக இருந்தன. “அதனால் என்ன?”
“கிரேஸ்டோன் மோசடி நினைவிருக்கிறதா? அதில் இருவருமே சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால் மாக்ஸ் தன்னுடைய குற்றத்தையும் தியடோர் மீது சுமத்திவிட்டார். சான் குவென்டின் சிறையில் பதினான்கு வருடங்கள் கிடைத்தது.”
டண்டி மெதுவாகத் தலையைப் புரிந்தது போல ஆட்டினார். “இப்போது நினைவிற்கு வருகிறது. எங்கே இருக்கிறான் அவன்?”
ஸ்பேட் தோளை குலுக்கிக் கொண்டு, சிகரெட்டை பற்ற வைத்தார்.
டண்டி, டாமை முழங்கையால் இடித்தார். “எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடி”
டாம், “சரி, ஆனால் அவன் மூன்றரைக்கு வெளியே சென்றுவிட்டான் என்றால், இவர் மூன்று ஐம்பத்தைந்து வரை உயிரோடு இருந்திருக்க…”
“திரும்பவும் வர முடியாதபடி காலையும் உடைத்து கொண்டான்!!” என்று இன்னொருவன் சாதாரணமாக சொன்னான்.
“கண்டுபிடி” என்று டண்டி திரும்பவும் சொன்னார்.
மற்றவன் தலையை ஆட்டிக் கொண்டு, வெளியே சென்றான்.
அலமாரியில் தேடிக் கொண்டிருந்தவன், “ஓ, ஓ!” என்று ஒரு கையில் தபால் உறையோடும், இன்னொரு கையில் சில தாள்களோடும் திரும்பினான்.
“என்ன?” என்று டண்டி கையை நீட்டினார்.
அவன் மறுபடியும் “ஓ, ஓ!” என்று சொல்லிவிட்டு அவரிடம் தாள்களைக் கொடுத்தான்.
ஸ்பேட், டண்டியின் தோளின் மீதாக எட்டிப் பார்த்தார்.
அந்தத் தாளில் சாதாரணக் கையெழுத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.
இது உன்னை அடையும்போது, என்னிடம் இருந்து உன்னால் தப்பிக்கமுடியாது – இந்த முறை. நம்முடைய கணக்கை நேர் செய்து கொள்வோம் – கடைசி முறையாக.
கையெழுத்திற்குப் பதிலாக, இறந்து கிடந்தவரின் மார்பில் இருந்தது போல நட்சத்திரத்திற்குள் ‘T’ என்று போட்டிருந்தது.
மீண்டும் டண்டி கையை நீட்ட, அவரிடம் தபால் உறை கொடுக்கப்பட்டது. அதன் முத்திரை பிரெஞ்சு மொழியில் இருந்தது. முகவரி தட்டச்சுச் செய்யப்பட்டிருந்தது.
மாக்ஸ் பிலிஸ்.
ஆம்ஸ்டர்டம் அபார்ட்மெண்ட்ஸ்
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
யு.எஸ்.ஏ
“பாரிஸில் முத்திரையிடப்பட்டு இருக்கிறது.” என்றவர், “இந்த மாதம் இரண்டாம் தேதி” கைகளில் வேகமாகக் கணக்கிட்டார். “இன்றுதான் வந்திருக்க வேண்டும்.” கடிதத்தை மெதுவாக மடித்து, உறையில் போட்டு, தன்னுடைய கோட் பையில் போட்டுக் கொண்டார். “இன்னமும் தேடு” என்று கடிதத்தைக் கொடுத்தவனிடம் சொன்னார்.
அவன் தலையை ஆட்டிவிட்டு, மீண்டும் அலமாரியை நோக்கி சென்றான்.
டண்டி, ஸ்பேட்டை பார்த்தார். “என்ன நினைக்கிறீர்கள்?”
ஸ்பேட் வாயில் இருந்த சிகரெட் அவர் பேசப்பேச மேலும் கீழுமாக அசைந்தது. “எதுவோ சரியில்லை. எதுவுமே சரியில்லை”
டாம் தொலைபேசியைக் கீழே வைத்தார். “போன மாதம் பதினைந்தாம் தேதியே விடுதலை அடைந்துவிட்டானாம். எங்கே இருக்கிறான் என்று தேட சொல்லியிருக்கிறேன்.”
ஸ்பேட் தொலைபேசிக்கு அருகில் சென்று, ஒரு நம்பரை அழைத்து, டாரெல்லிடம் பேச வேண்டும் என்று சொன்னார். “ஹலோ, ஹாரி, சாம் ஸ்பேட் பேசுகிறேன்… நல்லா இருக்கிறேன். லில் எப்படி இருக்கிறாள்?… ஆமாம்… கேள், ஹாரி, நட்சத்திரத்திற்கு நடுவில் ‘T’ என்று எழுதுவதற்கு என்ன அர்த்தம்?… என்ன?… ஒவ்வொரு எழுத்தாகச் சொல்… ஆமாம்… உடலின் மீது எழுதியிருந்தால்?… எனக்கும்தான்… ஆமாம், நன்றி. நான் பார்க்கும் போது கட்டாயம் சொல்கிறேன்… ஆமாம், பேசு… நன்றி…”
அவர் தொலைபேசியில் இருந்து திரும்பியதை டாமும், டண்டியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “அவனுக்குச் சில விஷயம் தெரிந்திருக்கும். நட்சத்திரத்திற்கு நடுவே கிரேக்க எழுத்து ‘தவ்’ என்பதை மந்திரவாதிகள் பயன் படுத்துவர்களாம். ரோசிக்ரூஸின்ஸ் கூடப் பயன் படுத்துவர்களாம்”
“ரோசிக்ரூஸின்ஸ் என்றால்?” என்றார் டாம்.
“தியோடரின் முதல் எழுத்து கூட ‘T’தான்” என்றார் டண்டி.
ஸ்பேட் கவனமில்லாமல் “ஆனால் கையெழுத்திடுவது என்று வந்துவிட்டால், முழுப் பெயரையும் எழுத வேண்டியதுதானே.” என்றார்.
டண்டி தலையை ஆட்டினார்.
கொலையுண்டவனின் உடைகளைப் பார்த்துக் கொண்டே, “அவற்றில் எதுவும் இருந்ததா?” என்றார் ஸ்பேட்.
“எல்லாம் மேசை மீதுதான் இருக்கிறது.” என்றார் டண்டி.
ஸ்பேட் மேசைக்கு அருகில் சென்று, அங்கிருந்த கைக்கடிகாரம், சங்கிலி, சாவிகள், பர்ஸ், பணம், பென்சில், கைக்குட்டை, கண்ணாடிக்கூடு முதலியவற்றைத் தொடாமல் பார்த்தார். ஆனால் உடைகளை ஒவ்வொன்றாக மெதுவாக எடுத்து பார்த்தார். உடைகளுக்கு அருகில் ஒரு நீலநிற டை இருந்தது. “இதை யாரும் அணியவில்லை.” என்றார்.
டண்டி, டாம், இதுவரை ஜன்னலின் அருகில் சத்தமில்லாமல் நின்று கொண்டிருந்த துணை விசாரணை அதிகாரி, அருகே வந்து அந்த நீலநிற டையைப் பார்த்தார்கள்.
டாமும், டண்டியும் முனகி கொண்டே திட்டிக் கொண்டிருந்தார்கள். ஸ்பேட் அந்தக் கழுத்து டையை எடுத்துத் திருப்பிப் பார்த்தார். அதில் இருந்த பட்டையில் லண்டன் தையல்காரரின் குறி குறிக்கப்பட்டிருந்தது.
ஸ்பேட் மகிழ்ச்சியாக “சரிதான், சான் பிரான்சிஸ்கோ, பாயிண்ட் லோமா, சான் ஹோசே, பாரிஸ், லண்டன்.”
டண்டி கோபமாகப் பார்த்தார்.
வெளியே சென்றிருந்தவன் உள்ளே வந்தான். “மூன்றரைக்குத்தான் மதிய பத்திரிகைகள் வந்திருக்கிறது. “ என்றான். அவனது கண்களை விரித்துக் கொண்டு, “என்ன ஆச்சு?” அறையின் உள்ளே நடந்து கொண்டே, “அவன் திரும்பவும் உள்ளே வந்ததை யாரையும் பார்க்கவில்லை.” என்று அந்த டையை உற்றுப் பார்த்தான். டாம் “புத்தம் புதிய டை” என்றார்.
டண்டி, ஸ்பேடை நோக்கி திரும்பினார். “என்ன குழப்பம்!” என்று சொல்லிவிட்டு, “அவனது சகோதரனுக்கு இவனைப் பிடிக்காது. இப்போதுதான் சிறையில் இருந்து வந்திருக்கிறான். அவனைப் போன்ற ஒருவன் மூன்றரைக்கு வெளியே சென்றிருக்கிறான். இருபத்தி ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர், தன்னை யாரோ மிரட்டுவதாக உங்களுக்குத் தொலைபேசி செய்திருக்கிறான். அதன் பின்னர் அரைமணி நேரத்திற்குள், அவனுடைய மகள் வந்த போது, அவன் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்து கிடக்கிறான். “ என்று சடலத்தின் மீது தன்னுடைய விரல்களைக் கொண்டு குத்திக் “சரியா?” என்றார்.
“யாரோ ஒரு ஆண்தான் கழுத்தை நெறித்திருக்க வேண்டும்.” என்றான் உள்ளே வந்தவன். “கைகள் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்”
“சரி” என்று டண்டி மீண்டும் ஸ்பேட்டை நோக்கி திரும்பினார். “மிரட்டலாக ஒரு கடிதம் இருக்கிறது. அதைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். இல்லை அவனது சகோதரன் மிரட்டியிருக்க வேண்டும். கதை சொல்லக்கூடாது. நமக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லுவோம். என்ன தெரியுமென்றால் -”
அலமாரியில் தேடிக் கொண்டிருந்தவன், “இன்னொன்று இருக்கிறது.”
மேசையின் அருகில் இருந்த ஐவரும் அவனை நோக்கி திரும்பினார்கள்.
அவர்கள் பார்ப்பதை கவனிக்காதது போல, அவன் வாசிக்க ஆரம்பித்தான்.
“அன்புள்ள பிலிஸ்
என்னுடைய பணம் வேண்டும் என்று நான் கேட்பது இதுவே கடைசி முறை. அடுத்த மாத ஆரம்பத்தில், முழுத் தொகையும் எனக்கு வேண்டும். இல்லையென்றால், நான் என்ன செய்வேன் என்பதை உனக்கு நன்றாகவே தெரியும். விளையாடுகிறேன் என்று மட்டும் நினைக்காதே.
உண்மையுள்ள,
டேனியல் டால்போட்”
அவர் சிரித்தார். “இன்னொரு ‘T’” உறையை எடுத்துப் பார்த்தார். “போன மாதம் 25ம் தேதி சான் டியாகோ நகரில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.” மீண்டும் சிரித்துக் கொண்டே “இன்னொரு நகரம்”
“பாயிண்ட் லோமாவும் அந்தப் பக்கம்தான் இருக்கிறது.” என்றார் ஸ்பேட்.
டண்டியுடன் சென்று கடிதத்தைப் பார்த்தார். நல்ல தரமான தாளில், நீல மையில் எழுதப்பட்டிருந்தது. முகவரியும் அப்படியே எழுதப்பட்டிருந்தது. சாய்வான இந்த எழுத்துக்கள் முந்தைய கடிதத்தின் கையெழுத்தில் இருந்து வெகுவாக வேறுபட்டிருந்தது.
கேலியாக “இப்போதுதான் நாம் சரியான பாதையில் செல்கிறோம்” என்று ஸ்பேட் சொன்னார்.
டண்டி பொறுமையில்லாமல் “நமக்குத் தெரிந்ததை மட்டும் பேசுவோம்.” என்றார்.
“சரி, அது என்ன?” என்றார் ஸ்பேட்.
பதில் வரவில்லை.
ஸ்பேட் புகையிலையையும், அதைச் சுருட்ட சிகரெட் தாள்களையும் எடுத்துக் கொண்டார். “அவரது மகளிடம் பேசலாம் என்று யாரோ சொன்னார்களே?”
“பேசலாம்” என்று டண்டி திரும்பினார். தரையில் கிடந்த பிணத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்து, அங்கு நின்று கொண்டிருந்த குட்டையான மனிதனிடம் “முடிந்துவிட்டதா?” என்றார்.
