வருடம் தவறாமல் இந்த திகதியில் மாலையில் நினைவிடத்துக்கு வரும் மற்றவர்களுக்கு அந்த வயதான பெண்மணியை மறந்திருக்க வாய்ப்பில்லை. நினைவேந்தலுக்குக் கூடும் மக்களில் அவர் மட்டும் வித்தியாசமாகத் தெரிவார்.
இது ஜப்பான் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயம்.
அவரின் பெயர் மேடம் லிம் யி சுவன். எண்பத்தைந்து வயது, கையில் ஊன்று கோல், முதுகு கூன் விழுந்திருந்தது. சுருங்கிய தோல் குழிவிழுந்த கண்களை நிரவியிருந்தது மூக்குக்கண்ணாடி. எதிலும் ஒட்டாத பார்வை. பளிச்சென்ற வெள்ளை நிறத்தில் முழுநீளப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தார். தள்ளாடும் வயதிலும் இந்த நாளை என்றுமே தவிர்த்ததில்லை.
நடுங்கும் கையில் சிறிய பூங்கொத்து. அதை நினைவிடத்தில் வைத்துச் சிறிதுநேரம் கண்மூடித் துதித்து கண்களைத் திறக்க சில கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிந்தது. ஆனால் முகத்தில் கவலையோ சோகமோ இல்லாத விகாரம்தான் விழுங்கியிருந்தது. நாட்பட்டதாலோ என்னவோ நடந்த துன்பத்தை நினைத்துக் கலங்குவதைக்கூடப் பலர் தவிர்த்து இயல்பாகவே வந்து போகிறார்கள்.
ஊன்றுகோலை வலக்கையால் பிடித்தபடி மெதுவாகக் குந்தியிருந்தவரின் இடது கைவிரல்கள் மேடையில் அதைத் தேடியது. கண்களைத் துருத்தி வரிசையாகக் கல்லில் பதித்திருந்த பெயர்களை ஆராய்ந்து செல்ல மூன்றாவது நிரலில் பத்தாவதாக இருந்த எழுத்துகளில் பார்வை குத்தி நின்றது.
மீண்டும் மீண்டும் விரல்கள் அந்தப் பெயரைத் தடவும் போது அதில் படிந்திருந்த தூசி விலகி டான் லிம் என்ற எழுத்துகள் தெளிவாகத் துலங்கியது. பக்கத்தில் வயது ஒன்பது மாதங்கள் என்று பதியப்பட்டிருந்தது.
இந்த ஒரு பெயர் மட்டுமே மாதங்களில் சொல்லப்பட மற்றவர்களின் இறந்த வயதுகள் ஆண்டுகளில் பொறித்திருந்தார்கள்.
சிறிதுநேரம் அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு எழுந்தவரை பணிப்பெண் மேகா அவரின் கைகளைப்பற்றி நடந்தாள். மேடம் லிம்மின் வாயிலிருந்து வார்த்தைகள் பட்டும் படாமல் வெளிவந்து கொண்டிருந்தது.
“இல்லை. என் மகன் என்னுடன்தான் இருக்கிறான். என்னை விட்டு எப்போதும் விலகவில்லை. அவனை யாரும் கொலை செய்யவில்லை” போன்ற வார்த்தைகள் துண்டு துண்டாக வந்தது.
மேகா இந்தோனேசியப் பெண். கடந்த நான்கு ஆண்டுகளாக அவரின் வீட்டில் பணிபுரிகிறாள். சீன மொழி தெரியும் என்றாலும் தடைப்பட்டு வந்த வார்த்தைகள் முழுதாகக் காதுகளில் விழவில்லை.
முன்னரும் மேடம் லிம்முடன் இந்த இடத்துக்கு வந்திருப்பதால் இதை அவள் பெரிது படுத்தவில்லை. அவரைச் சமாதானப்படுத்தவும் முயலவில்லை. அவரிடம் கேள்வி கேட்க அல்லது அன்பாகப் பேச யாராலும் முடியாது.
அது கோபமா? இயலாமையா? குற்றவுணர்வா? எதைப் பொருத்திப்பார்ப்பது என்பதில் இன்னும் அவரைத் தெரிந்தவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. யாரும் இலகுவில் நெருங்கிப் பழக முடியாத ஜீவன்.
