கண்காணிப்பு-க.கலாமோகன்

சந்தியை நான் பல நாள்களாகத் தொழில் இடத்தில் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. விடுமுறையா? நிச்சயமாக இல்லை. அவளது விடுமுறை மாதம் எனக்குத் தெரியும்.

அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் அவளுக்கு நிறைய நண்பர்களும் நண்பிகளும் இருந்தனர். அவர்களிடம் அவளை ஏன் இப்போது காணவில்லை எனக் கேட்கும் விருப்பமும் எனக்குள் எழவில்லை. 

நான் திருமணமானவன். அவளும்தான். ஆனால் நான் அவளை விரும்பி, சில விருப்பக்குறிகளை மர்மமாகக் காட்டியபோதும் அவற்றை அவள் விளங்கிக்கொண்டாளா என்பது எனக்குத் தெரியாது. அவளைப் பலர் விரும்பினர் என்பதும் எனக்குத் தெரியும். 

இது 13-ஆவது தினம். இன்றும் அவளைக் காணவில்லை. நிச்சயமாக அவள் கர்ப்பிணியாக இருந்தாள் என்பதை அவளது உடல் காட்டியதேயில்லை. சில பெண்கள் மெலிந்து இருந்தாலும் அவர்கள் மூன்று அல்லது நான்கு மாதக் கர்ப்பம் என அறிந்து நான் ஆச்சரியம் அடைந்துள்ளேன். 

எனது பக்கத்து வீட்டுப் பெண் மிகவும் மெலிது. அவளை நான் ஒருபோதும் ஊதிய வயிற்றுடன் கண்டதில்லை. ஆனால் அவளுக்கு இரணைப் பிள்ளைகள் பிறந்தன என்பதை அறிந்து பிரமிப்புக்குள்ளானேன்.

வசந்தியின் இருக்கையில் ஓர் இளைஞன் கைசியராக இருந்ததைக் கண்டதும் எனக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏன் அவன்? அவள் தனது வேலையை இழந்து விட்டாளா? அவளுக்கு வருத்தமா? அவள் விடுமுறையில் இலங்கைக்குப் போய் விட்டாளா? மீண்டும் எனக்குள் கேள்விகள்.

அந்த மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டில் நான் கைசியர் அல்ல. நான் கண்காணிப்பாளன். இந்தத் துறையில் எனக்கு எதுவுமே தெரியாது. பல ஆண்டுகள் வேலை தேடித்தேடி எனக்குக் கிடைத்த வேலை இதுதான். 

வாடிக்கையாளர்கள் திருடர்களாக மாறுகின்றார்களா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். பெரிய மார்க்கெட்டுகளில் அவ்வப்போது திருடனாக இருந்த எனக்கு இந்த வேலையாம்…

தொடக்கத்தில் ஓர் ஆப்பிரிக்கக் கண்காணிப்பாளரே எனக்கு எப்படிக் கள்வர்களைப் பிடிப்பது என்று போர்மேசன் தந்தார். அவரது ஆலோசனைகள் எனக்குள் சிரிப்பைத்தான் தந்தன. 

எனது தொழிலில் விழிகள்தாம் முக்கியம். நான் அனைவரையும் பார்த்தும், கண்காணித்துக் கொண்டும் இருக்கவேண்டும். காசுவாங்கும் மெஷினின் முன் வாடிக்கையாளர்கள் தாம் கவனிக்கப்படுகின்றோம் என அறியாமல் கவனித்தல் ஒரு கலை. 

நான் வாடிக்கையாளர்களைச் சிறிதளவும், வசந்தியை அதிகளவும் கவனித்தேன். ஒவ்வொரு வாடிக்கையாளர்களைப் பார்க்கும்போதும் அவளது முகம் எப்படி மாறுகின்றது என்பது எனக்கு வியப்பையே தந்தது. சில வேளைகளில் அவள் ஒரு துப்பறிவுப் பிரிவில் முன்பு தொழில் செய்தாளோ என நான் எண்ணியதுண்டு. 