“முடிந்தது” என்றார் அவர்.
டண்டி, டாமிடம் “இங்கிருந்து அகற்றிவிடு” என்று சொல்லிவிட்டு, இன்னொருவனிடன் “அந்தப் பெண்ணிடம் பேசியவுடன், லிப்ட் பையன்களிடம் பேச வேண்டும்.” என்றார்.
மூடியிருந்த கதவின் அருகில் சென்று, கதவை தட்டினார்.
“என்ன வேண்டும்?” என்று ஒரு கடுமையான பெண் குரல் கேட்டது.
“லெப்டினென்ட் டண்டி. மரியமிடம் பேச வேண்டும்.”
ஒரு நொடி அமைதிக்கு பின்னர், “உள்ளே வாருங்கள்” என்று குரல் கேட்டது.
டண்டி கதவைத் திறந்தார். கருப்பும், வெள்ளையுமாக வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த அறைக்குள் ஸ்பேட் உள்ளே நுழைந்தார். அங்கே படுக்கையில் படுத்திருந்த இளம்பெண் ஒருவளுக்கு அருகில், நாற்காலியில் பெரிய உருவமும், கருப்பும், வெள்ளையுமான உடை அணிந்த அவலட்சணமான பெண்ணொருத்தி உட்கார்ந்திருந்தாள்.
படுக்கையில் படுத்திருந்த பதினெட்டு வயதுடைய பெண்ணொருத்தி, தலையணையில் கைகளை ஊன்றியபடி தன்னுடைய முகத்தைத் தாங்கியவாறு படுத்துக் கொண்டு, நாற்காலியில் இருந்த பெண்மணியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பழுப்பு நிற உடையை அணிந்திருந்தாள். அவளது தங்கநிற முடி குட்டையாக வெட்டப்பட்டு, அவளது முகம் மிகவும் அழகாகவும், ஒன்று போலவும் இருந்தது. அறைக்குள் நுழைந்த இருவரையும் அவள் பார்க்கவேயில்லை.
டண்டி முதலில் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேசினார். “திருமதி, ஹூப்பர், உங்களிடமும் இரண்டு, மூன்று கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. நீங்கள்தான் பிலிஸ்ஸின் வேலைக்காரப் பெண், இல்லையா?”
அந்தப் பெண், “ஆமாம்” என்றாள். அவளது குரல் கொஞ்சம் கடுமையாக இருந்தது. அவளது ஆழமான கண்கள், அவளது மடியில் வைத்திருந்த கைகளின் அளவு போன்றவை அவளது பலத்தைத் தெளிவாகக் கூறின.
“உனக்கு என்ன தெரியும்?”
“எனக்கு எதுவும் தெரியாது. இன்று காலையே என்னுடைய மருமகனின் இறுதி சடங்கிற்காக ஓக்லாண்ட் செல்ல விடுமுறை பெற்று, கிளம்பி விட்டேன். நான் திரும்பிய போது, நீங்கள் இருவரும் இங்கு இருந்தீர்கள்.”
“நடந்ததைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று டண்டி கேட்டார்.
“என்ன நினைப்பது என்று எனக்குத் தெரியவில்லை.” என்றாள்.
“அவர் இப்படியாக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தது உனக்குத் தெரியுமா?”
இதுவரை திருமதி. ஹூப்பரை பார்த்துக் கொண்டிருந்த இளம்பெண், வேகமாகப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு, கண்களை விரித்துக் கொண்டு, “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள்.
“அவரை யாரோ மிரட்டியிருக்கிறார்கள். அவர் ஸ்பேடை தொலைபேசியில் அழைத்து -” ஸ்பேடை சுட்டிக் காட்டிக்கொண்டு, “தன்னை யாரோ கொலை செய்யப் போவதாக, மரணத்திற்குச் சில நிமிடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறார்”
“யார்?” என்று ஆரம்பித்தாள்.
“நாங்களும் அதைத்தான் கேட்கிறோம்.” என்ற டண்டி, “அவரை அவ்வளவு வெறுத்தவர்கள் யார்?”
ஆச்சரியமாக அவரைப் பார்த்து, “யாரும் அப்படி இல்லை -” என்றாள்.
இப்போது ஸ்பேட் குறுக்கே புகுந்து, மிகவும் மென்மையாக, ஆனால் கடுமையாக “யாரோ வெறுத்திருக்க வேண்டும்” என்றார். அவளது கவனம் அவரிடம் திரும்பியவுடன் “அவரை எவராவது மிரட்டியது உங்களுக்குத் தெரியுமா?”
அவள் இல்லை என்று சொல்வது போலத் தலையை அசைத்தாள்.
திருமதி. ஹூப்பரை நோக்கி “நீங்கள்?” என்றார்.
“இல்லை” என்று அவளும் சொன்னாள்.
மீண்டும் இளம்பெண்ணை நோக்கி “உங்களுக்கு டேனியல் டால்போட்டை தெரியுமா?” என்றார்.
“நன்றாக” என்ற அவள், “நேற்றிரவு கூட இங்கேதான் இரவு உணவு சாப்பிட்டார்.”
“யார் அவர்?”
“எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சான் டியாகோவில் இருக்கிறார் என்றும், அவரும், அப்பாவும் ஏதோ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள் என்றும்தான் எனக்குத் தெரியும். இதற்கு முன் நான் பார்த்ததில்லை.”
“அவர்களுக்குள் உறவு எப்படி இருந்தது?”
“நட்பாகத்தான் இருந்தார்கள்” என்று நெற்றியை சுருக்கிக்கொண்டு சொன்னாள்.
டண்டி இப்போது பேசினார். “உங்கள் அப்பா என்ன வியாபாரம் செய்து கொண்டிருந்தார்?”
“பணம் கடன் கொடுத்து வந்தார்.”
“டால்போட் எங்கே தங்கியிருக்கிறார்? அல்லது திரும்பச் சான் டியாகோ சென்றுவிட்டாரா?”
“எனக்குத் தெரியாது”
“அவர் எப்படி இருப்பார்?”
அவள் யோசனையுடன் “பெரிய உருவில், சிவந்த முகத்துடன், வெள்ளை முடியும், மீசையும் வைத்திருப்பார்.”
“வயதானவரா?”
“அறுபது இருக்கலாம். கட்டாயம் ஐம்பத்தைந்தாவது இருக்கும்.”
டண்டி, ஸ்பேடை பார்த்தார். ஸ்பேட் சிகரெட்டை மேசையில் இருந்த டிரேயில் அணைத்துவிட்டுக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
“நீங்கள் உங்கள் சித்தப்பாவை பார்த்து எத்தனை நாட்களாகிறது?”
“டெட் சித்தப்பாவா?” என்றவளின் முகம் சிவந்தது.
தலையை ஆட்டினார்.
“உங்களுக்குத் தெரிந்திருக்கும். சிறையில் இருந்து வெளியில் வந்த நேரத்தில் பார்த்தேன்.” என்று சொன்னாள்.
“இங்கே வந்தாரா?”
“ஆமாம்”
“உங்கள் அப்பாவை பார்க்க?”
“ஆமாம்”
“அவர்கள் இருவருக்கும் இடையில் உறவு எப்படி இருந்தது?”
கண்களை விரித்துக் கொண்டு, “இருவருமே வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் புதிதாக வியாபாரம் செய்ய அப்பா பணஉதவி செய்தார்.”
“இருவருக்கும் இடையில் நல்ல உறவுதான் இருந்ததா?”
“ஆமாம்” என்று தேவையில்லாத கேள்விக்குப் பதில் சொல்வது போலச் சொன்னாள்.
“எங்கே இருக்கிறார்?”
“போஸ்ட் தெருவில்” என்று ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தாள்.
“அதற்குப் பின், நீங்கள் அவரைப் பார்க்கவேயில்லை?”
“இல்லை. அவர் சிறையில் இருந்ததால், அதை விரும்புவதில்லை.” என்று கைகளை ஆட்டிக் கொண்டே சொன்னாள்.
இப்போது மெதுவாக அடுத்தக் கேள்வியைக் கேட்டார். “இன்று மதியம் இங்கே வந்திருந்தாரா?”
இருவருமே “இல்லை” என்று ஒன்றாகச் சொன்னார்.
அடுத்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன், கதவை யாரோ தட்டினார்கள்.
டண்டி “உள்ளே வாருங்கள்” என்றார்.
டாம் கதவை தள்ளிக் கொண்டு, “அவரது சகோதரர் வந்திருக்கிறார்” என்றார்.
“சித்தப்பா!” என்று அந்தப் பெண் முன்னே எட்டிப் பார்த்தாள்.
டாமிற்குப் பின்புறம் பருமனான மனிதர் ஒருவர் தோன்றினார். அவரது கண்கள் நீலமாகவும், உடல் மிகவும் கறுத்தும் இருந்தது.
“என்ன விஷயம், மரியம்?” என்றார்.
“அப்பா இறந்துவிட்டார்” என்று அழுதுகொண்டே சொன்னாள்.
டண்டி, டாமை நோக்கி தலையை அசைத்தவுடன், டாம், தியோடர் பிலிஸ்ஸிற்கு வழிவிட்டார்.
அவருக்குப் பின் இன்னொரு பெண் மெதுவாக, தயக்கத்துடன் உள்ளே வந்தாள். முப்பதுகளை நெருங்கி கொண்டிருந்த அவள், உயரமாகவும், தங்க தலைமுடியுடனும் இருந்தாள். அவளது முகத்தில் புத்திசாலித்தனம் தெரிந்தது. சிறிய பழுப்புநிற தொப்பியும், கம்பளி கோட்டும் அணிந்திருந்தாள்.
பிலிஸ், அவரது அண்ணன் மகளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டார்.
அழுது கொண்டிருந்த அவள், அழுகையின் ஊடே அந்த இளம்பெண்னைப் பார்த்தாள். “எப்படி இருக்கிறீர்கள், மிஸ் பாரோ?” என்றாள்.
மிஸ் பாரோ பதிலுக்கு “எனக்கு என்ன சொல்வ…”
பிலிஸ் இப்போது குறுக்கே புகுந்து “அவள் இப்போது திருமதி பிலிஸ். இன்று மதியம்தான் திருமணம் செய்து கொண்டோம்.” என்றார்.
டண்டி கோபமாக ஸ்பேடை பார்த்தார். இன்னொரு சிகரெட்டை உருட்டிக் கொண்டிருந்த ஸ்பேட் சிரிப்பது போலிருந்தது.
ஒரு நொடி ஆச்சரியத்தில் வாயடைந்திருந்த மரியம் பிலிஸ் “உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!” என்றாள்.
அவளது தோளைத் தட்டிக் கொடுத்த பிலிஸ், அவளை அன்போடு அணைத்துக் கொண்டு, ஸ்பேடையும், டண்டியையும் பார்த்தார்.
“உங்கள் சகோதரர் இன்று மதியம் இறந்துவிட்டார்” என்ற டண்டி, “கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார்.” என்றார்.
திருமதி பிலிஸ்சின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது. பிலிஸும் மரியத்தை இன்னமும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாலும், அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. புரியாதது போல “கொலையா?” என்றார்.
“ஆமாம். “ என்று தன்னுடைய கோட் பைகளுக்குள் கையை விட்டுக்கொண்டு டண்டி “நீங்களும் இன்று மதியம் இங்கு வந்திருக்கிறீர்கள்.” என்றார்.
தியோடர் பிலிஸ்ஸின் முகம் சிறிது வெளிறினாலும், “ஆமாம்” என்று நிதானமாகவே சொன்னார்.
“எவ்வளவு நேரம் இருந்தீர்கள்?”
“ஒரு மணி நேரம். இங்கே இரண்டரை மணிக்கு வந்திருப்பேன் -” என்று தன்னுடைய மனைவியைப் பார்த்து திரும்பினார். “உனக்கு நான் தொலைபேசிய போது, மூன்றரை இருக்குமா?”
“ஆமாம்” என்றாள்.
“அப்போது கிளம்பிவிட்டேன்.”
“நீங்கள் வருவது முன்கூட்டியே அவருக்குத் தெரியுமா?”