சிங்கப்பூர் அரசின் உதவியில் பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளாள் மேகா. சமைப்பது, துப்புரவு செய்வது, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஆதரவாக இருப்பதோடு சரி. குளிப்பதற்கும் அவள் உதவியை நாடமாட்டார். தனிப்பட்ட அவரின் விடயங்களில் மூக்கை நுழைக்க முடியாது.
அவரின் அறைக்கு யார் உள்ளே வருவதையும் கண்டிப்பாக எதிர்ப்பார். அங்கே துப்புரவு செய்வதைத் தவிர மேகா எதையும் தொட முடியாது.
அது முதியோருக்கு வழங்கப்பட்ட ஓரறை வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு. மேடம் லிம் தன்னால் முடியுமான மட்டும் தனியாகவே கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அந்த வீட்டில் வாழ்ந்தார்.
சில முதியவர்களுக்கே உரிய மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் அனுதாபத்தை வெறுப்பதாகக் கூட இருக்கலாம் அல்லது வேறு என்ன காரணமோ தெரியாது.
கடைசி நான்கு வருடங்கள்தான் மேகா துணைக்கு இருக்கிறாள்.
நினைவிடம் இருக்குமிடத்தில் புல் வெளியைத் தாண்டி சாலையோரம் டாக்ஸிகள் வரிசையாகப் பயணிகளை எதிர்பார்த்திருந்தது.
மேகா கையை அசைத்து டாக்ஸி ஒன்றை தாங்கள் நிற்கும் இடத்திற்கு அழைத்தாள்.
முன்னால் நின்ற நீல நிற டாக்ஸி மெதுவாக அருகில் வரவும் குனிந்து ஓட்டுநரிடம் பெடோக் என்றவள் பின் கதவைத் திறந்து அவர் ஏறுவதற்கு உதவினாள்.
டாக்சி கண்ணாடியால் தூரத்தில் எதையோ பார்த்தபடி,
“நேரமாகுது குழந்தைக்குப் பசிக்கும். பால் கொடுக்க வேண்டும். சீக்கிரம்போ” என்று ஏதோ அவர் பிதற்றுவது மேகாவின் காதில் மெலிதாக விழுகிறது.
கடந்த நான்காண்டுகளைப் போல் இல்லாமல் இப்போது பிதற்றல் அதிகமாவதை மேகா உணர்ந்தாள்.
—–
கிட்டத்தட்ட ஒருவருடம் இருக்கும். அன்று ஒருநாள் மேடம் லிம்மை உடம்பு முடியாமல் சிறுநீரக பிரச்சினைக்கு மருத்துவமனையில் தங்க வைக்கவேண்டி வந்தது.
அன்றிரவு மேகா தனியே தங்கவேண்டி இருந்தது. பாத்திரங்கள் கழுவி வீட்டைக் கூட்டி சுத்தம் செய்தாள். மேடத்திற்கு இரவு பணிவிடைகள் செய்யும் தேவை இல்லை ஆதலால் விரைவாகவே வேலைகள் முடிந்தது.
சாவதானமாக சோபாவில் அமர்ந்திருந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ நடமாட்டமோ சத்தமோ உள்ளே கேட்கும் உணர்வு இடையிடையே எழுந்தது. பூட்டப்பட்டிருந்த அவரின் அறையை அடிக்கடி நிமிர்ந்து பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள். அதன் சாவியை எப்போதும் அவருடனே வைத்திருப்பார்.
நேரம் இரவு பதினோரு மணி. கண்கள் சற்று அசர மேகாவையும் அறியாமல் தூக்கம் தழுவியது.
அந்தத் தாலாட்டு இதமாகக் கேட்டது. அழகிய மிருதுவான பூக்கள் போன்ற குழந்தையை உறங்க வைக்கும் மந்திரம். இடையிடையே குழந்தையின் அழுகையும் தாலாட்டுடன் கலந்து வந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை வீரிட்டுப் பெரிதாகக் கத்தவும்
“சனியனே செத்துத் தொலை நீ பிறந்து என்னைக் கழுத்தறுக்கிறாய்” என்று அதிர்ந்து கத்திய பெண்ணின் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள் மேகா. தன்னை மூட வந்த இருள் விலகுவதாக உணர்ந்தாலும் உள்ளிருந்து கேட்கும் தாலாட்டு கிணற்றின் ஆழத்திலிருந்து அந்த அமைதியைக் கிழித்துக்கேட்டது.