அவளது கூந்தலில் சில வெண்ணிற மயிர்களைக் கண்டு நான் முதலில் வருந்தினேன். என்னுடன் வேலை செய்யும் ஆப்பிரிக்க சக தொழிலாளி,  அது மயிருக்குத் தீட்டிய நிறம் என்றதால் எனது உடைந்த மனது எழுந்து நின்றது. ஆனால், எனது ஆப்பிரிக்க நண்பனில் சந்தேகம் வந்ததும் அப்போதுதான்.

அவன் என்னை விடவும் அழகன். புஜபலமும் கொண்டவன் என்பதை யாவரும் அறிவர். அனைத்து இளம் வாடிக்கையாளிகளும் அவனைக் கண்டு சிரிப்பதோடு மட்டும் நிறுத்திவிடுவதில்லை. மயங்கி மயங்கி உரையாடுவதைக் கண்டும், அவனுக்குத் தங்களது நம்பர்களைக் கொடுப்பதைக் கண்டும் எனது இதயம் வெடிப்பதுண்டு.

இந்த ஆப்பிரிக்க சக தொழிலாளியான கோபி பிரம்மச்சாரியா? இல்லை. திருமணம் புரிந்தவன். நான்கு பிள்ளைகள் உண்டு. ஆனால்… ஆனால்… அவனுக்கு அதிகக் காதலிகள் உள்ளனர் என்பதை எனக்குத் தெரிவித்துள்ளான். அவர்களது படங்களைப் ஃபோனில் காட்டும்போது எனது மனது வெடிக்கும்.

“நான் நேற்று ஜாக்லினோடு கிடந்தேன்.” என அவன் ஒரு மாதத்தின் முன் சொன்னபோது “யார் ஜாக்லின்?” எனக் கேட்டேன்.

“உனக்கு அவளைத் தெரியாதா?”

“தெரியாது.”

“உனக்கு அவளைத் தெரியும்.”

“யார்?”

“எங்கள் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஜாக்லின்.”

“அட, அவளா?”

“ஆம்.”

“அவள் கிழவி. அவளுக்கு உனது அம்மம்மாவின் வயது.”

சிரித்தான்.

“கிழவிதான். ஆனால் அவள் தனித்தே வாழ்கின்றாள். என்னோடு கிடக்கவேண்டும் எனப் பலதடவைகள் கேட்டாள். எனக்கு வெள்ளைப் பெண்களில் வெறி. அவளுடன் கிடந்தேன். சுவையாக இருந்தது.”

“நீ காசு வேண்டித்தானே அவளுடன் படுத்தாய்?”

“இல்லை, இல்லை. எனக்குக் காசு தேவை இல்லை. செக்ஸ்தான் தேவை. அவள் தந்தாள். அவளுடன் கிடக்க உனக்கு விருப்பமா?”

“இல்லை.” 

இப்போது எனக்குக் கோபியின் மேல்தான் சந்தேகம். காரணம். வசந்தியின் நிறமும் வெள்ளைதான். அவளைக் காணாமல் விட்ட தினத்திலிருந்து அவனையும் காணவில்லை. 

எங்களது மார்க்கெட்டில் பல கண்காணிப்பாளர்கள். அவர்களில் சிலர் விடுமுறையில் காணாமல்போவது உண்டுதான். கோபியும் விடுமுறையில் காணாமல் போய்விட்டானா? பலரது விடுமுறை தினங்கள் எனக்குத் தெரிந்தபோதும் அவனது விடுமுறை தினம் எனக்குத் தெரியாது.

குளிர் பொருள்களை அடுக்கும் சில்வி என் அருகில் சென்றபோது “ஏன் கோபியைக் காணவில்லை?” எனக் கேட்டேன்.

“தெரியாது.”

“விடுமுறையா?”

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு “இல்லை.” என்றாள்.

“ஏன் இல்லை என்கின்றாய்?”

“சொல்ல மாட்டேன். அவன் விடுமுறையில் இல்லை.”

மனது எரிந்தது. வசந்தியுடன் இப்போதும் கட்டிலில் கிடக்கின்றானோ? 