‘இல்லை. நான் அவரது அலுவலகத்திற்குத் தொலைபேசினேன். வீட்டிற்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். நானும் எலிசும் கிளம்புவதற்கு முன் அவரைப் பார்க்க நினைத்தேன். எங்கள் திருமணத்திற்கும் வரச்சொன்னேன். முடியாது என்று சொல்லிவிட்டார். யாரையோ எதிர்பார்ப்பதாகச் சொன்னார். நானும் அவரும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எனவே நான் எலிசை நேராக முனிசிபல் அலுவலகத்திற்கு வரசொல்லி தொலைபேசியில் சொல்லி விட்டேன்.”
சிறிது யோசித்துவிட்டு, டண்டி “எப்போது?”
“எப்போது அலுவலகத்தில் சந்தித்தோம் என்றா?” என்று தன்னுடைய மனைவியைப் பார்த்தார். “மூன்றே முக்கால் மணி இருக்கும்” என்றாள் அவள். “நான் முதலில் வந்துவிட்டேன். எனவே மணியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.”
பிலிஸ் தெளிவாகப் பேசினார். “நான்கு மணி ஆகி சில நிமிடங்கள் கழித்தே திருமணம் நடந்தது. பத்து நிமிடங்கள் நாங்கள் நீதிபதி வைட்பீல்டிற்காகக் காத்திருந்தோம். அவர் இன்னொரு வழக்கை முடித்து வைத்துவிட்டு, எங்கள் திருமணத்தை நடத்தினார். நீங்கள் விசாரித்துக் கொள்ளலாம் – உயர் நீதி மன்றம் – இரண்டாம் பகுதி என்று நினைக்கிறேன். “
ஸ்பேட் திரும்பி, டாமை நோக்கி “சரிபார்த்து விடுங்கள்” என்றார்.
டாமும் “சரி” என்று சொல்லிவிட்டு, வெளியே சென்றார்.
“அப்படியென்றால், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது, பிலிஸ்.” என்ற டண்டி. “ஆனால் விசாரணைக்கு நான் இந்தக் கேள்விகளைக் கேட்கத்தான் வேண்டும். உங்கள் சகோதரர் யாரை எதிர்பார்த்திருந்தார் என்று சொன்னாரா?”
“இல்லை”
“யாரோ அவரை மிரட்டுவது பற்றிச் சொல்லி இருக்கிறாரா?”
“இல்லை. அவரது விஷயங்களை எல்லாம் அவர் யாரிடமும் பேச மாட்டார். என்னிடமும் கூட. அவரை மிரட்டினார்களா?”
தண்டின் முகம் கடுமையாக இருந்தது. “உங்களுக்கும் அவருக்கும் இருந்த உறவு எப்படிப்பட்டது?”
“நட்பாகத்தான் இருந்தோம்.”
“நன்றாகத் தெரியுமா?” என்ற டண்டி “உங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லையா?”
தியோடர் பிலிஸ், தன்னுடைய அண்ணன் மகளைத் தன்னுடைய பிடியில் இருந்து விடுவித்தார். அவரது முகம் இன்னமும் வெளுத்து, மஞ்சளாக இருந்தது. “நான் சான் குவென்டின் சிறையில் இருந்தது இங்கே எல்லோருக்கும் தெரியும். நீங்கள் வெளிப்படையாகவே கேட்கலாம்.”
“அதையேதான் கேட்கிறேன்.” என்றார் டண்டி.
பிலிஸ் எழுந்து நின்றார். பொறுமையில்லாத குரலில் “என்ன? சிறையில் இருந்ததற்கு என் சகோதரன் மீது கோபம் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறீர்களா? எதற்காக? நாங்கள் இருவரும்தான் குற்றம் செய்தோம். அவர் வெளியே வந்துவிட்டார். நான் மாட்டிக் கொண்டேன். எனக்குத் தண்டனை நிச்சயமாக இருந்தது. அவரும் என்னுடன் உள்ளே வருவதால் எந்த ஆதாயமும் இல்லை. எனவே நாங்கள் பேசியபடி, நான் உள்ளே சென்றேன். வெளியே இருந்த வேலைகளை அவர் பார்த்துக் கொண்டார். நன்றாகவே பார்த்துக் கொண்டார். அவரது வங்கிக்கணக்கை பார்த்தீர்கள் என்றால், நான் சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டாம் நாள், என்னுடைய பெயருக்கு இருபத்தியைந்து ஆயிரம் டாலர்களுக்கு அவர் கொடுத்த காசோலையைக் காணலாம். அதே நேரத்தில் நேஷனல் ஸ்டீல் கார்பொரேஷன் கம்பெனியின் 1000 பங்குகள் என்னுடைய பெயருக்கு மாற்ற பட்டிருப்பதையும் பார்க்கலாம்.”
மன்னிப்பு கேட்பது போலப் புன்னகை செய்து கொண்டு, படுக்கையில் உட்கார்ந்தார். “நீங்கள் விசாரணைதான் நடத்துகிறீர்கள்”
டண்டி அதைக் கேட்காதது போல “டேனியல் டால்போட்டை தெரியுமா?”
பிலிஸ் “இல்லை” என்றார்.
அவரது மனைவி “எனக்குத் தெரியும். அதாவது நான் அவரைப் பார்த்திருக்கிறேன். நேற்று அலுவலகத்திற்கு வந்தார்.”
டண்டி அவளைக் கவனமாக மேலும், கீழும் பார்த்துவிட்டு, “ எந்த அலுவலகம்?” என்றார்.
“நான் – வந்து – நான் திரு. பிலிஸின் காரியதரிசி”
“இறந்து போன மாக்ஸ் பிலிஸ்ஸிற்கா?”
“ஆமாம். நேற்று மதியம் டேனியல் டால்போட் அவரைப் பார்க்க வந்தார்.”
“என்ன நடந்தது?”
அவள், அவளது கணவனைப் பார்த்தாள். “உனக்கு ஏதாவது தெரியுமென்றால், அதைச் சொல்லிவிடு”
“பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. இருவரும் முதலில் கோபமாகப் பேசிக் கொள்வது போல இருந்தது. ஆனால் அவர்கள் ஒன்றாக வெளியே வந்த போது, சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்கள் வெளியே செல்வதற்கு முன், திரு. பிலிஸ் என்னை அழைத்து, எங்கள் கணக்காளர் ட்ராப்பேரிடம் டால்போட்டின் பெயரில் ஒரு காசோலை தரச் சொன்னார்.”
“அப்படியா?”
“ஆமாம். நான்தான் அவரிடம் சென்று கொடுத்தேன். ஏழாயிரத்து ஐநூறு டாலர்களோ, என்னவோ”
“எதற்காக என்று தெரியுமா?”
“இல்லை” என்று தலையை ஆட்டிக் கொண்டே சொன்னாள்.
“நீங்கள் பிலிஸ்ஸின் காரியதரிசி என்றால், அவருக்கு டால்போட்டுடனான உறவு என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.” என்றார் டண்டி.
“இல்லை, தெரியாது. நான் நேற்றைக்கு முன் அவரைப் பார்த்ததே கிடையாது.”
டண்டி ஸ்பேடை பார்த்தார். ஸ்பேடின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கோபமாகப் பார்த்துவிட்டு, படுக்கையில் அமர்ந்திருந்தவரிடம் அடுத்தக் கேள்வியைக் கேட்டார். “நீங்கள் அவரைக் கடைசியாகப் பார்த்த போது, அவர் என்ன மாதிரியான கழுத்து டையை அணிந்திருந்தார்?”
பிலிஸ் விழித்தார். நீண்ட யோசனைக்குப் பின்னர், “பச்சை நிறம் என்று – நான் சரியாகப் பார்த்தேனா என்று தெரியவில்லை. எதற்காக?”
திருமதி. பிலிஸ் “வேறு வேறு பச்சை நிறங்களில் கோடு போட்ட டை. அதைத்தான் இன்று அலுவலகத்தில் அணிந்திருந்தார்.” என்றாள்.
“அவரது டைகள் எங்கே இருக்கும்?”
“அவரது படுக்கையறையில். அலமாரியில். வாருங்கள், காட்டுகிறேன்.”
டண்டியும், புதுமணத் தம்பதிகளும் வெளியே சென்றார்கள்.
ஸ்பேட் மேசையில் தன்னுடைய தொப்பியை வைத்துவிட்டு, மரியமிடம் “நீங்கள் எப்போது வெளியே சென்றீர்கள்?” என்று அவளது கால்பக்கமாகப் படுக்கையில் அமர்ந்து கொண்டே கேட்டார்.
“இன்றா? ஒரு மணி இருக்கும். ஒருமணிக்கு வெளியே சாப்பிட சென்றேன். அங்கிருந்து கொஞ்சம் ஷாப்பிங் செய்யச் சென்றேன். அப்புறம் – “
“அப்புறம் வீட்டிற்கு எப்போது வந்தீர்கள்?” என்று சிநேகிதமான குரலில் கேட்டார்.
“நான்கு மணிக்கு மேல் இருக்கும். “
“என்ன நடந்தது?”
“அப்பா அங்கே கீழே கிடந்தார் – நான் தொலைபேசினேன் – கீழேயா அல்லது காவல்துறைக்கா என்று நினைவில்லை. அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தன்னிலைக்கு வந்த போது, இந்த மனிதர்களும், திருமதி ஹூப்பரும் இருந்தார்கள்.” என்று அவரது முகத்தைப் பார்த்து சொன்னாள்.
“டாக்டருக்கு தொலைபேசினீர்களா?”
கண்களைக் கீழே பார்த்துக் கொண்டு “இல்லை”
“ஆமாம், தேவையில்லை. அவர் இறந்துவிட்டதுதான் தெரியுமே!” என்று சாதாரணமாகச் சொல்வது போலச் சொன்னார்.
அவள் அமைதியாக இருந்தாள்.
“அவர் இறந்துவிட்டது உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“அவர் இறந்துவிட்டார்” என்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார்.
“ஆமாம். நான் என்ன கேட்கிறேன் என்றால், நீங்கள் தொலைபேசுவதற்கு முன் உறுதி செய்து கொண்டீர்களா?”
அவள் தொண்டையில் கைகளை வைத்துக் கொண்டே “என்ன செய்தேன் என்று நினைவில்லை.” என்று சொன்னாள். “அவர் இறந்துவிட்டார் என்று மட்டும் தெரியும்.”
அவரும் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டினார். “அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிந்துதான் காவல்துறைக்குத் தொலைபேசினீர்களா?”
கைகளைக் கோர்த்துக் கொண்டு அவள் “அப்படித்தான் நினைக்கிறேன். அப்போது என்ன நினைத்தேன் அல்லது செய்தேன் என்று நினைவில்லை”
ஸ்பேட் முன்னால் சாய்ந்து, குரலைத் தாழ்த்திக் கொண்டு,”நான் காவல்துறையைச் சேர்ந்தவன் இல்லை. உங்கள் தந்தைதான் என்னை வரச் சொன்னார் – ஆனால் சில நிமிட தாமதத்தால் என்னால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே ஒருவிதத்தில் நான் உங்களுக்கும் வேலை பார்க்கிறவன்தான். போலீசால் செய்யமுடியாது என்று நீங்கள் நினைக்கும் எதையாவது நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் – “ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே டண்டியும், மற்றவர்களும் அறைக்குள் நுழையவே, ஸ்பேட் அப்படியே நிறுத்திக் கொண்டார். “என்ன ஆச்சு?”
“பச்சை டை அங்கே இல்லை.” என்ற டண்டி, ஸ்பேடையும், அந்தப் பெண்ணையும் சந்தேகத்துடன் பார்த்தார். “நாம் பார்த்த நீல நிற டை இப்போதுதான் இங்கிலாந்தில் இருந்து வாங்கி வந்தது என்று திருமதி. ஹூப்பர் சொன்னார்.”
“எதற்காக டையைப் பற்றிக் கேட்கிறீர்கள்?” என்றார் பிலிஸ்.
டண்டி கோபத்துடன், “நாங்கள் அவரது பிணத்தைப் பார்த்த போது, அவர் உடையை மாற்றிக் கொண்டிருந்தது போல இருந்தது. அவரது உடைகளுடன் இருந்த டையை அவர் அணியவேயில்லை.”
“அவரைக் கொன்றவர்கள் வந்த போது, அவர் உடையை மாற்றிக் கொண்டிருந்தார், அவர் உடையை மாற்றுவதற்குள் கொல்லப்பட்டுவிட்டாரா?”
டண்டியின் முகத்தில் கோபம் இன்னமும் அதிகமாகத் தெரிந்தது. “ஆமாம். ஆனால் அவர் அணிந்திருந்த பச்சை டை என்னவானது? அதைத் தின்றுவிட்டாரா?”