அவளின் உடல் தெப்பமாக வியர்த்து இதயம் வேகமாகத் துடிக்க அந்த அறையைப் பார்த்தாள்.
இது கனவுதான் என்று தன்னை ஆசுவாசப்படுத்தினாலும் தொடர்ந்து தூங்க முடியவில்லை. இன்னும் அந்த ஒலி கேட்கும் பிரமை அவளுக்கு.
வழமையாக இரவில் நீண்டநேரம் மேடம் லிம்மின் மெலிதான தாலாட்டுப் பாடல் நடுச்சாமம் வரை கேட்கும். ஆனால் அன்று அவர் இல்லை. அப்போது நேரம் பன்னிரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது.
ஹாலில் இரவு மின்குமிழின் மங்கலான வெளிச்சம் சூழ்ந்திருந்தது. அவளால் தனியே இருக்க முடியவில்லை.
வேகமாக எழுந்தாள் ஒரு நொடியில் கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே வந்து கதவைப் பூட்டினாள். ஏதோ ஒரு அமானுஷ்யத்தை உள்ளே வைத்துப் பூட்டிய நிம்மதி வந்தது. இருந்தும் பயம் முழுதாக விலகவில்லை.
மின் விளக்குகள் வரிசையில் கொரிடோர் பிரகாசமாக இருந்தாலும் தனிமை அவளை லிப்டில் ஏறத் தடுத்தது. லிப்டில் மூன்று பக்கமும் இருக்கும் கண்ணாடியில் தேவையில்லாமல் சில அசைவுகளை மனம் கற்பனை செய்யும். முன்னர் பல தடவை அவளுக்கு அந்த அனுபவம் உண்டு.
வீடு ஆறாம் மாடியில் இருந்ததால் விறு விறு எண்டு படிகளில் இறங்கி கீழ்த்தளத்தை அடைந்தாள்.
“என்ன இந்த நேரத்தில் வருகிறாய்? தூக்கம் வரவில்லையா?” அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரீட்டா ஆன்ட்டி ஓரத்தில் பெஞ்சில் இருந்தபடி அதிசயமாக அவளைப் பார்த்துக் கேட்டார்.
அவருக்கு ஐம்பது வயது இருக்கும். கையில் ஒரு புத்தகம். பாதி படித்த புத்தகம் ஒன்று மடியில் விரிந்தபடி கிடந்தது. அவர் இருந்த இடத்துக்கு அப்பால் படிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட சில காங்கிரீட் மேசைகளும் இருக்கைகளும் வெறிச்சோடி இருந்தது. ஆளரவமற்ற இடம் படிக்க வசதியாக இருக்கலாம்.
அவரைப் பார்த்ததும் மேகா பெரு மூச்சு விட்டாள். அவரின் முகம் அவளுக்குப் பரிச்சயமானதுதான். பக்கத்தில் இருக்கும் வயோதிகர் உடற்பயிற்சிக் கூடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் மேடம் லிம்மை அழைத்துக்கொண்டு கற்கள் பதித்த தரையில் நடக்க வருவாள். அப்போது இந்த ரீட்டா ஆன்ட்டி அவரைப் பார்த்து ஹலோ சொல்லி புன்முறுவல் செய்வார். ஆனாலும் மேடம் லிம் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் சில மாதங்களாக ஆன்ட்டியைப் பார்க்கவில்லை.
“தனியாக இருக்க ஒரு மாதிரியாக இருக்கிறது. தூக்கமும் வரவில்லை. அதுதான் வெளியில் கொஞ்சம் நடக்க வந்தனான்”. என்றாள் மேகா பதட்டத்தை வெளிக்காட்டாமல்.
“மேடம் லிம் வைத்திய சாலையில் என்று கேள்விப்பட்டன்”
“ஆம் அதனால் தான் இன்று தனியாக இருக்கிறேன். ஸ்கேன் செய்து நாளைக்கே வந்து விடுவார்.”