இருவரும் நடத்தும் நாடகம் எமது தொழில் நிறுவனத்துக்குத் தெரியுமோ எனும் கேள்வியல்ல, வேறு பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. கோபியையும் வசந்தியையும் பார்க்கும் வெறி எனக்குள் வந்தது. நான் பைத்தியமானேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு கோபியின் சம்பளச் சீட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியில் விழுந்து கிடந்ததைக் கண்டேன். எவ்வளவு சம்பளம்? என்னைக் காட்டிலும் குறைவுதான். சீட்டில் இருந்த அவனது முகவரியை வேறு ஒரு தாளில் எழுதியபின்தான் அவனிடம் அது கொடுக்கப்பட்டது. நன்றி சொன்னான்.

அந்தத் தாள், சிறிய தாள் எங்கே? 

தேடினேன். 

“எதனை இவ்வளவு நீண்ட நேரம் தேடுகின்றீர்கள்?” என்று எனது மனைவி கேட்டாள்.

“நான் எழுதிய கவிதையை.”

“நீங்கள் கவிதை எழுதுகின்றீர்களா? ஏன் ஒருபோதுமே எனக்குச் சொல்லவில்லை?” என அவள் கத்தினாள்.

“ஐயோ, நான் கவிஞனே இல்லை. உன் அழகு எப்போதும் என்னை மயக்குகின்றது. உன்னைப் பற்றியதுதான் இந்தக் கவிதை. இதனை உனது பிறந்த நாளிற்குத் தருவதாக எழுதினேன்.”

கத்திய அவள் என்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டாள். 

“சரி, நானும் தேடுவேன்.”

“இல்லை, இல்லை. நீ இப்போது இதனைக் கண்டுபிடித்தால் பரிசின் மகிமை குறைந்துவிடும்.”

விளங்கியதுபோல என்னை விட்டு மறைந்தாள். 

என்னிடம் அதிகப் புத்தகங்கள் இல்லை. இருந்த சிலவற்றைப் பக்கம் பக்கமாக விரித்துத் தேடினேன். புத்தக அலுமாரியின் கீழ் எனது மனைவியின் சப்பாத்துகள். ஒரு பழைய சப்பாத்துள் ஒரு துண்டு தெரிந்தது. 

அதுதான் நான் தேடிய துண்டு. ஏன் இது எனது மனைவின் சப்பாத்துக்குள்? நல்லவேளை, அது ஒரு பெண்ணின் முகவரியாக இல்லாதது. 

அந்த முகவரி கசங்கிக் கிடந்தபோதும் நான் எப்படியோ சிரமப்பட்டு வாசித்தேன். எனது மனைவிக்கு அது எனக்குக் கிடைத்தது என்பதைச் சொல்லவேயில்லை. 

மறுநாள் எனக்கு வேலையில்லாத நாளாக இருந்தது. அன்று கோபியை வசந்தியுடன் பிடிப்பதென்பதுதான் திட்டம். நான் அவன் வாழுவதாகக் குறிப்பிட்ட முகவரியை நோக்கிப் பயணம் செய்தேன். ரயில் இரண்டு மணித்தியாலங்கள் ஓடியது.

இவ்வளவு தொலைவில் இருந்து வருபவனில் நான் எவ்விதக் களைப்பையும் கண்டதில்லை. அவன் தனது முகவரியில்தான் வாழ்பவனோ எனும் அச்சம் எனக்குள் வந்தது. 

அவன் வாழ்வது 17-ஆம் நம்பர் கட்டிடத்தில் 8-ஆவது மாடியில் உள்ள 302 இலக்கத்தில். அங்கு பல கட்டிடங்கள் இருந்தன. 17-ஆம் நம்பர் எது என எவரைக் கேட்டாலும் “அங்கு போ.” என்றனர். அங்கு போனபின் அது நான் தேடிய கட்டிடம் இல்லாமல் வேறு சிலர் “இங்கு போ”, “ஒரு பார்மஸிக்கு அருகில்…” எனும் குறிப்புகளைத் தந்ததால் எனது கால்கள் களைத்தன. 

கடைசியில் ஒருவர் உதவியால் நான் அவன் வாழும் கட்டிடத்தைக் கண்டுவிட்டேன். 

“இது பழைய கட்டிடம். அதிக இலக்கங்கள் அழிந்துவிட்டன” என்று எனக்கு அதனைக் காட்டிய முதியவர் சொன்னார்.