ஸ்பேட் குறுக்கிட்டார். “அவர் உடைகளை மாற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரது காலரைப் பார்த்தால், அவரது கழுத்து நெறிப்பட்ட போது, அவர் அதை அணிந்துதான் இருக்க வேண்டும்.”
டாம் கதவிற்கு அருகில் வந்துவிட்டார். “எல்லாம் சரியாக இருக்கிறது.” என்று டண்டியிடம் சொன்னார். “நீதிபதியும், அவரது டவாலியும், அவர்கள் மூன்றே முக்கால் மணிக்கே வந்துவிட்டார்கள் என்றும், அதற்குப் பத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர்த் திருமணம் நடைபெற்றதாகவும் சொன்னார்கள். டவாலியை இங்கே வந்து, இவர்களை அடையாளம் காட்டவும் சொல்லி இருக்கிறேன்.”
தலையைத் திருப்பாமலேயே “சரி” என்று டண்டி சொன்னார். சட்டைப்பையில் இருந்த அந்த மிரட்டல் கடிதத்தை எடுத்து, அதன் நட்சத்திரத்திற்குள் ‘T’ என்ற கையெழுத்து மட்டும் தெரியுமாறு மடித்து, “இது என்னவென்று தெரிகிறதா?” என்று அனைவரிடமும் கேட்டார்.
மரியம் படுக்கையில் இருந்து எழுந்து வந்து அதைப் பார்த்தாள். அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள்.
“யாருக்காவது எதாவது தெரியுமா?” என்றார் டண்டி.
“திரு. பிலிஸ்சின் மார்பில் இது போல இருந்தது – ஆனால்…” என்று திருமதி, ஹூப்பர் மட்டும் சொன்னாள். மற்றவர்கள் “இல்லை” என்றார்கள்.
“இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?”
அனைவரும் இல்லை என்றார்கள்.
டண்டி அவர்களிடம் “சரி. இங்கேயே இருங்கள். இன்னமும் சிறிது நேரம் கழித்து, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டி இருக்கிறது.” என்றார்.
“ஒரு நிமிடம். திரு. பிலிஸ், உங்கள் புது மனைவியை எவ்வளவு நாட்களாக உங்களுக்குத் தெரியும்?” என்றார் ஸ்பேட்.
பிலிஸ் ஸ்பேட்டை வினோதமாகப் பார்த்தார். “சிறையில் இருந்து வந்ததில் இருந்துதான். ஏன்?”
“போன மாதத்தில் இருந்துதான், இல்லையா?” என்று ஸ்பேட் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு “உங்கள் சகோதரர் வழியாகவா?” என்று கேட்டார்.
“ஆமாம், அவருடைய அலுவலகத்தில்தான். ஏன்?”
“இன்றைக்கு முனிசிபல் அலுவலகத்தில், நீங்கள் இருவரும் எல்லா நேரங்களிலும் ஒன்றாகவே இருந்தீர்களா?”
“ஆமாம், அப்படித்தான்” என்று பிலிஸ் கூர்மையாகச் சொல்லிக் கொண்டு “என்ன சொல்ல வருகிறீர்கள்?”
ஸ்பேட் நட்புடன் புன்னகைத்துக் கொண்டு, “நான் கேள்விகளைக் கேட்கத்தான் வேண்டும்.” என்றார்.
பிலிஸும் சிரித்துக் கொண்டே, “அப்ப சரி, உண்மையில் நான் சொன்னது பொய். நாங்கள் எல்லா நேரமும் ஒன்றாக இருக்கவில்லை. நான் வெளியே சிகரெட் புகைக்கச் சென்றேன். ஆனால் அங்கிருந்த கண்ணாடி கதவின் வழியாக, நான் அவளை உட்கார வைத்த இடத்தில் இருந்து அவள் நகரவே இல்லை.”
ஸ்பேடும் இப்போது மெதுவாகப் புன்னகைத்தார். “நீங்கள் கண்ணாடி வழியாகப் பார்த்த போது, அங்கிருந்து கதவு தெரிந்ததா? அது வழியாக வெளியே சென்றிருக்கலாம், அல்லவா? நீங்கள் பார்க்காமல் இருக்கும் போது அவர் வெளியே சென்றிருக்கலாமே?”
பிலிஸ்ஸின் முகத்தில் இருந்து புன்னகை அகன்றது. “நான் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வெளியில் இல்லை. அவரால் சென்றிருக்க முடியாது.”
ஸ்பேட் “நன்றி” என்று சொல்லிவிட்டு, டண்டியைத் தொடர்ந்து ஸ்பேடும் கதவை மூடிக் கொண்டு முன்னறைக்குச் சென்றார்.
டண்டி ஸ்பேடை ஓரக்கண்ணால் பார்த்தார். “எதாவது தெரிகிறதா?”
ஸ்பேட் தோளைக் குலுக்கி கொண்டார்.
மாக்ஸ் பிலிசின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. அலமாரிக்கு அருகில் இருந்தவனும், இன்னொருவனையும் தவிர இரண்டு பிலிப்பினோ பையன்கள் சீருடையில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் சோபாவில் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.
“மாக், அந்தப் பச்சை டையைக் கண்டுபிடித்தாக வேண்டும். இந்த வீடு, இந்தத் தெரு, இந்தப் பகுதியையே பிரித்துப் போட்டு தேட வேண்டியிருந்தாலும், அதைக் கண்டு பிடிக்கும் வரை நிறுத்த கூடாது.” என்றார் டண்டி.
அலமாரியின் அருகில் நின்று கொண்டிருந்தவன் “சரி” என்று தொப்பியை சரி செய்து கொண்டு, வெளியே சென்றான்.
இரண்டு பையன்களையும் பார்த்து டண்டி கோபத்தோடு, “உங்களில் யார் இங்கே வந்த மனிதனைப் பார்த்தது?”
அவர்களில் குட்டையாக இருந்தவன் “நான்தான், சார்”
டண்டி படுக்கையறை கதவைத் திறந்து “பிலிஸ்” என்றார்.
பிலிஸ் கதவிற்கு அருகில் வந்தார்.
அந்தப் பையனின் முகம் வெளிச்சமானது. “ஆமாம், சார், இவர்தான்.”
“உட்காருங்கள்” என்று டண்டி கதவைப் பூட்டிவிட்டு சொன்னார்.
பையன்கள் அவசரமாக உட்கார்ந்தார்கள்.
டண்டி சிறிது நேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தார். “வேறு யாரும் இல்லை, சார்” என்றான் ஒருவன். அவனது முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ளப்பட்ட புன்னகை இருந்தது.
டண்டி மிரட்டுவது போல அவனை நோக்கி நகர்ந்தார். “பொய் சொல்லாதே! மரியம் பிலிஸ்ஸையும் மேலே கூப்பிட்டு வந்தாய், இல்லையா?”
பெரியவன் வேகமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர். “ஆமாம், சார். ஆமாம், சார். அவர்களை நான்தான் கூப்பிட்டு வந்தேன். நீங்கள் வேறு யாரையோ சொல்கிறீர்கள் என்று நினைத்தேன்.” என்று சிரிக்க முயற்சி செய்தான்.
டண்டி அவர்களைப் பார்த்து, “ நான் என்ன நினைக்கிறேன் என்பது தேவையில்லை. நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல். ‘அவர்கள்’ என்றால் யார்?”
அவர் முறைத்ததில் அவர்களது முகத்தில் இருந்த புன்னகை அகன்றது. கால்களுக்கு இடையில் பார்த்துக் கொண்டே “மரியம் பிலிஸும், இன்னொரு மனிதரும்.”
“எந்த மனிதர்? உள்ளே இருப்பவரா?” என்று படுக்கையறையின் கதவை காட்டினார்.
“இல்லை, இல்லை. இவர் வேறொருவர். அமெரிக்கரே கிடையாது.” அவனது முகத்தை உயர்த்தினான். இப்போது அதில் ஒரு வெளிச்சம் இருந்தது. “அவர் ஆர்மீனியர் என்று நினைக்கிறேன்.”
“ஏன்?”
“ஏனென்றால் அவர் அமெரிக்கர்களைப் போல இல்லை. நம்மைப் போலப் பேசவும் இல்லை.”
ஸ்பேட் சிரித்துக் கொண்டே “இதற்கு முன் ஆர்மீனியர்களைப் பார்த்திருக்கிறீர்களோ?”
“இல்லை, சார். என்ன நினைக்கிறேன் என்றால்..”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, டண்டி உறுமுவது போலக் குரல் கொடுக்கவே நிறுத்தினான்.
“எப்படி இருந்தான்?” என்றான் டண்டி.
பையன் தோள்களை உயர்த்திக் கொண்டு, கைகளை விரித்துக் கொண்டு, “அவன் உயரமாக இருந்தான். கறுப்பான முடி, மீசை. நல்ல துணி அணிந்திருந்தார். நல்ல மனிதன். கைத்தடி, கையுறை, எல்லாம்…”
“இளமையாக இருந்தார்?” என்றார் டண்டி.
மீண்டும் தலை மேலும், கீழுமாக ஆடியது. “இளமையாகத்தான் இருந்தார்”
“அவர் எப்போது இங்கிருந்து கிளம்பினார்?”
“ஐந்து நிமிடங்களில் கிளம்பினார்.”
டண்டி வாயை மென்று கொண்டே, “எப்போது அவர்கள் வந்தார்கள்?”
பையன் “நான்கு மணி இருக்கும் – பத்து நிமிடங்கள் முன்பின் இருக்கலாம்.” என்றான்.
“அவர்களுக்கு முன் வேறு யாராவது வந்தார்களா?”
இருவரும் ஒன்று போல, இல்லை என்று தலையாட்டினார்கள்.
டண்டி, ஸ்பேடிடம் “அவளை வரச் சொல்லுங்கள்.” என்றார்.
ஸ்பேட் படுக்கையறையைத் திறந்து “மிஸ் மரியம், ஒரு நிமிடம் வெளியே வருகிறீர்களா?” என்றார்.
“என்ன விஷயம்?” என்றாள்.
“ஒரு நிமிடம்தான்.” என்று கதவை திறந்து வைத்துக் கொண்டு, “நீங்களும் வாருங்கள், பிலிஸ் “
மரியம் பிலிஸ், அவளது சித்தப்பாவுடன் மெதுவாக முன்னறைக்கு வந்தாள். அங்கே இருந்த லிப்ட் பையன்களைப் பார்த்தவுடன், அவளது உதடுகள் துடித்தன. டண்டியை சிறிது கவலையுடன் பார்த்தாள்.
“உங்களுடன் யாரோ ஒரு மனிதனும் வந்தான் என்பது உண்மையா?”
மீண்டும் அவளது உதடுகள் துடித்தன. “என்- என்ன?” என்றாள். அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தை மறைக்கப் பார்த்தாள். தியோடர் பிலிஸ் வேகமாக முன்னே வந்து, எதையோ சொல்ல போகிறவரைப் போல அவளை மறைத்துக் கொண்டு நின்றார். உடனே மனதை மாற்றிக் கொண்டவரைப் போல, மீண்டும் பின்னே சென்று நின்று கொண்டார்.
“உங்களுடன் வந்தவன். யாரவன்? எங்கிருக்கிறான்? எதற்காக இங்கிருந்து சென்றான்? ஏன் அவனைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை?” என்று டண்டி கடுமையான குரலில் கேட்டார்.
முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். “அவருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கைகளுக்கு இடையில் இருந்து வார்த்தைகள் குளறிக் கொண்டு வந்தன. “இல்லை, அவருக்கு இது தொந்தரவாக இருக்கும்.”
“நல்ல மனிதன், பத்திரிகையில் பெயர் வராமலிருக்க, உங்களை, கொலை செய்யப்பட்ட உங்கள் அப்பாவுடன் விட்டுவிட்டு ஓடியிருக்கிறான்.” என்று டண்டி அதே குரலில் தொடர்ந்தார்.
முகத்தில் இருந்து கைகளை எடுத்துக் கொண்டு, “ஓ, அவருக்கு வேறு வழியில்லை. அவரது மனைவி மிகவும் பொறாமைக்காரி. மீண்டும் என்னுடன் இருந்தார் என்று தெரிந்தால், விவாகரத்து செய்துவிடுவாள். அவருக்கு என்று உலகில் ஒற்றை டாலர் கூட இல்லை.” என்று அழுது கொண்டே சொன்னாள்.