“எப்பிடி அவருடன் உனக்கு ஒத்துப்போகுது? ஒரு போக்கான மனிசி”
“நான் எனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்கிறேன். அவரின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வதில்லை கேட்பதில்லை”
“உனக்கு அவரைப் பற்றி, அவரின் கடந்த காலம் பற்றி ஏதாவது தெரியுமா”
“இல்லை”
“எனது அம்மா அவரைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் இருக்கும் பழைய சிங்கப்பூர்வாசிகளுக்கு மேடம் லிம்மின் கடந்த கால சம்பவங்கள் நன்றாகத் தெரியும். அவர் முற்றிலும் வித்தியாசமான பெண். அவரை யாரும் இலகுவில் நெருங்க முடியாது. சிலர் அவருக்கு மனப்பிறழ்வு இருப்பதாகவே நம்பினார்கள். ஆனால் வைத்தியர்கள் பரிசோதித்ததில் பிரச்சினை இல்லை என்பதாலே தனியாகத் தங்கச் சம்மதித்தார்கள்” என்ற ஆன்ட்டி தான் கேள்விப்பட்ட சம்பவங்களைச் சொல்லத் தொடங்கினார்.
ஜப்பான் சிங்கப்பூரை ஆக்கிரமித்திருந்த காலம்.
மேடம் லிம் கையில் ஒன்பது மாத ஆண்குழந்தையுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்தாள். அப்போது அவளின் கணவன் உயிருக்குப் பயந்து தலைமறைவாக இருந்தான். உறவினர் எதிர்ப்புடன் இளம் வயதில் தனக்குப் பிடித்தவனுடன் ஓடி வந்ததால் உதவிக்கு யாரும் இல்லை. மற்றவர்களும் தம்மைப் பாதுகாக்க மறைவாகவும் ஓடிக்கொண்டும் இருந்த துர்ப்பாக்கியமான நேரம்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தவள் பிள்ளை பால் கேட்டு நச்சரித்து அழுவதையும் அதை உரக்கத் திட்டுவதையும் சுற்றுவட்டாரத்தில் தினமும் பலர் கேட்டிருக்கிறார்கள்.
ஒருநாள் காலை ஜப்பான் ராணுவம் அந்தப் பகுதி வீடுகளில் தேடுதல் நடத்தியது. அந்த நேரம் மேடம் லிம் பிள்ளையைத் தூங்க வைத்துவிட்டு தூரத்தில் வயலிலுள்ள கிணற்றில்
தண்ணீர் எடுக்கப் போயிருக்கிறாள். வேட்டுச் சத்தங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அவள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஊரே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது. வழமைபோலவே அன்றும் பலரை ராணுவம் சுட்டுக் கொன்றது.
உயிரோடு இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்களே. அதில் கற்பழிக்கப்பட்ட சிலரும் பிறகு தற்கொலை செய்து கொண்டார்கள்.
மேடம் லிம் இந்த சச்சரவுகளுக்குப்பின் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. மதியநேரத்தில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளறியபடி வெளியே வந்தாள்.
“ராணுவம் என் குழந்தையைக் கொன்றுவிட்டது” என்று திரும்ப திரும்பக் கத்தி இறந்தவர்கள் பிணங்களுடன் மரக்கட்டையாக இருந்த தனது குழந்தையையும் கிடத்தினாள்.
ஊரில் உள்ளவர்கள் இறந்தவர்களின் பெயர் விபரம் எடுத்து உடல்களை ஊரின் ஒதுக்கான இடத்தில் அடக்கம் செய்தார்கள். மக்களை அரைவாசிக்கு மேல் பலிகொடுத்த ஊர் வெற்றிச்சோடியிருந்தது.
சில காலத்திற்குப்பின் ஊர் சனத்துடன் தானும் வேறு இடத்துக்கு நகர்ந்தாள். சில மாதங்கள் சித்தப் பிரமை பிடித்த மாதிரி இருந்தவள் குழந்தையின் உடல் புதையுண்ட இடத்துக்கும் வந்து போனதாகச் சிலர் பார்த்ததையும் அம்மா சொன்னார். அந்த இடத்தில் நிறுத்திய ஆன்ட்டி கொட்டாவி விட்டு மேகாவைப் பார்த்தார்.