அங்குள்ள லிஃப்ட் முன்வந்தபோது பட்டனை அமத்தினால் அது ஏறாமல் இருந்தது. 8-ஆம் மாடிக்கு ஏறினேன். 

அங்கு பல கதவுகளில் இலக்கங்கள் இருக்கவில்லை. ஒன்றில் 302-க்குப் பதில் 3 இருந்தது. 

தட்டினேன். திறக்கப்படவில்லை. மீண்டும் தட்டினேன்.

பல நிமிடங்களுக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. 

ஒரு கிழவி. அவளுக்கு 80 வயதுக்கு மேல் இருக்கலாம். அவள் ஒரு வெள்ளைக் கிழவி.

“அம்மா! கோபி உள்ளாரா?”

“அவர் தூங்குகின்றார்.”

“நான் அவரைச் சந்திக்கலாமா?”

“ஆம், உள்ளே வாருங்கள். அவர் எழுந்தவுடன் உங்களை வந்து சந்திப்பார்.”

உள்ளே சென்று சாய்மானக் கட்டிலில் இருந்தபோது “கோபி, ஒரு நாய்தான். இந்தக் கிழவியுடனும் கிடக்கும் போக்கிரி.” என்று அவனைச் சபித்தேன்.

அம்மா டிவியில் விழிகளை வைத்துத் தூங்கினார். 

சில கணங்களில் கதவு திறப்பட்டது.

ஒரு வெள்ளைக் கிழவன் என் முன். நான் அதிர்ந்தேன்.

“நீங்கள்தான் கோபியா?”

“ஆம், நீங்கள்?”

“நான் கோபியுடன் தொழில் செய்பவன். அவனுக்கு எனது வயது.”

அவர் சிரித்தார்.

“இந்த உலகில் பல கோபிகள் உள்ளனர். நான் வயது போன கோபி. நீங்கள் தேடும் கோபி அல்ல.”

எனது வருகையை அவரது மனைவி அங்கீகரித்தமைக்கு நன்றி கூறி வெளியேறியபோது என் தலை சுற்றியது. 

தாகம். பியர்தான் குடிக்கவேண்டும். கட்டிடங்களுக்கு அப்பால் வந்து ஒரு கடையைத் தேடினேன். ஒரு சிறிய கடை தெரிந்தது. அதனை நோக்கி நடந்தபோது பல பியர்களைக் குடித்துவிட்டு ஏதாவதொரு கட்டிடத்துக்கு முன்னால் தூங்கவேண்டும் என நினைத்தேன்.

அந்தக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் இல்லாதது போல தெரிந்தது. 

நான் உள்ளே சென்றேன். 

ஒரு பெண்ணின் பின்பக்கம் தெரிந்தது.

திரும்பினாள்.

வயிறு பெரிதாக ஊதியிருந்தது. 

முகம்?

அவள் வசந்தி. என்னைக் கண்டு அவளது விழிகள் ஆச்சரியப்பட்டன.

“வணக்கம்!” என்ற அவள் “சூப்பர் மார்க்கெட் சம்பளம் அதிகம் இல்லை. எனது கணவரும் நானும் இணைந்து இந்தக் கடையை வாங்கிவிட்டோம்.”

ஒரு வெள்ளைக்கார ஆண் அவளுக்கு அருகில் வந்தான்.

“இவர்தான் எனது கணவர்.” என்றபடி அவருக்கு என்னைப் பிரெஞ்சு மொழியில் அறிமுகம் செய்து வைத்தாள்.

அந்தக் கணத்தில் கோபி மீதான தவறான எண்ணங்கள் நொறுங்கின.

“ஏன் நீங்கள் இங்கே?”

“எனது மாமி இங்குதான் வாழ்கின்றார்.”

“என்ன குடிக்கப் போகின்றீர்கள்?”

“தண்ணீர்…”

அவள் ஒரு பெரிய போத்தலை என்னிடம் தந்தாள்.

“எவ்வளவு?”

சிரித்தாள். 

“நன்றி” சொல்லியபின் வெளியே வந்ததும் கோபியின் முகவரி இருந்த சீட்டைக் கிழித்து எறிந்தேன்.

(பாரிஸ் 28-04-2003) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.