டண்டி ஸ்பேடை பார்த்தார். இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த லிப்ட் பையன்களைப் பார்த்து “வெளியே போங்கள்!” என்றார். அவர்கள் வேகமாக வெளியே சென்றார்கள்.
“யார் இந்த நல்லவன்?” என்று டண்டி, மரியமிடம் கேட்டார்.
“ஆனால் அவருக்கும், இதற்கும்..”
“யார் அவன்?”
அவள் கீழே பார்த்துக் கொண்டு, “அவர் பெயர் போரிஸ் சிமெகலோவ்.” என்றாள்.
“ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் காட்டு”
அப்படியே செய்தாள்.
“எங்கே இருக்கிறான்?”
“செயின்ட் மார்க் ஹோட்டலில்”
“பணக்காரப் பெண்களைத் திருமணம் செய்வதைத் தவிர வேறென்ன செய்கிறான்?”
அவளது முகத்தில் சட்டென்று கோபம் கொப்பளித்தது. ஆனால் உடனே அடங்கிவிட்டது. “அவர் எதுவும் செய்யவில்லை.” என்றாள்.
அங்கிருந்த இன்னொருவனை நோக்கி, டண்டி “அவனை அழைத்து வா”. அவன் அங்கிருந்து சென்றான்.
மீண்டும் அவளைப் பார்த்து “நீங்களும், சிமெகலோவும் காதலிக்கிறீர்களா?”
அவளது முகத்தில் கோபம் தெரிந்தது. எதுவும் சொல்லாமல் அவரைக் கோபத்துடன் பார்த்தாள்.
“உங்கள் அப்பா இறந்துவிட்டதால், அவனது மனைவி விவாகரத்துக் கொடுத்தாலும், அவனைத் திருமணம் செய்யப் போதுமான பணம் உங்களிடம் இருக்கும்.”
அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.
“இப்போது உங்கள் அப்பா இறந்துவிட்டார். நீங்கள் -”
அவள் கீழே விழுவதைப் பார்த்து, ஸ்பேட் வேகமாக அவளைத் தாங்கி பிடித்தார். அவளைத் தூக்கி கொண்டு, படுக்கையறைக்குக் கொண்டு சென்றார். திரும்ப வரும்போது, படுக்கையறையின் கதவை மூடிவிட்டு, “மற்றவற்றைப் பற்றித் தெரியாது. ஆனால் இப்போது வந்த மயக்கம் நல்ல நாடகம்.” என்றார்.
“எல்லாமே நாடகம்தான்” என்றார் டண்டி.
“குற்றவாளிகள் தங்களது குற்றத்தை தாங்களாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் வேண்டும்.” என்று ஸ்பேட் வேடிக்கையாகச் சொன்னார்.
பிலிஸ், தன்னுடைய சகோதரனின் மேசைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார்.
டண்டியின் குரல் விரக்தியுடன் வந்தது. “நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை, ஸ்பேட். உங்களது கஸ்டமர் இறந்துவிட்டார். எனவே அவர் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் நான் கண்டு பிடிக்கவில்லை என்றால், கேப்டன், நகரக் காவல்துறை தலைவர், பத்திரிகைகள் என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் என்னைத் துரத்துவார்கள்.”
ஆறுதல் சொல்வது போல ஸ்பேட் “கவலைப்படாதீர்கள். கொலைகாரனை கண்டுபிடித்துவிடுவீர்கள்.” முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு “இதற்கு மேலும் இந்த விசாரணையில் முட்டுச்சந்துகளுக்குள் போய்க் கொண்டே இருக்க முடியாது. திருமதி. ஹூப்பர் சென்றதாகச் சொன்ன இறுதிச்சடங்கு பற்றிய விவரங்களை விசாரிக்க வேண்டாமா? அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒன்று சரியாக இல்லை.”
ஒரு நொடி ஸ்பேடை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டு, டண்டி “டாமை சரி பார்க்க சொல்லலாம்.”
டாமை நோக்கி திரும்பிய ஸ்பேட், விரல்களை ஆட்டிக் கொண்டே “டாம், எந்த இறுதிச்சடங்கும் நடக்கவில்லை என்று உறுதியாகச் சொல்வேன். ஏமாந்து விடாமல் நன்றாக விசாரி.”
உடனே படுக்கையறை கதவை திறந்து “திருமதி. ஹூப்பர், டாம் உங்களை விசாரிக்க வேண்டுமாம்.” என்றார்.
அவளும் வெளியே வந்து டாமிடம், பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, ஸ்பேட் சோபாவில் அமர்ந்து புகையிலையை வைத்து, சிகரெட்டை உருட்டிக் கொண்டிருந்தார். ஸ்பேடிடம் கேட்டுக் கொண்டு, தியோடர் பிலிஸ் மீண்டும் படுக்கையறைக்குச் சென்றார்.
டாம் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டவுடன், அவளிடம் “நன்றி” என்று சொல்லிவிட்டு, ஸ்பேட் மற்றும் டண்டியிடம் “சென்று வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார்.
வேலைக்காரப்பெண் அதே இடத்திலேயே அசையாமல், பொறுமையுடன் நின்று கொண்டிருந்தாள்.
சோபாவில் உட்கார்ந்திருந்த நிலையில் இருந்து திரும்பிக் கொண்டு, ஸ்பேட், அவளிடம் “ஒன்றும் கவலைப்படாதீர்கள்.” என்று டாம் சென்ற திசையில் கைகளைக் காட்டி, “வழக்கமான விசாரணைதான்.” என்று சொல்லிவிட்டு, “இங்கே நடந்திருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், திருமதி. ஹூப்பர்?” என்றார்.
அவள் அமைதியாக, ஆனால் மிகவும் உறுதியாக “இது கடவுளின் நீதி என்று நினைக்கிறேன்.” என்றாள்.
டண்டி குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவளை உற்றுப் பார்த்தார்.
ஸ்பேட் “என்ன?” என்றார்.
அவளது குரலில் உறுதி மட்டுமே இருந்தது. எந்த உணர்ச்சியும் இல்லை. “பாவத்தின் சம்பளம் மரணம்தான்.”
தன்னுடைய வேட்டையைக் கண்டுவிட்ட மிருகத்தைப் போல டண்டி அவளை நோக்கி நகர்ந்தார். ஆனால் ஸ்பேட் சோபாவிற்குப் பின்பக்கமாகக் கைகளால் அவரை அங்கேயே இருக்குமாறு சைகை செய்தார். முகத்தில் மிகுந்த ஆர்வத்துடன், அவளிடம் “பாவமா?” என்றார்.
“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” என்றாள். பைபிளின் அந்த வார்த்தைகளையும் அவள் எந்த உணர்வுமின்றி, தான் மிகவும் நம்பும் ஒன்றை சாதாரணமாகச் சொல்வது போலச் சொன்னாள்.
டண்டி அவளிடம் “எந்தச் சிறியர்?” என்றார்.
“அவள்தான்.” என்ற திருமதி. ஹூப்பர், “மரியம்”
அவளுடைய கண்கள் அவரை நோக்கி திரும்பி, அங்கிருந்து படுக்கையறை கதவில் சென்று நின்றது.
டண்டி “அவரது மகளா?” என்று யோசனையுடன் கேட்டார்.
“ஆமாம், அவரது தத்தெடுக்கப்பட்ட மகள்.”
டண்டியின் முகம் கோபத்தால் சிவந்தது. “என்ன இது? அவள் அவருடைய சொந்த மகள் இல்லையா?” என்றார்.
ஆனால் அவரது கோபம் அவளது அமைதியான குரலை ஒன்றும் செய்ய முடியவில்லை. “இல்லை. அவரது மனைவி வெகுகாலம் உடல்நலமில்லாமல் இருந்தாள். அவர்களுக்குக் குழந்தை இல்லை.”
டண்டியின் தாடை கோபத்தை அடக்குவது போல அசைந்தது. இப்போது இன்னமும் சாதாரணக் குரலில். “அவளை அவர் என்ன செய்துவிட்டார்?”
“எனக்குத் தெரியாது. ஆனால் உண்மை கண்டறியப்படும் போது, அவளுக்கு அவளது தந்தை – உண்மையான தந்தை – விட்டுச்சென்ற பணம் என்னவானது என்று நீங்களும்…”
ஸ்பேட் குறுக்கிட்டு, மிகவும் மெதுவாக, அவரது வார்த்தைகள் அவளுக்கு நன்றாகப் புரியவேண்டும் என்பது போல “அதாவது, அவர் அவளை ஏமாற்றினாரா என்று உங்களுக்கு உண்மையில் தெரியாது? நீங்கள் வெறுமனே சந்தேகப்படுகிறீர்கள்?”
அவள் தன்னுடைய கையை இதயத்தில் வைத்தாள். “எனது இதயத்திற்குத் தெரியும்.”
டண்டி ஸ்பேடை பார்த்தார். ஸ்பேட் டண்டியை பார்த்தார். ஸ்பேடின் கண்களில் குறும்பு மின்னியது. டண்டி தொண்டையைச் செறுமிக் கொண்டு, மீண்டும் அவளைப் பார்த்து, “அப்போ நீங்கள் இதை” என்று கொலையுண்டவன் கிடந்த இடத்தைச் சுட்டிக் காட்டி, “கடவுளின் நீதி என்கிறீர்கள், இல்லையா?”
“ஆமாம்.”
அவரது கண்களில் இன்னமும் சிறு அளவில் வேடிக்கை மிச்சமிருந்தது. “இதை யார் செய்திருந்தாலும், அவர்கள் கடவுளின் சார்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?”
“அது எனக்குத் தெரியாது.”
மீண்டும் அவரது முகம் சிவக்க ஆரம்பித்தது.
“இப்போதைக்கு அவ்வளவுதான்” என்று ஏமாற்றத்துடன் சொன்னார். ஆனால் அவள் படுக்கையறை கதவை அடையும் நேரத்தில், மீண்டும் அவளை அழைத்தார். “ஒரு நிமிடம்.” அவள் திரும்பியவுடன், “நீங்கள் ரோசிக்ரூஸின்ஸ் இல்லையே?”
“நான் கிறிஸ்துவராக மட்டுமே இருக்கிறேன்.”
“சரி, சரி” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு, அவர் திரும்பிக் கொண்டார். அவள் படுக்கையறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். நெற்றியில் வழிந்த வியர்வையைக் கைகளால் துடைத்துக் கொண்டே “என்ன குடும்பம்!” என்றார்.
ஸ்பேட் பதிலுக்கு “உங்கள் குடும்பத்தையும் நேரம் கிடைக்கும் போது, விசாரித்துப் பாருங்கள்.” என்றார்.
டண்டியின் முகம் வெளிறியது. உதடுகள் துடித்தன. முஷ்டியை உயர்த்திக் கொண்டு ஸ்பேடை நோக்கி பாய்ந்தார். “என்ன சொன்னாய்..?” என்ற அவரது வேகம், ஸ்பேடின் முகத்தில் தெரிந்த ஆச்சரியத்தில் முழுவதுமாகக் குறைந்து நின்றுவிட்டது. அவரது கண்களைப் பார்க்காமல், உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, மீண்டும் ஸ்பேடை பார்த்து, வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் “அதாவது எந்தக் குடும்பத்தையும் என்று சொல்கிறீர்கள்..” என்று முனகினார். வீட்டுமணி அடிக்கவே, வேகமாக முன்கதவை நோக்கி திரும்பினார்.
ஸ்பேடின் முகத்தில் தெரிந்த வியப்பும், வேடிக்கையும் அவரை ஒரு சாத்தானைப் போலக் காட்டியது.
முன்கதவில் இருந்து ஒரு மென்மையான குரல் கேட்டது. “என் பெயர் ஜிம் கிட்ரெட்ஜ். நீதிமன்ற டவாலி. இங்கே வர சொல்லியிருந்தார்கள். “
“உள்ளே வாருங்கள்” என்று டண்டி பதில் கூறினார்.
கிட்ரெட்ஜ் சிறிது பருமனாகவும், பழைய ஆனால் இப்போது அவருக்கு மிகவும் இறுக்கமாக இருந்த உடைகளை அணிந்திருந்தார். ஸ்பேடை பார்த்து “மிஸ்டர் ஸ்பேட், நீங்களும், உங்களது பர்க்-ஹாரிஸ் கோட்டும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.” என்றார்.