மேகாவின் கண்கள் பனித்திருந்தது.
“ஆனால் உனக்குத் தெரியுமா நானும் குழந்தையாகத்தான் இருந்தேன் எனது வீட்டுக்கும் ராணுவம் வந்ததாம். மற்ற எந்த குழந்தையும் அன்று கொலை செய்யப்படவில்லை. முதலில் மேடம் லிம்மை நம்பியவர்கள் பின்னர் சந்தேகிக்கவும் தொடங்கினர் இப்போது வரையும்.
இந்த கதையைக் கேட்ட மேகா மிகுதி இரவை அந்த பெஞ்சிலேயே கழித்தாள். கண்ணயரும்போது தாலாட்டும் குழந்தையின் அழுகுரலும் மீண்டும் மீண்டும் கேட்டது.
விடிந்து சனநடமாட்டம் தொடங்கக் கண்விழித்த மேகா சுற்றும் முற்றும் பார்த்தாள். பக்கத்து பொது மண்டபத்தில் வெள்ளை நிற பிளாஸ்திக் விரிப்புகளில் சுற்றிக்கட்டி ஒரு இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சீனர்களின் மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் இவ்வாறான பொது மண்டபங்களில் நடப்பது வழமையானது. இறந்தவர் ஒரு பெண்ணாக இருக்கவேணும். மேகாவால் உடலின் முன்னால் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
தூக்கக் கலக்கத்தில் சற்று அருகில் போனவளுக்கு அதிர்ச்சி. புலராத காலைப்பொழுதிலும் மண்டபத்தில் பொருத்தப்பட்ட மின்குமிழ் வெளிச்சத்தில் ரீட்டா ஆன்ட்டி சிரித்துக்கொண்டிருந்தார். இரவு தனது ஞாபகத்திலிருந்ததை அவளால் நம்ப முடியவில்லை. அன்றிலிருந்து பிறகு வந்த இரவுகள் மேடம் லிம் இருந்தாலும் இந்த நினைவுகளால் நரகமாகவே மாறிவிட்டது
——
டாக்சிக்கு மேடம் தந்த பணத்தைக் கொடுத்துவிட்டு அவரின் கையைப் பற்றி இறங்க உதவினாள்.
நேரே தள்ளாடி தள்ளாடி தனது அறைக்குச் சென்று பூட்டிக் கொண்டவர் சிறிது நேரத்தில் தாலாட்டு பாடத் தொடங்கினார். மேகாவுக்கு இது புதுமையாக இருந்தது. வளமையாக இரவில் பாடுபவர் இப்போது மாலை ஆறு மணிதான் ஆகிறது. அவள் இரவு உணவைச் செய்யத் தொடங்கினாள்.
தாலாட்டு நின்று விட்டது. இரவு எட்டு மணியாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. சற்று பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் தட்டினாள். எந்த பதிலும் இல்லை. ஒரு மணித்தியாலம் அவள் முயன்றாள் பக்கத்து வீட்டாரையும் உதவிக்கு அழைத்தும் பயன் இல்லை. ஒருவர் காவல் துறைக்கு அழைத்து விவரத்தைச் சொன்னார்.
விரைவாக வந்த காவல்துறையும் அவசர உதவி மருத்துவரும் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
மெத்தையில் மேடம் லிம் ஒருக்களித்துப் படுத்திருந்தார். நாடியைப் பரிசோதித்த மருத்துவர் லிம் இறந்து விட்டதை உறுதி செய்தார்.
அவரின் கையைத் தூக்கி போர்வையை விலக்கவும் அங்கே குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு அவரைப் பார்த்தபடி ஒருக்களித்துக் கிடந்தது. அதன் திறந்த வாயில், முதுமையில் ஒட்டியிருந்த அவரின் வலது பக்க முலைக்காம்பு செருகி இருந்தது. என்றுமில்லாமல் இன்று கறள் கட்டிய பழைய இறங்குப்பெட்டியின் பூட்டு திறந்திருந்ததை மேகா வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்