ஸ்பேட் “நன்றி” என்று சொல்லிக் கொண்டே, எழுந்து அவரது கைகளைக் குலுக்கினார்.
டண்டி படுக்கையறைக்குச் சென்று, தியோடர் பிலிஸ் மற்றும் அவரது மனைவியை வெளியே வரச் சொன்னார். கிட்ரெட்ஜ் அவர்களைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்து, “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு “அவர்கள்தான்” என்று டண்டியிடம் சொன்னார். “நான்கு மணிக்கு பத்து நிமிடம் இருக்கும் போது இவர்கள் வந்தார்கள். நீதிபதி எப்போது வருவார் என்று கேட்டார்கள். நான்கு மணி வரை காத்திருந்துவிட்டு, அதன் பின்னர் நீதிபதி இவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.”
டண்டி “நன்றி” என்றார். கிட்ரெட்ஜ் அங்கிருந்து கிளம்பினார். பிலிஸ் தம்பதிகள் மீண்டும் படுக்கையறைக்குச் சென்றார்கள். டண்டி, ஸ்பேடை பார்த்து “அடுத்து என்ன?” என்றார்.
ஸ்பேட் உட்கார்ந்து கொண்டே “இங்கிருந்து முனிசிபல் அலுவலகத்திற்கு 15 நிமிடங்களில் சென்றிருக்க முடியாது. எனவே நீதிபதிக்குக் காத்திருந்த நேரத்திலும் இங்கு வந்துவிட்டுத் திரும்பியிருக்க முடியாது. திருமணம் முடிந்த பின்னர் இங்கே வந்தும் கொலை செய்திருக்க முடியாது. அதற்குள் மரியம் வந்துவிட்டாள்.”
டண்டியின் முகத்தில் இருந்த அதிருப்தி அதிகரித்தது. எதையோ சொல்ல வாயைத் திறந்தார். ஆனால் அப்போது மரியம் பிலிஸ்சுடன் வந்த மனிதனை அழைத்து வரசென்றவனும், ஒரு உயரமான, மெலிந்த, வெளிறிய மனிதனும் உள்ளே நுழைந்தார்கள்.
“லெப்டினென்ட் டண்டி, ஸ்பேட், திரு. போரிஸ்-ஆஹ்-சிமெகலோவ்”
டண்டி தலையை ஆட்டினார்.
சிமெகலோவ் உடனே பேச ஆரம்பித்தார். அவரது ஆங்கிலம் நன்றாகவே இருந்தது. “லெப்டினென்ட், இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், என் வாழ்வே அழிந்துவிடும். லெப்டினென்ட், அநியாயமாக என்னுடைய வாழ்வை அழித்து விடாதீர்கள். எனக்கு ஒன்றும் தெரியாது. சார், நான் உள்ளத்திலும், செயலிலும் களங்கமில்லாதவன் மட்டுமல்ல, இந்தப் பயங்கரமான விஷயத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எந்த -”
“ஒரு நிமிடம்” என்ற டண்டி, “யாரும் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லவில்லை. நீங்கள் இங்கே இருப்பது விசாரணைக்குத் தேவை என்றுதான் வரவழைத்தோம்.”
அந்த இளைஞன் தன்னுடைய கைகளை விரித்து, முன்னால் நீட்டி, “ஆனால் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள். அவள் -” என்று தலையை வேகமாக ஆட்டி “இல்லை, என்னால் முடியாது. முடியவே முடியாது.”
சிமெகலோவ்வை அழைத்தது வந்தவன், ஸ்பேடிடம் தாழ்வான குரலில் “முட்டாள் ரசியர்கள்!” என்றான்.
சிமெகலோவ்வை உற்றுப் பார்த்துக் கொண்டு, குற்றம் சாட்டும் குரலில், “உன்னுடைய இந்த நிலைக்கு நீதான் காரணம்.” என்றார்.
சிமெகலோவ் கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தார். “ஆனால் என்னுடைய இடத்தில் இருந்து பாருங்கள். நீங்கள் -”
“தேவையில்லை.” என்று சிறிதும் கவனியாதது போல டண்டி சொன்னாலும், அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டார். “இந்த நாட்டில் கொலை செய்வது விளையாட்டு கிடையாது.”
“கொலையா! லெப்டினென்ட், என்னுடைய கெட்டநேரம்தான் நான் இங்கு வந்தது. நான் எதுவும் -”
“நீ இங்கே மரியம் பிலிஸ்சுடன் வந்தது தற்செயலானதா?”
“ஆமாம்” என்று சொல்ல விரும்புவதைப் போலச் சிமெகலோவ் இருந்தாலும், அவரது வாயில் இருந்து “இல்லை” என்று மெதுவாக வந்தது. வேகமாக “ஆனால் ஒன்றுமில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. நாங்கள் ஒன்றாக மதிய உணவு அருந்தினோம். அவளை வீட்டில் வந்து விட்டேன். “காக்டைல் குடிக்க உள்ளே வருகிறீர்களா?” என்றாள். நானும் சரி என்றேன். அவ்வளவுதான்!” என்று மீண்டும் கைகளை நீட்டினார். “உங்களுக்குக் கூட நடந்திருக்கலாம், இல்லையா?” என்றவர், இப்போது ஸ்பேடை பார்த்து, “உங்களுக்கு?”
ஸ்பேட் பதிலுக்கு “எனக்கு நிறைய நடக்கிறது. அது தேவையில்லை. நீங்கள் மரியமுடன் சுற்றிக் கொண்டிருந்தது, அவரது தந்தைக்குத் தெரியுமா?”
“நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவருக்குத் தெரியும்.”
“உங்களுக்கு மனைவி இருப்பது அவருக்குத் தெரியுமா?”
சிமெகலோவ் கவனமாக ”தெரியும் என்று நான் நினைக்கவில்லை.”
டண்டி “அவருக்குத் தெரியாது என்று உனக்குத் தெரியும்.” என்றார்.
சிமெகலோவ் உதடுகளை நனைத்துக் கொண்டு, லெப்டினென்ட் சொல்வதை மறுக்கவில்லை.
“அவருக்குத் தெரிந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறாய்?” என்றார் டண்டி.
“எனக்குத் தெரியாது, சார்”
டண்டி அவனுக்கு மிக அருகில் சென்று நின்று கொண்டு, பற்களைக் கடித்துக் கொண்டு “அவருக்குத் தெரிந்த போது, அவர் என்ன செய்தார்?”
அந்த இளைஞன் ஒரு அடி பின்வாங்கினான். பயத்தினால் அவனது முகம் வெளுத்து, வெளிறியது.
படுக்கையறையில் இருந்து வெளியே மரியம் பிலிஸ் வந்தாள். “அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்றவள் “அவருக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னேன் அல்லவா? அவருக்கு எதுவும் தெரியாது.” இதற்குள் அவள் சிமெகலோவ்வின் அருகில் வந்திருந்தாள். அவரது கைகளைத் தன்னுடைய கைகளோடு கோர்த்துக் கொண்டு “நீங்கள் அவருக்குத் தொந்தரவுதான் கொடுக்கிறீர்கள். என்னை மன்னியுங்கள், போரிஸ். அவர்களை உன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று சொன்னேன்.”
சிமெகலோவ் எதையோ முனகினார்.
“சொல்லத்தான் செய்தீர்கள்” என்ற டண்டி, ஸ்பேடை பார்த்து, “சாம், இப்படி இருக்கலாமோ? மாக்ஸ் பிலிஸ், அவனது மனைவியைப் பற்றித் தெரிந்து கொண்டார். அவர்கள் மதிய உணவு உண்டுவிட்டு வந்தவுடன், அவர்களைச் சந்திக்க வீட்டிற்கு முன்பே வந்து காத்திருந்தார். அவர்கள் வந்தவுடன், அவனது மனைவியிடம் சொல்லுவதாக மிரட்ட, சிமெகலோவ் அவரது கழுத்தை நெறித்திருக்கலாம்” என்று ஓரக்கண்ணால் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே “இன்னொரு முறை மயக்க நாடகம் போட வேண்டுமென்றால், இப்போதுதான் நேரம்” என்றார்.
அதைக் கேட்டவுடன் சிமெகலோவ் கோபத்துடன் கத்திக்கொண்டே டண்டியின் மீது பாய்ந்து, தன்னுடைய விரல்களால் அவரைப் பிறாண்டினான். “ஓ!” என்ற டண்டி, அவனது முகத்தில் முஷ்டியால் குத்தினார். பின்பக்கமாகச் சென்று, அங்கிருந்த நாற்காலியில் மோதி அவன் கீழே விழுந்தான். டண்டி “அவனை இங்கிருந்து அழைத்துச் செல் – அவன் ஒரு சாட்சி!” என்றார்.
அவனை அழைத்து வந்தவனும் “சரி” என்று சொல்லிவிட்டு, சிமெகலோவ்வை தரையில் இருந்து தூக்கி விடச் சென்றான்.
மரியம் பிலிஸ் கதவை மூடவில்லை என்பதால், படுக்கையறையில் இருந்து தியோடர் பிலிஸ், அவரது மனைவி, திருமதி. ஹூப்பர் ஆகியோர் வெளியே வந்தனர். மரியம் பிலிஸ் கோபத்துடன், கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டே, மிரட்டுவது போல டண்டியைப் பார்த்து “உங்கள் மீது வழக்குத் தொடுப்பேன் – உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை …” என்று பேசிக் கொண்டே சென்றாள். யாரும் அவள் பேசுவதைக் கவனிக்கவில்லை. சிமெகலோவ்வை எழுப்பி, அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் செல்வதைத்தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
“ஹா!” என்று ஒன்றும் நடக்காதது போல, தன்னுடைய பையில் இருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக் கொண்டு டண்டி, மரியமிடம் “இங்கிருந்து செய்யப்பட்ட அனைத்து தொலைபேசி எண்களும் இதில் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த எண் என்றால் சொல்லவும்.”
முதல் எண்ணை வாசித்தார்.
“அது இறைச்சி கடைக்காரன். காலையில் கிளம்புவதற்கு முன் நான்தான் பேசினேன்.” என்றாள் திருமதி. ஹூப்பர். டண்டி வாசித்த அடுத்த எண் மளிகைக் கடைக்காரரின் எண் என்றும் அவளே சொன்னாள்.
இன்னொரு எண்ணை வாசித்தார்.
“அது செயின்ட் மார்க் ஹோட்டல்.” என்றால் மரியம். “நான் போரிசுடன் பேசியது.” அடுத்த இரண்டு எண்களைத் தன்னுடைய நண்பர்களின் எண் எனக் கூறினாள்.
ஆறாவது எண், அவருடைய சகோதரரின் அலுவலக எண் என்று தியோடர் பிலிஸ் கூறினார். “என்னைச் சந்திக்க எலிசை வரச் சொல்லி நான் செய்ததாக இருக்கும்.” என்றார்.
ஏழாவது எண்ணை தன்னுடையது என்றார் ஸ்பேட். “இது காவல்துறை அவசர எண்.” என்று டண்டி கடைசி எண்ணை வாசித்தார். மீண்டும் தாளை தன்னுடைய பையில் போட்டுக் கொண்டார்.
ஸ்பேட் உற்சாகமாக “பல இடங்களுக்குத் தொலைபேசப் பட்டிருக்கிறது.” என்றார்.
வாசல்மணி மீண்டும் அடித்தது.
டண்டி கதவை நோக்கி சென்றார். அவரும், இன்னொருவனும் அங்கே மிகவும் தாழ்வான குரலில் பேசிக் கொண்டிருந்ததால் உள்ளிருந்தவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை.
தொலைபேசி அடித்தது. ஸ்பேட் எடுத்தார். “ஹலோ… இல்லை, நான் ஸ்பேட். ஒரு நிமிடம் – சரி” என்று கேட்டுக் கொண்டிருந்தார். “சரி, நான் சொல்லி விடுகிறேன்…எனக்குத் தெரியாது. நான் அவரை உங்களிடம் பேச சொல்கிறேன்… சரி”
அவர் தொலைபேசியைக் கீழே வைத்து திரும்பியவுடன், அங்கே டண்டி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். “உங்கள் ரசியன் மொத்தமாகப் பைத்தியம் போல நடந்து கொண்டானாம். ஓ’கார் அவனைக் கைகளைக் கட்டி இழுத்துச் சென்றதாகச் சொல்கிறான்.” என்றார்.
‘அவனுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும்.” என்றார் டண்டி. “இங்கே வாருங்கள்”
ஸ்பேட் அவருடன் சேர்ந்து முன்னறையில் இருந்த வெராண்டாவிற்குச் சென்றார். அங்கே சீருடையில் இருந்த காவலர் ஒருவர் இருந்தார்.
டண்டி இப்போது தன்னுடைய கைகளை விரித்துக் காட்டினார். ஒன்றில் பலவித பச்சை நிறங்களில் குறுக்கே கோடுகள் இடப்பட்டிருந்த டை ஒன்றும், மற்றொன்றில் பிறை போலப் பிளாட்டினத்தில் செய்யப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த சட்டையில் குத்தப்படும் பின் ஒன்றும் இருந்தது.
டையில் இருந்த மூன்று கறைகளை ஸ்பேட் குனிந்து பார்த்தார். “ரத்தமா?”
“அழுக்காகக் கூட இருக்கலாம்.” என்றார் டண்டி. “பத்திரிகை ஒன்றில் சுற்றப்பட்டு அங்கே குப்பைக்குள் கிடந்ததை இவர்தான் கண்டறிந்தார்.”
சீருடை அணிந்த காவலர் பெருமையாக “ஆமாம், சார். அங்கேதான் எல்லாம் சுருட்டப்பட்டு…” என்று ஆரம்பித்த அவர், யாரும் கவனிக்கவில்லை என்று அப்படியே நிறுத்தினார்.
“ரத்தமாகவே இருக்க வேண்டும்” என்றார் ஸ்பேட். “அதை மறைக்க முயற்சி செய்ததற்கு அதுவே காரணமாக இருக்க வேண்டும். போய், அங்கே அனைவரிடமும் பேச வேண்டியிருக்கிறது.”
டண்டி பையில் டையைத் திணித்துக் கொண்டு, இன்னொரு கையில் பின்னை வைத்துக் கொண்டு பைக்குள் கையை விட்டுக்கொண்டார். “சரி – இதை ரத்தம் என்றே சொல்லலாம்.”
அவர்கள் மீண்டும் முன்னறைக்குச் சென்றார்கள். அங்கே டண்டி ஒவ்வொருவறையாகப் பார்த்தார். அவருக்கு ஒருவரையும் பிடிக்கவில்லை. கையில் இருந்த பின்னை முதலில் வெளியே எடுத்து கையை நீட்டி அனைவர்க்கும் தெரிவது போலக் காண்பித்தார். “இது என்ன?” என்று அனைவரிடமும் கேட்டார்.
முதலில் மரியம் பேசினாள். “இது அப்பாவின் பின்.”
“அப்படியா?” என்ற டண்டியின் குரலில் கோபம் இருந்தது. “இன்று அணிந்திருந்தாரா?”
“அவர் எப்போதும் அணிந்திருப்பார்.” என்று மற்றவர்களின் ஒப்புதலுக்காக அவர்களைப் பார்த்தாள்.
திருமதி. பிலிஸ் “ஆமாம்” என்றாள். மற்றவர்களும் தலையை ஆட்டினார்கள்.
“எங்கே கிடைத்தது?” என்றாள் அவள்.
டண்டி மீண்டும் ஒவ்வொருத்தரையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களை முன்பை விட வெறுத்தார். அவரது முகம் சிவந்திருந்தது. “எப்போதும் அணிந்திருப்பார்” என்று கோபமாகச் சொன்ன அவர், “ஆனால் உங்களில் ஒருவர் கூட ‘அப்பா அணிந்திருந்த பின் எங்கே?’ என்று இதுவரை கேட்கவில்லை. நாங்கள் அதைக் கண்டுபிடிக்கும் வரை அனைவரும் காத்திருக்கிறீர்கள்.”
பிலிஸ் “நியாயமாகப் பேசுங்கள். எங்களுக்கு எப்படி -?” என்றார்.
“உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்ல தேவையில்லை.” என்ற டண்டி “இப்போது எனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசும் நேரம் வந்துவிட்டது.” என்று தன்னுடைய இன்னொரு பையில் இருந்து பச்சை டையை வெளியே எடுத்தார். “இது அவரது டையா?”
திருமதி ஹூப்பர் “ஆமாம், சார்” என்றாள்.
டண்டி “இதில் ரத்தம் இருக்கிறது. ஆனால் அது மாக்ஸ் பிலிஸ்ஸின் ரத்தமில்லை. அவரது உடலில் ஒரு சிறு கீறல் கூட இல்லை என்பதை நானே பார்த்தேன்.” மீண்டும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தார். “சட்டையில் கூர்மையான பின்னை குத்தியிருக்கும் மனிதனை நீங்கள் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அவர் உங்களுடன் போராடுகிறார் – “
அப்போது ஸ்பேடை பார்த்து சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினார்.
ஸ்பேட் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, திருமதி ஹூப்பர் நின்றிருந்த இடத்திற்குச் சென்றார். அவன் தன்னுடைய கைகளை முன்னே கட்டிக் கொண்டிருந்தாள். அவளது வலதுகையை இழுத்து, அதைத் திருப்பி அங்கிருந்த கைக்குட்டையை அகற்றினார். அவளது உள்ளங்கையில் இரண்டு அங்குல நீளத்திற்குக் கீறல் ஒன்று இருந்தது.
அதை அவர் உற்று பார்த்து ஆராய்வதற்கு அவள் எந்தத் தடையும் சொல்லவில்லை. அவளது அமைதி சிறிதும் மாறவில்லை. அவள் எதுவும் பேசவுமில்லை.
“சரி?” என்று கேட்டார்.
“மரியம் பிலிஸ் மயக்கம் போட்டவுடன், அவளைப் படுக்கையில் சாய்த்து வைத்த போது, அவளது பின் கையில் இழுத்துவிட்டது.” என்று அமைதியாகச் சொன்னாள்.
டண்டி லேசாகச் சிரித்தார். “அதற்கும் தூக்குதான் கிடைக்கும்.” என்றார்.
அவளது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. “கடவுளின் விருப்பமே நடைபெறும்.” என்றாள்.
அவளது கையைக் கீழே விட்ட ஸ்பேட், வினோதமான ஒலி ஒன்றை எழுப்பினார். “நிலைமையைத் திரும்பவும் யோசிக்கலாம்.” என்று டண்டியை நோக்கி சிரித்தார். “அந்த நட்சத்திர ‘T’ யை பற்றியும் யோசிக்கிறீர்கள், இல்லையா?”
டண்டி “ஆம்” என்றார்.
“டால்போட்டின் மிரட்டல் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் கடனும் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு நிமிடம் – “ என்று தொலைபேசிக்கு சென்ற அவர், அவரது அலுவலகத்திற்குத் தொலைபேசினார். “டையும் விநோதமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ரத்தம் அதை விளக்கிவிட்டது.” என்று காத்திருந்த நேரத்தில் சொன்னார்.
தொலைபேசியில் பேசினார். “ஹலோ, எஃபி. பிலிஸ் எனக்குத் தொலைபேசிய அரைமணி நேரத்திற்குள் வேறு யாராவது எனக்குத் தொலைபேசினார்களா? அதுவும் சந்தேகத்திற்கு இடமாக? எதாவது… ஆமாம், முன்னால்தான்… நன்றாக யோசித்துச் சொல்”
தொலைபேசியைக் கையால் மூடிக் கொண்டு, டண்டியை பார்த்து “உலகில் பல விதங்களில் ஏமாற்றுகிறார்கள்” என்றார்.
மீண்டும் தொலைபேசியில் பேசினார். “ஆமாம்?… ஆமாம், க்ருகெர்?… ஆமாம், ஆணா அல்லது பெண்ணா?… நன்றி,,, இல்லை, அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். எனக்காகக் காத்திரு. நானே உனக்கு இரவு உணவு வாங்கித் தருகிறேன். வைத்துவிடு”
தொலைபேசியில் இருந்து திரும்பினார். “பிலிஸ் எனக்குத் தொலைபேசியதற்கு அரைமணி நேரத்திற்கு முன் யாரோ ஒருவன் என் அலுவலகத்திற்குத் தொலைபேசி, க்ருகெர் இருக்கிறாரா என்று கேட்டிருக்கிறான்.”
டண்டி முகத்தைச் சுருக்கிக் கொண்டு, “அதனால் என்ன?” என்றார்.
“க்ருகெர் அங்கே இல்லை.”
இன்னமும் சுருக்கிக் கொண்டு “யார் இந்த க்ருகெர்?”
“எனக்குத் தெரியாது” என்று ஸ்பேட் சொன்னார். “நான் கேள்விப்பட்டதே இல்லை.” புகையிலையையும், சிகரெட் தாளையும் பையில் இருந்து எடுத்தார். “சரி, தியோடர் பிலிஸ். உங்களது காயம் எங்கே?”
தியோடர் பிலிஸ் “என்ன?” என்றார். அனைவரும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“உங்களது காயம்” என்று பொறுமையாக ஸ்பேட் மீண்டும் சொன்னார். தன் கையில் சிகரெட்டை தயார் செய்து கொண்டே “நீங்கள் உங்கள் சகோதரரின் கழுத்தை நெறிக்கும் போது, அவரது பின் உங்களுக்கு ஏற்படுத்திய காயம்.”
“என்ன பேசுகிறீர்கள்?” என்று பிலிஸ் குரலை உயர்த்தினார். “நான் அப்போது -”
“ஆ, ஆமாம். நீங்கள் அப்போது திருமணம் செய்து கொண்டிருந்தீர்கள். அது பொய்.” சிகரெட் தாளை எச்சில் வைத்து ஒட்டி, அதைக் கைவிரல்களால் தடவினார்.
திருமதி பிலிஸ் இப்போது “ஆனால் அவர் – மாக்ஸ் பிலிஸ் உங்களுக்குத் தொலைபேசியில்”
“எனக்கு மாக்ஸ் பிலிஸ் தொலைபேசினார் என்று யார் சொன்னது?” என்ற ஸ்பேட் “அது எனக்குத் தெரியாது. அவரது குரல் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒரு மனிதன் தொலைபேசி, தன்னை மாக்ஸ் பிலிஸ் என்றான். யார் வேண்டுமென்றாலும் அதைச் சொல்லலாம்.”
“ஆனால் இங்கிருந்துதான் உங்களுக்குத் தொலைபேசப்பட்டிருக்கிறது என்று இருக்கிறதே” என்று அவள் விடாமல் கேட்டாள்.
அவர் தலையை ஆட்டிக் கொண்டே, “இங்கிருந்து எனக்குத் தொலைபேசப்பட்டிருக்கிறது என்றுதான் அது சொல்கிறது. எனக்கு அரை மணிநேரம் முன்பு, க்ருகெர் என்பவரை கேட்டு எனது அலுவலகத்திற்குத் தொலைபேசி வந்திருக்கிறது.” என்று தியோடர் பிலிசை நோக்கி “உங்களைச் சந்திக்க வருவதற்கு முன் இங்கிருந்து ஒரு முறை அவர் என்னுடைய அலுவலகத்திற்குப் புத்திசாலித்தனமாகப் பேசியிருக்கிறார்.”
அவள் தன்னுடைய நீலக்கண்களால் ஸ்பேடையும், அவளது கணவனையும் பார்த்தாள்.
அவளது கணவன் சாதாரணமாக “எல்லாம் பொய், உனக்குத் தெரியுமா -”
ஸ்பேட் அவரைப் பேச விடவில்லை. “நீதிபதிக்குக் காத்திருக்கும் போது அவர் புகைபிடிக்கச் சென்றார் அல்லவா? அங்கே ஒரு பொதுத் தொலைபேசி இருப்பது அவருக்குத் தெரியும். அவருக்குத் தேவைப்பட்டது ஒரு நிமிடம்தான்.” என்று தன்னுடைய சிகரெட்டை பற்ற வைத்தார்.
பிலிஸ் “பொய்!” என்றார். “நான் ஏன் மாக்ஸை கொல்லவேண்டும்?” என்று அவரது மனைவியைப் பார்த்து சிரிக்க முயன்றார். “இதையெல்லாம் நினைத்து வருந்தாதே. போலீஸ் இப்படித்தான் -”
“சரி” என்ற ஸ்பேட் “உங்களது காயத்தைச் சோதிக்கலாமா?”
பிலிஸ் அவரை நோக்கி நேராகத் திரும்பினார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு “முயன்று பார்!” என்றார்.
ஸ்பேட் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல், அவரை நோக்கி நகர்ந்தார்.
——————————–
ஜூலியஸ் காஸ்டில் உணவுவிடுதியில் ஸ்பேடும், எஃபி பெரினும் அமர்ந்திருந்தார்கள். சன்னலின் வழியே சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குச் சென்று கொண்டிருக்கும் படகுகளின் விளக்குகளும், மறுபக்கமிருந்த நகரின் விளக்குகளும் தெரிந்து கொண்டிருந்தது.
“… அவரைக் கொல்வதற்கு அங்கே செல்லவில்லை “ என்று ஸ்பேட் சொல்லிக் கொண்டிருந்தார். “இன்னமும் கொஞ்சம் பணத்தைப் பறிக்கத்தான் சென்றார். சண்டை ஆரம்பித்தவுடன், அவரது கைகள் மாக்சின் கழுத்தைப் பிடித்தவுடன், அவரது வெறி மாக்ஸ் இறக்கும் வரை எடுக்கப்படவில்லை. ஆனால் இவை எல்லாம் சாட்சியங்களின் மூலமும், அவரது மனைவியின் மூலமும் பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே. அவர் பேசவேயில்லை.”
எஃபி “அவள் நல்ல மனைவியாக இருந்திருப்பாள்.”
ஸ்பேட் காபியை குடித்துக் கொண்டே “எதற்காக? அவள் மாக்சின் காரியதரிசியாக இருந்ததால் மட்டுமே தியோடர் அவளைத் திருமணம் செய்ய முயற்சித்தது இப்போது அவளுக்கும் தெரியும். இரண்டு வாரங்களுக்கு முன் தியோடர் திருமணத்திற்குப் பதிவு செய்ததும், அவளைக் கொண்டு மாக்ஸும், தியோடரும் சேர்ந்து செய்த கிரேஸ்டோன் மோசடி சம்பந்தமான ஆதாரங்களை எடுத்து, அதை வைத்து மாக்ஸை மிரட்டுவதற்காகத்தான் என்றும் அவளுக்கு இப்போது தெரியும். அவளுக்கு நன்றாகவே தெரியும் – தான் ஒரு குற்றமற்றவனைக் காப்பாற்றவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும்.”
இன்னொரு முறை காபியை குடித்தார். “எனவே தன்னுடைய சகோதரனை சிறைக்கு அனுப்ப போவதாக மிரட்ட முயலுகிறார். சண்டை வருகிறது. மாக்சின் கழுத்தை நெறிக்கும் போது, கைகளைப் பின் காயப்படுத்துகிறது. எனவே அவர் பிணத்தின் டையை மாற்ற முயலுகிறார். ஆனால் டையைக் கழட்டிய அவர், புது டையை மாட்டவேண்டும் என்று யோசிக்கிறார். அங்கேதான் அவரது துரதிர்ஷ்டம் ஆரம்பிக்கிறது. எனவே பிணத்தின் ஆடைகளைக் கழட்டி அங்கேயே போடுகிறார். முதலில் கைக்குக் கிடைத்த டையையும் அருகிலே வைக்கிறார். காவல்துறையைக் குழப்பும் யுத்தி இது. ஆடைகளைக் கழட்டும் போதே, அவருக்கு இன்னொரு திட்டம் தோன்றுகிறது. எனவே இறந்தவரின் மார்பில் ஒரு நட்சத்திரத்தையும், ‘T’ என்ற எழுத்தையும் எழுதுகிறார். காவல்துறைக்குக் கவலைப்பட இன்னுமொரு விஷயம்”
காபியை குடித்து முடித்துவிட்டு, ஸ்பேட் தொடர்ந்தார். “இதற்குள் தன்னால் காவல்துறையை நன்றாகக் குழப்ப முடியும் என்று நினைக்க ஆரம்பிக்கிறார். எனவே மாக்சின் மார்பில் வரைந்தது போலவே ஒரு சின்னத்துடன் ஒரு மிரட்டல் கடிதத்தையும் எழுதுகிறார். மதியம் வந்த கடிதங்கள் மேசையில் இருக்கின்றன. ஒன்று பிரான்சில் இருந்து வந்திருக்கிறது. இன்னுமொரு குழப்பத்தை உண்டாக்கலாம் என்று, அதன் உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துவிட்டு, மிரட்டல் கடிதத்தை உள்ளே வைக்கிறார். ஆர்வத்தில் அதிகமாகச் செல்கிறார் என்று தெரிகிறதா? எங்களுக்கு அவர் ஏகப்பட்ட தவறான தகவல்களைக் கொடுத்ததன் மூலம், சரியாகச் செய்த சிலவற்றையும் – தொலைபேசி மிரட்டல் போல – எங்களைச் சந்தேகப்பட வைக்கிறார். “
“இப்போது அவரது அலிபியான தொலைபேசி மிரட்டலுக்கு அவர் தயாராகிறார். எனவே தொலைபேசி புத்தகத்தில் தனியார் துப்பறிவாளர்கள் பட்டியலில் அவர் ஒரு பெயரை – எனது பெயரை – எடுத்து க்ருகெர் பற்றி விசாரிக்கிறார். அதற்கு முன் எலிசிற்குப் பேசுகிறார். திருமணத்திற்கு இருந்த தடங்கல்கள் நீங்கி விட்டதாகவும், தனக்கு நியூ யார்க்கில் புதிதாக வேலை கிடைத்திருக்கிறது என்றும் அவளிடம் சொல்லி, பதினைந்து நிமிடத்தில் முனிசிபல் அலுவலகத்திற்கு வருமாறு சொல்கிறார். ஆனால் இது அலிபி மட்டுமல்ல. தியோடருக்கு மாக்ஸை பிடிக்காது என்று எலிசிற்குத் தெரியும். எனவே மாக்ஸை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள மட்டுமே அவளைச் சுற்றி வருவதாக அவள் நினைக்கக்கூடாது என்பதற்காகவும், தான் மாக்ஸை கொல்லவில்லை என்று அவள் உறுதியாக எண்ண வேண்டும் என்பதற்காகவும்தான். இல்லை என்றால், அவள் இரண்டும், இரண்டும் நான்கு என்பது போல உண்மையை அறிந்து கொள்ள வெகு நேரமாகாது.
அதையும் செய்தவுடன், அவர் கிளம்பத் தயாராகிறார். அவருக்கு இப்போது ஒரு கவலை மட்டுமே – டையையும், பின்னையும் என்ன செய்வது என்பதுதான். எவ்வளவு துடைத்தாலும் அவற்றில் இருக்கும் ரத்த கறைகளைக் காவல்துறை கண்டுபிடித்துவிடும் என்பதுதான் அவரது கவலை. அவற்றைத் தன்னுடைய பையில் வைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். அங்கே பத்திரிகை விற்கும் பையனிடம் ஒரு பத்திரிகையை வாங்கி, அதில் அவற்றைச் சுற்றி குப்பையில் போட்டு விடுகிறார். எல்லாம் சரியாகத் தெரிகிறது. காவல்துறைக்கு டையைத் தேடவேண்டிய அவசியம் இல்லை. குப்பையை எடுப்பவனும் கசங்கிய பத்திரிகையை எடுத்து பார்க்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும், என்ன, கொலைகாரன்தான் அதைப் போட்டிருக்க வேண்டும். அவருக்குத்தான் அலிபிதான் இருக்கிறதே.
இப்போது காரில் ஏறி, முனிசிபல் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கே நிறையப் பொதுத் தொலைபேசிகள் இருப்பது அவருக்குத் தெரியும். எதாவது காரணம் சொல்லி அவற்றை உபயோகித்துவிடலாம் என்று நினைக்கிறார். நீதிபதிக்குக் காத்திருந்த நேரத்தில், வெளியே புகைபிடிக்கச் சொல்வதாகச் சொல்லி, தொலைபேசியில் என்னிடம் பேசுகிறார் – “ஸ்பேட், நான்தான் மாக்ஸ் பிலிஸ். என்னை மிரட்டுகிறார்கள்.””
எஃபி பெரின் தலையை அசைத்துக் கொண்டே கேட்டாள். “எதற்காகக் காவல்துறைக்குப் பேசாமல் உங்களிடம் பேசினார்?”
“பாதுகாப்பிற்குத்தான். அதற்குள் பிரேதம் கிடைத்துவிட்டால், காவல்துறைக்குத் தெரிந்திருக்கும். அவரது தொலைபேசியை அவர்கள் கண்டறிய முயலுவார்கள். மாறாக என்னைப் போன்ற தனியார் துப்பறிவாளனிற்குப் பத்திரிகையைப் பார்த்துதான் கொலை நடந்தது தெரிய வந்திருக்கும்.”
“அங்குதான் உங்களுக்கு அதிர்ஷ்டம்!” என்று சிரித்துக் கொண்டே எஃபி பெரின் சொன்னாள்.
“அதிர்ஷ்டமா?” என்று தன்னுடைய இடதுகையைச் சோகமாகப் பார்த்துக் கொண்டே, “இன்று மதியம் அவருடன் சண்டையிட்டதில் எனது கைமுட்டி உடைந்துவிட்டது. மொத்த வேலையும் ஒரே மதியத்தில் முடிந்துவிட்டது. நான் பணம் கேட்டு எழுதினால், சொத்து யாருக்கு கிடைத்திருக்குமோ அவர்கள் அதைப் பெரிதாக நினைக்கவே போவதில்லை” கைகளை உயர்த்தி அங்கே இருந்த வெயிட்டரை அழைத்தார். “சரி, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம். சினிமாவிற்குப் போகலாமா இல்லை உனக்கு வேறு வேலை இருக்கிறதா?”
டாஷியேல் ஹாம்மட்
தமிழில் – வானதி
டாஷியேல் ஹாம்மட் (Dashiell Hammett) அமெரிக்காவின் மிகச் சிறந்த துப்பறியும், மர்ம நாவலாசிரியர்களில் முதன்மையாகக் கருதப்படுபவர்களில் ஒருவர். 1929ல் எழுத ஆரம்பித்த அவர், அடுத்த 20 ஆண்டுகளில் தனக்கென ஒரு பாதையைச் செதுக்கிக் கொண்டார். நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், திரைக்கதைகள், நாடகங்கள் என அவர் கைவைக்காத இலக்கிய வடிவே இல்லை எனலாம்.
1920களில் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வந்தது. 1933 வரை அமலில் இருந்த இந்தக் காலம், அமெரிக்காவில் மாபியா மற்றும் பல திட்டமிட்ட குற்றங்கள் செய்யும் குழுக்களின் அசுர வளர்ச்சியின் காலமாக இருந்தது. சட்டவிரோத மது உற்பத்தியில் இருந்து அதை மக்களிடம் கள்ளச்சந்தையின் வழியே கொண்டு சேர்ப்பது வரையிலான வணிகம் இந்தக் குழுக்களை மிகவும் பிரபலமாகவும், பணபலம் கொண்டவையாகவும் மாற்றியது. இந்தக் குற்றக்குழுக்களின் தலையெடுப்பு அரசின் துறைகளிலும் ஊடுருவியது. ஊழல் என்பது நிறுவனமயமானது. இந்தப் பின்னணியிலேயே அமெரிக்கத் துப்பறியும், மர்ம நாவல்களின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் நிகழ்ந்தது.
ஹாம்மட் எழுதிய துப்பறியும் நாவல்கள் ‘hardboiled’ என்ற துப்பறியும் நாவல் வகைமையைப் புதிதாக உருவாக்கியது. இத்தகைய நாவல்களும், சிறுகதைகளும், பொதுவாக நகரப் பின்னணியில், முன்பின் தெரியாதவர்களிடையே, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வகையில் நிகழ்கின்றன. அவரது புதிய துப்பறியும் நாயகர்கள் எந்த உணர்வும் இல்லாமல், அழகான மொழியில், நேரடியாகத் தங்களது கதைகளைச் சொல்லுகின்றனர். அத்தகைய நாயகர்களில் மிகவும் பிரபலமானவர் சாமுவேல் ஸ்பேட். ஸ்பேட் துப்பறிந்த ‘தி மால்டிஸ் பால்கான்’ (The Maltese Falcon) என்ற நாவல் இன்றும் துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு அடுத்தபடியில் வைத்துப் பார்க்கப்படுகிறது. திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல் இது. இப்போது சாமுவேல் ஸ்பேட் துப்பறியும் சிறுகதை ஒன்று.